Monday, June 2, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (45)

 


சாதிய முதலாளி வர்க்கம்:

2021 நெலவரப்படி இந்தியாவுல உள்ள 96% மக்கள்கிட்ட வங்கிக் கணக்கு இருக்குறதா சொல்லிக்கிறாங்க. வங்கிக் கணக்கு இருக்கு சரி அதுல எத்தனை பேருக்கிட்ட பணம் இருக்கு. எதுக்குங்க இந்த வெத்துக் கணக்கு. மக்கள்கிட்ட இல்லாத பணத்தை மினிமம் பேலன்ஸ் வெச்சுக்கல, அபராதம் கட்டுனு சொல்லி கோடி கோடி ரூபாயா வங்கிகள் புடுங்குறத்துக்கா. இந்த வெத்துக் கணக்கு ஒரு டீ குடிக்க கூட ஒதவாதே.

ரிசர்வ் வங்கி “India's Financial Inclusion Index”னு இந்தியாவின் நிதி உட்சேர்க்கை குறியீட்டை வெளியிடுது. இந்தியாவுல உள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் வங்கிச்சேவை கிடைக்குதா, வங்கிச்சேவைக்கான அணுகல் இருக்கா, வங்கிச்சேவை மக்களால பயன்படுத்தப்படுதா, பயன்படுத்தப்படுற வங்கிச்சேவை தரமானதா இருக்கா என்பதை அடிப்படையா வெச்சு மதிப்பிட்டுத் தான் இந்த குறியீடு வெளியிடப்படுது. 2024 மார்ச் நெலவரப்படி இந்தியாவின் நிதி உட்சேர்க்கை குறியீடு 64.2. தரமான வங்கிச்சேவைகள் எல்லாருக்கும் கிடைக்கலை என்பதை ரிசர்வ் வங்கியே ஒத்துக்குது என்பது தான் இதுக்கு அர்த்தம்.

பெரும்பாலானவங்களுக்கு இன்னைக்கு வாங்குன கூலிய வெச்சு நேத்தைய கடனையும் அடைக்க முடியல, இன்னைக்கு செலவுக்கும் பத்தல. இதுல என்னத்த வருங்காலத்துக்காக சேமிக்க வேண்டி கெடக்கு. வங்கிக் கணக்குலயே பணம் இல்லாதவங்க பங்குச்சந்தையில் பங்குசொத்துக்கள் சேர்க்குறதைப் பத்தியெல்லாம் நெனச்சுப் பாக்கமுடியுமாங்க. முதலாளித்துவ அகராதிப்படி பணக்காரவுங்க, நடுத்தர மேல்தட்டு வகுப்பினர் தான் பங்குச்சந்தையில சொத்து சேர்க்குறாங்க. பங்குச்சந்தையில எவ்வளவு பேரு முதலீடு செஞ்சுருக்காங்க என்பதை டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையை வெச்சுக் கண்டுபுடிக்கமுடியும்.

அது என்ன டீமேட் கணக்கு? வங்கில பணம் போட வங்கிக் கணக்கு வேணும் இல்லையா, அது மாதிரி பங்குகளை சேமிக்க டிமேட் கணக்கு வேணும். அதுக்கு ஏன் டிமேட்-னு பேரு வெச்சுருக்காங்கன்னு கேக்குறீங்களா. முன்னாடியெல்லாம் காகித வடிவுல பங்குச் சான்றிதழ் கொடுப்பாங்க அதுல பங்குதாரரோட பேர், அவர் வெச்சுருக்க பங்குகளோட விவரங்கள் குறிப்பிடப்பட்டுருக்கும். 1996க்கு பெறகு இந்தியாவின் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) காகித பங்குச் சான்றிதழை உருவில்லாத டிஜிட்டல் கணக்கா மாத்திருச்சு. இந்த உருவிழப்பைத்தான் “dematerialization”னு சொல்றாங்க. அதுனால தான் பங்குகளை சேமிக்கிற கணக்கை டீமேட் கணக்குன்னு அழைக்கிறாங்க. ஊர், பேரு வெளியில தெரியாம சூதாடிகள் அமைதியா பகல் கொள்ளையடிக்குறதுக்கும் இந்த டீமேட் ரொம்ப நல்லா ஒதவுது.

இந்த  டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையை வெச்சு பங்குச்சந்தையில எவ்வளவு பேரு முதலீடு செஞ்சுருக்காங்க என்பதை கண்டுபுடிக்கமுடியும்.  2022 நிலவரப்படி இந்தியாவுல மொத்தம் 19.24 கோடி டீமேட் கணக்குகள் இருக்கு. இதுல நிறுவனங்களோட டீமேட் கணக்குகள் 46%ஆகவும், வெளி நாட்டு தொகுப்பு முதலீட்டாளர்களோட (FPI) டீமேட் கணக்குகள் 16%ஆகவும், வங்கிகளோட டீமேட் கணக்குகள் 2%ஆகவும் இருக்கு. தனி நபர்கள்/சில்லறை முதலீட்டாளர்களோட டீமேட் கணக்குகள் வெறும் 20% மட்டும் தான். அதாவது கிட்டத்தட்ட 3 கோடியே 84 லட்சத்து 80 ஆயிரம் டிமேட் கணக்குகள் தனி நபர்களுடையதா இருக்கு. ஒரு நபரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிமேட் கணக்குகளைக் கூட வெச்சுருக்கலாம். ஆனாலும் பெரும்பாலான நபர்கள் ஒரே ஒரு டிமேட் கணக்கையே வெச்சிருப்பதாக கருதினால், தனி நபர்களுக்கான டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையையே பங்குச் சந்தை சில்லறை முதலீட்டாளர்களோட எண்ணிக்கையையாகவும் கருதமுடியும். 2022ல இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 142.54 கோடி. இதுல கிட்டத்தட்ட 2.7% பேர் மட்டும் தான் பங்குச்சந்தையில முதலீடு பண்ணிருக்காங்க. இவங்களோட முதன்மையான வருமானம் லாபத்துலேருந்தும் வரலாம், சம்பளத்துலேருந்தும் வரலாம், வட்டியிலேருந்தும் வரலாம், வாடகையிலேருந்தும் வரலாம். இருந்தாலும் கூட இவங்க எல்லாருமே  நிறுவனங்களோட பங்கு முதலீட்டாளர்களா இருக்குறதால, பங்குகள்ல முதலீடு பண்ணாம கடன் நிதிகள்லயோ, இல்ல வருவிப்பு பேர ஒப்பந்தங்கள்ல முதலீடு செஞ்சிருந்தாலும் (இந்த ஒப்பந்தங்கள் அதிக பட்சமாக மூன்று மாதம் மட்டுமே நீடிக்கும்) கூட இவங்க எல்லாரையும் நிதி முதலாளிகளாகவும் கணக்குல எடுத்துக்கலாம்.

(தொடரும்)

 


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...