தமிழ்நாடு:
துபாய் மற்றும் அபுதாபி பயணத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பை
உருவாக்கும் 6 மிகப்பெரிய ஒப்பந்தங்களி கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு வணிக வரித் துறையில்
ரூ.1,00,346 கோடியும், பத்திரப் பதிவு மூலம் ரூ.13,406 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டு,
சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரி திருத்தப்படாததால் 5 ஆண்டுகளில் ரூ.2,598 கோடி வருவாய்
இழப்பு ஏற்படுவதாக இந்திய கணக்கு தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
விலைவாசி உயர்வு / பணவீக்கம்:
சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் 4.83 விழுக்காடாக இருந்த மொத்த விலை பணவீக்கம்
இந்த ஆண்டு ஃபிப்ரவரியில் 13.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது, 2022 ஜனவரியில் பணவீக்கம் 12.96 விழுக்காடாக இருந்தது. இந்தியாவின்
மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து
11-வது மாதமாக 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள்,
ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம்
மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள்
ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக 2022, பிப்ரவரியில் பணவீக்க விகிதம் அதிகரித்தது.
ரஷ்யா-உக்ரைன் போரால் அளிப்பு சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உருக்கு
விலை டன் ரூ.5,000 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியை இந்தப்
போர் பாதித்து, உள்ளீட்டுச் செலவில் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. கோக்கிங்
நிலக்கரியின் விலை 20% உயர்ந்து ஒரு டன்னுக்கு 500 அமெரிக்க டாலராக வர்த்தகம்
செய்யப்படுகிறது.
எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 31.50 விழுக்காடு உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 9.84 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம
எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப்
பொருட்கள், கச்சா பெட்ரோலியம், ஆகியவற்றின்
விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு தற்போது 2011-12ஆக உள்ளது. பொருளாதாரத்தில் நிகழும் கட்டமைப்பு மாற்றங்களின் அடிப்படையில் புதிய மொத்த விலைக் குறியீட்டு (WPI) தொடர் இறுதி செய்யப்படவுள்ளது. பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான
புதிய அடிப்படை ஆண்டு 2017-18 ஆக மாற்றப்படவுள்ளது.
நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு ஃபிப்ரவரி மாதத்தில்
6.07 விழுக்காடு அதிகரித்துள்ளது, சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.24 விழுக்காடு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 5.85 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.18 விழுக்காடு குறைந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 6.13 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.26 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின்
விலை 4.15 விழுக்காடு
உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 16.44 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின்
விலைவாசி 7.45 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 4.24 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் பணவீக்கம் மிக அதிகமாக
7.91 விழுக்காடு
உயர்ந்துள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து
13 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன. இதனால் இந்தியாவில் பெட்ரோல்,
டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கும் போது, அதற்கு மாறாக இந்தியாவின் எண்ணெய்
நிறுவனங்கள் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை 6.40 ரூபாய் உயர்த்தியுள்ளன.
மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை ‘எல்பிஜி’ விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைகளின்
எரிபொருளான மண்ணெண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
இந்தியாவில் தனிநபர் வருமானம், நுகர்வு அளவுகள் தொற்றுநோய்க்கு முந்தைய
நிலைகளுக்குக் கீழே உள்ளன. உயரும் பணவீக்கம் மக்களின் வாங்கும் சக்தியையும், நுகர்வையும்
மேலும் குறைக்கிறது. கோதுமை, பாமாயில், பேக்கேஜிங் பொருட்கள் போன்ற சரக்குகளின் விலைவாசி உயர்ந்துள்ளதால் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட விரைவாக விற்பனையாகும்
நுகர்வுப்பொருட்கள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றொரு சுற்று விலை உயர்வு செய்ய உள்ளன. இதனால் நுகர்வோர் தங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு
மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் முதல் 10
சதவீதத்திற்கு மேல் உயர்த்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
பால், நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விலையையும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடியால் சூரியகாந்தி எண்ணெயின் மொத்த விலை 7 முதல் 28 விழுக்காடு வரை தென்னிந்தியாவில் உயர்ந்துள்ளது. இந்தியாவின் வருடாந்திர சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 90 விழுக்காடு உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 60-65 சதவீதம் தென்னிந்தியாவில் நுகரப்படுகிறது.
உலக சந்தையில் யூரியா உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான இயற்கை எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளது. இது யூரியா உற்பத்திக்கான மொத்த செலவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை வகிக்கிறது.இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிப்பு,
உரங்கள் தயாரிப்பு, சமையல் எரிவாயு தயாரிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு
வகிக்கிறது. இயற்கை எரிவாயுவின் விலை தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான இடுபொருட்களான அம்மோனியா, சல்ஃபர் , பொட்டாஷ் ஆகியவற்றின் விலை 100%க்கு மேல் உயர்ந்துள்ளதால்
உரம், பூச்சிக் கொல்லிகளின் விலை 2022 ஆம் ஆண்டில் 10 முதல் 15 விழுக்காடு உயரவுள்ளது.
உயரும் உர மானிய செலவுகளைக் கட்டுப்படுத்த நேரடி பலன் பரிமாற்ற (DBT) முறையை உருவாக்குவதை மத்திய அரசு
பரிசீலித்துவருகிறது.
இந்தியாவின் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) தொழில்துறை அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் கடந்த ஆண்டை விட 9.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் இது விலைஉயர்வால் வந்த வளர்ச்சியே தவிர
சரக்குகளின் மொத்த விற்பனை அளவில் உண்டான வளர்ச்சி அல்ல. உண்மையில் மொத்தப் பொருட்களின் விற்பனை அளவு 2.6 சதவிகிதம் அளவு சரிவைக் கண்டுள்ளது என்று நீல்சன் ஐக்யூ அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் கிராமப்புற சந்தைகளில் நுகர்வு 4.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. நகர்ப்புற சந்தைகளில் நுகர்வு 0.8 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை உயர்வு சிறு உற்பத்தியாளர்களை தொடர்ந்து பாதிக்கிறது, 100 கோடி ரூபாய்க்கு கீழ் புரள்வு மதிப்பு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இவ்வமைப்பு
அறிவித்துள்ளது.
இந்தியாவில் தோராயமாக 6.3 கோடி சிறுகுறுநடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கோவிட்
பொதுமுடக்கத்தின் போது 54 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இவற்றை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும் என தமிழ்நாடு சிறு,
குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா)
கோரிக்கை விடுத்துள்ளது.
நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு,
நடுத்தர தொழில்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறுந்தொழில்களுக்கு உற்பத்திக்கு தேவைப்படும் உருக்கு, அலுமினியம்,
காப்பர், இரும்பு,
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக்
ஆகிய மூலப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். மூலப்
பொருட்களின் விலையை அடுத்த ஆறு மாதங்கள் வரை அரசு உயர்த்தக் கூடாது. மேலும்,
சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தப்படும் ஸ்டீல் மூலப் பொருளுக்கு இறக்குமதி வரியில் முழு தீர்வை வழங்க வேண்டும்
என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இதில் எதையுமே செவிமடுக்காத
பாஜக அரசின் தரவுகளின் படி வெறும் 5907 சிறு குறு நிறுவனங்கள் மட்டுமே
மூடப்பட்டுள்ளதாம்!
சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனின் அளவு
சென்ற ஆண்டில் 6.8 விழுக்காடாக இருந்தது 2022 ஜனவரியில் 4.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறன், உற்பத்தித்திறனை மேம்படுத்த ‘RAMP’ திட்டம் வரும் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்திற்கான உலக வங்கியின் பங்களிப்பு ரூ. 3,750 கோடி
ஆகும். இத்திட்டத்திற்கு ரூ.6,062.45 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருந்துத்துறையில் சிறு குறு
நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.500 கோடியை மத்திய
அரசு
ஒதுக்கியுள்ளது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ரகுராம் ராஜன்
உற்பத்தித்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளார். சிறு,
நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் பெரிய
நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஆதாயம் பெறும் விதத்தில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்தபின் விலைவாசியை அரசு உயர்த்தியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அதற்கு
நிதியமைச்சர் பொருளாதாரம் கொள்ளைநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் வரி எதுவும் விதிக்க வேண்டாம், மக்களின் மீதான வரிச்சுமையை
உயர்த்தவேண்டாம் என்பதில் அரசு விழிப்புடன் செயல்பட்டதாக பதிலளித்துள்ளார். ஆனால் எதார்த்த நிலை
அதற்கு மாறாக உள்ளது. மத்திய அரசு நேரடி வரி, பெருநிறுவன வரியை உயர்த்துவதன் மூலமும்,
சொத்துவரியை மீண்டும் செயல்படுத்துவதன் மூலமும் வரிவருவாயை அதிகரித்து எளிய மக்களின்
சுமையைக் குறைத்திருக்கலாம். ஆனால் பாஜக அரசு மறைமுக வரியை உயர்த்தியதன் மூலம் எளிய
மக்களின் மீதான சுமையையே அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வைக் குறைப்பதற்கான எந்த முயற்சியையும்
மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பாஜக அரசு பெரும்பணக்காரர்களின் செல்வ செழிப்பு உயருவதற்கே
துணை புரிகிறது என்பதைப் பின்வரும் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் டாலர் மில்லியனர்கள் ($75,000 விட அதிக
வருமானம் உடையவர்கள்) 764,000 பேர். ஆனால் இதில் வெறும் 316,000 பேர் மட்டுமே
வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என டி.என்.நினன் குறிப்பிட்டுள்ளார். பெரிய
அளவில் வரி ஏய்ப்பு நடைபெறுவதையே அவரது கூற்று சுட்டிக்காட்டுகிறது.
உலக
அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது என நைட் பிராங்க் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெரும் பணக்கார இந்தியர்களில் 18% கிரிப்டோகரன்சிகள், என்எப்டிகளில் முதலீடு செய்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 10,300 கோடி டாலராகும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 4,900 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) அடுத்த நிதியாண்டில் ஆறு முறை சந்திக்கும் என்றும், அதன் முதல் கூட்டம் ஏப்ரல் 6-8 தேதிகளில் நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி, நுண் கடன் வழங்கும்
நிறுவனங்கள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதம் மீதான வரம்புகளை நீக்கியுள்ளது. இது
வரம்பில்லாமல் வட்டிவிகிதத்தை உயர்த்துவதை அனுமதிப்பதால் வாடிக்கையாளர்கள்
பாதிக்கப்படுவர். இதற்கு முன் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், நிறுவனத்தின் நிதிச்
செலவை விட 10-12 சதவீத புள்ளிகள் அதிகமாகவோ அல்லது ஐந்து பெரிய வணிக வங்கிகளின்
சராசரி வட்டி விகிதத்தை விட 2.75 மடங்கு அதிகமாகவோ வசூலிக்கலாம் என மத்திய வங்கி
பரிந்துரைத்திருந்தது.
மத்திய வங்கியின் அந்நிய செலாவணி இருப்புகளின் அளவு இருமுறை பில்லியன் டாலர்களுக்கு
மேல் சரிவடைந்துள்ளது. ரூபாய் மீதான அழுத்தம் உயர்ந்துள்ளது.டாலருக்கு எதிராக ரூபாய் 3.5% வீழ்ச்சியடைந்தது.
இந்தியாவின் டாலர் அல்லாத யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் மற்றும் யென் ஆகிய
அந்நிய செலாவணி சொத்துக்கள் மதிப்பு 30-40% காணப்படுகின்றன. வளர்ந்து வரும்
புவிசார் அரசியல் சூழ்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே அந்நிய செலாவணி
இருப்புகளை பன்முகப்படுத்தத் தொடங்கியதாக மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) 2021-22 ஆம்
ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $9.9 பில்லியன் ஆகவும், ஒரு வருடத்திற்கு முன்பு
$2.2 பில்லியனாகவும் இருந்தது, மூன்றாம் காலாண்டில் (Q3FY22) $23 பில்லியனாக உயர்ந்துள்ளது,
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.7 விழுக்காடாக உள்ளது. ஒரு நாடு வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து பெறுவதை விட அதிக
பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உருவாகிறது. தற்போது
சர்வதேச அளவில் புவிசார் அரசியல் நெருக்கடிகளாலும்,
பணவீக்கம் உயர்ந்துள்ளதாலும் இந்தியாவின்
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஆனால் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள் கச்சா எண்ணெயின் விலை 75-80 டாலர் இருக்கும் எனக்
கணக்கிடப்பட்டுள்ளதால், நிதிநிலை அறிக்கையை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மறுமதிப்பீடு
செய்யவேண்டியுள்ளது.
ஆனால் அரசு தரப்பில் அடுத்த 2-3 மாதங்களில் எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதால், ஏறக்குறைய 10,000 கோடி ரூபாய் உயரும் உர மானியத்தைத் தவிர, அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிநிலை அறிக்கை கணக்கீட்டைப் பெரிதாக மாற்றாது” என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் நிதிப் பற்றாக்குறையை குறிப்பிட்ட இலக்குகளுக்குள் வைத்திருக்க வேண்டியதன் காரணமாக, நிதி அமைச்சகம் மார்ச் 15 முதல் வரி வசூல் மற்றும் செலவுகள் உள்ளிட்ட வருவாய் வரவு செலவுகளை தினசரி கண்காணிக்கத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 21
ஆம் தேதிக்குள் துறைகள், அமைச்சகங்கள் தங்கள் ‘சேமிப்புகளை’ ஒப்படைக்குமாறும் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
பணவீக்கம்
உயரும் போதிலும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்தியாவின் மத்திய
வங்கி வட்டி விகிதத்தை (ரெபோ) உயர்த்தவில்லை.
இந்திய பொருளாதாரம் பணவீக்கம்,தேக்கநிலை ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டிருக்கும்
‘ஸ்டாக்ஃப்லேசன் உருவாவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கருத்து
தெரிவித்துள்ளார். மேலும் பணவீக்கம் 6%க்கு மேல் செல்லாது என்றும் 4.5% ஆக மட்டுப்படும் என எதிர்பார்ப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின்
பேரியல் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன என்றும் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் இப்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மூலதன நிறைவு விகிதம் 16 விழுக்காடாகவும், மொத்த வாராக்கடன் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பொதுத்துறை வங்கிகளுக்கான மொத்த
வாராக்கடன் விகிதம், 2021 மார்ச் 31ல் 9.11% ஆக இருந்தது டிசம்பர் 2021 இறுதியில்
7.9% ஆக குறைந்துள்ளது என்ற முன்முடிவுகளுக்கு எதிராக அரசை எச்சரித்து, தொற்றுநோயின்
பின் தாக்கம் மீண்டும் வாரக்கடன்களை உயர்த்தக்கூடும் என்று கூறியுள்ளது.
