இதற்கிடையில்
என் முன் இருக்கையில் இருந்த டச்சு ஜோடி முத்தத்தோடு முத்தமானார்கள். காதலெனும் ஜீவநதிக்கு
இடம், பொருள், ஏவல் உண்டோ, நாளை அவர்கள் அலுவல்களில் மூழ்கியிருக்க நேரிடலாம். இல்லை
வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். ஒருவேளை, இதுவே அவர்களது கடைசி சந்திப்பாகவும்
இருக்கலாம். இதில் எதுவுமே இல்லை என்றாலுங்கூட வானுலகில் காரணத்தோடு தான் காதல் செய்ய
வேண்டுமா என்ன. விண்மீனில் அவர்களது முத்தத்தைத் தவிர, உயிர்கள் இருப்பதற்கான எந்த
அடையாளாமும் இன்றி சலனமற்றிருந்தது. உயிருள்ள எந்திரங்களாக அந்த உயிரற்ற எந்திரத்தில்
பயணித்திருந்தோம். எனது இருப்பு அவர்களின் காதலைக் கடுகளவேனும் குறைக்கக்கூடாது என்பதே
என் சங்கடம். நானும் எவ்வளவும் நேரம் தூங்கும் ஜன்னல்களுடன் பேசிக்கொண்டிருப்பது. எனது
சங்கடத்தைக் குறைக்கவோ, இல்லை தனது சங்கடத்தைக் குறைக்கும் முயற்சியிலோ ஒரு தலையணையால்
இருக்கைகளுக்கிடையே உள்ள இடைவெளியை மறைத்து விடுவித்தார் அந்தப் பெண்மணி.
இதற்கிடையில்
நான் ‘ஹெட்ஃபோன்’ அணிந்து என் முன்னே உள்ள ‘மானிட்டரில்’ நோட்டமிட்டேன். அது விண்மீன்
பயணத்தின் போக்கைக் காட்டிக் கொண்டிருந்தது. அதைத் தாண்டித் தேடுகையில் எனக்குத் தெரிந்த
ஹிந்திப் பாடல்கள் எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் எனக்கு ஒரு
பத்து ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்கள், மெட்டுக்கள் மட்டுமே தெரியும். மொழி தாண்டி
இசை இதயங்களை இணைக்கும் எனினும் என் மனம் படங்களுக்குத் தாவியது.
‘Subtitle-உடன்’
ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்தபடிக் கண்ணயர்ந்தேன்.
காலையில்
அறிவிப்புகளால் கண் விழித்து பின் சாப்பிடத் தயாரானேன். முன்சீட்டின் பின்னிணைந்திருந்த
பலகையை ‘டைனிங் டேபிளாக்கி’ புண்ணியவதி தந்த உணவுப் பெட்டகத்தை வாங்கிக் கொண்டேன்.
நாசியுறுத்தும் நறுமணத்துடன் அதிலிருந்த வெம்மையான காகித துவாலையால் முகம் துடைத்தது
இதம் அளித்தது. பின் காசுக்கேத்த தோசையா இது? எனக்கு எந்த மூலைக்கு இது என்றிருந்த
ஒரு தோசையையும், பன்னையும் உண்டு களித்தேன். அதனுடன் இருந்த தேயிலை பேக், சீனி பேக்
பழக்கதோசத்தால் என் பாக்கெட்டுக்குள் சென்றன.
இலக்கை
அடைந்தாயிற்று. பனிப்பஞ்சு மேகக்கூட்டங்களை ஜன்னல் பகிர்ந்ததில் குதூகலம். விண்மீன்
பெரிய இராட்டினம் போல் கீழிறங்கியது. எனக்களித்த ஹெட்ஃபோனைக் காணவில்லை. எனக்குத் தெரியாமல்
அதை முன்சீட்டுக்கு ஊடுருவவிட்டு எனது பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளேன். இன்முகத்துடன்
அந்த முன்சீட்டுப் பெண்மணி எனக்கு அதை வழங்கினார். நாங்கள் பெரிய விண்மீனிடமும், பணிப்பெண்களிடமும்
விடைபெற்று வெளியெறினோம். பயணம் ஒன்றாயினும் பாதைகள் வேறாயின. நான் செல்வதறியாது என்
பின்சீட்டுக்காரரை வழிகாட்டியாக்கிப் பின்தொடர்ந்தேன். அவர் அமெரிக்க நாட்டு விமானத்திற்கான
டெர்மினலை நோக்கி சென்றதறிந்து அவரை விட்டு இறுதியில் சுற்றி சுற்றி, இறுதியில் பேகேஜ்
கலெக்ட் செய்யும் இடத்தைச் சேர்ந்தேன். எனக்கு எந்த சிரமுமில்லை. எனது சிவப்புப்பெட்டி
தான் மட்டுமே தன்னந்தனியாக அந்த வளையத்தில் சுற்றியவாறு எனக்காகக் காத்திருந்தது. அதனுடன்
கைக்கோர்த்து நடந்து அடுத்தடுத்த எஸ்கலேட்டரில் பயணித்தேன். எனது கோட்டும் ஸ்வெட்டருமே
எனக்குப் பெருஞ்சுமையாயின. பொதி தள்ளும் பொதியாக எப்படியோ ஒரு வழியாக சமாளித்தேன்.
