Friday, September 2, 2022

நமது பொருளாதாரம்:

 

இந்தியாவின் புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணரும், திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 72.

2000ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீண்ட கால தானியக் கொள்கைக்கான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அவர் தான் எழுதினார், அதில் விவசாய செலவுகள், விலைகளுக்கான குழுவை (CACP) அதிகாரம் பெற்ற சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றவும், தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயம் செய்ய C2 உற்பத்திச் செலவைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தார். C2 என்பது ஊதியம் அளிக்கப்படாத குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பையும், சொந்தமான நிலம் மற்றும் நிலையான மூலதனச் சொத்துக்களுக்கான வாடகை, வட்டியையும் உள்ளடக்கிய விரிவான உற்பத்திச் செலவு ஆகும். இதுவே எம்எஸ் சுவாமிநாதன் குழு அறிக்கையில் இணைக்கப்பட்டுப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதாரவிலை C2 செலவை விட குறைந்தபட்சம் 50% அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அபிஜித் சென் தலைமையிலான நீண்ட கால தானியக் கொள்கை குறித்த உயர்மட்ட நிபுணர்கள் குழு, அனைவருக்குமான பொது விநியோக முறையை (PDS) பரிந்துரைத்தது.

திட்டக் கமிஷனில் 11வது மற்றும் 12வது ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளில் அவர்  முக்கியப் பங்களித்துள்ளார். விவசாயத் திட்டமான ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY) திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றிய அபிஜித் சென் 14வது நிதிக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இந்தியா:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.4ஆக இருந்தது தற்போது ரூ.80 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

பணவீக்கம்:

ஜூலை மாதத்தில் மொத்தவிலைப் பணவீக்கம் 13.93% உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், மின்சாரம், இரசாயனங்கள் இரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வின் காரணமாக மொத்தவிலைப் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தவிலைப் பணவீக்கம் 15.18% ஆக இருந்தது.

முதன்மைப் பொருட்களின் விலை 15.04% உயர்ந்துள்ளது. எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 43.75% உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 8.16% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 9.41%  உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு 5.59% உயர்ந்துள்ளது சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது பணவீக்கம் 0.46% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 3.96% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 6.41% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 10.90% உயர்ந்துள்ளது. பருப்பு, பயறு வகைகளின் விலைவாசி 0.18% உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பணவீக்கம் 4.78% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலே அதிக அளவாக தெலங்கனாவில் பணவீக்கம் 8.58% உயர்ந்துள்ளது.

ஜூன் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி:

தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக்குறியீடு ஜூன் மாதத்தில் 12.3% உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் சுரங்கத்துறையின் உற்பத்தி 7.5% உயர்ந்துள்ளது. உற்பத்தித்துறை 12.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மின்சாரத்துறையில் உற்பத்தி 12.5% உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 13.7% உயர்ந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 26.1% உயர்ந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 11.0% உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 8.0% உயர்ந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 23.8% உயர்ந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 2.9% உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி:

வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டத் தரவுகளின் படி எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் 4.5 விழுக்காடாகக் குறைந்தது.  சென்ற ஆண்டில் ஜூலை மாதத்தில் வளர்ச்சி 9.9 விழுக்காடாக இருந்தது. இந்த உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 13.2 விழுக்காடும், மே மாதத்தில் 19.3 விழுக்காடும், ஏப்ரலில் 9.5 விழுக்காடும், மார்ச்சில் 4.8 விழுக்காடும், ஃபிப்ரவரியில் 5.9 விழுக்காடும், ஜனவரியில் 4 விழுக்காடும் விரிவடைந்திருந்தது.

ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 11.4% உயர்ந்துள்ளது, கச்சா எண்ணெய் உற்பத்தி 3.8% குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 0.3% குறைந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி 6.2% குறைந்துள்ளது, உர உற்பத்தி 6.2% உயர்ந்துள்ளது, உருக்கு உற்பத்தி 5.7% உயர்ந்துள்ளது, சிமெண்ட் உற்பத்தி 2.1% உயர்ந்துள்ளது. மின்சாரம் உற்பத்தி 2.2% உயர்ந்துள்ளது

எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலாண்டில் 11.5 விழுக்காடாக உள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 21.4 விழுக்காடாக இருந்தது.

 

2022-23 மொத்தப் பொருளாக்க மதிப்பு:

புள்ளியியல் அமைச்சகம் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்தப் பொருளாக்க மதிப்பை (GDP) வெளியிட்டுள்ளது. உண்மையான மொத்தப் பொருளாக்க மதிப்பு (GDP) நிலையான (2011-12) விலையில் 2022-23 காலாண்டில் ₹ 36.85 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது மொத்தப் பொருளாக்க மதிப்பின் விகிதம் 13.5%ஆக உள்ளது. சென்ற ஆண்டின் (2021-22) முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹ 32.46 லட்சம் கோடியாக 20.1 % அதிகரித்திருந்தது. 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உற்பத்தித் துறையானது 4.8% உயர்ந்துள்ளது, சென்ற நிதியாண்டில் 49% உயர்ந்திருந்தது. அதே சமயம் சென்ற ஆண்டு 6.5% உயர்ந்திருந்த சுரங்கத் துறையின் உற்பத்தி இந்த ஆண்டில் 18% வளர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 2.2%  உயர்ந்திருந்த விவசாயம் சார்ந்தத் துறைகளின் வளர்ச்சி இந்த ஆண்டில் 4.5% வளர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 13.8% உயர்ந்திருந்த மின்சாரம், எரிவாயு, குடிநீர் சேவைத் துறை இந்த ஆண்டில் 14.7% வளர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 71.3%  உயர்ந்திருந்த கட்டுமானத் துறை இந்த ஆண்டில் 16.8% வளர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 34.3 %  உயர்ந்திருந்த வர்த்தகம், தொலைத்தொடர்பு, உணவகத் துறைகள் இந்த ஆண்டில் 25.7% வளர்ந்துள்ளன. சென்ற ஆண்டில் 2.3%  உயர்ந்திருந்த நிதி, குடிமனை, தொழில்முறைச் சேவைத் துறைகள் இந்த ஆண்டில் 9.2% வளர்ந்துள்ளன. சென்ற ஆண்டில் 6.2 %  உயர்ந்திருந்த பொது நிர்வாகம், பாதுகாப்பு, இதர சேவைத் துறைகள் இந்த ஆண்டில் 26.3% வளர்ந்துள்ளன. சென்ற ஆண்டில் 18.1%  உயர்ந்திருந்த மொத்த மதிப்புக் கூட்டலின் அளவு, இந்த ஆண்டில் 12.7% வளர்ந்துள்ளன.

 

2022-23 முதல் காலாண்டில் 16.2%ஆக இருக்கும் என கணித்திருந்த இந்திய மத்திய வங்கியின் மதிப்பீட்டை விட மொத்தப் பொருளாக்க மதிப்பின் (GDP) வளர்ச்சி, குறைவாக உள்ளது.

சென்ற ஆண்டில் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 54.0%ஆக இருந்த தனியார் இறுதி நுகர்வு செலவினம் இந்த ஆண்டில் 59.9%ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 12.6%ஆக இருந்த அரசின் இறுதி நுகர்வு செலவினம் இந்த ஆண்டில் 11.2%ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 32.8%ஆக இருந்த மொத்த நிலை மூலதன  உருவாக்கத்தின் மதிப்பு இந்த ஆண்டில் 34.7%ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 22.7%ஆக இருந்த ஏற்றுமதியின் மதிப்பு இந்த ஆண்டில் 22.9%ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 25.7%ஆக இருந்த இறக்குமதியின் மதிப்பு இந்த ஆண்டில் 31.0 %ஆக உயர்ந்துள்ளது.

வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகம் 2021-22ஆம் ஆண்டிற்கான முக்கியப் பயிர்களின் உற்பத்திக்கான நான்காவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 2021-22 பயிர் ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 315.7 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020-21 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியை விட ஐந்து மில்லியன் டன்கள் அதிகமாகும். மேலும், 2021-22ல் உற்பத்தியானது முந்தைய ஐந்து ஆண்டுகளின் (2016-17 முதல் 2020-21 வரை) உணவு தானியங்களின் சராசரி உற்பத்தியை விட 25 மில்லியன் டன்கள் அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சில்லறை வணிகங்களின் விற்பனை, கோவிட் கொள்ளை நோய்க்கு முந்தைய நிலைகளுடன் (ஜூலை 2019) ஒப்பிடும்போது, ஜூலை 2022 இல் 18% உயர்ந்துள்ளது என இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் (RAI) கணக்கெடுப்பு காட்டுகிறது. ஜூன் 2022 இல் காணப்பட்ட 13% விற்பனை வளர்ச்சியை விட இது அதிகமாகும். விளையாட்டுப் பொருட்கள் ஜூலை 2019 விட 32% வளர்ச்சியுடன் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தன, அதைத் தொடர்ந்து பாதணிகள், தளவாடங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஒவ்வொன்றும் 23 % உயர்ந்துள்ளன.

நிகர நேரடி வரி வசூல் 2022 ஏப்ரல்-ஜூலை காலத்தில் 40% அதிகரித்து ரூ.5 லட்சம் கோடியாக உள்ளது. இது முழு நிதி ஆண்டு இலக்கான ரூ.14.2 லட்சம் கோடியில் கிட்டத்தட்ட 35 விழுக்காடாகும். நான்கு மாத காலப்பகுதியில் நேரடி வரி செலுத்துதல் 38 சதவீதம் அதிகரித்து ரூ.670 பில்லியனாக உள்ளது. தனிநபர் வருமான வரி வசூல் 52 % வளர்ச்சியுடன் ரூ.2.7 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது, அதே சமயம் பெருநிறுவன வரி வசூல் 2022 ஏப்ரல்-ஜூலையில் ரூ.450 பில்லியனாக உள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கையின் (AIS) பயன்பாடு உட்பட தொழில்நுட்பப் பயன்பாடு, இறுக்கமான நடைமுறையே நேரடி வரி உயர்வுக்குக் காரணம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதமான ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதத்தை  0.5% உயர்த்தி 5.4% ஆக, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரெப்போ விகிதத்தை 0.4 விழுக்காடு உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 விழுக்காடாக உயர்ந்தது. 2-வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5% உயர்த்தப்ப்ட்டு 4.90 விழுக்காடானது. தற்போது மீண்டும் 0.5% உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 5.40 விழுக்காடாகி உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மொத்தமாக 1.4 விழுக்காடு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். ரெபோ விகித உயர்வுக்குப் பின் இந்தியாவின் பத்து ஆண்டு நிதிப் பத்திரங்களின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.

59 பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEகள்) மற்றும் துறைசார் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மூலதனச் செலவு (capex) ஏப்ரல்-ஜூலை 2022இல் ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது.  2022-23 ஆம் ஆண்டுக்கான மொத்த மூலதனச் செலவு இலக்கான ரூ.6.6 லட்சம் கோடியில் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன செலவினம் 28 விழுக்காடாக உள்ளது. இதில் இந்திய ரயில்வே ரூ.598.3 பில்லியன் முதலீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இது அதன் ஆண்டு இலக்கான ரூ.2.3 லட்சம் கோடியில் 26 % ஆகும்.

நிதியாண்டு 2023 இல் ₹1.62 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு சொத்துக்களை பணமாக்குவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. 2022ஆம் நிதியாண்டில் பணமாக்கப்பட்ட ₹97,000 கோடியை விட இந்த இலக்கு கிட்டத்தட்ட 67.5% அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் பணமாக்குதலுக்காக நெடுஞ்சாலை, விமான நிலையங்கள், கோபுரங்கள், சுரங்க சொத்துக்கள் ஆகியவற்றைப் பணமாக்கத் திட்டமிட்டுள்ளது.  தேசியப் பணமாக்குதல் திட்டத்தின் (NMP) கீழ், 2022-2025 வரையிலான நான்கு ஆண்டுக் காலத்தில் ₹6 லட்சம் கோடி வருவாய்  ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. தேசியப் பணமாக்குதல் திட்டத்தின் (NMP) ஒரு பகுதியாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைபேசிக் கோபுரங்களை விற்பனை செய்யும் பணிகளை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 13,567 டவர்கள் மற்றும் எம்டிஎன்எல்-இன் 1,350 டவர்களையும் வரும் 2025-க்குள் பகுதி பகுதியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் ரூ.4,000 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

2020 மார்ச் இறுதிக்குள் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4.7 லட்சம் கோடி நிதி உத்தரவாதங்கள் அளித்துள்ளதாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.32%ஆக உள்ளது. 2019-20ல், அரசால் நீட்டிக்கப்பட்ட கூடுதல் உத்தரவாதங்கள் ரூ.609.1 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3% எனக் காட்டப்பட்டுள்ளது.

20 மாநிலங்களின் மூலதனச் செலவு (கேபெக்ஸ்) ஏப்ரல்-ஜூலை 2022ல் 9% குறைந்துள்ளது. 2022 ஏப்ரல்-ஜூன்  காலகட்டத்தில் இந்த மாநிலங்கள் பெறும் கடன்கள் 71% குறைந்து ரூ.375.3 பில்லியனாக உள்ளது. 2022 ஏப்ரல்-ஜூனில் இம்மாநிலங்களின் வருவாய் செலவினம் 13% உயர்ந்துள்ளது.

இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ), மாநில அரசு முகமைகளும் 2022-23 (அக்டோபர்-செப்டம்பர்) பருவத்தில் கரீஃப் அரிசி கொள்முதலை முந்தைய ஆண்டு உண்மையான கொள்முதலுக்கு எதிராக 51.8 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) அதிகமாக நிர்ணயித்துள்ளது. குறைந்த நெல் விதைப்பு காரணமாக விளைச்சல் குறைய வாய்ப்பு உள்ளது.

மத்தியத் துறை திட்டங்களுக்கான மத்திய நோடல் ஏஜென்சி (சிஎன்ஏ), மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான ஒற்றை நோடல் ஏஜென்சி (எஸ்என்ஏ) மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கான கருவூல ஒற்றைக் கணக்கு (டிஎஸ்ஏ) ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம், மத்திய அரசு பயனர்களுக்கு சென்றடைவது வரை நிதி ஓட்டங்களைக் கண்காணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய அரசு அரசு நிதி வெளியீட்டை பயன்பாட்டுடன் இணைக்கும் விதத்தில் ஒரு புதிய செலவின மேலாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (CFI) பணம் நேரடியாக செயல்படுத்தும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 'சரியான நேரத்தில்' செலுத்தப்படும். ஆரம்பத்தில் அனைத்து மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளை மட்டுமே உள்ளடக்கிய இந்தத் திட்டம், இப்போது மத்தியத் துறை திட்டங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் , உண்மையான பொருளாதாரத்தில் நிதி செலவிடப்படும் போது மட்டுமே செலவுகள் வரவு செலவுத் திட்டத்தின் பகுதியாகக் கணக்கில் கொள்ளப்படும்.

வர்த்தகம், தொழில்துறை அமைச்சர், பியூஷ் கோயல், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு சர்வதேசச் சந்தையில் வரியில்லா அணுகலை இந்தியா நாடுகிறது என்றும், தங்க நகைகள், பொம்மைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகள் உள்ளிட்ட , ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பின் (ODOP) கீழ் உள்ள தயாரிப்புகள் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய மறைமுக வரி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு நாட்டில் ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தகராறுகளைத் தீர்க்க உதவும் சரக்கு சேவை வரிக்கான தீர்ப்பாயத்தின் வரையறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM), ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி புது தில்லியில் தலைமையகத்தையும், பல்வேறு இடங்களில் கிளைகளையும்  அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.

