Monday, October 2, 2023

பணம் பேசுறேன் (56):

 


முதலாளித்துவத்தின் பொறிமுறையை என்னை விட நுணுக்கமா முழுசா அறிஞ்சவன் எவனும் கெடையாது. அதனால தான் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுக்கவேண்டியது அவசியமா இருந்துச்சு. இப்போ விசயத்துக்கு வருவோம். என்னோட சுயசரிதைய கதையா சொல்றேன்னு சொல்லியிருந்தேன் இல்லையா, அதை இப்போ தொடங்கிடலாம்.

ஒரு சம்பவத்திலிருந்து ஆரம்பிப்போம். அமெரிக்க அரசு உலகமெல்லாம் விதைச்ச செய்வினைகளுக்கு ஒரு எதிர்வினையா 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலால் கடுமையான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. 3000 அப்பாவி மக்கள் இறந்துபோனாங்க. பல நாடுகள் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டாங்க, தங்களால் முடிஞ்ச உதவிகளை செஞ்சாங்க. ஆனாலும் “அமெரிக்காவுக்கு 14 பசுக்கள்” என்ற காலத்தால் அழியாத குழந்தைகளுக்கான கதையாக மாறியது மசாய் இனப்பழங்குடிகள் செஞ்சது தான். 2001ல், கென்யாவின் எனூசென் கிராமத்தின் மசாய் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வில்சன் கிமேலி நயோமா கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவரா படித்துவந்தார். மசாய் பழங்குடியினத்திலிருந்து முதன் முதலா கல்லூரிக்குச் சென்று மருத்துவம் படித்தவரும் அவர் தான்  . வில்சன் கிமேலி நயோமா நியூயார்க் சென்றிருந்தபோது உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல்களை நேரில் பார்த்தார். கென்யாவிற்கு செல்லும் போது தன் சமூகத்திடம் இரட்டைக்கோபுரத் தாக்குதல் துயரச் சம்பவத்தைப் பகிர்ந்துருக்காரு. அதன் விளைவாக மசாய் இனப் பழங்குடியினர் ஒன்றிணைந்து அமெரிக்க மக்களின் துயர் தணிக்க மொத்தம் 14 பசுக்களை தானமாக வழங்க முடிவு செய்தனர், தாக்குதல் நடந்து ஒன்பது மாதங்களுக்கு பிறகு 2012ல் எனூசென் கிராமத்தில் ஒரு விழாவை நடத்தி, அங்கு பழங்குடி பெரியவர்கள் கென்யாவிற்கான அமெரிக்க தூதர் வில்லியம் ப்ரென்சிக்கிற்கு 14 பசுக்களை பரிசாக அளித்தனர். விழாவில் நூற்றுக்கணக்கான மசாய்கள் "அமெரிக்க மக்களுக்கு: நாங்கள் உங்களுக்கு உதவ இந்த பசுக்களை வழங்குகிறோம்" என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் கலந்துகொண்டனர்,

பசுக்கள் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்படலை. கென்யாவிலே மாசாய் மேய்ப்பர்களிடம் அவற்றைப் பராமரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.  மசாய் இன மக்களுக்கு, அமெரிக்கர்களில் பலர் நன்றி செலுத்தியிருக்காங்க. அவை "கால்நடைகளுக்கு நன்றி" என்ற பெயரிடப்பட்ட இணையதளத்தில் பகிரப்பட்டிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 11 தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் "அமெரிக்காவுக்கு தானமாக அளிக்கப்பட்ட பசுக்களை நிரந்தரமாக கவனித்துக்கொள்வதற்காக பழங்குடியினரிடம் ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த, அப்போதைய அமெரிக்க தூதர் மைக்கேல் ரன்னெபெர்கர் எனூசேன் போனார். அதோட, நன்றி தெரிவிக்கும் விதமாக, கிராமத்தில் உள்ள 14 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உள்ளூர் பள்ளிகளுக்குச் செல்வதற்கான உதவித்தொகையை நிறுவுவதாகவும் தூதர் அறிவிச்சார். அந்த உதவித்தொகை இன்றுவரை தொடர்கிறது. காதுகளில் சிறப்பு இரட்டை கோபுர அடையாளங்களைக் கொண்ட பசுக்களும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரியவர்களில் ஒருவரால் அன்புடன் பராமரிக்கப்படுது.

மசாய் இனப் பழங்குடி மக்களுக்கு உணவிலிருந்து எல்லாமே மாடுகள் தான். கால்நடைகள செல்வமா, பணமா அவங்க மதிக்கிறாங்க. இரட்டை கோபுரத் தாக்குதல்ல அமெரிக்காவுல பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. ஆனா அந்த மாடுகளோட மதிப்பு ரொம்பக்குறைவு. இரட்டைகோபுர மதிப்பு எங்கே மாடுகளோட மதிப்பு எங்கே என இது கேலிக்குரிய செய்தியாக  முதலாளித்துவ உலகத்தால பார்க்கப்பட்டிருக்கலாம். அமெரிக்காவோட துக்கத்தை நாங்களும் பகிர்ந்துக்குறோம், உங்களுக்குத்துணையா இருக்குறோம் என்று உதவிசெய்ய முன்வந்த மசாய் இனமக்களின் மனசு இருக்குது பாருங்க. அது விலைமதிப்பற்றது இல்லையா, அதற்கு எத்தனை பில்லியன் டாலர் கொடுத்தாலும் ஈடாகாதுன்னு தான் சொல்லனும்.

(தொடரும்)

 

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...