ஒரு நாட்டின் மக்கள்தொகையில் காணப்படும்
பொருளாதார சமத்துவமின்மையைக் கணக்கிடுவதற்கான புள்ளியல் அளவுகோலாக ஜினி குறியீடு
(Gini index) பயன்படுத்தப்படுகிறது. ஜினி குறியீடு 1912 இல் இத்தாலிய புள்ளியியல் வல்லுனரான
கொராடோ ஜினி அவர்களால் உருவாக்கப்பட்டது, மக்கள்தொகையின் வெவ்வேறு பிரிவினர்களிடையே
வருவாய் அல்லது செல்வம்/சொத்து எவ்வாறு பகிரப்பட்டுள்ளது அல்லது விநியோகிக்கப்பட்டுள்ளது
என்பதை அளவிட ஜினி குறியீடு பயன்படுகிறது.
ஜினி குறியீட்டின் மதிப்பு 0 முதல் 1 வரை (அல்லது 0% முதல்
100% வரை) இருக்கும். ஜினி குறியீட்டின் மதிப்பு
சுழியமாக இருக்கும் போது (0%) அது முழுமையான பொருளாதார சமத்துவத்தைக் குறிப்பிடுகிறது
அதாவது ஒரு நாட்டின் மக்கள் அனைவருக்கும் வருமானம் அல்லது செல்வம் முழுமையாக சமமான
அளவில் பகிரப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. ஜினி குறியீட்டின் மதிப்பு சுழியம் எனில் அது
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவநிலையைக் குறிப்பிடுகிறது. ஜினி குறியீட்டின்
மதிப்பு ஒன்றாக இருக்கும் போது அது உச்சகட்ட பொருளாதார சமத்துவமின்மையைக் குறிப்பிடுகிறது.
அதாவது நாட்டின் அனைத்து வருமானத்தையும் ஒருவரே பெற்றிருக்கும் நிலையை 100% பொருளாதார
சமத்துவமின்மையை சுட்டிக் காட்டுகிறது. ஆனால் நிஜ உலகத்தில் மேற்கூறிய இருநிலைகளும்
காண்பது மிகவும் அரிது. குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தில் 100% முழுமையான பொருளாதார
சமத்துவநிலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளே இல்லை.
ஜினிகுறியீட்டின் மதிப்பு பொதுவாக 0.24 (24%) முதல் 0.63
(63%) வரை இருக்கும் என்று தரவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
சரி ஜினி குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைக் காண்போம்.
லோரென்ஸ் வளைவை அடிப்படையாகக் கொண்டே ஜினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
செல்வம் அல்லது வருமானத்தின் விநியோகத்தில் சமத்துவமின்மையை தெரிந்து கொள்ள லோரென்ஸ்
வளைவு பயன்படுகிறது.
1905 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் மேக்ஸ் லோரென்ஸ் வருமான சமத்துவமின்மை அல்லது செல்வ சமத்துவமின்மையை
பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வரைதாள் முறையை உருவாக்கினார். இதுவே லோரன்ஸ் வளைவு
எனப்படுகிறது. இந்த வரைபடத்தில் வருமானம் அல்லது செல்வத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின்
மக்கள்தொகை வெவ்வேறு தசம சதவீதத்தினராக (deciles) பிரிக்கப்பட்டு கிடைமட்ட அச்சு
x-ல் குறிக்கப்படுகிறது. செங்குத்து அச்சு Y-ல் மக்களின் ஒட்டுமொத்த வருமானம் அல்லது
செல்வம் குறிக்கப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் வெவ்வேறு சதவீதத்தினர் பெற்றிருக்கும் வருமானம் அல்லது சொத்து
புள்ளிகளாகக் குறிக்கப்பட்டு அவற்றை இணைத்து லோரன்ஸ் வளைவு பெறப்படுகிறது. லோரன்ஸ்
வளைவில் ஒரு புள்ளியில் x-மதிப்பு 50 என்றும் y-மதிப்பு 10 என்றும் இருக்குமானால்
50 விழுக்காடு மக்கள் மொத்த வருமானம் அல்லது செல்வத்தில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளனர்
என்பதைக் குறிக்கிறது.
ஆயத்தின் குறுக்காக 45 பாகை கோணத்தில் மூலைவிட்டக் கோடு வரையப்படுகிறது. இது ஏற்றத்தாழ்வற்ற முழுமையான சமத்துவத்தைக் குறிக்கும் சமத்துவக்கோடு (line of equality) என அழைக்கப்படுகிறது. சமத்துவக்கோட்டில் மக்கள்தொகையில் முதல் 10 விழுக்காட்டினர் மொத்த வருமானம் அல்லது சொத்தில் 10 விழுக்காட்டையும், 90 விழுக்காட்டினர் வருமானம் அல்லது சொத்தில் 90 விழுக்காட்டையும் கொண்டிருக்கும் விதமாக வருமானம் அல்லது சொத்து சீராகப் பரவியிருப்பதைக் குறிப்பிடுகிறது.