சுமார் 115 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரிப்டோ நாணயங்களில் இல் முதலீடு செய்துள்ளதாக தீவு நாடான சீசெல்ஸ் நாட்டில் இயங்கி வரும் கிரிப்டோ நாணயப் பரிமாற்ற நிறுவனமான குகாயின் (KuCoin) ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகள் எப்போதும் மத்திய வங்கியின் பணத்தை நம்பியிருக்க முடியாது என்றும், பொருளாதாரத்தில் கடன் அளிப்புக்கு நிதியளிக்க வைப்புத் தொகையைத் திரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கடன் மற்றும் வைப்பு வளர்ச்சிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. வைப்புத்தொகையில் ஒன்பது விழுக்காட்டிற்கும் குறைவான வளர்ச்சியானது, பண்டிகைக் காலத்தில், அதிக கடன் தேவை இருக்கும் போது, கடன் வழங்குபவர்களுக்கு நிதிச் சவால்களை ஏற்படுத்தலாம். சமீபத்திய வாரங்களில் பல வங்கிகள் தங்கள் வைப்பு விகிதங்களை அதிகரித்துள்ளன, மேலும் இந்தப் போக்கு தொடரும் என்று ஆளுநர் எதிர்பார்க்கிறார்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மும்பை இன்டர்பேங்க் அவுட்ரைட் ரேட்டிற்கு (எம்ஐபிஓஆர்) மாற்று அளவுகோலுக்கு மாறுவதற்கான அவசியத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க முன்மொழிந்துள்ளது. மாற்று அளவுகோல் விகிதங்களை உருவாக்குவதற்கான சமீபத்திய சர்வதேச முயற்சிகளின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய வெப்ப ஆற்றல் நிறுவனமானது (NTPC), மாற்ற முடியாத தனியார் கடன் பத்திரங்கள் மூலம் மொத்தமாக ₹12,000 கோடியாக நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் (MSME) துறையில் வாராக் கடன்கள் சென்ற ஆண்டை விட  2022ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 12.5% அதிகரித்துள்ளது. 2022 மார்ச்சில் 2.7 லட்சம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9% அதிகரித்து ரூ.15,306 கோடியாக உள்ளது. புனேவைச் சேர்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா அதிக வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.452 கோடி லாபம் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்த வங்கி ரூ. 208 கோடி லாபம் ஈட்டியது.

 

முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில், பொதுத்துறை வங்கிகள் வெளியிட்ட காலாண்டு கணக்குகளின்படி, அரசுக்கு சொந்தமான வங்கிகள் ரூ.14,013 கோடி மொத்த லாபத்தை பதிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், மூன்று வங்கிகளின் - பாரத ஸ்டேட் வங்கி (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா - லாபம் 7-70% வரை சரிந்துள்ளது. ஒன்பது பொதுத்துறை வங்கிகள் 2023 இன் முதல் காலாண்டில் 3-117 %  வரை லாபம் ஈட்டியுள்ளன.

 வங்கிகளின் உணவு அல்லாத கடன் வளர்ச்சி 15% உயர்ந்துள்ளது. பெரு நிறுவன கடன் வளர்ச்சியானது சில்லறைக் கடனுடன் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான (எம்எஸ்இ) வங்கிக் கடன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட ரூ.11.55 லட்சம் கோடியிலிருந்து 2022 ஜூன் மாதத்தில் 23.7% உயர்ந்து ரூ.14.29 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

முதலீட்டுத் திட்டங்களுடன் முன்னோக்கி செல்ல ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற வேண்டும் என உருக்கு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உருக்கு அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2022 நிதியாண்டில் இத்துறையின் ஏற்றுமதி 25.1% அதிகரித்து 134.94 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் (LMT), இறக்குமதி 1.7% குறைந்து 46.69 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் எளிதாக வணிகம் செய்ய: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களால் நிறுவப்பட்ட சங்கமான சிறு, நடுத்தர தொழில்கள் கூட்டமைப்பு பெல்சியா, திருச்சியில் சிறு, குறு நிறுவனங்களுக்கான பாதுகாப்பு, இரயில்வே உதிரிபாகங்களைத் தயாரிப்பதற்கான உற்பத்தி ஆர்டர்களைப் பெறுவதற்கு ஒரு முக்கிய குழுவை அமைக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை மண்டல (TNDIC) திட்டத்தின் பலன்களைப் பயன்படுத்தத் தவறியதால் இக்கூட்டமைப்பு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மின் வாகனங்களின் பயன்பாடு மேம்படுவதால் பெட்ரோல் பயன்பாடு குறையும், இதனால் ஐந்தாண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16-18% ஆக இருக்கும் தளவாடச் செலவுகள் சுமார் 10% ஆகக் குறையும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகளின் வலையமைப்பினால் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட இயக்கம் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும்; இதனால் தளவாடச் செலவுகளை தற்போதைய 16-18% இலிருந்து 10% ஆகக் குறைக்க முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மின்-பேருந்துகளின் பயன்பாட்டை வலியுறுத்தினார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் விலை உயர்ந்த டீசலில் இயங்குவதால், அரசு ஒருபோதும் லாபம் அடையாது, என்ற அவர்  "டீசலை விட குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளில் டிக்கெட் விலை 30 சதவீதம் மலிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தூய்மையான எரிஆற்றலைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதற்கும், நாட்டில் கார்பன் சந்தைகளை அமைப்பதற்கு வழி வகுக்கும் வகையில், எரிஆற்றல் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிஆற்றலின் திறன்மிக்கப் பயன்பாட்டையும், அதன் பாதுகாப்பையும் மாநில அரசுகள் ஊக்குவிப்பதற்காகமாநில எரிஆற்றல் பாதுகாப்பு நிதிஎன அழைக்கப்படும் ஒரு நிதியை உருவாக்க வேண்டும் என்று இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிஆற்றல் பாதுகாப்பு திருத்த மசோதா, 2022, பயோமாஸ் மற்றும் எத்தனால் உள்ளிட்ட புதைபடிவமற்ற ஆதாரங்களை ஆற்றல் மற்றும் தீவனத்திற்காக பயன்படுத்துவதையும், அதனுடன் பசும் ஹைட்ரஜன், பசும் அம்மோனியாவைப் பயன்பாட்டை கட்டாயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் அந்த மாநிலங்கள் மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்வற்கும், மத்திய மின் சந்தை நிறுவப்பட்டுள்ளது. இந்த சந்தையை கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின்துறை அமைச்சகம்பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்’ (பொசோகோ) என்ற பொதுத்துறை நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளன. இதையடுத்து, இந்த 13 மாநிலங்களும் மின் சந்தையில் மின்சாரத்தை வாங்கவும், விற்கவும் பொசோகோ நிறுவனம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயார் செய்பவர்கள் அனைவரும் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். மேலும் உணவகங்கள், சிறிய விற்பனைக் கடைகள் என உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதி பெறாமல் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகள் நடத்துவது சட்டப்படி குற்றம் ஆகும். இந்நிலையில், உணவுப் பொருட்களின் ரசீதுகளில் உணவுப் பாதுகாப்பு உரிம எண்ணைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவுவிலை குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கானக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பயிர் பன்முகப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்தபட்ச ஆதரவுவிலை தொடர்பான ஆலோசனைகளை வழங்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் 26 உறுப்பினர்கள் உள்ளனர், மூன்று பண்ணை சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் குடை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) பிரதிநிதிகளுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்யுக்த கிசான் மோர்ச்சா, இந்தக் குழுவை ஏற்கனவே நிராகரித்து, அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டத்தில், பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நடைமுறையின் செயல்திறன், விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் மேலும் சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு தரநிலை விலைகள் குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க குழு முடிவு செய்தது. வேளாண்மை, உணவு மற்றும் பிற அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவின் முன் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

"ஒரு நாள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மூன்று தலைப்புகளில் நான்கு துணைக்குழுக்கள் அல்லது கமிட்டியை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குழு இமயமலை மாநிலங்களின் பயிர் முறை, பயிர் பல்வகைப்படுத்தல் பற்றியும் அந்த மாநிலங்களில் குறைந்தபடச விலை ஆதரவை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் ஆய்வு செய்யும்.

