Tuesday, July 30, 2024

பணம் பேசுறேன் (111):

 

பொருளாதார வல்லுனர்களுக்கும், இனவியலாளர்களுக்குமிடையே சரியான ஒத்துழைப்பு இல்லாததால ஆதிப் பணங்களைப் பற்றிய ஆய்வு முடக்கப்பட்டிருச்சுன்னு சொல்லுறார் பால் எயின்சிக். பொருளாதார வல்லுனர்கள் நடைமுறையில இனவியலாளர்களின் இருப்பையே புறக்கணிச்சுட்டாங்களாம். ஆதிப்பணங்களின் ஆய்வுத்துறையில் மிகச்சிறப்பா பணிபுரிந்த இனவியலாளர்களின் பெயர்கள் இனவியல் மாணவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தாலும் கூட பொருளாதார வல்லுனர்கள் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவேயில்லையாம். இனவியலாளர்கள், தங்கள் பங்கில், பொருளாதாரக் கோட்பாட்டில் போதுமான தயாரிப்பு இல்லாமலேயே அவங்களோட பணியை செஞ்சாங்களாம். அவங்க மதிப்புமிக்க உண்மைகளை சேகரிச்ச போதும் பணவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை அவர்களால் உணர முடியாமல் போயிடுச்சாம். கோட்பாட்டு கண்ணோட்டத்திற்குத் தேவையான போதிய அறிவு இல்லாததால் அவர்கள் உண்மையைக் கண்டறிவதில் ஊனமுற்றவர்களாகவே  இருந்தாங்களாம்.

உதாரணமாக சொன்னா, சில இனவியலாளர்கள் ஆதிப்பழங்குடியினரிடையே கட்டணம் செலுத்துவதற்கு பொதுவாக அல்லது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருட்களைக் கண்டறிவதற்கு மிகுந்த சிரமங்களை மேற்கொண்டுருக்காங்க. ஆனாலும் அந்த பொருள்கள் நேரடி நுகர்வுக்காக அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்காக பெறப்பட்டதா இல்லை எதிர்கால கொள்முதலுக்காக வாங்கப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அவர்களில் மிகச் சிலரே மேற்கொண்டுருக்காங்க.  இந்த கேள்விக்கான பதிலே பல நிகழ்வுகளில் பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்கள் பணமாக கருதப்பட முடியுமா என்பதை தீர்மானிப்பதில் முடிவானதுன்னு சொல்றாரு பால் எயின்சிக். அதாவது ஒரு பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பொருளைக் கொண்டு வேற எதையும் வாங்கமுடியாது அதை நுகர்வுக்காகத் தான் பயன்படுத்தமுடியும்னு இருந்துச்சுன்னா அந்தப் பொருளை ஆதிப்பணமாக கருத முடியாது இல்லையா.

இனவியலாளர்களுக்கு போதிய தத்துவார்த்த பின்னணி இல்லாததன் விளைவுகளில் ஒன்றாக அவர்களின் ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள் தான் விரிவாக்கம் அடைஞ்சதாம். குறிப்பா, களப்பணியில் ஈடுபட்டவங்க ஒரு சமூகம், அல்லது சிறிய எண்ணிக்கையிலான சமூகங்களில் அவங்க கண்டறிந்த ஆதாரங்களில் இருந்து முடிவுகளை பொதுமைப்படுத்த முனைந்துருக்காங்க. அவங்கள்ல பெரும்பாலோர் தங்கள் சிறப்புக் களப் பணிகளுக்கு வெளியே இருந்த கிட்டத்தட்ட எல்லையற்ற பல்வேறு அமைப்புகளை உணரத் தவறிட்டாங்க.

தற்போதுள்ள நவீன மனிதனுக்கும் ஆதி மனிதனுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளையும் தற்போதுள்ள நவீன சமூகத்திற்கும், ஆதிச் சமூகத்திற்கு இடையிலான வேறுபாடுகளையும் அனுமதிக்காம நவீன கண்ணோட்டத்துடன் பழமையான சமூகங்களின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள முனைவதே பொருளாதார வல்லுநர்கள் ஆதிப் பணத்தைப் பற்றி கொண்டிருந்த தவறான பார்வைகளுக்கு அடிக்கடி காரணமா இருந்துருக்கு. ஏன்னு பாத்தோம்னா நம்மோட நல்லா வளர்ந்த சமூகத்தில் பண்டமாற்று ரொம்பவும் கடினமாகவும் சிரமமாகவும் இருக்கும் என்பதால,  ஆதி சமூகங்கள்லயும் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தபிறகு பண்டமாற்று அதே அளவிற்கு ரொம்ப சிரமமாகவும் கடினமாகவும் இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள்  கற்பனை செய்றாங்க. மிகவும் மேம்பட்ட நிலையை எட்டாத ஒரு சமூகத்தில் பண்டமாற்று அவர்களின் சமூக நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம் என்பதை அவங்க உணரத் தவறிட்டாங்க.

பண்டமாற்று என்பது ரொம்பவும் கடினமானதாகத் தான் இருக்கும் என்ற பொருளாதார வல்லுநர்கள் முன்முடிவுகளே பணத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி முற்றிலும் தவறான விளக்கத்தைக் கொடுக்க பெருமளவுக்கு காரணமாக இருந்துருக்கு .பண்டமாற்றின் அசௌகரியங்கள் உணரப்பட்டதால தான் பணத்தின் உருவாக்கம் அவசியம்னு அவங்க கருதுனாங்க. ஆனால் பண்டமாற்று வழக்கில் இல்லாது போவதற்கு முன்பே உண்மையில பல இடங்களில் பண்டமாற்று அமைப்பு நடைமுறைக்கு வந்ததற்கு முன்பே வர்த்தகம் சாரா காரணிகள் பணத்தின் பரிணாமத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பதை அவங்க அறிந்திருக்கல.

நவீன கண்ணோட்டத்துல ஆதி நிலைமைகளை கருத்தில் கொள்ளும் போக்கின் மற்றொரு உதாரணத்தை கீன்ஸ் கொடுத்துருக்கார், அவர் எகிப்திய மற்றும் சுமேரியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்கு பண உலோகங்களின் வழங்கலில் உள்ள பற்றாக்குறையே காரணமாக இருக்கலாம்னு விளக்கியிருந்தாரு. 19, 20 ஆம் நூற்றாண்டுகள்ல நவீன சமூகங்களில் நாணய பற்றாக்குறையால் உற்பத்தி குறைந்துபோகும் என்பதால, அவர் பண்டைய பேரரசுகளும் அதே காரணியால் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் என்று கருதியிருந்தார். அவர் உணரத் தவறிய விஷயம் என்னன்னா, பணம் நம் வாழ்க்கையில இருப்பதை விட எகிப்தில்  ஒப்பிடமுடியாத அளவிற்கு மிகக்குறைவான பங்கே வகிச்சது என்பதே.  பாபிலோனியாவில் வெள்ளியின் எந்தப் பற்றாக்குறையையும் பார்லியை பணமாகப் பயன்படுத்துவதன் மூலம் சரி செய்ய முடியும்னு தெளிவுபடுத்துறாரு பால் எயின்சிக்.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...