உணவோட சுவையை உணர்ந்து ரசிச்சு, ருசிச்சு சாப்புடுறது அற்புதமான விசயம். அதுனால “மூணு இஞ்ச் நாக்குக்கு அடிமைப்பட்டு”ன்னு நான் சொன்னதை வெச்சு எங்க இந்த புள்ள வேப்பிலையை சாப்பிடச்சொல்லுமோன்னு பீதியடைஞ்சுறாதீங்க. நான் பெரும்பாலும் கசப்பா எதையும் சாப்புடறது இல்ல.
சாப்பிடுற உணவை
கண்ணால பார்க்குறோம், உணவோட மணத்தை நாசியால நுகர்கிறோம், உணவை கையால தொடுறோம், நாவால்
சுவைக்கிறோம். இங்கிருந்து தான் உணவு அறிவியல் தொடங்குது. ஒரு உணவுப் பண்டம் சாப்பிடக்கூடிய
நிலையில இருக்கா, இல்லை கெட்டுப்போச்சா, உணவுல உப்பு, காரம், புளிப்பு அதிகமாவும் இல்லாம
குறைவாகவும் இல்லாம சரியா இருக்கா என்பதையெல்லாம் புலனுணர்வினால் தான் கண்டறியமுடியும்,
அதுனால உணவு அறிவியல் என்பது புலனுணர்விலிருந்து தான் தொடங்குது. ஆனால் அத்தோட முடிஞ்சு
போறது இல்ல.
ஆனா உணவுன்னாவே
பெரும்பாலும் புலனுணர்வோட நிப்பாட்டிக்கிற பழக்கம் தான் இருக்கு. சாப்பாட்டைப் பத்திய
விமர்சனம் பொதுவா எப்புடி இருக்கும். ரொம்ப சப்புன்னு இருந்துச்சு, சுல்லுனு காரசாரமா
இருந்துச்சு, பரவால்ல ஏதோ சுமாரா இருந்துச்சு, கம கமன்னு நல்லா ருசியா இருந்துச்சு,
அருமையா இருந்துச்சு, ச்சை சகிக்கல, ரசம் கழனித்தண்ணி மாதிரி இருந்துச்சு, சாம்பார்
ஓடுது இப்புடின்னு நாலு பேரு சொல்லியிருக்குறதை
கேட்டுருப்போம், இல்ல நமக்கே கூட அப்புடி தோணிருக்கும். உணவை பத்திய நம்மோட விமர்சனம்
ருசியோட நின்னு போயிடுது. இதைத் தவிர உணவை கண்ணுக்கு அழகா பரிமாறுறது ஒரு கலையாவே இருக்கு.
இன்னைக்கு என்னோட
காலை உணவுல புரதச்சத்து குறைவா போயிடுச்சு, ‘விட்டமின் சி’யும் இல்ல, ‘விட்டமின் ஏ’யும்
இல்ல, எந்த ஆண்டி ஆக்ஸிடண்டும்-ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இல்ல. மதியமாவது அதை நல்லா
சேத்துக்கனும்னு பெரும்பாலும் யாரும் நெனைக்கமாட்டாங்க. ஏன்னா அப்புடி நெனைக்கனும்னா
முதல்ல உணவு வேதியியலைப் (food chemistry) பத்தி ஓரளவாவது தெரிஞ்சுருக்கனும். இதெல்லாம்
ரொம்ப அடிப்படையான விசயங்கள் பள்ளிக்கூடத்துல படிச்ச விசயங்கள் தான். ஆனா அறிவியல்
என்பது புத்தகத்துல ஆரம்பிச்சு, பரிட்சைத் தாள்ல முடியுற விசயம் இல்ல. மார்க் வாங்குனதும்
பறக்கவிடுற விசயம் இல்ல அறிவியல். பள்ளிக்கூடத்துல படிச்ச அறிவியலை வாழ்நாள் முழுக்க
ஞாபகம் வெச்சுக்குறது தான் ஒரு நல்ல மாணவருக்கு அழகு. உங்க உயிர் நண்பர்களை மறப்பீங்களா,
மறக்கமாட்டீங்க தான, அதே மாதிரி நம்ம உயிருக்கு ஊட்டம் கொடுக்குற உணவின் அறிவியலையும்
மறக்கவேக்கூடாது. அறிவியலையும் நம்ம உயிர் நண்பனாக்கிக்கனும். நம்ம உணர்வுகளையும்,
முடிவுகளையும் வழிநடத்துற வழிகாட்டியா அறிவியலை ஆக்குனா தான் அறிவியல் மனிதர்களா நம்மால
பண்பட முடியும்.