லோரென்ஸ் வளைவு நாட்டின் மொத்த வருமானம் அல்லது செல்வம் மக்கள்
தொகையின் ஒவ்வொரு சதவீதத்தினரிடமும் எவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய
விரிவான தகவல்களை தருகிறது. எந்தப்பகுதிகள் சமத்துவக்கோட்டிலிருந்து அதிகம் விலகியுள்ளது
என்பதைப் பற்றியும் லாரன்ஸ் வளைவின் மூலம் துல்லியமாக அறிந்துகொள்ளமுடியும்.
லோரன்ஸ் வளைவுக்கு மேலே சமத்துவக் கோட்டை நோக்கிய பகுதி ‘A’
என்றும் கீழே உள்ள பகுதி ‘B’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இதை மேலே உள்ள விளக்கப்படத்தில்
காணலாம்.
ஜினிக் குறியீடு (G) = Aன் பரப்பு / A+Bன் பரப்பு
G = A / (A + B)
A + B = 0.5
ஜினிக் குறியீடு லோரென்ஸ் வளைவுக்கும் சரியான சமத்துவக் கோட்டிற்கும்
இடையே உள்ள பகுதியின் இரட்டிப்பாகும் (2A). ஜினிக் குறியீட்டின் மதிப்பு 2A மற்றும்
1-2B க்கு சமம்.
அதிக அளவு சமத்துவமின்மை இருந்தால், Aன் பகுதி மொத்த பரப்பளவில்
(A+B) பெரிய பங்கு வகிக்கும். சமத்துவக் கோட்டிற்கும் லோரன்ஸ் வளைவுக்கும் இடையிலான
தூரம் அதிகரிப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறது.
வருமான அல்லது செல்வ சமத்துவமின்மை குறையும் போது லோரென்ஸ் வளைவு
சமத்துவக் கோட்டிற்கு நெருக்கமாக நகர்கிறது. அப்பொழுது ‘A’ன் பரப்பளவும் குறைவதால்
ஜினிக் குறியீட்டின் மதிப்பும் குறைகிறது.
லோரன்ஸ் வளைவு சமத்துவக்கோட்டிலிருந்து அதிகம் விலகியிருப்பது
அதிக சமத்துவமின்மையைக் குறிக்கிறது. ஜினி குறியீடு அதிகமாக இருப்பது, அதிக சமத்துவமின்மையைக்
குறிக்கிறது, அதாவது சமூகத்தில் பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் கணிசமான
விகிதத்தைப் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகிறது.
இந்த லோரன்ஸ் வளைவு மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினரிடம்
10 விழுக்காடு வருவாய் மட்டுமே பெற்றிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒரு
நாட்டின் மொத்த வருமானத்தில் மக்கள்தொகையில் 90% ஏழைகள் 55% வைத்திருக்கிறார்கள். அதாவது
10% பணக்காரர்கள் மொத்த வருமானத்தில் 45% பெற்றுள்ளதைக் குறிக்கிறது.
ஆனால் வருமானத்தை விட மொத்த சொத்துக்களை அளவிடுவது மிகவும் கடினம்
என்பதால், ஜினி குறியீடு பெரும்பாலும் வருமான சமமின்மையை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
சொத்துப் பகிர்வில் சமத்துவமின்மை வருவாய் சமத்துவமின்மையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்
என்பதால் சொத்துக்களுக்கான ஜினி குறியீடு வருமானத்திற்கான
ஜினிக் குறியீட்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
ஜினிக் குறியீட்டின் மூலம் நேரடியாக ஒரு நாடு எவ்வளவு செல்வச்
செழிப்புடையதாக உள்ளது, அதிக ஜிடிபி மதிப்பைக் கொண்டுள்ளதா அல்லது குறைந்த ஜிடிபி மதிப்பைக்
கொண்டுள்ளதா என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளமுடியாது. உலகின் மிக ஏழ்மையான நாடுகளில்
சில உலகளவில் உயர்ந்த ஜினி குறியீட்டு மதிப்பைக்
கொண்டுள்ளன, அதே சமயம் பல பணக்கார ஐரோப்பிய நாடுகளில் குறைந்த ஜினி குறியீட்டு மதிப்புடன்
காணப்படுகின்றன. 0.63 ஜினி குறியீட்டுடன் தென்னாஃப்ரிக்க
அதிக வருமான சமத்துவமின்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது.
பெரும்பாலான வளர்ந்த ஐரோப்பிய நாடுகளின் ஜினிக் குறியீடு
0.24 மற்றும் 0.36 க்கு இடையில் காணப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜினிக் குறியீடு
0.4 க்கு மேல் உள்ளது, இது அமெரிக்காவில் அதிக சமத்துவமின்மையைக் குறிக்கிறது.
