Tuesday, February 27, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (17):

 

2024 ஜனவரி மாசத்துல தேர்தல்களின் குடிமக்கள் ஆணையமும், தொலைத்தொடர்பு நிபுணர் சாம் பிட்ரோடாவும், இணைய வழி ஸூம் செய்தியாளர் சந்திப்புல 2024 தேர்தல்களைக் கண்காணிக்க ஒரு சர்வதேச தேர்தல் குழுவை உருவாக்கப்போறோம்னு அறிவிச்சிருந்தாங்க. இந்தக் குழுவுல வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் இடம் பெறுவாங்க பிப்ரவரி மாசத்துக்குள்ள குழு இறுதி வடிவம் பெறும்னு சொல்லியிருந்தாக.

2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவை அமைக்க சிவில் சமூகத்தில் உள்ள நாங்கள் முன்மொழிஞ்சிருக்கோம். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருது, ஃபிப்ரவரி நடுவுல குழு அமைக்கப்படும், இந்தக்குழுவின் மூலம் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுதா என்பது கவனமாக கண்காணிப்படும். இது மின்னணு வாக்கு எந்திரங்கள் அல்லாம மற்ற விஷயங்களையும் ஆய்வு செய்யும். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் போன்றவையும் இதில் அடங்கும்ணு தேவசகாயம் சொல்லியிருக்காக.

ஜனநாயகத்தில குடிமகன்தான் இறையாண்மை உடையவன், அவர் தனது இறையாண்மையை ஒரு பிரதிநிதிக்கு மாற்றுறாரு, வாக்கு எங்கே போகுதுண்ணு வாக்காளருக்குத் தெரியலைணா தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைப்படி  இணக்கமாக நடத்தப்படலைணு தான் அர்த்தம். தேர்தல் ஆணையம் வாக்குச் சரிபார்ப்பை உறுதி செய்றகாகத் தான் விவிபேடை கொண்டு வந்துச்சு. அதுனால காகிதச் சீட்டைத்தான்  எண்ணணும், ஆனால் மின்னணு வாக்கு எந்திரத்தின் பதிவை மட்டுமே கணக்கிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுது. இது முழு நகைச்சுவையா இருக்கு. அவங்க ஒரு சில விவிபேட்களை மட்டும் தான் எண்ணுறாங்க, முழுசா எண்ணுறதில்லை. இது தேர்தல் ஆணையத்தோட மோசடி. தேர்தல் ஆணையம் யாருடைய பேச்சையும் கேட்குறதுல்லை. நடைமுறையில், விவிபேட் சீட்டுகளை 100% எண்ண வேண்டிய தேவை இருக்கு. இந்த அமைப்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் சாராததாக இருக்க வேண்டும், அதனாலதான் ஜெர்மன் உச்ச நீதிமன்றம் மின்னணு வாக்கு எந்திரங்களை தூக்கி எறிஞ்சுது; ஜனநாயகம்  நுனிக்கு நுனி சரிபார்ப்பு ஆகிய கொள்கைகளுக்கு இணங்காத எந்தவொரு தேர்தல் செயல்முறையையும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிச்சுதுண்ணு தேவசகாயம் சொல்லியிருக்காக.

சாம் பிட்ரோடா, தேவசகாயம் ரெண்டுபேருமே தேர்தல் ஆணையம் "எதேச்சதிகார அணுகுமுறையுடன்" செயல்படுவதாக விமர்சிச்சிருக்காங்க.

