இந்தியா:
பணவீக்கம்:
நுகர்வோர் விவகாரங்கள் துறையின்
விலை கண்காணிப்பு துறையின் தரவுகளின்படி, அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்தது
40 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோதுமையின் விலை ஒரு கிலோ 25 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக
உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை 33 ரூபாயிலிருந்து 36 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக
விமான நிலையம் புறப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழியில் மயிலாப்பூரில்
தெருவோரக் கடையில் சக்கரவல்லி கிழங்கு, பாகற்காய் போன்ற காய்கறிகளை வாங்கினார். அங்கு
அவர் காய்கறி வியாபாரிகளுடனும், உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார். நேரடியாக உயர் பணவீக்கத்தின்
தாக்கம் குறித்து அறியப்பெற்ற போதும் அதனைக் குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது
பணவீக்கம் சமாளிக்கக்கூடிய அளவில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைத் தாக்கும் உலகளாவிய
அழுத்தம் - ஆற்றல், உரம், உணவு - "இவை அனைத்தையும் நாங்கள் கவனமாகக் கவனித்து,
அழுத்தம் மக்களுக்குக் கடத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறோம் என்கிறார் நிதியமைச்சர்.
ஆனால் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பரில்
7.41% உயர்ந்துள்ளது; பணவீக்கம் தொடர்ச்சியாக 9வது மாதமாக ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்புக்கு
மேல் உள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் 8.6% உயர்ந்துள்ளது. தானியங்களின் விலைவாசி
11.53% உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 7.13% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி
5.68% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 18.05% உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின்
விலைவாசி 3.05% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 16.88% உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் விலைவாசி 6.93% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலே அதிக அளவாக மேற்கு
வங்காளத்தில் பணவீக்கம் 9.44% உயர்ந்துள்ளது.
மொத்த விற்பனை விலைக் குறியீட்டின்
(WPI) அடிப்படையிலான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.7% ஆக உள்ளது. எரிபொருள், ஆற்றலின்
விலைவாசி 32.61% உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 6.34% உயர்ந்துள்ளது.
முதன்மைப் பொருட்களின் விலைவாசி 11.73% உயர்ந்துள்ளது.
ஆகஸ்டில் தொழில்துறை வளர்ச்சி:
ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில்துறை
உற்பத்திக் குறியீடு புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்திக்
குறியீடு 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 0.8% குறுக்கமடைந்துள்ளது. சுரங்கத்
துறையின் உற்பத்தி 3.9% குறுக்கமடைந்துள்ளது. உற்பத்தித் துறை 0.7% குறுக்கமடைந்துள்ளது.
மின்சார உற்பத்தி 1.4% உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் முதன்மை பொருட்களின் உற்பத்தி 1.7%
உயர்ந்துள்ளது. மூலதன பொருட்களின் உற்பத்தி 5.0% உயர்ந்துள்ளது. இடைநிலை பொருட்களின்
உற்பத்தி 0.6% உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு/ கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி
1.7% உயர்ந்துள்ளது. விரைவில் நுகரக்கூடிய பொருட்களின் வளர்ச்சி 2.5% குறைந்துள்ளது.
நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 9.9% குறுக்கமடைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி
குறியீடு (IIP) 2021 ஆகஸ்டில் 13% உயர்ந்திருந்தது. இந்த ஆண்டு ஜூலையில் 2.2% உயர்வடைந்திருந்தது.
செப்டம்பரில் தொழில்துறை வளர்ச்சி:
வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின்
தொழில், உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை வெளியிட்டத் தரவுகளின் படி
செப்டம்பர் மாதத்தில் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 7.9% உயர்ந்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 12.0% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி
2.3% குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி
1.7% குறைந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 6.6% உயர்ந்துள்ளது.
உரங்களின் உற்பத்தி 11.8% உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தி 6.7% உயர்ந்துள்ளது. சிமெண்ட்
உற்பத்தி 12.1% உயர்ந்துள்ளது. மின்சார உற்பத்தி 11% உயர்ந்துள்ளது.
ஆகஸ்டில் மத்திய அரசின் வரவு செலவு:
கணக்குகளின் பொது ஒழுங்குமுறையாளரின்
தரவுகளின் படி 2022-2023 நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசின் மொத்த வரவினம்
நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 37.2%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 40.9%ஆக இருந்துள்ளது. வருவாய்
செலவினம் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில்
35.6%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 37.7%ஆக
இருந்துள்ளது. மூலன செலவினம் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 33.7%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 31.0%ஆக இருந்துள்ளது. மொத்த
செலவினம் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 35.2%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 36.7%ஆக இருந்துள்ளது. அரசின்
நிதிப் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 32.6%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 31.1%ஆக இருந்துள்ளது. உணவு மானியத்திற்கான
செலவினம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 36%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 44%ஆக இருந்துள்ளது. ஊட்டச்சத்து
அடிப்படையிலான உரமானியத்திற்கான செலவினம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 33%ஆக உள்ளது. சென்ற
ஆண்டில் இது 65%ஆக இருந்துள்ளது.
யூரியாவுக்கான மானிய செலவினம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 75%ஆக உள்ளது. சென்ற
ஆண்டில் இது 44%ஆக இருந்துள்ளது.
பெட்ரோலியத்திற்கான மானிய செலவினம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 5%ஆக
உள்ளது. சென்ற ஆண்டில் இது 9%ஆக இருந்துள்ளது. மொத்த மானிய
செலவினம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 43%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 44%ஆக இருந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ரூ.1.47
லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலானதைவிட
26% அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டன்
தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 21 வரை அரசு நீட்டித்துள்ளது
2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின்
பொருளாதாரச் செயல்பாடு உலகத்துடன் ஒப்பிடும் போது சிறப்பாக உள்ளது என்று நிதி அமைச்சகம்
2022 செப்டம்பர் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் கூறியுள்ளது. உலகளாவிய தலையீடுகள்
இருந்தபோதிலும்,இந்தியா உலகை விட சிறந்த இடத்தில் உள்ளது. சில்லறை வணிகம், தொழில் மற்றும்
சேவைப் பிரிவுகளுக்கு கடன் வழங்குவதில் மூலதன வங்கி முறையால் இந்த காலகட்டத்தில் வலுவான
வளர்ச்சி செயல்திறன் சிறப்பாக ஆதரிக்கப்பட்டது. கூடுதலாக, மூலதனச் செலவினங்களில் மத்திய
அரசின் தொடர்ச்சியான உந்துதல், தனியார் துறை மூலதன உருவாக்கத்தை எளிதாக்குவதன் மூலம்
பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை ஊக்குவித்தது. மேலும், நுகர்வு கணிசமாக அதிகரித்ததன்
விளைவாக வருவாயில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதாசாரம் உயர்ந்துள்ளது. மந்தநிலை
பற்றிய பேச்சுகளுக்கு மத்தியில், நாட்டின் நிதி மற்றும் பணவியல் கொள்கை அதிகாரிகள்
வெளித்துறை அழுத்தங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சகம் எச்சரித்தது. நிதியமைச்சகத்திற்கு பொருளாதாரம் என்பது தனியார்
நிறுவனங்களின் செயல்பாடுகள் தான் போலும். பண வீக்க அழுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை
நிதியமைச்சகம் கண்டுகொள்வதேயில்லை.
அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை
வெளியிடுவதற்கு முன்னதாக மத்திய அரசு பெரிய அதிகாரத்துவ மறுசீரமைப்பு செய்துள்ளது.
புதிய வருவாய்த் துறை செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கிரிதர்
பாதுகாப்புத் துறை செயலாளராகவும், விவேக் ஜோஷி நிதிச்சேவைத் துறை (DFS)
தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலையின்மை, வேலைவாய்ப்புக்கான
மக்கள் ஆணையத்தின் ஆய்வறிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டை, அதாவது
ரூ.13.52 லட்சம் கோடியை ஆண்டுக்கு அரசு முதலீடு செய்து, நாட்டில் முழு வேலைவாய்ப்பை
உறுதி செய்ய ‘வேலை செய்யும் உரிமை’ சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சட்ட, சமூக-அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களில் கடுமையான மாற்றங்கள் தேவைப்படுவதால்,
துண்டு துண்டான அணுகுமுறை மூலம் முழு வேலைவாய்ப்பை அடைய முடியாது, என்றும் அறிக்கை
கூறுகிறது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேலைவாய்ப்பை
உருவாக்குவதற்கான இந்த செலவினத்தை ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% உயர்த்த
வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தற்போது, 21.8 கோடி பேருக்கு உடனடியாக வேலை
தேவைப்படுகிறது, இதில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான நூறுநாள் வேலை எனப்படும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மூலம்
பயன்பெறும் நபர்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது சுமார் 30.4 கோடி தொழிலாளர்கள் முறையான
வேலையில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிப்பது அதிக உற்பத்தியையும்,
தேவையையும் உருவாக்கும். அதிலிருந்தே இத்திட்டத்திற்கான நிதியுதவியை பெறமுடியும் ஆகையால்
முழு வேலைவாய்ப்பை அடைவதற்கான ஆதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன எனக் கூறுவது தவறான வாதமாகும்.
முழு வேலை வாய்ப்பு அவர்களுக்கு எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மேல்தட்டு
கருத்துக்கு இது எதிரானது என்றும் அறிக்கை கூறுகிறது.
சர்வதேச நிதி மூலதனத்தால் திணிக்கப்பட்ட
தற்போதைய முறைக்கு மாற்றாக இந்தியாவில் முழு வேலைவாய்ப்பை செயல்படுத்தும் பட்சத்தில்,
அது மற்ற வளரும் நாடுகளும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக இருக்கும். முழு வேலைவாய்ப்பை
நோக்கி நகர்வதன் மூலம் மிகவும் நாகரீகமான மற்றும் ஜனநாயக சமுதாயத்தை அடைவது சாத்தியம்
என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சந்தைகள் முழு வேலைவாய்ப்பிற்கு
குறுகிய காலத்தில், உத்தரவாதம் அளிப்பதில்லை, வேலையின்மையையின் மூலம் உழைப்புச் சக்தியை
பலவீனமாக்க வேண்டும் என்றே விரும்புகிறது. உயர் தொழில்நுட்பம் ஒரு நிறுவனத்தின் அதிக
லாபத்திற்கு வழிவகுக்கும். ஆனால் அது வேலை வாய்ப்பை குறைக்கிறது. எனவே, தொழில்நுட்பத்தை
இறக்குமதி செய்து, வேலைவாய்ப்பைக் குறைப்பவர்கள், வேலைவாய்ப்புக்கு நிதியளிக்கப் பயன்படும்
வரியைச் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை
பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய 4-வது கட்ட பட்டியலை
தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் இந்தியா பெற்றுள்ளது. அடுத்த கட்ட தகவல்
செப்டம்பர் 2023 இல் சுவிட்சர்லாந்தால் பகிரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 101 நாடுகளைச் சேர்ந்த
34 லட்சம் நிதி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து 4-வது கட்ட பட்டியலில் பகிர்ந்துகொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு 74 நாடுகளுடன் பரிமாற்றம் பரஸ்பரமாக இருந்தபோதிலும், ரஷ்யா உட்பட
27 நாடுகளில் எந்த தகவலையும் வழங்கவில்லை, அந்த நாடுகள் இன்னும் ரகசியத்தன்மை மற்றும்
தரவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினாலோ அல்லது பெற
வேண்டாம் என்று முடிவு செய்ததாலோ தகவல்கள் அளிக்கப்படவில்லை.
இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில்
இருந்துதப்பித்து சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை பதுக்கியுள்ளதாக
குற்றச்சாட்டு உள்ளது. 2019 செப்டம்பரில் தான், சுவிஸ் வங்கிகளிடமிருந்து முதல் பட்டியலை
இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தகவல் பரிமாற்றத்தின்
இரகசியத்தன்மை, விசாரணைகளில் அது ஏற்படுத்தக்கூடிய பாதகமான தாக்கத்தை மேற்கோள்காட்டி
குறிப்பிட்ட விவரங்களை வெளியிடவில்லை, ஆனால் சந்தேகத்திற்குரிய வரி ஏய்ப்பு, பணமோசடி,
பயங்கரவாதம் உள்ளிட்ட பிற தவறான செயல்களின் விசாரணையில் தரவுகள் விரிவாகப் பயன்படுத்தப்படும்
என்று தெரிவித்துள்ளது.
பொது அமைப்புகள் வர்த்தகத்தில்
ஈடுபட்டால் வரி விலக்கை இழக்கும் என்று சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்துள்ளது.
தொண்டு நோக்கங்களுக்காக செயல்படுவதாகக் கூறி வணிக அமைப்புகள் பரவலாக சட்ட மோசடி செய்தது,
அத்தகைய நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு
வழிவகுத்தது என்று வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு
கிடைக்கும் வருமான வரி விலக்குகளை கோர விரும்பினால், பொது அமைப்புகள் எந்தவொரு வர்த்தக
நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமான வரித்துறையின்
நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது, பெரும்பாலும் தொண்டு நிறுவனங்கள் வரியிலிருந்து
விலக்கு பெறுவதற்காக உருவாக்கப்படுகின்றன, மேலும் பெரும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு
லாபம் பெறுகின்றன. இருப்பினும், வீட்டு மேம்பாடு, நகரத் திட்டமிடல், தொழில்துறை மேம்பாட்டுத்
துறைகளில் செயல்படும் சட்டப்பூர்வ நிறுவனங்கள், வாரியங்கள், அதிகார அமைப்புகள், கமிஷன்கள்
போன்றவை, வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் வரிவிதிப்பின் போது தொண்டு நிறுவனங்களாகக்
கருதப்படும் என்று கூறியுள்ளது.
மற்றொரு சமீபத்திய தீர்ப்பில்,
உயர் நீதிமன்றம் கல்வி நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகள் கல்வியில் மட்டும் ஈடுபட்டால்
மட்டுமே வரி விலக்குகளின் பலன்களைப் பெற முடியும் என்று கூறியது. கல்வியுடன் தொடர்பில்லாத
லாப நோக்கங்களுக்காக செயல்பட்டால், அத்தகைய நிறுவனங்கள் வருமான வரிச் சட்டத்தின்
10 (23 சி) பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8,
2022 வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வரி வருவாய் 24% உயர்ந்துள்ளது. ரீஃபண்டுகள் எனப்படும்
திரும்பப் பெறப்பட்டத் தொகையின் அளவு ரூ.1.53 டிரில்லியனாக உள்ளது. இது முந்தைய ஆண்டில்
இதே காலத்தில் வழங்கப்பட்டதை விட 81% அதிகமாகும்.
ரூபாய் சர்வதேசமயமாக்கம் இந்தியாவிற்கு
நலம் பயக்கும் என இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை கவர்னர் டி ரபி சங்கர், தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் ரூபாயின் பங்கை ஊக்குவிப்பதும் விரிவுபடுத்துவதும் இந்தியாவுக்கு
பல நன்மைகளை அளிக்கும். எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் ரூபாயைப் பயன்படுத்துவது இந்திய
வணிகத்திற்கான நாணய அபாயத்தைத் தணிக்கிறது, அந்நியச் செலாவணி கையிருப்பின் தேவையைக்
குறைக்கிறது, வெளிப்புற அதிர்ச்சிகளால் வரும் பாதிப்பைக் குறைக்கிறது மற்றும் இந்திய
வணிகங்களுக்கு பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கிறது, என்றும் கூறியுள்ளார்.
வெளிநாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம்
பெரும்பாலும் டாலரில் நடைபெற்றுவருகிறது. இந்த வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்வதற்கான
முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கென்று வெளிநாட்டு வங்கிகளுடன் சிறப்பு கணக்குகள்
தொடங்குமாறு இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. கடந்த மாதம்,
பொதுத் துறை வங்கியான யுகோ (UCO) வங்கி, ரஷ்யாவின் காஸ்ப்ரோம்பேங்க் (Gazprombank)
உடன் ஒரு சிறப்பு வோஸ்ட்ரோ (vostro) கணக்கைத் தொடங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப்
பெற்றது. இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த காஸ்ப்ரோம்பேங் இந்தியப் பொதுத்துறை வங்கியான
யூகோவங்கியில் சிறப்பு ரூபாய் கணக்கைத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த யுகோ
(UCO) வங்கி வோஸ்ட்ரோ கணக்கைத் திறந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரூபாயில்
சர்வதேசப் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய வங்கிகள், ரூபாயில்
வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் திறந்துள்ளன.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர் வங்கியும் (Sberbank), இரண்டாவது பெரிய வங்கியான
விடிபி-யும் (VTB) ரூபாய்க்கான வெளிநாட்டு வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்த
பிறகு, அதற்கான ஒப்புதலைப் பெற்ற முதல் வெளிநாட்டு வங்கிகள் ஆகும்.
ஆனபோதும் இந்தியாவின் பெரிய வங்கிகள்
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு இலக்காகிவிடுமோ என்ற அச்சத்தில் ரஷ்ய வர்த்தகத்தில்
நேரடி ரூபாய் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கிறார்கள். பொறிமுறையை நடைமுறைப்படுத்திய சில
மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர், ரூபாய் வர்த்தக
தீர்வுகளை அமைப்பதற்காக ரஷ்ய வங்கிகள் எட்டு பெரிய இந்திய வங்கிகளை அணுகியதாகவும்,
ஆனால் இந்திய வங்கிகள் பதிலளிக்கவில்லை என்றும் கூறினார். இந்த வங்கிகளில் ஸ்டேட் பாங்க்
ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும்
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும்.
பொதுத்துறை வங்கியின் மூத்த நிர்வாகி,
அத்தகைய தீர்வு பொறிமுறையைப் பயன்படுத்துவது சில தடை விதிகளை மீறுவதாகும் என்றும் அவர்கள்
(மேற்கத்திய நாடுகள்) எங்கள் மீது ஒரு தடையை விதிக்க முடியும், அது வணிக நற்பெயருக்கு
பெரிய இழப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறியுள்ளார்.
