Monday, October 10, 2022

பொருளாதார அறிஞர் எரிக் டுசாண் எழுதிய “உலக வங்கி ஒரு முக்கிய அரிச்சுவடி” – “The World Bank: a Critical Primer Eric Toussaint” புத்தகத்தின் சாரம் (3):

 


1950கள் மற்றும் 1960களில் உலக வங்கி காலனித்துவ சக்திகளுக்கு தொடர்ந்து கடன்களை வழங்கியது. காலனி நாடுகளின் இயற்கை வளங்கள், மக்களின் மீதான சுரண்டலை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்தவே ஆதரவளித்தது.

உலக வங்கி மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீறி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு அவற்றின் காலனிகளில் நிதிக் திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்கியது. இந்தக் கடன்கள் காலனித்துவ சக்திகள் காலனி நாடுகளில் இருந்த மக்கள் மீது ஆதிக்கத்தை வலுப்படுத்த உதவின. அந்நாடுகளிலிருந்து காலனித்துவ நாடுகளுக்கு கனிமங்கள், விவசாய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கப்பட்டது.

பெல்ஜிய காங்கோவில், பெல்ஜியத்தால் நிர்ணயிக்கப்பட்டத் திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட கடன் கிட்டத்தட்ட முழுவதுமாக பெல்ஜியத்திலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காகக் காங்கோவின் காலனித்துவ நிர்வாகத்தால் செலவிடப்பட்டது. பெல்ஜிய காங்கோ மொத்தமாக $120 மில்லியன் கடன் பெற்றதில் $105.4 மில்லியன் பெல்ஜியத்திற்கு செலுத்தப்பட்டது.

1973இல் சிலியில் பினோசேயின் சர்வாதிகாரத்திலும், 1972இல் ஃபிலிப்பைன்ஸில் ஃபெர்டினாண்ட் மார்கோஸின் சர்வாதிகாரத்திலும், செயல்படுத்தப்பட்ட புதிய தாராளமயம் படிப்படியாக உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ஆட்சிகளும் உலக வங்கியால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டன. அத்தகைய ஆட்சிகள் இறுதியில் வீழ்த்தப்பட்டு ஜனநாயக ஆட்சிகள் பொறுப்பேற்றுக் கொண்ட போது அவற்றை முன்னாள் சர்வாதிகார அரசுகள் ஒப்பந்தம் செய்த கடன்களை திருப்பி செலுத்துமாறு உலக வங்கி கட்டாயப்படுத்தியது. உலக வங்கியின் நிதியுதவியும், சர்வாதிகார ஆட்சிகளுக்கான ஆதரவும் அந்நாடுகளின் மக்கள் மீதான பெருஞ்சுமையாக மாறியது. மக்களை ஒடுக்குவதற்கு ஆயுதங்கள் வாங்க சர்வாதிகாரிகள் பெற்றக் கடன்களை மக்களே திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது.

உலக வங்கியின் நிர்வாகம் முற்றிலும் பொருளாதார அடிப்படையில் கடன்களை ஒதுக்கீடு செய்வதை அல்லது ஒதுக்கீடு செய்யாததை நியாயப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலான தலையீடுகளின் அடிப்படையிலே கடன்களை வழங்குவதற்கான கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

ரொனால்ட் ரீகன் இராணுவ ஆயுதங்கள் விற்பனையை அடிப்படையயாகக் கொண்ட இருதரப்பு நிதிக்கு ஆதரவாக சர்வதேச வளர்ச்சி முகமையின் பலதரப்பு நிதியையும், அதில் அமெரிக்காவின் பங்களிப்பையும் கடுமையாகக் குறைப்பதற்கு முன்மொழிந்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆகியவற்றின் நலன்களுக்குப் பணிந்து சர்வாதிகார ஆட்சிகளை ஆதரிப்பதே உலக வங்கியின் நடத்தையின் நிலையான கூறுகளாக இருந்தன. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் இருந்து பிற மில்லியன் கணக்கான பழங்குடியின மக்களை தீவுக்கூட்டத்தின் தீவுகளிலிருந்து வெளியேற்ற உலக வங்கி ஆதரவளித்தது.

