Monday, October 10, 2022

பொருளாதார அறிஞர் எரிக் டுசாண் எழுதிய “உலக வங்கி ஒரு முக்கிய அரிச்சுவடி” – “The World Bank: a Critical Primer Eric Toussaint” புத்தகத்தின் சாரம் (3):

 


1950கள் மற்றும் 1960களில் உலக வங்கி காலனித்துவ சக்திகளுக்கு தொடர்ந்து கடன்களை வழங்கியது. காலனி நாடுகளின் இயற்கை வளங்கள், மக்களின் மீதான சுரண்டலை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்தவே ஆதரவளித்தது.

உலக வங்கி மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீறி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு அவற்றின் காலனிகளில் நிதிக் திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்கியது. இந்தக் கடன்கள் காலனித்துவ சக்திகள் காலனி நாடுகளில் இருந்த மக்கள் மீது ஆதிக்கத்தை வலுப்படுத்த உதவின. அந்நாடுகளிலிருந்து காலனித்துவ நாடுகளுக்கு கனிமங்கள், விவசாய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கப்பட்டது.

பெல்ஜிய காங்கோவில், பெல்ஜியத்தால் நிர்ணயிக்கப்பட்டத் திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட கடன் கிட்டத்தட்ட முழுவதுமாக பெல்ஜியத்திலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காகக் காங்கோவின் காலனித்துவ நிர்வாகத்தால் செலவிடப்பட்டது. பெல்ஜிய காங்கோ மொத்தமாக $120 மில்லியன் கடன் பெற்றதில் $105.4 மில்லியன் பெல்ஜியத்திற்கு செலுத்தப்பட்டது.

1973இல் சிலியில் பினோசேயின் சர்வாதிகாரத்திலும், 1972இல் ஃபிலிப்பைன்ஸில் ஃபெர்டினாண்ட் மார்கோஸின் சர்வாதிகாரத்திலும், செயல்படுத்தப்பட்ட புதிய தாராளமயம் படிப்படியாக உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ஆட்சிகளும் உலக வங்கியால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டன. அத்தகைய ஆட்சிகள் இறுதியில் வீழ்த்தப்பட்டு ஜனநாயக ஆட்சிகள் பொறுப்பேற்றுக் கொண்ட போது அவற்றை முன்னாள் சர்வாதிகார அரசுகள் ஒப்பந்தம் செய்த கடன்களை திருப்பி செலுத்துமாறு உலக வங்கி கட்டாயப்படுத்தியது. உலக வங்கியின் நிதியுதவியும், சர்வாதிகார ஆட்சிகளுக்கான ஆதரவும் அந்நாடுகளின் மக்கள் மீதான பெருஞ்சுமையாக மாறியது. மக்களை ஒடுக்குவதற்கு ஆயுதங்கள் வாங்க சர்வாதிகாரிகள் பெற்றக் கடன்களை மக்களே திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது.

உலக வங்கியின் நிர்வாகம் முற்றிலும் பொருளாதார அடிப்படையில் கடன்களை ஒதுக்கீடு செய்வதை அல்லது ஒதுக்கீடு செய்யாததை நியாயப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலான தலையீடுகளின் அடிப்படையிலே கடன்களை வழங்குவதற்கான கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

ரொனால்ட் ரீகன் இராணுவ ஆயுதங்கள் விற்பனையை அடிப்படையயாகக் கொண்ட இருதரப்பு நிதிக்கு ஆதரவாக சர்வதேச வளர்ச்சி முகமையின் பலதரப்பு நிதியையும், அதில் அமெரிக்காவின் பங்களிப்பையும் கடுமையாகக் குறைப்பதற்கு முன்மொழிந்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆகியவற்றின் நலன்களுக்குப் பணிந்து சர்வாதிகார ஆட்சிகளை ஆதரிப்பதே உலக வங்கியின் நடத்தையின் நிலையான கூறுகளாக இருந்தன. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் இருந்து பிற மில்லியன் கணக்கான பழங்குடியின மக்களை தீவுக்கூட்டத்தின் தீவுகளிலிருந்து வெளியேற்ற உலக வங்கி ஆதரவளித்தது.

பெரும் முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கம்/ஆட்சிக்கு சவால் விடும் இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலே உலக வங்கி செயல்பட்டது. அதே நேரத்தில் சிலி, பிரேசில், நிகரகுவா, காங்கோ, கின்ஷாசா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு உலக வங்கி நிதி ஆதரவு அளித்துள்ளது.

1970களில் இருந்து, அமெரிக்க தயாரிப்புகளுக்குப் போட்டியாக பிற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்குக் கடன் வழங்குவதை அமெரிக்கா தடுத்தது. பாமாயில், சிட்ரஸ் பழங்கள், சர்க்கரை உற்பத்திக்கு வழங்கப்படும் கடன்களை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்தது.

1987இல், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உருக்கு உற்பத்தித் தொழிலுக்கு உலக வங்கி வழங்கிய கடன்களை அமெரிக்கா வெகுவாகக் குறைத்தது. அதே போல் பிரேசில், மெக்சிகோ, சீனாவில் உருக்கு உற்பத்திக்கும் சிலியில் செப்பு உற்பத்திக்கும் உலக வங்கி கடன் வழங்குவதையும் தடுத்தது.

1950 களின் முற்பகுதியில், உலக வங்கி ஒரு வலையமைப்பை நிறுவியது. அதன் மூலம் பிற்காலத்தில் பெரிதும் பயனடைந்துள்ளது. மூன்றாவது உலகில், அதன் சேவைகளுக்கான தேவையை உருவாக்க உலக வங்கி முயன்றது. உலக வங்கியின் இன்றைய செல்வாக்கு அன்று வாடிக்கையாளர்களாக, கடனாளிகளான வெவ்வேறு நாடுகளில் முகமை அமைப்புகளின் மூலம் அது கட்டமைத்த வலையமைப்பின் மூலமே ஏற்பட்டுள்ளது.

1950களில் இருந்து, 'அமைப்புக் கட்டமைப்பே’ உலக வங்கிக் கொள்கையின் முதன்மை இலக்குகளில் ஒன்றாக இருந்தது. இது பெரும்பாலும் அரசின் தலையீடு இல்லாத தன்னிச்சையான அமைப்புகள் உருவாக்குவதைக் குறிக்கிறது. கடனாளி நாடுகளில் அரசுக்கிணையான ஒப்பீட்டளவில் நிதி ரீதியாக அரசு சாராது சுயேச்சையாக செயல்படும் அமைப்புகளை உருவாக்கியது. இவை உள்ளூர் அரசியல்வாதிகள், தேசிய நாடாளுமன்றங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே செயல்பட்டன. இவற்றிற்கு உலக வங்கி பெரிதும் கடன்பட்டுள்ளது, சில சமயங்களில் நிதி அடிப்படையிலும் கூட.

மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் கால் பதிக்க அத்தகைய நிறுவனங்களை நிறுவுவது தான் உலக வங்கியின் முதன்மையான உத்திகளில் ஒன்றாக இருந்தது. இந்த முகமை அமைப்புகள், அவற்றின் சொந்த விதிகளின்படி செயல்படுகின்றன (பெரும்பாலும் உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை). உலக வங்கியின் ஆதரவுடன் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் உலக வங்கியின் தேவைகளுக்கான (சாத்தியமான' கடன் திட்டங்கள்) நிலையான மற்றும் நம்பகமான ஆதாரம் உருவாக்கப்பட்டது. ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் திறந்த விவாதங்கள் இல்லாமல் தேசிய பொருளாதாரங்கள், மற்றும் சமூகங்கள் முழுவதையும் மாற்றுவதற்கான இணையான சக்தி தளங்களை அது உருவாக்கியது.

புதுத் தாராளியக் கொள்கைகளையும் தனியார்மயத்தையும் செயல்படுத்தும் கருவியாகவே உலக வங்கி செயல்பட்டது.

உலக வங்கி பலத்  துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் உதவியுடனே தனியார்மயத்தையும் புதுத்தாராளியக் கொள்கைகளையும் உலக வங்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு நாட்டின் தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளை தனியார்மயமாக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே உலக வங்கி கடனை வழங்குகிறது. இதன் விளைவாக, உலகவங்கியின் கிளை அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC) ஒரு பங்குதாரராக உள்ள தனியார் கூட்டமைப்புக்கு பொது நிறுவனங்கள் விற்கப்படுகின்றன.

உலக வங்கியின் துணை நிறுவனங்கள் பின்வருமாறு  -

i)         சர்வதேச நிதி நிறுவனம் (IFC);

ii)        பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA);

iii)       முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் (ICSID)

இந்த அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து இறுக்கமான ஒரு வலையமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 (1) தனியார்மயத்தை செயல்படுத்தவும், நிதியுதவி அளிக்கவும் உலக வங்கி துணைபுரிகிறது.

(2) தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய சர்வதேச நிதி நிறுவனம் துணை செய்கிறது (IFC);

(3) நிறுவனத்திற்கான நிதி உத்தரவாதத்தை பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) அளிக்கிறது.

(4) முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் (ICSID) நிறுவனங்களின் தகராறுகளைத் தீர்க்க உதவி செய்கிறது. இவ்வாறு அவை இறுக்கமான கண்ணி வலையை நெய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன.

2004-05 இல் பொலிவியாவில் எல் ஆல்டோவில் (பொலிவியா) இந்தக் கட்டமைப்பின் மூலம் தான் தனியார்மயம் அரங்கேற்றப்பட்டது. இதனால் உலகளவில் அனைத்து நிலைகளிலும் எல்லா தரப்பிலும் உலக வங்கி குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையை நாம் அடைந்துள்ளோம்.

உதாரணமாக உலக வங்கி ஒரு நாட்டின் அரசிற்கு அதன் நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை தனியார்மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் வழங்குகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனம் உலக வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதி நிறுவனத்தை (IFC ) பங்குதாரராகக் கொண்ட தனியார் கூட்டமைப்புக்கு விற்கப்படுகிறது. தனியார்மயமாக்கத்தால் உயர்ந்த கட்டணங்களாலும், சேவைகளின் தரநிலை தாழ்வாலும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசு நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தில் (ICSID (ICSID) வழக்கு தொடுக்கிறது. நீதிபதி அமர்வின் இரு தரப்பிலும் வங்கியின் ஆட்களே உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு மட்டத்திலும் உலக வங்கிக் குழு இருக்கும் நிலை வந்துவிட்டது

உலக வங்கி - புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD) மற்றும் சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பின் (IDA) மூலம் தனியார்மயம் திணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) மூலம் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நிறுவனத்திற்கு அரசியல் அபாயங்களுக்கு எதிரான உத்தரவாதங்களை பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA) வழங்குகிறது. மேலும் முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையத்தின் (ICSID)  மூலம் வர்த்தக சர்ச்சைகளுக்குத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

வாஷிங்டன் ஒருமித்த கருத்தின் (Washington consensus) மூலமே புதுத் தாராளியக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. வாஷிங்டன் ஒருமித்த கருத்தின் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கும் அதன் மறைக்கப்பட்ட பதிப்பிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

அதிகார நிகழ்ச்சி நிரல் வளர்ச்சியையும், இலவசத் தகவல் தொடர்பு மூலம் சந்தை சக்திகளின் தடையற்ற வர்த்தகத்தையும், அரசின் வரையறுக்கப்பட்ட தலையீட்டின் மூலம் வறுமையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் (வெளியே உண்மையில் செயல்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரல்) பொது மற்றும் தனியார் துறைகளை முதலாளித்துவ அதிகபட்ச லாபத்தின் தர்க்கத்திற்கு காவுகொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய நிகழ்ச்சி நிரல் வறுமையைக் குறைப்பது இல்லை. வறுமையை மறுவுற்பத்தி செய்து ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலைந்து, தேக்கநிலை அடைவதற்கு காரணமாக உள்ளது மறுபுறம் செல்வ செழிப்பு குவிக்கப்படுவதற்கும் காரணமாக உள்ளது.

உலக வங்கியின் முதல் 17 வருட செயல்பாட்டில், பள்ளி, சுகாதாரப் பிரிவு, வடிகால் அமைப்பு அல்லது குடிநீர் திட்டம் போன்ற எந்தவொருத் திட்டத்திற்கும் கடனளிக்கவே இல்லை. 1962 வரை ஒரு பள்ளிக்குக் கூட உலகவங்கியால் கடனளிக்கப்படவில்லை.

அதன் கடன் கொள்கையைப் பொறுத்தவரை, அரசியலமைப்பின் நான்காவது பிரிவின் அடிப்படையில் சமூகப் பரிமாணத்தைத் தழுவிய செல்வத்தின் மறுபங்கீடு, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல் போன்ற எந்தவொரு திட்டத்திற்கும் உலக வங்கி எதுவும் செய்யவில்லை

சுகாதாரம், கல்வி மற்றும் குடிநீர் வழங்குவது போன்றத் திட்டங்களை, 1960களில் மற்றும் 1970களில் தான் மிகுந்த கவனத்திற்குப் பிறகு உலகவங்கி ஆதரித்தது.

உலக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட திட்டங்களை பகுப்பாய்வு செய்தால் ஒரு சில விதிவிலக்குகளுடன், உலக வங்கி வளரும் நாடுகளின் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட தொழில்துறை திட்டங்களை ஆதரிப்பதை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரியும். ஏனெனில் அது மிகவும் தொழில்மயமான நாடுகளில் இருந்து அந்நாடுகள் பெறும் இறக்குமதியை குறைக்கும். ஒரு சில மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள், உண்மையான பேர சக்தியுடைய நாடுகள் இதற்கு விதிவிலக்கு அதில் இந்தியாவும் ஒன்று.

உலக வங்கியின் நிர்வாகக் குழுவின் அரசியல்-பொருளாதார சார்புகளிலிருந்து விலகி வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களைக் கண்டறிய ஆல்டன் டபிள்யூ. கிளாஸன் தலைமையில் அதிகார பூர்வமாக உளவு பார்க்கும் முறை அமைக்கப்பட்டது என உலக வங்கி குறித்த வரலாற்றாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

1983 மற்றும் 1986 க்கு இடையில், உலக வங்கியின் பொருளாதாரத் துறையில், அதிகாரப் பூர்வ நடைமுறைகளில் வேறுபடும் பணியாளர்களைக் கண்டறிய ஒரு 'உளவுத்துறை' அமைப்பு செயல்படுவதாகவும் ஊழியர்களை பொருளாதார சிந்தனைப் பள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தி வெளிப்படையாக 'விசுவாசமானவர்களுக்கு' ஆதரவளிப்பதாகவும் உலக வங்கியின் பணியாளர் துறை அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர்களிடம் தெரிவித்தது. மேலும் வளைந்து கொடுக்கும் பணியாளர்களைப் பெற உலக வங்கி குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துகிறது.