அரசு தரவுகளின்படி, எண்ணெய் கொள்முதலில்
கூர்மையான உயர்வு காரணமாக, ரஷ்யாவிலிருந்து இந்திய இறக்குமதிகள் சென்ற நிதியாண்டில்
சுமார் 3.2 பில்லியன் டாலராக இருந்தது இந்த நிதியாண்டில் 17.24 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் ரஷ்யாவுக்கான இந்திய ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தில்
1.31 பில்லியன் டாலராக இருந்தது 992.73 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு
(EAC-PM) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், திறந்தநிலை இலவசங்களை நிறுத்த வேண்டும்
என்று வலியுறுத்தியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த வகை இலவசங்களுக்கு
செலவிடப்படும் பணத்தை உள்கட்டமைப்பை உருவாக்க அல்லது சுகாதாரத் துறையில் முதலீடு
செய்ய பயன்படுத்தலாம். இருப்பினும், நெருக்கடி நேரத்தில் ஏழைகளுக்கு உதவுவதால்
இலக்கு-மானியங்களைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் வேலையின்மை
கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் சமீப காலங்களில் வேலையின்மை விகிதம்
குறைந்துள்ளதாகவும், வேலைவாய்ப்பு உருவாக்கம் வலுவாக இருப்பதாகவும் சஞ்சீவ்
சன்யால், கூறியுள்ளார். வேலை அதிகம் உள்ள துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதையும்
அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள்
தேவையற்றது, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது என்று தேர்தல் ஆணையத்திடம்
பாஜக பரிந்துரை அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களுக்கு தடை விதிக்கக்
கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போது இந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இது அரசின்
கொள்கை சார்ந்த விவகாரம், இந்த விவகாரத்தில் கட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல்
ஆணையத்திடம் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த பதில்
மனுவில், “தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்கப்பட
வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இலவச திட்ட விவகாரம் தொடர்பாக
தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்களை தடுக்க சட்டத்தில் திருத்தங்கள்
செய்யலாம் என்று கருதுகிறோம். இதுகுறித்து அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துகளை அக்டோபர்
19-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி பல்வேறு
கட்சிகள் தங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை சமர்ப்பித்துள்ளன.
பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில்
விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில்
பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களை கவரவே தேர்தல் வாக்குறுதிகளில்
இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இது ஏமாற்று வேலை. அதேநேரம் மக்கள் நலன் சார்ந்த
வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது. அதாவது வீட்டு வசதி திட்டங்கள் மக்களின் அடிப்படை
தேவைகளில் ஒன்று. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அத்தியாவசிய திட்டங்களை
அறிவிக்கலாம். கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலையிழந்தனர். மக்களின் நலன்
கருதி ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்கள் அவசியமானவை.
ஆனால் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேவையற்ற இலவச வாக்குறுதிகளால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளில்
இலவசங்கள் தேவையற்றது. வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது. எங்களது நிலைப்பாட்டை தேர்தல்ஆணையத்திடம்
தெரிவித்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும்
நிதியில் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் பாஜகவிற்கு அரசியல் ஆதாயம் அடைய வாக்கு வங்கி அரசியல்
செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கு, மத்திய அரசு திட்டங்களின் மூலம் நரேந்திர மோடியை விளம்பரப்படுத்தும்
பாஜகவிற்கு மாநிலங்கள் வழங்கும் இலவசங்கள் பற்றி கருத்து கூறுவதற்கு எந்த அருகதையும்
கிடையாது.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர்
நரேந்திர மோடி பேசும்போது, “இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது.
இலவச கலாச்சாரத்தால் வளர்ச்சி தடைபடும். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் முறியடிக்க
வேண்டும்" என்றார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர
சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் இலவசங்கள் குறித்து
அதிக விமர்சனங்கள் பகிரப்பட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநிலங்களிடம் இலவசங்களுக்கு
செலவளிக்கக் கூடாது எனவும் அது வளர்ச்சியின்மையை ஏற்படுத்துவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன் சமீபத்திய ஆய்வு அறிக்கையில், இலவசங்களுக்கு எதிராக
எச்சரித்துள்ளது. இலவசங்கள் பெரிய நிதிச் செலவுகளைக் கொண்டிருப்பதாகவும் விலைகளை சிதைப்பதன்
மூலமும் வளங்களை தவறாக ஒதுக்குவதன் மூலமும் திறனின்மையை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறது.
ஆனால் இலவசங்கள் ஜிடிபியில் குறைந்தபங்கே வகிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமையிலான குழு
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடு அல்லது அதன் சொந்த வரி வசூலில்
ஒரு விழுக்காடு என்ற அளவில் நலத்திட்டங்களை வரம்பிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி
பரிந்துரைத்துள்ளது. வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு சமீபத்தில் அளிக்கப்பட்ட
தேர்தல் வாக்குறுதிகள் வெவ்வேறு மாநிலங்களுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்
(ஜிஎஸ்டிபி) 0.1-2.7 விழுக்காடாகவும் மற்றும் சொந்த வரி வருவாயில் 5-10 விழுக்காடு
வரை இருக்கும் என அறிக்கையின் மாநில வரவு செலவுத் திட்டங்களின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்த
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) அறிக்கை பெருநிறுவனக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட
கடனில் எவ்வளவு தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை அளிக்கிறது. பெருநிறுவனங்களின்
மூன்று கணக்குகளுக்கு வழங்கப்பட்டக் கடனில் 90% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இலவசங்கள்
குறித்த விமர்சனங்களுக்கு எதிரான ஒரு கருத்து சித்திரத்தை இது வழங்குகிறது. மேலும்
மொத்தம் ₹446,800 கோடி கடன் தொகையை உள்ளடக்கிய 13 கடன் கணக்குகளில், இந்திய வங்கிகள்
₹161,820 கோடியை மட்டுமே திரும்பப் பெற்றுள்ளன, கடன் தொகையில் 64% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2015, ஏப்ரல் 1 முதல் பல்வேறு
அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வருடாந்திர கொள்முதலில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை
சிறு குறு நடுத்தர நிறுவனங்களிடமிருந்து வாங்கவேண்டும் என மத்திய அரசு வரம்பு நிர்ணயித்திருந்தது.
இந்த நிதியாண்டில் சிறு தொழில் வணிக நிறுவனங்களிடமிருந்து அரசு தரப்பிலிருந்து 60%க்கும்
அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சிறு தொழில் வணிக நிறுவனங்களிடமிருந்து பல்வேறு
பொருட்கள் மற்றும் சேவைகளை மொத்தமாக வாங்குவதில் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல்
பங்கு 30.15 விழுக்காட்டிலிருந்து இருந்து நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில்
32.94 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
நிலுவைத் தொகை வைத்துள்ள 36% பொதுத்துறை
நிறுவனங்களை வர்த்தக வரவு தள்ளுபடி அமைப்பு (TRDS) தளத்தில் சேருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான ‘RXIL’ இயங்குதளத்தில் பதிவு செய்யப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை
110 ஆகும், அதேசமயம் 50க்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் ‘M1xchange’ இல் பதிவு
செய்துள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போதுமான
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை
நிறுவனங்கள் 90 நாட்களில் சிறு குறு நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதை உறுதி செய்யும்
என்றும் கூறினார். அரசு ஆணையிட்டபோதிலும் வர்த்தக வரவுகள் தள்ளுபடி முறையில்
(TReDS) இணையாது செயல்படும் 92 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு (CPSEs) நிதி அமைச்சகம்
தற்போது உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம்- என்எல்சி
இந்தியா - கடலில் மிதக்கும் காற்றாலைகளை அமைக்க தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்துடன்
ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
குளிர்கால பயிர்களுக்கான குறைந்தபட்ச
ஆதரவு விலையை (MSP) 2-9.1% வரம்பில்
உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்தது. கோதுமையின்
குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ல் இருந்து ரூ.2,125 ஆக
குவிண்டாலுக்கு 110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகிற்கு குவிண்டால் ஒன்றுக்கு
400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களிலும் அதிகபட்சமாக பருப்புக்கான
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
தானியப் பொருட்கள்" வகைக்கான
நுகர்வோர் விலைக் குறியீடு செப்டம்பர் மாதத்தில் 105 மாதங்களில் இல்லாத அளவுக்கு
11.53% ஆக உயர்ந்துள்ளது.
2021-22 பருவத்தில் காரீஃப் அரிசி
கொள்முதல் 50.9 மில்லியன் டன்னாக உள்ளது. குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP)
செயல்பாட்டின் கீழ் இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில நிறுவனங்களால்
விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட மொத்த அரிசியில் காரீஃப் கொள்முதல் 86%
பங்களிக்கிறது. கோடை-கரீப் பருவத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் தமிழ்நாடு
மாநிலத்தில் 58% அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆகிய இரு நாடுகளும் ரூபே கட்டண முறையை ஏற்கமுன் வந்துள்ளது என்றும், ரூபேயை தங்கள்
நாடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது என்றும்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
யுபிஐ-ஒருங்கிணைந்த கொடுப்பனவு
இடைமுகம் (UPI ), பிம் செயலி(BHIM), என்பிசிஐ- இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம்-
(NCPI) ஆகிய அனைத்தும் உலகளாவிய ரீதியில் செல்லும் என்றும், அவை இப்போது வெளி நாடுகளுடன்
உள்ள அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளுமாறு செயல்படுத்தப்படுவதாகவும். இது அந்த நாடுகளில்
உள்ள இந்தியர்களின் நிபுணத்துவத்திற்கு வலிமை தரும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பணக்கார இந்தியர்கள் குடும்ப அலுவலகங்களைத்
திறக்க வெளிநாடுகளுக்கு விரைகிறார்கள், ஏனெனில் உள்நாட்டில் நாணயம், மூலோபய அபாயங்களுக்கு
எதிராகவும், அடுத்த தலைமுறைக்கான வரி ஏய்ப்பு திட்டமிடலுக்காகவும் பலர் துபாய் மற்றும்
சிங்கப்பூருக்குச் செல்கின்றனர்.
இந்தியாவின் உற்பத்தித்துறையின்
எஸ்&பி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (S&P Global India Manufacturing
Purchasing Managers' Index -PMI) ஆகஸ்ட் மாதத்தில்
56.2ல் இருந்து செப்டம்பர் மாதத்தில் 55.1 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் சேவைத்துறையின்
எஸ்&பி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் 57.2 ஆக இருந்தது செப்டம்பர்
மாதத்தில் 54.3 ஆக ஆறு குறைந்துள்ளது.
சில்லறை நுண்ணறிவு தளமான பிஸோம்
(Bizom) ஆல் பகிரப்பட்ட தரவுகளின் படி, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நுகர்வோர்
பொருட்களின் மதிப்பு வளர்ச்சியானது செப்டம்பரில் 9.6% குறைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவில்
செப்டம்பரில் விரைவில் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் மதிப்பு வளர்ச்சி
14.3% வீழ்ச்சியுடன் தேவை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
விரைவில் விற்பனையாகும் நுகர்வுப்
பொருள்கள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் விற்பனை (FMCG) ஜூன் காலாண்டில், நகர்ப்புற
சந்தைகளில் 0.6% உயர்ந்துள்ளது. கிராமப்புற சந்தைகளில் விற்பனை 2.4% குறுக்கமடைந்துள்ளது.
பணவீக்க அழுத்தத்தால் கிராமப்புற நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தரவுகளின் படி குறு,
சிறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் ஆகஸ்ட் 2021 இல் ரூ.14.64 லட்சம் கோடியிலிருந்து
24% உயர்ந்து ரூ.18.15 லட்சம் கோடியாக 19%
அதிகரித்துள்ளது.
தன்வீ. யுபிஎஸ் செக்யூரிட்டீஸ்
இந்தியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் குப்தா-ஜெயின் வெளியிட்ட அறிக்கையில் பெரும்பாலான
நுகர்வோர் தொற்றுநோயிலிருந்து மீளவில்லை, மேலடுக்கில் உள்ள முதல் 20% செல்வந்தர்களே
தற்போது நாட்டின் நுகர்வுத் தேவையை இயக்குகின்றனர் என்று கூறியுள்ளார். கோவிட் கொள்ளைநோய்,
நாட்டில் வசதியான நுகர்வோரின் வருமான அளவைப் பாதிக்கவில்லை. இந்த முதல் 20 விழுக்காட்டினர்
கிராமப்புறங்களில் 59% நுகர்விற்கும், நகர்ப்புறங்களில் 66% நுகர்விற்கும் காரணமாக
உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் வேலைக்கு செல்லும்
பெண்களின் அளவு உயர்ந்துவந்தாலும் அவர்கள் அனைவருமே நிதி இறையாண்மையைப் பெற்றிருக்கவில்லை.
வேலைக்கு செல்லும் பெண்களில் 59 விழுக்காட்டினர் தங்கள் சொந்த நிதி முடிவுகளை எடுப்பதில்லை,
வாய்ப்பு கிடைத்தால் 44% பெண்கள் தங்கள் சொந்த நிதி முடிவுகளை எடுக்க தயாராக உள்ளனர்
என்று டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் (டாடா ஏஐஏ) நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இச்சமூகத்தில் பாலினப் பாகுபாடு எந்த அளவிற்கு புரையோடிக் காணப்படுகிறது என்பதையே இது
சுட்டிக்காட்டுகிறது.
திருமணமான பெண்களில் 89% பேர்
நிதித் திட்டமிடலுக்காக தங்கள் துணைவரை நம்பியிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு முடிவுகள்
சுட்டிக்காட்டுகின்றன. திருமணத்திற்கு முன், பெண்களுக்கான நிதி முடிவுகளுக்கு தந்தை
பொறுப்பு, அது திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கு மறைமுகமாக அனுப்பப்படுகிறது. திருமணம்
செய்து கொள்ளும் பெண்களின் சராசரி வயது 20-22 ஆக இருப்பதால், அவர்களின் பொருளாதாரம்
குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை என்றும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பெண்களுக்கான நிதி முடிவெடுப்பதில் சுதந்திரத்தைத் தடுக்கும் முதன்மையான தடுப்பு
காரணிகளில் ஒன்று திருமணம். கணக்கெடுப்பில் உள்ளடக்கப்பட்ட 39% பெண்களுக்கு, நிதி திட்டமிடல்
என்பது மாதாந்திர வரவுசெலவுத் திட்டமாக மட்டுமே உள்ளது. பெண்களில் நிதித் திட்டமிடலை
நன்கு புரிந்து கொண்ட42% பேரில் 12% பேர் மட்டுமே வீட்டு வேலை செய்பவர்கள்.
பணிபுரியும் பெண்களில், 59% பேர்
தங்கள் நிதிநிலையில் சுயாதீனமாக முடிவுகளை எடுப்பதில்லை. அடுக்கு 3 சந்தைகளில் இந்த
விகிதம் அதிகமாக உள்ளது அங்கு 65% பணிபுரியும் பெண்கள் சுதந்திரமான நிதி முடிவுகளை
எடுக்கின்றனர்.
முன்னுரிமைகள் குறித்து கேட்டபோது,
பெண்கள் தங்களைவிட குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக கணக்கெடுப்பில்
கூறியுள்ளனர். பல்வேறு நிதிக் கருவிகளில், 62% பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக வங்கியின்
நிலையான வைப்புத் தொகையில் (FD) முதலீடு செய்வதைத் தேர்வு செய்துள்ளனர்.
தேசிய புள்ளியியல் கணக்கெடுப்பின்
(NSS) 73வது சுற்றின் தரவுகளின் அடிப்படையில் பிரீதி ராவ் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸில்
ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அனைத்து வருவாய் பிரிவுகளிலும் உள்ள ஆண் மற்றும் பெண் தொழில்முனைவோர்
ஒரே விகிதத்தில் கடன்களை பெற அணுகும் போதும் கூட, பெண் தொழில்முனைவோர்கள் பெற்ற கடனின்
அளவு கணிசமாகக் குறைவாக உள்ளது. பெண் தொழில்முனைவோர்கள் ஆண்கள் பெற்றக் கடன் தொகையை
விட 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பெற்றுள்ளனர்.
பெண் தொழில்முனைவோருக்கு சேவை
செய்யும் போது நிதி நிறுவனங்கள் உள்ளடக்கிய நடைமுறைகளை மேற்கொள்ள பல வழிகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, மாற்று கடன் தரமதிப்பீட்டு வாய்ப்புகள் பிணையத்திற்கான தேவையை மாற்றலாம்,
இது பெண்களுக்கு முறையான கடன் அணுகலை அனுமதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நிதிக் கழகத்தின்
(IFC) ஆய்வின்படி, இந்தியாவில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் சுமார் 70 விழுக்காடு
நிதி இடைவெளியை எதிர்கொள்கின்றன, மேலும் இந்த இடைவெளிக்கு பெரும்பாலும் நிதி அமைப்பில்
வேரூன்றிய சமூக பாகுபாடுகளே காரணமாக உள்ளது. பெண்கள் பெரும்பாலும் ஆடை தயாரிப்பு போன்ற
பாரம்பரியத் துறைகளில் அதிகமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், பொதுவாக வீட்டிலிருந்தே
வணிகத் தொழில்களைச் செய்கிறார்கள், இது குறைந்த வருவாய், வளர்ச்சிக்கே வழிவகுக்கும்.
விநியோகப் பக்கத்தில், பெண் தொழில்முனைவோருக்கு
அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருத்தமான தயாரிப்புகள் இல்லை, மேலும் பிணையம்,
கடன் மதிப்பீடுகளின் தேவை போன்ற நடைமுறைத் தேவைகள் நிதிக்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
வேண்டல் பக்கத்தில் போதுமான கணக்கியல் மற்றும் நிதி மேலாண்மை திறன்கள், குறைந்த கடன்
தரமதிப்பீடு, பலவீனமான நிதி கல்வியறிவு போன்ற பல காரணங்கள், முறையான நிதி சேவைகளை அணுகுவதில்
இருந்து பெண்களை அந்நியப்படுத்துகிறது.
பெண்கள் தலைமையிலான சிறு நிறுவனங்களுக்கு,
பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவானது (PMMY) நிறுவன கடன்களை பெண்கள் எளிதாக அணுகுவதை
இலக்காகக் கொண்ட முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். இருப்பினும், 2018-19 ஆம் ஆண்டில்
அனுமதிக்கப்பட்ட மொத்தக் கடனில் 41% மட்டுமே பெண்கள் கடன் பெற்றுள்ளனர், இது ஷிஷு வகையைச்
சேர்ந்தது, அதாவது சுமார் ரூ. 50,000 கடன் தொகை. இந்த புள்ளிவிவரங்கள் பெண்கள் பெற்ற
சிறிய கடன் அளவைக் குறிப்பிடுகின்றன.