பெரும் முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம்/ஆட்சிக்கு சவால் விடும் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலே உலக வங்கி செயல்பட்டது. அதே நேரத்தில் சிலி, பிரேசில், நிகரகுவா, காங்கோ, கின்ஷாசா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு உலக வங்கி நிதி ஆதரவு அளித்துள்ளது.

1970களில் இருந்து, அமெரிக்க தயாரிப்புகளுக்குப் போட்டியாக பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்குக் கடன் வழங்குவதை அமெரிக்கா தடுத்தது. பாமாயில், சிட்ரஸ் பழங்கள், சர்க்கரை உற்பத்திக்கு வழங்கப்படும் கடன்களை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்தது.

1987இல், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உருக்கு உற்பத்தித் தொழிலுக்கு உலக வங்கி வழங்கிய கடன்களை அமெரிக்கா வெகுவாகக் குறைத்தது. அதே போல் பிரேசில், மெக்சிகோ, சீனாவில் உருக்கு உற்பத்திக்கும் சிலியில் செப்பு உற்பத்திக்கும் உலக வங்கி கடன் வழங்குவதையும் தடுத்தது.

1950 களின் முற்பகுதியில், உலக வங்கி ஒரு வலையமைப்பை நிறுவியது. அதன் மூலம் பிற்காலத்தில் பெரிதும் பயனடைந்துள்ளது. மூன்றாவது உலகில், அதன் சேவைகளுக்கான தேவையை உருவாக்க உலக வங்கி முயன்றது. உலக வங்கியின் இன்றைய செல்வாக்கு அன்று வாடிக்கையாளர்களாக, கடனாளிகளான வெவ்வேறு நாடுகளில் முகமை அமைப்புகளின் மூலம் அது கட்டமைத்த வலையமைப்பின் மூலமே ஏற்பட்டுள்ளது.

1950களில் இருந்து, 'அமைப்புக் கட்டமைப்பே’ உலக வங்கிக் கொள்கையின் முதன்மை இலக்குகளில் ஒன்றாக இருந்தது. இது பெரும்பாலும் அரசின் தலையீடு இல்லாத தன்னிச்சையான அமைப்புகள் உருவாக்குவதைக் குறிக்கிறது. கடனாளி நாடுகளில் அரசுக்கிணையான ஒப்பீட்டளவில் நிதி ரீதியாக அரசு சாராது சுயேச்சையாக செயல்படும் அமைப்புகளை உருவாக்கியது. இவை உள்ளூர் அரசியல்வாதிகள், தேசிய நாடாளுமன்றங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே செயல்பட்டன. இவற்றிற்கு உலக வங்கி பெரிதும் கடன்பட்டுள்ளது, சில சமயங்களில் நிதி அடிப்படையிலும் கூட.

மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் கால் பதிக்க அத்தகைய நிறுவனங்களை நிறுவுவது தான் உலக வங்கியின் முதன்மையான உத்திகளில் ஒன்றாக இருந்தது. இந்த முகமை அமைப்புகள், அவற்றின் சொந்த விதிகளின்படி செயல்படுகின்றன (பெரும்பாலும் உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை). உலக வங்கியின் ஆதரவுடன் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் உலக வங்கியின் தேவைகளுக்கான (சாத்தியமான' கடன் திட்டங்கள்) நிலையான மற்றும் நம்பகமான ஆதாரம் உருவாக்கப்பட்டது. ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் திறந்த விவாதங்கள் இல்லாமல் தேசிய பொருளாதாரங்கள், மற்றும் சமூகங்கள் முழுவதையும் மாற்றுவதற்கான இணையான சக்தி தளங்களை அது உருவாக்கியது.