அன்னே க்ரூகர் உலக வங்கியின் துணைத் தலைவராகவும், தலைமைப் பொருளாதார நிபுணராகவும் இருந்த காலத்தில், ஆராய்ச்சித் துறையின் மேலாண்மை மட்டத்தில் உள்ள 37 ஆராய்ச்சியாளர்களில் 29 பேர் 1983 மற்றும் 1986 க்கு இடையில் வெளியேறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பதவிகள் சேவைகளில் யாரும் சேர விரும்பாததால் பணியிடங்கள் காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

Tuesday, October 4, 2022

நமது பொருளாதாரம்:

 

முன்னதாகவே உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்திருக்க முடியும், ஆனால் சோசலிசத்தின் இறக்குமதி செய்யப்பட்ட தத்துவத்தையும் மையப்படுத்திய திட்டமிடலையும் சார்ந்திருந்ததால் அது இயலவில்லை என்று நிதியமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 2008 பொருளாதார நெருக்கடியால் இந்தியா மற்ற நாடுகளைப் போல் பாதிக்கப்படாததற்குக் காரணம் சுதந்திரத்தின் போது கட்டமைக்கப்பட்ட பொதுத்துறை அமைப்புகள் தான். சோவியத் ரஷ்யா தற்சார்பு பொருளாதாரத்தையே முன்னிறுத்தியது. தேவையற்ற இறக்குமதிகளை, தத்துவம் உட்பட, அது ஆதரிக்கவில்லை. தற்சார்பு பொருளாதாரம், பொருளாதார விடுதலைக்கான தேவைகள் இம்மண்ணிலிருந்தே பிறக்கிறதே தவிர வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. அது தெரியாதது போல் பாசாங்கு செய்யும் பாஜக ஆத்மநிர்பர் என்ற போர்வையில் நாட்டையே கூறு போட்டு விற்கிறது.

ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் புதிய அறிக்கை, கிராமப்புறங்களில் தொழிலாளர் சந்தையில் 100 % அளவிலும் மற்றும் நகர்ப்புறங்களில் 98 % அளவிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சமத்துவமின்மைக்கு பாலினப் பாகுபாடே காரணம் எனக் கூறுகிறது

நகர்ப்புறங்களில் இயல்பான, சுயதொழில் வேலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வருவாயில் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. இந்தியாவில் உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பு விகிதம் (LFPR) 2020-21 இல் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 25.1 %ஆக மட்டுமே இருந்துள்ளது. இது பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாஃப்ரிக்காவை விட மிகக் குறைவு என்று சமீபத்திய உலக வங்கி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தென்னாஃப்ரிக்காவில் உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பு விகிதம் (LFPR 2021) 46 % இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 2004-05ல் 42.7 % இருந்தது 2021ல் வெறும் 25.1 %ஆகக் குறைந்துள்ளது, இந்த காலகட்டத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் பெண்கள் உழைப்புச் சக்தியிலிருந்து வெளியேறுவதை இது காட்டுகிறது.

 

2019-20 ஆம் ஆண்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களில் 60 சதவீதம் பேர் வழக்கமான, சுயதொழில் வேலைகளை செய்துவருகின்றனர், அதே சமயம் இதே வயதுடைய பெண்களில் 19% பேர் வழக்கமான, சுயதொழில் வேலைகளை செய்துவருகின்றனர்.

 

நகர்ப்புறங்களில் வழக்கமான, சுயதொழில் வேலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வருவாயில் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது.சராசரி மாத வருமானம் ஆண்களுக்கு ரூ.15,996 ஆகவும், நகர்ப்புறங்களில் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வெறும் ரூ.6,626 ஆகவும் உள்ளது. "ஆண்களின் சராசரி வருமானம் பெண்களின் சம்பாத்தியத்தை விட கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகம்" என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியப் பாகுபாடு அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் அமிதாப் குண்டு கூறுகிறார், “நாடு முழுவதும் விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டைக் கணக்கிடுவதற்கு பெரிதாக முயற்சிகள் எடுக்கப்படவில்லை. பல்வேறு சமூகக் குழுக்களிடையே வேலைவாய்ப்பு, ஊதியம், உடல்நலம் மற்றும் விவசாயக் கடனுக்கான அணுகல் ஆகியவற்றில் உள்ள மாறுபட்ட விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு, 'பிரித்துப் பகுப்பாய்தல்' எனப்படும் புள்ளிவிவர முறையைப் பயன்படுத்தியுள்ளோம். 2004-05 முதல் 2019-20 வரை விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டைக் கணக்கிட இது எங்களுக்கு உதவியது. அறிக்கையின் கண்டுபிடிப்புகள் தனித்துவமானது மற்றும் இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கொள்கை வகுப்பாளர்களுக்கு பாகுபாட்டைச் சமாளிக்கவும்; தொழிலாளர், மூலதனச் சந்தைகளில் உள்ளடக்கத்தைக் கொண்டுவரும் வேலைத்திட்டங்களை வடிவமைக்க உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆக்ஸ்ஃபாம் இந்தியா, நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம ஊதியம் மற்றும் வேலைக்கான உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த பரிந்துரைத்தது.

"ஊதியம், திறன் மேம்பாடு, வேலை இட ஒதுக்கீடு மற்றும் மகப்பேறுக்குப் பிறகு எளிதாக வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் உட்பட, தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை தீவிரமாக ஊக்குவிக்கும் படியும் பரிந்துரைத்துள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையில் 308 பெண்களிடம் பொருளாதாரக் கொள்கை சிந்தனைக் குழுவான சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய அவை-‘ICRIER’ மற்றும் நபார்டு வங்கி நடத்திய ஆய்வில், பெண்கள் உரிமையாளர்களாக உள்ள நிறுவனங்களில் 88.4% விழுக்காட்டினர் கோவிட் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.வெறும் 5.8% விழுக்காட்டினர் மட்டுமே கோவிட் தாக்கத்தின் போது அரசிடமிருந்து உதவி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம்:

புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டத் தரவுகளின் படி ஆகஸ்ட் மாதத்தில்   

நுகர்வோர் விலைக் குறியீடு எனப்படும் சில்லறைப் பணவீக்கம் 7.00 விழுக்காடு உயர்ந்துள்து. தொடர்ந்து 8-வது மாதமாக இப்பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 %க்கும் அதிகமாகவுள்ளது.

தானியப் பொருட்களின் விலைவாசி 9.57 விழுக்காடு உயர்ந்துள்து. பழங்களின் விலைவாசி 7.39 விழுக்காடு உயர்ந்துள்து. பால் பொருட்களின் விலைவாசி 6.39 விழுக்காடு உயர்ந்துள்து. காய்கறிகளின் விலைவாசி 13.23 விழுக்காடு உயர்ந்துள்து. தமிழ்நாட்டில் விலைவாசி 5.14 விழுக்காடு உயர்ந்துள்து. இந்திய மாநிலங்களிலே மேற்கு வங்கத்தில் பணவீக்கம் அதிக அளவாக 8.94 விழுக்காடு உயர்ந்துள்து.

மொத்த விலை பணவீக்கம் (WPI) ஆகஸ்ட் மாதத்தில் 12.41% உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் ஆற்றல் துறையின் விலைவாசி 33.67% உயர்ந்துள்து. முதன்மையாக கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், இரசாயனங்கள், மின்சாரம், உணவு பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் பணவீக்கம் இந்த அளவிற்கு உயர்ந்துள்து.

ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி:

 புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டத் தரவுகளின் படி ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீடு நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் 2.4 விழுக்காடாக குறைந்துள்ளது. உற்பத்தித் துறை ஜூலையில் 3.2 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. சுரங்கத் துறை 3.3 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது. மின்சாரத் துறை 2.3 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி, 5.8 விழுக்காடு உயர்ந்துள்து. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி, 2.5 விழுக்காடு உயர்ந்துள்து. இடைநிலை பொருட்களின் உற்பத்தி, 3.6 விழுக்காடு உயர்ந்துள்து. உள்கட்டமைப்பு/கட்டுமான பொருட்களின் உற்பத்தி, 3.9 விழுக்காடு உயர்ந்துள்து. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி, 2.4 விழுக்காடு உயர்ந்துள்து. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி, 2 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி:

முக்கிய துறைகளின் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 3.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் 9.8 விழுக்காடாக உள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 19.4 விழுக்காடாக இருந்தது. நிலக்கரி உற்பத்தி 7.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 3.3 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 0.9 விழுக்காடு குறைந்துள்ளது. பெட்ரொலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 7 விழுக்காடு உயர்ந்துள்ளது, உர உற்பத்தி 11.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தி 2.2 விழுக்காடு உயர்ந்துள்ளது, சிமென்ட் உற்பத்தி 1.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. மின்சார உற்பத்தி 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.

கணக்குகளின் பொது ஒழுங்குமுறையாளரின் தரவுகளின் படி 2022-2023 நிதியாண்டில் ஜூலை மாதம் வரை மத்திய அரசின் மொத்த வரவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 34.4%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் இது 34.6%ஆக இருந்துள்ளது. வருவாய்  செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 28.7%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் 28.9%ஆக இருந்துள்ளது. மூலன  செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 27.8%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் 23.2%ஆக இருந்துள்ளது. மொத்த செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 28.6%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் 28.8%ஆக இருந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை  நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 20.5%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் 21.3%ஆக இருந்துள்ளது.

உணவு மானியத்திற்கான செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 31%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் இது 38%ஆக இருந்துள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையிலான உரமானியத்திற்கான செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 28%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் இது 43%ஆக இருந்துள்ளது. யூரியாவுக்கான மானிய  செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 53%ஆக உள்ளது. சென்ற ஆண்டில் இது 30%ஆக இருந்துள்ளது. . பெட்ரோலியத்திற்கான மானிய செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 2%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் இது 9%ஆக இருந்துள்ளது. மொத்த மானிய செலவினம் நிதிநிலை அறிக்கை  மதிப்பீடுகளில் 35%ஆக உள்ளது.  சென்ற ஆண்டில் இது 36%ஆக இருந்துள்ளது.

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் முறையே 6.94% மற்றும் 7.26% அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில், விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் முறையே 6.60 %  மற்றும் 6.82 % அதிகரித்துள்ளது  என்று தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

பணவீக்கம் 7%க்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் சென்ற ஆண்டில் பணவீக்கம் மிகக் குறைவாக இருந்ததால் அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் பணவீக்கம் மிகவும் உயர்ந்தது போல் தோன்றுகிறது, இது ஒரு புள்ளியல் நிகழ்வு என்ற பொருளில் நிதியமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை 4 முதல் 6  விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தவேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆகஸ்டு மாதத்தில் பணவீக்கம் 7 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை 6  விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்த இயலாதது குறித்து அரசுக்கு வங்கி விளக்கக் கடிதம் அனுப்பவுள்ளது, ஆனால் அது சிறப்புத் தொடர்பு என்றும்  பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்படாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  பணவீக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் ஏன் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று தெரிந்துகொள்வதற்கான அனைத்து உரிமைகளும் பொதுமக்களுக்கு உள்ளது. இதில் ரகசியம் காக்கவேண்டியதற்கு என்ன அவசியம் உள்ளது. ஆகவே ரிசர்வ் வங்கி அரசுக்கு விளக்கமளிக்கும் கடிதத்தை பொதுவெளியில் வெளியிடவேண்டும்.

2016-ம் ஆண்டு இந்த கட்டமைப்பு தொடங்கப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கைகளை கடிதம் மூலம் விளக்குவது இதுவே முதல் முறையாகும். மத்திய வங்கிக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த நடுத்தர கால பணவீக்க இலக்கு கட்டமைப்பின்படி, ரிசர்வ் வங்கி இலக்கைத் தவறவிட்டதற்கான காரணங்களை விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும் மற்றும் அது எப்போது அடைய வாய்ப்புள்ளது என்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

நிதியமைச்சர் கூறுகிறார்: ‘பணவீக்கம் சமாளிக்கக்கூடிய அளவிற்குக் குறைந்து வருவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இப்போது அரசு முன்னுரிமை அளிக்கிறது. வேலை உருவாக்கம் மற்றும் செல்வத்தின் சமமான பகிர்வு ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக உள்ளன. பணவீக்கத்தை விட வளர்ச்சி, வேலை உருவாக்கம், செல்வப் பகிர்வு முன்னுரிமை அளிக்கப்படும்.”

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் கூட்டி 5.9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி 23ஆம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை 7.2 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாகக் குறைத்துள்ளது. விரிவாகியுள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள், இறுக்கமான உலகளாவிய நிதி நிலைமைகள் மற்றும் மொத்த தேவையின் வெளிப்புற கூறுகளில் சாத்தியமான சரிவு ஆகியவை வளர்ச்சிக்கு எதிர்மறையான அபாயங்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) மற்றும் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (பிஎம்ஐ), இரண்டிற்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது, அதிலிருந்து இது மாறுபட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடும் (ஐஐபி) உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடும் (பிஎம்ஐ), ஒன்றுடன் ஒன்று ஒப்பிடத்தக்கது அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி கணிசமாகக் குறைந்தது, ஆனால் அதே மாதத்திற்கான உற்பத்தித்துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு பொருளாதாரம் சிறப்பாய் செயல்படுவது போன்ற ஒரு சித்திரத்தை அளித்துள்ளது. இரண்டும் வெவ்வேறு விதமாக அளவிடப்பட்டு வெவ்வேறு அம்சங்களை முன்வைப்பதிலிருந்தே இந்த வேறுபாடு உருவானது, எனவே அவை ஒப்பிட முடியாதவை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) கணக்கெடுப்பு பெரிய நிறுவனங்களை உள்ளடக்கியது, எனவே, அவர்களின் செயல்திறனை மட்டுமே பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டிற்கான (IIP) கணக்கீட்டு முறையில் சிறிய நிறுவனங்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணர் பிரோனாப் சென் கூறுகிறார். இரண்டு அளவீடுகளுக்கும் இடையே உள்ள முதன்மை வேறுபாடு என்னவென்றால், ‘ஐஐபி’ வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படுகிறது, அதே நேரத்தில் ‘பிஎம்ஐ’ மாதந்தோறும் அளவிடப்படுகிறது. இதன் பொருள் ‘பிஎம்ஐ’யை பகுப்பாய்வு செய்யும் போது பருவகால விளைவைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இரண்டு குறியீடுகளுக்கு இடையே உள்ள மாறுபட்ட போக்குக்கான காரணங்களில் ஒன்றாக வெவ்வேறு மாதிரி அளவுகள் உள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் தலைமைப் பொருளாதார நிபுணர் டி.கே. பண்ட், ஐசிஆர்ஏ தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். யெஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்திரனில் பான் அவர்கள் பிஎம்ஐ வெறும் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஐஐபி ஆனது நிறுவனங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஐஐபி அதிக நம்பகத்தன்மை கொண்டது என்று கூறியுள்ளார்.

ஏப்ரலில் வெளியிடப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் அறிவிப்பின்படி, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் காரணமாக, உலக வணிகப் பொருட்களின் வர்த்தக அளவு 2022 ஆம் ஆண்டில் 4.7 சதவிகிதம் என்ற முந்தைய கணிப்புக்கு எதிராக 3 % மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD), வளர்ந்த நாடுகளின் குழுவானது, 2022 இன் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) G-20 வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சி மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.

