பணக்காரர்கள் மேலும் செல்வம் சேர்த்து பெரும்பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகி வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் காணப்படும் இத்தகைய சமூகநிலை எதைக் குறிக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையையே சுட்டிக் காட்டுகிறது. புதிய தாராளியக் கொள்கைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவாக பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதியை பெருமுதலாளிகளே கைப்பற்றும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் எச்சில் பருக்கைகள் கூட மேலடுக்கிலிருந்து கீழடுக்கு மக்களுக்கு சிந்தவில்லை. பொருளாதார சீர்திருத்தம் உழைக்கும் மக்களின் வறுமைநிலையையே வளர்த்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது முதலில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கவே செய்யும் ஆனால் காலப்போக்கில் குறைந்துவிடும் என்பது சிமன் குஸ்நெட் முன்வைத்த கோட்பாடு. இதை பெரும்பாலான முதலாளித்துவ ஆதாரவாளர்கள் மேற்கோள் காட்டி சமத்துவமின்மை இயல்பானது, தவிர்க்கமுடியாது என்றும் காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியின் பயன்பாடு கீழ்தரப்பு மக்களையும் வந்துசேரும் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் தரவுகள் இந்தக் கோட்பாடு தவறு என்றே நிரூபித்துள்ளன. பொருளாதார சமத்துவமின்மை மேலும் அதிகரித்துள்ளதே ஒழியக் குறையவில்லை.
கோவிட்-19 பெருந்தொற்றால் 2021 ஆம் ஆண்டில் உலகளவில் 1630 லட்சம் பேர் கூடுதலாக வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற உலகவங்கியின் மதிப்பீடு உலகளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கோவிட்-19க்கு முந்தைய நிலையைக் காட்டிலும் அதிகரித்துள்ளதையேக் குறிப்பிடுகிறது.
பொருளாதார சமத்துவமின்மையை சொத்துக்களில் காணப்படும் சமத்துவமின்மை, வருமானத்தில் காணப்படும் சமத்துவமின்மை, நுகர்வில் காணப்படும் சமத்துவமின்மை என மூன்று அடிப்படைக் கூறுகளாகப் பிரிக்கலாம். சொத்துக்களில் சமத்துவமின்மையே வருவாயிலும், நுகர்விலும் சமத்துவமின்மை உருவாவதற்கான வாய்ப்புகளையும், சாத்தியக்கூறுகளையும் அதிகப்படுத்துகிறது.
பொருளாதார சமத்துவமின்மை ஆரோக்கியமான சமூக மேம்பாட்டைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றலாக செயல்படுகிறது. பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் போது பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சி குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் போது சமூகத்தில் வறுமை, பட்டினி நிலை மேலும் அதிகரிக்கிறது. பெருமளவிலான மக்கள் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதைக் கூடத் தடுக்கிறது. அவர்கள் சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. சரியான மருத்துவசேவை, மருந்து, சரிவிகித உணவு கிடைப்பதைத் தடுத்து அவர்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கிறது. பொருளாதார சமத்துவமின்மையால் மனிதவள மேம்பாடு பாதிக்கப்படுகிறது, மக்கள் பன்முகத்திறனை வளர்ப்பதற்கும், வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது. கல்வியின் தரமும், கல்விபெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. அதிக எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் சூழலை உருவாக்குகிறது.
பொருளாதார சமத்துவமின்மை எளிய மக்களின் அரசியல் சமூக கலாச்சார உரிமைகளை கடுமையாக பாதிக்கிறது. அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான கூலியைப் பெறவே அதிக நேரம் செலவளிக்கவேண்டியுள்ளதால் அவர்களால் அரசியல் கல்வி பெறுவதற்கும், அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க இயலாமல் போகிறது. பெரும் பணக்காரர்களிடமே அனைத்து அரசியல் உரிமைகளும், முடிவெடுக்கும் உரிமைகளும் மையப்படுத்தப்படுவதற்குக் காரணமாகிறது. இதனால் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் உருவாவடு தடுக்கப்படுகிறது. பொருளாதார சமத்துவமின்மை குறைவாக உள்ள சமூகங்களில் வாழும் மக்கள் அரசியலில் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார சமத்துவமற்ற சமூகங்களில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகளும், மனநல பாதிப்புகளும் காணப்படுகின்றன. பொருளாதார சமத்துவமற்ற சமூகங்களில் சமூகக் குற்றங்கள் அதிகம் நிகழ்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார சமத்துவமின்மை குறைவாக உள்ள நாடுகளில் உள்ளவர்கள் சிறந்த மனநலத்துடன் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்கிறார்கள், குழந்தை இறப்பு குறைவாகவும், மனநோய், உடல் பருமன் போன்ற உடல் நலப் பிரச்சினைகளும் குறைவாக உள்ளது.
பொருளாதார சமத்துவமின்மை குறைவாக உள்ள நாடுகளில் சிறந்த கல்வி பெறுவதற்கான நல்வாய்ப்புகள் உள்ளன. வருமான இடைவெளி குறைவாக இருக்கும் போது சமூக வாழ்க்கை, ஒற்றுமை, மக்களுக்கிடையிலான நம்பிக்கையும் வலுவாக உள்ளது, வன்முறை குறைவாக உள்ளது மற்றும் சிறைத்தண்டனை விகிதம் குறைவாக உள்ளது.
சர்வதேச பண நிதியத்தின் பொருளாதார வல்லுனர்கள் முதலில் உள்ள 20 சதவீதத்தினரின் (பணக்காரர்களின்) வருமானப் பங்கு அதிகரித்தால், ஜிடிபி வளர்ச்சி இடைக் காலத்தில் குறைகிறது, இந்த வளர்ச்சியின் பலன்கள் கீழ்தரப்பினருக்கு செல்வதில்லை. மாறாக, கீழ்தரப்பில் உள்ள 20 சதவீதத்தினர் வருமானப் பங்கின் அதிகரிக்கும் போது ஜிடிபி வளர்ச்சி அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
பொருளாதார வல்லுனர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 2009 இல் உலகளாவிய சமத்துவமின்மை, நாடுகளுக்குள் சமத்துவமின்மை ஆகிய இரண்டும் ஒட்டுமொத்த தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அனைத்து உரிமைகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் சிறப்படைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கி பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டவேண்டியது மிகவும் அவசியம். அதுவே உண்மையான ஜனநாயகத்தை உறுதிசெய்யும்.
No comments:
Post a Comment