பாஜக அரசு உரத்துறைக்கு குறைந்த ஒதுக்கீடு செய்திருப்பது உரத் துறையின்
செயல்திறனை மோசமாக பாதிக்கிறது என நாடாளுமன்ற நிலைக்குழு விமர்சித்துள்ளது. இரசாயன
மற்றும் உரத் துறையின் (DCF) திட்டமிடப்பட்ட நிதிக்கோரிக்கை ரூ. 1.76 லட்சம்
கோடியாக உள்ள நிலையில் ரூ. 1.09 1.76 லட்சம் கோடியே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் நிதித் தேவைகள் எந்தக் குறையும் இன்றி நிறைவேற்றப்படும்
வகையில், உரத் துறையை ‘முன்னுரிமைத் துறை’யாக அறிவிக்க வேண்டும் என்று நிதி
அமைச்சகத்தை இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
தேசிய ஊரக குடிநீர் திட்டம் (NRDWP), ஜல் ஜீவன் இயக்கத்தின் (JJM) கீழ்
குழாய் நீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் செயல்வேகம் குறைந்துள்ளது. இந்த
நிதியாண்டில் 490 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க முடியும்
என்று அரசாங்கம் கருதியது, ஆனால் மார்ச் 24 வரை 198 லட்சம் குடும்பங்களுக்கு
மட்டுமே வழங்க முடிந்தது. இந்த ஆண்டு இலக்கில் 40% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள், விவசாயிகள், பொது மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் மார்ச் 28, 29ல் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும், எந்த வகையிலும் தனியார்மயத்தை செயல்படுத்தக் கூடாது, பொதுசொத்துக்களை விற்று பணமாக்கும்
திட்டத்தை கைவிடவேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஊதிய ஒதுக்கீடு அதிகரிக்கவேண்டும் என்பது உட்பட 14 முக்கிய அம்சக் கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர். மத்திய அரசின்
கொள்கைகளால் கடந்த
7 ஆண்டுகளில் இல்லாத
அளவுக்கு ஆட்டோ
தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில்
கடுமையான நெருக்கடியை
இவர்கள்
சந்தித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை
கண்டித்து 28, 29-ம்
தேதிகளில் நடந்த
வேலைநிறுத்த போராட்டத்தில்
ஆட்டோ தொழிலாளர்கள்
சம்மேளனம் (சிஐடியு)
பங்கேற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது. வழக்கம்
போல் பாஜக அரசு அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழுவை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். ஓராண்டிற்கும்
மேலாக இதே சிந்தைப் பாடி வருகிறது பாஜக அரசு. இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்
போகிறார்கள் என்று தெரியவில்லை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல குறைந்தபட்ச ஆதார விலை கூடக் கிடைக்காத
இந்திய விவசாயிகள் இப்போது வருமானத்தை அதிகரிக்க கார்பன் கிரெடிட்களை வர்த்தகம் செய்யலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.
விவசாய சீர்திருத்த சட்டங்களை பரிசீலனை
செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை பல மாதங்கள் வெளியிடப்படாமல்
இருந்தது. 5 மாநில அரசுகளில் தேர்தல் முடிந்தபின் தற்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விவசாய சீர்திருத்த
சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், குறைந்தபட்ச ஆதாரவிலையை மாநில அரசே
அளிக்கவேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அரிசி, கோதுமை ஆகிய இரு பயிர்களுக்கு
மட்டுமே அளிக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.மீண்டும் விவசாய விரோத சீர்திருத்தங்களை
மேற்கொள்ளும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபடுகிறது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
மத்திய அரசை விட மாநில அரசுகள் மக்கள் நலனில் அக்கறை
செலுத்துகின்றன. 2020-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவில் தக்காளி, வாழை, பாகற்காய்,
உருளைக்கிழங்கு போன்ற 16 வகை காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை
அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த
காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20% லாபம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், சுமார் 403.5 மில்லியன் வேலைகள் இழந்துள்ளதாகவும், தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட 97 விழுக்காடு இந்தியர்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அதிக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம், நமது சமூகத்தின் சிறந்த நிலைத்தன்மைக்கு 2030க்குள் 90 மில்லியன் கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக
பாஜக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர்
காலப்பகுதியில் எந்த பொதுத்துறை வங்கியும் (PSB) எந்த இழப்பையும் சந்திக்கவில்லை,
மேலும் இந்த காலகட்டத்தில் 48,874 கோடி ரூபாய் கூட்டு நிகர லாபம் ஈட்டியுள்ளது
என்று அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நிதியாண்டுகளிலும், நடப்பு
நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களிலும், வங்கிகள் மொத்தமாக ரூ.7,34,542 கோடியை
வசூலித்துள்ளன (செயல்படாத சொத்துக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் கணக்குகள்,
மோசடி எனப் புகாரளிக்கப்பட்டவை உட்பட). என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்ரா கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இந்திய மாநிலங்கள் பெறும்
கடனுக்கான வட்டிவிகிதம் 7.34 விழுக்காடாக 0.18% உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது
மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கக்கூடும்.
கிரிப்டோ நாணயங்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கிரிப்டோ நாணய பரிவர்த்தனைகளின் மூலம் பெறப்படும் ஆதாயங்கள் மீது 30% வரி விதிக்கப்படும்.
அதாவது நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு கிரிப்டோ
நாணயங்களை வாங்கி 3 லட்ச ரூபாய்க்கு விற்றீர்களென்றால் 2 லட்ச ரூபாய் ஆதாயத்தின்
மீது 30% வரி விதிக்கப்படும். 50,000 ரூபாய்க்கு மேலான கிரிப்டோ பரிவர்த்தனைகளில்
1% வரி பிடித்தம் செய்யப்படும். 1% வரிப் பிடித்தம் ஜூலையிலிருந்து செய்யப்படும்.
ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி:
புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஜனவரியில் உற்பத்தி 1.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 2.8, 1.1, 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மை பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 1.6, 0.9, 5.4 விழுக்காடு உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி
2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 3.3 விழுக்காடு குறைந்துள்ளது.
ஃபிப்ரவரியில் தொழில்துறை வளர்ச்சி:
இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை
வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஃபிப்ரவரியில் 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாத உற்பத்தி அளவோடு
ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 6.6 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி
5 விழுக்காடும், உருக்கு உற்பத்தி
5.7 விழுக்காடும்
அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி
2.2 விழுக்காடு குறைந்துள்ளது. பெட்ரோலிய
சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 8.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை
எரிவாயு உற்பத்தி 12.5
விழுக்காடும், மின்சார உற்பத்தி
4 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகளின் அளிப்பை உள்நாட்டில் அதிகரிக்கவும்
விலையை நிலைப்படுத்தவும் அரசு அவற்றின் திறந்த நிலை இறக்குமதியை அரசு மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துள்ளது.இதன் மூலம் பருப்பு
வகைகளை எந்த அளவுக் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருப்பு நுகர்வில் 10%க்கும் மேல் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. பருப்பு வகைகள் போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சியில், அரசாங்கம் ஒரு விரிவான நீண்ட காலக் கொள்கையை உருவாக்கி வருகிறது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒழுங்குமுறைகளிலிருந்து ஜீனோம் எடிட்டிங் செய்யப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இது சார்ந்த ஆய்வுகளை
ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய சூழலில் மரபணு மாசு உருவாவதற்கான வாய்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கோல் இந்தியாவின்
நிலக்கரி உற்பத்தி, 2022ல் 620 மில்லியன் டன்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 90% ஏற்றுமதி இலக்கை அடைந்துள்ளது. 21.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழகத்திற்கு 3-வது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
சரக்கு
சேவை வரி:
மத்திய
அரசு வரி வருவாயை உயர்த்தும் விதத்தில் தற்போது 5% உள்ள குறைந்தபட்ச சரக்கு சேவை
வரியை 8% ஆக மாற்றவுள்ளதாக கூறப்பட்டது. சரக்கு
சேவை வரிக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில
அமைச்சர்கள் குழு, 12% மற்றும் 18% வரிவிகிதங்களை ஒன்றிணைத்து 15% வரிவிகிதத்தை
செயல்படுத்த முன்மொழியலாம், ஆனால் பணவீக்கம் உயர்ந்துள்ளதால் வரி விகிதத்தை 5%லிருந்து
8% ஆக உயர்த்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனக் கருத்து
தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு
ஏன் அதிக ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த
நிதியமைச்சர், கவுன்சிலால் கூட்டாக உருவாக்கப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத்
தொகைகள் செலுத்தப்படுவதாகவும், எந்தவொரு தனிநபருக்கும் அந்த சூத்திரத்தை
மாற்றியமைக்க உரிமை இல்லை என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை அரசியலாக்குவது
கூட்டாட்சி அமைப்பை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
நிதியாண்டு 2023 முதல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி
இழப்பீடு நிறுத்தப்படுவதால், மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும், இதனால்
அவர்களின் கடன் தேவைகள் உயரும் அபாயம் உள்ளது.