மேலும், பெரும்பாலான பெண் தொழில்முனைவோர்
பொதுவாக தங்கள் வணிகத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கு தங்களுடைய சொந்த சேமிப்பு, குடும்பத்தினர்
மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் கடன்கள் அல்லது நுண்-கடன்களை சார்ந்துள்ளனர். 6வது
இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்புத் தரவு, 79% பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கான
நிதி ஆதாரம் அவர்களின் சொந்த மூலதனம் என்று குறிப்பிடுகிறது, ஏனெனில் வங்கிகளும் பிற
நிதி நிறுவனங்களும் பெண்களின் வணிக மாதிரிகள் மற்றும் கடனைத் திருப்பி செலுத்துவதற்கான
சாத்தியம் அல்லது உத்தரவாதமான வருமானம் குறித்து நிச்சயமற்ற பார்வையைக் கொண்டுள்ளன.
வங்கிகளால் கடைப்பிடிக்கப்படும்
வணிகத்தின் தன்மை, கடன் வழங்கும் அளவுகோல்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் செயல்முறைகள்
பெண்களின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொள்ளாமல், பல பெண் தொழில்முனைவோரை ஒதுக்கி
வைக்கவே வழிவகுக்கிறது. இதனுடன் உட்பொதிந்த சமூக நெறிமுறைகளும் இணைந்து, குடும்பச்
சொத்துப் பெயர்களில் பெரும்பாலானவை குடும்பத்தில் உள்ள பெண்களைக் காட்டிலும் ஆண்களின்
பெயரிலேயே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், பெண் தொழில்முனைவோர் அவற்றைப் பிணையமாகப்
பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
மேலும், இந்த சவால்கள் வெவ்வேறு
வழிகளில் வெளிப்படுகின்றன. உதாரணமாக, பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன்கள் கிடைத்தாலும்
கடன்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. மற்ற அனைத்து கவனிக்கக்கூடிய அளவுகோல்களும்
ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட, பெண் தொழில்முனைவோருக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கும்
நபர் தேவைப்படுவது 30% அதிகமாகும். இதனுடன், ஆண்கள் தலைமையிலான வணிகங்கள் பொதுவாக பெண்கள்
தலைமையிலான வணிகங்களுடன் ஒப்பிடும்போது அதிக முறையான, மற்றும் முறைசாரா மூலதனத்தை திரட்டுகின்றனர்.
பெண் தொழில்முனைவோருக்கு, சிறுநிதி கடன்கள் மற்றும் கூட்டுறவு அமைப்பு அல்லது சுயஉதவி
குழுக்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் ஆகியவை நிதி ஆதரவை அணுகுவதற்கான பொதுவான முறையாக
உள்ளது.
பெண் தொழில்முனைவோருக்கு சேவை
செய்யும் போது நிதி நிறுவனங்கள் உள்ளடக்கிய நடைமுறைகளை மேற்கொள்ள பல வழிகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, மாற்று கடன் தர மதிப்பீட்டு முறையில் கிரெடிட் ஸ்கோரிங் வாய்ப்புகள்
பிணையத்திற்கான தேவையை மாற்றலாம், இது பெண்களுக்கு முறையான கடன், சிறந்த கடன் விதிமுறைகளை
அணுக அனுமதிக்கிறது. இவை டிஜிட்டல் தளங்களில் இருந்து கடந்த கொடுக்கல் வாங்கல் வர்த்தக
தரவுகளை பயன்படுத்துதல் அல்லது பணப்புழக்க பகுப்பாய்வு, வீட்டு வருமானம் மற்றும் நடத்தைத்
தரவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்ணைத் தொகுத்தல் போன்ற வடிவத்தை எடுக்கலாம்.
பாலின-ஆடி முதலீட்டு வேகம் உயரும் போது, இருமுனை அணுகுமுறையைப் பயன்படுத்தி மறைமுகமான
முதலீட்டு பாகுபாடுகளை தீர்க்க முடியும் – இது முதலீட்டாளர்களை நிதி அணுகலுக்கான தடைகளின்
பாலின அம்சங்களுக்கு அதிக உணர்திறன் ஏற்படுத்தும், மேலும் பெண் தொழில்முனைவோரின் வணிக
யோசனைகள் மற்றும் நிதித் தேவைகளை உயர்த்துவதற்கான திறனை உருவாக்கும்.
பல்வேறு நிலைகளில், பெண்கள் தலைமையிலான
வணிகத்தின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய நிதித் தயாரிப்புகளின் பன்முகத்தன்மை (கால
கடன்கள், செயல்பாட்டு மூலதனம் மற்றும் பல) தேவைப்படுகிறது. மேலும், கடன் விதிமுறைகள்
அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் (உதாரணமாக,
தினசரி திருப்பிச் செலுத்துதல், "சாச்செட் கடன்கள்" மற்றும் பல). கலப்பு
நிதியளிப்பு வழிமுறைகள் மானிய வட்டி விகிதத்தில் நிதிக்கான அணுகலை வழங்க உதவும். நன்கொடையாளர்கள்/தொண்டு
நிறுவனங்கள் முதல் இழப்பின் போது இயல்புநிலை உத்தரவாதத்தை வழங்குதல், குறைந்த வட்டி
விகிதத்தில் விதை மூலதனத்தையும் கடனையும் அளித்தல். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள கடன்
இடை நிறுத்த உத்தரவாதம் (தொற்றுநோயின் போது நீட்டிக்கப்பட்ட கடன் இடை நிறுத்தும் வாய்ப்பு)
ஆகியவை அடங்கும்.
புதுமையான அணுகுமுறைகள் மற்றும்
அதிக நிறுவன ஆதரவின் மூலம், இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவோர் பிரிவில் தொடர்ந்து
நிலவும் கடன் இடைவெளியை கணிசமாகக் குறைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற
மாநில/ யூனியன் பிரதேசங்களின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்களின்
மாநாட்டிற்கு ஆர்.கே.சிங் தலைமை தாங்கினார். அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரத் துறையில்
ரூ.50 லட்சம் கோடி முதலீட்டை எட்டுவதற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்
என்று ஆர்.கே.சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்
அக்டோபர் 1 அன்று 19 கிலோகிராம் வர்த்தகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை
ரூ.35.50 குறைத்ததால் எரிவாயு உருளை ரூ.2,009.50-க்கு விற்பனையாகிறது.
இந்தியன் ஆயில்
கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்)
மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்) ஆகிய மூன்று எண்ணெய்
சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு விலை அழுத்தங்கள், உள்நாட்டு சந்தையில் திரவப்
பெட்ரோலிய வாயு-எல்பிஜி விற்றதில் இரண்டு வருட நட்டம் ஆகியவற்றை சமாளிக்க 22,000
கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 2020 முதல் ஜூன்
2022 வரை எல்பிஜி விலை 300% உயர்ந்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர்
அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும்
புத்தொழில்-ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பேசவும், அவர்கள் இந்தியாவில் இருக்க உதவும்
வகையில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அரசு தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியாண்டில் இருந்து
(FY23) வங்கிகள் செயல்படா சொத்துக்களுக்கான நெறிமுறைகளை செயல்படுத்தும்போது ஏற்படும்
வேறுபாடுகள் வெளிப்படுத்துவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. இந்த
வரம்பு மதிப்பாய்வுக்குப் பிறகு படிப்படியாக நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு குறைக்கப்படும்
என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரண்டு நிபந்தனைகளின் படி வங்கிகள்
வேறுபாட்டை வெளிப்படுத்தவேண்டும். முதலாவதாக, ரிசர்வ் வங்கியால் மதிப்பிடப்பட்ட செயல்படாத
சொத்துக்கள் (NPAs), ஒதுக்கீடுகள் அறிக்கையிடப்பட்ட லாபத்தில் 10 விழுக்காட்டை மீறும்
போதும்; இரண்டாவதாக, ஒழுங்குமுறையாளரால் அடையாளம் காணப்பட்ட கூடுதலான மொத்த செயல்படா
சொத்துக்கள் , தற்செயல் செலவுகள் அறிவிக்கப்பட்ட கூடுதலான மொத்த செயல்படா சொத்துக்களை
விட10 விழுக்காட்டைத் தாண்டும்போதும் வேறுபாட்டை வெளிப்படுத்தவேண்டும். நகர்ப்புற கூட்டுறவு
வங்கிகள் அறிவிக்கப்பட்ட கூடுதலான மொத்த செயல்படா சொத்துக்களை விட 15 விழுக்காட்டைத்
தாண்டும்போது அறிவித்தால் போதும். இந்த வரம்பு நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்குப்
படிப்படியாகக் குறைக்கப்படும்.
2024 முதல் வெளிப்படுத்தல் விதிமுறை
கடுமையாக்கப்படும். அதற்குப்பின் ரிசர்வ் வங்கியால் மதிப்பிடப்பட்ட மொத்த செயல்படா
சொத்துக்கள், ஒதுக்கீடுகள் மற்றும் தற்செயல் செலவுகள், அறிக்கையிடப்பட்ட லாபத்தை விட
ஐந்து விழுக்காடு உயரும் போது, வங்கிகள் வேறுபாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
2022-23 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்
தேதியிட்ட நிதிப்பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5.92 டிரில்லியனை திரட்ட
மத்திய அரசு திட்டமிட்டது. 2022-23 யூனியன் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட
அறிவிப்பின்படி, இறையாண்மை பசுமைப் பத்திரங்களை (SGrBs) வெளியிடுவதன் மூலம் பெறும்
ரூ.160 பில்லியன் இதில் அடங்கும். 2022-23 நிதியாண்டில் ரூ.14.31 டிரில்லியன்
மொத்த சந்தைக் கடன் வாங்கவுள்ளதாக அரசு பட்ஜெட் மதிப்பீட்டில் நிர்ணயித்திருந்தது.
ஆனால், தற்போது கடன் வாங்கும் திட்டத்தை சுமார் ரூ.100 பில்லியன் குறைத்துள்ளது.
இந்நிதியாண்டில் ரூ.14.21 லட்சம் கோடி மட்டுமே திரட்ட திட்டமிட்டுள்ளது.
விவசாயத்தில்
பயிர்களின் பங்கு 2012 இல் 62.4% இல் இருந்தது 2020 இல் 55.5% ஆகக் குறைந்துள்ளது.
மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றின்
பங்கு 2011-12 இல் 18.5 விழுக்காடாக இருந்தது 2019-20ல் தற்போதைய அடிப்படை
விலையில் 18.3 விழுக்காடாக உள்ளது என்று புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம்
(MoSPI) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹரியானாவின் சோனேபட்டில்
உள்ள உள்நாட்டு நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட
நான்கு இருமல் மருந்துகளைக் குடித்து காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததால் இந்திய
மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் சிரப்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
விடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த நான்கு மருந்துகளில், அதிக அளவு டைதிலீன்
கிளைகால், எத்திலீன் கிளைகால் அசுத்தங்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வக
பகுப்பாய்வு உறுதிப்படுத்தியுள்ளது, நச்சுத்தன்மையுடைய இவை கடுமையான சிறுநீரக பாதிப்பிற்கு
வழிவகுக்கும். மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தொழிற்சாலையில் இருமல் மருந்து உற்பத்தியை
நிறுத்துவதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 69 குழந்தைகளின் மரணத்துடன்
தொடர்புடைய இருமல் மருந்துகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காம்பியாவிடம் இந்தியா
தெரிவித்துள்ளது.
காம்பியாவில் 66 குழந்தைகளின்
மரணம் "உலகின் மருந்தகம்" என்ற இந்தியாவின் பிம்பத்திற்கு விழுந்த பெரிய
அடியாகும். அளவு அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராகவும்,
பொதுவான மருந்துகளின் (ஜெனரிக்) மிகப்பெரிய வழங்குநராகவும் உள்ளது. ஆஃபிரிக்காவின்
ஜெனரிக் தேவையில் 50%க்கும் மேலும், அமெரிக்காவில் 40% ஜெனரிக் தேவையிலும், இங்கிலாந்தில்
உள்ள அனைத்து மருந்துகளிலும் 25%க்கும் மேல் இந்தியா வழங்குகிறது. 2021 இல் $22.4 பில்லியனாக
இருந்த இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி இந்த ஆண்டில் $24.6 பில்லியனாக இருந்த
வளர்ச்சியடைந்தது.
இந்த நிதியாண்டின் முதல் பாதியில்
(ஏப்ரல்-செப்டம்பர்) மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSE) மூலதனச் செலவு ஆண்டு இலக்கான
ரூ.6.62 டிரில்லியனில் 43 விழுக்காட்டை எட்டியது.
குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டத்தில்
உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் அறிவித்துள்ளார்.
குடியிருப்புக் கட்டிடங்களுக்கு கூரை சூரிய சக்தியை நிறுவுவதில் குஜராத் மாநிலம் முன்னணியில்
உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட கூரை சூரிய ஒளி அமைப்புகளில் 84% குஜராத்தில் நிறுவப்பட்டு
முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் குடியிருப்புக் கூரை சூரிய திறனில்
மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய சக்தியில்
இயங்கும் கிராமம் குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
2030-க்குள் இந்தியா 65% மின் உற்பத்தியை
புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய
மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி
2024க்குள் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
'கனிம மற்றும் எரிசக்தி வளங்கள் மீதான சொத்துக் கணக்குகளின் தொகுப்பை'
வெளியிடுவதற்காக இங்குள்ள இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைய அரசு மேற்கொண்டுள்ள நிறுவனமயமாக்கப்பட்ட வணிக
நிலக்கரி சுரங்க ஏலம், ஏல செயல்முறையை முற்றிலும் வெளிப்படையாக்கியுள்ளது என்ற
அவர் நாட்டின் கனிம சொத்துக்கள் மீதான சொத்துக் கணக்கின் முதல் தொகுப்பை
வெளிக்கொணர்ந்ததற்காக ஜோஷி தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அலுவலகத்தை
பாராட்டினார்.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்
1-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையில் ரூ.7.45 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலாகி
இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் இதே கால
கட்டத்தில் வசூலானதைவிட 16.3 விழுக்காடு அதிகம். நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் மொத்தமாக
ரூ.8.98 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது. இதில் ரீஃபண்ட் எனப்படும் திரூம்ப அளிக்கப்படும்
தொகை .1.53 லட்சம் கோடியாக உள்ளது. தற்போது நிகர நேரடி வரி வசூல் ரூ.7.45 லட்சம் கோடியாக
உள்ளது. இது மத்திய அரசு 2022-2023 நிதி ஆண்டில் திட்டமிட்ட வரி வசூல் இலக்கில்
52.46 % ஆகும். நேரடி வரிகளின் கீழ் வரும் பெரு நிறுவன வருமான வரி சென்ற நிதி ஆண்டில்
இதே கால கட்டத்தில் வசூலானதைவிட 16.29 விழுக்காடும் தனிநபர் வருமான வரி 17.35 விழுக்காடும்
உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 18 மாதங்களில்
அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’வை பிரதமர்
மோடி டெல்லியிலிருந்து காணொலி மூலம் தொடங்கிவைத்தார். பொதுத் துறை அமைப்புகளில் லட்சக்
கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. ஆகவே இதை புதிய வேலைவாய்ப்புகள்
அளிக்கும் திட்டமாகக் கருதவேமுடியாது.
100 ஆண்டுகால வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு
100 நாட்களில் தீர்வு காண முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 65
ஆண்டுகளுக்கு மேல் கட்டிக் காக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பெருமளவை பாஜக அரசு
10 ஆண்டில் தனியார்மயமாக்கி காலி செய்துவிட்டது. அழிவு வேலைகளை செய்வதிலேயே பாஜக அரசு
ஆர்வமாய் உள்ளது. ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள் எதிர்கட்சிகளிடமிருந்தும், பொதுமக்கள்
தரப்பிலிருந்தும் வந்தால் அது உடனடியாக இயலாது என்று அதற்கான பலியை காங்கிரஸ் மீது
சுமத்துவதே பாஜக அரசின் வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிதியாண்டின் முதல் பாதியில்,
ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதி 17.8% உயர்ந்துள்ள போதும் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி
8.5% குறுக்கமடைந்துள்ளது. சமீபத்திய வர்த்தக அமைச்சகத் தரவுகளின்படி, சென்ற ஆண்டில்
$20 பில்லியனாக இருந்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில்
$18.3 பில்லியனாக குறைந்துள்ளது. முக்கிய சந்தைகளில் தேவை மந்தநிலை, பருத்தி பற்றாக்குறை
போன்றவற்றால், ஏற்றுமதி குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் சரக்கு ஏற்றுமதியில்
ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் பங்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து
வருகிறது, 2016 ஆம் நிதியாண்டில் 13.7% பங்கு வகித்த ஆடை ஏற்றுமதி இந்த நிதியாண்டின்
செப்டம்பர் வரை வெறும் 7.8% ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி
சுருங்கியதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில்
வங்கதேசமும், வியட்நாமும் கணிசமான ஏற்றுமதி சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.
செப்டம்பரில் ஏற்றுமதி 4.8% மட்டுமே
உயர்ந்துள்ளது, இறக்குமதி வளர்ச்சி குறைந்துள்ளது. இருப்பினும், சென்ற மாதத்தில்
$28 பில்லியனாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, செப்டம்பரில் $25.7 பில்லியனாக குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் பாதியில்
ஒட்டுமொத்த ஏற்றுமதி $231.9 பில்லியனைத் தொட்டது, இது சென்ற ஆண்டை விட 17% அதிகமாகும்.
செப்டம்பரில் மின்னணு சாதனப் பொருட்களின்-எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 72% உயர்ந்து $2
பில்லியனாக உள்ளது, அதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 43% உயர்ந்து
$7.4 பில்லியனாக உள்ளது, ரத்தினங்கள், நகைகளின் ஏற்றுமதி 17% உயர்ந்து $3.8 பில்லியனாக
உள்ளது. இருப்பினும், ஜவுளி, ஆடைகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்ற உழைப்பாளர் செறிந்த
துறைகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது. பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 11% குறைந்து
$8.4 பில்லியனாக உள்ளது.
