Friday, April 15, 2022

ஆக்ஸ்ஃபாம் கணக்கீட்டு முறை:

 

கென்யா, பிரேசில், வியட்நாம் எனக் கிட்டத்தட்ட 100 நாடுகளில் ஆக்ஸ்ஃபாம் இயங்கிவருகிறது. மக்களுடன் நேர்காணல்களை நடத்தி, புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. 99 சதவீதத்தினருக்கான பொருளாதார மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து உலகளவில் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.

ஆக்ஸ்ஃபாம் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டாவோஸில் (சுவிட்சர்லாந்து) நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டின் போது உலகத்தின் பொருளாதார சமமின்மை அறிக்கையை வெளியிடுகிறது. ஆக்ஸ்ஃபாம் பொருளாதார சமமின்மையை எவ்வாறு மதிப்பிடுகிறது?. ஆக்ஸ்ஃபாம் கிரெடிட் சூயிஸ்,  ஃபோர்ப்ஸ் நிறுவனங்களின் தரவுகளைப் பயன்படுத்தி பொருளாதார சமமின்மையை மதிப்பிடுகிறது. சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சொத்துக்கள் பற்றிய விரிவான தரவுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. ஆக்ஸ்பாம் இந்தத் தரவுகளை பயன்படுத்துகிறது. கிரெடிட் சூயிஸ் 20 வயதிலிருந்து உள்ள அனைத்து தனிநபர்களின் நிகர சொத்துமதிப்பைக் கணக்கிடுகிறது. செல்வத்தைக் கணக்கிடுகிறது. ஒரு தனிநபரின் நிகர சொத்துமதிப்பு என்பது அவரது கடன்களை கழித்தபின் உள்ள சொத்துகளின் மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் சூயிஸ் புதுப்பித்த தேசிய இருப்புநிலை தரவுகள், குடும்பக் கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்படும் மொத்த சொத்து, செல்வ விநியோகம் ஆகியவற்றைத் தொகுத்து உலக அளவிலும், நாடுகள் அளவிலும் பகுதி வாரியாகவும் தரவுகளின் அட்டவணைகளையும், அதை பகுப்பாய்வு செய்யும் அறிக்கையையும் வெளியிடுகிறது.

30 ஆண்டுகளாக, ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் பெரும் பணக்காரர்களின் பட்டியலையும், அவர்களின் நிகரச் செல்வத்தின் மதிப்பீடுகளையும் தொகுத்துள்ளது. பெரும் பணக்காரர்கள் ஒவ்வொருவரின் நிகர செல்வத்தையும் கணக்கிட அவர்கள் பல்வேறு விசாரணை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆண்டு முழுவதும் ஃபோர்ப்ஸின் நிருபர்கள் பட்டியலில் உள்ள பெரும்பணக்காரர்கள், அவர்களின் ஊழியர்கள், போட்டியாளர்கள், வழக்கறிஞர்களை நேர்காணல் செய்கிறார்கள். அவர்களின் நகர்வுகளை கண்காணிக்கிறார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் ஒப்பந்தங்கள், அவர்கள் விற்கும் நிலம், அவர்கள் வாங்கும் ஓவியங்கள், என்ன காரணங்களுக்காக அதை செய்கிறார்கள் என்பதையும் கண்காணிக்கிறார்கள். பெரும் பணக்காரர்களின் நிகர மதிப்பை மதிப்பிடுவதற்கு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு உள்ள பங்குகள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள், அவர்கள் உடைமையாகக் கொண்ட படகுகள், கலைப்பொருட்கள், பணம், அவர்களின் கடன் கணக்கு உட்பட அனைத்தும் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் மதிப்பிடப்படுகிறது. கிரெடிட் சூயிஸின் 2013 ஆம் ஆண்டின் உலக சொத்துத் தரவுகளிலிருந்து, உலக மக்கள்தொகையில் பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ள 50% பேர் உலக நிகரச் செல்வத்தில் வெறும் 0.7% அல்லது $1.7 லட்சம் கோடி டாலர் மட்டுமே பெற்றுள்ளனர் என்று கண்டறிந்தனர். 2013 ஃபோர்ப்ஸ் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் எத்தனை பணக்காரர்களின் சொத்து மதிப்பை சேர்த்தால் இதே மதிப்பை பெறலாம் எனக் கணக்கிட்ட பொழுது வெறும் 85 பணக்காரர்களின் சொத்துக்களை சேர்த்த பொழுது அது 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பைக் கொண்டிருந்தது அறியப்பட்டது. அதாவது உலகின் 50% மக்கள் கொண்டுள்ள சொத்துமதிப்பை வெறும் 85 பணக்காரர்கள் பெற்றிருந்தனர்.

