Thursday, November 17, 2022

பொருளாதார அறிஞர் எரிக் டுசாண் எழுதிய “உலக வங்கி ஒரு முக்கிய அரிச்சுவடி” – “The World Bank: a Critical Primer Eric Toussaint” புத்தகத்தின் சாரம் (4):

 


வளரும் நாடுகளுக்கு உலக வங்கி மிக அதிக வட்டியுடனே கடன்கள் வழங்கியது. இக்கடன்களின் வட்டி விகிதம் சந்தையில் நிலவும் வட்டிவிகிதத்திற்கு இணையாகவோ, அல்லது அதற்கு சற்றுக் குறைவாகவோ இருந்தது. இக்கடன்களை திரும்ப செலுத்துவதற்கும் உலக வங்கி குறுகியக் கால அவகாசமே அளித்தது. இதை எதிர்த்து வளரும் நாடுகள் தங்களுக்கு மலிவாக நிதியளிக்க ஐநா ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்றுக் கோரிக்கை வைத்தன.

உலக வங்கி மற்ற வங்கிகளைப் போலவே, அதிக லாபம் தரும் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தே கடனளிக்க முன்வந்தது. கடன் கொடுப்பதற்கான பணம் முக்கியமாக நிதிச் சந்தைகளில் வழங்கப்படும் பத்திரங்களில் இருந்து பெறப்படுகிறது. வளரும் நாடுகளின் செலவில் உலக வங்கி ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டுகிறது.

கடன் பொறி:

1970களில், வளரும் நாடுகளின் கடன் மிகப்பெரிய விகிதத்தில் உயர்ந்தது. கடன்களின் நிபந்தனைகள் மிகவும் சாதகமாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. உலக வங்கி, தனியார் வங்கிகள், அதிக தொழில்மயமான நாடுகளின் அரசுகளிடமிருந்து, வளரும் நாடுகள் கடன் பெறுவது உலக நாடுகளால் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தீவிர மாற்றம் ஏற்பட்டது, புதிய தாராளமயக் கொள்கைகள் செயல்படுத்த ஆரம்பித்ததால் அப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை திடீரென்று கடுமையாக உயர்த்தியது. வட்டி உயர்வு, சரக்குகளின் சந்தையில் ஏற்பட்ட விலைகளின் வீழ்ச்சியுடன் இணைந்ததால் விசயங்கள் வளரும் நாடுகளுக்கு முற்றிலும் பாதகமாக மாறின. கடன் பெற்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1980 களில் கடன் வழங்குபவர்கள் பெரும் லாபம் ஈட்டினர்.

1997 தென்கிழக்கு ஆசியா மற்றும் கொரிய நிதி நெருக்கடிகளிலிருந்து, நிகர நிதி பரிமாற்றமானது கடன் வழங்குபவர்களுக்கு (உலக வங்கி உட்பட) சாதகமாக உயர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கடன், இதுவரை கண்டிராத அளவிற்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடனில் நிகரப் பரிமாற்றம் என்றால் என்ன? நாடுகள் பெறும் கடன் தொகைக்கும், திருப்பி செலுத்தும் தொகைக்கும் (வட்டியுடன் கூடிய முதல்) இடையே உள்ள வேறுபாடே ஆகும். நிகரப் பரிமாற்றம் எதிர்மறையாக இருந்தால், நாடு பெற்றக் கடனை விடத் திருப்பிச் செலுத்தியத் தொகை அதிகம் என்பதைக் குறிக்கிறது.

1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பொது வெளி கடனில் நிகர பரிமாற்றம் எவ்வாறு நேர்மறையாக இருந்தது?

ஏனென்றால் அந்த நேரத்தில் சர்வதேசியப் பண நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து அரசுகள் கணிசமான அளவு கடன் வாங்க ஆரம்பித்தன. எதனால் என்றால், ஆரம்பத்தில் தனியார் துறையால் வாங்கியக் கடனைத் திரும்ப செலுத்த அரசுகள் ஒப்புக்கொண்டன. இந்த பெரிய அளவிலான கடன்களை ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுகள் திருப்பிச் செலுத்தத் தொடங்கியது நேர்மறையான நிகரப் பரிமாற்றத்தை உருவாக்கியது.