ஐஐஎம்-அகமதாபாத்தைச் சேர்ந்த சுக்பால் சிங் தலைமையில் நுண்ணீர் பாசனம் குறித்த இரண்டாவது குழு, நுண்ணீர் பாசனத்தை விவசாயிகளிடம் மையப்படுத்துவது எப்படி என்பதை ஆய்வு செய்யும். தற்போது, ​​நுண்ணீர்ப் பாசனம் அரசு மானியத்தால் இயக்கப்படுகிறது, இதற்கான விவசாயிகளின் தேவையை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தக் குழு ஆய்வு செய்யும். மூன்றாவது குழு - தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் (MANAGE) பிரதிநிதி தலைமையில் - கரிம மற்றும் இயற்கை விவசாய முறைகள் உட்பட, 'ஜீரோ பட்ஜெட் அடிப்படையிலான விவசாயம்' பற்றி ஆய்வு செய்து, விவசாயிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கும். நான்காவது குழு - இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) தலைமையில் - ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உலர்நில வேளாண்மைக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனமும் (CRIDA), நாக்பூரை தளமாகக் கொண்ட தேசிய மண் ஆய்வு, நில பயன்பாட்டு திட்டமிடல் மையத்துடன் (NBSSLUP) இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் பயிர் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கப்படும். நான்கு குழுக்களும் தனித்தனியான கூட்டங்களை நடத்தும் மற்றும் குழுவின் இறுதிக் கூட்டம் செப்டம்பர் இறுதியில் நடத்தப்படும்.

சம்யுக்த் ரோஜ்கர் அந்தோலன் சமிதி (SRAS) ஏற்பாடு செய்திருந்த 'ரோஸ்கர் சன்சத்' (வேலைவாய்ப்பு நாடாளுமன்றம்)க்காக ஜந்தர் மந்தரில் பல விவசாயத் தலைவர்களும் அமைப்புகளும் கூடினர். டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றனர். அவை இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு நீதி கோரி வருகிறோம். அது நிலைநாட்டப்பட வேண்டும். எம்எஸ்பி என்ற விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை எம்.எஸ்.ஸ்வாமிநாதன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2022-23 சர்க்கரை சந்தைப்படுத்தும் ஆண்டிற்கு (அக்டோபர் - செப்டம்பர்) கரும்புக்கான நியாய விலையை (FRP) குவிண்டாலுக்கு "₹305" ஆக நிர்ணயித்துள்ளது. இது 10.25 விழுக்காடு அடிப்படை மீட்பு விகிதத்தை உறுதிசெய்யும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. 2022-23 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான கரும்பு உற்பத்தி செலவு குவிண்டால் ஒன்றுக்கு ₹162 என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023, 2024 ஆம் ஆண்டுகளில் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான 1.5% வட்டி மானியத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் வட்டி விகித சூழ்நிலையில், வங்கிகள் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களை 7% இல் தொடர்ந்து வழங்குவதற்கு உதவும் வகையில், வட்டி மானியத் திட்டத்திற்கு ரூ.34,856 கோடி கூடுதல் செலவீனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 31% அதிகரித்து 7.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, இது 2021-22 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 5.7 பில்லியன் டாலராக இருந்தது என வணிக நுண்ணறிவு இயக்குநரகம் (DGCI&S) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது உயர்ந்தபட்ச அளவாக மின் ரசீதுகளின் எண்ணிக்கை ஜூலையில் 75.58 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது மார்ச் 2022 இல் 78.16 மில்லியனாகவும், ஏப்ரல் 2022 இல் ரூ.1.68- லட்சம் கோடியாகவும் இருந்தது.

வங்கி மோசடிகளை குறைக்க புதியப் பதிவேட்டை உருவாக்குவதை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. மோசடியான இணையதளங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்க மோசடி பதிவேட்டை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் உண்மையற்ற தகவல்கள் மெய்நிகர் பரிவர்த்தனைகளின் மூலம் மக்கள் ஏமாறுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய இணையதளங்கள், தொலைபேசி எண்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும், இது மோசடிகளின் நிகழ்வுகளைக் குறைக்க உதவும் என ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் அனில் குமார் சர்மா கூறியுள்ளார்.

கடந்த நிதியாண்டில் வங்கி குறைகேள் திட்டத்தின் கீழ் சுமார் 418,184 புகார்களும், அதற்கு முந்தைய ஆண்டில் 382,292 புகார்களும் வந்துள்ளது. இதில் 97.9% வழக்குகள் தீர்க்கப்பட்டன. 2020-21 ஆம் ஆண்டில் குறைதீர்ப்பதற்கு 46 நாட்கள் ஆகிய நிலையில் 2021-22 ஆம் ஆண்டில் குறைதீர்ப்பதற்கு 38 நாட்கள் ஆகியுள்ளது.

. குறை தீர்க்கும் முறையை வலுப்படுத்தும் நோக்கில், கடன் தகவல் நிறுவனங்களையும் (சிஐசி) சேர்த்து உள் குறைதீர்ப்புக் கட்டமைப்பின் (ஒம்புட்ஸ்மேன்) நோக்கத்தை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் (RB-IOS) மூலம் வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்கும் வழிமுறையை மேம்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது கடன் தகவல் நிறுவனங்களுக்கு எதிரான குறைகளுக்கு செலவில்லாத மாற்றுத் தீர்வு வழிமுறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட மாதாந்திர தரவுகளின் படி தனிநபர் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட நுகர்வுக் கடன்கள், ஜூன் மாதத்தில் 24% வளர்ச்சி பெற்று ₹9.24 லட்சம் கோடியாக உள்ளது.

விருந்தோம்பல் துறைக்கான அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான (ECLGS) முந்தைய வரம்பு ரூ.4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.50,000 கோடி உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை சுமார் ரூ.3.67 லட்சம் கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2023ஆம் நிதியாண்டில் இதுவரை அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுத்தளத்திற்காக சுமார் ₹106 கோடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுத்தளத்தை தயாரிப்பதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 2021 இல் -ஷ்ரம் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது.