கிரெடிட் சூயிஸின் 2016 தரவுகளின் அடிப்படையில், உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் செல்வம் முன்பு மதிப்பிட்டதை விட குறைந்து உலகச் செல்வத்தில் 0.2% அல்லது $40900 கோடியாக இருந்தது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் 8 பெரும்பணக்காரர்களின் செல்வத்தைக் கூட்டியதில் $42600 கோடி டாலராக இருந்தது. அதாவது உலகளவில் 50% மக்களின் மொத்தச் செல்வத்தை வெறும் 8 நபர்கள் கொண்டுள்ளனர் என்பது அறியப்பட்டது.

இந்த அடிப்படையிலேயே ஆக்ஸ்ஃபாம் 2022 அறிக்கையில் உலகின் 310 கோடி மக்களைக் காட்டிலும் 10 பெரும்பணக்காரர்கள் அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் உலகளவில் 99 சதவீதத்தினரின் வருமானம் கோவிட்-19 பெருந்தொற்றின் சரிவடைந்த போது 10 பெரும் பணக்காரர்களின் வருமானம் 70000 கோடி டாலரிலிருந்து 150000 கோடி டாலராக இரட்டிப்பாகியுள்ளது என்பதையும் கணக்கிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார சமமின்மை தொடர்ந்து அதிகரித்தால் 2030ல் 331.8 கோடி பேர் வறுமைநிலையில் வாழ்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சமமின்மையால் தினசரி குறைந்தது 21,318 பேர் இறக்கின்றனர், 4 விநாடிக்கு ஒரு நபர் இறக்கின்றார் என ஆக்ஸ்ஃபாம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதார சமமின்மையால் அடிப்படை சுகாதாரம், மருத்துவ வசதி பெறமுடியாமல் தினசரி 15,342 பேர் இறக்கின்றனர்; பட்டினியால் தினசரி 5,773லிருந்து 14,916  பேர் வரை இறக்கின்றனர். பாலின அடிப்படையிலான வன்முறையால் 203லிருந்து 4,685 பேர் வரை இறக்கின்றனர் என 2022ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, April 14, 2022

பொருளாதார சமத்துவமின்மையை மதிப்பிடுவதற்கான குறியீடுகள்:

 

S80/S20:

அதிக வருமானம் பெறும் முதல் 20% பணக்காரர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 20% ஏழைகளின் சராசரி வருமானத்தின் விகிதமாகும்.

P90/P10 :

 அதிக வருமானம் பெறும் முதல் 10% பணக்காரர்களின் வருமானத்தை குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 10% ஏழை மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதமாகும்.

S80/20:

அதிக வருவாய் பெறும் முதல் 20% மக்களின் வருமானத்தை குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 20% ஏழை மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

 P90/P50:

அதிக வருவாய் பெறும் முதல் 10% மக்களின் வருமானத்தை குறைந்த வருமானம்  பெறும் கடை நிலை 50% மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

P50/P10:

குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 50% மக்களின் வருமானத்தை அதிக வருவாய் கொண்ட முதல் 10% மக்களின் வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

20/20 விகிதம்:

 மக்கள்தொகையில் அதிக வருமானம் பெறும் முதல் 20% மக்கள் பெறும்  வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 20% மக்கள்தொகையின் வருமானத்தால் வகுத்து பெறப்படும் விகிதமாகும். அதாவது 20% பணக்காரர்கள் 20% ஏழைகளை விட எத்தனை மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. மக்கள்தொகையில் உள்ள சமத்துவமின்மையின் உண்மையான தாக்கத்தை இது அதிகமாக வெளிப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தில் மனித மேம்பாட்டுக் குறிகாட்டிகளுக்கு இந்த விகிதம் பயன்படுத்தப்படுகிறது.

உலக சமத்துவமின்மை அறிக்கை பொருளாதார சமத்துவமின்மையை மதிப்பிட T10/B50, T1/B50, T0.1/B50 ஆகிய விகிதங்களை பயன்படுத்துகிறது.

T10/B50: அதிக வருமானம் பெறும் முதல் பத்து சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

T1/B50:

அதிக வருமானம் பெறும் முதல் ஒரு சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

T0.1/B50:

அதிக வருமானம் பெறும் முதல் 0.1 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம்.

இத்தகைய விகிதாச்சாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தொகையில், விநியோகத்தின் எந்தப் பகுதியானது சமத்துவமின்மையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறியப் பயன்படுகிறது.