1982-88 காலகட்டத்தை எடுத்துக் கொண்டால், பொதுக் கடன் 100%கும் மேலாக மேலும் உயர்ந்தது ($442 பில்லியனில் இருந்து $932 பில்லியனாக) அதே நேரத்தில் தனியார் துறையின் வெளிநாட்டுக் கடன் குறைந்துள்ளது ($274 பில்லியனில் இருந்து $240 பில்லியனாக). வளரும் நாடுகளில் உள்ள முதலாளிகள் அவர்கள் வாங்கிய கடன்களில் இருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்களின் கடன்களை திரும்ப செலுத்தும் சுமை அரசு கருவூலத்தின் மீது விழுந்தது. ஊதியம் பெறும் தொழிலாளர்கள், சிறு உடமையாளர்கள், ஏழைகள், விகிதாசார முறையில் முதலாளிகளை விட அதிக வரி செலுத்துகின்றனர். மேலும், இந்தக் கடன்களில் மிக அதிக விகிதங்கள் நேராக கடன் கொடுத்த நாடுகளுக்குத் திரும்பியது. வளரும் நாடுகளின் முதலாளி வர்க்கத்தால் கடன்களில் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

1985க்குப் பிறகு, 1993ஆம் ஆண்டைத் தவிர கடனுக்கான நிகர பரிமாற்றம் தொடர்ந்து எதிர்மறையாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்மறை பரிமாற்றத்தால் பொது நிதியில், மொத்தம் 471 பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளை அடைந்துள்ளது. 2000 மற்றும் 2004 க்கு இடையில், எதிர்மறை பரிமாற்றம் அதிகரித்தது. இந்த எதிர்மறை பரிமாற்றத்தின் அளவு மொத்தம் $291 பில்லியன். அதாவது வெறும் ஐந்தாண்டுகளில் மூன்று மார்ஷல் திட்டங்களுக்கு சமமானத் தொகை வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள் தொடர்ச்சியாக அதிக அளவிற்குக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திய போதிலும், மொத்தக் கடன் குறையவில்லை. இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மிகப்பெரிய எதிர்மறை வலையில் சிக்கியதால் வளரும் நாடுகளின் கடன் மேலும் அதிகரித்துள்ளது.

சோவியத் ரஷ்யா மேற்குலகம் அளித்ததை விடக் குறைந்த வட்டிக்கேக் கடன் அளித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

1960லியே, உலக வங்கி கடன் நெருக்கடி வருவதன் ஆபத்தைக் காணத் தொடங்கியது. கடன்பட்டுள்ள முக்கிய நாடுகள் அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைகளால் திக்குமுக்காடின. 1973 எண்ணெய் நெருக்கடி வரும் வரை எச்சரிக்கை அறிகுறிகள் அதிகரித்தன. உலக வங்கித் தலைவர்கள், தனியார் வங்கியாளர்கள், பியர்சன் கமிஷன் மற்றும் அமெரிக்க பொது கணக்கியல் அலுவலகம் (GAO) நெருக்கடி வருவதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிட்டனர். இருப்பினும், 1973இல் பெட்ரோலியத்தின் விலை உயரத் தொடங்கியது. தொழில்மயமான நாடுகளின் வங்கிகளில் பெரும் அளவிலான பெட்ரோடாலர்கள் பெரும் வணிகத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டன. அதற்குப் பின் உலக வங்கியின் தொனியில் தீவிர மாற்றம் ஏற்பட்டது. உலக வங்கி நெருக்கடியைப் பற்றி பேசவில்லை. கடன் சுமை உயரும் வேகம் கூடிக் கொண்டே இருந்தது. ஆனால் உலக வங்கியோ அதிகக் கடன் வழங்குவதில் வணிக வங்கிகளுடன் போட்டியிட்டது. 1982இல் கடன் நெருக்கடி முறியும் வரை, வங்கி ஒரு இரட்டை நடைமுறையில் ஈடுபட்டது. வெளியே பொதுமக்களிடமும், கடன்பட்ட நாடுகளிடமும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் பிரச்சனைகள் இருந்தால், அது குறுகிய காலமே இருக்கும் என்றது, இதுவே அதிகாரப்பூர்வ ஆவணங்களில் வெளியிடப்பட்டது. உள்ளே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த கூட்டங்களில், வங்கிகள் அபாயங்கள் அதிகரிப்பதைக் கண்டால் கடன் வழங்குவதைக் குறைக்கும், அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது.

கடன்களை மேலும் அதிகரித்தல், மிகவும் சாதகமான நிபந்தனைகளை முன்மொழிதல்: வட்டி விகிதத்தைக் குறைத்துக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்தல் ஆகியவையே உலக வங்கியால் முன்மொழியப்பட்ட தீர்வுகள்.