நிட்டி ஆயோக் மாநிலங்களிலும் நிதி ஆயோக் போன்றப் பொருளாதாரத் திட்டமிடலுக்கான ஆலோசனை அமைப்பை (State Institution for Transformation- SIT). உருவாக்க முன் மொழிந்துள்ளது. ஆரம்பத்தில் 8-10 மாநிலங்களில் அத்தகைய அமைப்புகளை, மார்ச் 2023 க்குள் அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆளுநர் எவ்வாறு மாநிலங்களின் உள்விவகாரங்களில், அரசியல் முடிவுகளில் லையிடுகிறாரோ அது போல்  மாநிலங்களின் அரசியல் பொருளாதாரத் திட்டமிடலில் கடுமையாகத் லையிட்டு மாநிலங்களின் நிதி இறையாண்மையைப் பறிக்கவுள்ளது நிட்டி ஆயோக்கின் மாநில அமைப்பு.

கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்திலும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022  டிசம்பருக்குள் பல்வேறு மாநிலங்களில் பொதுத்துறை வங்கிகளின் சுமார் 300 கிளைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 300 புதிய கிளைகளில், அதிகபட்சமாக ராஜஸ்தானில் 95 கிளைகளும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 54 கிளைகளும், குஜராத்தில் 38 கிளைகளும், மகாராஷ்டிராவில் 33 கிளைகளும், ஜார்கண்டில் 32 கிளைகளும், உத்தரப் பிரதேசத்தில் 31 கிளைகளும் திறக்கப்படவுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ், அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் 10 ஆண்டு காலத்திற்குள் தனியார்மயமாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில், வங்கி வைப்பாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் மீது சுமையைத் தொடர்ந்து சுமத்துவதை விட சமூக நோக்கங்களைத் தொடர நாடு மற்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் சமூக நோக்கங்களை செயல்படுத்த எந்தக் கருவிகளைப் பயன்படுத்தவேண்டும் என்பதை மட்டும் அவர் கூறவில்லை. பொதுத்துறை வங்கிகள் ஒரே மாதிரியான ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை குடைக்குள் வரும் வகையில் அவற்றை பெருநிறுவனமயமாக்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"சமூக நோக்கங்களை இயக்கும் கடப்பாட்டிலிருந்து விடுபட்ட பொதுத்துறை வங்கிகள், தங்கள் தனியார் சகாக்களைப் போலவே லாப அதிகரிப்பைத் தொடரும் போது, வங்கி முறையின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்படும்," என்கிறார் அவர்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூபாயின் அடிப்படையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும், தேவைப்பட்டால் அது வீழ்ச்சியடைய அனுமதிக்க வேண்டும். ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே சந்தைகளில் தலையிட வேண்டும் என்றும் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு விஷயம் தேவை என்றால், அது முதலீடு என்றும் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும், இந்தியாவிலும் நுகர்வு அதிகரித்தால் மட்டுமே முதலீடு அதிகரிக்கும். "எனவே நாம் பார்க்க வேண்டியது வளர்ச்சியை மட்டுமல்ல, வளர்ச்சியின் பலன்கள் மக்கள்தொகையின் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயப்படுத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கும் அவர் மறுபக்கம் வளர்ச்சியின் பலன்கள் கீழ்தரப்பினருக்கு செல்லவேண்டும் என்கிறார் இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. ஆளும் தரப்பில் உள்ள பெரும்பாலோர் இவ்வாறு தான் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை சொல்லிவருகின்றனர்.

அரசின் வளத்தை பொதுத்துறை நிறுவனங்கள் சுரண்டுவதாகவும் தொழில் துறையில் அரசு ஈடுபடவேக் கூடாது என மாருதி சுசூகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கடும் கண்டனத்துக்குரியக் கருத்தைக் கூறியுள்ளார்.

 

பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் தரக்கூடியவை அல்ல என்றும் அவற்றை அரசு நடத்துவது தேவையற்ற பொருளாதார இழப்புதான் என்றும் மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.

 

இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மேலும் அவர் கூறியதாவது: “ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அந்த வருவாயை முதலீடாகக் கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும். ஆனால், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் வளத்தைப் பெருக்கக் கூடியவையாக இல்லை. மாறாக, அவை தொடர்ந்து செயல்படுவதற்கு அரசு நிதி வழங்க வேண்டியதாக உள்ளது. அந்த வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வளத்தை சுரண்டுகின்றன. ஒரு நிறுவனத்தால் தனது இயக்கத்துக்குத் தேவையான வருவாயை ஈட்ட முடியவில்லை என்றால், அதன் அடிப்படைக் கட்டமைப்பிலே மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பு மட்டும் தான் ஏற்படும். பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது என்பது அரசுக்கு தொடர் இழப்புதான். என்னைப் பொறுத்தவரையில் அரசு தொழில் துறை செயல்பாட்டில் ஈடுபடவே கூடாது” என்றார்.

உண்மையில் தனியார் பெருநிறுவனங்கள் தான் நாட்டின் பொதுவளங்களைக் கடுமையாக சுரண்டுகின்றன. ஆனால் அவர் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானப் பொய்யைக் கூறியுள்ளார்.

சமூகப் பங்குச் சந்தைக்கான விரிவான கட்டமைப்பை மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி வெளியிட்டுள்ளது, இது ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு (NPO) பங்குச் சந்தையில் பதிவுசெய்து மூலதனம் திரட்டுவதற்கான குறைந்தபட்ச நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளரால் பட்டியலிடப்பட்டுள்ள 16 பரந்த நடவடிக்கைகளில் சமூக அமைப்புகள் ஈடுபடலாம்.

பட்டியலிடப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்புகள், செபியின் விதிகளின் படி, காலாண்டின் முடிவில் இருந்து 45 நாட்களுக்குள் சமூகப் பங்குச் சந்தையின் நிதியை எவ்வாறு பயன்படுத்தியது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நிதியாண்டின் இறுதியில் இருந்து 90 நாட்களுக்குள் வருடாந்திர அறிக்கையை (AIR) வெளியிடுமாறு செபி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பெட்ரோனெட், தனது இறக்குமதி கட்டமைப்பை விரிவாக்கும் நோக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. பெட்ரோனெட் நிறுவனமானது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. குஜராத் மாநிலம் தஹேஜ் மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இதற்கான கட்டமைப்பை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இறக்குமதி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், பெட்ரோகெமிக்கல் சார்ந்த வணிகத்தில் நுழையவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்படி விரிவாக்குவதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வருவாயும் ரூ.10,000 கோடி நிகர லாபமும் ஈட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் பொருட்டு இந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளது.

பெட்ரொனெட் நிறுவனம் தஹேஜ் மற்றும் கொச்சியில் உள்ள இறக்குமதி முனையங்களை விரிவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரைப் பகுதியில் மூன்றாவது முனையத்தை அமைக்கும் திட்டத்திலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6.7 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நிலை குறித்த அறிக்கையின் படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் மார்ச் 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில் 47.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 620.7 பில்லியன் டாலராக உள்ளது. சென்ற ஆண்டை விட வெளிநாட்டுக் கடன் 8.2 % உயர்ந்துள்ளது. நீண்ட காலக் கடன் 499.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் மொத்தக் கடனில் 80.4 %ஆகவும் உள்ளது. குறுகிய காலக் கடன் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மொத்தக் கடனில் 19.6 விழுக்காடாக உள்ளது. மொத்த பொருளாக்க மதிப்பில் வெளிநாட்டுக் கடன் 2021 மார்ச் இறுதியில் 21.1 விழுக்காடாக இருந்தது 2022 மார்ச் இறுதிக்குள் 19.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. வெளிநாட்டுக் கடனின் விழுக்காடாக வெளிநாட்டு நாணய கையிருப்பு சென்ற ஆண்டில் 100.6 விழுக்காடாக இருந்தது 2022 மார்ச் மாத இறுதியில் 97.8 விழுக்காடாக குறைந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதிலும், வங்கித் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார் நிதியமைச்சர்."2021-22 பட்ஜெட்டில் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.சமூக ஊடகங்களிலும் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களே அதிகம் பரப்பப்படுகிறது.

கூடிய விரைவில் உலகளாவிய குறியீட்டில் இந்திய நிதிப் பத்திரங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய வருவாய்க் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் மாநிலங்களில் பெரும்பாலானவை, அதிக நிதிப் பற்றாக்குறையைக் கொண்டிருப்பதற்கு, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், இது அவர்களின் நிதிநிலை அறிக்கைக்கு வெளியே வாங்கும் கடன்களில் பெரும்பகுதியை குறைக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

2023 இல் கூடுதல் பட்ஜெட் ஆதாரங்கள் (EBR) மூலம் திட்டங்களுக்கு நிதியளிப்பதை மத்திய அரசு முற்றிலுமாக நிறுத்தியுள்ள நிலையில், அதிக நிதிநிலையைப் பெறாத பல மாநிலங்கள் வருவாய்க் கட்டுப்பாடுகள் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகின்றன.

நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பிற்குள் மாநிலங்கள் கடன் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. அங்குதான் ஒரு சிறிய சிக்கல் உள்ளது, ஏனெனில் மத்திய அரசைப் போல அதிக நிதிப் பற்றாக்குறை வைத்துக் கொள்ளும் வசதி மாநிலங்களுக்கு இல்லை, அவை கட்டுப்படுத்தப்படுகின்றன . "எனவே,  இந்திய அரசு அதிக நிதிப்பற்றாக்குறையை வைத்துக் கொள்ளும் வரை, மாநிலங்களுக்கும் அதிக நிதிப் பற்றாக்குறையை அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்பதை இந்திய அரசு தர்க்கரீதியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று முன்னாள் பொருளாதார விவகார செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.

பல மாநிலங்கள் தங்கள் மாநில வளர்ச்சிக் கடன் ஆவணங்களின் மூலம் சந்தையில் கடன் பெறுவதற்கான வழியை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. 2023 லிருந்து நிதிநிலை அறிக்கைக்கு வெளியே வாங்கும் கடன்கள் அனைத்தும் அவற்றின் வருடாந்திர நிகர கடன் உச்சவரம்புகளின் (NBC) ஒரு பகுதியாக கணக்கிடப்படவுள்ளது.

பருவகால அடிப்படையில் சரிசெய்யப்பட்ட எஸ்&பி இந்திய சேவை கொள்முதல் மேலாளர் குறியீடு ஜூலையில் 55.5 ஆக இருந்தது ஆகஸ்டில் 57.2 ஆக உயர்ந்துள்ளது. பருவகால அடிப்படையில் சரிசெய்யப்பட்ட எஸ்&பி இந்திய உற்பத்தித் துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு ஜூலையில் 56.4ஆக இருந்தது ஆகஸ்டில் 56.2 ஆகக் குறைந்துள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு (FISME) ஆக்சிஸ் வங்கியின் நெறிமுறையற்ற நடைமுறைகளுக்கு எதிராக நிறுவனங்களை எச்சரித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி மற்ற வங்கிகளுக்கு மாற விரும்பும் அதன் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கடன் வாங்குபவர்களுக்கு எதிராக ‘இணக்கமற்ற கட்டணங்கள்’ என்ற பெயரில் போலியான கோரிக்கைகளை விதிக்கிறது. ஆக்சிஸ் வங்கியிலிருந்து வெளியேற விரும்பும் சிறு குறு நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களிடமிருந்து 2 % முதல் 4 % வரை முன்கூட்டியேக் கடன் அடைப்பதற்கான கட்டணத்தை

 வசூலிக்கிறது என்று அக்கூட்டமைப்பு முறையிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு எதிராகவும் இக்கூட்டமைப்பு இதே போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இந்திய அலுமினியக் கூட்டமைப்பு (ஏஏஐ) தொழில்துறை எதிர்கொள்ளும் நிலக்கரி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டைக் கோரியுள்ளது மேலும் இத்துறைக்கு உலர் எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கோல் இந்தியா நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சாதகமான கொள்கைகள் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைய விரும்பும்போது, உற்பத்தித் தொழிலில் இறங்குவதற்குத் தடையாக இருப்பது என்ன என்று இந்தியத் தொழில்துறையினரிடம் நிதியமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆரம்பப் பொது வழங்கல் ஐபிஓ விலையை பரிந்துரைக்க செபிக்கு எந்த வேலையும் இல்லை, முதலீட்டு வங்கியாளர்கள் தான் இந்த சிக்கலைச் சுற்றியுள்ள எந்தவொரு கவலையையும் போக்க வேண்டும் என்று அதன் தலைவர் மதாபி பூரி புச் கூறியுள்ளார். ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) இட ஒதுக்கீடு மற்றும் வெளியீட்டில் கேட்கப்படும் விலை ஆகியவற்றுக்கு இடையே மதிப்பீடுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து நிறுவனங்கள் கூடுதல் விவரங்களை  ளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த வேலையைக் கூட செய்யாமல் செபி எதற்கு இருக்கிறது. எல்லா ஒழுங்குமுறைகளையும் தளர்த்தி கட்டற்ற நிதிமயமாக்கத்தை வேடிக்கை பார்ப்பதற்கா?.

15வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே.சிங் தனது புத்தகத்தில், மத்திய மற்றும் மாநில நிதிகளை கண்காணிக்க நிதி கவுன்சில் தேவை என்று பரிந்துரைத்துள்ளார். சிங் தலைமையிலான நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) குழு, ஜனவரி 2017 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, நிதி மற்றும் செலவினக் கொள்கைக்கான ஆலோசனை மற்றும் மதிப்பீடு வழங்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயேச்சையான நிதிக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 15வது நிதிக்குழுவில் மட்டுமின்றி 14வது மற்றும் 13வது நிதிக்குழுவிலும் அத்தகைய அமைப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதற்கு ஆதரவாக இல்லை. நிதிப் பொறுப்புகளை தட்டிக் கழிக்கவே விரும்பும் பாஜக அரசு எவ்வாறு நிதிக்குழுவை உருவாக்கும்!.

இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட்டில் 89.6% உயர்ந்து 1.35 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது; ரஷ்யா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

போட்டித்தன்மையுடன் இருக்க ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயை நம்பியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக, தயாரிப்புகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

சேவைத் துறையில் உள்ளவர்கள் உட்பட ஏற்றுமதியாளர்களை, ஏற்றுமதியை அதிகரிக்க அரசின் மானியங்கள் அல்லது சலுகைகளை நம்ப வேண்டாம் மாறாக, வெளிநாட்டு சந்தையை சிறப்பாகக் கைப்பற்றுவதற்கு அவர்கள் தங்கள் போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும், என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய ஒத்துழைப்புக் கொள்கை ஆவணத்தை உருவாக்குவதற்காக 47 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துதல், அடிமட்ட மக்கள் வரை அதன் அணுகலை ஆழமாக்குதல், மற்றும் கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை ஊக்குவித்தல் ஆகியவை இதன் இலக்குகளாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள தேசியக் கூட்டுறவுக் கொள்கை 2002 இல் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் 29 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டுறவு நிறுவனங்கள், வேளாண் பதப்படுத்துதல், பால் பண்ணை, மீன்பிடி, வீட்டுவசதி, நெசவு, கடன் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் வெளிப்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியாக மூலதன முதலீடுகளின் மாதாந்திர தரவை அரசு, கோரியுள்ளது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பாலின வாரியான அறிக்கை, பயன்படுத்தப்படாத நிலம், கூட்டு நிறுவனங்களின் லாபப் பங்கு போன்ற புதிய விவரங்களும் வெளியிடவேண்டியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை தாங்கும் அளவுக்கு வங்கி அமைப்பு ஆரோக்கியமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். ஜாக்சன் ஹோல் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள சந்தைகள் மிகவும் நிலையற்றதாகவும், நிச்சயமற்றதாகவும் மாறி வருகின்றன, மேலும் வளர்ந்து வரும் சந்தைகளில் அதிக நிலைத்தன்மையை பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் நமது நடவடிக்கைகள் வெளிப்புறத்திலிருந்து வரும் எதிர்மறையான கசிவுகளைத்  தாங்கிக் கொள்ளும் வகையில் நமது வங்கி அமைப்பின் ஆரோக்கியம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்துள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர் விலைக் குறியீடு இரண்டாவது பாதியில் இருந்து குறைந்து நான்காவது காலாண்டில் இருந்து மேலும் மிதமானதாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜனவரி-மார்ச் 2020 இல் 9.1% ஆக இருந்தது, ஆனால் கோவிட் பொதுமுடக்கம் காரணமாக 2020 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 20.9% ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது கோவிட் அலையில் இருந்து நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு நிலையான சரிவைச் சந்தித்தாலும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின்படி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட, ராஜஸ்தான், பீகார், கேரளா, உத்தரகாண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் வேலையின்மை மிகவும் அதிகமாகவே உள்ளது.

வேலையின்மை தேசிய சராசரியை விட தொடர்ந்து அதிகமாக இருக்கும் இந்த மாநிலங்கள், மெதுவான பொருளாதார வளர்ச்சியால் குறைந்த வேலை வாய்ப்புகளையே வழங்கியுள்ளன. மேலும், கோவிட் அதிர்ச்சியிலிருந்துக் குறைந்த மீள்தன்மையையேக் கொண்டுள்ளன.

இந்திய அளவில், நகர்ப்புற வேலையின்மை ஏப்ரல்-ஜூன் 2021 இல் (இரண்டாவது கோவிட் அலை காலம்) 12.7%ஆக  இருந்தது ஏப்ரல்-ஜூன் 2022 இல் 7.6% ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 1.62 % உயர்ந்து 33.92 பில்லியன் டாலராகவும், வர்த்தகப் பற்றாக்குறை ஆகஸ்ட் மாதத்தில் 27.98 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி 37.28 சதவீதம் அதிகரித்து 61.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஏப்ரல்-ஆகஸ்ட் 2022-23ல், ஏற்றுமதி 17.68 % உயர்ந்து 193.51 பில்லியன் டாலராக இருந்தது.

ஏப்ரல்-ஆகஸ்ட் 2022-23ல், ஏற்றுமதி 17.12 சதவீதம் வளர்ச்சி பெற்று 192.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த நிதியாண்டின் ஐந்து மாத காலப்பகுதியில் இறக்குமதி 45.64 சதவீதம் அதிகரித்து 317.81 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஏற்றுமதியில் சரிவும், இறக்குமதியில் அதிகரிப்பும் வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்தி உள்நாட்டு நாணயத்தின் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உலக அளவில் சர்வதேச வர்த்தகம் சரிவடைந்துள்ளதால் இந்தியாவின் ஏற்றுமதியிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர் எட்ஜின் (CareEdge)  அறிக்கையின்படி 2016 ஆம் ஆண்டின் நொடிப்புநிலை நெறிகளின் (IBC) இன் கீழ் பெருநிறுவன நொடிப்புநிலை தீர்வு செயல்முறைக்கு (CIRP) அனுமதிக்கப்பட்ட மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் தொடர்பான, வழக்குகளின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) முந்தைய ஆண்டிலிருந்து 24.8% அதிகரித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் கடையில் பிரதமர் படம் ஏன் இல்லை?என மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்துள்ளார். "மத்திய அரசின் பங்கு உள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசின் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறிய நிதியமைச்சர் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்கவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் மத்திய அரசு செலவு செய்கிறது ஆனால் பாரதிய ஜனதா கட்சி தான் அனைத்திற்கும் செலவுசெய்வது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது நிதியமைச்சரின் ஆணை. மத்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவையும் வாக்கு வங்கி அரசியலாக்கவே பாஜகவினர் பெரும்பாடுபடுகின்றனர்.

இதுவரை ரயில்வே நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகால அடிப்படையிலே குத்தகைக்கு விடப்பட்டு வந்தன. இந்நிலையில், குத்தகை கால அளவை 35 ஆண்டுகளாக உயர்த்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதும் நிலத்தின் உரிமத் தொகையை 6 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டதும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த மாற்றங்களால், புதிய முதலீடுகள் பெருகும் என்றும் சரக்கு முனையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் புதிய நில குத்தகை கொள்கை கொள்கை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி திரட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று வர்த்தகச் செயலர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் உலக அளவில் முதல் நான்கு பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும், 2047ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும் கூறினார்.

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

2029-ல் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என எஸ்பிஐ வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. "இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 2014 இல் 2.6 விழுக்காட்டிலிருந்தது இப்போது 3.5 விழுக்காடாக உள்ளது, மேலும் 2027 இல் 4 விழுக்காட்டைக் கடக்க வாய்ப்புள்ளது, இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனியின் தற்போதைய பங்காகும்" என்றும் அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், இந்தியா இன்னும் உலகின் பெரும்பாலான பொருளாதாரங்களை விட பின்தங்கியுள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி, 2021 இல் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2,277 ஆக இருந்தது, அதேசமயம் ஐக்கிய முடியரசின் தனிநபர் வருமானம் $47,334 ஆக இருந்தது. சீனாவின் தனிநபர் வருமானம், 2021ல் இந்தியாவை விட 6 மடங்கு உயர்வாக $12,556 ஆக இருந்துள்ளது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை வெளிக்காட்டும் குறிகாட்டியாகக் கருதமுடியாது. அடிமட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினரின் தனிநபர் வருமானமே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்கான குறிகாட்டியாகப் பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியா வளர்ந்த நாடாக இன்னும் வெகுதொலைவு உள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட தகவலின்படி, 2014-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகவும் இருந்தது. மேலும், 2022-ல் இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலராகவும் உள்ளது. 2027-ல் இந்தியாவின் ஜிடிபி 5.5 டிரில்லியன் டாலராக இருக்கும். ஆனால், அந்த சமயத்தில் பிரிட்டனின் ஜிடிபி 4.6 டிரில்லியன் டாலராகவே இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் விவசாயத் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தற்போது பருவமழை அதிகமாக பெய்து வருவதாகவும், நிகர விதைப்பு பகுதியின் பற்றாக்குறையும் ஓரளவு மூடப்பட்டு இப்போது 1-1.5% ஆக உள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். தொழில் மற்றும் சேவைகள் போன்ற பிற துறைகளின் செயல்பட்டு கடன் வளர்ச்சி வலுவாக உள்ளது. உயர் அதிர்வெண் குறிகாட்டிகள், இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் மீள்தன்மையுடன் இருப்பதாகக் கூறுகின்றன, என்றும் வளர்ச்சியை தியாகம் செய்வதை குறைப்பதில் கவனம் செலுத்துவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

நூறு நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிகளுக்கான தேவை ஆகஸ்ட் மாதத்தில் 34 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் 19.2 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட தனிநபர் வேலை நாட்கள் மே மாதத்தில் அளிக்கப்பட்டதில் நான்கில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மிகவும் குறைத்ததே இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.63 பில்லியன் ஆள் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டது, நடப்பு நிதிஆண்டில் இதுவரை 1.48 பில்லியன் ஆள் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய மாநிலங்களில் முதல் மூன்று மாநிலங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் குஜராத் ஆகியவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய மாநிலங்களில் சிக்கிம் மாநிலம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.  ‘இந்தியாவில் ஊட்டச்சத்து முன்னேற்றத்தைப் பாதுகாத்தல்: தொற்றுநோய் காலங்களில் போஷன் அபியான்’ என்ற தலைப்பில் வெயிடப்பட்ட அந்தஅறிக்கையில் 19 பெரிய மாநிலங்களில் 12 மாநிலங்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

ஹெச்எல்எல்- நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவசரகால துயர்தணிப்பிற்கு ஹெச்எல்எல்- நிறுவனம் ஆற்றிய பங்கை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், கோவிட் கொள்ளைநோய்க்கு எதிராக தடுப்பூசி இயக்கம் இன்னும் செயலற்றிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் ஹெச்எல்எல் போன்ற ஒரு நிறுவனத்தை தனியார்மயமாக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

லோக்கல் சர்கிள்ஸ் என்ற ஒரு சமூக சமூக ஊடக தளம் -- குடும்பங்கள் பணவீக்கத்தை எவ்வாறு சமாளிக்கின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 33% இந்திய குடும்பங்கள் விலை உயர்வு கவலைகளுக்கு மத்தியில் பால் பயன்பாட்டைக் குறைத்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 311 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பு 21,000 க்கும் மேற்பட்ட பதில்களைப் பெற்றது, பதிலளித்தவர்களில் 69 விழுக்காட்டினர் ஆண்கள். பதிலளித்தவர்களில் 41 விழுக்காட்டினர் அடுக்கு 1மாவட்டத்தையும், 34 விழுக்காட்டினர் அடுக்கு 2 மாவட்டத்தையும் மற்றும் 25 விழுக்காட்டினர் அடுக்கு 3, 4 கிராமப்புற மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.கணக்கெடுப்பின் படி 68 விழுக்காட்டினர் விலை உயர்வைச் சமாளித்து, அதே பிராண்டில் அதே அளவிற்கு அதிக கட்டணம் செலுத்துகின்றனர். 6 விழுக்காட்டினர் மலிவான பிராண்டிற்கு மாறியுள்ளனர் இல்லாவிடில் உள்ளூரிலிருந்து வாங்குகின்றனர். 20 விழுக்காட்டினர் வாங்கும் அளவைக் குறைத்துள்ளனர்

ஏற்கனவே உணவுப் பணவீக்கம் உயர்ந்துவரும் சூழலில் ஆகஸ்ட் 17 முதல், பெரும்பாலான பால் கூட்டுறவு நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியிருப்பது இந்திய நுகர்வோரின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கும்.

ரூ.5 கோடிக்கும் மேல் உள்ளீட்டு வரி வரவை தவறாக பயன்படுத்துபவர்கள், வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளே சட்டப்படி இனி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,045 ஆக உள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள் மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி வட்டியில்லா முதலீட்டுக் கடன் தொகையில், 80,000 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறும் வரிப் பகிர்வின் விகிதாசார அடிப்படையிலும், அவற்றின் திட்டங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படவுள்ளது. மீதமுள்ள ரூ.20,000 கோடியை விடுவிப்பது முக்கிய உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை 13 மாநிலங்களுக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் வட்டியில்லா 50 ஆண்டு முதலீட்டுக் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.

2022 நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு மூலதனச் செலவுக்காக 50 ஆண்டு வட்டியில்லாக் கடனாக 1 லட்சம் கோடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஒரு பெரும்பகுதியை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் வெட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக ரீ-பிராண்டிங் செய்கின்றன. ஆகவே அம்மாநிலங்களுக்கு மூலதனக் கடனை குறைக்கவுள்ளது.

மத்திய நிதியுதவி திட்டங்களின் உண்மையான பெயரை மாற்றக்கூடாது என்ற விதிமுறையைக் கடைபிடிக்காவிடில்,  பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், 2023 நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கான 50 ஆண்டு வட்டியில்லா கடன்களை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளது மத்திய அரசு.

நடப்பு நிதியாண்டில் இதுவரை, 16 மாநிலங்களுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய் அல்லது வட்டியில்லா மூலதனக் கடனின் 50% ஐ(குறிப்பிடப்படாத திட்டங்கள் அல்லது சீர்திருத்தங்கள்) மத்திய அரசு அனுமதித்துள்ளது. "மத்திய நிதியுதவி திட்டங்களின் மறுபெயரிடுதல் அனுமதிக்கப்படாது . இந்த நிபந்தனை தளர்த்தப்படாது. இணங்காத மாநிலங்கள் திட்டங்களின் பெயர்களை சரி செய்யாவிட்டால், மற்றவர்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும், என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு 4 டிரில்லியன் ரூபாய்க்கு மேல் செலவழித்தாலும், பல மாநிலங்கள், குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள், பல திட்டங்களின் பெயர்களை மாற்றியமைத்துள்ளன இதனால் மத்திய அரசுக்கு வரவேண்டிய நற்பெயருக்கு மாநிலங்கள் உரிமை கொண்டாடுவதாகவும் மத்திய அரசு  குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக அரசு அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு முற்றிலும் முரண்படும் விதமாகவும் நிதியமைச்சர் பின்வரும் கருத்தையும் கூறியுள்ளார்.

மத்திய-மாநில நிதி உறவு என்பது பரிவர்த்தனை சார்ந்த ஒன்றல்ல என்றும், நிதிக்குழுவால் முடிவெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய வரிகளை பகிர்ந்தளிப்பது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்றது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, மத்திய அரசின் வரி வருவாய்க்கு அதிகப் பங்களித்த தென் மாநிலங்கள் மக்கள்தொகையுடன் நிதி பரிமாற்றங்கள் இணைக்கப்பட்டதால் வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வரிப்பங்கீட்டையே மத்திய அரசிடமிருந்து பெறமுடிவதால் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே நிதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடமிருந்து எவ்வளவு பெறுகிறது என்று ஒப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல. ஒரு நாடு தொடர்ந்து இந்த மாதிரியான செயற்கைக் கோட்டை வரைந்தால் முன்னேறுமா... நான் இவ்வளவு தருகிறேன், நீங்கள் இவ்வளவு கொடுங்கள் என்று சொல்வது மிகவும் சுருங்கிய வாதம்... இது பரிவர்த்தனை உறவு இல்லை. நாம் அனைவரும் மேம்படுத்த வேண்டிய முழு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறோம்”.

உள்நாட்டு கச்சா எண்ணெய், டீசல் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் மீதான ஏற்றுமதிவரி நீக்கப்பட்டது. உலகளாவிய எண்ணெய் விலை சரிவுக்குப் பிறகு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான ஏற்றுமதி வரியை டன்னுக்கு 10,500 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக அரசு குறைத்துள்ளது. டீசல் மீதான ஏற்றுமதி வரிகளை லிட்டருக்கு 5 ரூபாயாக பாதியாகக் குறைத்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களும் தாங்கள் பெறும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது. தனியார் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மத்திய அரசு துறைகள், மத்திய பொது துறை நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை 90 நாட்களில் செலுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் என நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜிடிபியில் 13-14 % இருக்கும், லாஜிஸ்டிக்ஸ் செலவை கூடிய விரைவில் ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம் கதி சக்தியின் கீழ் உருவாக்கப்பட்ட செயலாளர்கள் குழு (EGoS) இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவுள்ளது.