புதுத் தாராளியக் கொள்கைகளையும் தனியார்மயத்தையும் செயல்படுத்தும் கருவியாகவே உலக வங்கி செயல்பட்டது.

உலக வங்கி பலத்  துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் உதவியுடனே தனியார்மயத்தையும் புதுத்தாராளியக் கொள்கைகளையும் உலக வங்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு நாட்டின் தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளை தனியார்மயமாக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே உலக வங்கி கடனை வழங்குகிறது. இதன் விளைவாக, உலகவங்கியின் கிளை அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC) ஒரு பங்குதாரராக உள்ள தனியார் கூட்டமைப்புக்கு பொது நிறுவனங்கள் விற்கப்படுகின்றன.

உலக வங்கியின் துணை நிறுவனங்கள் பின்வருமாறு  -

i)         சர்வதேச நிதி நிறுவனம் (IFC);

ii)        பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA);

iii)       முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் (ICSID)

இந்த அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து இறுக்கமான ஒரு வலையமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 (1) தனியார்மயத்தை செயல்படுத்தவும், நிதியுதவி அளிக்கவும் உலக வங்கி துணைபுரிகிறது.

(2) தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய சர்வதேச நிதி நிறுவனம் துணை செய்கிறது (IFC);

(3) நிறுவனத்திற்கான நிதி உத்தரவாதத்தை பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) அளிக்கிறது.

(4) முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் (ICSID) நிறுவனங்களின் தகராறுகளைத் தீர்க்க உதவி செய்கிறது. இவ்வாறு அவை இறுக்கமான கண்ணி வலையை நெய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன.

2004-05 இல் பொலிவியாவில் எல் ஆல்டோவில் (பொலிவியா) இந்தக் கட்டமைப்பின் மூலம் தான் தனியார்மயம் அரங்கேற்றப்பட்டது. இதனால் உலகளவில் அனைத்து நிலைகளிலும் எல்லா தரப்பிலும் உலக வங்கி குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையை நாம் அடைந்துள்ளோம்.

உதாரணமாக உலக வங்கி ஒரு நாட்டின் அரசிற்கு அதன் நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை தனியார்மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் வழங்குகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனம் உலக வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதி நிறுவனத்தை (IFC ) பங்குதாரராகக் கொண்ட தனியார் கூட்டமைப்புக்கு விற்கப்படுகிறது. தனியார்மயமாக்கத்தால் உயர்ந்த கட்டணங்களாலும், சேவைகளின் தரநிலை தாழ்வாலும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசு நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தில் (ICSID (ICSID) வழக்கு தொடுக்கிறது. நீதிபதி அமர்வின் இரு தரப்பிலும் வங்கியின் ஆட்களே உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு மட்டத்திலும் உலக வங்கிக் குழு இருக்கும் நிலை வந்துவிட்டது

உலக வங்கி - புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD) மற்றும் சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பின் (IDA) மூலம் தனியார்மயம் திணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) மூலம் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நிறுவனத்திற்கு அரசியல் அபாயங்களுக்கு எதிரான உத்தரவாதங்களை பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) வழங்குகிறது. மேலும் முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தின் (ICSID)  மூலம் வர்த்தக சர்ச்சைகளுக்குத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

வாஷிங்டன் ஒருமித்த கருத்தின் (Washington consensus) மூலமே புதுத் தாராளியக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. வாஷிங்டன் ஒருமித்த கருத்தின் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் அதன் மறைக்கப்பட்ட பதிப்பிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

அதிகார நிகழ்ச்சி நிரல் வளர்ச்சியையும், இலவசத் தகவல் தொடர்பு மூலம் சந்தை சக்திகளின் தடையற்ற வர்த்தகத்தையும், அரசின் வரையறுக்கப்பட்ட தலையீட்டின் மூலம் வறுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் (வெளியே உண்மையில் செயல்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரல்) பொது மற்றும் தனியார் துறைகளை முதலாளித்துவ அதிகபட்ச லாபத்தின் தர்க்கத்திற்கு காவுகொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய நிகழ்ச்சி நிரல் வறுமையைக் குறைப்பது இல்லை. வறுமையை மறுவுற்பத்தி செய்து ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலைந்து, தேக்கநிலை அடைவதற்கு காரணமாக உள்ளது மறுபுறம் செல்வ செழிப்பு குவிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது.