உண்மையில், உலக வங்கி நிதி ஓட்டங்களின் அடிப்படையில் பிரச்சனையை பார்க்கவில்லை. அது வெறுமனே கடனில் உள்ள நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எளிதான விதிமுறைகளில் அதிக பணம் கடன் வாங்கவேண்டும் என்ற அடிப்படையிலே நோக்கியது. வெளிப்படையாக, கோட்பாட்டிலும், நடைமுறையிலும் இதுவே பழைய கடன்களை திருப்பிச் செலுத்தப் புதியக் கடன்கள் பெறும் தீய வட்டத்தின் ஆரம்பமானது.

மூன்றாம் உலக நாடுகள் கடன் திரும்ப செலுத்தும் தொகை 1970இல் 18 விழுக்காடும், 1971இல் 20 விழுக்காடும் உயர்ந்துள்ளது. 1960களில் இருந்து கடன் உயர்வின் சராசரி விகிதம் கடன்பட்ட நாடுகள் கடனைச் செலுத்த அடிப்படையான ஏற்றுமதி வருவாயின் வளர்ச்சி விகிதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்தது. இந்நிலைமையை காலவரையின்றி நீட்டிக்க முடியாது என்று உலக வங்கியின் தலைவரான ராபர்ட் நமரா கூறியிருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் (LDC) கடன் செலுத்த இயலா நிலையால் கடன் வழங்கும் வங்கிகளுக்கு பொதுவாக பெரும் இழப்பு ஏற்படவில்லை. கடனாளி நாட்டின் அரசிற்கும் வெளிநாட்டு கடனளிப்பவர்களுக்கும் இடையே வாராக்கடன்களுக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட்டன. கடன்கள் மறுசீரமைக்கப்படும் போது பொதுவாக வட்டிவிகிதம் உயர்த்தப்படும், இதனால் கடனின் விலை உண்மையானக் கடன் மதிப்பை விட மிக அதிகமாக இருக்கும்.

சர்வதேசப் பண நிதியத்துடன் உடன்படிக்கை மேற்கொண்டு சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்தினால் மட்டுமே வணிக வங்கிகளால் கடன்பட்டுள்ள நாடுகளுக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

உலக வங்கி வளரும் நாடுகளுக்கு கொடுக்கும் கடன் நிதியை வளர்ந்த நாடுகளிலிருந்து பொருட்கள், சேவைகளை வாங்கவே பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடனே கடன்களை வழங்கியது. இதனால் தெற்கே கடன் வாங்கிய பணம் வடக்கே திரும்பிச் சென்றது

உலகவங்கியின் முதல் 17 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் கடனாகப் பெற்ற பணத்தில் 93 விழுக்காடு தொழில்மயமான நாடுகளில் கொள்முதல் செய்யும் வடிவில் திரும்ப சென்றது. இதற்கானத் தரவுகள் 1962 வரை உலக வங்கியால் வழங்கப்பட்டன. அதற்குப்பின் இந்த வகையான தரவு பொதுவில் வெளியிடப்படவில்லை.

1962 வரை, வங்கியில் அதிக செல்வாக்கு உள்ள பணக்கார நாடுகள் உலக வங்கி கடனாகக் கொடுத்த பணம் அவர்களுக்கு உடனடியாக திரும்பி வந்ததைக் காட்டுவதில் மகிழ்ச்சியடைந்தனர். உலக வங்கி கடனளிப்பது மிகவும் லாபகரமானத் தொழில் என்பதை நிரூபிப்பதில் அவர்கள் பெருமிதம் கொண்டனர். ஆனால் காலம் செல்ல செல்ல, மேலும் மேலும் சுதந்திரமடைந்த காலனி நாடுகள் உலக வங்கியில் இணைந்தன; அதனால் வங்கியின் ஆண்டறிக்கையில், அதன் செயல்பாடுகளை வெளிப்படையாகக் காட்டுவது சங்கடத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா தனது சில நட்பு நாடுகளின் கடன்களை ரத்து செய்தது. அதில் மிகவும் வெளிப்படையான உதாரணமாக 1953 லண்டன் ஒப்பந்தத்தால் ஜெர்மனியின் கடன் பெருமளவில் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேற்கின் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக, அட்லாண்டிக் பகுதியில் பொருளாதார நிலைத்தன்மைக்கு அதன் முக்கிய அங்கமாக இருக்கும் ஜெர்மனி செழிப்படையவேண்டும் என அமெரிக்கா தலைமையிலான கடன் அளிக்கும் கூட்டு பங்குதாரர்கள் ஜெர்மனிக்கு பெரும் சலுகைகளை அளித்தனர். ஜெர்மனியின் அதிகார மையத்திற்கும் பெரு நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கினர். ஆனால் மேற்கு ஜெர்மனி நடத்தப்பட்ட விதத்தில் வளரும் நாடுகள் நடத்தப்படவில்லை.

