Wednesday, February 19, 2025

பணம் பேசுறேன் (197):


3. தலித் முதலாளிகள்:

தலித் இந்திய வர்த்தக, தொழில்துறை அவையோட அறிக்கைகள்லயும் சரி, அதைச் சேர்ந்த மிலிந்த் காம்ப்ளே போன்ற தலித் முதலாளிகள் கொடுக்குற பேட்டிகள்லயும் சரி, தலித்களுக்கு இட ஒதுக்கீடு வேணாம்னு சொல்லும்போது இட ஒதுக்கீட்டை தான தர்மம் என்ற அர்த்தத்துல “Charity”னு குறிப்பிடுறாங்க. இது அடிப்படையில ரொம்ப ரொம்ப தவறானது மட்டுமில்ல, ரொம்ப ரொம்ப ஆபத்தானதும் கூட. இட ஒதுக்கீடு வேணாம்னு தான ஹிந்துத்துவா சொல்லுது. உயர்சாதியினரும் இட ஒதுக்கீட்டை தான தர்மம் மாதிரி தான பாக்குறாங்க. இந்தியாவுல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ஆண்டுகளா மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளுக்கான சமூக நீதியாகத் தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை தான் இட ஒதுக்கீடு. அதை தான தர்மமாகவோ, சலுகையாகவோ தவறா சித்தரிக்கக்கூடாது. ஆயிரம் ஆண்டுகளா சலுகைகளை மட்டுமே அனுபவிச்சு உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த உயர் சாதியினரின் வம்சாவளிகள் எந்த விதமான குற்றவுணர்ச்சியும் இல்லாம தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுற இட ஒதுக்கீட்டை பார்த்து வயித்தெரிச்சல் அடைஞ்சா, எளக்காரமா பேசுனா அதுக்காக நாமெல்லாம் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கனுமா? எதுக்காகவும் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல. இட ஒதுக்கீட்டை  ஒழிச்சுக்கட்டுறதுக்காக ஹிந்துத்துவா காய்களை நகர்த்திக்கிட்டுருக்கும் போது, உயர்சாதி மனநிலை உள்ளவர்களைப் போல, தலித் முதலாளிகள் இட ஒதுக்கீட்டை தானதர்மம்னு சொல்லுறதும், அது தலித்துகளுக்கு வேணாம்னும் சொல்லுறதும் பாஜக, ஹிந்துத்துவ கும்பலுக்கு தான் ஆதரவா போய் முடியும். அதுனால தலித் மக்களோட வளர்ச்சி தான பாதிக்கப்படும். இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைஞ்ச இந்த தலித் முதலாளிகள் இட ஒதுக்கீடு வேணாம்னு மத்த தலித்களுக்கு சொல்றதுல்ல ஏதாவது நியாயம் இருக்கா? பாஜக ஆதரிக்கிற மக்களுக்கெதிரான புதிய தாராளமய கொள்கைகளைத் தான் தலித் முதலாளிகளும் ஆதரிக்கிறாங்க. அப்டின்னா தலித் முதலாளிகள் தலித் மக்களுக்காக செயல்படுறாங்களா? இல்ல பாஜகவுக்காக செயல்படுறாங்களா? ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துற முதலாளித்துவத்தின் மூலமா சமத்துவமான சமுதாயத்தை/ ஜனநாயகத்தை உருவாக்கமுடியாது. முதலாளித்துவத்தின் மூலமா விடுதலை பெறுவோம்னு நம்பிக்கையூட்டுவது எப்படிப்பட்டது தெரியுமா? அணுகுண்டுகளின் மூலமா உலகை அமைதிப்பூங்காவாக்குவோம்னு உத்தரவாதம் கொடுப்பது மாதிரி தான். கறுப்பு முதலாளித்துவத்தின் மூலமா அமெரிக்க கறுப்பின மக்களுக்கும் விடுதலை கிடைக்கப்போறதுல்ல. கறுப்பு முதலாளித்துவத்திலிருந்து ஊக்கம் பெற்ற தலித் முதலாளித்துவத்தின் மூலமா தலித் மக்களும் விடுதலை பெறமுடியாது. ஒரு பிரிவு சூத்திரர் பெரும்பாலான சூத்திர மக்களோட உழைப்பைச் சுரண்டுறதன் மூலமா எல்லா சூத்திரர்களுக்கும் விடுதலையை பெற்றுத்தர முடியுமா? சூத்திர முதலாளித்துவத்தின் மூலமா சூத்திரர்களும் விடுதலை பெற முடியாது. தலித்துகள் விடுதலை பெறாம சூத்திரர்களும் விடுதலை பெறமுடியாது. நீங்க என்ன தான் சீர்திருத்தம் செஞ்சாலும் அநீதியான, காலாவதியான முதலாளித்துவத்தை வெச்சு சூத்திரர்களோ, தலித்களோ விடுதலை பெறமுடியாது. தலித் முதலாளிகள் சாதிய முதலாளித்துவத்தை இன்னும் சரியா புரிஞ்சுக்கல. அதுனால தான் அவங்க முதலாளித்துவத்தாலயே சாதியை ஒழிச்சுடலாம், மூலதனத்தால சாதியை வீழ்த்திடலாம்னு நெனைக்கிறாங்க. தலித் முதலாளித்துவத்தின் மூலமா தலித்துகள் விடுதலை பெறமுடியும்னு நம்புறாங்க. பழைய ஒடுக்குமுறைக்கு தீர்வா அவங்க புதிய ஒடுக்குமுறைய முன் வைக்கிறாங்க. ஆனா புதிய ஒடுக்குமுறையிலும் பழைய ஒடுக்குமுறை தான் தொடருது. இந்தியாவோட முதலாளித்துவம் சாதி பாக்காத “சமூக நீதி” முதலாளித்துவம் கெடையாது. முதலாளித்துவத்துக்கு ஏதுங்க சமூக நீதின்னு கேக்குறீங்களா. அதுவும் சரிதான். முதலாளித்துவத்துக்கு சமூக நீதி இருந்துருந்தா நாமெல்லாம் இப்புடியா சந்தியில நிப்போம்? அதுவும் இந்தியாவோட முதலாளித்துவம் சாதியிலே ஊறி ஊறி வளந்த சாதிய முதலாளித்துவம். சூத்திரர்கள், தலித்துகளோட உழைப்பைச் சுரண்டி நன்னா ருசிகண்ட முதலாளித்துவம். அமோகமான உழைப்புச்சுரண்டலுக்கும், அமோகமான லாபத்துக்கும், அமோகமா அவா வாழுறதுக்கும் சாதி ட்ரிபிள் கேரண்டி குடுக்கும் போது முதலாளித்துவம் சாதியை அவ்வளவு சுலுவா விட்டுக்கொடுக்குமா? அவா ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டா. நீர் முதலாளித்துவத்தை நன்னா புரிஞ்சுண்டு இருந்தேள்னா நோக்கு மொதல்ல இப்புடிப்பட்ட ஒரு கேள்வியே தோணிருக்காதோல்லியோ. இந்தியாவோட சாதிய முதலாளித்துவத்தை அவ்ளோ ஈசியா எடைபோடாதேள்.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...