2021-22 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை அரசு தளர்த்தியுள்ளது. மேலும் 1.2 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நடப்பு சந்தை ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 36 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பொருளாதாரம் "அதிக கொந்தளிப்புடன், நிச்சயமற்ற ஒரு பெருங்கடலாகக் காணப்படும் நிலையில் அதற்கு மத்தியில், இந்தியப் பேரியல் பொருளாதாரம் நிதி நிலைத்தன்மையுடையத் தீவாக உள்ளது" என்று மத்திய வங்கி ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மந்தநிலை அல்லது தேக்கநிலை ஏற்படும் என்றக் கேள்விக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சப்ளை பக்க நடவடிக்கைகளுக்கு மேல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கோவிட் தொற்று தாக்கத்திலிருந்து பொருளாதாரம் இன்னும் மீண்டெழவில்லை. மக்களின் வாங்கும் சக்தியும், நுகர்வும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனபோதும் பொறுமை காக்கமுடியாத சர்வதேசப் பண நிதியமானது, இந்திய அரசு படிப்படியாக பண, நிதித் தூண்டலைத் திரும்பப் பெற வேண்டும் என்று நவின தாராளமய ஆலோசனையை வழங்கியுள்ளது கடும் கண்டனங்களுக்குரியது.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதன் தனிநபர் வருமான நிலை, சாதகமான வளர்ச்சி வாய்ப்புகள், மக்கள்தொகைப் போக்குகள் மற்றும் வளர்ச்சித் தேவைகளுடன் "பரந்த அளவில் சீராக உள்ளதாகக் கூறிய சர்வதேசப் பண நிதியம் இந்தியா முதலீடுகளில் மேலும் தாராளமயமாக்கத்தை ஊக்குவித்து இடைநிலை பொருட்களுக்கான சுங்கவரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

 கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தலாம் மற்றும் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்க்கலாம், எனவே வெளிப்புற பாதிப்புகளைத் தணிக்கலாம். பரிமாற்ற விகித நெகிழ்வுத்தன்மை முக்கிய அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்பட வேண்டும், ஒழுங்கற்ற சந்தை நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மட்டுமே தலையீடு மட்டுப்படுத்தப்படவேண்டும்.

கொந்தளிப்பான அந்நிய நிதி முதலீடுகள் உலகளாவிய நிதி நிலைமைகள் உள்நாட்டு ஆபத்து காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. "சர்வதேச பத்திரக் குறியீடுகளில் இந்தியாவைச் சேர்ப்பதால், இடைக் காலத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான நிதி முதலீட்டு வரவுகளை அதிகரிக்கமுடியும்" என்றும் கூறியுள்ளது.

மொத்தத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியா நிதி, பணவியல் கொள்கை ஊக்குவிப்புகளை படிப்படியாக திரும்பப் பெற்று, ஏற்றுமதி உள்கட்டமைப்பை மேம்படுத்தி, முக்கிய வர்த்தக நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதன் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் வங்கிகளுடன் இணைந்து செயல்படும் முழுமையான முதன்மை முகவர்களுக்கான (SPDs) ஒழுங்குமுறைகளைத் இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு நாணய அபாயங்களைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. "வெளிநாட்டு நாணய சந்தைகள் மற்றும் வெளிநாட்டு வட்டி விகித சந்தைகளில் தன்னிச்சையான முதன்மை முகவர்களை (SPD) சேர்ப்பது இந்த சந்தைகளின் அகலத்தையும் ஆழத்தையும் மேலும் மேம்படுத்தலாம் என்று மத்திய வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து அந்நியச் செலாவணி சந்தை உருவாக்கும் வசதிகளையும் வழங்குவதற்கு தனி முதன்மை முகவர்களை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செட்டில் செய்யப்பட்ட ஓவர்நைட் இன்டெக்ஸ்டு ஸ்வாப் (எஃப்சிஎஸ்-ஓஐஎஸ்) பரிவர்த்தனைகளில் நேரடியாக உள்நாட்டினர் மற்றும் பிற சந்தையாளர்களுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்..

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, சமீபத்திய காலகட்டத்தில், மாநில அரசுகள் தங்களின் மானியங்களில் ஒரு பகுதியை இலவசங்களாக வழங்கத் தொடங்கியுள்ளன. இலவசங்களுக்குத் துல்லியமான வரையறை இல்லை என்றாலும், பொது விநியோக முறை, வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மாநிலங்களின் ஆதரவு போன்ற பொருளாதாரப் பலன்களைக் கொண்டு வரும் பொது/தகுதிப் பொருட்கள், செலவுகள் ஆகியவற்றிலிருந்து அவற்றை வேறுபடுத்துவது அவசியம்.

"இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச பொது போக்குவரத்து, நிலுவையில் உள்ள பயன்பாட்டு கட்டணங்களை தள்ளுபடி செய்தல் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி ஆகியவை பெரும்பாலும் இலவசங்களாக கருதப்படுகின்றன, இது கடன் கலாச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், குறுக்கு மானியம் விலைகளை சிதைக்கும், தனியார் முதலீடுகள் வீழ்ச்சியடையும். தற்போதைய ஊதிய விகிதத்தில் வேலையைத் தடைசெய்வது தொழிலாளர் பங்கேற்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்."

சரியாக இலக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்டால் குறைந்த கசிவுகளுடன் சில இலவசங்கள் ஏழைகளுக்கு பயனளிக்கும், ஆனால் அவற்றின் நன்மைகள் விலைகளை சிதைப்பதன் மூலமும் வளங்களை தவறாக ஒதுக்குவதன் மூலமும் ஏற்படும். இவற்றை பெரிய நிதிச் செலவுகள், திறனின்மைக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவது சுற்றுச்சூழல் சீர்கேட்டை விரைவுபடுத்துவதற்கும், நீர்நிலைகள் குறைவதற்கும் காரணமாகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கு வழங்கப்படும் சமூக நலத்திட்டங்களை வெட்டுவதில் இவ்வளவு கவனம் செலுத்தும் மத்திய  வங்கி பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து ஏன் இது வரை எந்த விரிவான ஆய்வும் மேற்கொள்ளவில்லை

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல் அளித்த பேட்டியில், "இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மாறி மாறி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் போட்டி, வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இலவசங்கள் உண்மையில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை.

மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது. பஞ்சாபில் இலவச மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இலவசங்களுக்கு செலவிடுவதால் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், காற்று, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

அரசு தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி போன்றஅடிப்படைத் தேவைகள்இலவசங்கள் அல்ல ஏழைகள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற அதிக தகுதியுள்ளவர்கள் என்று வலியுறுத்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ். 'இலவசங்கள்' என்ற வார்த்தை அதைப் பயன்படுத்துபவர்களின் வர்க்க நிலையைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

"உலகளவில் பல பரிமாண வறுமை விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதன் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி அணுகல் போன்றவற்றைப் கிடைக்கப்பெறச் செய்வதில் மோசமான நிலையில் உள்ளது. பெரும்பாலும் மற்ற நாடுகளில், நியாயமான தரமான பொருட்கள், சேவைகளான 'அடிப்படை தேவைகள்' மக்களுக்குக் கிடைக்கப்பெறச் செய்வது அரசின் பொறுப்பாக பார்க்கப்படுகிறது, 'இலவசமாக' அல்ல," என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளை அரசியல் செயல்முறைகள் அத்தகையத் தேவைகளை அளிக்கச் செய்தால், அவற்றை இலவசங்களாகப் பார்க்கப்படக்கூடாது. உண்மையில், வரி வசூலில் மறைமுக வரிகளின் ஆதிக்கத்தின் காரணமாக இந்தியாவில் உள்ள ஏழைகள், பணக்காரர்களை விட தங்கள் வருமானத்தில் பெரும் பங்கை வரிகளில் செலுத்துகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு அதிக உரிமை பெற்றுள்ளனர் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரசுகள் அளிக்கும் “இலவசங்களை” தொடர்ந்து எதிர்த்துக் கருத்துக்களைக் கூறி வரும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) உறுப்பினர் ஆஷிமா கோயல் தற்போது நரேந்திர மோடி அரசை மெச்சிப் போற்றியுள்ளார்.