ஆனா பெரும்பாலானோரோட
உணவுமுறை எப்புடி இருக்கு
பாட்ஷா படத்துல
ஆட்டோக்காரனா சூப்பர் ஸ்டார் பாடுற மாதிரி தான் இருக்கு.
“அங்கங்கே பசியெடுத்தாப்
பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு
நேரம்”
இதைத் தான் பல பேரு
வாழ்க்கைமுறையாவே கடைபிடிச்சுக்கிட்டு இருக்காங்க. வெளில வேலைக்கு போன டீ, போண்டா,
பஜ்ஜி, வடை, சமோசா இல்ல பன்னுன்னு ஏதோ கெடைக்கிறத சாப்புடுறாங்க, பொழுது போய் ரவக்கி
வீட்டுக்குப் போன தான் அவங்களுக்கு சாப்பாடு. இவங்க அளவு சாப்பாடு கூட சாப்பிடுறது
கெடையாது. அளவு சாப்பாடு தான் விலை நூறு ரூபாய்க்கு போயிருச்சே. இவங்களை நம்பி தான்
தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான டீ போண்டா கடைகள் பொழைச்சுக்குட்டு இருக்கு.
புள்ளைக் குட்டிகளுக்காக
காசை மிச்சம் பண்ணுறதுக்காக சில பேர் பகல்ல பலகாரத்தை மட்டும் திண்ணுகிட்டு வாழ்க்கைய
ஓட்டுறாங்க. சில பேர் பொழுதுபோனா பாட்டில் வாங்குறதுக்காக காசை மிச்சம் புடிச்சு சாப்புடாம
இருக்காங்க. பல பேருக்கு கையில காசு இல்ல. இப்புடி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமா இதே
முறையில வாழ்க்கைய ஓட்டுறாங்க. தவறான உணவுப் பழக்கத்தால ஒடம்பைக் கெடுத்துக்குறாங்க.
எண்ணெயில பொறிச்சு
எடுத்த பலகாரத்தை உணவுப் பட்டியல்ல சேர்க்கவேமுடியாதுங்க. அது திண்பண்டம் இல்லைங்க,
திங்கக்கூடாத பண்டம். ஆனா நம்ம ஊருல சில விதமான உணவுப்பண்டங்களையே எண்ணெய்ப் பலகாரம்
மாதிரி தான் தயார் பண்ணுறாங்க. உதாரணத்துக்கு பூரி, பரோட்டாவை சொல்லலாம். நம்மூர்ல
பொங்கல் ஆர்டர் கொடுத்தா அதோட வடையையும் சேர்த்துத் தான் கொடுக்குறாங்க. வடை வேணாம்னு
முன் கூட்டியே சொல்லவேண்டியிருக்கு.
இந்த எண்ணெய்ப்
பண்டங்கள்ல மூணுவிதமான நச்சுப்பொருட்கள் இருக்கு.
1. டிரான்ஸ் கொழுப்பு
(trans fat);
2. அதிகப்படியான
பூரிதக் கொழுப்பு (saturated fat),
3. “AGES
(Advanced Glycation end products)” எனப்படுற நச்சுப்பொருட்கள். இவை சர்க்கரைப் புரதப்பிணைவால்
அல்லது சர்க்கரைக் கொழுப்புப் பிணைவால் உருவாக்கப்படுற நச்சுப்பொருட்கள்.
(தொடரும்)

No comments:
Post a Comment