சுரங்கம் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு ஜூலை மாதத்தில் 101.1 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட அளவை விட 3.3% குறைவாக உள்ளது என்று சுரங்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

 

உலகளாவிய நிதிச் சூழல் சார்ந்த நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மோசமான சூழ்நிலைகளுக்குத் தயாராக உள்நாட்டு வங்கிகள் அதிக மூலதனத்தைத் திரட்ட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதே அளவிற்குக் கடன் அளிப்பதை வங்கிகள் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்றால் அவைக் கூடுதல் மூலதனத்தைத் திரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜூன் 2022 க்கான மத்திய வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கையின்படி, இந்திய வங்கி அமைப்பின் மூலதனம்-அபாய எடை சொத்துக்களின் விகிதம் (CRAR) மார்ச் 2022 இல் 16.7 விழுக்காடாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிகள் குறைந்தபட்சமாக 9 விழுக்காடு மூலதனம்-அபாய எடையுள்ள சொத்து விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியை பணவியல் கொள்கைக்கு 'தனியாக' விட முடியாது, ஏனெனில் இது பல காரணிகளைச் சார்ந்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய சூழலில் அதன் வரம்புக்கு அப்பாற்பட்டவை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பணக் கொள்கையை நிதிக் கொள்கையுடன் ஒத்திசைக்க வேண்டும். அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான ஊக்கத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை ரூ.10.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இது ரூ.10.63 லட்சம் கோடியாக இருந்தது. மொத்தமாக ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஜூலையில் அது 628 கோடியாக இருந்தது. இந்தியாவில் 2016-ம் ஆண்டு யுபிஐ நடைமுறைக்கு வந்தது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரித்து விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி சலுகையை மார்ச் 2023 வரை 6 மாதங்களுக்கு நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. கச்சா பாமாயில், பாமோலின், பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான தற்போதைய வரி அமைப்பு மார்ச் 31, 2023 வரை மாறாமல் இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை 12 மாதங்களில் இல்லாத அளவு 8.28% ஆக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் கிராமப்புற வேலையின்மை 6.14 விழுக்காட்டில் இருந்து 7.68 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 8.2 விழுக்காட்டில் இருந்து 9.57 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

2022 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், அனைத்து வயது நகர்ப்புற ஆண்களுக்கான வேலையின்மை 7.1% ஆக இருந்தது. இது பெண்களுக்கு 9.5% ஆக இருந்தது. அனைத்து முக்கிய மாநிலங்களிலும் ராஜஸ்தானில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் அதிகமாக 12.8%ஆக உள்ளது. சமீபத்திய காலாண்டு அறிக்கையின்படி, 15-29 வயதுக்குட்பட்ட நகர்ப்புற பெண்களின் அதிகபட்சமாக வேலையின்மை விகிதம் 23.9% ஆகும்.

ஏப்ரல்-ஜூன் 2022 காலகட்டத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.2% ஆக இருந்தது, கடந்த ஆண்டு இதே காலத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.1% ஐ விட சற்று அதிகமாக இருந்தது. ஜனவரி-மார்ச் 2022 காலகட்டத்திலும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.2% ஆக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 28% உயர்ந்து ரூ.1.43 லட்சம் கோடியாக உள்ளது. 2021 ஆகஸ்டில் ஜிஎஸ்டி வசூலின் அளவு ரூ.1,12,020 கோடியாக இருந்துள்ளது.

ரஷ்யா, ஈரான் மற்றும் ஜார்ஜியா ஆகிய 3 நாடுகளில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் மீது குவிப்பு எதிர்ப்பு வரியை நீட்டிக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.

நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலையில் நிதிப் பற்றாக்குறையானது 2022 பட்ஜெட் மதிப்பீட்டில் (BE) 20.5% ஆக இருந்தது, இது சென்ற ஆண்டில் 21.3% ஆக இருந்தது. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் மத்திய அரசு நிதி உபரியைப் பெற்றுள்ளது. இந்தியா கடைசியாக மார்ச் 2020 இல் நிதி உபரியைப் பெற்றிருந்தது. நடப்பு

ரிசர்வ் வங்கி தரவுகளின் படி குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி கடந்த ஆண்டு 1.4 விழுக்காடாக இருந்தது 19 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

2021 ஜூலையில் 67.8 %ஆக இருந்த நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி 49.1 %ஆகக் குறைந்துள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இணைத்து, வழங்கப்பட்ட மொத்தக் கடன், கடந்த ஆண்டு ஜூலையில் ரூ. 14.56 லட்சம் கோடியாக இருந்தது 24 % உயர்ந்து ரூ.18.08 லட்சம் கோடியாக உள்ளது.

சென்ற வருடத்தில் ரூ.3.51 லட்சம் கோடி திரட்டிய நடுத்தர நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் ரூ.3.67 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் விதிகளில் இருந்து சிறிய கடன்களுக்கு விலக்கு அளிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளன. இந்தியாவின் மத்திய வங்கி மோசமான கடன் விதிகளில் இருந்து "நிழல் வங்கிகளுக்கு" விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய மத்திய வங்கியின் தரவுகளின் படி இந்தியாவில் 2021 மார்ச் நிலவரப்படி 10,000 நிழல் வங்கிகள் உள்ளன. அவை ரூ. 54 டிரில்லியன் ($680 பில்லியன்) அளவிற்கு வங்கித் துறையின் நான்கில் ஒரு பங்கு சொத்துக்களைக் கொண்டுள்ளன. பெரிய நிழல் வங்கிகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின் கீழ், நிழல் வங்கிகள் இப்போது போல, மாதாந்திர அடிப்படையில் அல்லாமல் தினசரி அடிப்படையில் மோசமான கடன்களை அங்கீகரிக்க வேண்டும். கடனாளிகள் அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்திய பின்னரே செயல்படாத கடன்களை செயல்பாட்டிற்கு மேம்படுத்த முடியும். நிழல் வங்கிகளின் ரூ. 2 கோடி ($250,000) வரையிலான கடன்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் சில கணக்குத் தேவைகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளுக்கு இணங்குவதற்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.

நிழல் வங்கிகள், நீதிமன்ற அனுமதி தேவைப்படாதவாறு கடனுக்கு எதிராக உறுதியளிக்கப்பட்ட பத்திரங்களின் கட்டுப்பாட்டை  நிர்வகிக்க அல்லது விற்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்க, மோசமான கடன்களுக்கான வரம்பைக் குறைக்குமாறும் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டன.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (GVA) தரவுகளை, இந்திய கடன் மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான இன்ட்ரா (Ind-Ra) பகுப்பாய்வு செய்துள்ளது. மூன்று நிறுவனத் துறைகளில், 2020-ஆம் ஆண்டு முடிவடையும் பத்தாண்டு காலத்திற்கான மொத்த மதிப்பு கூட்டலில் குடும்பங்களின் சராசரி பங்கு  44.5  %ஆக உள்ளது. ஆனால் ஊதியத்தில் அவற்றின் பங்கு 25.5 %ஆகக் குறைவாக உள்ளது. மறுபுறம், மொத்த மதிப்பு கூட்டலில் பொதுத்துறை 19.2 % மட்டுமே பங்களிக்கிறது, ஆனால் மொத்த ஊதியத்தில் பொதுத்துறை கிட்டத்தட்ட 40 % பங்கைப் பெற்றுள்ளது. மொத்த மதிப்பு கூட்டலில் தனியார் துறையின் பங்கு 35.2 %ஆக உள்ளது. ஊதியத்தில் அவை பெறும் பங்கு 36.3 %ஆக உள்ளது.

 2011-12 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில், ஊதியங்கள் (Nominal-பெயரளவு) 10.4 % கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்ததாகவும், மூலதனத்தின் மீதான வருமானம் 8.8 % வளர்ச்சியடைந்ததாகவும் மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.

 இந்தியா ரேட்டிங்ஸ் என்றக் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் 2022 ஜூனில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மட்டங்களில் உண்மையான ஊதிய வளர்ச்சி (பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்ட) எதிர்மறையாக உள்ளதாகவும் நகர்ப்புறங்களில் உண்மையான ஊதிய வளர்ச்சி 3.7 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஊதிய வளர்ச்சியின் சமீபத்திய போக்கு குடும்பங்களின் வாங்கும் சக்தியை அரித்துள்ளது என்றும் குறிப்பிடுகிறது. நுகர்வுத் தேவையின் பெரும்பகுதி வீட்டுத் துறையின் ஊதிய வளர்ச்சியால் இயக்கப்படுவதால், அவர்களின் ஊதிய வளர்ச்சியின் மீட்சியானது, தனியார் இறுதி நுகர்வுச் செலவினங்களில் நிலையான மற்றும் நீடித்த மீட்சிக்கும் 2023 இல் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

கோவிட் கொள்ளைநோய் வளர்ச்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால், 2021 மற்றும் 2022 இன் குறைந்த அடித் தளத்தின் காரணமாக வருடாந்திர வளர்ச்சி மீட்சியின் உண்மையானத் தகவலை வழங்கவில்லை. எனவே, ஜிடிபி/மொத்த மதிப்பு கூட்டலின்(GVA) மீட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சிப் போக்கை ஒப்பிடுவதாகும். அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது Q12020 - Q12023 (Q1-முதல் காலாண்டு) காலப்பகுதியில் வெறும் 1.3 விழுக்காடு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை காட்டுகிறது, Q12017 - Q12020 இன் போது வளர்ச்சி 6.2 விழுக்காடாக இருந்தது. அனைத்துத் துறைகளிலும், சேவைத் துறையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் Q1FY20-Q1FY23 இன் போது 1% ஆக கூர்மையான சரிவைக் காட்டுகிறது, இது Q1FY17-Q1FY20 இன் போது 7.1 விழுக்காடாக இருந்தது, இந்தத் துறையின் மீட்சி இன்னும் பலவீனமாக இருப்பதையே இது குறிக்கிறது என்றும் தொழில்துறை போன்ற துறைகளில் பொருளாதார செயல்பாட்டில், முன்னேற்றம் இருந்தாலும் அது மிகவும் சீரற்றதாக உள்ளது. தொழில்துறை உற்பத்தியின் வருடாந்திர வளர்ச்சி ஜூன் 2022 இல் 0.1 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது. பெரும்பான்மை துறைகள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மேலே உள்ளன, உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி தொற்றுநோய்க்கு முந்தைய மட்டத்தில் 95.1 விழுக்காடாக இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்று நிறுவனத்தின் ஆய்வாளர் பராஸ் ஜஸ்ராய் கூறியுள்ளார்.

ஏப்ரல்-ஜூலை காலாண்டில் விவசாய, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 30% உயர்ந்து 9.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 4 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பால் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 61.91 % உயர்ந்து 247 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் முந்தைய ஆண்டுடன் (ஏப்ரல்-ஜூலை, 2022)  ஒப்பிடுகையில் 51% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஏப்ரல்-ஜூலை, 2021 இல், பழங்கள் மற்றும் காய்கறிகள் 498 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, இது நடப்பு நிதியாண்டில் 517 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் முந்தைய ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் முறையே 37.75% மற்றும் 35.26% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

2022-23 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி 29.13% வளர்ச்சியைக் கண்டது, அதன் ஏற்றுமதி 1214 மில்லியன் டாலரிலிருந்து (ஏப்ரல்-ஜூலை 2021) 1567 மில்லியன் டாலராக (ஏப்ரல்-ஜூலை 2022) உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பாசுமதி அல்லாத அரிசி 9.24% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 1910 மில்லியன் டாலர்களிலிருந்து 2086 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் நான்கு மாதங்களில் இறைச்சி, பால் மற்றும் கோழி இறைச்சிப் பொருட்களின் ஏற்றுமதி 11.69 விழுக்காடும், மற்ற தானியங்களின் ஏற்றுமதி 22.26 விழுக்காடும் உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் ஏற்றுமதி 61.91 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அவற்றின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 247 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, சென்ற ஆண்டில் இதே மாதங்களில் 153 மில்லியன் டாலர்களாக இருந்தது. பிற தானியங்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல்-ஜூலையில் 334 மில்லியன் டாலர்களிலிருந்து 2022 ஏப்ரல்-ஜூலையில் 408 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது மற்றும் கால்நடைப் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஏப்ரல்-ஜூலையில் 1279 மில்லியன் டாலர்களிலிருந்து ஏப்ரல்-ஜூலை 2022 இல் 1428 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு செப்டம்பர் 9 முதல் மத்தியஅரசு 20% வரி விதித்துள்ளது.

2019-20ல் 141.64 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி, 2021-22ல் 161.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய தேசிய சுகாதார மதிப்பீட்டு தரவுகளின்படி 2018-19 ஆம் ஆண்டில் மொத்த அரசு சுகாதார செலவினத்தில் மத்திய அரசின் பங்கு 34.3% ஆக குறைந்தது, இது முந்தைய ஆண்டில் 40.8% ஆக இருந்தது, 2018-19 ஆம் ஆண்டில் மாநிலங்களின் பங்கு 59.2% இருந்தது 65.7% ஆக உயர்ந்துள்ளது. அரசின் சுகாதாரச் செலவு 2017-18 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.35 %இல் இருந்து அடுத்த ஆண்டில் 1.28 %ஆகக் குறைந்துள்ளது.

நிதிநிலை அறிக்கைக்கு வெளியே செய்யப்பட்ட சுகாதாரச் செலவும் அதே காலக்கட்டத்தில், 48.8%ல் இருந்து 48.2% ஆகக் குறைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபி சங்கர் வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க புதிய சட்டம் தேவை, ஆனால் வாடிக்கையாளர் தரவை பணமாக்குவது பொறுப்பான முறையில் செய்யப்படலாம் என்று முன்மொழிந்துள்ளார். பொறுப்பான அரசுத்துறை அதிகாரி பேசும் பேச்சா இது! பொறுப்பற்ற முறையில் லாபத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தனியார் துறை முதலாளி போலல்லவா கருத்துத் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் தரவை பணமாக்கிய பின் எவ்வாறு வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க முடியும்?. டி ரபி சங்கரின் முன்னுக்குப் பின் முரணான இந்த முன்மொழிவு கண்டனத்துக்குரியது.

சட்டவிரோத கடன் செயலிகளை தடைசெய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இது குறித்து ரிசர்வ் வங்கி பட்டியலைத் தயாரித்தப் பிறகு, அந்தப் பட்டியலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சம் ஆய்வு செய்யும். அந்தப் பட்டியலில் இல்லாத செயலிகள் ஆப் ஸ்டோர்களிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரைசிங் இந்தியாவுக்கான பிரதமர் பள்ளிகள் (PM SHRI) என்ற புதிய மத்திய நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.273.6 பில்லியன் அ ளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் அனைத்து கூறுகளையும் காட்சிப்படுத்த, நாடு முழுவதும் உள்ள 14,500க்கும் மேற்பட்ட பள்ளிகள் பிரதமர் பள்ளிகளாக உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனம் (National Thermal Power Corporation Limited – NTPC) 2022க்கான இறுதி ஈவுத்தொகையாக ₹2,909 கோடியை வழங்கியுள்ளது.