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்துறை:
2070
ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை சுழியமாக குறைக்கவேண்டும் என்று பாஜக அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. ஆனபோதும் 2020-21இல், 12,880 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
இலக்கிற்கு எதிராக 7,549.64 மெகாவாட்களை மட்டுமே எட்டியுள்ளது. ஜனவரி 31,
2022 நிலவரப்படி நாட்டில் 105.85 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன்
நிறுவப்பட்டுள்ளது, இது ஒட்டுமொத்த இலக்கான 175 ஜிகாவாட்டில் சுமார் 60% மட்டுமே.
சர்க்கரை
உற்பத்தியிலிருந்து, எத்தனால்
உற்பத்திக்கு சர்க்கரை
ஆலைகள் மாற வேண்டியது அவசியம்
என மத்திய
சாலை போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர் நிதின்
கட்கரி கூறியுள்ளார்.
வாகன மாசைக்
கட்டுப்படுத்த வாகனங்களில் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் சர்க்கரை வேண்டாம்
எத்தனால் உற்பத்தி
செய்யுங்கள் என்ற
இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சாலை போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) முடிவெடுப்பதை எளிதாக்கும் மற்றும் விரைவான
பாதையில் செயல்படுத்தும் விதமாக சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே
செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று
நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது
வரவேற்கத்தக்கது என்ற போதிலும் இதை முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டும். பொதுத்துறையும்,
தனியார்துறையும் இணைந்து செயல்படுத்தும் சாலைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதியை
பொதுத்துறை வழங்குகிறது, சுங்கச் சாவடிகளின் மூலம் சாலைக் கட்டுமான, பராமரிப்பு செலவுகளைக்
காட்டிலும் பல மடங்கு தொகையை காலவரையறை இல்லாது பொதுப்பிரதினிதித்துவ கண்காணிப்பு இல்லாது
தனியார் துறை முதலாளிகள் கொள்ளையடிக்க அரசே துணைபோகிறது.
சுங்கச் சாவடிகளை மூடப்போகிறோம்
என அறிவித்துவிட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை 10ரூபாயிலிருந்து
65 ரூபாயாக உயர்த்தியுள்ளது பாஜக அரசு. இதனால் போக்குவரத்து செலவுகள் கடுமையாக அதிகரிக்கும்.
நடப்பு
நிதியாண்டில் சொத்துப் பணமாக்குதல் மூலம் பெறப்படும் தொகை ரூ.88,000 கோடி இலக்கைத்
தாண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில பணமாக்கல் கழகத்தை (NLMC) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) உபரி நிலம் மற்றும் கட்டிடங்களின் சொத்துக்களை நிர்வகித்து, பணமாக்கும் செயலில் ஈடுபடும்.
பொது சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய
அரசு சுமார் 5,400 ஏக்கர் நிலங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றை புதிய தேசிய நில பணமாக்கல் கழகம் (NLMC) மூலம் பணமாக்க முன்மொழியப்பட்டுள்ளன.
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பாதியை உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசியில் 60.41 சதவீத பங்குகள் அரசிற்கு சொந்தமானது அதில் 1.5% பங்குகளை விற்று 3,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. முதலீடு, பொதுச்சொத்து மேலாண்மை
நிறுவனம் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களின் 17 சொத்துக்களை விற்று 23,358 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல்
அளித்துள்ளது.
நிறுவன
இணைப்பு:
பாரத்
பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்தை நஷ்டத்தில் இயங்கும் அரசு
தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தனியார்மயம்:
கேரளாவில் செயல்படும் ஹிந்துஸ்தான் லைஃப்கேர் (HLL) என்ற மத்திய பொதுத்துறை நிறுவனத்தை மத்திய அரசு தனியார்மயப்படுத்தவுள்ளது.
பினராயி விஜயன், எச்எல்எல்லை தனியார்மயமாக்குவதைத் தொடர வேண்டாம் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை அளித்து வருகிறார். மத்திய அரசு பங்குவிலக்கல் செய்தலில் உறுதியாய்
இருப்பதால் வெளிப்படையான ஏலத்தில் மாநில அரசு பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க முயன்ற கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (KSIDC), தற்போதுள்ள விதிமுறைகளின் படி, உள்ளூர் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான ஏஜென்சிகளை பங்கு விலக்கல் விற்பனையில் ஏலம் எடுக்க அனுமதிக்கப்படாது முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குவிலக்கலுக்கான ஏலத்தில் கேரள அரசு பங்கேற்பதை
மத்திய அரசு தடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.ஹெச்எல்எல்லை அரசு நிறுவனமாகத் தக்கவைக்க வேண்டாம் என்று இந்திய அரசு முன்மொழிந்தால், அதை மாநில பொதுத்துறை நிறுவனமாகத் தக்கவைத்துக்கொள்ள மாநில அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, நிலத்தை வைத்திருக்கும் முதல் உரிமை மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும். கேரளாவில் உள்ள ஹிந்துஸ்தான் லைஃப்கேரின் சொத்துக்கள்" வைத்துக்கொள்ளும் உரிமையும்
வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் (PSU) பங்கு விலக்கல் விஷயத்தில்
‘ஓப்பன் ஆஃபர்’ விலையை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படும் விலை சூத்திரத்தை முதலாளிகளுக்கு
சாதகமாக எளிதாக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி)
முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதினைந்தாவது நிதிக் குழு, நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM)
மறுஆய்வுக் குழு ஆகியவற்றின் பரிந்துரையின்படி நிதிக் குழுவை அமைக்கும் திட்டம்
எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீர்க்கடிக்கப்படும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்:
1986-ல் தொடங்கப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தைத்
தொழிலாளர்கள் மீட்டெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான கல்வி, தொழில்பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் மார்ச் 31, 2022க்கு மேல் இத்திட்டம் நீடிக்கப்படாது என்றும், இத்திட்டம் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில்(எஸ்எஸ்ஏ) இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது கடும்
கண்டனங்களுக்குரியது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கடிதம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக
உயர்ந்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கு கூடுதலாக நிதிஒதுக்கி சிறப்பு கவனம்
அளிக்காமல், திட்டத்தின் செயல்பாடுகளை நீர்த்துப்போகச்செய்யும் இந்த அறிவிப்பை
மத்திய அரசு திரும்பப் பெற்று இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.
வேலையின்மை:
2021 நிதியாண்டின் இரண்டாம்
காலாண்டில் நகர்ப்புற வேலையின்மை 9.8% ஆக குறைந்துள்ளது. 2020 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில்,
தொற்றுநோயின் முதல் அலை நாட்டை கடுமையாக தாக்கியபோது நகர்ப்புற வேலையின்மை விகிதம்
20.9% ஆக இருந்தது.
நகர்ப்புறங்களில் 15 வயது, அதற்கு
மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஏப்ரல்-ஜூன் 2021 இல் 12.6 சதவீதமாகக்
குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 20.8 சதவீதமாக இருந்தது.தேசிய
புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பைக் காட்டுகிறது. .
15-29 வயதுக்குட்பட்ட நகர்ப்புற
இளைஞர்களில் 25.5% பேர், நடப்பு ஆண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் வேலையில்லாமல்
உள்ளனர், இது முந்தைய ஆண்டின் காலாண்டில் 34.7% ஆக இருந்தது. 15-29 வயதுக்குட்பட்ட
நகர்ப்புற பெண்கள் ஆண்களை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2022 ஃபிப்ரவரியில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.1% ஆக உயர்ந்தது, பிப்ரவரி 2020 இல் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 7.76% ஆக இருந்தது.
