2022-23ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்தார். சென்ற ஆண்டு போலவே விவசாயிகளின் பெருமைகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், வேளாண்மையில் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்ற அவர் காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படும். அதிக நீர்த்தேவை கொண்ட பயிர்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் சாகுபடியை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்திட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2 சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆனால் வேளாண்துறைக்கு 2021-2022 நிதியாண்டில் 34220.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23ஆம் நிதியாண்டிற்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் 1212.97 கோடி ரூபாய், குறைவாக 3.6 சதவீதம் குறைவாக ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 126 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆனால் அதற்குத் தகுந்தார் போல் நிதி ஒதுக்கீட்டை உயர்த்தவில்லையே.
விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சென்ற ஆண்டு 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டிலும் அதே அளவாக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு சென்ற நிதி ஆண்டில் 2327 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, தற்போது 2339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகள் தொகுப்பிற்கு சென்ற நிதி ஆண்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போதும் அதே அளவாக ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சென்ற நிதி ஆண்டில் 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதைவிடக் குறைவாக15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திசு கரும்பு நாற்று வளர்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு சென்ற நிதி ஆண்டில் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. தற்போது 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க சென்ற நிதி ஆண்டில் 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய உழவர் சந்தைகள் அமைக்க சென்ற நிதி ஆண்டில் 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, தற்போது 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன் வளர்ப்புக்கு சென்ற நிதி ஆண்டில் 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, தற்போது 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க சென்ற நிதி ஆண்டில் 4508.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது; தற்போது 5,157.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானாவாரி நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தும் திட்டங்களுக்கு சென்ற நிதி ஆண்டில் 146.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில் தற்போது 132 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் கடன் தள்ளுபடிக்கு சென்ற நிதி ஆண்டில் 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கு 4,131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் (Tamil Nadu Organic Farming Mission): தோட்டக்கலைத் துறை மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 50 எக்டர் அளவிலான தொகுப்புகள் (Cluster based) மாவட்டத்திற்கு இரண்டு என்ற விகிதத்தில் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களைத் தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23 நிதியாண்டில், ரூ.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 9 கோடியாக உள்ளது. இதில் பாதிக்கு மேலானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இதில் வேளாண் பட்டதாரிகள் 200 பேருக்கு மட்டும் வேளாண் தொழில் தொடங்க நிதி வழங்குவது எப்படி போதுமானதாக இருக்கும்?
கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இரண்டாவது நிதிநிலை அறிக்கையிலும் அதை நிறைவேற்றவில்லை.
நெல்,கரும்புக்கான கொள்முதலை விலைகள் உயர்த்தப்படும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் 19 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் விளைச்சல் பெற, மத்திய, மாநிலத் திட்டங்கள் வாயிலாக சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் மொத்தம் 32 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியகாந்திப் பயிரின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறன் ஆகியவை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, கரூர், திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய்வித்துப் பயிர்களில் உற்பத்தியினை அதிகரித்திட, 28 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி, சிறுதானிய உணவு ஆகியவற்றை சுய உதவிக்குழு மகளிரிடையே ஊக்குவிக்கும் வகையில் 500 குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதிகரித்தல், பயறுவகைகளைத் தரிசு நிலங்களில் சாகுபடியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்ட "துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்" அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்குப் பின் பயறுவகைகளை சுத்தப்படுத்தி, மதிப்புக்கூட்டி, விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2022-23 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிலும் 10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் "சிறுதானிய திருவிழா" மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தொகுப்பு அணுகுமுறையில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி, சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க 2022-23 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழப்பயிர்கள் சாகுபடியை 22 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க தமிழகத்தில் இவ்வாண்டு "பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம்" செயல்படுத்தப்படும். நடவுச்செடிகளையும் இதர இடுபொருட்களையும் வழங்கி இத்திட்டம் ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் “சி”, “டி” வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள், இரண்டு இலட்சம் ஏக்கர் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.5 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment