ஜோஸ் கேப்ரியல் வருமானம் அல்லது நுகர்வு சமத்துவமின்மையில் ஏற்படும்
மாற்றங்கள் பெரும்பாலும் முதல் 10 சதவிகித பணக்காரர்கள், 40 சதவிகித ஏழைகளின் வருவாயில்/நுகர்வில்
ஏற்படும் மாற்றங்களால் உருவாகிறது. ஏனென்றால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான
'நடுத்தர' வர்க்கம் எப்போதும் மொத்த தேசிய வருமானத்தில் தோராயமாக 50 சதவீதத்தைக் கைப்பற்றுகிறது
என்ற கருத்தாக்கத்தை தமது ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைத்தார். இதுவே பால்மாவின்
கோட்பாடு எனப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார சமத்துவமின்மையைக் குறிக்கும்
பால்மா விகிதம் 2013 ஆம் ஆண்டில் அலெக்ஸ் கோபாம் (Tax Justice Network இன் தலைமை நிர்வாகி)
மற்றும் ஆண்டி சம்னர் ஆகியோரால், உருவாக்கப்பட்டது.
பால்மா அளவுகோல் தற்போது பல முன்னணி வருமான விநியோக தரவுத்தளங்கள்
மற்றும் சில தேசிய புள்ளியியல் அலுவலகங்களால் அறிக்கையிடப்படுகிறது, மேலும் ஐ.நா. வளங்குன்றா
வளர்ச்சி இலக்கு 10க்கான குறியீடாக பால்மா குறியீட்டையும் பயன்படுத்த பரந்த ஆதரவைப்
பெற்றுள்ளது.
சில தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் (NSOக்கள்) மற்றும் உலக வங்கி,
ஐக்கிய நாடுகள் சபை போன்ற பிற சர்வதேச அமைப்புகள் ஜினிக் குறியீட்டுடன் கூடுதலாக பால்மா
விகிதத்தையும் அளவிட்டு அறிக்கையிட முன்வந்துள்ளன. ‘OECD’ நாடுகளுக்கு வெளியே தென்ஆஃப்ரிக்காவும்
வளங்குன்றா வளர்ச்சி இலக்கு 10க்கான குறியீடாக பால்மா விகிதத்தை அறிக்கையிடுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜினி குறியீட்டிற்கு மாறாக, பால்மா விகிதமானது உயர் மற்றும்
கீழ் வருமான வரம்புகளில் உருவாகும் மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் மிக்கதாக உள்ளது.
சரி பால்மா விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?. மொத்த தேசிய
வருமானத்தில் (GNI) மக்கள்தொகையின் முதல் 10% பணக்காரர்களின் வருமானப் பங்கை 40% ஏழைகளின்
வருமானப் பங்கால் வகுத்து பெறப்படுகிறது.
பால்மா விகிதத்தைப் பெற அதிக வருமானம் கொண்ட முதல் 10% மக்கள்
பெறும் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் கொண்ட 40% மக்கள் பெறும் மொத்த வருமானத்தால்
வகுக்க வேண்டும். முதல் 10% பணக்காரர்கள், 40% ஏழைகளைக் காட்டிலும் எத்தனை மடங்கு அதிகம்
சம்பாதிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
பால்மா குறியீடு = அதிக வருமானம் கொண்ட முதல் 10% மக்கள் பெறும்
வருமானப் பங்கு / குறைந்த வருமானம் கொண்ட 40% மக்கள் பெறும் வருமானப் பங்கு
ஒரு நாட்டின் பால்மா விகிதம் 4 ஆக இருந்தால் சமூகத்தில், உயர்
வருமானம் பெறும் 10 சதவீதத்தினர், குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 40 சதவீதத்தினரைக்
காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக சம்பாதிப்பதைக் குறிப்பிடுகிறது.
பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை
வெளிக்காட்டுவதற்கு பால்மா குறியீடு பயனுள்ளதாக உள்ளது. கீழ்மட்டம், உயர்மட்டம் ஆகிய
இரண்டிலும் உருவாகும் மாற்றங்களுக்கு பால்மா விகிதம் அதிக உணர்திறன் மிக்கதாக உள்ளது.
அவற்றில் அதிக மாற்றம் உருவாகும் போது பால்மா விகிதத்திலும் அதிக மாற்றம் ஏற்படுகிறது,
ஆனால் ஜினிக் குறியீட்டில் குறைந்த அளவே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக கீழ்மட்டத்தில்
உள்ளவர்களின் வருமானம் பெருமளவு குறைந்து மேல்மட்டத்தில் உள்ளவர்களின் வருமானம் அதிகரிப்பது
ஜினிக் குறியீட்டைக் காட்டிலும் பால்மாக் குறியீட்டில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பால்மாக் குறியீட்டை புரிந்துகொள்வதும் ஜினிக் குறியீட்டைக் காட்டிலும் எளிது.
2011ல் இந்தியாவின் பால்மா குறியீடு 1.5.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
(OECD) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) ஆகியவை தங்கள் தரவுத்தளங்களில் பால்மா குறியீட்டை
வெளியிடுகின்றன.
No comments:
Post a Comment