 கடந்த சில வருடங்களில் எல்லாவிதமான சிக்கல்களும் உருவாக்கப்பட்டுருக்கு. 2024 தேர்தல் இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அது தேசத்தின் நீண்ட காலத்திற்கான தலைவிதியை தீர்மானிக்கப்போகுது என்பதால பெரும் அக்கறைக்குரியதாக இருக்கு. மின்னணு வாக்கு எந்திரங்களின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் இருக்கு. குடிமக்களாகிய நாங்கள் மின்னணு வாக்குச்சீட்டு இயந்திரத்துல நம்பிக்கையை இழந்துட்டோம் அதுனால காகித வாக்குச் சீட்டுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதால, மீண்டும் காகித வாக்குச் சீட்டுக்கு செல்லுமாறு குடிமை சமூகக் குழுக்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் உள்ளதாக சாம் பிட்ரோடா சொல்லியிருக்காக.

இப்போ தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்குற நிலையில வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துறதுக்கும், நமது தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்குறதுக்கும் காகித வாக்குச் சீட்டுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியேயில்லை. தேர்தல்களின் குடிமக்கள் ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட கவலைகள் ஆபத்தானதாக இருந்தாலும், குடிமை சமூகத்தின் கவலைகளைத் தீர்ப்பதை தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்து வருது. ஒரு பெரிய நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் என்ன நினைக்கிறது என்பது முக்கியமில்லை, இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்... இன்றைக்கு இருக்குற ஒரே வழி, என்னைப் பொறுத்தவரை, காகித வாக்குச்சீட்டுதான்ணு சொல்லியிருக்காக.

 இந்த லோக்சபா தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தனும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா முடியாதா என்று விவாதம் செய்றதுக்கான நேரம் போயிடுச்சு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-விவிபாட் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கல. லோக்சபா தேர்தல் சீக்கிரம் நடைபெற இருக்குறதால, அந்த பிரச்னைகளை விவாதிக்கும் நேரம் போய்விட்டது. தேர்தல் ஆணையத்திடம் சிவில் சமூகம் அடிக்கடி மனு கொடுத்துருக்கு, ஒன்று காகித வாக்குச் சீட்டுக்கு திரும்பணும் அல்லது எல்லா விவிபேட் சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது டிஜிட்டல் இந்தியாவுக்காக வலியுறுத்துவது அல்ல. இது அடிப்படைகளுக்குத் திரும்புவது, காகிதத்திற்குத் திரும்புவது. மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் விவிபேட்களைப் பொறுத்தவரை யாரை நம்புவது என்பது வாக்காளருக்குத் தெரியல. நாம வாக்காளரை நம்ப வைக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தை அல்ல அப்டிணும் சொல்லியிருக்காக.

வெறுப்புணர்வை தூண்டும் ஆளும் கட்சியை சாடிய பிட்ரோடா, பிரிவினை அரசியலால் நாட்டில் ஜனநாயகம் பாதிப்பில் உள்ளது. சமூக ஊடகங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பயத்தை அதிகப்படுத்துகின்றன, இதை நான் இந்தியாவிலும் பல நாடுகளிலும் பார்க்குறேன். இதன் விளைவாக, மக்களின் வாக்குகள் மேலும் பலம் பெறுகின்றன. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஆனால் கடந்த சில ஆண்டுகளில், நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன, சிவில் சமூகம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை, இதன் விளைவாக, மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விழிப்புணர்வு பெற்று மின்னணு வாக்கு எந்திரம் விவகாரம் தொடர்பாக ஒற்றைக் குரலில் பேச வேண்டும்ணு அறிவுறுத்தியிருக்காக.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, ஃபின்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஐக்கிய முடியரசு, அயர்லாந்து, ஜப்பான், டென்மார்க், பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா போன்ற பல நாடுகள்ல இன்னமும் தேர்தல வாக்குச்சீட்டு முறையில தான் நடத்துறாக. இந்தியாவுலயும் தேர்தல நேர்மையா நடுத்தி ஜனநாயகத்த காப்பாத்துறதுக்காக நாமளும் வாக்குச்சீட்டு முறைக்குத் தான் திரும்பணும். அதனால இந்த பாட்டி சொல்லைத் தட்டாதீக. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புறதுக்கான வேலைகள கவனிங்க.

 (தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...