மேற்கு ஜெர்மனி அதன் ஏற்றுமதி வருவாயில் இருபதில் ஒரு பங்கிற்கு மேல் அதாவது 5 விழுக்காட்டிற்கு மேல் கடனை திரும்ப செலுத்த அவசியமில்லை என சலுகை அளிக்கப்பட்டது. உண்மையில் ஜெர்மனி அதன் அதன் ஏற்றுமதி வருவாயில் 4.2%க்கு மேல் கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தவேயில்லை.

2004இல், வளரும் நாடுகள் கடனை திருப்பி செலுத்த அவர்களின் ஏற்றுமதி வருவாயில் சராசரியாக 12.5% செலவழிக்க வேண்டியிருந்தது (சஹாரா ஆப்பிரிக்க நாடுகள் 8.7% மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 20%). இந்த விகிதாச்சாரம் 1990களின் இறுதியில் 20 %க்கும் அதிகமாக இருந்தது

ஜெர்மனியின் கடனுக்கான 1953 உடன்படிக்கையின்படி, வட்டிவிகிதம் 0 முதல் 5 விழுக்காடு வரை இருந்தது. மாறாக, வளரும் நாடுகள் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன. பெரும்பாலான ஒப்பந்தங்களின் படி வட்டி விகிதங்களை உயர்த்த முடியும். 1980 முதல் 2000 வரை, வளரும் நாடுகளுக்கு சராசரி வட்டி விகிதம் 4.8 மற்றும் 9.1% இடையே ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகளுக்கு வட்டி விகிதம் 5.7 முதல் 11.4% வரை இருந்தது. 1980 முதல் 2004 வரை பிரேசிலுக்கு வட்டி விகிதம் 6.6 முதல் 11.9% வரை இருந்தது.

ஜெர்மனி தனது வெளிக் கடனைத் திரும்ப செலுத்த தனது தேசிய நாணயத்தையே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால் விதிவிலக்கான சிறியத் தொகைகளைத் தவிர எந்த மூன்றாம் உலக நாடும் கடனைத் திரும்ப செலுத்த தனது தேசிய நாணயத்தையே பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

லண்டன் கடன் ஒப்பந்தத்தில் ஜெர்மனி இறக்குமதி செய்யும் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதற்கு மாறாக, உலக வங்கியாலும், சர்வதேச பண நிதியத்தாலும் வளரும் நாடுகள் இறக்குமதி செய்வதைத் தாமே உற்பத்தி செய்வது தடுக்கப்பட்டது.

கடன் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான சாத்தியப்பாடு வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படவில்லை. லண்டன் கடன் ஒப்பந்தத்தில் சூழ்நிலைகள் காரணமாக ஜெர்மனியின் வளங்கள் குறைந்து கடனைத் திரும்ப செலுத்த இயலாது போனால் கடனை இடைநிறுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. வளரும் நாடுகளின் கடன் ஒப்பந்தங்களில் அத்தகைய வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

1982 மற்றும் 1985க்கு இடையில், லத்தீன் அமெரிக்காவிலிருந்து கடன் வழங்கியவர்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5.3% தொகை செலுத்தப்பட்டது. வெர்செயில்ஸ் உடன்படிக்கை மூலம் 1925க்கும் 1932க்கும் இடையில் ஜெர்மனி மறுசீரமைப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% தொகையே சுமத்தப்பட்டது.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஜேர்மனிக்கு வழங்கப்பட்ட அதே வகையான சலுகைகள் கடன்பட்ட வளரும் நாடுகளுக்கு வழங்க மறுப்பது உண்மையில் இந்த நாடுகளை கடனிலிருந்து விடுபடச் செய்யாமல் கடன் வலையில் நிரந்தரமாக சிக்கியிருக்குமாறு பராமரித்துக்கொள்வது தங்களுக்கு நல்லது என்று கடன் வழங்கும் நாடுகள் கருதின .அவற்றின் மூலம் வருவாய் பெறுவதையும் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக வைத்துக் கொள்வதையுமே விரும்பின.