இறக்குமதியைப் பொறுத்தவரை, நிலக்கரி
கொள்முதல் கடுமையாக உயர்ந்துள்ளது. செப்டம்பரில், நிலக்கரி இறக்குமதி 61% உயர்ந்து
$3.5 பில்லியனாக உள்ளது, எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பு இறக்குமதிகள் 5% குறைந்து
$15.9 பில்லியனாக இருந்தாலும் கூட இரும்பு மற்றும் எஃகு இறக்குமதி 39% உயர்ந்து
$1.9 பில்லியனாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மிளகு வரத்து
அதிகரிப்பதால் உள்நாட்டு மிளகுத் தொழிலில் பாதிப்பு ஏற்படுகிறது. பிரேசில் மற்றும்
வியட்நாம் போன்ற பிற உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி
அதிகரித்து வருவதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகுக்கான வணிக
வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் மிளகு நுகர்வோர்
சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது. பிரேசிலில் மிளகு விலை டன்னுக்கு
2,500-2,600 அமெரிக்க டாலராக உள்ளது, அதேசமயம், வியட்நாமில் டன்னுக்கு 3,000 டாலராகவும்
இலங்கையில் மிளகு விலை ஒரு டன் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டாலராகவும் உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட மிளகு ஒரு கிலோ ரூ.490-495 என்ற விலையில் நுகர்வுச்
சந்தைகளில் கிடைக்கிறது.ஆனால் இந்திய மிளகு விலை ஜிஎஸ்டி மற்றும் சரக்கு கட்டணம்
உட்பட ஒரு கிலோ ரூ.515 ஆக உள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் 82.30ஆக வரலாறு
காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது, ஆனால் மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய
ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது. 'ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு
தான் உயர்ந்திருக்கிறது' என்கிறார் நிதியமைச்சர் நிரமலா சீதாராமன். உண்மைகளைத்
திரிப்பதில் பாஜக-வினருக்கு ஈடு இணை எவரும் கிடையாது.
ஒபெக் கூட்டமைப்பு (OPEC) நாளொன்றுக்கு
2 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்த பிறகு, கச்சா எண்ணெய் விலைகள்
கூடத் தொடங்கியுள்ளன, இது பெட்ரோலியத் தேவைகளில்
85 விழுக்காட்டை இறக்குமதி செய்யும் இந்தியாவை பாதிக்கும். சரக்கு இறக்குமதியின் உயர்வாலும், ஏற்றுமதி குறைவாலும்
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 149.47 பில்லியன்
அமெரிக்க டாலராக உயர்ந்து, ரூபாயின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில், இந்தியப் பங்குச் சந்தையில்
இருந்து 7000 கோடி ரூபாய்க்கு மேலான வெளிநாட்டு நிதி முதலீடுகளின் (FPI)
வெளியேறியுள்ளன.
ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில்
மட்டும் நான்கு முறை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதுவரையில் மொத்தமாக 190 புள்ளிகள்
உயர்த்தப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக்
கொள்கைக் குழுவின் (எம்பிசி) உறுப்பினர்களிடையே வட்டி விகிதத்தை உயர்த்துவதா
வேண்டாமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன, சிலர் எதிர்காலத்தில் வட்டி
விகிதங்களை உயர்த்துவதைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர், மற்றவர்கள் வட்டி
விகிதங்களை இன்னும் தீவிரமாக உயர்த்தவேண்டும் என்கிறார்கள்.
50-புள்ளிகள் (பிபிஎஸ்) அல்லது 0.5% வட்டி
விகித உயர்வை ஆதரித்த வெளி உறுப்பினர் ஜெயந்த் வர்மா, பணவியல் கொள்கை நடவடிக்கைகள்
தாமதத்துடன் செயல்பட்டதால் இடைநிறுத்த வேண்டிய நேரம் இது என்கிறார். "இந்த
உயர்வுக்குப் பிறகு ஒரு இடைநிறுத்தம் தேவைப்படுகிறது, ஏனெனில் பணவியல் கொள்கை
பின்னடைவுடன் செயல்படுகிறது," என்றும் கூறியுள்ளார். "கொள்கை விகிதம்
உண்மையான பொருளாதாரத்திற்கு அனுப்பப்படுவதற்கு 3-4 காலாண்டுகள் ஆகலாம், மேலும் அது
உச்ச விளைவை அடைய 5-6 காலாண்டுகள் வரை ஆகலாம், வட்டி விகித உயர்வின் தாக்கம்
இன்னும் உண்மையான பொருளாதாரத்திற்கு அதிகமாகப் பரவவில்லை."...ஏப்ரல்-ஆகஸ்ட்
மாதங்களில் ரெப்போ விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான உயர்வே சில்லறை
வங்கி வைப்பு விகிதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது." என்றும் அவர் கூறினார்,
பணவியல் கொள்கைக் குழுவின் (MPC ) மற்றொரு
வெளிப்புற உறுப்பினர் ஆஷிமா கோயல், கட்டண சுழற்சி முடிவடையவில்லை, ஆனால்
படிப்படியான அணுகுமுறை தேவை என்றார். “...பணவியல் கொள்கையின் பின்தங்கிய விளைவுகள்
பெரியதாக இருந்தால், இந்தியாவில் அதன் விளைவுகள் மிகவும் விலை உயர்ந்ததாக
இருக்கும். தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மிகவும் தாமதமாகத் தெளிவாகின்றன மேலும்
அவற்றை மாற்றுவது கடினம். படிப்படியான தரவு அடிப்படையிலான செயல், அதிகப்படியான
எதிர்வினையின் நிகழ்தகவைக் குறைக்கும்,” என்று கூறினார். கடந்த கொள்கை மறுஆய்வுக்
கூட்டத்தில் 35-புள்ளி விகித உயர்வுக்கு ஆஷிமா கோயல் வாக்களித்தார்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல்
பத்ரா, "...தற்போது கிடைத்த பணவீக்க கணிப்புகள், 2022 இறுதி வரை உண்மையான
வட்டிவிகிதங்கள் எதிர்மறையாகவே இருக்கும் என்று கூறுகின்றன. எனவே,இறுதி விகிதங்களை
அடைய வேண்டுமென்றால், 2023ல் பணவியல் கொள்கையை மிகவும் வலுவாக இறுக்குவது
தேவைப்படலாம்" என்று கூறியுள்ளார்.
பொருளாதார வல்லுநர்கள் மந்தநிலையையும்,
அடுத்த ஆண்டு அதிக வேலை இழப்புகள் வரவுள்ளதாகவும் கணித்துள்ளனர். பொருளாதார
வல்லுனர்கள் சராசரியாக, அடுத்த 12 மாதங்களில் மந்தநிலையின் நிகழ்தகவு 63% ஆக
இருக்கும் எனக் கணித்துள்ளனர், இது ஜூலை கணக்கெடுப்பில் 49% ஆக இருந்தது. ஜூலை
2020 க்குப் பிறகு, கணக்கெடுப்பில் முதன்முறையாகக் பொருளாதார மந்தநிலைக்கான
நிகழ்தகவு 50%க்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இந்தியாவின் போட்டி
ஆணையத்தின் மேற்கு மண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மண்டல அலுவலகம்
(தெற்கு) 2021 ஃபிப்ரவரியில் தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் மண்டல அலுவலகம் (கிழக்கு)
2022 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இவை இரண்டிற்கும் பிறகு மூன்றாவது மண்டல அலுவலகம் தற்போது
மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர்
மாதத்தில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 389 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத விற்பனையைவிட 92% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இதே
மாதத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 212 வாகனங்கள் விற்பனையானது. இருசக்கர வாகன
விற்பனை 13% அதிகரித்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 199 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின்
செப்டம்பரில் 15 லட்சத்து 37 ஆயிரத்து 604 ஆக இருந்தது.
டீசல் ஏற்றுமதியின் மீதான லாப
வரியை லிட்டருக்கு ரூ.12 ஆகவும், ஜெட் எரிபொருள் ஏற்றுமதியின் மீதான வரியை ரூ.3.50
ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான
வரியும் டன்னுக்கு ரூ.3,000 கூட்டப்பட்டு ரூ.11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
இந்திய அரசால் வழங்கப்படும் மானியங்களைப் பற்றிய "ஒரு பரிமாண" பார்வையைத்
தவிர்க்குமாறு உலக வங்கியை வலியுறுத்தியுள்ளார், மேலும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு
"இலக்கு ஆதரவு" அளிப்பதிலிருந்து "சிதைக்கும் மானியங்களை வேறுபடுத்துவது
முக்கியம் என்றும் கூறியுள்ளார். உலக வங்கியின் வளர்ச்சிக் குழுவின் கூட்டத்தில் பேசிய
அவர் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDG) பல முக்கிய அளவுருக்களில் இந்தியாவின் செயல்திறனை
மேம்படுத்துவதில் மானியங்கள் உறுதியான பங்களிப்பைச் செய்துள்ளன என்று கூறினார்.
மேலும் அவர் உலகளாவிய தலையீடு
இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சரியாக செயல்படும் என நிதியமைச்சர் சீதாராமன்
கூறியுள்ளார். நிதித் தேவைகளில் சர்வதேசப் பண நிதியத்தின் உறுப்பினர்களின் இருப்புத்
தொகை மற்றும் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் நிதியின் திறன் ஆகிய இரண்டும்
தொடர்பாக சர்வதேசப் பண நிதியத்தின் ஒதுக்கீட்டின் போதுமான தன்மையை மதிப்பிடுவதற்கு
ஒரு பொதுவான மதிப்பாய்வு அனுமதிக்கும். உலகளாவிய நிதி அமைப்பைப் பாதுகாக்க, வளர்ந்து
வரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குக் கிடைக்கும் வளங்களை சர்வதேசப்
பண நிதியம் அதிகரிக்க வேண்டும் என்ற பார்வையில், டிசம்பர் 15, 2023க்குள் 16வது பொது
மதிப்பாய்வை (GRQ) செய்வது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள் (EMES) உலகப் பொருளாதாரத்தில்
அவற்றின் தொடர்புடைய நிலைகளுக்கு ஏற்ப வாக்களிக்கும் உரிமையை அதிகரிப்பதற்கு இன்றியமையாதது
“ என்றும் வலியுறுத்தினார்.
பல குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில்
அதிகரித்துள்ள கடன் தொல்லை உலக பொருளாதார மீட்சிக்கான ஒரு முக்கிய எதிர்மறையான ஆபத்தாக
உள்ளது.வெளி கொடுப்பு தொடர்பான பாதிப்புகளைச் சமாளிக்க சர்வதேசப் பண நிதியம் தேவையான ஆதரவை வழங்குவது முக்கியம் என்ற அவர் நாடுகளுக்கு
உணவுப் பாதுகாப்பின்மையைத் தீர்க்க உதவும் சர்வதேசப் பண நிதியத்தின் சமீபத்திய முயற்சியான
புதிய உணவு அதிர்ச்சி சாளரத்தினை அவர் வரவேற்றார்.
பல தரப்பு கடனளிக்கும் முகமை அமைப்பான
சர்வதேசப் பண நிதியத்தின் வாக்களிக்கும் பங்குகளை நிர்ணயிக்கும் இந்தியாவின் ஒதுக்கீடு
2.75%ஆகவும், சீனாவின் ஒதுக்கீடு 6.4 %ஆகவும், அமெரிக்காவின் ஒதுக்கீடு 17.43 %ஆகவும்
உள்ளது.
அக்டோபர் 5 ஆம் தேதி நிதி அமைச்சகம்,
அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) கீழ் பெறும் அதிகபட்ச கடன் வரம்பை ₹400 கோடியிலிருந்து ₹1,500 கோடியாக உயர்த்தியுள்ளது.
அவசர காலக் கடன் உதவித் திட்டம்
(ECLGS) முதலில் பல துறைகளில் சுயதொழில் செய்பவர்கள் உட்பட சிறு வணிகத் தொழில் நிறுவனங்களில்
கவனம் செலுத்தியது, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் மூன்றாவது திருத்தப்பட்ட பதிப்பில்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் விமான சேவைகளை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.
சிறு குறு நிறுவனங்களுக்கான அவசர
காலக் கடன் உதவித்திட்டம் என்று கூறுவிட்டு அதில் விமான நிறுவனங்களையும் இணைத்து, விமான
நிறுவனங்களுக்கான கடன் ஆதரவு வரம்பை நிதி அமைச்சகம் கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்த்தியிருப்பது
சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பாதிக்கவுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு மேலும்
ஆதரவளிக்கும் வகையில், கடன் வரம்பை ரூ. 1,500 கோடியாக அல்லது விமான நிறுவனங்களின்
100 % நிதி அடிப்படையிலாகவோ அல்லது நிதி அடிப்படையிலான கடன் நிலுவையின் அடிப்படையிலோ,
எது குறைவாக இருக்கிறதோ அதன்படி உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.
வரி செலுத்துவோர் மற்றும் பிற
பங்குதாரர்கள் பல்வேறு வரிகளை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய
நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கையை
தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஏழு நாட்களுக்கு 2022 அக்டோபர் 7 வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில்
யுபிஐ மூலம் ரூ.11.2 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகளின்
எண்ணிக்கை 678 கோடியாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.10.7 லட்சம் கோடி பரிவர்த்தனை
செய்யப்பட்டது.
மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு
ரூ.7,183 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை விடுவித்துள்ளது. இந்த நிதியாண்டிற்கு,
ஹரியானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தவிர்த்து 14 மாநிலங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் மதிப்பிடப்பட்ட நிதிப்பகிர்வைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களின்
வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில்
மாநிலங்களின் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
இந்திய மற்றும் இந்தோனேசிய பத்திரங்கள்
உலகளாவிய சந்தைகளில் தீவிர ஏற்ற இறக்கத்தில் இருந்து தஞ்சம் அளிக்கின்றன. ப்ளூம்பெர்க்
தொகுத்த தரவுகளின்படி, சீனா உட்பட ஆசியாவின் பிற வளர்ந்து வரும் சந்தைகளை விட, மூன்றாம்
காலாண்டில் டாலர் அடிப்படையிலான முதலீடுகளுக்கு இரு நாடுகளின் இறையாண்மைக் கடன்களின்
மூலம் முறையே 0.4% மற்றும் 1.5% மட்டுமே இழந்தது. இதனால் ஆசியப் பகுதியில் சிறந்த செயல்திறன்
கொண்ட சீனா முதலிடத்திலிருந்து வீழ்ந்தது. மூன்றாம் காலாண்டில் உலகளாவிய விற்பனைக்கு
மத்தியில், இந்தோனேசியா மற்றும் இந்திய பத்திரங்களின் அதிக மகசூல் பத்திர விலை இழப்புகளிலிருந்து
தடுத்துள்ளது என டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிபுணர் டங்கன் டான் கூறியுள்ளார்.
ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு
உயர்ந்துவரும் பணவீக்கம், நாணயங்களில் அதிகஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களே
காரணம் என, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டுஆணையத்தின் (ஃபியோ) தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
வணிக ஊழியர்களுக்கான
தொழிற்சங்கங்களின் 12-வது இருதரப்பு தீர்வின் ஒரு பகுதியாக, நவம்பர் 1-ஆம் தேதி முதல்
ஐந்தாண்டுகளுக்கு நடைமுறைக்கு வரும் ஊதியத் திருத்தம், சேவை நிலைமைகளின் அடிப்படையில்
2007-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத்
திரும்பச் செய்ய வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய
வங்கிகள் சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சாசனத்தில் - நாட்டிலுள்ள வணிக வங்கிகளுக்கான
தொழில் அமைப்பு - தொழிற்சங்கங்கள் 11 வது இருதரப்பு தீர்வு அக்டோபர் 31 அன்று முடிவடைகிறது,
எனவே ஊதியங்கள் மற்றும் பிற சேவை நிலைமைகளை ஒரு புதிய தீர்வுடன் திருத்த வேண்டிய அவசியம்
உள்ளது. உயர் பணவீக்கம் ஊழியர்களின் உண்மையான ஊதியத்தை பறிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சில பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க
முடிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி
(ஏஏபி) அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல்
அளித்துள்ளது. வங்கிகளின் மொத்த வணிகம் 2017 மார்ச் 31இல் ரூ. 1.36 டிரில்லியனாக இருந்தது,
2022 மார்ச் 31ல் ரூ. 1.78 டிரில்லியனாக உயர்ந்துள்ளது என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வணிக அளவு 30% உயர்ந்துள்ளது, வங்கிகளில் பணிபுரியும்
பணியாளர்களின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது, மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு
ஊழியருக்கான வேலையும் 20% அதிகரித்துள்ளது. தொழிற்சங்கங்களும் வாரத்திற்கு ஐந்து வேலை
நாட்கள் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசு இதுவரை 18 மாநிலங்களுக்கு
54,000 கோடி ரூபாய் மூலதனக் கடனை அளித்துள்ளது. ₹5 கோடிக்கும் குறைவான மூலதனச்
செலவைக் கொண்ட திட்டம் (வடகிழக்கு மாநிலங்களுக்கு ₹2 கோடி) மற்றும் மூலதனச்
செலவைப் பொருட்படுத்தாமல் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் திட்டங்கள்
இத்திட்டத்தின் கீழ் கருதப்படாது.
மாநிலங்களுக்கான மூலதனக் கடனில்
இதுவரை, சுமார் 22 மாநிலங்களுக்கு ரூ. 60,200 கோடி மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது,
இதில் சுமார் ரூ. 30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஸா,
தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிதியைப் பெறுவதற்கு நவம்பர் மாதத்திற்குள் மத்திய
நிதியுதவி திட்டங்கள் தொடர்பான “மறுபெயரிடுதல் இல்லாத விதி”க்கு இணங்குமாறும், விதிக்கு
இணங்காமல் இருந்தால் அந்த மாநிலங்கள் பெறவேண்டியது மற்ற மாநிலங்களுக்கு மறு ஒதுக்கீடு
செய்ய வழிவகுக்கும் என்று நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இதுவரை பயனடைந்த மாநிலங்களில்
உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா,
மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், கோவா, இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, அசாம், மணிப்பூர்,
நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகியவை அடங்கும்.
மத்திய நிதியுதவி திட்டங்களின்
கீழ் ஆண்டுக்கு 4 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் செலவழித்தாலும், பல மாநிலங்கள், குறிப்பாக
பாஜக அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள், பல திட்டங்களின் பெயர்களை மாற்றியமைத்துள்ளன
என்று மத்திய அரசு சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது. நிதியைப் பெறுவதற்கான முக்கிய
நிபந்தனையான மத்தியில் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் அசல் பெயரை மாற்ற முடியாது என்ற
மையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால் நான்கு மாநிலங்கள் இழக்க நேரிடும்.
மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானாவின்
விதி மீறல்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) தொடர்பானவை, அதே நேரத்தில்
ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகியவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் விதிமுறைகளை மீறியுள்ளன
என்று கூறப்படுகிறது.