நரேந்திர மோடி அரசின் கீழ் எட்டு வருடங்களில் செய்யப்பட்ட முறையான பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவிற்கு பெரிய பொருளாதார நிலைத்தன்மையையும், வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனையும் அதிகரித்துள்ளன என்று போற்றிய அவர், தொடர்ச்சியான அளிப்பு பக்க மேம்பாடுகளுடன் பொருத்தமான எதிர் சுழற்சி பேரியல் பொருளாதாரக் கொள்கையானது உலகின் சிறந்த வளர்ச்சியை மீட்டெடுக்க உதவியது. “மோடி அரசு வருவதற்கு முன்பு, உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு நாடு கடுமையான பொருளாதார நிலையற்றத் தன்மையை எதிர்கொண்டது என்றும் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சிப் பிரிவின் ஸ்நேகல் எஸ். ஹெர்வாட்கர், சோனாலி கோயல், ரிஷுகா பன்சால் எழுதிய ஆய்வறிக்கையின்படி, பொதுத்துறை வங்கிகள் (PSB) நிதி உள்ளடக்கம் மற்றும் பணப் பரிமாற்றம் என்ற சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றிடத்தை உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அவை ஒரு பெருவெடிப்பு அணுகுமுறைக்கு பதிலாக படிப்படியான அணுகுமுறை மூலம் தனியார்மயமாக்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் லாபத்தை அதிகரிப்பதற்கான இலக்கால் மட்டுமே முழுமையாக வழிநடத்தப்படவில்லை தனியார் வங்கிகள் போலல்லாது அவை நிதி உள்ளடக்கத்தையும் இலக்காகக் கொண்டுள்ளன. கூடுதலாக, பொதுத்துறை வங்கிகள் அரசின் எதிர்-சுழற்சி நிதிக் கொள்கை செயல்பட உதவுகின்றன. பலவீனமான இருப்புநிலைகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், பொதுத்துறை வங்கிகள் கோவிட்-19 தொற்றுநோய் அதிர்ச்சியை குறிப்பிடத்தக்க வகையில் எதிர்கொண்டதாக தரவு தெரிவிக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் சமீபத்திய மெகா இணைப்பு இந்தத் துறையின் ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்தது, வலுவான போட்டித்தன்மையுள்ள வங்கிகளை உருவாக்கியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயப்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்தாமல் படிப்படியாக தனியார்மயப்படுத்துமாறு ஆலோசனை வழங்குவது ஒரு மக்கள் நல அரசாட்சிக்கு ஏற்புடையதா?. படிப்படியான தனியார் மயத்தை ரிசர்வ் வங்கி ஆதரித்தால் காலப்போக்கில் ரிசர்வ் வங்கியே தனியார்மயமாக்கப்படும். எச்சரிக்கை!.

பொதுத்துறை வங்கிகளை (PSB) படிப்படியான தனியார்மயமாக்கத்தை ஆதரிக்கும் ஆய்வுக் கட்டுரை ரிசர்வ் வங்கியின் கருத்து அல்ல, அறிக்கையின் ஆசிரியர்களின் கருத்து என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், அரசு 10 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நான்கு பெரிய கடன் வழங்குநர்களாக இணைத்தது, இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைத்தது. தனியார் துறை வங்கிகள் லாபத்தை அதிகரிப்பதில் மிகவும் திறமையானவை என்றாலும், பொதுத்துறை நிறுவனங்கள் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று சமீபத்திய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தனியார்மயமாக்கம் ஒரு புதியக் கருத்து அல்ல, அதன் நன்மை தீமைகள் நன்கு அறியப்பட்டவை. தனியார்மயமாக்கம் அனைத்து நோய்களுக்கும் ஒரு பரிகாரம் என்ற வழக்கமான கண்ணோட்டத்திலிருந்து, அதைத் தொடரும்போது இன்னும் நுணுக்கமான அணுகுமுறை தேவை என்பதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் பொருளாதார சிந்தனை நீண்ட தூரம் வந்துள்ளது, ”என்றும் கூறியுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும், இந்த விவகாரத்தில் அரசு நுணுக்கமான அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

பணம் செலுத்தும் முறைகளில் கட்டணங்கள் பற்றிய விவாதக் கட்டுரையில்’, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிக் கிளைகள் மூலம் தேசிய மின் நிதி பரிமாற்றப் (NEFT) பரிவர்த்தனைகளில் செயலாக்கக் கட்டணங்களைச் செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் மேலான தொகைகளுக்கு பரிவர்த்தனை கட்டணமாக ரூ.25 வரை வசூலிக்கலாம் என முன்மொழிந்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான ஒ.என்.ஜி.சி மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் குறைந்த உற்பத்தியால் ஜூலை மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயின் உற்பத்தி, கடந்த ஆண்டு 2.54 மில்லியன் டன்னிலிருந்து ஜூலையில் 2.45 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் தீர்க்கப்படாமல் நிலுவையிலுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் பன்னாட்டு வணிகங்களால் சுமார் 1,500 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களுக்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால் 420 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன, சுமார் 1,000 தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் உள்ளன.

முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் பொதுவாக ஒன்பது வருடங்களைமுன் நோக்கி ஐந்து வருடங்களையும், பின் நோக்கி நான்கு வருடங்களையும்- உள்ளடக்கும்.

இதனால், வெளிநாட்டில் இருந்து உண்மையான பொருளாதாரத்திற்கு வரும் மூலதன வரவு பாதிக்கப்படலாம். முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள் (APAs) பொறிமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்கள், வெளிநாடுகளில் தொடர்புடைய தரப்பினருடனான பன்னாட்டு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளில் சில காலகட்டங்களுக்கு கர நீள விலைகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய வேண்டும். 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் 2014 இல் வலுப்படுத்தப்பட்ட முன்கூட்டிய விலை ஒப்பந்தங்கள், வரி செலுத்துபவரின் பரிமாற்ற விலை மாற்றங்களால் எழும் வரி தகராறுகளைக் குறைப்பதில் ஆரம்பத்தில் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பாக தொற்றுநோய்க்குப் பிறகு ஒப்பந்தங்கள் தாமதமாகி வருவதால் அதன் செயல்திறனில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வர்த்தக அமைச்சகம் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான பெரிய பிரிவு மற்றும் வர்த்தக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு பிரத்யேக ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புடன், மறுசீரமைக்கப்படுகிறது. இது அமைச்சகத்தை "எதிர்காலத்திற்கு தயார்" செய்வதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும் மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் 2- லட்சம் கோடி டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய மற்றும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்க உதவும் சூழல் இதன் மூலம் உருவாக்கப்படும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சகம் அதன் புதிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு (ODI) கட்டமைப்பில் மூலோபயத் துறை என்றக் கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடுகளை அனுமதிக்கும் அதிகாரம் அரசிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மூலோபயத் துறையில் எரிசக்தி, இயற்கை வளங்கள் மற்றும் அரசால் அவ்வப்போது முடிவு செய்யக்கூடிய பிற துறைகள் அடங்கும். ஒரு இந்திய பெரு நிறுவனம் தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் போன்ற மூலோபயத் துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அப்பால் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 

வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் 2022 பற்றிய விளக்கக் குறிப்பை வெளியிட்ட நிதியமைச்சகம், நிதியல்லாத துறை நிறுவனம், நிதிச் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனத்தில் (வங்கி மற்றும் காப்பீடு தவிர) நேரடி முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை வகுக்காமல், பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வெளிநாட்டில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கத் துணைபோவதற்கு எவ்விதத்தில் நியாயம் கற்பிக்கமுடியும்.

அங்கீகரிக்கப்படாமல் ஏற்றுமதி-இறக்குமதி தரவுகளை வெளியிடுவதை குற்றம் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய உணவுக் கழகம் மீண்டும் 22,000 கோடி ரூபாய் குறுகிய கால கடன்களை பெறத் திட்டமிட்டுள்ளது.