எனக்கு முன் ஒரு ஆஃப்ரிக்கப் பெண் கிட்டத்தட்ட 7-8 பேகுகளுடன் லாவகமாக காற்றில் மிதப்பது
போல் போய்க் கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து நான் ஏர்போர்ட்டுடன் கூடிய ரயில்
நிலையத்தை அடைந்தேன். எனது சாமர்த்தியத்தால் வண்டியைத் தவறவிட்டேன் என்றும் அடுத்த
வண்டிக்கு 20 நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன்.
சில
பயணங்களில் இலக்கை அடைவதற்காக நாம் பயணங்களைத் தொலைக்கிறோம். ‘ஏர்ப்போர்ட்டின் டியூடி
ஃப்ரீ’ கடைகளில் இல்லாத உயிர்த்துடிப்பை உள்ளூர் சந்தைகளிலும், நடைபாதை கடைகளிலும்
உணரலாம். 21ஆம் நூற்றாண்டில் என்ன இது பிற்போக்குத்தனம் என்கிறீர்களா. பூமியில் உயிர்களை
அழித்து செவ்வாயில் உயிரைத் தேடிப் பயணம் செய்வது முற்போக்குத்தனமா.
இரயில்
பயணத்தில், பேருந்துப் பயணத்தில், நடைபயணத்தில் நாம் ரசிக்கக் கிடைப்பவை எத்தனை எத்தனை!.
டாட்டா காட்டும் குழந்தைகள், வேரில்லா பயணங்களுக்கு எதிராகப் பின்சென்று விடையளிக்கும்
மரங்கள். பறவைகளின் அழைப்பொலிகள், காடு, மலைகள், பூந்தோட்டம், கடல்புறங்கள், கிராமப்புறங்களைக்
கண்ணெதிரே காட்சியாக்கும் ஜன்னல்கள். கூவிக்கூவி முறுக்கு, மல்லி, வெள்ளரி, கொய்யா,
காபி, டீ, வடை, சமோசா, டிஃபன் விற்பவர்கள், கூடைக்காரிகள், வம்பளக்கும் பெண்கள், குறும்பு
செய்யும் சிறார்கள், அழிச்சாட்டியம் செய்யும் குழந்தைகள், எதிரெதிர் வண்டிப் பயணிகளின்
கண நேரப் பரிச்சயம், வாகனங்களை லட்சியம் செய்யாமல் அசை போட்டு தியானம் செய்யும் மாடுகள்.
ஆட்டு மந்தைகள், அல்லித் தாமரைக் குளங்கள், தென்றலின் தீண்டல்கள், கண்கள், காட்சிகளைத்
தாண்டி கனவு கானங்களால் நம்மை நெகிழவைக்கும் இசைஞர்கள், உருக்கும் கண்களால் இவர் தன்னவரா
எனப் பின் தொடரும் நாய்க்குட்டி. உழைப்போடு உழைப்பான மக்கள் கூட்டம். இவை நம் நெஞ்சுக்கு
நெருக்கமானவை அல்லவா. உள்ளூர் சந்தையில் வேடிக்கைப் பார்த்தவாறே திண்பண்டங்களை ருசித்து
கிந்தாச்சி அடித்து வளையவரும் சிறார்களின் இலக்கற்ற பயணாத்திற்கு ஈடு இணை உண்டா.
இயற்கையின்
ஸ்பரிசமும், இயற்கைப் படைப்புகளின் உயிரோட்டமும் தானே பயணங்களுக்கு ஈரமூட்டும். வேகம்
அதிகமாக அதிகமாகப் பயணங்கள் உயிர்மை இழந்து இயந்திரத் தன்மை அடைவதில்லையா… அவை சூழலுக்கும்
தீமைதானே….
(தொடரும்)
No comments:
Post a Comment