ரூ. 1 லட்சம் கோடி மூலதனக் கடனில்,
80,000 கோடி மத்திய வரிகளை பகிர்ந்தளிப்பதில் மாநிலங்களின் பங்கு விகிதாசாரமாகவும்,
திட்டங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையிலும் மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள
20,000 கோடியின் வெளியீடு, கிராமப்புறங்களில் பாரத்நெட்டின் கீழ் கடைசி மைல் இணைப்புக்கான
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை அமைக்கும் திட்டம், பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின்
மாநில அங்கம், கதிசக்தி மாஸ்டர் திட்டத்தின் கீழ் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு இணைப்புத்
திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு
பிணையம் இல்லாத கடன் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. நிறுவன நிதியுதவி சார்ந்த இந்தப்
புதிய திட்டம் சுய உதவிக் குழுக்களின் (SHG) உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் வங்கிக்
கடன் பெறுவதை அனுமதிக்கும். தற்போது, சுய உதவி குழுவின் உறுப்பினர்கள் குழுக்களாக மட்டுமே
கடன் பெற முடியும். 1.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை, உடனடியாக திருப்பிச் செலுத்தினால்,
மூன்று ஆண்டுகளுக்கு வட்டி மானியத்தை அரசு வழங்கும்” . இத்திட்டத்தின் படி, "இரண்டு
சுழற்சிக் கடன்கள் அல்லது 24 மாத விண்டேஜ்" சேவை செய்த சுய உதவி குழுவின்
(SHG) உறுப்பினர்கள் கடன் பெறத் தகுதியுடையவர்கள். மேலும், முன் அனுபவம் இல்லாத பெண்
தொழில் முனைவோர் ரூ. 50,000 வரை கடன் பெறலாம். 2 லட்சம் வரையிலான கடனுக்கு, உறுப்பினர்கள்
தங்கள் தொழிலில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சாதகமான கடன் விகிதங்களில் தனியார்
வங்கிகளின் லாபம் இரண்டாவது காலாண்டில் (Q2) கணிசமாக உயர்ந்துள்ளது. லாபத்தின் அடிப்படையில்,
கோடக் மஹிந்திரா வங்கி, 72 அடிப்படை புள்ளி (bps) (y-o-y NIM) விரிவாக்கத்துடன் முதலிடத்தில்
உள்ளது.
சிறு வணிகங்களுக்கு கடன் வழங்குவதில்
சிறு நிதி வங்கிகள் முற்போக்கான பங்கு வகிக்கின்றன என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்
ராஜேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார். சிறு நிதி வங்கிகள் (SFB) மற்றும் கட்டண வங்கிகளை
அமைப்பதற்கான யோசனையானது, இந்தியாவில் "வேறுபாடடைந்த வங்கி" என்ற கருத்தாக்கத்தில்
இருந்து வந்தது, இது கிடைமட்ட மற்றும் செங்குத்து வேறுபாட்டின் அடிப்படையிலும், மண்டலங்களின்
துறை சார்ந்த நோக்கம் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலும் வங்கிகள் உருவாக்குவதைக்
குறிக்கிறது.
2021-22 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக
வரிக்குப் பிந்தைய லாபத்தில் (PAT) 30.01 %ஆக
₹74.20 கோடியை இந்திய அரசுக்கு இந்துஸ்தான் காப்பர் இன்று செலுத்தியுள்ளது"
என்று சுரங்க அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தரவுகளின் படி குறு,
சிறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் ஆகஸ்ட் மாதத்தில் 19% அதிகரித்துள்ளது.
சூழலுக்குகந்த நிலக்கரி கையாளுதலுக்காக
கோல் இந்தியா சிஐஎல் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள இரண்டு கட்டங்களில்
செயல்படும் 44 திட்டங்களுடன் கூடுதலாக இந்தத் திட்டங்களை நிறுவனம் தொடர்ந்துள்ளது.
சூழலுக்குகந்த நிலக்கரி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த, கோல் இந்தியா லிமிடெட்
(சிஐஎல்) கட்டம்-III இன் கீழ் மேலும் 17 முதல் மைல் இணைப்பு (எஃப்எம்சி) திட்டங்களை
ரூ.11,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்கள் ஆண்டுக்கு 317 மில்லியன்
டன் (எம்டிபிஏ) திறனுக்காக திட்டமிடப்பட்டுள்ளன.
கூட்டு
கண்காணிப்பு (joint inspection) திட்டத்திற்கு பெரிய தணிக்கையாளர்கள் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர்.
கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளங்களுக்கும், திறன்களுக்கும் இடையே
கணிசமான இடைவெளி இருப்பதால், அத்தகைய செயல்பாடு தணிக்கையாளருக்கான செலவுகளை உயர்த்தும்
போதும் கூட தணிக்கை தரக் குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது குறித்து இந்திய
பட்டய கணக்காளர்கள் நிறுவன அமைப்பின் முன்னாள் தலைவர் கூறுகிறார்: "முக்கிய பிரச்சினை
என்னவென்றால், தணிக்கைக் கட்டணம் சம்பந்தப்பட்ட தணிக்கையாளர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுவதால்,
பெரிய தணிக்கையாளர்கள் தங்கள் பங்கை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறார்கள். தொழில்துறை
அமைப்புகள் இதற்கு எதிராக உள்ளன, ஏனெனில் கூட்டு தணிக்கை அவர்களின் நிறுவனங்களுக்கான
செலவுகளை உயர்த்தும். "ஆனால் அத்தகைய அமைப்பு அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு
மட்டுமல்லாமல், தணிக்கையாளர்களின் ஒரு பெரிய குழுவிற்கு வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும்.
எனவே, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன அமைப்பு அதை ஆதரிக்கிறது” என்று அவர் மேலும்
கூறினார்.
முன்னாள் நிதிச் செயலர் அசோக்
சாவ்லாவின் கீழ் உள்ள ஒரு நிபுணர் குழு, “கூட்டு தணிக்கை நிறுவனங்கள் மீது தேவையற்ற
செலவுகளை சுமத்துகிறது, தணிக்கை அபாயங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்துகிறது,
மேலும் சிறிய நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் வளங்கள், நிபுணத்துவப் பகிர்வுகளை
அது ஊக்குவிக்காது. ” என்று கூறியுள்ளார்.
கணக்காளர்களின் சர்வதேச கூட்டமைப்பின்படி,
தற்போது 55 நாடுகளில் கூட்டுத் தணிக்கை செய்யப்படுகிறது, ஐரோப்பிய நாடுகளில் ஒருங்கிணைந்த
நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இத்தகைய தணிக்கைகள் தேவைப்படுகிறது.
ஆனால் கனடா மற்றும் டென்மார்க் போன்ற வேறு சில நாடுகள் 1991 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில்
கூட்டுத் தணிக்கை விலை உயர்ந்ததாகவும், பயனற்றதாகவும் உள்ளது என்ற அடிப்படையில் நிறுத்தியுள்ளனர்.
ரிசர்வ் வங்கி, அதன் மிகப்பெரிய
தரவுத்தளத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில்
(NBFC) ஒழுங்குமுறை மேற்பார்வையை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட பகுப்பாய்வு, செயற்கை
நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றை விரிவாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காக, மத்திய வங்கி வெளிப்புற நிபுணர்களையும் வேலைக்கு அமர்த்தவுள்ளது.
2021-22ல் சர்க்கரை ஏற்றுமதி
57 % உயர்ந்து 109.8 லட்சம் டன்னாக உள்ளது. கரும்பு நிலுவைத்தொகை ரூ.6,000 கோடியாக
உள்ளது. 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில், சர்க்கரை ஆலைகள் ரூ. 1.18 லட்சம் கோடிக்கு
மேல் கரும்புகளை கொள்முதல் செய்து, மத்திய அரசின் எந்த நிதியுதவியும் (மானியம்) இல்லாமல்
ரூ. 1.12 லட்சம் கோடிக்கு மேல் கட்டணம் செலுத்தியுள்ளன.
மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி மீதான
தடையை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தியா அதிக அளவில் சர்க்கரையை உற்பத்தி
செய்கிறது. இந்த ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது.
தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின்
அறிக்கையில் இந்தியாவில் கரும்பு உற்பத்தி தெற்கிலிருந்து வடக்கே மாறுவது
தெரியவந்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரா முன்னணியில்
இருந்தாலும், உத்தரப் பிரதேசம் இந்தியாவிலேயே அதிக கரும்பு உற்பத்தி மதிப்பைக்
கொண்டுள்ளது.
2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில்
ஆறு கரும்பு உற்பத்தி செய்யும் வட இந்திய மாநிலங்கள் கரும்பு உற்பத்தி மதிப்பு 42
% உயர்ந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் ஐந்து தென் மாநிலங்களில் கரும்பு
உற்பத்தி மதிப்பு 32.4 % குறைந்துள்ளதாகவும் சமீபத்திய தேசிய புள்ளியியல்
அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது (NSO).
விவசாயம், வனவியல் மற்றும்
மீன்பிடித்தலின் உற்பத்தி மதிப்பு பற்றிய தரவுகளைக் கொண்ட இந்த அறிக்கையின் படி,
பீஹார், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய
மாநிலங்களில் ஒட்டுமொத்த கரும்பு உற்பத்தி மதிப்பு பத்தாண்டுகளில் ரூ.302.16
பில்லியனில் இருந்து ரூ.429.2 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கரும்பு
உற்பத்தி செய்யும் தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு,
மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் கரும்பு உற்பத்தி ரூ.268.23 பில்லியனில்
இருந்து ரூ.181.19 பில்லியனாக சரிவடைந்துள்ளது. வடக்கில் பாசனப் பகுதி அதிகமாக
உள்ளது. மத்திய அரசு வழங்கும் நியாயமான ஊதிய விலையுடன் (FRP) கூடுதலாக உத்தரபிரதேசம் மாநில ஆலோசனை விலை (SAP)
வழங்குகிறது என்கிறார் இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் (IGIDR)
இயக்குநர் மகேந்திர தேவ். உதாரணமாக, உ.பி அரசு கடந்த ஆண்டு கரும்பு மாநில ஆலோசனை
விலையை குவிண்டாலுக்கு ரூ.340 என நிர்ணயித்தது, அதேசமயம் தமிழ்நாடு, கர்நாடகா
மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு விவசாயிகள் 280-310 என்ற வரம்பில் மட்டுமே
விலைகளை பெற்றுள்ளனர்.
“கடந்த பத்தாண்டுகளில் உத்தரப்பிரதேசம் போன்ற வட
மாநிலங்கள் தொடர்ந்து கரும்புக்கு அதிக மாநில விலைகளை வழங்கி வருகின்றன. கர்நாடகா,
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மாநில ஆலோசனை அமைப்பிலிருந்து விலகி வருவாய்
பகிர்வு மாதிரியை ஏற்றுக்கொண்டன. ஆனால் ஆலைகள் ஆபத்தான நிதி நிலைமைகளை
கொண்டிருப்பதால் அவர்களால் லாபகரமான விலையை உணர முடியவில்லை. மேலும், தென்
மாநிலங்கள் தண்ணீரை மற்ற உயர் மதிப்பு பயிர்களுக்கு பயன்படுத்துகிறார்கள்,"
என்கிறார் மகேந்திர தேவ்.
தென் மாநிலங்களில், தமிழ்நாடு கரும்பு
உற்பத்தி மதிப்பில் கடும் சரிவைக் கிட்டத்தட்ட 66% சரிவைக் கண்டுள்ளது, கரும்பு உற்பத்தி
மதிப்பு ரூ. 18.55 பில்லியனாக உள்ளது, அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில்
கிட்டத்தட்ட 63 விழுக்காடு சரிவடைந்து உற்பத்தி மதிப்பு ரூ. 7.3 பில்லியனாக
இருந்தது.
இந்தியாவில் ஏழைகளுக்கு விநியோகிக்க
ஆண்டுக்கு 108 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேவை எனக் கூறிய மத்திய அமைச்சர்
பியூஷ் கோயல், அரிசி விலை நிலைத்தன்மையுடன் இருப்பதால் ஏற்றுமதியை அரசு
தடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ஏற்றுமதி சரக்கு மீதான ஜிஎஸ்டி
விலக்கை நீட்டிக்குமாறு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய ஏற்றுமதி
நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) சமீபத்தில் ரிசர்வ் வங்கியிடம், வட்டி விகித உயர்விலிருந்து
ஏற்றுமதிக் கடனுக்கு விலக்கு அளிக்க ஒரு ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை-பிஎல்ஐ
திட்டத்தின் உண்மையான பயனாளிகள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களே என்று வர்த்தகம், தொழில்துறை
அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் அளிக்கும் விளக்கம் ‘trickle
down’ கோட்பாடு போல் தான் இருக்கிறது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்
(MSMEs) பிஎல்ஐ திட்டத்தின் உண்மையான பயனாளிகள். ஏனெனில் ஒரு பெரிய தொழில் தொடங்கும்
போது, அது உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும்
கொண்டு வருகிறது என்கிறார் அவர்.
பெண் தொழில்முனைவோருக்காக
'herSTART' என்ற புத்தொழில் நிறுவனங்களுக்கான தளத்தை குடியரசுத் தலைவர் முர்மு துவக்கி
வைத்தார்.
பெண் தொழில்முனைவோருக்கான இந்தத்
தளம், பெண் தொழில்முனைவோரின் புதுமை மற்றும் தொடக்க முயற்சிகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல்,
பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பெண் தொழில்முனைவோரை இணைப்பதில் ஒரு சிறந்த
தளமாக செயல்படும் என்று முர்மு கூறியுள்ளார்.
உயர்த்தப்பட்ட கச்சா விலை எண்ணெய்
நிறுவனங்களுக்கு திடீர் லாபம் ஈட்ட அனுமதிப்பதாக அரசு கருதியதால் ஜூலை 1 ஆம் தேதி ஏற்றுமதி
வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது கச்சா எண்ணெய் மீதான வரி 31% குறைக்கப்பட்டுள்ளது,
டீசல் மீதான ஏற்றுமதி வரி பாதியாக குறைக்கப்பட்டது.
நிதி அமைச்சகம் அக்டோபர் 15 முதல்
நிதி உள்ளடக்கத்திற்கான சிறப்பு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. அக்டோபர் 2-31, வரை தூய்மை
இந்தியா(ஸ்வச்சதா) மற்றும் பிற சிக்கல்களில் பிரச்சாரம் கவனம் செலுத்தும். வங்கிக்
கணக்குகள், விவசாயக் கடன் அட்டை பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் பூரித நிலையை அடைவதற்காக நிதி அமைச்சகம் அக்டோபர் 15 முதல் சிறப்பு
நிதி உள்ளடக்கத்திற்கான பிரச்சார இயக்கத்தை நடத்தும். அக்டோபர் 15 முதல் நவம்பர்
26 வரையிலான பிரச்சாரமானது தற்போதுள்ள கணக்குகளில் கைபேசி/ஆதார் எண்ணை இணைத்து வாடிக்கையாளரின்
(KYC) முழுமையான விவரங்களின் மூலம், சிறிய கணக்குகளை சாதாரண கணக்குகளாக மாற்றுவதில்
சிறப்பு கவனம் செலுத்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
2022 ஆகஸ்டில் 40 திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட வங்கிக் கடன்களின்
துறை வாரியான தரவுகளின் படி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.2 விழுக்காட்டில் இருந்த
சிறு குறு நிறுவன (MSE) துறைக்கு வழங்கப்பட்டக் கடன் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 19.6% கடன்
வளர்ச்சியைக் காட்டுகிறது. நடுத்தர நிறுவனங்களுக்கான கடனை இணைத்து, சிறு குறு நிறுவன
துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் 2021 ஆகஸ்டில் இருந்த ரூ.14.64 லட்சம் கோடியிலிருந்து
24% உயர்ந்து, 2022 ஆகஸ்டில், மொத்த அளவில் ரூ.18.15 லட்சம் கோடியாக உள்ளது.
சிறு குறு நடுத்தர நிறுவனங்களின்
மேம்பாட்டிற்கான முதன்மை நிதி நிறுவனமான இந்திய சிறு தொழில்களுக்கான மேம்பாட்டு வங்கி
(SIDBI), தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான டன் & பிராட்ஸ்டிரீட் (Dun &
Bradstreet) உடன் இணைந்து நிலைத்தன்மைக் குறியீட்டை (SIDBI-D&B Sustainability Perception Index- SIDBI-D&B
SPeX) உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்களிடையே சுற்றுச்சூழல், சமூக, பெரு நிறுவன ஆளுகை
(ESG) நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான அளவீடாக கொள்கை வகுப்பாளர்களுடன் இந்தக் குறியீடு
பகிரப்படும் என்றும் "வரும் ஆண்டுகளில் சுற்றுச்சூழல், சமூக, பெரு நிறுவன ஆளுகைக்
கட்டமைப்பை தங்கள் வணிக அமைப்பில் பின்பற்றுவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கும் என்றும்
வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உற்பத்தி மற்றும்
சேவைகளில் (வர்த்தகம் உட்பட) சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் விழிப்புணர்வு/உணர்வை
இந்தக் கணக்கெடுப்பு கண்காணிக்கும். சிறு குறு நடுத்தர நிறுவனங்களின்
D&B/SIDBI தரவுத்தளத்திலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் கிட்டத்தட்ட 250 சிறு குறு
நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் கடன் வழங்குவதில்
முக்கியப் பங்கு வகிக்கும் மண்டல கிராமப்புற வங்கிகள் (RRBs), முந்தைய மூன்று ஆண்டுகளில்
குறைந்தபட்சம் ரூ. 300 கோடி நிகர மதிப்பைக் கொண்டிருந்தால், அவை சில அளவுகோல்களுக்கு
உட்பட்டு பங்குகளை பட்டியலிடவும், நிதி திரட்டவும் தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத போர்ட்ஃபோலியோ
மேலாண்மைச் சேவை (PMS) வழங்குநர்களால் திரட்டப்பட்ட நிதிகளுக்கு எதிராக முதலீட்டாளர்களை
மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி எச்சரித்துள்ளது.
இந்தியா பிளாட்டினம் மீதான இறக்குமதி
வரியை 10.75 விழுக்காட்டில் இருந்து 15.4 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி
வரி சலுகை மார்ச் 2023 வரை நடைமுறையில் இருக்கும்
என உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புளூம்பெர்க் தரவுகளின் படி இந்தியா
ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. செப்டம்பரில் இந்தியாவின்
பாமாயில் இறக்குமதிகள், ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்து சென்ற மாதத்தில் இருந்ததை
விட 18% உயர்ந்து 1.17 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பருக்குப்
பிறகு மிக அதிகம் என்று மும்பையைச் சேர்ந்த வர்த்தக அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ்
அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நடுத்தர வர்க்கதினரும் பென்ஸ் கார் வாங்க இந்தியாவில்
உற்பத்தியை அதிகரிப்பீர்” என பென்ஸ் கார் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்
நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம் கார்களின் விலை குறையும். நடுத்தர வர்க்கத்தினரும்
பென்ஸ் கார்களை வாங்க முடியும் என்று அவர் கருதுகிறார். காலநிலை மாற்றம், பொதுமக்களின்
நலன் கருதி பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கவேண்டிய மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர்,
தனியார் நிறுவனத்தின் உற்பத்தியை ஊக்குவிப்பது எந்த விதத்தில் ஏற்புடையதாக இருக்கும்.