‘பிஎஃப்’ என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும்
8.6% வட்டியை 8.1 %ஆகக் குறைத்து வழங்குவதற்கு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது கடும்
கண்டனத்திற்குரியது.
இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், 6.4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் ஓய்வூதிய வருமானம் பாதிக்கப்படும். ஆனால் வட்டி வீதக் குறைப்பு சந்தை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அரசு ஏற்கெனவே உர மானியத்திற்கு அதிகம்
செலவளித்துள்ளது; சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கு 7.6% வட்டி, மூத்த குடிமக்கள்
சேமிப்பு திட்டம் 7.4%, பொது வருங்கால வைப்பு நிதி 7.1% மற்றும் பாரத ஸ்டேட்
வங்கியின் 5-10 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது இவற்றுடன்
ஒப்பிடும் போது 8.1% அதிகம் தானே என்கிறார். அரசின் ஒட்டுமொத்த செலவினத்தில் வருங்கால
வைப்பு நிதிக்கான 0.5% வட்டி விகிதம் ஒரு சொற்பத்தொகையே. கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கமுடிந்த பாஜக அரசிற்கு
இந்த சொற்பத்தொகையை ஒதுக்கமுடியாதது அவர்களின் மக்கள் நலன் மீதான அலட்சியமின்மையையே
சுட்டிக்காட்டுகிறது.
2015-16-ம் நிதி ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பகுதி அளவில் பிஎஃப் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான அதிகபட்ச வரம்பு 15 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 65 சதவீத தொகை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
தேசிய உள்கட்டமைப்பு திட்டம்:
6,835 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (என்ஐபி)
9,335 திட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 2020 முதல் 2025 வரை
கிட்டத்தட்ட 108 டிரில்லியன் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சகம்
தெரிவித்துள்ளது. இதை செயல்படுத்துவதில் 8.44 டிரில்லியன் மதிப்பிலான மூலதனச்
செலவினத் திட்டங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது
அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு கடன்களை வழங்குவதற்காக அரசு
ஆதரவுடன் செயல்படும் தேசிய நிதிக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கிக்கு
(NaBFID) சுமார் ரூ. 1 டிரில்லியன் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்கட்டமைப்பு, வளர்ச்சிக்கு நிதி வழங்குவதற்கான தேசிய வங்கியின் மூலம்
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அரசு
இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், இவ்வங்கியின் தலைவராக கேவி
காமத் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி
வங்கியின் தலைவராக செயல்பட்டுள்ளார்.
அரசின் இணைய சந்தை (GeM) 2016 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டது. நடப்பு
நிதியாண்டில் இந்தச் சந்தையின் மொத்தக் கொள்முதல் ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இதற்கு முன்னர் இச்சந்தையில் நான்கரை ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி எட்டப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
அந்நிய முதலீடுகள்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நரேந்திர மோடி ஆட்சியின் போது இந்தியாவில் 500.5 பில்லியன் அமெரிக்க டாலர் நேரடி அந்நிய முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன என்றும், இது காங்கிரஸ் ஆட்சியின்
10 ஆண்டுகளில் செய்யப்பட்டதைக் காட்டிலும் 65 விழுக்காடு அதிகம் ஏனெனில் முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சியின் மீது அதிக நம்பிக்கை
வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பிறகு எதனால் 2021 அக்டோபரிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள்
பெருமளவில் இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர். அந்நிய முதலீடுகளை நிர்ணயிப்பது அமெரிக்க
மத்திய வங்கியின் வட்டிவிகிதமே தவிர பாஜக அரசின் மீதான நம்பிக்கை அல்ல.
பங்குச் சந்தையில் 12 மாதங்களில் வெளிநாட்டு நிதிமுதலீட்டாளர்கள் (FPIs) ஒட்டுமொத்த ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் இந்தியப் பங்குகளை
விற்றுள்ளனர்.
வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் (FPIs) 2008 நிதி நெருக்கடியின்
போது விற்பனை செய்த மொத்த அளவை விட, 2021 அக்டோபர் முதல் அதிக பங்குகளை விற்றுள்ளனர்.
ஜனவரி 2008 முதல் மார்ச் 2009 வரையிலான $14.6-பில்லியன் மதிப்பிற்கு நிதி முதலீடுகள்
வெளியேறியுள்ளன. அதனுடன் ஒப்பிடுகையில், அக்டோபர் முதல் இப்போது வரை, ப்ளூம்பெர்க்
தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் $19.8 பில்லியன் மதிப்புள்ள இந்தியப் பங்குகளை
விற்றுள்ளனர்.
2021ல் இந்தியாவிற்கு வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடுகள்
(FDI) $74.01 பில்லியனாக குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட
$87.55 பில்லியன் நேரடி அந்நிய முதலீடுகளைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவு என்று வர்த்தகம்
மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நிய நேரடி
முதலீட்டு (FDI) கொள்கையின் கீழ் ‘ரியல் எஸ்டேட் வணிகம்’ என்பதன்
அர்த்தத்தை அரசாங்கம் திங்களன்று விரிவுபடுத்தியுள்ளது, ஒரு சொத்தின்
குத்தகையிலிருந்து வாடகை/வருமானம் சம்பாதிப்பது, ரியல் எஸ்டேட் வணிகத்திற்குச்
சமமாகாது என்று வரையறுத்துள்ளது.
ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டு முதலீடு 2012-2016 காலகட்டத்தில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2017-21 காலகட்டத்தில் 23.9 பில்லியன் டாலர்களாக 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டு முதலீடுகளின் பங்கு 2017-2021 இல் 82 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஐந்தாண்டு காலத்தில் 37 சதவீதமாக இருந்தது.
பங்குச் சந்தையில் தீவிரமான ஏற்ற இறக்கங்களால் வரும் இழப்பீடுகளைத்
தவிர்க்க பாதுகாப்புக் (securitization) கருவிகள் உருவாக்கப்பட்டன. ஆனபோதும் இவை பெருமளவில்
ஊகலாபம் பெறவே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான சந்தை அமெரிக்கா, ஐக்கிய முடியரசு போன்ற
நாடுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. அதுவே அமெரிக்காவில் வீட்டுமனை குமிழி நெருக்கடி
உருவாகக் காரணமாக அமைந்தது. குஜராத்தின் கிஃப்ட் நகரத்தில் பாதுகாப்புக் கருவிகளுக்கான
சந்தையை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
மத்திய வர்த்தக அமைச்சகம், தற்போதுள்ள வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை (FTP)
மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கும் என்று மத்திய
அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில், கோவிட்-19 கொள்ளைநோய்
காரணமாக அரசாங்கம் 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மார்ச் 31, 2022 வரை
நீட்டித்தது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் 80 கோடி பயனாளிகளுக்கு
மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக - பிரதான்
மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா (PM-GKAY) திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த
உணவு தானிய திட்டத்தை செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு
$1 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
அரசாங்கத்தின் நேரடி வரி வசூல் FY22 க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை
விட ₹1.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது, மொத்த நேரடி வரி வசூலில் நிறுவன வரி 52.75 சதவீதமாக உள்ளது.
நிட்டி ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2021ல் குஜராத் தொடர்ந்து
இரண்டாவது முறையாக முதலிடத்தில் உள்ளது.
நிட்டி ஆயோக்கின் தலைவர்
ராஜிவ் குமார் 'ஆத்மநிர்பர் பாரத்') என்பது மூடிய பொருளாதாரம் என்று அர்த்தமல்ல.