சராசரி ஜினிக் குறியீடு 35.45
ஜினிக் குறியீட்டால் அளவிடப்படும் உலகளாவிய சமத்துவமின்மை, கடந்த
சில நூற்றாண்டுகளில் படிப்படியாக அதிகரித்து, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மிகவும்
அதிகரித்துள்ளது.
கோவிட்-19 வருமான சமத்துவத்தில் மேலும் எதிர்மறையான தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடும். உலக வங்கியின் கூற்றுப்படி, எபோலா மற்றும் ஜிகா போன்ற பெரிய தொற்றுநோய்களைத்
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் ஜினி குறியீடு
வரலாற்று ரீதியாக 1.5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கோவிட்-19ன் விளைவாக 2020 மற்றும்
2021 ஆம் ஆண்டிற்கான ஜினி குறியீடு ஆண்டுக்கு 1.2 முதல் 1.9 விழுக்காடு உயரும் என பொருளாதார
வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
உலகவங்கியின் தரவுகளின் படி 1999-2000ல் 32.5ஆக இருந்த இந்தியாவின்
ஜினிக் குறியீடு 2011ல் 35.7ஆக உயர்ந்தது. உலகவங்கி பொருளாதார சமமின்மையை குறைத்தே
மதிப்பிடுகிறது. கிரெடிட் சூயிஸின் தரவுகளின் படி இந்தியாவின் ஜினி குறியீடு 2000
ஆம் ஆண்டில் 74.7 ஆக இருந்தது 2020 இல் 82.3 ஆக உயர்ந்துள்ளது.
ஜினி குறியீடு என்பது ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வை முழுமையாக
வெளிப்படுத்தும் குறியீடு அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜினி குறியீட்டின் குறைபாடுகள்:
ஜினி குறியீடு ஒரு நாடு வருமானம் அல்லது செல்வப் பகிர்வை பகுப்பாய்வு
செய்வதற்கான ஒரு முக்கியமான கருவியாக உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடாக
இருந்தபோதும் ஜினி குறியீடு சில குறைபாடுகளை கொண்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை
ஜினி குறியீட்டால் முழுமையாக வெளிக்காட்ட முடியாது.
1. ஜினி குறியீட்டின் செல்லுபடியாகும் தன்மை மாதிரியின் அளவைப்
பொறுத்தது. எடுத்துக்காட்டாக, சிறிய நாடுகள் அல்லது குறைந்த பொருளாதார பன்முகத்தன்மை
கொண்ட நாடுகளின் ஜினி குறியீடு குறைந்த மதிப்பையும் பெரிய அல்லது அதிக பொருளாதாரப்
பன்முகத்தன்மை கொண்ட நாடுகளின் ஜினி மதிப்பு அதிகமாகவும் இருக்கும் போக்கு காணப்படுகிறது.
2. தரவுகள் துல்லியமின்மையுடன் முறையாகப் பெறப்படவில்லையெனில்
ஜினி மதிப்பு கணக்கீட்டில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது.
3. சில சமயங்களில், வேறுபட்ட வருமானப் பகிர்வுகளைக் கொண்ட நாடுகள்
ஒரே ஜினி மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அதிக வருமானம் பெறும் நாடும் குறைந்த வருமானம்
உள்ள நாடும் ஒரே மாதிரியான ஜினி குறியீட்டைக் கொண்டிருக்க முடியும், எடுத்துக்காட்டாக,
துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சுமார் 0.39-0.40 வரையிலான வருமான ஜினி
குறியீட்டைக் கொண்டுள்ளன.
4. பொருளாதார சமத்துவமின்மையை அளவிடப் பொதுவாகப் பயன்படுத்தப்படும்
அளவீடான ஜினி குறியீடு, சமூகத்தின் மிகவும் வறுமையான கீழ்த்தட்டினர், பணக்கார மேல்தட்டினரின்
வருவாயில் ஏற்படும் மாற்றங்களுக்கு உணர்திறன் அற்றதாக உள்ளது, மத்தியவகுப்பினரின் வருவாய்
மாற்றங்களுக்கே அதிக உணர்திறன் கொண்டதாக உள்ளது. நாட்டின் சமத்துவமின்மை மிகவும் உயரும்
போதும் அதை ஜினிக் குறியீடு பிரதிபலிப்பதில்லை அதாவது பொருளாதார சமத்துவமின்மை அதிகமாக
உயரும் போது அதே அளவுக்கு ஜினிக் குறியீட்டில் மாற்றம் ஏற்படுவதில்லை. சமத்துவமின்மையின்
அனைத்துப் பண்புகளையும் ஜினிக் குறியீடு வெளிக்காட்டுவதில்லை. அதாவது சில பண்புகளை
ஜினிக் குறியீடு மறைத்துவிடுகிறது. ஆகவே சமத்துவமின்மையை அளவிட பல்வேறு குறியீடுகளைப்
பயன்படுத்தவேண்டும்.

No comments:
Post a Comment