ஜூன் காலாண்டில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் விரைவில் விற்பனையாகும் எஃப்எம்சிஜி தயாரிப்புகளுக்கான தேவை 2.4% குறைந்துள்ளது என எடெல்வெய்ஸ் நிறுவன ஆய்வாளர்கள் துறை குறித்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன உற்பத்தியாளர்களிடம், பழைய வாகனங்களை நீக்கி, புதிய வாகனங்களை வாங்கும் மக்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் வாகன நீக்கக் கொள்கை 1 2022 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, இதன் படி தனிநபர் வாகனங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகும், வணிக வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகும் வாகனத் தகுதி சோதனைகளை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நாட்டின் உழைக்கும் வயதுடைய மக்களின் தொகை 2028 இல் சீனாவை முந்திவிடும், 2036 இல் மொத்த மக்கள்தொகையில் 65% ஐ எட்டும் என்று ஐ.நா.வின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியா மொத்த மக்கள்தொகையில் 65% உழைக்கும் வயதுடைய மக்களுடன், உற்பத்தித்திறன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு இன்று உலகம் காணக்கூடியதை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பொருளாதார அளவில் பின்தங்கிய வீடுகளைச் சேர்ந்த பதின்வயதினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. 40 நாடுகளில் உள்ள 179,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், வறுமையை குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று அதன் ஆசிரியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஐபோனின் உதாரணத்தைப் பயன்படுத்தி மையத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை ரகுராம் ராஜன் சுட்டிக் காடியுள்ளார். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் திட்டத்தின் ‘பாதுகாப்புவாதம்’ மற்றும் ‘மானியங்கள்’ ஆகியவற்றின் கலவையானது ஏற்றுமதியை லாபகரமாக ஆக்குகிறது, அதனால்தான் பிஎல்ஐ திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட உற்பத்தியாளர்கள் குவிந்துள்ளனர் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமானது, இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு செல்போனுக்கும் உற்பத்தியாளர்கள் முதலீடு மற்றும் விற்பனை இலக்குகளை அடைந்தால், முதல் வருடத்தில் அரசு 6% ஊக்கத் தொகையை வழங்குகிறது, ஐந்தாம் ஆண்டில் 4% ஆகக் குறைக்கப்படுகிறது. அனைத்து பாகங்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்தாலும் உற்பத்தியாளர்களுக்கு அரசு 6% மானியம் அளிக்கிறது. உற்பத்தியாளர்கள் விலைப்பட்டியல் விலையில் 6% மானியத்தைப் பெறுகிறார்கள். "இந்தியாவில் செல்போன் உற்பத்தியாளர்கள் 24% மானியத்தைப் பெறுகிறார்கள் - கூடுதலாக, மாநிலங்களும் தள்ளுபடிகள் (விலையில் சுமார் 9%), மின்சாரம், நிலம் மற்றும் மூலதனச் செலவு மானியங்கள் மூலம் கூடுதல் சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் அதன் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்று ராஜன் கூறியுள்ளார். இந்திய வாடிக்கையாளர் கட்டணங்கள் காரணமாக அதிக விலையை செலுத்துகின்றனர், மேலும் இந்திய வரி செலுத்துவோர் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற சர்வதேச உற்பத்தியாளர்களுக்கும் அரசு மானியங்களை வழங்குகிறது.

தரவுகளை மேற்கோள் காட்டி ரகுராம் ராஜன், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் திட்டமும் ஏற்றுமதியை அதிகரிக்க உதவவில்லை. "2019ன் மூன்றாம் காலாண்டில் (பிஎல்ஐ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பும், கோவிட் தொற்றுக்கு முன்பும்), ஏற்றுமதி $1.6 பில்லியனாகவும் மற்றும் இறக்குமதிகள் $2.8 பில்லியனாகவும் நிகர பற்றாக்குறை $4.4 பில்லியனாகவும் இருந்தது. 2021 இன் மூன்றாம் காலாண்டிற்குப் பிறகு இந்த ஊக்கத்தொகை பிஎல்ஐ அறிமுகப்படுத்தப் பின்பு, ஏற்றுமதி $2.7 பில்லியனாகவும் மற்றும் இறக்குமதி $5.2 பில்லியனாகவும் நிகர பற்றாக்குறை $2.4 பில்லியனாகவும் இருந்தது. ஆனால் ஏற்றுமதிகள் இத்திட்டத்திற்கு முன்பே அதிகரித்து வருகின்றன, என்றும் சுட்டிக்காட்டினார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZ) 100% வீட்டிலிருந்தே வேலை செய்ய  அனுமதிப்பதை அரசு பரிசீலிக்கிறது. இந்த நடவடிக்கையால் 350 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பணிபுரியும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பயனடைவர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் இருந்து மொத்த ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமாக பங்களிக்கிறது.

வியட்நாமும் இந்தியாவும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புகின்றன. இந்தியாவிற்கான வியட்நாமின் துணைத் தூதுவர் தோ தன் ஹை அவர்களின், இந்தியப் பயணமானது இந்தியா-வியட்நாமிற்கிடையே அதிக முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை கோருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக அளவுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த நிதியாண்டில் வர்த்தகம் 27% உயர்ந்து 14 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, “வியட்நாமில் இந்தியாவின் முதலீடுகள் சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய அளவில் மின்சாதன உற்பத்திக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை முதலில் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியை தளமாகக் கொண்ட மொபைல் தயாரிப்பு நிறுவனமான பேட்ஜட் எலக்ட்ரானிக்ஸிற்கு (Padget Electronics) 2021-22 நிதியாண்டிற்கான அதன் அதிகரிக்கும் முதலீடு மற்றும் விற்பனை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஊக்கத்தொகையாக ரூ.530 மில்லியன் ஒதுக்கப்பட்டது. நிட்டி ஆயோக்கின்  தரவுகளின் படி, 32 பெரிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அதில், ஐந்து உலகளாவிய மற்றும் ஐந்து உள்நாட்டு நிறுவனங்கள் மொபைல் உற்பத்தியாளர்கள் உள்ளன.

'அதிக திறன் கொண்ட சோலார் பிவி தொகுதிகள் தயாரிப்பதற்கான தேசிய திட்டத்தில்' உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.195 பில்லியன் பிஎல்ஐ திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு சுமார் 65,000 மெகாவாட் உற்பத்தி திறன் முழுமையாகவும், பகுதியுடனும் ஒருங்கிணைந்த சோலார் பிவி தொகுதிகள் நிறுவப்படும். இது ரூ.940 பில்லியன் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் 200,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs), நிதித்தொழில்நுட்ப (fintech) நிறுவனங்களுடன் இணைந்து கடன் வழங்குவதற்கும், டிஜிட்டல் வழியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் அரசு ஆதரவாக உள்ளது என்று நிதிச் சேவைத் துறையின் இயக்குநர் (வங்கிச் செயல்பாடுகள்) ஹர்திக் முகேஷ் ஷெத் கூறியுள்ளார்.

தகவல் அறியும் உரிமையின் கீழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தகவலின்படி, 2020 மே மாதம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (ECLG திட்டம்) கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு ஆறு கடனில் ஒன்று செயல்படாத சொத்தாக (NPA) மாறியுள்ளது. தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனத்தின் (NCGTC) தரவுகளின் படி, வழங்கப்பட்ட மொத்த 9.8 மில்லியன் கடன்களில், 1.6 மில்லியன் கணக்குகள் அல்லது 16.4 % செயல்படாத சொத்துக்ககளாக மாறியுள்ளன. இந்த கடன்களை நிர்வகிக்க என்சிஜிடிசி உருவாக்கப்பட்டது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை ரூ.2 மில்லியனுக்கும் குறைவானவை. கோவிட்-19 வெடித்ததை அடுத்து, பல்வேறு துறைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையில், சலுகை விகிதத்தில் கடன் பெற அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் மே 2020 இல் அறிவிக்கப்பட்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs), வட்டி விகிதம் 14 %ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கான வட்டி விகிதம் 9.25 %ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிலியன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்த டார்ட்சே சீனாவோடு தொடர்புடைய எண்ணற்ற போலி நிறுவனங்களின் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்களின் வாரியங்களில் போலியான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2022 செப்டம்பர் 8 அன்று கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் (எம்சிஏ) குர்கானில் உள்ள ஜிலியான் ஹாங்காங் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிலியான் கன்சல்டன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பெங்களூரில் உள்ள ஃபினின்டி பிரைவேட் லிமிடெட் , ஹைதராபாதில் உள்ள ஹூசிஸ் கன்சல்டிங் லிமிடெட் ஆகியவற்றின் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் தீவிர மோசடி குறித்த புலனாய்வு அலுவலகம், டார்ட்சே என்பவரை கைது செய்தது.

சீன கட்டுப்பாட்டில் உள்ள" செயலிக்கு எதிராக இந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து,Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகியவற்றின் ஆன்லைன் பேமெண்ட் கேட்வே கணக்குகளில் " வணிக நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை முடக்கியதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) தேசிய ஓய்வூதியத் திட்ட-என்பிஎஸ் சந்தாதாரர்கள் தங்கள் வருடாந்திரத் திட்டங்களைப் மாற்றுவதற்கு அனுமதிக்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (ஐஆர்டிஏஐ) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேசிய ஓய்வூதியத் திட்ட-என்பிஎஸ் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

பன்முகத்தன்மை மற்றும் லாபத்தை தொடர்புபடுத்தி, 12 நாடுகளில் செயல்படும் சுமார் 1000 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் பலதரப்பட்ட நபர்களை வாரியங்களில் கொண்ட நிறுவனங்களின் சராசரி லாபம் 43% உயர்வாக இருப்பதாகவும், அதிக பெண்களை வாரியத்தில் சேர்ப்பதற்கு அரசு இதற்கு மேல் அழுத்தம் கொடுக்க முடியாது, சமூகத்திலிருந்தே அழுத்தம் வர வேண்டும்  என்றும் கூறியுள்ளார்.

கார்ப்பரேட் விவகார அமைச்சகம் சிறிய அளவிலான நிறுவனங்களின் மூலதனத்திற்கான வரம்பை மீண்டும் திருத்தியுள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ், சிறிய நிறுவனங்களின் வரையறையில், அவற்றின் செலுத்தப்பட்ட மூலதனத்திற்கான வரம்பை ₹50 லட்சத்திலிருந்து ₹2 கோடியாகவும், விற்றுபெறும் முதலை ₹2 கோடியிலிருந்து ₹20 கோடியாகவும் உயர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் 2021ல் 283,420 எண்ணிக்கையில் இருந்த பயணிகள் வாகனங்களின் விற்பனை அளவு 18.5 % உயர்ந்து 335,943 ஆக உள்ளது. ஏப்ரல்-ஆகஸ்ட் 2022 இல் மொத்தம் 1,754,575 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2021 ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் விற்பனை செய்யப்பட்ட 1,373,536 பயணிகள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 27.7 % அதிகம்.

ஆகஸ்ட் 2021 இல் ரூ. 15,082.28 கோடி (USD 2,031.64 மில்லியன்) உடன் ஒப்பிடும்போது, ஆகஸ்டில், வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களின் (CPD) ஒட்டுமொத்த மொத்த ஏற்றுமதி 0.84 சதவீதம் குறைந்து ரூ.14,955.8 கோடியாக (USD 1,879.74 மில்லியன்) குறைந்துள்ளது.ரத்தினங்கள், நகைகளின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 % உயர்ந்து ரூ.26,418.84 கோடியாக உள்ளது.

மேலும் 10 நிலக்கரி சுரங்கங்களை நிலக்கரி அமைச்சகம் ஏலமிட்டுள்ளது கடும் கண்டனங்களுக்குரியது.

மோதிலால் ஓஸ்வால் அறிக்கையின்படி, முன்னுரிமைத் துறை கடன் சான்றிதழின் (PSLCs) வர்த்தக அளவு 2021 நிதியாண்டில் 25.9% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2022ல் 12.4% உயர்ந்து ₹6.6 லட்சம் கோடியாக உள்ளது. சொத்துத் தரத்தில், தனியார் வங்கிகளின் முன்னுரிமைத் துறை கடன் போர்ட்ஃபோலியோ, பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது, சிறப்பாக உள்ளது. அறிக்கையின்படி, தனியார் துறை வங்கிகளில் 2222 நிதியாண்டில் முன்னுரிமைத் துறை கடன் சான்றிதழை அதிகம் வாங்கும் நிறுவனமாக ஹெ.டி.எஃப்.சி வங்கி உள்ளது, மற்ற பெரிய வங்கிகள் நிகர விற்பனையாளர்களாக இருந்தன. பொதுத்துறை வங்கிகளுக்குள், எஸ்பிஐ மிகப்பெரிய வாங்குபவராக இருந்தது, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை முக்கிய விற்பனையாளர்களாக இருந்தன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபின்டெக் தொழில்துறையை தொலைதூர தடையை உடைத்து, நம்பிக்கையை அதிகரிக்க அரசு, அதன் முகமை அமைப்புகளுடன் அதிக ஈடுபாட்டுடன் இயங்கவேண்டும் என்று தொழில்துறையினரிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) என்ற தனியார் அமைப்பின் தரவுகளின் படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.43 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.68 விழுக்காட்டிலிருந்து செப்டம்பரில் 5.84 விழுக்காடாகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் 9.57 விழுக்காட்டிலிருந்து 7.70 விழுக்காடாகக் குறைந்துள்ளது. செப்டம்பரில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு உயர்ந்து வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது" என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் நிதியாண்டில் நட்டத்தில் இயங்கும் 19 மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (CPSE) லாபகரமாகத் திரும்பியுள்ளன. நடப்பு நிதியாண்டில் 255 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ. 24.26 லட்சம் கோடியாக உள்ளது, முந்தைய ஆண்டில் ரூ. 24.58 லட்சம் கோடியாக இருந்தது 1.30% குறைந்துள்ளது. இந்த பொதுத்துறை நிறுவனங்ககளின் செலவினங்களின் வீழ்ச்சியால் லாபம் அதிகரித்துள்ளது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த நிகர லாபம், முந்தைய ஆண்டின் ரூ.1.4 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 37.53% அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் என்டிபிசி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மொத்த நிகர லாபத்தில் 41.11 விழுக்காட்டைப் பெற்றுள்ளன. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த இழப்பு முந்தைய ஆண்டில் ரூ.44,277 கோடியிலிருந்து 29.85% குறைந்து ரூ.31,058 கோடியாக இருந்தது. பாரத் சஞ்சார் நிகம் (51.91 சதவீதம்), ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் (79.82 சதவீதம்), மங்களூர் ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல்ஸ் (92.31 சதவீதம்), மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் (33.38 சதவீதம்) ஆகியவற்றில் ஏற்பட்ட நட்டம் குறைந்ததால் மொத்த நட்டம் குறைந்துள்ளது.