சுயசார்பு என்பது தன்னிறைவு போன்ற ஒன்றல்ல. உலக அளவில் போட்டியிடும் பொருளாதாரம்
மற்றும் உலகளாவிய போக்குகளுடன் மேலும் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்றும்,
'உலகத்திற்காக இந்தியாவில் தாயாரியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
"என்னுடைய பார்வையில் சுயசார்பு
என்பது உலகளாவிய வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தில் நமது பங்கை
அதிகரிப்பதே. அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் சேவைகளில் நமது
பங்கை நான்கு மடங்காக உயர்த்துவதற்கான லட்சிய இலக்கை நாமே வழங்குவதற்கான நேரம் இது
என்று நான் நினைக்கிறேன்," நமது தனிநபர் வருமானம் குறைந்தபட்சம் இன்றைய உலக
தனிநபர் வருமானத்திற்கு சமமாக இருக்கும் நிலையை அடையவேண்டும்” என்றும்
கூறியுள்ளார்.
உலகச்சந்தைக்கு அதீத முக்கியத்துவம்
கொடுக்கும் போக்கு உள்நாட்டு மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதற்கும் காரணமாக
உள்ளது. இந்திய மக்களை பட்டினி நிலைக்குத் தள்ளி, உலகச் சந்தைக்காக உற்பத்தி
செய்யமுனைவது நியாயமாகுமா?.
சஞ்சீவ் சன்யால், பொருளாதாரத்தை
திறந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் மட்டுமே முறைசாரா துறையை மீண்டும்
வலுப்படுத்த முடியும். உள்கட்டமைப்பு உருவாக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகள் சிறு
குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன, ஏனெனில் அவை பெரிய நிறுவனங்களை விட பொது உள்கட்டமைப்பை
அதிகம் பயன்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.
அரசின் இ-ஷ்ராம் இணைய தளத்தில் பதிவுசெய்துகொள்ளும் அமைப்புசாரா
தொழிலாளர்கள் பிரதமர் பாதுகாப்பு மருத்துவ நலத்திட்டம் (பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) மூலம் ஒரு வருடத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாகப் பெறலாம். மேலும், இவர்களில் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தர்களுக்கு பிரதமர் ஓய்வூதியத் திட்டம் (பிரதான் மந்திரி ஷ்ரமியோகி மந்தன்) மூலம், பலன்களைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிப்ரவரியில்
உள்நாட்டு பயணிகள் வாகனத்தின் சில்லறை விற்பனை 8% சரிந்துள்ளது
கிரிசில் நிறுவனம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மீது முன்வைத்த விமர்சனம்
பின்வருமாறு:
நிதிநிலை அறிக்கையில் மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்களால் செய்யப்படும் மூலதனச் செலவினங்களையும் கணக்கில் கொண்டால், அரசின் மூலதனத்திற்கான ஒதுக்கீடு
கூறப்படுவதை விட குறைவாக உள்ளது.
ஏனென்றால், பொதுத்துறை நிறுவனங்களால் செய்யப்படும் மூலதனச் செலவின் ஒரு பகுதியை, மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது. மேலும், மொத்த பொதுத் தொகுப்பின் மற்றொரு அங்கம், மாநிலங்களின் முதலீடுகளுக்காக மத்திய அரசு வழங்கும் மானியம் ஆகும். இவற்றை ஒன்றாக இணைத்து பார்த்தால், 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மொத்த மூலதனச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% ஆகும், 2018-19 இல் 5.9%ஆகவும், 2019-20 இல் 5.8%ஆகவும் இருந்துள்ளது.
பலவீனமான நுகர்வோர் உணர்வைக் கருத்தில் கொண்டு, நுகர்வை ஊக்குவிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம்
போன்ற திட்டங்களுக்கு
அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் வரவு-செலவு (ஜனவரி):
அரசின்
வரிவருவாய் ஜனவரி வரை திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீடுகளில் 87.7% ஆக உள்ளது.
சென்ற ஆண்டு ஜனவரியில் இது 82% ஆக இருந்தது. அரசின் மொத்த வருவாய் ஜனவரி வரை
85.9% ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில்
இது 80.1% ஆக இருந்தது.மத்திய அரசின் மூலதன செலவினம் ஜனவரி வரை 73.4% ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 82.6% ஆக
இருந்தது. மத்திய அரசின் மொத்த செலவினம் ஜனவரி வரை 74.5% ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில்
இது 73% ஆக இருந்தது.
மத்திய அரசின் வரிவருவாய்
ஜனவரி வரை 92.9% ஆக
உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில்
இது 67% ஆக இருந்தது.
ஜனவரி மாதத்தில் மொத்த வரி வருவாய் 4.4% ஆக சுருங்கியது. உற்பத்தி வரி வருவாயில் 24% சரிவு, சுங்க வரி வசூல்களில் 36% சரிவு காரணமாக, சரிந்துள்ளதாக கணக்குகளின் பொதுக் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்ட தரவு குறிப்பிடுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான அடிப்படை சுங்க வரியை 17.5% லிருந்து 12.5% ஆக அரசாங்கம் டிசம்பர் மாதம் குறைத்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி FY22க்கான சுங்க சேகரிப்பு ₹1.89 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, முந்தைய மதிப்பீடுகள் ₹1.36 டிரில்லியன் ஆகும். ஜனவரி வரை, சுங்க வசூல் ₹1.52 டிரில்லியனாக உள்ளது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ₹37,000 கோடி வசூலிக்கப்படும்.
மத்திய அரசின் உணவு மானியத்திற்கான செலவினம் ஜனவரி வரை 73%
ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 30% ஆக இருந்தது.
மத்திய அரசின் ஊட்டச்சத்து
அடிப்படையிலான உர மானியத்திற்கான செலவினம் ஜனவரி வரை 68%
ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 68% ஆக இருந்தது.
மத்திய அரசின் யூரியாவுக்கான மானிய செலவினம் ஜனவரி வரை 96%
ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 76% ஆக இருந்தது.
மத்திய அரசின் பெட்ரோலிய மானியத்திற்கான செலவினம் ஜனவரி வரை 22%
ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 73% ஆக இருந்தது.
மத்திய அரசின் மொத்த மானிய செலவினம் ஜனவரி வரை 76%
ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரியில் இது 42% ஆக இருந்தது.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக
மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுக்கு கூட்டுறவுத் துறை மிகப்பெரிய பங்களிப்பைச்
செய்யப் போகிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுமளவிற்கு
கூட்டுறவுத்துறையை மேம்படுத்த பாஜக அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள்ளதா என்றால் எதுவும்
இல்லை. சூரத் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் (சுமுல்) கூட்டத்தில் உரையாற்றிய
மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஆத்மநிர்பர் பாரதத்தின் கனவை நனவாக்க
வலுவான கூட்டுறவுத் துறை உதவும். “சுமுல்
வலுப்பெற்றால், அதன் இரண்டரை லட்சம் (உறுப்பினர் பால் உற்பத்தியாளர்கள்) பயனடைவார்கள்.
தனியார் பால்பண்ணை வலுப்பெற்றால், ஐந்து பேர் மட்டுமே பயனடைவார்கள். கூட்டுறவுத் துறை
வலுப்பெற்றால், நாட்டின் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், உரிமையாளர்கள் வலுப்பெறுவதோடு,
ஆத்மநிர்பர் பாரத் எண்ணமும் வளரும்,'' “குஜராத் அரசு சர்க்கரை உற்பத்தியில் தனியார்
நிறுவனங்களை அனுமதிக்கவில்லை” என்று கூட்டுறவுத்துறையை வாயளவில் போற்றும் அமித்ஷா உண்மையான
செயல்பாடுகளின் மூலம் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை உயர்த்த முயற்சிக்காததேன்?