ஹூவர் குறியீடு:

ஹூவர் குறியீடு சரியான சமத்துவ நிலையை அடைய மறுபகிர்வு செய்யப்பட வேண்டிய மொத்த வருமானத்தின் விகிதத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு முற்றிலும் சமத்துவமான சமூகத்தில், சமமான விநியோகத்தை அடைய எந்த வளங்களும் மறுபகிர்வு செய்யப்பட வேண்டியதில்லை என்பதால் அப்பொழுது ஹூவர் குறியீடு 0. அனைத்து வருமானத்தையும் ஒரே குடும்பமே பெறுமானால் அச்சமூகத்தில் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 100% சமத்துவத்தை அடைவதற்காக மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் அப்பொழுது ஹூவர் குறியீட்டின் மதிப்பு 1ஆக இருக்கும். ஹூவர் குறியீட்டின் மதிப்பு 0விற்கும் மற்றும் 1 க்கும்(0% மற்றும் 100%) இடையே இருக்கும், இதில் 0 முழுமையான சமத்துவத்தையும் 1 (100%) அதிகபட்ச சமத்துவமின்மையையும் குறிக்கிறது.

கால்ட் மதிப்பு:

ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியத்திற்கும் அந்த நிறுவனத்தின் சராசரித் தொழிலாளியின் ஊதியத்திற்கும் உள்ள விகிதமாகும். ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அதன் சராசரி பணியாளரை விட பல மடங்கு அதிகமாக ஊதியம் பெறும் போது கால்ட் மதிப்பு அதிகமாக இருக்கும்.

மாறுபாட்டுக் கெழு (coefficient of variation):

மாறுபாட்டுக் கெழு என்பது வருமானங்களின் மாறுபாட்டின் வர்க்க மூலத்தை சராசரி வருமானத்தால் வகுக்கும்போது கிடைக்கிறது.

ஊதிய பங்கு:

ஊதியப் பங்கு என்பது ஊழியர்களின் மொத்த வருமானத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமாகும்.  ஊழியர்களின் மொத்த வருமானத்தை தேசிய வருமானத்தால் வகுக்கும்போது கிடைக்கும் விகிதமாகும்.

Monday, April 11, 2022

பால்மா குறியீடு:

 

ஜோஸ் கேப்ரியல் வருமானம் அல்லது நுகர்வு சமத்துவமின்மையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் முதல் 10 சதவிகித பணக்காரர்கள், 40 சதவிகித ஏழைகளின் வருவாயில்/நுகர்வில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகிறது. ஏனென்றால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான 'நடுத்தர' வர்க்கம் எப்போதும் மொத்த தேசிய வருமானத்தில் தோராயமாக 50 சதவீதத்தைக் கைப்பற்றுகிறது என்ற கருத்தாக்கத்தை தமது ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைத்தார். இதுவே பால்மாவின் கோட்பாடு எனப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார சமத்துவமின்மையைக் குறிக்கும் பால்மா விகிதம் 2013 ஆம் ஆண்டில் அலெக்ஸ் கோபாம் (Tax Justice Network இன் தலைமை நிர்வாகி) மற்றும் ஆண்டி சம்னர் ஆகியோரால், உருவாக்கப்பட்டது.

பால்மா அளவுகோல் தற்போது பல முன்னணி வருமான விநியோக தரவுத்தளங்கள் மற்றும் சில தேசிய புள்ளியியல் அலுவலகங்களால் அறிக்கையிடப்படுகிறது, மேலும் ஐ.நா. வளங்குன்றா வளர்ச்சி இலக்கு 10க்கான குறியீடாக பால்மா குறியீட்டையும் பயன்படுத்த பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. 

சில தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் (NSOக்கள்) மற்றும் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை போன்ற பிற சர்வதேச அமைப்புகள் ஜினிக் குறியீட்டுடன் கூடுதலாக பால்மா விகிதத்தையும் அளவிட்டு அறிக்கையிட முன்வந்துள்ளன. ‘OECD’ நாடுகளுக்கு வெளியே தென்ஆஃப்ரிக்காவும் வளங்குன்றா வளர்ச்சி இலக்கு 10க்கான குறியீடாக பால்மா விகிதத்தை அறிக்கையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜினி குறியீட்டிற்கு மாறாக, பால்மா விகிதமானது உயர் மற்றும் கீழ் வருமான வரம்புகளில் உருவாகும் மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் மிக்கதாக உள்ளது.