வங்கித் துறை சொத்துக்கள்-பொறுப்புக்களுக்கான விகிதம் பொருந்தாத அபாயத்தில் உள்ளது என புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரனாப் சென் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளின் கடன் போர்ட்ஃபோலியோவில் 70% செயல்பாட்டு மூலதனம் மற்றும் 20% சில்லறை வணிகம் இருந்தது, அதே நேரத்தில் நிறுவனங்களுக்கான காலக் கடன்கள் 10% பங்கைக் கொண்டிருந்தன. இன்று வங்கிக் கடன் வழங்கும் சராசரி காலம் சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகும், மேலும் வைப்புத் தொகைகளின் காலம் இரண்டரை ஆண்டுகளுக்கு அருகில் உள்ளது. எனவே, சொத்து பக்கத்தில் ஒன்பது ஆண்டுகள் உள்ளன, பொறுப்பு பக்கத்தில் 2.5 ஆண்டுகள் உள்ளன அதாவது, ஒரு பெரிய சொத்து-பொறுப்பு பொருந்தாத தன்மை உள்ளது, இது எப்போது வேண்டுமானாலும் நெருக்கடியாக வெடிக்கலாம். நமது வங்கிகளில் மிகப் பெரும் பகுதி பொதுத்துறையில் இருப்பதால் அவ்வாறு நடக்கவில்லை. இப்போது வங்கிகள் கடன் வாங்குபவரின் அபாயத்தை மட்டுமல்ல, கடன் கொடுக்கும் காலத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய உணவுக் கழகம் மீண்டும் 22,000 கோடி ரூபாய் குறுகிய கால கடன்களை பெறத் திட்டமிட்டுள்ளது.

 வங்கிச் சட்டங்கள் கடன் வழங்குபவர்கள் மூலதனச் சந்தையில் இருந்து பணம் திரட்ட அனுமதிக்க வேண்டும். அது குறித்த ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் சட்டங்களைப் போல் நாம் நமது சட்டங்களை சீரமைக்க வேண்டும், என்ற அவர் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது  அதிக அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்."தனியார்மயமாக்கம் என்பது கடன் வழங்குபவர்களின் முழு வைப்பு மற்றும் கடன் இலாகாவை அரசு ஆதரவின்றி ஒரு தனியார் நிறுவனத்திற்குச் செல்வதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

கோவிட் கொள்ளைநோயின் போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) நிதித் துறையின் கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் மட்டுமே அவற்றை மீட்டெடுக்க முடியும் என்று பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரனாப் சென் கூறியுள்ளார். ஒன்று சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் துறை ஒருபோதும் புத்துயிர் பெறாது அல்லது இரண்டாவதாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மீட்டெடுக்கப்படலாம். நிதித் துறையின் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்தால் மட்டுமே இரண்டாவது நிகழமுடியும் என்றும் கூறியுள்ளார்.

17 கனிம சுரங்கங்கள் உற்பத்தி செய்யாததால் அவற்றை மாநிலங்களிடமிருந்து இருந்து மத்திய அரசு திரும்பப் பெறப்பட்டன என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 10, 15, 20 ஆண்டுகளாக எந்த உற்பத்தியும் இல்லாமல் பெரிய சுரங்கங்களுடன் உள்ளன. எனவே, ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ஒரு சுரங்கம் உற்பத்தியைத் தொடங்கவில்லை என்றால், அவற்றை திரும்பப் பெற்று ஏலம் விட முடிவு செய்துள்ளோம், ”என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விலைவாசி குறித்த விவாதங்களில் அரசு பணவீக்கத்திற்கு கொரோனா, உக்ரைன்-ரஷ்யா மோதல் போன்ற வெளியில் இருந்து வரும் அழுத்தங்களே காரணம் மற்றபடி பொருளாதாரம் சீராக இருக்கிறது என்று கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசியுள்ளார். "இந்தியாவில் 7% வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், இந்த வளர்ச்சியில் வேலைவாய்ப்பின்மை சரிசெய்யப்படவில்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான முதல் செயல்பாடே வேலைவாய்ப்புகள் தான். நாட்டில் அனைவருக்குமே மென்பொறியாளர் வேலையையோ அல்லது ஆலோசகர் வேலையையோ ஏற்படுத்தித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கவுரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு இங்கே குறுக்கு வழி ஏதுமில்லை. நாம் திறன்வாய்ந்த பணியாளர்களை உருவாக்க வேண்டும். திறன்வாய்ந்த தொழிலாளர்கள் உருவானால் வேலைவாய்ப்பின்மை குறையும்.

            தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளன. இந்திய சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் தருணத்தில், இந்த புதிய தொழில் நிறுவனங்கள், புதுமை, வளர்ச்சி, உத்வேகத்தை தூண்டுகிறது என மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

கடந்த மாதம், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுடனான சந்திப்பில், உணவு, பொது விநியோகத் துறை உலகளாவிய விலைகள் தணிந்து வருவதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் எண்ணெய் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்க வேண்டும் என்று நிறுவனங்களை கேட்டுக் கொண்டது. சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையில் லிட்டருக்கு 8-10 ரூபாய் வரை குறைக்கமுடியும் என்று அதிகார வட்டத்தில் கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலையை லிட்டருக்கு சராசரியாக 20 ரூபாய் குறைத்துள்ளோம் என்று கூறிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் உலகளாவிய போக்குடன் இணைந்து விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டு, சூழலுக்குந்த ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்காது சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றன பெருநிறுவனங்கள். ஆனால் இந்தியாவில் கட்டாய பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) வடிவமைப்பாளரான டாக்டர் பாஸ்கர் சாட்டர்ஜி, கார்ப்பரேட் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து அதன் நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து மன நிறைவு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

முற்போக்கு நிறுவனங்கள் முதலாளித்துவத்தின் நன்மைகள் கீழ் ஒழுகுவதை உறுதி செய்கின்றன, என்று ராஜஸ்ரீ பிர்லா கூறினார். ஆனால் உண்மையில் முற்போக்கான முதலாளித்துவத்தின் காலம் கார்ல் மார்க்ஸ் காலத்திலே முடிந்துவிட்டது.

மறைமுக வரி நிர்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை (DIN) செயல்படுத்துவதற்கான ஆலோசனையை மாநிலங்களுக்கு வழங்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவண அடையாள எண் என்பது 20 இலக்க அடையாளக் குறியீடாகும், இது அரசு, வரி செலுத்துவோருக்கு அனுப்பும் ஒவ்வொரு தகவல்தொடர்பிலும் இணைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒருங்கிணைந்த பணப் பகிரி – ‘யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ)’ மூலம் பரிமாற்றப்படும் பணத்தின் மீது "அடுக்கு" கட்டணத்தை விதிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து பங்குதாரர்களிடம் கருத்து கேட்டுள்ளது.

2020 ஜனவரியில், ஒருங்கிணைந்த பணப் பகிரி – ‘யுபிஐ’  (UPI) மற்றும் உள்நாட்டு ரூபே பற்று அட்டை- டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வணிக தள்ளுபடி விகிதத்தை (MDR) மத்திய அரசு திரும்பப் பெற்றது, இது ஒருங்கிணைந்த பணப் பகிரி – ‘யுபிஐ’   மூலம் பணம் செலுத்துவதில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்தது. வணிக தள்ளுபடி விகிதம் என்பது ஒரு வணிகர் வங்கிக்கோ, பற்று அட்டை வலையமைப்பு மற்றும்           அகல்நிலை – ‘ஆஃப்லைன்’ பரிவர்த்தனைகளுக்கான விற்பனைப் புள்ளி வழங்குநருக்கோ,  இணையவழி – ‘ஆன்லைன்’ கொள்முதல்களுக்கான கட்டண நுழைவாயில்களுக்கோ செலுத்தும் கட்டணமாகும். தற்போது 2% ஆக இருக்கும் வணிக தள்ளுபடி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.2-2% க்கு இடையில் வைத்திருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. வணிக தள்ளுபடி விகிதம் அல்லது பரிமாற்றக் கட்டணத்தில் 10 அடிப்படை புள்ளி (bps) குறைப்பு அட்டை வணிகத்தின் சொத்துகளின் மீதான வருவாயை குறைந்தபட்சம் 50 அடிப்படை புள்ளி அளவிற்குக் குறைக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2007ஆம் ஆண்டுக்கு முன்பு செய்யப்பட்ட கூட்டுப் பணி ஒப்பந்தங்களுக்கு சேவை வரி விதிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

பொதுத்துறை நிறுவமான கோல் இந்தியா லிமிடெட் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 47.3 மில்லியன் டன்கள் (எம்டி) நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 11% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் உற்பத்தி 42.6 மில்லியன் டன்களாக (MT) இருந்தது. கோல் இந்தியா மின் துறைக்கு 152 மெட்ரிக் டன் நிலக்கரியை 2022ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அனுப்பியுள்ளது. கோல் இந்தியா லிமிடெட் (CIL) நாட்டில் உலர் எரிபொருளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் ஆகும்.