நபார்டு வங்கியின்
தலைவர் ஜி ஆர் சிந்தலா, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) குறைந்த மூலதனம், பிணையம் இல்லாமை
ஆகியவற்றால் கடன் பெறுவதற்கு பெரிதும் சிரமப்படுவதாகக் கூறியுள்ளார். கூட்டுறவுக் கடன்
அமைப்புகள், கூட்டுறவு உற்பத்தி அமைப்புகள், கூட்டுறவு விற்பனை அமைப்புகள் ஆகியவற்றின்
ஒருங்கிணைந்த சங்கிலியை நாடு முழுவதும் உருவாக்குவதன் மூலமே அவர்களின் பிரச்சினைகளுக்குத்
தீர்வுபெற முடியும்.
பாதுகாப்புத்துறையில் புத்தொழில் நிறுவனங்களை
ஊக்குவிப்பதன் மூலம் தற்சார்பு நிலையை அடையப்போவதாக பாஜக அரசு கூறியிருந்தது. ஆனால் ஸ்டாக்ஹோம்
சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச ஆயுத
பரிமாற்றத்தின் போக்குகள், 2021 பற்றிய அறிக்கையில், 2017-21 க்கு இடையில்
இந்தியாவும் சவுதி அரேபியாவும் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்களாக உள்ளதாக
குறிப்பிடுகிறது. 2016-20ல் ஆயுத ஏற்றுமதியில் 24வது இடத்தில் இருந்த இந்தியா,
2017-21ல் 23வது இடத்தைப் பிடித்துள்ளது, உலக ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின்
பங்களிப்பு 0.2% ஆகும்.
பாஜக அரசுவேளாண் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு
நிதி உருவாக்குவது குறித்து அரசு தற்போது தான் பரிசீலித்து வருவதாக வர்த்தகம், தொழில்துறை
அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
தொழில்துறையினர் தாமே முன் வந்து, தங்களின் சுய ஒழுங்குமுறைக்கு தயாராக இருக்கிறோம், அரசாங்கத்தின் தலையீடு குறைவாக இருக்கட்டும் என்று கூறவேண்டும் என்கிறார் பியூஷ் கோயல். மக்கள் நலனின் அடிப்படையில் தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதை விட்டுவிட்டு
ஒழுங்குமுறைகளை இல்லாது செய்யும் விதமாக இவ்வாறு கூறுவதா ஒரு மத்திய அமைச்சரின் வேலை.
இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி 2020ல் 430.11 டன்களாக இருந்தது
2021ல் 1,067.72 டன்களாக உயர்ந்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கோதுமையை திறந்த வெளியில் சேமித்து வைக்கும் நடைமுறையை இந்திய உணவுக் கழகம் நிறுத்திவிடும்
என்றும் நுகர்வு அதிகமாகத் தேவைப்படும் மாநிலங்களுக்கு அவை விரைவாகக் கொண்டு சேர்க்கப்படும்
என்றும் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் இணைய ஊடுருவல் இந்தியாவின்
டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவை 2030 ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் டாலராக உயர்த்தும்
என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்புகளை,
அணுகலை எளிதாக்குமே தவிர அதன் மூலமே அனைத்தையும் பெற்று சுயசார்பை அடைந்துவிடமுடியாது.
உண்மையான சுயசார்பை அடைவதற்கு உற்பத்தித் துறையை மேம்படுத்துங்கள்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 481,000 அதிகாரப்பூர்வமாகப்
பதிவுசெய்யப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் இந்தியாவில் கோவிட்-19 காரணமாக பதிவானதை விட 4.1 மில்லியன் இறப்புகள் அதிகமாக இருந்ததாகவும், கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த உலகளாவிய இறப்புகளில் 22% இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது
உண்மைக்கு புறம்பானது என மறுத்துள்ளது மத்திய அரசு.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக,
இந்திய ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது
ரஷ்யாவின் தாக்குதலால் உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு
ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகள் குவிந்துள்ளன.ஆனால், ஏற்றுமதி செய்வதற்கு கன்டெய்னருக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் 30% சதவீதம்
அதிகரித்துள்ளது.
ஆனபோதும் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரும்பு, எஃகு, நகைகள், இரசாயனங்கள்,
பிளாஸ்டிக், அலுமினியம், கடல் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
(EU) அதிகளவில் ஏற்றுமதி செய்து, ரஷ்ய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுகளால் ஏற்படும்
பற்றாக்குறையை நிரப்பவும் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவின் பங்குச் சந்தை முதன்முறையாக உலகளவில் உயர்ந்த சந்தை மூலதனம் கொண்ட ஐந்துநாடுகளின் பட்டியலில்
இந்தியா இடம்பெற்றுள்ளது.இந்தியப் பங்குச் சந்தையின்
மொத்த சந்தை மூலதன மதிப்பு $3.21 டிரில்லியன் ஆகும், இது இங்கிலாந்து ($3.19 டிரில்லியன்), சவுதி அரேபியா ($3.18 டிரில்லியன்), மற்றும் கனடா ($3.18 டிரில்லியன்) ஆகியவற்றை விட அதிகம்.
உலகம்:
அமெரிக்காவில் பணவீக்கம் 7.5% உயர்ந்த நிலையில்
அமெரிக்க மத்திய வங்கி இரண்டு ஆண்டுகளுக்கு சுழியத்திற்கு வைத்திருந்த வட்டி
விகிதத்தை 0.25% உயர்த்தியுள்ளது. பணவீக்கம் கட்டுப்படாவிட்டால் ஆண்டின்
இறுதிக்குள் 2.25% முதல் 2.5% வரை, வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று அமெரிக்க
மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவல் அறிவித்துள்ளார்.
சர்வதேச
நாணய நிதியம் (IMF) ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் மோதல், வளர்ச்சியைக் குறைத்து,
பணவீக்கத்தை அதிகரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்
என்று கூறியுள்ளது. நீண்ட கால நோக்கில், போர் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார
ஒழுங்கை மறுவடிவமைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அதிகரித்து
வரும் சர்வதேச எண்ணெய் விலைகள், ஒரு வாரத்தில் ஒரு பீப்பாய்க்கு சுமார் USD 40 ஆக
உயர்ந்து பின் எண்ணெய் விலை $100 க்கு கீழே குறைந்தது.உலகின் மிகப்பெரிய கச்சா
எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவில் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும்
அதிகரித்துள்ளதால் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர்நிறுத்த
பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தின் அறிகுறிகளால் சந்தை விலை தற்காலிகமாக
இறங்கியது என்ற போதும் மீண்டும் 100 டாலருக்கு மேலே விற்பனையாகிறது.
அரிய-
உலோகங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது. குறிப்பாக குறைக்கடத்திகளின்
உற்பத்திக்கு இன்றியமையாத உலோகமான பல்லேடியம், பெருமளவில் ரஷ்யாவில் இருந்தே பெறப்படுகிறது.
குறைக்கடத்திகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நியான் வாயுவின் மிகப்பெரிய
உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உக்ரைன் உள்ளது. உலகின் நியான் தேவையில்
50% நிறைவு செய்யும் உக்ரைனின் இரு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் இவற்றிற்கான வழங்கல்
சங்கிலிகளை பாதித்துள்ளதால் கனிணி, கைபேசி, கார் போன்ற பல்வேறு
மின்சாதனப் பொருட்களின் உற்பத்திக்கு அவசியமான சிப்களுக்கு தட்டுப்பாடு
உருவாகியுள்ளது. இதனால் மின்னணு சாதனங்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பொருளாதார
ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தொடக்கத்தில் 90% இந்தியப் பொருட்கள்,
65% ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தயாரிப்புகளின் வரியற்ற வர்த்தகத்திற்கு
அணுமதிக்கப்படும். 10 ஆண்டுகளில், 97% இந்திய தயாரிப்புகள், 90% ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் தயாரிப்புகளின் வரியற்ற வர்த்தகம் அணுமதிக்கப்படும். இந்த வர்த்தக
உடன்படிக்கை பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் ஆகிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (GCC)
வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இந்தியா
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் 100 பில்லியன் டாலர்களை
தாண்டி இரு தரப்புக்கும் இடையே 250 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடைய வாய்ப்பு இருப்பதாகவும்
இருதரப்பு ஒப்பந்தம் மே 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பந்தம் ஆஃப்ரிக்கா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் நுழைவாயிலாக செயல்படும் எனவும் பியூஷ் கோயல் கருத்து
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணவீக்கம் கட்டுப்படுத்தமுடியாத படி
உயர்ந்து பொருளாதார மந்தநிலையில் பாதிக்கப்பட்டு இந்தியாவின் நிதி உதவியைப்
பெற்றுள்ளது. இலங்கையில் சீனா செயல்படுத்தவுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்களை
ரத்து செய்த இலங்கை அரசு அவற்றை இந்தியாவின் மூலமே செயல்படுத்த ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளது. உணவு, மருந்துகள், பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கை
பெறுவதற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் கடன்
நிதி அளித்துள்ளது.