சரி பால்மா விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?. மொத்த தேசிய வருமானத்தில் (GNI) மக்கள்தொகையின் முதல் 10% பணக்காரர்களின் வருமானப் பங்கை 40% ஏழைகளின் வருமானப் பங்கால் வகுத்து பெறப்படுகிறது.

பால்மா விகிதத்தைப் பெற அதிக வருமானம் கொண்ட முதல் 10% மக்கள் பெறும் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் கொண்ட 40% மக்கள் பெறும் மொத்த வருமானத்தால் வகுக்க வேண்டும். முதல் 10% பணக்காரர்கள், 40% ஏழைகளைக் காட்டிலும் எத்தனை மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.

பால்மா குறியீடு = அதிக வருமானம் கொண்ட முதல் 10% மக்கள் பெறும் வருமானப் பங்கு / குறைந்த வருமானம் கொண்ட 40% மக்கள் பெறும் வருமானப் பங்கு

ஒரு நாட்டின் பால்மா விகிதம் 4 ஆக இருந்தால் சமூகத்தில், உயர் வருமானம் பெறும் 10 சதவீதத்தினர், குறைந்த வருமானம் பெறும் கடை நிலை 40 சதவீதத்தினரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக சம்பாதிப்பதைக் குறிப்பிடுகிறது.

பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை வெளிக்காட்டுவதற்கு பால்மா குறியீடு பயனுள்ளதாக உள்ளது. கீழ்மட்டம், உயர்மட்டம் ஆகிய இரண்டிலும் உருவாகும் மாற்றங்களுக்கு பால்மா விகிதம் அதிக உணர்திறன் மிக்கதாக உள்ளது. அவற்றில் அதிக மாற்றம் உருவாகும் போது பால்மா விகிதத்திலும் அதிக மாற்றம் ஏற்படுகிறது, ஆனால் ஜினிக் குறியீட்டில் குறைந்த அளவே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் வருமானம் பெருமளவு குறைந்து மேல்மட்டத்தில் உள்ளவர்களின் வருமானம் அதிகரிப்பது ஜினிக் குறியீட்டைக் காட்டிலும் பால்மாக் குறியீட்டில் அதிக மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பால்மாக் குறியீட்டை புரிந்துகொள்வதும் ஜினிக் குறியீட்டைக் காட்டிலும் எளிது.

2011ல் இந்தியாவின் பால்மா குறியீடு 1.5.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) ஆகியவை தங்கள் தரவுத்தளங்களில் பால்மா குறியீட்டை வெளியிடுகின்றன.

Monday, April 4, 2022

விவசாயிகளின் வழியில் தொடர்வோம்:

 


ஓராண்டுக்கு மேல் விவசாயிகள் அயராது மேற்கொண்ட தொடர் போராட்டங்களால் மூன்று விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் போராட்டங்களைக் கைவிடவில்லை மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்யும் விதமாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அறவழியில் போராட்டங்களைத் தொடர்கிறார்கள். மின்சாரச் சட்டத் திருத்தம், மின்சார விநியோகத்தில் தனியார் நிறுவனங்களின் நுழைவை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கான மின்சார மானியம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீதான மின்சாரக் கட்டணச் சுமை பெரிதும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பதால்தான் விவசாயிகள் அதைத் திரும்பப் பெறுமாறு கோருகின்றனர்.

நவீன தாராளமயச் சந்தையின் ஆதாரவாளர்கள் மூன்று விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதைப் பின்னடைவாகவே காண்கின்றனர். இதில் நிட்டி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஷெட்காரி சங்கதனா என்ற மகாராஷ்ட்ர விவசாய சங்கத்தின் தலைவர்  அனில் கன்வாட் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரமேஷ் சந்த் கூறுகிறார்: குறைந்தபட்ச ஆதார விலையை விட சந்தை விலையின் மூலமே விவசாயிகள் லாபகரமாக வருவாய் பெற முடியும். குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டால் அது சந்தையை அழித்து விடும் என்றும் அது வர்த்தகத்தையே அரசு கைப்பற்றுவதற்குச் சமம் என்றும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் அரசின் வாக்குறுதியிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் கொண்டுவரப்பட்டால் அது நாட்டையே நொடிப்பு நிலைக்குத் தள்ளி விடும், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என அனில் கன்வாட் கூறுகிறார்.