ஏற்றுமதியாளர்கள் மீதான தளவாடச் சுமையைக்
குறைக்குமாறு மாநிலங்கள் பன்முக அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என
நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். ஏற்றுமதியாளர்கள் மீது காட்டும் கரிசனத்தில் ஒரு
பங்காவது எளிய மக்கள் மீது காட்டக் காணோம். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள
நிலையில் உள்நாட்டுச் சந்தையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கப்பெறச்
செய்வது குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை அவர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (AIIB) கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில்
சிறப்பு கவனம் செலுத்தி தூய்மையான எரிசக்தி மற்றும் சமூக உள்கட்டமைப்பில் முதலீடுகளை
அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார். இத்தகைய இலக்கு அணுகுமுறை, வளங்கள் பல பகுதிகளில்
சிதறாமல் இருப்பதையும், தாக்கம் அர்த்தமுள்ளதாக இருப்பதையும் உறுதி செய்யும் என்றும்
கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கான
இந்தியாவின் இறையாண்மை பசுமைப் பத்திரங்களை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆற்றல்
திறன் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படலாம் என மின்ட் இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு
மின்-நாணயத்தின் அறிமுகம் பக்கபலமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய வங்கி நவம்பர்
1 மொத்த விற்பனைப் பிரிவில் மின் ரூபாயை அறிமுகப்படுத்தி
முன்னய்வை மேற்கொள்ளவுள்ளது. ஒரு மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை
உள்ளடக்கிய மூடிய பயனர் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சில்லறைப் பிரிவுக்கான
முதல் முன்னாய்வைத் தொடங்கும்.
ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பின்படி,
இந்த முன்னாய்வின் பயன்பாட்டு அரசுப் பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகளைத்
தீர்ப்பதாகும். "மொத்த விற்பனைப் பிரிவில் பயன்படுத்துவது வங்கிகளுக்கிடையேயான
சந்தையை மிகவும் திறமிக்கதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் ரூபாயின் பயன்படும் போது
மத்திய வங்கி பணத்தில் தீர்வை செய்வதற்கான உத்தரவாத உள்கட்டமைப்பு, தீர்வை ஆபத்தைத்
தணிப்பதன் மூலம் பரிவர்த்தனை செலவுகளைக் குறைக்கமுடியும் என மத்திய வங்கி நம்பிக்கை
தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க்
ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக்
மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது
வங்கிகள் இந்த சோதனையில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
"
மகாராஷ்டிர மாநிலத்தில் புனேயில்
உள்ள ரஞ்சன்கானில் ₹492.85 கோடி திட்ட மதிப்பீட்டில் மின்னணு சாதன உற்பத்தி மையம் உருவாக்குவதற்கு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்
₹2000 கோடிக்கு மேல் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டு 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நொய்டா, திருப்பதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில்
மின்னணு சாதன உற்பத்தி மையங்கள் உள்ளன - இதில் பல தேசிய நிறுவனங்களும், இந்திய புத்தொழில்
நிறுவனங்களும் தங்கள் அலகுகளை அமைத்துள்ளன. இந்த மையங்களில் இந்திய அரசு செயல்படும்
பங்காளராக உள்ளது, மேலும் இந்த உற்பத்தி மையங்கள் மாநிலத்தில் மின்னணு சாதன உற்பத்தியை
ஊக்குவிக்கும் வகையில் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது" என்று மத்திய
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்
குழு (GEAC), அக்டோபர் 18 அன்று இந்தியாவில் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட
(GM) கடுகிற்கு டிஎம்ஹெச்-11 (DMH-11) அனுமதி வழங்கியுள்ளது. டிஎம்ஹெச்-11 உருவாக்கத்தில்
பங்கு வகித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அறிவியல், பொறியியல்
ஆராய்ச்சி வாரியத்தின் (SERB) தற்போதைய தேசிய அறிவியல் தலைவருமான தீபக் பெண்டல், இந்த ஒப்புதல் இந்தியாவில் இதுபோன்ற பயனுள்ள மரபணு
மாற்றப் பயிர்களின் உருவாக்கத்திற்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளார். அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம் இல்லாமல், இந்திய விவசாயம் செழிக்க முடியாது, இந்திய வேளாண் ஆராய்ச்சி
கவுன்சில் (ஐசிஏஆர்) நடத்தும் ஒருங்கிணைந்த சோதனைகளுக்கு உட்படுமாறு நாங்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளோம்' என தீபக் பெண்டல் தெரிவித்துள்ளார். இந்திய விவசாயத்தில் ஈடுபடும்
80 விழுக்காட்டினர் சிறு விவசாயிகளே. மரபணு மாற்றப்பட்ட பயிர் அவர்களின் விவசாய செலவுகளை
அதிகரிக்கச் செய்வதுடன், கடுமையான மரபணு மாசுபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதால் மரபணு
மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியா சமூக பாதுகாப்பு வலையை
வலுப்படுத்திய டிஜிட்டல் மயமாக்கத்தில் முன்னோடியாக உள்ளது என உலக வங்கியின் தலைவர்
டேவிட் மல்பாஸ் பாராட்டியுள்ளார்.
போர் நீட்டிப்பு, வட்டி உயர்வு
கொள்கைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க உலகளாவிய அபாயங்களை
எதிர்கொள்கிறது என்று சர்வதேசப் பண நிதியம் கூறியுள்ளது.
மத்திய அமைச்சரவை பல மாநில கூட்டுறவு
சங்கங்களின் (எம்.எஸ்.சி.எஸ்) சட்டத்தில் அவற்றின் நிர்வாகக் கட்டமைப்பில் வெளிப்படைத்தன்மை
மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவருவதற்கான திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தற்போது,
சுமார் 0.8 மில்லியன் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 1,500 பல்மாநிலக்
கூட்டுறவு அமைப்புகளாகும் (MSCS).
ஒன்றுக்கும் மேற்பட்ட ஒழுங்குமுறையாளர்களின்
வரம்பில் வரும் புதிய நிதித் தொழில்நுட்ப-ஃபின்டெக் தயாரிப்புகள், சேவைகளை ஒழுங்குபடுத்தும்
வகையில் இயங்கக்கூடிய ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸிற்கான நிலையான இயக்க நடைமுறையை
(SOP) இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்குகள் மற்றும்
பரிவர்த்தனை வாரியம் (செபி), காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டாய்),
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) உள்ளிட்ட பல ஒழுங்குமுறை
நிறுவனங்களின் ஒரு தெளிவான அதிகார வரம்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.
.
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்
திறமையாகவும் போட்டித்தன்மையுடனும் மாற இன்குபேட்டர்கள் தேவை என சிறு குறு நடுத்தர
நிறுவனத் துறை அமைச்சர் பானு பிரதாப் சிங் கூறியுள்ளார். “குறிப்பாக கோவிட்-19க்குப்
பிறகு இந்தத் துறை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டது. சிறு குறு நிறுவனங்களுக்கான
சூழல் புதுப்பித்து, புத்துயிர் பெற்று முன்னெப்போதையும் விட சிறப்பாக இருப்பதாக அவர்
கூறியுள்ளது முற்றிலும் உண்மைக்கு மாறாக உள்ளது.
ரிசர்வ் வங்கி தரவுகளின் படி, சில்லறை,
மொத்த விற்பனை வர்த்தகத்திற்கான வங்கி கடன் ஆகஸ்ட் மாதத்தில் 17% உயர்ந்து ரூ.7.31
லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் பயன்படுத்தப்பட்ட ரூ. 3.24 லட்சம்
கோடியிலிருந்து இந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த வர்த்தகத்திற்கான கடன் அளிப்பு 17.6 %
அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 2021 இல்
பயன்படுத்தப்பட்ட ரூ. 3.01 லட்சம் கோடி கடனில் இருந்து கடன் வளர்ச்சி 16 %
உயர்ந்துள்ளது,
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பயன்படுத்தப்பட்ட
ரூ.6.26 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்திற்கான
மொத்தக் கடன் ரூ.7.31 லட்சம் கோடி பயன்படுத்தப்பட்டது. மொத்தக் கடன் தொகையில் 52%
அல்லது ரூ. 3.81 லட்சம் கோடி மொத்த வியாபாரிகளுக்கு (உணவு கொள்முதலில்
ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர) சென்றது, மீதமுள்ள 48% அல்லது ரூ. 3.50 லட்சம் கோடி
சில்லறை வணிகர்களுக்கு வழங்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தேசிய நீர் வினியோக கட்டமைப்பு
போன்று தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய
அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள
மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தி, 4 அல்லது 6 வழிச்சாலைகளை உருவாக்கி, 12-13
ஆண்டுகளுக்குள் சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்ப பெற மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. "சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 25
ஆண்டுகளுக்கு மாநில அரசுகளிடம் இருந்து போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட மாநில
நெடுஞ்சாலைகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது." அதன்பின், அந்த மாநில
நெடுஞ்சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும், 12-13 ஆண்டுகளுக்குள்
சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்ப பெறப்படும். பயண நேரத்தை ஐந்து
மணிநேரமாக குறைக்க மும்பை மற்றும் பெங்களூரு இடையே பசும் விரைவு நெடுஞ்சாலை
அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள்
வரவுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சாலைகள் மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படுமா என்பது
பற்றி அவர் ஒன்றுமே கூறவில்லை. தனியார்மயப் படுத்துவதற்கான பல்வேறு வழிகளில்
இதுவும் ஒன்றாகத் தான் தெரிகிறது.
பிரதம மந்திரி நரேந்திர மோடி பிஎம் கிசான்
எனப்படும் பிரதம மந்திரி விவசாயத் திட்டத்தின் கீழ் தகுதியான 11 கோடி
விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி மதிப்பிலான 12வது தவணை நிதியை வெளியிட்டார். இதன்
மூலம், பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்தத் தொகை ரூ.2.16 லட்சம் கோடியைத் தாண்டும்
என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN)
கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம்
மூன்று சமமான தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் வழங்கப்படுகிறது. இந்த
நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
முந்திரி ஏற்றுமதி செப்டம்பரில்
38% சரிவடைந்து 22.71 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜூலையில் ஏற்றுமதி
26.62 விழுக்காடும், ஆகஸ்டில் 31.5 விழுக்காடும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைப்பு சாரா கிக் பொருளாதாரத்தில்
பெண்களின் பங்கேற்பு நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக டாஸ்க்மோ இயங்குதளத் தரவுகளின்
பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. பெண்களிடமிருந்து தொலைதூர வேலைகளுக்கான தேவை உயர்ந்துள்ளதாகக்
காட்டுகிறது. கடந்த காலாண்டில், கிக் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு 27% இல்
இருந்து 36% ஆக உயர்ந்துள்ளது. டாஸ்க்மோவின் ஆய்வறிக்கையின்படி, கிக் பொருளாதாரத்தில்
பெண்களின் பங்களிப்பு 2022 காலண்டர் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில்
நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பிரதம மந்திரி கதிசக்தி தேசிய
தலைமைத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ₹10 டிரில்லியனுக்கு மேல் சேமிக்க முடியும் என
அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த தளவாடக் கொள்கை சரக்குகள் மற்றும் சேவைகளின்
சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காகவும், உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதையும்
நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயில்வே துறையை மத்திய அரசு தனியார்மயமாக்குவதற்கு
கண்டனம் தெரிவித்து, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தலைமையில்
உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது. நவீன மயமாக்குதல்
என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம்சாட்டியுள்ளார். துணை
பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர் லால், பால் மாக்ஸ்வெல் ஜான்சன் உட்பட100-க்கும் மேற்பட்டோர்
கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து முழக்கமிட்டனர்.
நாடாளுமன்றத்தில் பிரதமரும், ரயில்வே
அமைச்சரும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது என்கின்றனர். ஆனால், நவீன மயமாக்குதல்
என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்மயமாக்கி மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
150 சுற்றுலா ரயில்களை தனியாருக்கு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் ஒரு ரயிலை தனியார்
நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ரயிலை அரசு இயக்கினால் ரூ.28 லட்சம் தான் மக்களிடம் இருந்து
வசூலிக்கப்படும் ஆனால், மக்களிடம் இருந்து தனியார் நிறுவனம் ரூ.44 லட்சம் வசூலிக்கிறது.
தேசியமயமாக்கல் என்ற பெயரில் 150 ரயில்கள், 450 ரயில்நிலையங்களை
தனியாருக்கு கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. 200 ‘வந்தே பாரத்’ ரயில்கள்
தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இதே ‘வந்தே பாரத்’ ரயிலை நமது ரயில்வே
தொழிலாளர்கள் தயாரித்தபோது, ரூ.98 கோடிதான் செலவானது. ஆனால், இப்போது அந்த பணியை தனியாரிடம்
கொடுத்துள்ளனர், அவர்கள் அந்த ரயிலை தயாரித்து ரூ.137 கோடிக்கு ரயில்வே அமைச்சகத்துக்கு
விற்கப்போகின்றனர். சென்னைக்கு 5 முதல் 6 வந்தேபாரத் ரயில்கள் விரைவில் வரும் என்று
மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சாதாரண பொது வகுப்பு பெட்டியோ, தூங்கும் வசதி கொண்ட
பெட்டியோ கிடையாது. முழுவதும் குளிர்சாதனம் பொருத்திய தூங்கும் வசதி பெட்டிகள் மட்டுமே
இருக்கும் என்பதால், மக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
எனவே, கட்டணத்தை குறைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே தனியார்மயமாவதை தடுக்க,
மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.
2022-23 பட்ஜெட்டில் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (MGNREGS) ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில்
72 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையை மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது
என்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) ரூ. 73,000 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது, இதில் மாநிலங்களுக்கு இதுவரை ரூ.52,833 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த
தாஸ் நிதித்தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்வாசல் வழியில் நுழைவது குறித்து எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு நிதி நிறுவனங்களை மிகவும் திறம்பட ஆக்கியுள்ளது, ஆனாலும்
இது பெரும்பாலும் விதிமுறைகளை கடைபிடிக்காத நிதி ஒழுங்குக்கு உட்படாத அமைப்புகள் பின்
வாசல் வழியில் நுழைவதற்கு வழிவகுத்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர்
சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். "தவறான விற்பனை, வாடிக்கையாளரின் தனியுரிமை
மீறல், நியாயமற்ற வணிக நடத்தை, கந்து வட்டி விகிதங்கள், நெறிமுறையற்ற கடன் மீட்பு நடைமுறைகள்
உள்ளிட்ட பல பிரச்சினைளுக்கு இது வழிவகுக்கிறது.
டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதில்
ஈடுபட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு 'தற்போதைய டிஜிட்டல் கடன்கள்' வகைக்கான
டிஜிட்டல் கடன் விதிமுறைகளுக்கு இணங்க நவம்பர் 30 வரை அவகாசம் இருக்கும் என்று ரிசர்வ்
வங்கி கூறியுள்ளது, ஆனால் புதிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய கடன்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கும்
இந்த விதிமுறைகள் உடனடியாக பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு
செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின்
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து 29.1 லட்சம் ஊழியர்களைக்
கொண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை 2-வது இடத்திலும், 25.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் 3-வது இடத்திலும் உள்ளது. சென்ற ஆண்டில் உலக அளவில்
2.1 லட்சம் கோடி டாலர் ராணுவத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா,
பிரிட்டன், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்துள்ளன.
ஸ்டேடிஸ்டா என்பது ஜெர்மனியை தளமாகக்
கொண்ட ஒரு தனியார் அமைப்பாகும், இது உலகளவில் பல்வேறு பொருளாதார தரவுகளையும் புள்ளிவிவரங்களையும்
வழங்குகிறது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வால்மார்ட் நிறுவனம் உலக அளவில்
23 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனம்
16.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில்
இந்தியாவுக்கான சீன இறக்குமதி முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதை புள்ளி
விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கான பன்னாட்டு
வர்த்தகம் குறித்த விவரங்களை, சீனாவின் சுங்கவரிக்கான பொது நிர்வாகத்துறை
வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 3
காலாண்டுகளில் இந்திய இறக்குமதி 36.40% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின் முடிவில் இந்திய இறக்குமதி மதிப்பு 68.46
பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், அது இந்த ஆண்டின் முதல் 3 காலாண்டின்
முடிவில் 89.66 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், சீனாவுக்கான இந்திய
ஏற்றுமதி 13.97 பில்லியன் டாலர் என்ற அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதன்மூலம்
நடப்பாண்டின் முதல் 3 காலாண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை
75.69 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியை
குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஏப்ரல் 1 சோலார் மாட்யூல்களுக்கு
40%, சோலார் செல்களுக்கு 25% அடிப்படை சுங்க வரியை (BCD) இந்தியா விதித்தது. ஆனால்
பல சோலார் தயாரிப்பாளர்கள் அதிக வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக "இறக்குமதி
திட்ட வழியைப்" பயன்படுத்திவருகிறார்கள்.
மத்திய நிதியமைச்சகம் 1986 ஆம்
ஆண்டு திட்ட இறக்குமதி விதிமுறைகளில் திருத்தம் செய்வதாக அக்டோபர் 19 ஆம் தேதியன்று
ஒரு கடிதத்தில் அறிவித்தது. சோலார் மாட்யூல்கள், செல்கள் மீதான அடிப்படை சுங்க வரியை
தவிர்க்கவும், குறைந்த வரிகளை செலுத்தவும் சூரிய சக்தி திட்ட தயாரிப்பாளர்கள் பயன்படுத்தும்
திட்ட இறக்குமதி வழியை மத்திய அரசு மூடியுள்ளது. அக்டோபர் 19 தேதியிட்ட அறிவிப்பில்,
மத்திய நிதியமைச்சகம், 1986 ஆம் ஆண்டுக்கான திட்ட இறக்குமதி விதிமுறைகளில் சூரிய மின்சக்தி
திட்டங்களை விதிமுறைகளின் வரம்பிலிருந்து விலக்குவதற்கான திருத்தத்தை அறிவித்தது.