உலக வங்கியின் முதல் 17 வருட செயல்பாட்டில், பள்ளி, சுகாதாரப் பிரிவு, வடிகால் அமைப்பு அல்லது குடிநீர் திட்டம் போன்ற எந்தவொருத் திட்டத்திற்கும் கடனளிக்கவே இல்லை. 1962 வரை ஒரு பள்ளிக்குக் கூட உலகவங்கியால் கடனளிக்கப்படவில்லை.

அதன் கடன் கொள்கையைப் பொறுத்தவரை, அரசியலமைப்பின் நான்காவது பிரிவின் அடிப்படையில் சமூகப் பரிமாணத்தைத் தழுவிய செல்வத்தின் மறுபங்கீடு, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல் போன்ற எந்தவொரு திட்டத்திற்கும் உலக வங்கி எதுவும் செய்யவில்லை

சுகாதாரம், கல்வி மற்றும் குடிநீர் வழங்குவது போன்றத் திட்டங்களை, 1960களில் மற்றும் 1970களில் தான் மிகுந்த கவனத்திற்குப் பிறகு உலகவங்கி ஆதரித்தது.

உலக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட திட்டங்களை பகுப்பாய்வு செய்தால் ஒரு சில விதிவிலக்குகளுடன், உலக வங்கி வளரும் நாடுகளின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட தொழில்துறை திட்டங்களை ஆதரிப்பதை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரியும். ஏனெனில் அது மிகவும் தொழில்மயமான நாடுகளில் இருந்து அந்நாடுகள் பெறும் இறக்குமதியை குறைக்கும். ஒரு சில மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள், உண்மையான பேர சக்தியுடைய நாடுகள் இதற்கு விதிவிலக்கு அதில் இந்தியாவும் ஒன்று.

உலக வங்கியின் நிர்வாகக் குழுவின் அரசியல்-பொருளாதார சார்புகளிலிருந்து விலகி வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களைக் கண்டறிய ஆல்டன் டபிள்யூ. கிளாஸன் தலைமையில் அதிகார பூர்வமாக உளவு பார்க்கும் முறை அமைக்கப்பட்டது என உலக வங்கி குறித்த வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

1983 மற்றும் 1986 க்கு இடையில், உலக வங்கியின் பொருளாதாரத் துறையில், அதிகாரப் பூர்வ நடைமுறைகளில் வேறுபடும் பணியாளர்களைக் கண்டறிய ஒரு 'உளவுத்துறை' அமைப்பு செயல்படுவதாகவும் ஊழியர்களை பொருளாதார சிந்தனைப் பள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தி வெளிப்படையாக 'விசுவாசமானவர்களுக்கு' ஆதரவளிப்பதாகவும் உலக வங்கியின் பணியாளர் துறை அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர்களிடம் தெரிவித்தது. மேலும் வளைந்து கொடுக்கும் பணியாளர்களைப் பெற உலக வங்கி குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துகிறது.

அன்னே க்ரூகர் உலக வங்கியின் துணைத் தலைவராகவும், தலைமைப் பொருளாதார நிபுணராகவும் இருந்த காலத்தில், ஆராய்ச்சித் துறையின் மேலாண்மை மட்டத்தில் உள்ள 37 ஆராய்ச்சியாளர்களில் 29 பேர் 1983 மற்றும் 1986 க்கு இடையில் வெளியேறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பதவிகள் சேவைகளில் யாரும் சேர விரும்பாததால் பணியிடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...