அரசுக் கொள்முதல் இல்லாமல் திறந்த சந்தை வர்த்தகத்தின் மூலம் விவசாயிகள் லாபகரமாக வருவாய் பெற முடியுமென்றால் எதற்காக விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏன் 700 விவசாயிகளின் உயிர் பறிக்கப்பட்ட பின்னும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்? விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துப் பல வருடங்கள் ஆனபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் எவ்வாறு அதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுவதாகக் கருதமுடியும் என்ற கேள்விகளுக்கு ரமேஷ் சந்த், அனில் கன்வாட் இருவரும் பதிலளிக்க வேண்டும். ”விவசாயச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, பரிந்துரைகளை வழங்குவதற்காக" உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றவர்தான் இந்த அனில் கன்வாட். இந்த நான்கு பேர் குழுவில் இடம்பெற்ற மற்றவர்களும் நவீன தாராளமயச் சந்தையின் ஆதராளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் கருத்துகளுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் அளிக்கப்படாத விதத்திலேயே இக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை சார்ந்த பரிந்துரை அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்படும் எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவின் லட்சணமே இப்படி இருக்கும் போது புதிய குழு  விவசாயிகளுக்கு ஆதரவான நிலை எடுக்குமா என்பதும் கேள்விக்குறியே. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து புதிதாகப் பரிந்துரை பெற வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் தெளிவாக ஏற்கெனவே எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் பரிந்துரையில் அளிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டுள்ளார். .மோடி அரசு குறிப்பிடும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாயிகளால் கோரப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவாகவே உள்ளது.

விவசாயிகளால் கோரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையிலான C2வைப் போல் 1.5 மடங்கு விலையையே குறிப்பிடுகிறது.

C2 விலை = A2 + FL + நில வாடகை, மூலதனத்திற்கான வட்டி

A2 விலை- விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி ஆகிய இடுபொருட்கள், இயந்திரங்களுக்கான செலவு, தொழிலாளர்களுக்கான கூலி ஆகியவற்றின் கூடுதலைக் குறிக்கிறது.

.மோடி அரசு குறிப்பிடும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது A2 + FL X 1.5.  இதில் குத்தகைச் செலவு / நில வாடகை, வட்டி ஆகியவை கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதால் விவசாயிகளின் வருவாய் குறையவே வழிவகுக்கிறது. விவசாயிகளின் எதிர்ப்பைச் சமாளிக்கவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவதற்கான ஏற்பாடாகத்தான் இந்த புதிய குழு அமைக்கப்படவுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் போதாக்குறையானதே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருப்பதை விட 32,000 முதல் 50,000 கோடி வரை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் குடிமைச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2020 செப்டம்பரில் 11.13 லட்சம் கோடியாக இருந்த சிறு குறு நிறுவனங்களின் வங்கிக் கடன் அளவு 2021 செப்டம்பரில் 11 இலட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் 54.6 விழுக்காடாகவும், ஜூலையில் 70.9 விழுக்காடாகவும் இருந்த நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் 2021 செப்டம்பரில் 24.3 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

நிட்டி ஆயோக் 'டிஜிட்டல் வங்கிகள்' எனப்படும் புதிய நிதி நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதற்கான கட்டுரையை வெளியிட்டுள்ளது, இது இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தற்போதைய கடன் இடைவெளியைக் குறைத்து அமைப்புசார் நிதியொழுங்குக்குள் கொண்டுவருவதை அடிப்படை நோக்கமாய்க் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச நிதிக் குழுவின் மதிப்பீட்டின்படி, சிறு, குறு, நடுத்தரப் பிரிவில் மொத்தக் கடன் தேவை 37 இலட்சம் கோடி ரூபாய். இதில் வங்கிகள், பிற நிதி நிறுவனங்களிடமிருந்து 10.9 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடன் பெறப்படுகிறது. சிறு, குறு, நடுத்தரப் பிரிவில் உள்ள மொத்தக் கடன் இடைவெளி ரூ. 25.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை டிஜிட்டல் வங்கிகள் மூலம் இந்த இடைவெளியை டைக்க இயலும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.  தற்போதைய வணிக வங்கிகள் திறனற்ற முறையில் அதிக செலவினங்கள் கொண்டவையாக உள்ளன. டிஜிட்டல் வங்கிகள், நிர்வாகச் செலவுகள் குறைவு என்பதால் அவற்றைக் கொண்டு இந்தக் கடன் இடைவெளியைக் குறைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை வங்கி பரிந்துரைக்கும் முன்னுரிமைக் கடன் பரிந்துரைகளே சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுடன் அந்த முன்னுரிமைக் கடன் பிரிவும் நீர்த்துப் போக செய்யும் படி பல்வேறு புதிய துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. வங்கி நிதியமைப்பை சீர்திருத்தம் செய்யாமல் வெறும் வடிவ மாற்றம், டிஜிட்டல் மாற்றம் மூலம் தீர்வு காண முடியும் என்பது ஜன்தன் அட்டைகள் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்ற வெற்று வாக்குறுதியைப் போலத்தான் உள்ளது.