ஆஃபிரிக்காவுக்கான ஏற்றுமதிகள் ஆகஸ்ட்
மாதத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 45.9% உயர்ந்து $4.48 பில்லியனாக
உயர்ந்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், ஆஃபிரிக்காவிற்கான
ஏற்றுமதி 41.6% அதிகரித்து $22.17 பில்லியனாக இருந்தது. இதேபோல், லத்தீன்
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் ஆகஸ்ட் மாதத்தில் 53.8% உயர்ந்து $1.78
பில்லியனாகவும், இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 38% உயர்ந்து $8.24
பில்லியனாகவும் இருந்தது. இதில் பாதிக்கு மேல் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவன
ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பொதுத்துறை பொதுக் காப்பீட்டு
நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சராசரியாக 12% ஊதிய உயர்வை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக்
பரியோஜனா - ஒரே நாடு ஒரு உரம் - என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது,
இதன் கீழ் நிறுவனங்கள் அனைத்து மானிய உரங்களையும் ‘பாரத்’ என்ற ஒற்றை பிராண்டின்
கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். பிரதமர் கிசான் சம்மான் சம்மேளன் 2022 என்ற
இரண்டு நாள் நிகழ்வின் போது இந்தத் திட்டத்தின் கீழ் பாரத் என்ற ஒற்றை பிராண்டை
பிரதமர் தொடங்கி வைத்தார். அனைத்து மானிய மண் சத்துக்களும் - யூரியா,
டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி) மற்றும் என்பிகே
- ஆகியவை நாடு முழுவதும் பாரத் என்ற ஒற்றை பிராண்டின் கீழ் சந்தைப்படுத்தப்படும்.
600 PM கிசான் சம்ருத்தி கேந்திராக்களை (PM-KSK) மோடி திறந்து வைத்தார், இதண்
மூலம் விவசாயத் துறையுடன் தொடர்புடைய பொருட்களையும், சேவைகளையும் ஒரே இடத்தில்
வாங்கமுடியும்.
இந்தியாவின் கனிம உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட்
காலகட்டத்தில் 4.2 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், சுரங்க மற்றும்
குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு ஆகஸ்ட் மாதத்தில் 99.6 ஆக இருந்தது, இது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 3.9 % குறைவாக உள்ளது என்று இந்திய
சுரங்க பணியகத்தின் (ஐபிஎம்) தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நிறுவனங்களின் கூட்டாண்மை
மூலம் தொகுக்கப்பட்ட காலநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை 2022 இந்தியா கடுமையான வெப்பம்
காரணமாக 2021ல் $159 பில்லியன் வருமான இழப்பை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடு
இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா வெப்பத்தால் 167,00 கோடி
உழைப்பு நேரம் இழந்துள்ளது. 19901999ல் இருந்ததைக்
காட்டிலும் இது 39 % அதிகம். உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் இந்தியாவில்
தொழிலாளர் உற்பத்தித்திறன் 1986-2006 கால கட்டத்தை விட ஐந்து விழுக்காடு குறையும் என்று
கணிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை 2.5 டிகிரி உயர்ந்தால் தொழிலாளர் உற்பத்தித்திறன்
2.1 மடங்கு குறையும் என்றும், மூன்று டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் தொழிலாளர் உற்பத்தித்திறன்
2.7 மடங்கு குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
20162-021 க்கு இடையில், சூறாவளி,
திடீர் வெள்ளம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற தீவிர நிகழ்வுகள் 36 மில்லியன் ஹெக்டேர்
பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது, இது நாட்டில் விவசாயிகளுக்கு 3.75 பில்லியன் டாலர்
இழப்பை ஏற்படுத்தியது. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலில் நாட்டில் நதி வெள்ளத்தால்
ஏற்படும் ஆண்டு சேதம் சுமார் 49 % உயரும் என்றும் புயல் பாதிப்பு 5.7% உயரும் என்றும்
மதிப்பிட்டுள்ளது. "மூன்று டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வால் வெப்பமண்டல சூறாவளிகள்
மற்றும் நதி வெள்ளத்தால் ஆண்டுக்கு ஏற்படும் சேதம் 1.5 டிகிரி செல்சியஸில் ஏற்படுவதை
விட 4.6 முதல் 5.1 மடங்கு அதிகமாகும்" என்று அறிக்கை கூறுகிறது.
1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல்
சூழ்நிலையில்,"மழைப்பொழிவு 1986-2006 காலகட்டத்திலிருந்து 6% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் சூழ்நிலையில், மழைப்பொழிவு 1.5 டிகிரி செல்சியஸ்
வெப்பமயமாதலில் எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவை விட மூன்று மடங்கு அதிகரிக்கும். கடந்த
30 ஆண்டுகளில் இந்தியாவில் மழைப்பொழிவு மாறியுள்ளது. அது விவசாயம், வனவியல் மற்றும்
மீன்பிடி போன்ற பல பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியாவில்
பனிப்பொழிவு 1.5 டிகிரி செல்சியஸ் சூழ்நிலையில் 13% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலில், 1.5 டிகிரி செல்சியஸ் சூழ்நிலையில் காணப்படுவதை
விட 2.4 மடங்கு குறையும்" என்று அறிக்கை கூறுகிறது. கூறினார்.
1850-1900 இன் சராசரி வெப்பநிலையுடன்
ஒப்பிடும்போது பூமியின் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 1.1 டிகிரி செல்சியஸ்
உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலை உயர்வை
தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடுகையில், இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் கீழே,
1.5 டிகிரி செல்சியஸுக்கு குறைக்க, 2015 இல் பாரிஸ் ஒப்பந்தத்தை நாடுகள் ஏற்றுக்கொண்டன.
தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டில்
புவி அறிவியல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இயக்குனர் சுருச்சி பத்வால் கூறுகிறார்
"எங்கள் பகுதிகளில் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகள்
அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன, மேலும் மேலும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்."
" எரிசக்தி அமைப்புகளை மாற்றியமைக்க
வேண்டிய அவசியம் தெளிவாகியுள்ளது, இந்தியாவை விட தனிநபர் உமிழ்வு அதிகமாக இருக்கும்
பணக்கார நாடுகளின் ஆதரவும் தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால்
ஏற்கனவே தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகமாகியுள்ளன. இதனால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,
உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது.
இந்தியாவில் 15 ஆண்டில் 41 கோடி பேர்
வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா.சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பு தகவல்
தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் (2005-06 முதல் 2019-2021
வரையில்) பல பரிமாண வறுமை நிலைகளில் இருந்து 41.5 கோடிபேர் மீண்டுள்ளனர்.
அதன்படி, வறுமைக்கான குறியீடு 55.1 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாகக்
குறைந்துள்ளது என நடப்பாண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு
தெரிவித்துள்ளது.
2005-06 மற்றும் 2019-21 க்கு இடையில்
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 415 மில்லியனாகக் குறைந்துள்ளது. 2020
மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில், இந்தியா உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ஏழை
மக்களைக் கொண்டுள்ளது (228.9 மில்லியன்), அதைத் தொடர்ந்து நைஜீரியா 96.7 மில்லியன்
ஏழை மக்களைக் கொண்டிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி
விலை உயர்வு, தற்போதைய ஊட்டச்சத்து, ஆற்றல் நெருக்கடிகளை இந்திய மக்கள்
எதிர்கொள்கின்றனர். இவற்றை சமாளிக்கும் ஒருங்கிணைந்த கொள்கைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட வேண்டும்,” என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
2019/2021 இல் "மிகப்பெரிய ஆதாயங்கள்
இருந்தபோதிலும், 228.9 மில்லியன் ஏழைகளின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான
தற்போதைய பணி கடினமானது - குறிப்பாக தரவு சேகரிக்கப்பட்டதில் இருந்து வறுமையில்
வாடுவோரின் எண்ணிக்கை நிச்சயமாக உயர்ந்துள்ளது. 2019இல் இந்தியாவில் 97 மில்லியன்
ஏழை குழந்தைகள் இருந்துள்ளனர். வேறு எந்த நாட்டிலும் உள்ள ஏழைகள், குழந்தைகள்
மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கையை விட
இது அதிகம். ஆயினும்கூட, பன்முகக் கொள்கை அணுகுமுறைகள் ஒருங்கிணைந்த
தலையீடுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்பதைக்
காட்டுகின்றன,” என்று அறிக்கை கூறியது. நாட்டின் பலபரிமாண வறுமைக் குறியீட்டின்
(MPI) மதிப்பு மற்றும் வறுமையின் நிகழ்வு இரண்டும் பாதியாகக் குறைந்தது.
"இந்தியாவின் முன்னேற்றம் இந்த இலக்கு சாத்தியமானது என்பதைக்
காட்டுகிறது" என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2019/2021 மக்கள்தொகை
மற்றும் சுகாதார ஆய்வில் இருந்து 71% தரவுகள் தொற்றுநோய்க்கு முன்பே
சேகரிக்கப்பட்டதால், இந்தியாவில் வறுமையின் மீதான கோவிட் தொற்றுநோயின் விளைவுகளை
முழுமையாக மதிப்பிட முடியாது என்று அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் ஏழு
பெரியவர்களில் ஒருவர் ஏழையாக உள்ளார் (13.9 சதவீதம்) இதனுடன் ஒப்பிடுகையில்,
இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தை ஏழையாக (21.8 சதவீதம்) இருப்பதாக அறிக்கை
கூறுகிறது. தெற்காசியாவில் ஆண் தலைமையில் உள்ள குடும்பங்களை விட பெண் தலைமையில்
உள்ள குடும்பங்களில் வறுமை கணிசமாக அதிகமாகக் காணப்படும் ஒரே நாடு இந்தியா. பெண்
தலைமையில் உள்ள குடும்பங்களில் வாழும் மக்களில் 19.7% பேர் வறுமையில்
வாழ்கின்றனர். ஆண் தலைமையில் உள்ள குடும்பங்களில் 15.9% பேர் வறுமையில் உள்ளனர்.
ஏழு குடும்பங்களில் ஒன்று பெண் தலைமைத்துவக் குடும்பமாக இருப்பதால், சுமார் 39
மில்லியன் ஏழைகள் பெண் குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பத்தில் வாழ்கின்றனர்.
2015/2016 ஆம் ஆண்டில் மிகவும் ஏழ்மையான
மாநிலமான பீகார், பல பரிமாண வறுமைக் குறியீட்டு (MPI) மதிப்பை முழுமையான
அடிப்படையில் மிக வேகமாகக் குறைத்துள்ளது. 2005/2006ல் 77.4 விழுக்காடாக இருந்த
வறுமையின் அளவு 2015/2016ல் 52.4 விழுக்காடாகவும் 2019/2021ல் 34.7 விழுக்காடாகவும்
குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும்
யூனியன் பிரதேசங்கள் முழுவதிலும், கோவாவில் வறுமையின் அளவு ஒப்பீட்டளவில் மிக
வேகமாக குறைந்துள்ளது., அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம்,
சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளன என அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் 15 ஆண்டில் 41 கோடி பேர்
வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்ற ஐ.நா.சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பின்
அறிக்கையை பொய்யாக்கியுள்ளது உலகப் பட்டினிக் குறியீட்டுக்கான அறிக்கை.
அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன்
வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும்
நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளன. 121 நாடுகள்
அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில்
101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்குறியீட்டின் மதிப்பு
20.0–34.9 இருப்பது தீவிரமான பட்டினி நிலையைக் குறிக்கிறது. இந்தியாவின் பட்டினிக்
குறியீட்டுக்கான மதிப்பெண் 29.1 என்பதால் இந்தியாவின் பட்டினி நிலை தீவிரமாக உள்ளது.
பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில்
இருக்கின்றன. ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில்
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருக்கிறது. நாட்டில் பட்டினி நெருக்கடி தீவிரமடைந்ததையும்,
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையுமே இது சுட்டிக்
காட்டுகிறது.
உணவு,ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான கூட்டமைப்பின்
தலைமை ஆலோசகர் மற்றும் வழிகாட்டியான பசந்த குமார் கர், " 24 மணி நேரமும் சவலை
குழந்தைகள் மற்றும் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் குறித்து அரசு கவனம் செலுத்த
வேண்டும். இதனுடன், பெண்களிடையே உள்ள குறைபாடுகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்கும்
வகையிலும் குழந்தைகளின் சவலைநிலை, வளர்ச்சி குன்றலைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க
மூலோபாய திட்டமிடல் தேவை." என்று கூறியுள்ளார்.
உணவு பாதுகாப்பு ஆர்வலரும் நிபுணருமான
அஞ்சலி பரத்வாஜ் பேசுகையில், "இன்று நாட்டில் பெரும் நெருக்கடி, குறிப்பாக முறைசாரா
துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது.
பணவீக்கம் குறையவில்லை. எரிபொருள் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து
உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக தினசரி கூலித் தொழிலாளிகள்,
அதிக பணம் மற்றும் சேமிப்பு இல்லாதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை ஊட்டச்சத்து
மற்றும் உணவுப் பாதுகாப்பு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது என்பது தெளிவாகிறது."
ரேஷன் கார்டு இல்லாதவர்கள், தேவையான
ஆவணங்கள் இல்லாததால் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பில் தாமதம் அல்லது பிற காரணத்தால்
திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கும் ஏழைகளில் மிகவும் ஏழ்மையானவர்கள் பசியின்
கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளவர்களுக்கும் பொது விநியோக முறையின்
(PDS) பலன்களை விரிவுபடுத்த அரசு பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின்
தரவரிசை "வருந்தத்தக்கதாக உள்ளது” என்று பாஜக அரசு நிராகரித்தது, " மக்கள்தொகையின்
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்யாத நாடு" என்று நாட்டின்
பிம்பத்தை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதி இது என்று கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட
சமூக மேம்பாட்டு இலக்குகளை (எஸ்டிஜி)வரும் 2030-க்குள் நிறைவேற்ற உள்ளூர்மயமாக்கலின்
இந்திய மாதிரி அவசியம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வலியுறுத்தியுள்ளார்.
17 சமூக மேம்பாட்டு இலக்குகளை வரும் 2030-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள்
சபை கால நிர்ணயம் செய்துள்ளது. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் உணவு, நல்ல ஆரோக்கியம்-
நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர், சுகாதாரம், மலிவான மற்றும்
சுத்தமான எரிசக்தி உள்ளிட்டவை அந்த இலக்குகளில் மிக முக்கியமானதாகும். இந்த இலக்குகளை
அடைய உள்ளூர்மயமாக்கலின் இந்திய மாதிரி மிக அவசியமானவை. எஸ்டிஜி உள்ளூர்மயமாக்கலின்
இந்திய மாதிரி 4 தூண்களைக் கொண்டது. நிறுவன உரிமையை உருவாக்குதல், வலுவான மறுஆய்வு
மற்றும் கண்காணிப்பு அமைப்பை நிறுவுதல், திட்டமிடல் மற்றும் கண்காணிப்பில் எஸ்டிஜி-யை
ஒருங்கிணைப்பதற்கான திறன்களை மேம்படுத்துதல், முழு சமூக அணுகுமுறையை திட்டமிடுதல் ஆகியவை
அந்த நான்கு தூண்கள் ஆகும். சமூக மேம்பாட்டு இலக்கு என்பது சுய-வலுவூட்டும், பொருளாதார,
சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கியவை என அவர் கூறினார்.
உலகப் பட்டினிக் குரியீட்டில்
இந்தியா தரம் தாழ்ந்து 117வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மாதிரியைப் பின்பற்றாதீர்கள்
என்று தான் நியாயமாக சொல்லவேண்டும். இந்திய மாதிரியைப் பின்பற்றினால் உலகின் பட்டினி
நிலை தான் மேலும் அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின்
வருடாந்திர கூட்டத்தின் போது, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள்,
உலகின் முக்கிய பொருளாதாரங்களின் குழுவின் தலைவராக இந்தியாவின் முன்னுரிமைகள்
குறித்து ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு
விளக்கினர். டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை ஒரு வருடத்திற்கு ஜி20
தலைமை பதவியை இந்தியா ஏற்கும். இந்தியா ஜி20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும் போது
பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள், கடன் நிலைமை, காலநிலை நிதி ஆகியவற்றில் கவனம்
செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய விரைவில் விற்பனையாகும்
நுகர்வுப் பொருட்களுக்கான நிறுவனங்களின் இந்திய
துணை நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளில் லாப வளர்ச்சி, வருவாயின் அடிப்படையில் தங்கள்
தாய் நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) அறிக்கை
கூறுகிறது.
பிரிட்டனின் யூனிலீவருக்குச் சொந்தமான
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமும்(HUL), ஜப்பானின் மாருதி சுஸுகியின் ஒரு பிரிவான
மாருதியும் தங்கள் தாய் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க
ஆதரவை வழங்கியுள்ளன. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மதிப்பு $72 பில்லியனாகவும், அதன் தாய்
நிறுவனமான யூனிலீவரின் சந்தை மூலதனத்தில் 62 விழுக்காடாகவும் உள்ளது. அமெரிக்காவைத்
தளமாகக் கொண்ட கோல்கேட்-பால்மோலிவ்; ஜப்பானின் கன்சாய் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் இந்திய
துணை நிறுவனங்களின் வளர்ச்சியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றின் தாய் நிறுவனங்களின்
வளர்ச்சியை மிஞ்சியுள்ளது. பல நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
தமிழ்நாடு:
பாஜக அரசு அரசியல் ரீதியாக ஒன்
சைட் கேம் (One side Game) ஆடுவதைப்போல தெரிகிறது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் முறையிட்டுள்ளார். தற்போது எத்தனையோ திட்டங்களில் பிரதான் மந்திரி என்ற
முற்சேர்க்கையுடன் பெயர் மாற்றுகின்றனர். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த திட்டங்கள்
எல்லாம் ஏற்கெனவே இருந்தது. ஒருவேளை உ.பி., பிஹாரில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால்,
பிரதம மந்திரி என்று திட்டத்திற்கு பெயர் வைக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் 60 %, நீங்கள்
40 % என்று முதல் வருடம் கூறுவார்கள். இரண்டாவது ஆண்டில் நாங்கள் 40 % நீங்கள் 60
%, 3-வது ஆண்டில், நாங்கள் 20 % நீங்கள் 80 % என்று கூறுவார்கள். ஆனால், திட்டத்தின்
பெயர் பிரதம மந்திரி என்று இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். பயிர் காப்பீட்டுத்
திட்டத்தில், மத்திய அரசின் பங்கு வெறும் 25 % மட்டும்தான், ஆனால் மாநில அரசின் பங்கு
75 %. எனவே இதையெல்லாம் ஒரு அரசியலாகத்தான் செய்கின்றனரே தவிர, திட்டமிட்டு மக்கள்
நலனுக்காக செய்வதாக தெரியவில்லை. எல்லா திட்டங்களுக்கும் பிரதம மந்திரி என்று பெயர்
வைத்துவிட்டு, அவர்கள் அளிக்கும் நிதியை குறுக்கிக் கொண்டே போய்விட்டு, மாநில அரசு
தரக்கூடிய நிதியை வைத்து பிரதம மந்திரியை விளம்பரப்படுத்துவது போலவும், பிரச்சாரம்
செய்வது போலவும் மாற்றிக்கொண்டுள்ளனர்" என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மகளிர்
உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு
நிதி நிறுவன தரவுகளை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியதாகவும் இதுவரை மத்திய
அரசு கொடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் கர்நாடக மாநில அரசுக்கு
வருமானவரி தரவுகளை வழங்கியுள்ளனர். அதேபோன்று தமிழகத்துக்கும் கொடுக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தியுள்ளார்.