ஈக்வெடாரில் ஜூலை 2005இல், எண்ணெய் வளங்களின் பயன்பாட்டை சீர்திருத்த அரசு முடிவு செய்தது. எண்ணெய் வளங்களின் வருவாய் முழுவதையும் கடனை செலுத்தப் பயன்படுத்தாது, அவற்றின் ஒரு பகுதி சமூக திட்டங்களுக்கு குறிப்பாக விளிம்பிலிருந்த இந்திய சமூகங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது, இதனால் அதிருப்தியடைந்த உலக வங்கி ஈக்வெடாருக்கு 100 மில்லியன் டாலர் கடனை நிறுத்தி வைத்தது. 'இது ஈக்வெடாருக்கு எதிரான குற்றமாகும் என்று பொருளாதார சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தொடங்கிய நிதி அமைச்சர் ரஃபேல் கொரியா, கூறினார். ஒரு நாடு அதன் சொந்த சட்டங்களை மாற்றியதற்காக தண்டிப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார். பிறகு ஈக்வெடார் வேறு இடத்தில் நிதியுதவியை தேடியது: வெனிசுலாவின் அதிபர் ஹ்யூகோ சாவேஸ், ஈக்வெடாரின் நடவடிக்கைகளை ஆதரிக்கத் தயாராக இருந்ததால், $300 மில்லியன் நிதி வழங்கினார். சீனாவிடமிருந்தும் நிதி பெறப்பட்டது. இதனால் வாஷிங்டன் கொடுத்த அழுத்தம் அதிகரித்து ரஃபேல் கொரியாவின் பதவி நீக்கத்தில் முடிந்தது.

வளரும் நாடுகள் முன்னேற்றம் அடைய, வெளிநாட்டுக் கடன் பெறவேண்டும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே உலக வங்கி பரிந்துரைப்பது. வளர்ந்த நாடுகளிலிருந்து அடிப்படை உபகரணங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை வாங்கக் கடன் பெறவேண்டும் என்ற உலக வங்கியின் யோசனை வளரும் நாடுகளை முன்னேற்றம் பெறச் செய்வதில் தோல்வியடைந்துள்ளது. வெளிநாட்டு மூலதனத்தை குறிப்பாக கடன்களின் வடிவில் பெறுவதை பெரிதும் சார்ந்திருக்கும் படி வளரும் நாடுகள் ஆக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார தன்னிறைவு அடைந்தது போன்ற மாயையை உருவாக்குகிறது. பொதுப் பணத்தைக் கடனாகக் கொடுப்பவர்கள் (தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் அரசுகள், குறிப்பாக உலக வங்கி) கடன்பட்ட நாடுகளின் மீதான கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கான சக்திவாய்ந்த வழிமுறையாக கடன்களை நோக்குகின்றன. ஆகவே உலகவங்கியின் நடவடிக்கைகளை பிழைகள் என்றோ அல்லது மோசமான நிர்வாகத்தின் தொடர்ச்சியாகவோ கருதஇயலாது. அவை வேண்டுமென்றே கவனமாக சிந்தித்து செயல்படுத்தப்படும் ஒரு கோட்பாட்டுத் திட்டத்தின் பகுதியே. இது தான் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. வளர்ச்சி பொருளாதாரம் குறித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களில் திணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி வளர்ச்சி பற்றிய தனது சொந்தக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது.  உண்மைகள் கோட்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போது, உலக ​​வங்கி கேள்வி கேட்காது. மாறாக, கோட்பாட்டைப் பாதுகாப்பதற்காக உண்மைகளைத் திரிக்க முயல்கிறது.

1974 இல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில், அமெரிக்க பொருளாதார நிபுணரும், சர்வதேசப் பண நிதியம், உலக வங்கியின் விமர்சகருமான செரில் பேயர், சர்வதேசப் பண நிதியம் அதன் சேவைகளை வழங்குவதற்கு வளரும் நாடுகள் மீது திணிக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார். அவை பின்வருமாறு

i) நாணயப் பரிமாற்றம், இறக்குமதிகள் மீதானக் கட்டுப்பாட்டை ஒழித்தல் அல்லது தாராளமயமாக்குதல்

ii)  பண மதிப்பிழப்பு;

iii) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பின்வருமாறு கட்டுப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கைகளை பின்பற்றுதல்:

a) வட்டி விகிதங்களை உயர்த்துதல், சில சந்தர்ப்பங்களில் பரிமாற்ற இருப்புக்களை அதிகரித்தல்;

b) பொது நிதிப்பற்றாக்குறையின் கட்டுப்பாடு: செலவுகளை வெட்டுதல்;

பொது சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரிகள் மற்றும் கட்டணங்களை உயர்த்துதல்

நுகர்வோர் பொருட்கள் மீதான மானியங்களை நீக்குதல்;

c) சிவில் சேவையில் சம்பள உயர்வுக்கு வரம்பிடுதல்;

ஈ) விலைக் கட்டுப்பாடுகளை அகற்றுதல்;

iv) வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வரவேற்பளித்தல்.

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...