டிஜிட்டல் பரிமாற்றங்களால் நுகர்வோரின் கட்டணச் சுமை குறையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் மும்பை ஐஐடியின் ஆய்வறிக்கை ஒன்றில், ஏழைகளின் ஜன்தன் வங்கிக் கணக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் பரிமாற்றக் கட்டணமாக ரூ.254 கோடியைஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அபகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் இவ்வங்கி ரூ.17.70 கட்டணச் சுமையை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுத்துறை வங்கியே இவ்வாறு செயல்படும் போது எவ்வாறு எளிய மக்களால் நம்பகமான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியும்?.

இங்குள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய முறையில் கடனளிக்கப்படுகிறதா என்பது பற்றி எல்லாம் மத்திய நிதியமைச்சருக்குக் கவலை இல்லை. அவர் வாஷிங்டன் நிதி நிறுவனங்களை குஜராத் கிஃப்ட் நகருக்கு வரவேற்று இந்தியாவிலிருந்து நிதி-இலாபத்தைச் சுரண்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைமை வங்கியின் அறிக்கை 2020-21இல் மூலதனம், வருவாய் செலவுகள் முறையே 38.3 விழுக்காடு, 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால் மூலதனச் செலவினங்கள் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில்தான் அதிகமாகச் செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புச் சொத்துகளைப் பணமாக்கி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பாஜக அரசின் அதிசயத் திட்டத்தின் கீழ் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) 600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (MTNL) ஆகியவற்றின் சொத்துக்களை இணைய ஏலத்தளம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்தியக் கலால் வரி வசூல் 2019-20ல் ரூ.1.78 லட்சம் கோடியிலிருந்து 2020-21இல் (ஏப்ரல்-மார்ச்) ரூ.3.72 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளின் ஆதரவைப் பெற்றால், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நிச்சயம் முயற்சி எடுப்போம் எனக் கூறியுள்ளார். இது குறித்து மாநில அரசுகளைக் கேட்டால் மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என கைகாட்டுகின்றன. மத்திய அரசோ மாநில அரசுகளை காட்டிக் கைவிரிக்கிறது. மாநில அரசுகளின் ஆதரவைப் பெற் பிறகா விவசாய சட்டத் திருத்தம், மின்சார சட்டத் திருத்தம், புதிய தேசியக் கல்விக் கொள்கை எல்லாம் கொண்டுவரப்பட்டது?. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி அமைப்புக்குள் கொண்டுவருவதற்கான கூடுதல் பொறுப்பு அனைத்தையும் மையப்படுத்தும் மத்திய அரசிடமே உள்ளது என்பதால், அதற்கு மாநில அரசுகளின் ஒத்துழையாமைதான் காரணம் எனத் திசைதிருப்புவதன் மூலம் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முடியாது.

கிரிப்டோ நாணயங்களின் மீதான ஊக முதலீடுகள் இந்தியாவில் வரம்பற்று அதிகரித்துள்ள நிலையில் கிரிப்டோ நாணயங்களின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இயற்றப்படும் என  அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கோவிட் தொற்றுக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர்த் தேவைகளின் படி தங்கள் தொகுதிக்கான நிதியை திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தி நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உதவி செய்திருக்க முடியும். ஆனால் 2020 ஏப்ரலிலிருந்து கோவிட் தொற்று நோயைக் காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் நிதி இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்றப்பட்டது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

 

பணவீக்கம்:

சென்ற ஆண்டு அக்டோபரில் 1.31 விழுக்காடாக இருந்த மொத்தவிலைப் பணவீக்கம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 12.54  விழுக்காடாக உயர்ந்துள்ளது,  எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 37.18 விழுக்காடு உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 12.04 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் விலையுயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைவிலைப் பணவீக்கத்தின் அளவு செப்டம்பர் மாதத்தில் 4.48 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 0.85 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 19.43 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 4.92 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 5.42 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டை விலை 1.38 விழுக்காடு குறைந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 33.50 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 7.12 விழுக்காடு உயர்ந்துள்ளது.

 

ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி 3.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 8.6, 2.7, 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே  4.6, 1.3, 4.9, 7.4 விழுக்காடு உயர்ந்துள்ளன. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 0.5 விழுக்காடு குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 2.0 விழுக்காடு குறைந்துள்ளது.