பஞ்சாப் மாநில நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹2,500 வழங்க பஞ்சாப் அரசு முன்மொழிந்தது. மத்திய அரசு ஏக்கருக்கு ₹1,500 செலுத்த வேண்டும் என்றும், ஏக்கருக்கு ₹1,000 பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் ஏற்கும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது. பயிர்க் கழிவுகளை எரிக்காத விவசாயிகளுக்கு ரொக்க ஊக்கத்தொகையை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று பஞ்சாப் முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.

உற்பத்தி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால், வரும் மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 25% அளவில் குறையும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகளாவிய அரிசி வர்த்தகத்தில் 40% பங்கு வகிக்கும் இந்தியா, 2021-22 நிதியாண்டில் 21.23 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 17.78 மில்லியன் டன்களாக இருந்தது. கோவிட் தொற்றுநோய்க்கு முன், 2019-20 நிதியாண்டில் ஏற்றுமதி 9.51 மில்லியன் டன்களாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், இந்தியா 9.35 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 8.36 மில்லியன் டன்னாக இருந்தது.

உடைந்த அரிசி சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான காலக்கெடு 2022  அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

நெல் விதைப்பில் இருந்த பற்றாக்குறை 4 வாரங்களில் 12% இல் இருந்து 4.9% ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்த காரீஃப் பயிர்கள் ஓராண்டுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் குறைவாகவே விதைக்கப்பட்டுள்ளன.

போன்பே, கூகுள்பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் அசல் எண்ணுக்குப் பதிலாக மாற்று எண்ணை உருவாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த மாற்று எண் ‘டோக்கன்’ என்று அழைக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசம் வரும் செப். 30-ல் முடிய உள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் 80% கார்டு (1.4 கோடி) எண்களை டோக்கன் முறைக்கு மாற்றியுள்ளதாக போன்பே தெரிவித்துள்ளது.

திறந்தவெளி இணைய வர்த்தக (இ-காமர்ஸ்) கட்டமைப்பான ஓஎன்டிசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், ஓஎன்டிசி அறிமுகத்துக்குப் பிறகு இணைய வர்த்தகத் துறை முற்றிலும் மாறிவிடும் என்று ஒஎன்டிசி-யின் தலைமை செயல்அதிகாரி டி.கோஷி தெரிவித்துள்ளார். இ-காமர்ஸ் துறையை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்தக் கட்டமைப்பு ஓஎன்டிசி (Open Network for Digital Commerce) என்று அழைக்கப்படுகிறது. இணைய வணிகத்திற்கான திறந்த வலையமைப்பாக (ONDC) ஜனநாயகமயமாக்கும் இந்த அரசு திட்டத்தில் ஒன்பது வங்கிகள் பங்குதாரர்களாகியுள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நெட்வொர்க்கில் தலா 6.35 % பங்குகளையும், கொல்கத்தாவைச் சேர்ந்த யூகோ வங்கிக்கு 3.17 % பங்குகளையும் பெற்றுள்ளன. மேலும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) ஆகியவையும் தலா 6.35 % பங்குகளை வாங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியால் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செயல்படுத்த உருவாக்கப்பட்ட நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

சிறு குறு நடுத்தர தேசிய வாரியத்தின் (NBMSME) 18வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய, சிறு குறு நடுத்தர நிறுவனத் துறையின் அமைச்சர் நாராயண் ரானே, வேலைவாய்ப்புக்கான தரவுத்தளத்தை அணுகுவதற்காக தேசிய வேலைவாய்ப்பு சேவையை (NCS) உத்யம் தரவுதளத்துடன் ஒருங்கிணைப்பதைத் தொடங்கி வைத்தார்.

2023க்கான தற்காலிக மொத்த நேரடி வரி வசூல் செப்டம்பர் 8 வரை ரூ. 6.48 லட்சம் கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 35.5 % அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. "நேரடி வரி வசூல், திருப்பிச் செலுத்துதல் தொகை நீங்கலான நிகர மதிரப்பு, ரூ. 5.29 லட்சம் கோடி ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலத்திற்கான நிகர வசூலை விட 30.17% அதிகம். இந்த வசூலானது நேரடி வரிகளுக்கான 2022-23 நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 37.24% என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ரூ. 1.19 டிரில்லியன் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது, இது 2022 இல் இதே காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட பணத்தை விட 65.3 % அதிகம். நிகர பெரு நிறுவன வரி மற்றும் தனிநபர் வருமான வரி வசூல், திருப்பிச் செலுத்துதல் தொகையை-ரீஃபண்டுகளை சரிசெய்த பிறகு, முறையே 32.7% மற்றும் 28.3% அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த முன்கூட்டிய வரி வசூல் செப்டம்பர் 17ஆம் தேதியின்படி ரூ.2,95,308 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும்.

மிகவும் ஜனநாயகமாக செயல்படுவது போன்ற வெளிப்பூச்சுடனும் நேரடியாகவும் மாநிலங்களின்  நிதிஉரிமைகளை பாஜக அரசு கடுமையாக ஒடுக்கிவருகிறது.

மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அல்லது கடன் வாங்குதல் ஆகியவற்றில், தங்கள் நிதி அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பதாக மாநிலங்கள் புகார் கூறுகின்றன இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பிபேக் தேப்ராய் பின்வருமாறு கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநிலப் பட்டியலில் உள்ளவற்றிற்கு, நிச்சயமாக, மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் இருக்கக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. ஏதாவது முக்கியமானதாக இருந்தால், அது 100% மத்திய அரசின் நிதியுதவியுடன் மத்திய துறை திட்டமாக இருக்க வேண்டும். ஏழாவது அட்டவணையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு (தேசத்திற்கான) மாதிரியை உருவாக்குவது பற்றி நாம் பேசினால், முழு அரசியலமைப்பையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன்” என்கிறார் பிபேக் தேப்ராய்.

இந்தியாவிற்கு இவ்வளவு பொதுத்துறை வங்கிகள் தேவையில்லை என முன்னாள் எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார். இந்தியாவிற்கு 'குறைவான' ஆனால் வலுவான பொதுத்துறை வங்கிகள் (PSBs) தேவைப்படுகின்றன, மேலும் சிறியவை தனியார்மயமாக்கப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் என்கிறார் அவர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதன் மூலம் அடையப்படும் என எதிர்பார்க்கப்படும் இலக்குகளில் பெரும்பாலானவை அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளை செயல்படுத்துவதன் மூலமும், அடைய முடியும் என்றும் கூறியுள்ளார். அவரது கருத்து முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மூலமே சிறப்பாய் செயல்படமுடியும் எனும் போது எதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பொதுத்துறை வங்கிகள் தேவை என்றும், சிறிய வங்கிகளை தனியார்மயப்படுத்தலாம் எனத் தனியார்மயத்தை ஆதரிக்கவேண்டும்.

இந்தியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகத்திற்கான பல பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை. அவற்றைப் பயன்படுத்தினால் சட்டச் சிக்கல் நேரிடும். இந்தியாவில் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத செயலிகள் மற்றும் வலைத்தளங்களின் முழு எச்சரிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பல அங்கீகரிக்கப்படாத தளங்கள் முதலீடு செய் தால் உயர்ந்த வருமானம் கிடைப்பதாக உறுதியளித்து மக்களை கவர்ந்திழுக்கின்றன. அத்தகைய தளங்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது மட்டுமல்ல, பயனர்கள் சட்டப்பூர்வ சிக்கலில் சிக்கக்கூடும். இந்த அங்கீகரிக்கப்படாத தளங்களைப் பயன்படுத்துபவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

"அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை-வர்த்தகப் பொருட்களில் (Exchange-traded products  ETP) அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது அத்தகைய அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு பணம் அனுப்பவோ/டெபாசிட் செய்யவோ கூடாது என பொதுமக்கள் மீண்டும் எச்சரிக்கப்படுகிறார்கள். “ஃபெமா” சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டவை தவிர ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை-வர்த்தகப் பொருட்களில் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் குடிமக்கள், ஃபெமாவின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021 மனித வளர்ச்சிக் குறியீட்டில் 191 நாடுகளில் இந்தியா 0.633 ஹெச்டிஐ மதிப்புடன், 132 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் விநியோகம் செய்ததில் 24% பங்களிப்புடன் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, 21% பங்குடன் இராக் இரண்டாவது இடத்திலும், 15% பங்குடன் சவூதி அரேபியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஒபெக் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 13% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா இப்போது ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனையை அமெரிக்க டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து விடுகிறது. மேலும், டாலருக்கு நிகரானரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. மேலும் அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. இதனால், இனி இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுடனான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ள முடியும். தற்போது வர்த்தக கொள்கையிலேயே இதுதொடர்பாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையுடன் ஒத்திசைந்து ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான விலைப்பட்டியல், கட்டணம் மற்றும் தீர்வுகளை அனுமதிக்கும் என்றும் அது உடனடியாக நடைமுறைக்குவரும் என்றும் அறிவித்துள்ளது.

இருதரப்பு பரிவர்த்தனைகளை ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி ரபி சங்கர் ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் செய்ய 4-5 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். குறைந்த பட்சம் நான்கைந்து நாடுகள் மற்றும் பல வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பல உள்ளூர் வங்கிகளின் நேர்மறையான பதில்கள் அளித்துள்ளது.

உள்நாட்டு வங்கிகளில், அரசுக்கு சொந்தமான யூகோ வங்கி மட்டுமே இதுவரை வோஸ்ட்ரோ கணக்கைத் திறந்துள்ளது. மற்ற வங்கிகள் மேற்கத்திய அரசுகளின் தடைகளை பொருளாதாரத் தடைகளுக்கு பயந்து வோஸ்ட்ரோ கணக்கைத் திறக்காமல் உள்ளனர்.

2022ன் நான்காவது காலாண்டில் 9 துறைகளில் 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது துறைகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அக்டோபர்-டிசம்பர் 2021 இல்  31.4 மில்லியனாக இருந்தது 2022 ஜனவரி-மார்ச்சில் 31.8 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று நான்காவது சுற்று காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு (QES) தெரிவித்துள்ளது. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் உணவகங்கள், ஐடி/பிபிஓக்கள் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளில் இயங்கும் சுமார் 12,000 நிறுவனங்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை துயர்தணிப்பு (DR) ஆகியவற்றை மத்திய அமைச்சரவை 1 ஜூலை 2022 முதல் 4% உயர்த்தியுள்ளது. சுமார் 4.2 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும் சுமார் 6.9 மில்லியன் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை துயர்தணிப்பு (DR)ஆகிய இரண்டின் இந்த சமீபத்திய அதிகரிப்பால் ஆண்டுக்கு ரூ.128.5 பில்லியன் செலவாகும். ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாத காலத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.85.7 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

மத்திய அமைச்சரவை பொது மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவை (PMGKAY) மேலும் மூன்று மாதங்களுக்கு டிசம்பர் 2022 வரை நீட்டித்துள்ளது. இது ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் ஏழாவது நீட்டிப்பாகும். ஏழாம் கட்டத்திற்கு ரூ.447.6 பில்லியன் கூடுதல் செலவாகும். இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செலவினம் அனைத்து கட்டங்களுக்கும் சுமார் ரூ.3.9 டிரில்லியன் ஆகும். இலவச தானியங்கள் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு வருவாய் செலவினங்களில் சேமிப்பதன் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் அதற்காக கூடுதல் கடன் பெறப்படாது என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2022 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனச் செலவு (கேபெக்ஸ்) ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது. இது 2022-23க்கான ரூ.6.6 லட்சம் கோடி மூலதனசெலவுக்கான இலக்கில் 34 விழுக்காடாகும். 2021-22 இல் ரூ.5.5 டிரில்லியன் மதிப்புடன், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் 96 சதவீதத்தை எட்டியுள்ளன.

நிகர நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டில் இதுவரை 23 % ஊயர்ந்து ரூ.7 டிரில்லியன் ஆக உள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.1.4 டிரில்லியன் மதிப்புள்ள வருமான வரி ரீஃபண்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 83 % அதிகமாகும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் 46,000க்கும் மேற்பட்ட ஊழல் தொடர்பான புகார்களை பொதுமக்களிடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. வங்கி, காப்பீடு, ஓய்வூதியம், நிதி நிறுவனங்கள் போன்ற அரசாங்கத்தின் பல்வேறு நிதி செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ள நிதிச் சேவைகள் துறை (DFS) அனைத்து அரசாங்கத் துறைகளிலும் மிக அதிகமான ஊழலைக் கொண்டுள்ளது. இந்தப் புகார் பட்டியலில் நிதிச் சேவைகள் துறை (DFS) முதலிடத்தில் உள்ளது.

ஜிஎஸ்டி விசாரணை பிரிவு 824 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதை கண்டறிந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மார்க்கெட்டிங் சேவைகள் என்ற போர்வையில் தகுதியற்ற முறையில் உள்ளீட்டு வரிக்கடன்-‘ஐடிசி’யை வழங்குவதற்கான ஏற்பாட்டை உருவாக்கி, ஒருவருக்கொருவர் இணக்கமாக முறையில் மோசடி விலைப்பட்டியல்கள் அளித்துள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் டாலரின் மதிப்பு 14.5% உயர்ந்த நிலையில், ரூபாயின் மதிப்பு 7.4% குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி- ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளனர்.டாலரின் ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு மேல் வீழ்ந்துள்ளது. ஆனால் இந்திய ரூபாய் நன்றாக செயல்படுவதாகவும் மற்ற நாணயங்களைப் போல, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி விகிதம் கடுமையாக இல்லை என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிதி முதலீட்டாளர் (FPI) செப்டம்பரில் பங்குகளில் இருந்து ரூ.7,600 கோடி திரும்பப் பெற்று நிகர விற்பனையாளர்களாக உள்ளனர். இதன் மூலம், 2022ல் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் (எஃப்பிஐக்கள்) மொத்தம் ரூ.1.68 லட்சம் கோடியை இந்தியப் பங்குச்சந்தைகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 16 பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்ட மேல்-அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களாக வகைப்படுத்தியது. இந்நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்குள் புதிய விதிமுறைகளை கடைபிடிப்பதற்கான ஒரு செயல்படுத்தல் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

42% சிறு தொழில்கள், தொடக்க நிறுவனங்கள் செப்டம்பர் 30-க்குள் தணிக்கை அறிக்கை, வரிக் கணக்கு தாக்கல் செய்வது சிரமம் என கணக்காய்வில் தெரிவித்துள்ளன.

ஒழுங்கற்ற மழைப்பொழிவு காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் டிராக்டர் விற்பனை 4.6% வீழ்ச்சியடைந்தது.

அகல்நிலை கட்டணப் பகிரிகள்(ஆஃப்லைன்) நிகழ்நிலை (ஆன்லைன்) கட்டமைப்புகளுக்குள்ள அதே விதிமுறைகளின் கீழ் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதற்கு "எதிர்பார்க்கப்படும் இழப்பு" அணுகுமுறையை கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போது, வங்கிகள் "ஏற்பட்ட இழப்பு" அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன, அதில் ஒரு சொத்து வாராக் கடனாக மாறிய பிறகே வங்கி அதற்கான பணத்தை ஒதுக்குகிறது.

ஹிந்துஸ்தான் காப்பர் (HCL) 2022 இன் நிகர லாபத்தில் 30.01%ஆக 112.17 கோடியை பங்குகளுக்கான ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 373.78 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் நிகர லாபமான ரூ.109.98 கோடியை விட 338% அதிகமாகும்.

கோதுமை பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் முன்கூட்டிய அங்கீகாரத் திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதியை அனுமதிக்கக் கோரியுள்ளனர். முன்கூட்டிய அங்கீகாரத் திட்டமானது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய தயாரிப்புகளில் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய உள்ளீட்டு பொருள்களுக்கு வரியில்லா இறக்குமதியை அனுமதிக்கிறது. ஆனால் உள்நாட்டு சந்தையில் பொருட்களை விற்க அவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

தற்போதைய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையையே (FTP) மார்ச் 31, 2023 வரை ஆறு மாதங்களுக்கு அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

வங்கி கடன் வளர்ச்சி 16.67% உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், வங்கித் துறை வைப்புத்தொகைகள் 9.5% உயர்ந்து ரூ.170 லட்சம் கோடியாக வளர்ச்சியைப் பதிவுசெய்தது. வங்கிகளின் உணவு அல்லாத கடன் வளர்ச்சி 16.7% உயர்ந்துள்ளது.

ஹவானா கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்கள் - FIHAV2022

இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு (IETO) தலைமையில் டிசம்பர் 14-18 வரை ஹவானாவுக்குச் செல்கிறது. கோவிட் -19 கொள்ளை நோயால் கொண்டுவரப்பட்ட உலகளாவிய பொதுமுடக்கம் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள் ஹவானா கண்காட்சியில் FIHAV2022 பங்கேற்கும்.

இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு, இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பு (IETO) தலைமையில் நவம்பர் 14-18 வரை ஹவானாவுக்குச் செல்கிறது. கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்கள் குறித்து, இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெஜான்ட்ரோ சிமான்காஸ் மரின் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்: “இதுபோன்ற இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், நமது பன்முகத்தன்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் இது ஒரு வாய்ப்பை வழங்கும். இந்த கண்காட்சியில் பங்கேற்க டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த ஆண்டு கண்காட்சியில் சிறப்பு பங்காளியாக இருக்க அவர்களை நாங்கள் அழைத்துள்ளோம், இது தொடர்பாக எந்த ஆதரவையும் வழங்க தூதரகம் தயாராக உள்ளது" என்று தூதர் மரின் கூறினார். டாக்டர் ஆசிஃப் இக்பால் கருத்துப்படி, "இந்த கண்காட்சியானது கியூப சகாக்கள் மட்டுமின்றி, அங்கு இருக்கும் மண்டலங்களின் மற்ற பிரதிநிதிகளுக்கும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்த இந்திய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும்."

ஆகஸ்ட் மாதம் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் (IETO) பிரதிநிதிகள் குழு கியூபாவிற்கு சென்று கியூப வர்த்தக சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இது இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் (IETO) உறுப்பினர்களின் மூன்றாவது கியூபப் பயணமாகும். கியூபாவின் மத்திய வங்கியில் இருந்து ஒரு சில வங்கித் தலைவர்களுடன் மும்பைக்கு ஒரு பிரதிநிதிகள் குழு வருகை தந்தது. அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் வெற்றிகரமாக சந்திப்புகளை நடத்தினர். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ரூபாய்-பெசோ வர்த்தக வழிமுறைகளை எளிதாக்குவது ஆகியவை பேச்சுவார்த்தைகளின் மையமாக இருந்தன.

நிகழ்வில் தற்போதைய  "இந்தியா கியூபா" வணிக உறவுகளின் சிறப்பு பதிப்பு தொடங்கப்படும்.

கியூபப் பயணத்தின் முக்கியத்துவம்

கரீபிய தீவு நாட்டிற்கு இதற்குமுந்தைய பயணத்தின் போது, ​​மருத்துவப் பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடு என்பதால், பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான விவாதங்கள் நடந்தன.  இது பலனளிக்கும் பட்சத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கான மாற்று ஏற்பாடுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு புதிய இலக்கைத் திறக்கும். மேலும் "கியூபா ஒரு சிறந்த இடம்," என்றும் அவர் கூறினார்.

செப்டம்பரில், பயோகுபா ஃபார்மாவிலிருந்து டேவிட் கர்பெலோ தலைமையிலான ஒரு தூதுக்குழுவால் ஹைதராபாத்தில் பார்மா துறையில் பல தொடர்புகள் ஆழமடைந்தது.

டெல்லியில் உள்ள சுகாதார சேவை ஒழுங்கமைப்பாளர்கள் (ஹெல்த் ரெகுலேட்டர்கள்), முன்னணி மருந்து நிறுவனங்களுடன் பல வெற்றிகரமான சந்திப்புகளுக்குப் பிறகு, பயோகுபாவைச் சேர்ந்த டேவிட் கர்பெலோ கூறுகிறார்: “இந்திய மருந்து நிறுவனங்களிடமிருந்து மூலப்பொருட்களை கியூப மருந்து நிறுவனங்கள் தொடர்ச்சியாக இறக்குமதி செய்கிறது. வர்த்தகம் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை ஆழமாக்க நாங்கள் விரும்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உருக்குத் தயாரிப்புகளில் 25% வரி சுமத்திய லண்டனின் பாதுகாப்புவாத நடவடிக்கை முடிவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் விதத்தில்  இங்கிலாந்தில் இருந்து 22 பொருட்களை இறக்குமதி செய்ய 15% கூடுதல் வரியை இந்தியா முன்மொழிந்துள்ளது. தங்கம், வெள்ளி, விஸ்கி, டீசல் என்ஜின் பாகங்கள், பாலாடைக்கட்டி உட்பட 22 பிரிட்டிஷ் பொருட்களுக்கு 15% கூடுதல் இறக்குமதி வரி விதிக்க உலக வர்த்தக அமைப்பின் (WTO) அங்கீகாரத்தை இந்தியா நாடியுள்ளது. 2020ஆம் நிதியாண்டில் 13.2 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2021ஆம் நிதியாண்டில் 17.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி 116.36 மில்லியன் கிலோவைத் தொட்டது, இது 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 103.38 மில்லியன் கிலோவாக இருந்தது. ரஷ்யா மிகப்பெரிய இறக்குமதியாளராக ஏழு மாதங்களில் 18.55 மில்லியன் கிலோவை இறக்குமதி செய்துள்ளது.

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு 2022 இன் படி, உலகளாவிய புத்தாக்கத் தரவரிசையில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில், 2021ல் 46வது இடத்திலும், 2015ல் 81வது இடத்திலும் இருந்த இந்தியா, 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. துருக்கியும், இந்தியாவும் முதல் முறையாக முதல் 40 இடங்களுக்குள் நுழைந்து முறையே 37வது மற்றும் 40வது இடங்களைப் பிடித்துள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் 10வது பிரிக்ஸ் கூட்டத்தில் மெய்நிகர் முறையில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) நாடுகள் உணவு, மலிவு விலையில் சுகாதாரம் மற்றும் எரிசக்தி அணுகலை உறுதி செய்தல் மற்றும் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல் போன்ற பல சவால்களை எதிர்கொள்கின்றன இந்த சவால்களைத் தீர்க்க, மலிவு விலையில் அறிவியல் தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

 “பிரிக்ஸ் நாடுகள் சுகாதாரம், விவசாயம், நீர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரி தொழில்நுட்பம், மின்சார இயக்கம், ஐசிடி, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (S&T) தீர்வுகளை உருவாக்க ஒத்துழைக்க முடியும், அவற்றின் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு ஏற்றவாறு அவற்றை உருவாக்கவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு:

பஞ்சு விலை உயர்வால் 70 % தொழில்கள் முடங்கியுள்ளதாக, திருப்பூர் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதில், தொழில்துறையினர் பேசும்போது, "பஞ்சு, நூல் விலை உயர்வால் நூற்பாலைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த காலங்களில் வாரத்துக்கு 7 நாட்களும் வேலை இருந்தது. தற்போது, நூற்பாலைகளில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நிலை உள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலை காக்க, பஞ்சு விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், பொது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு காற்றாலை அல்லது சோலார் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கு மானியம் வழங்க வேண்டும்.தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணும் வகையில், பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும். பஞ்சு விலையை கட்டுப்படுத்தினால் விரைவில் திருப்பூர் முதலிடத்துக்கு வரும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA) ஆடைத் துறை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அவசரகால கடன் நிதி உதவியை (ECLGS) அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் பின்னலாடை ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை பணப்புழக்க நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க, தற்போதுள்ள கடனில் 20 விழுக்காட்டை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஜிஎஸ்டி, மின் கட்டணம், சொத்து வரி, மூலப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் செப்டம்பர் 13-ம் தேதி இணைய வழியில் நடைபெற்றது.

பருத்தி, நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், திருப்பூரில் உள்ள 90 விழுக்காடு சிறு, குறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தொழில்துறையினர் முறையிட்டுள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என, தமிழக முதல்வருக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே பருத்தி விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஜவுளித் தொழில் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. எனவே, நிலைமை சீராகும் வரையாவது மின்கட்டண உயர்வை தள்ளிவைத்திருக்கலாம் என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியுள்ளார்.

டாங்கெட்கோவின் (TANGEDCO) மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் என பெல்சியா (BELSIA) கூட்டமைப்பின் தலைவர் ராஜப்பா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

"நியாயமற்ற, மற்றும் கவனக்குறைவான" கட்டணத் திருத்தத்தை மாநில அரசு திரும்பப் பெறாவிட்டால், குறைந்தபட்சம் 50 சதவீத தொழில்கள் மூடப்படும் என்று திருச்சி வர்த்தக மையத் தலைவர் கனகசபாபதி கூறியுள்ளார். ஜிஎஸ்டி, கோவிட் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைக்கு இந்த திருத்தப்பட்ட கட்டணம் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

வேளாண் விளை பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அடுத்த மாதம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மின் கட்டண உயர்வில் ரூ.3,217 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில், தற்போது கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தும் வகையில், ‘பைசாட்டோ’ என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது இந்த செயலி சென்னையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் 8,840 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் ஜூலை 24-ம் தேதி வரை 3,300 கோடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளில் 28.4 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி மீண்டும் உயர்த்தப்பட்டதால் உள்நாட்டில் கிரைண்டர் விற்பனை சரிவடைந்துள்ளது. இட்லி, தோசை மாவுக்கு அதிக தேவை உள்ள காரணத்தால் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கோவையிலிருந்து அதிக அளவு வெட்கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக உள்நாட்டில் விற்பனை குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி பட்டியலில் கிரைண்டர்களை சேர்க்க வேண்டும். இது குறித்து மத்திய, மாநில அமைச்சர்களை சந்திக்க உள்ளோம் என்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளர்.

மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT-T) நடைபெற்றது. இதில் பல்வேறு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். எம்எஸ்எம்இ மேம்பாடு மற்றும் வசதி அலுவலகத்தின் இணை இயக்குநர் எஸ்.சுரேஷ் பாபுஜி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, எம்எஸ்எம்இக்களுக்கான திட்டங்களை எடுத்துரைத்து, பங்கேற்பாளர்களை உதயம் போர்ட்டலின் கீழ் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பங்கேற்பாளர்கள் ஐஎஸ்ஓ 9000, ஜீரோ டிஃபெக்ட் ஜீரோ எஃபெக்ட் (இசட்இடி) சான்றிதழ் மற்றும் கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தங்களைப் பதிவு செய்யுமாறும் அவர் ஊக்குவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்டுகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான 10 ஏற்றுமதி வழிகாட்டுதல் மையங்களை தமிழகம் அமைக்க உள்ளதாக சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம்:

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்கு பிறகான குறைந்த அளவிலிருந்து ஒட்டுமொத்தமாக 3% (அல்லது 300 அடிப்படை புள்ளிகள்) உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும் பட்சத்தில், உலக அளவில் பாலின சமத்துவம் முழுமையாக ஏற்பட இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக, உலகில் 54% பெண்கள் முறையான கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா, சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் ஆண்டுதோறும் 8 லட்சம் பெண்கள் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது..

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் பெண்களுக்கு எதிரான வறுமையை ஒழிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா, உலகில் தோராயமாக 38.30 கோடி பெண்கள் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாகவும், உணவு, உடை, இருப்பிட வசதி ஆகியவற்றை பெற முடியாத நிலையில் இவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு (அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3,189 கோடி) உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது இலங்கைக்கு உதவிகள் தொடரும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) உதவிகோரி இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்க சர்வதேசப் பண நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகால அளவில் 2.9 பில்லியன் டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) நிதி வழங்க இருப்பதாகவும் தற்போது முதற்கட்டமாக அதிகாரிகள் அளவிலான ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது என்றும் ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 10% ஆக உயர்ந்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜூன் மாதத்தில் இருந்து 0.2% மட்டுமே உயர்ந்துள்ளது. உயர்ந்து வரும் விலைகள் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை பாதித்து, மந்தநிலை அபாயத்தை அதிகரித்துள்ளது.

ஆஃபிரிக்க நாடுகளுக்கு மொத்தம் 23 வட்டியில்லா கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், 10 பில்லியன் டாலர் ஐஎம்எஃப் இருப்புக்களை ஆஃபிரிக்காவுக்கு திருப்பி விடுவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

சர்வதேச வளர்ச்சிக்கான ஓபெக்-OPEC நிதியம் அதன் முதல் காலநிலை செயல் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் அதன் காலநிலை நிதியுதவியை 25 %ஆகவும், 2030 ஆம் ஆண்டில் 40 %ஆகவும் உயர்த்த உறுதியளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான கிரெடிட் சுவிஸ், வெளியிட்டுள்ள வருடாந்திர உலக சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல்சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 நிலவரப்படி இந்தியாவில் 7.96 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026-ல் இந்த எண்ணிக்கை 105 % உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவில் 2021 நிலவரப்படி 62 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கோடீஸ்வரர்களின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், பிரிட்டன் நான்காம் இடத்திலும் உள்ளன.

உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை 25-ம் இடத்தில் உள்ளது. மும்பை நகரில் 60,600 பேர் 10 லட்சம் டாலருக்கு மேலாகவும், 243 பேர் 10 கோடி டாலருக்கு (ரூ.800 கோடி) மேலாகவும், 30 பேர் 100 கோடி டாலருக்கு (ரூ.8,000 கோடி) மேலாகவும் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். விரைவில் முதல் 20 இடங்களுக்குள் மும்பை முன்னேறும் என்று லண்டனை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.

சொந்த நாடு பிடிக்காமல், நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 10 லட்சம் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 3.45 லட்சம் பேர் 10 லட்சம் டாலருக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2-வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, 3-வது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ, 4-வது இடத்தில் லண்டன், 5-வது இடத்தில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளன.

மத்திய வங்கிகள் ஒரே நேரத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், 2023ல் பொருளாதாரம் உலகளாவிய மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பின் (WEF) கணக்கெடுப்பு பணவீக்க உயர்வு, ஊதிய வீழ்ச்சிகளின் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...