1.சாதிய முதலாளி வர்க்கம்:
முதலாளித்துவத்தின் புதுத் தாராளமயம்
(neoliberalism) சமூக நீதிக்கு எதிரானது, ஏண்ணா புதுத் தாராளமயம் அரசுகளை நிதிச்
சிக்கனத்தைக் கடைபிடிக்க சொல்லுது, மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டச்
சொல்லுது, தனியார்மயத்தை முடுக்குவிட சொல்லுது, உழைக்கும் மக்களுக்கான சமூகப்
பாதுகாப்பை ஒழிச்சுக் கட்ட சொல்லுது, ஆனா பெருமுதலாளிகளுக்கான சலுகைகளை மட்டும் அதிகரிக்க
சொல்லுது. புதுத் தாராளமயத்துக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளை
நடைமுறைப்படுத்துவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்கமுடியும்.
தமிழ்நாட்டுல கொஞ்ச நஞ்சமாவது சமூக நீதி
இருக்குதுண்ணா அதுக்கு 69% இட ஒதுக்கீடு தான் முக்கிய காரணமா இருக்கு. ஆனா தமிழக
அரசு புதுத் தாராளமயக் கொள்கைகளின் படி தனியார்மயத்தை வரைமுறை இல்லாம ஆதரிச்சா
இந்த 69%க்கே அர்த்தம் இல்லாம போயிடும். பொதுக் கல்வி, அரசு வேலைவாய்ப்புகள்ல தான்
இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுது. தனியார் நிறுவனங்களில் கல்வி பெறுவதற்கோ,
வேலைவாய்ப்பு பெறுவதற்கோ எந்த இட ஒதுக்கீடும் நடைமுறையில இல்லை. எல்லாத்தையும் தனியார்
மயப்படுத்துனா இட ஒதுக்கீட்டுக்கே வேலை இருக்காது. இட ஒதுக்கீடு இருக்கும் போதே
மனு தர்மம் தான் ஆட்சி நடத்துது, அரசு உயர் பதவிகளிலும், வெள்ளைக் காலர்
பணிகளிலும் உயர் சாதியினர் தான் ஆதிக்கம் செலுத்துறாங்க. இட ஒதுக்கீடும் இல்லைணா
நெலைமை இன்னும் ரொம்ப மோசமா போயிடும், உயர்சாதியினரின் ஆதிக்கம் இன்னைக்கு
இருப்பதை விட இன்னும் அதிகமாகிடும். அதுனால தனியார் மயத்துக்கு முற்றுப்புள்ளி
வைப்பதன் மூலமா தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க முடியும். சமூக நீதியை
விரிவுபடுத்தனும்ணா எல்லாருக்கும் கிடைக்கும் விதமாக பொதுச் சேவைகளையும், பொதுத்
துறைகளையும் விரிவாக்கம் செய்யனும். ஆனா தமிழக அரசு பொதுச் சேவைகளை தனியார்
மயப்படுத்தும் முயற்சியை கைவிடாம விரிவுபடுத்திக்கிட்டே வருது. தூய்மைப்
பணித்துறையைக் கூட விட்டுவெக்கல.
சமூகத்துல சாதி, பொருளாதார அடிப்படையில
மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வேற வழியே இல்லாம இன்னமும் குலத்தொழில் மாதிரி
தூய்மைப் பணியின் மூலமாத் தான் வாழ்வாதாரத்தை தேடவேண்டிய அவல நிலை இருக்கு.
அதுலயும் மன்ணப் போட்டு, தூய்மைப் பணித்துறையை தனியார்மயப்படுத்தி தூய்மைப்
பணியாளர்களை கையறு நிலைக்கு தள்ளியிருக்கு திமுக அரசு. உண்ணாவிரதப் போராட்டத்துல
ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை மரியாதை நிமித்தமாக ஒரு முறை கூட முதல்வர் நேர்ல
போய் பாக்கல. ஆனா உலகமெல்லாம் சுத்தி வெளி நாட்டு முதலாளிகளுக்கு வெத்தல பாக்கு
வெச்சு அழைக்குறதுக்கு மட்டும் முதல்வரால முடியுது. தூய்மைப் பணியாளர்களின்
வேலைவாய்ப்பைப் பறிச்ச அதே அரசால டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவாளி போனஸ் கொடுக்க
மட்டும் 40.62 கோடி ரூபாய் ஒதுக்கமுடியுது.
இப்போ ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வியே
கிடைக்காதவகையில வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா
நிறைவேற்றப்பட்டுருக்கு. இதுனால கல்விக் கட்டணமும் உயரும், உயர் கல்வி
வாய்ப்புகள்ல இட ஒதுக்கீடு மறுக்கப்படும். இதனால மாணவர்கள், பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் என ஒட்டு மொத்த சமூகமே பாதிப்புக்கு உள்ளாகப் போகுது. போக்குவரத்துத்
துறை, மின்சாரத் துறை என எல்லா துறைகளிலுமே தனியார் மய முயற்சிகள் செய்யப்படுது. பொதுத்
துறை வேலைகள் தனியார் நிறுவனங்களுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்படுது.
மக்களுக்கான பொருளாதாரக் கொள்கைகள் மூலமா தான்
சமூக நீதியைப் பாதுகாக்கமுடியுமே தவிர பெருமுதலாளிகளை கொழுக்கவைக்குற பொருளாதாரக் கொள்கைகளால
இல்ல. சமூக நீதிக்கும், பொருளாதாரக் கொள்கைகளுக்கும் சம்மந்தமே இல்லாதது போல
சந்தர்ப்பவாத அரசியல் செஞ்சா, மிச்சமுள்ள சமூக நீதியும் காத்துல தான் பறக்கும்,
சம்மந்தப்பட்ட முதலாளித்துவக் கட்சிகள் 69%க்கு உரிமை கொண்டாட முடியாதபடி
வீட்டுக்கு அனுப்பப்படும்.
இட ஒதுக்கீட்டை ஒழிச்சுக்கட்டலாம்ணு தான்
பார்ப்பனிய பாஜக ரொம்ப கொண்டாட்டத்தோட இது வரை இல்லாத அளவுக்கு அதி வேகமான
தனியார்மயத்தை நடைமுறைப்படுத்துது. அதுனால பெரியார் வழிவந்த உண்மையான சமூக நீதிப்
பாதுகாவலர்களா இருந்தா மொதல்ல தனியார்மயத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க.
(தொடரும்)

No comments:
Post a Comment