 

அக்டோபரில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக் குறியீடு அக்டோபரில் 7.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 14.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.2 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி  14.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 0.04 விழுக்காடு  அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 25.8 விழுக்காடும், எஃகு உற்பத்தி 0.9 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 14.5 விழுக்காடும், மின்சார உற்பத்தி 2.8 விழுக்காடும்  அதிகரித்துள்ளன.  

 

2021-22 (ஜூலைசெப்டம்பர்) இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பீடு:

2021-2022 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலைசெப்டம்பர்) இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு 35.73 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, 2020-21 இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்புடன் ஒப்பிடும் போது இது 8.4 விழுக்காடு வளர்ச்சியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மதிப்புக் கூட்டலின் மதிப்பு 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி 4.5 விழுக்காடாகவும், சுரங்கத் தொழில்களின் வளர்ச்சி விகிதம் 15.4 விழுக்காடாகவும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 5.5 விழுக்காடாகவும், மின்சாரம்,நீர் வழங்கல், பிற சேவைகளின் வளர்ச்சியானது 8.9 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன. வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல், தகவல் தொடர்புத் துறைகளின் வளர்ச்சி 8.2 விழுக்காடாகவும், நிதி, வீட்டுமனை, தொழில் முறை சேவைத் துறைகளின் வளர்ச்சி 7.8 விழுக்காடாகவும், பொது நிர்வாகம், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி 5.8 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன. மொத்தப் பொருளாக்க மதிப்பில் தனியார் நுகர்வுச் செலவினம் 54.5 விழுக்காடாகவும், அரசு நுகர்வுச் செலவினம் 10.1 விழுக்காடாகவும், மொத்த நிலைமூலதன உருவாக்கத்தின் மதிப்பு 32 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது.

2021-22ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்தப் பொருளாக்க மதிப்பு 8.4 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. பொருளாதாரம் கோவிட்-தொற்றுக்கு முந்தைய நிலையைத் தாண்டியுள்ளது என்று அதிகாரபூர்வத் தகவல்கள் காட்டுவதாகவும், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்படும் என்றும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் சென்ற நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது தனியார் நுகர்வுச் செலவினம் 0.18 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது, அரசு நுகர்வுச் செலவினம் அதே அளவில் பூஜ்ஜிய வளர்ச்சியில் உள்ளது. மொத்த நிலைமூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2.5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. 2021 இரண்டாம் காலாண்டில் தனியார், அரசு நுகர்வுச் செலவிங்கள் கோவிட்டுக்கு முந்தைய அளவை விட முறையே 4 விழுக்காடு, 17 விழுக்காடு குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வயதினருக்கான வேலையின்மை விகிதம் 2021 ஜனவரி-மார்ச் மாதங்களில் 9.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 9.1 விழுக்காடாக இருந்துள்ளது, என தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு காட்டுகிறது. நகர்ப்புறங்களில் பெண்களிடையே வேலையின்மை விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 10.6 விழுக்காடாக இருந்து 2021 ஜனவரி-மார்ச் மாதங்களில் 11.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின் படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.86 விழுக்காடாக இருந்து அக்டோபரில் 7.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

நிட்டி ஆயோக் தயாரித்த பலபரிமாண வறுமைக் குறியீட்டின் படி இந்தியாவில் 2015-2016க்கும் 2019-2020க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பலபரிமாண வறுமையின் அளவு குறைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்த இதழில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கட்டுரையில் ஏற்கெனவே கூறியுள்ளபடி நிட்டி ஆயோகால் கணக்கிடப்படும் பலபரிமாண வறுமைக் குறியீட்டில் வறுமையின் அளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தக் குறியீட்டிற்கு அடிப்படையான அளவீடுகளில் நான்கில் ஒன்று மட்டும் வருமானத்தின்  அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்தக் குறியீடு நுகர்வுச் செலவினத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படாததால் உண்மையான வறுமையின் அளவை வெளிக்காட்டுவதில்லை. தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வின் (NFHS) 2015-16 தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட இக்கணக்கீட்டின் படி பீகார் மிகவும் ஏழ்மையான மாநிலமாக உள்ளது. பீகார் மாநிலத்தின் மக்கள்தொகையில் 51.91  விழுக்காட்டினர் பலபரிமாண ஏழ்மை நிலையில் உள்ளனர் அதைத் தொடர்ந்து ஜார்கண்ட்டில் 42.16  விழுக்காட்டினரும், உத்தரப் பிரதேசத்தில் 37.79  விழுக்காட்டினரும் பலபரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2014 இந்திய மாதிரிக் கணக்கீட்டு அலுவலகத்தின் கணக்கெடுப்பின்படி, உழைப்புச் சக்தியில் 93 விழுக்காட்டினர் அமைப்புசாராத் தொழிலாளர்களாக வாழ்வாதாரத்தை ஈட்டியுள்ளனர், தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் அமைப்புசாராத் தொழிலாளர்களே. இந்தியாவின் பொருளாதாரத்தில் 80 விழுக்காடு டிஜிட்டல்மயமாக்கத்தால் அமைப்புசார் துறையாக உள்ளதென இந்திய ஸ்டேட் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிஜிட்டல்மயமாக்கத்தால் அமைப்புசாராப் பொருளாதாரத்தின் பங்கு மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 15 முதல் 20 விழுக்காட்டிற்குக் குறைந்துள்ளதாகக்  குறிப்பிடுகிறது. எப்படி இந்த மாயமந்திரம் நிகழ்ந்தது? அமைப்புசாராத் தொழிலாளார்கள் குறித்த தரவுகளை -ஷ்ரம் என்ற அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான தரவுத்தளத்தில் பதிவு செய்வதனாலேயே அமைப்புசாராத் துறையை அமைப்புசார் துறையாக மாறியதாகக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை. கடந்த சில ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரம் இவ்வாறு அமைப்புசார் பொருளாதாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான எந்தத் திட்டங்களும் செயல்படுத்தாமல் வெறும் தரவுகளை பதிவு செய்வதன் மூலம் மட்டுமே அவர்களை அமைப்புசார் துறையாக அங்கீகரிக்கும் கேலிக்கூத்து வறுமைக்கோட்டைக் குறைத்து வறுமையின் அளவைக் குறைப்பது போன்றதுதான். டிரம்ப் வருகைக்காக சேரிகள் மறைக்கப்பட்டது போல் சமூகப் பாதுகாப்பு இல்லாத தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை இவ்வாறு மறைக்கப்படுகிறது.

2018 முதல், கடன் அட்டையின் மூலம் பெறும் கடன் அதிகரித்துள்ளதால் விவசாயத் துறை 20-25 விழுக்காடு அமைப்புசார் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.

நவம்பர் 30 வரை கோவிட் தடுப்பூசி ஒரு முறை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 54.9 விழுக்காடாகவும், இரு முறை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 24.8 விழுக்காடாகவும் உள்ளது. புதிய ஓமைக்ரான் கோவிட் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது. பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விரைவில் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏர்டெல், வோடோஃபோன், ஜியோ கைபேசிக் கட்டணங்களை 20 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளனர். அடைமழையால் காய்கறி வரத்து தடைபட்டதால் தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களுக்கான தொழில்துறையின் மதிப்பு, நகர்ப்புறங்களில் 12.6 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில், செப்டம்பர் காலாண்டில் விற்பனையின் அளவு 1.2 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது, விலை உயர்வினால் மட்டுமே 11.3 விழுக்காடு மதிப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் விற்கப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் மதிப்பு செப்டம்பர் காலாண்டில் 9.4 விழுக்காடு அதிகரித்துள்ளது; ஆனால் விற்பனையின் அளவு 2.9 விழுக்காடு குறைந்துள்ளது. பொருட்களின் விலை 12.7 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் வேலையின்மையும், உணவுப் பொருட்கள், பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் நாட்டில் பசி, பட்டினி, வறுமையின் அளவை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வழியில் தொடர்ந்து போராட்டங்களை வலுப்படுத்தாமல் நல்வாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகளை மக்களால் பெற முடியாது.

பிற்போக்காளர்களாகக் கருதப்படும் விவசாயிகள்தான் இன்று போராட்டக் களத்தில் முன்னணியில் உள்ளனர். விவசாயிகள் போர்க்குணம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்த வரலாற்று நிகழ்வின் சாட்சியாக இருப்பது மட்டும் போதாது. பாஜக அரசின் சந்தர்ப்பவாதப் பின்வாங்கலை உண்மையான மக்கள் ஜனநாயகத்தைப் பெற்றெடுப்பதற்கான நல்வாய்ப்பாக்கி வலுவான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம். நமக்குக் கிடைத்த இந்தப் பகுதியளவு வெற்றியிலிருந்து முழுவெற்றியைப் பெறுவதற்கான வழியை ஏற்படுத்துவோம். வீன தாராளமயத்தை மண்கவ்வச் செய்வோம்.

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...