தென்கிழக்கு
ஆசியாவில் கோவிட்-19 தொற்றுநோயால் 93 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக ஆசிய
வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகிய
நாடுகளை அங்கத்தினராகக் கொண்ட மெர்கோசர் ஒப்பந்தத்தின் மூலம் சூரியகாந்தி எண்ணெயை
இறக்குமதி செய்ய இந்தியா முயற்சித்துவருகிறது
இந்தியாவின்
மொத்த எண்ணெய் தேவையில் 1%க்கும் குறைவாகவே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி
செய்யப்படுகிறது, என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆர்வம்
காட்டி வருவதை அமெரிக்கா எதிர்மறையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய்
இறக்குமதி ஒப்பந்தங்கள் அரசியலாக்கப்படக் கூடாது என மத்திய அரசு மறைமுகமாக
பதிலளித்துள்ளது. ஆயில் கார்ப்பரேஷன்நிறுவனம் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து 30 லட்சம்
பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. அதையடுத்து இந்துஸ்தான் பெட்ரோலியம்
நிறுவனமும் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்
வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூபிளின் மதிப்பு சரிவடைந்துள்ளதால் ரஷ்யாவுடனான
இந்தியாவின் பரிவர்த்தனைகள் ரூபாயில் செய்யப்படவுள்ளது. ரஷ்யா இந்தியாவிற்கு
ஸ்விஃப்டுக்கு மாற்றான ரஷ்யாவின் எஸ்.எஃப்,பி.எஸ் முறையை பயன்படுத்த முன்மொழிந்துள்ளது.
ரஷ்யா
– இந்தியா இடையே ராணுவத் தளவடாங்கள் வர்த்தகம் சார்ந்து வலுவான உறவு இருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க, கடந்த 2018-ம் ஆண்டு 5 பில்லியன் டாலர்
மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை இந்தியா -
ரஷ்யா இடையிலான வர்த்தக பரிவர்த்தனை அளவு 940 கோடி டாலராகும். கடந்த நிதி ஆண்டில்
பரிவர்த்தனை மதிப்பு 810 கோடி டாலராக இருந்துள்ளது.
ரஷ்யா,
ஈரான், வட கொரியாவுடன் அதிக பரிவர்த்தனைகளைக் கொண்ட எந்தவொரு நாட்டின் மீதும்
பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டமான, அமெரிக்காவின்
எதிரிகளை பொருளாதாரத் தடைகளின் மூலம் எதிர்க்கும் சட்டம் (CAATSA) அனுமதிக்கிறது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிற்கு
எதிரான பொருளாதாரத் தடைகள் அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்தை பாதிக்கலாம், மத்திய
வங்கிகள் டாலரை கைவிட்டு மற்ற நாணயங்களுக்கு மாறலாம் என பார்க்லேஸ் வங்கி கருத்து
தெரிவித்துள்ளது.
சவூதி
அரேபியா, சீனாவிற்கு எண்ணெய் விற்பனையை யுவானில் விலை நிர்ணயம் செய்ய தீவிரமாக
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இது உலக பெட்ரோலிய சந்தையில் அமெரிக்க டாலரின்
ஆதிக்கத்தை குறைக்கும்.
முன்னாள் இந்திய மத்திய வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்,
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள், பல ரஷ்ய வங்கிகளை ஸ்விஃப்ட்
செய்தியிடல் அமைப்பிலிருந்து தடுப்பது போன்றவை பொருளாதார பேரழிவு ஆயுதங்களுக்கு
இணையானது என்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி
எதிர்க்க வேண்டியிருந்தாலும், இந்த பொருளாதார ஆயுதங்கள் குறைத்து மதிப்பிட முடியாத
அபாயங்களை உருவாக்கலாம் என்று ராஜன் கூறியுள்ளார்.
"முழுமையாக கட்டவிழ்த்து விடப்படும் போது,
பொருளாதாரத் தடைகளும் பேரழிவு ஆயுதங்களாகும். அவற்றால் கட்டிடங்களை இடிக்கவோ
அல்லது பாலங்களை இடிக்கவோ முடியாது, ஆனால் அவை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள்,
வாழ்வாதாரங்கள் மற்றும் உயிர்களை அழிக்கின்றன. இராணுவ பேரழிவு ஆயுதங்கள் போல, அவை
கண்மூடித்தனமாக வலியை ஏற்படுத்துகின்றன, குற்றவாளிகள், அப்பாவிகள் இரு
தரப்பினரையும் தாக்குகின்றன. மேலும் அவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டால், நவீன
உலகத்தை செழிக்க அனுமதித்த உலகமயமாக்கல் செயல்முறையை அவை தலைகீழாக மாற்றலாம், என்றும்
ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் அடுத்த
ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் 42 பில்லியன் டாலர் (5 டிரில்லியன் யென்) முதலீடு
செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா கோபால்ட், லித்தியம் மற்றும் வெனடியம்
போன்ற முக்கியமான கனிமங்களின் மிகப்பெரிய இருப்புக்களைக் கொண்டுள்ளது. சீனாவின்
மீதான சார்பைக் குறைத்து ஆஸ்திரேலியாவிடமிருந்து கோபால்ட், லித்தியம் போன்ற
தனிமங்களை இறக்குமதி செய்ய இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது. கனிஜ் பிடேஷ் இந்திய நிறுவனம் ஆஸ்திரேலியாவில் தாதுக்கள்
இருக்கும் இடங்களை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபடவுள்ளது.
கோவிட் தடுப்பு மருந்துகளை உலக மக்கள் இலவசமாக பெரும்
விதமாக அவற்றின் மீதான அறிவு சொத்துரிமைகளை தற்காலிகமாக விலக்குமாறு உலக வர்த்தக
அமைப்பில் இந்தியாவும், தென் ஆஃப்ரிக்காவும் சென்ற டிசம்பரில் ஒரு முன்னெடுப்பைக்
கொண்டுவந்தன. அதை ஆரம்பத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு மருந்து
நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன. தற்போது தான் இந்தியா, தென்னாஃப்ரிக்கா
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆகிய நான்கு உறுப்புநாடுகள் கோவிட் மீதான அறிவு
சொத்துரிமைகளை தற்காலிகமாக விலக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள உறுப்புநாடுகளின்
ஒப்புதல் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை.
கோடிக்கணக்கான மக்கள் கோவிட் கொள்ளை நோயால் செத்துமடியும் போது விசயத்தின் தீவிரம்
கருதி உடனடியாக செயல்படுத்தாமல் எவ்வளவுக்கு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு
தாமதப்படுத்தி வருகிறது. உலக வர்த்தக அமைப்பில் மக்கள் நலன் சார்ந்து எந்த
உருப்படியான செயலையும் நடைமுறைப்படுத்தமுடியாததற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
No comments:
Post a Comment