‘நைப்பர்’ நிறுவனம் மதுரைக்கு
வர இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டுவர வேண்டும் என
வலியுறுத்தியதாகக் கூறிய அவர் அத்திட்ட காலம் முடிந்துவிட்டதாகவும் மதுரையில் எய்ம்ஸ்
மருத்துவமனை வர உள்ள நிலையில், ‘நைமர்’ நிறுவனத்தை மதுரையில் தொடங்கினால் சிறப்பாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு, 50 ஆண்டுகளுக்கு
வட்டி இல்லா கடனாக ரூ.1 லட்சம் கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அத்திட்டத்தில் நிதி கோரி, தமிழக அரசின் பல துறைகள் விண்ணப்பித்திருந்த சூழலில் நேற்று
ரூ.3,500 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில் ஓஎஃப்சி கேபிள் திட்டத்துக்கு
ரூ.184 கோடி, ஊரக நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 263 கோடி வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஜவுளிச்சந்தையை வங்கதேசம்
ஆக்கிரமிக்கிறது. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் இந்திய ஜவுளிச்சந்தைக்கு
பெரும் அபாயத்தை வங்கதேசம் ஏற்படுத்தும். வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு
ஜவுளி இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு திருப்பூர்
ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்து
ரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர்
கூறியதாவது:”பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய பருத்தி விலை
உயர்வை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். பருத்திக்கு உண்டான இறக்குமதி வரியை
நிரந்தரமாக நீக்க வேண்டும். பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்
அல்லது ஏற்றுமதியை குறைக்க வேண்டும். நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிப்பதை
கைவிட்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து மூலப்
பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தொழிலாளர்களை மாதசம்பள
அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு மத்திய அரசு வங்கியின் மூலமாக,
அவசரகால கடன் உதவி வழங்க முன் வர வேண்டும். கரோனா காலகட்டத்தில் எவ்வித
நிபந்தனையுமின்றி, எளிமையான முறையில் மத்திய அரசு வழங்கிய நிதி, சிறு, குறு
மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. பின்னலாடைத்
தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில்
பின் தங்கிய மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தை சிறப்பு ஜவுளி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆடைத் துறையில் சிறு குறு நடுத்தர
நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூரில் உள்ள சிறு குறு நடுத்தர
நிறுவனங்கள் ஏற்றுமதி தொகுப்புகளில் 95 விழுக்காடு வகிப்பதாகவும், கடந்த ஆண்டை விட
கோடை பருவத்துக்கான ஆர்டர்கள் சுமார் 40% குறைந்துள்ளதாக தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் உருக்கு விலை 40%
குறைந்து டன்னுக்கு ரூ.57,000 ஆக உள்ளது. 15% ஏற்றுமதி வரி விதிப்பை அடுத்து,
குறைந்த ஏற்றுமதி ஆர்டர்கள் காரணமாக கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சந்தையில் உருக்கு
விலை சுமார் 40% சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கிக் கடனுக்கான உரிமை ஆவணங்கள்
ஒப்படைப்பு, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு
வந்துள்ளது. தமிழக பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, ‘ஸ்டார்’
மென்பொருள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக
பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வணிக வரி, பத்திரப் பதிவு துறையில்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.20,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர்
மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள்
கவனமாக இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இது
போன்ற கடன் செயலி மோசடி இருந்தால் 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி நாரா சைதன்யா
விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது: கடன் செயலிகள் குறைந்த வருமானம்
கொண்டவர்களைத் தான் குறி வைக்கின்றன. கடன் செயலிகள் ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை
அவசரத்துக்கு கடன் தருகின்றன. இந்த செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும்,
அந்தப் பணத்தை திரும்ப வசூலிக்க கடன் வழங்கும் நிறுவனங்கள் கையாளும் முறைகள் மிகவும்
மோசமானவையாக உள்ளன. ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினால், அதனை குறித்த காலத்துக்குள் பதிவு
கட்டணம், நடைமுறை கட்ட ணம், வட்டி என ரூ. 8,000 சேர்த்து மொத்தம் 18,000 கட்ட வேண்டும்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்
அடிப்படையில் இனிமேல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
"கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது.
புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு 19.10.2022 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி
சென்னை பெருநகர காவல் துறையால் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வால்பாறையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்
கழகத்துக்கு சொந்தமான சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டக் கழகத்தை கைவிட்டு
வனத்துறையிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக
காணப்பட்டதால், அதில் 4,000 ஏக்கர் நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் வனவிலங்கு- மனித மோதல் தொடர்ந்து அதிகரிப்பதால், அங்கு பணிபுரிந்த
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறினர். தற்போது 500-க்கும் குறைவான தொழிலாளர்களே
பணிபுரிந்து வருகின்றனர்.
மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவை
திரும்ப பெறுமாறு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த மாநில எரிசக்தி துறை
அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
வலியுறுத்தினார். எனவே, மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பபெற வேண்டும்
குறைந்த விலையில் மின்சாரத்தை தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்கு சொந்தமான
மின்பகிர்மான நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது
மின்உற்பத்திக்காக தால்சர் சுரங்கத்தில் இருந்து 14 ரேக்குகள் நிலக்கரி மட்டுமே
தமிழக மின்வாரியத்துக்கு அனுப்பப்படுகிறது. எனவே,கூடுதல் ரேக்குகளை வழங்க ரயில்வே
துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மாநில அளவில்
2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலான கணக்கெடுப்பில் படிப்பறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை
85.4 விழுக்காடாகவும் அதில் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிலும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி கற்றோர் விழுக்காடு கடந்த 2011-ல் 80.1 ஆகஇருந்த நிலையில்
2018-19-ல் 85.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு கிராமப்புறங்களில்
65.1-லிருந்து 73.7 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 82.3 –லிருந்து 87.4 விழுக்காடாகவும்
உயர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி பெற்ற பெண்களின் விழுக்காடு 73.4 விழுக்காட்டில் இருந்து
80.2 விழுக்காடாக 2011 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.
இது அனைத்து வயது வரம்புகளிலும்
உள்ள குடும்பங்கள், தனிநபர் அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மாவட்ட அளவிலான
மதிப்பீடுகள், மாநில அளவிலான மதிப்பீடுகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
2.12 லட்சம் குடும்பங்களில் உள்ள 7.45 லட்சம் பேரிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில், தமிழகத்தில் 53% குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், 47% குடும்பங்கள்
நகர்ப்புறங்களிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் 19% குடும்பங்கள்
மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. குடும்பத் தலைவர்களில் 74% பேர் விதவைகள்.
3.56 சதவீதம் பேர் கணவனை பிரிந்து வாழ்பவர்கள். சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி
மாவட்டங்களில் அதிக அளவில் பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.
நில உரிமை
தமிழகத்தில் உள்ள குடும்பங்களில்
19.4% பேர் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-16-ல் 18.6% பேர் வைத்திருந்தது
குறிப்பிடத்தக்கது. அதேபோல், 91 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச்
சொத்துகளை வைத்துள்ளனர். 89 விழுக்காட்டினர் கைபேசி வைத்துள்ளனர். கிராமப்புறங்களில்
உள்ள குடும்பங்களில் 31 விழுக்காட்டினர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர்.
28 விழுக்காடு நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி
ஆகிய மூன்றையும் வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் 90.6% குடும்பங்களும், நகர்ப்புறங்களில்
57.8% குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில்
40.8% உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 61 விழுக்காடும், நகர்ப்புற குடும்பங்களில்
86 விழுக்காடும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளன.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட
சில வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேநேரம், 15 முதல்
24 வயதுக்குட்பட்ட 16 % மக்கள் தொகையில் 3% இளைஞர்கள் எந்த வேலையையும் நாடவில்லை என்பது
தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பில் பெண்களின் எண்ணிக்கையை
மேம்படுத்த வேண்டும். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விவசாய மதிப்புக்கூட்டல் துறையை
சரியாக உபயோகிக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் வீட்டு வசதி முக்கியப் பங்கு வகிப்பதால்,
வீடுகள் கட்டி முடிக்கவும், பழுதுபார்க்கவும், தனிப்பட்ட வீட்டு கழிவறைகளை உபயோகிக்கவும்,
பாதுகாப்பான குடிநீர் போன்றவற்றுக்கு கொள்கை வகுப்பாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 856
கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்த நிலையில்,வெறும் 7
கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் சொற்ப அளவிலான இழப்பீட்டுத் தொகை
வழங்க காப்பீடு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இது தஞ்சை விவசாயிகளுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
2021-22 குளிர்-ராபி பருவத்தில் தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த 1,33,884 விவசாயிகள் 3,50,212 ஏக்கர்
நெல் சாகுபடிசெய்த நிலத்துக்கு ரூ.17.94 கோடிபயிர்க் காப்பீடு பிரீமியம்
செலுத்தியிருந்தனர். இந்நிலையில், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ரூ.480.59 கோடி
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.36 லட்சம் மட்டுமே
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை
நவம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 2% தனி வட்டி கிடையாது என்று சென்னை
மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின்
பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள்,
அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்குவதில்
மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக அக்.12-ம் தேதி கடிதம் வாயிலாக
புதிய உத்தரவை அனுப்பியுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் புதிய உத்தரவு காரணமாக,
விவசாயிகள் குடியிருக்கும் பகுதியை விட்டு பக்கத்து கிராமத்திலோ, அருகிலுள்ள வேறு மாவட்டத்திலோ
சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ சாகுபடி செய்து வரும் நிலம் உள்ள பகுதிகளில் உள்ள கூட்டுறவு
சங்கங்களில் கடன் பெற முடியாமல் அலைகழிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, விவசாயிகளின்
நலன் கருதி, மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அளித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர்
ரத்து செய்து, பழைய முறைப்படியே விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் தெரிவித்துள்ளார்.
உலகம்:
ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங் பரிசு:
2022 ஆம் ஆண்டிற்கான ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங் பரிசு,
இது பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது, அமெரிக்க மத்திய
வங்கியின்-ஃபெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவர் (14-வது) பென் எஸ் பெர்னான்கே-விற்கும்,
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பொருளாதார வல்லுநர்களான டக்ளஸ் டபிள்யூ டயமண்ட் மற்றும்
பிலிப் எச் டிப்விக் ஆகியோருக்கும் வங்கித் துறை மற்றும் நிதி அமைப்பு குறித்த அவர்களின்
பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆராய்ச்சி பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கைப்
பற்றிய புரிதலை குறிப்பாக நிதி நெருக்கடிகளின் போது கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று
நோபல் பரிசு வழங்கும் நிறுவனமான ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.
2009 பொருளாதார நெருக்கடியின்
போது அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக பென் எஸ் பெர்னான்கே பணிபுரிந்தார். பல்வேறு
இடதுசாரி பொருளாதார நிபுணர்களும், ஜனநாயக வளர்ச்சிசார் பொருளாதார நிபுணர்களும் கடன்
அளவு எக்கச்சக்கமாக எகிரியதால் வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியை முன்னரே கணித்து
எச்சரித்தனர். ஆனால் பென் எஸ் பெர்னான்கே வரவிருந்த பொருளாதார நெருக்கடி பற்றி அறிந்திருக்கவில்லை,
எந்த முன் கணிப்பும் செய்யவில்லை. பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதிலும், தூபம்
போட்டதிலும் பென் எஸ் பெர்னான்கே முக்கியப் பங்கு வகித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை
எதிர்பாராத கருப்பு அன்ன நிகழ்வு எனக் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து
பெரும் நிதி நிறுவனங்களை மத்தியவங்கி மக்களின் வரிப்பணத்திலிருந்து மீட்டெடுத்தது.
ஆனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ சிறு உதவி கூட செய்யவில்லை. எஸ் பெர்னான்கே-விற்கு
ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங் பரிசு வழங்கியிருப்பது ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ்
மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி தூண்டப்படுவதை விரும்புகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள்
தங்கள் நாணயங்களை ஆதரிக்க தலையிடுவதால், உலகளாவிய அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக
வீழ்ச்சியடைந்து வருகிறது. 2003 இல் ப்ளூம்பெர்க் அந்நிய செலவாணி குறித்த தரவுகளைத்
தொகுக்கத் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு கையிருப்புகள் சுமார் $1 டிரில்லியன் அல்லது
7.8% குறைந்து $12 டிரில்லியனாகக் குறைந்துள்ளது. சரிவின் ஒரு பகுதி வெறுமனே மதிப்பீட்டு
மாற்றங்களால் ஏற்பட்டது. யூரோ மற்றும் யென் போன்ற மற்ற இருப்பு நாணயங்களுக்கு எதிராக
டாலர் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால், இந்த நாணயங்களின் டாலர் மதிப்பு
வீழ்ந்துள்ளது. ஆனால் குறைந்து வரும் கையிருப்பு நாணயச் சந்தையில் உள்ள அழுத்தத்தையும்
பிரதிபலிக்கிறது.
சமீபத்திய தரவுகளின் படி தெற்காசியாவிற்கான
ஏற்றுமதிகள் ஆகஸ்ட் மாதத்தில் அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து 10.5% குறுக்கமடைந்து,
$2.1 பில்லியனாக உள்ளது. வங்காளதேசத்திற்கான ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 22.7% குறைந்து
$0.89 பில்லியனாக இருந்தது.
பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் முக்கிய
சந்தைகள் அந்நியச் செலாவணி நெருக்கடிகளை அடுத்து முக்கியமாக அத்தியாவசியப்
பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்யக் கட்டுப்படுத்தப்பட்டதால் தெற்காசிய
நாடுகளுக்கான ஏற்றுமதிகள் இந்த நிதியாண்டில் குறைந்துள்ளன.
ஐக்கிய முடியரசின் பொருளாதாரம்
ஆகஸ்ட் மாதத்தில் 0.3 விழுக்காடாக இருந்ததால் இங்கிலாந்து பொருளாதாரம் மந்தநிலையின்
விளிம்பில் உள்ளதாக பொருளாதார நிபுணர்களிடம் செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில்
தெரியவந்துள்ளது.
இதுவரை இல்லாத மோசமான பொருளாதார
நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் பணவீக்கம் ஆகஸ்டில் 70.2% ஆக உயர்ந்துள்ளது. அலுவலகத்
தரவுகளின்படி, உணவு விலைகள் 84.6 % உயர்ந்துள்ளன, ஜூலை மாதத்தில் 82.5% உயர்வு காணப்பட்டது.
மாதந்தோறும் அளவிடப்பட்ட விலை மாற்றங்கள் ஜூலையில் 4.6 விழுக்காடாக இருந்தது 1.7 விழுக்காடாகக்
குறைந்துள்ளது.
உலக வங்கி வணிக சூழ்நிலை
(business climate study) ஆய்வைத் தொடங்க உள்ளது. எளிதாக வணிகம் செய்வது குறித்த அறிக்கைக்கு
மாற்றான இந்தப் புதிய தொடரின், முதல் அறிக்கை
2024 ஏப்ரலில் வெளியிடப்படும். சீனா மற்றும் சவூதி அரேபியா உட்பட நான்கு நாடுகளை உள்ளடக்கிய
தரவுகள் திரிக்கப்பட்டதை அடுத்து, எளிதாக வணிகம் செய்வதற்கான தொடர் 2021 செப்டம்பரில்
நிறுத்தப்பட்டது. எளிதாக வணிகம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய அறிக்கையை நிறுத்திய
ஒரு வருடத்திற்குப் பிறகு, உலக வங்கி பல்வேறு நாடுகளின் வணிகச் சூழலை அளவிட புதிய அமைப்பைத்
தொடங்க திட்டமிட்டுள்ளது. புதிய “வணிகத்தை செயல்படுத்துவதற்கான சூழல்” (Business
Enabling Environment-BEE) திட்டத்தின் முதல் அறிக்கை ஏப்ரல் 2024 இல் வெளியிடப்படும்.
இருப்பினும், இந்தப் புதிய அறிக்கை, அதன் முதல் பதிப்பில் 40-50 நாடுகளை மட்டுமே உள்ளடக்கப்படும். "இரண்டாவது அறிக்கையில் மேலும் 40-50 நாடுகள்
சேர்க்கப்படும், மூன்றாவது அறிக்கையில் 120-150 நாடுகள் உள்ளடக்கப்படும். 2020ஆம் ஆண்டின்
எளிதாக வணிகம் செய்வதற்கான உலக வங்கியின் கடைசி அறிக்கை 190 நாடுகளை தரவரிசைப்படுத்தியது.
அமெரிக்கப் பொருளாதாரம் இரண்டு
காலாண்டுகளில் பொருளாதாரக் குறுக்கம், உயர் பணவீக்கம், உயர் வட்டி விகிதங்களை கடந்து
ஜூலை முதல் செப்டம்பர் வரை எதிர்பார்த்ததை விட 2.6 % வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின்
மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பின் சமீபத்திய அறிக்கை பொருளாதார மீட்சியை சுட்டிக்காட்டுகிறது
என்றும்,பொருளாதார மந்தநிலை தற்போது சாத்தியமில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின்
பொருளாதார ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின்
தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உலகப் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் கணிக்கக்கூடிய
உலகத்திலிருந்து அதிக நிச்சயமற்ற நிலைக்கு நகர்கிறது என்று கூறியுள்ளார்.