2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுங்க மற்றும் கலால் வரிகளின் வருவாய் 10.59 சதவீதம் குறைந்து ரூ.97,695 கோடியாக உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பதில் உள்ள சந்தேகங்கள் குறித்து தெளிவுபடுத்தும் போது நிதி அமைச்சர், வங்கிகள் அச்சிடப்பட்ட காசோலை புத்தகங்களை பிரிண்டர்களிடமிருந்து வாங்குவதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது என்றும், சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் காசோலை புத்தகங்களுக்கு வரி இல்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல், புதிய தகனக் கூடங்கள் கட்டுவதற்கும், அதில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கும் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள், தகனம் அல்லது அடக்கம் செய்ய வரி விதிக்கப்படாது, தினசரி வாடகை ரூ. 5,000க்கு மேல் உள்ள மருத்துவமனை அறைகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை படுக்கைகள் அல்லது ஐசியூவிற்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் மாநிலங்களின் வருவாய் மேம்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கான வருவாய் குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் அப்பட்டமான ஒரு பொய்யையும் கூறியுள்ளார்.

தற்போது, ரூ.20 கோடி மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்யும் வணிகத் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, அக்டோபர் முதல் 10 கோடி ரூபாய் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி மின் விலைப்பட்டியல் அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MG-NREGS) ஒதுக்கப்பட்ட 73,000 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பயன்படுத்தப்பட்டுவிட்டதால், கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளது வேலை உறுதிக்கான மக்கள் செயல்பாட்டு (PAEG) இயக்கம்.

நடப்பு நிதியாண்டின் ஜூலை 21 ஆம் தேதி வரையிலான உண்மையான செலவினங்கள் மற்றும் நடப்பு மற்றும் முந்தைய நிதியாண்டுகளின் நிலுவையில் உள்ள தொகைகளையும் கணக்கில் கொண்டால், மொத்தமாக ரூ 48,502 கோடி அல்லது ஒதுக்கப்பட்ட நிதியில் 66.44% ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது என வேலை உறுதிக்கான மக்கள் செயல்பாட்டு (PAEG) இயக்கம் கூறியுள்ளது.

"சமீபத்திய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கானத் தேவை அதிகரித்துள்ள போதிலும், (நடப்பு நிதியாண்டுக்கான) ஒதுக்கீடுகள் தேவையை விடக் கணிசமாகக் குறைவாக உள்ளது" என்றும் அவ்வியக்கம் கருத்து தெரிவித்துள்ளது.

2008க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாக ஜூலை 1 ஆம் தேதி, மத்திய தொகுப்பில் உள்ள கோதுமை கையிருப்பு தாங்கக இருப்பு அளவான 27.5 மெட்ரிக் டன்னை விட சற்றே அதிகமாக 28.5 மெட்ரிக் டன்னாக உள்ளது.

இந்த நிதியாண்டில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மொத்தக் கொள்முதலாளர்களுக்கு திறந்த சந்தையில் கோதுமை விற்பனையை மேற்கொள்ளாததால், குறைந்த கையிருப்பு அளவு காரணமாக மாவு ஆலைகள் அதிக விலைக்கு வியாபாரிகளிடமிருந்து தானியங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 2022 இல், இந்திய உணவுக் கழகம் திறந்த சந்தையில் 7 மில்லியன் டன்னு (MT) க்கும் அதிகமான கோதுமையை விற்றது, இதன் விலை தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்ட ஆண்டின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 8% அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகம் கோதுமையின் இருப்பு விலையை 2022 அக்டோபர் வரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2,200 ஆக நிர்ணயித்துள்ளது, ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 2,015 ஆக இருந்தது.

கோதுமையின் விலையைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 25 அன்று, கோதுமை அல்லது மெஸ்லின் மாவு ஏற்றுமதியை கட்டுப்படுத்த அமைச்சரவை முடிவு செய்தது. கோதுமைப் பொருட்களின் ஏற்றுமதியை அரசு தடை செய்துள்ளது.

உற்பத்தி குறையும் நிலை இருந்தபோதிலும், மாநிலங்கள் கரீஃப் அரிசி கொள்முதலை கடந்த ஆண்டு அளவில் உயர்த்தியுள்ளது. வேளாண் அமைச்சகத்தின் தரவுகளின்படி, சில மாநிலங்களில் குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மோசமான மழையின் காரணமாக நடப்பு காரீஃப் பருவத்தின் கடைசி வாரம் வரை நெல் விதைக்கப்பட்ட மொத்த பரப்பளவு 5.99 % குறைந்து 367.55 லட்சம் ஹெக்டேராக இருந்துள்ளது.

கோடைப் பருவ விதைப்பு குறைந்துள்ளதால் ஜூலை மாதத்தில் டிராக்டர் விற்பனை அளவுகள் சரிவடைந்துள்ளன.

 80% இந்தியர்கள்விஷம்கலந்த தண்ணீரைக் குடிப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஓசி நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அதன் பானிபட் மற்றும் மதுரா சுத்திகரிப்பு ஆலைகளில் பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை அமைக்கவுள்ளது என்று தனது சமீபத்திய வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) டிகார்பனைசேஷன் இயக்கத்தின் ஒரு பகுதியாக அதன் சுத்திகரிப்பு நிலையங்களில் 2030க்குள் அதன் பசுமை ஹைட்ரஜன் தேவைகளில் 10% கார்பன் இல்லாத பசுமை ஹைட்ரஜன் மூலம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவின் உற்பத்தி நடவடிக்கைகளில் வணிக வேகம் ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. பருவகாலமாக சரிசெய்யப்பட்ட எஸ்&பி கொ ள்[முதலாளர், மேலாளர் குறியீடு (S&P Global Purchasing Managers' Index -PMI ஜூன் மாதத்தில் 53.9 ஆக இருந்து ஜூலையில் 56.4 ஆக உயர்ந்தது. 50க்கு மேல் உள்ளது விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

பெருநிறுவன வரி வசூல் ஏப்ரல்-ஜூலையில் 34% அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) பெருநிறுவன வரி வசூல் ரூ.7.23 லட்சம் கோடியாக இருந்ததாக வரித் துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களின் முதலீடுகளைப் பராமரிக்க உதவும் வகையில், 2023ஆம் நிதியாண்டில் ரூ. 1 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இதில், 80,000 கோடி, மத்திய வரிகளை பகிர்ந்தளிப்பதில் மாநிலங்களின் பங்கிற்கு விகிதாசாரமாகவும், திட்டங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும். மீதமுள்ள ரூ.20,000 கோடியை விடுவிப்பது, கிராமப்புறங்களில் பாரத்நெட்டின் கீழ் கடைசி மைல் இணைப்புக்கான ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் அமைப்பது, பிஎம் கிராம் சதக் யோஜனா, கதிசக்தி திட்டம் மற்றும் நகர்ப்புற திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

8 மாநிலங்களுக்கு 20,000 கோடி ரூபாய் மூலதனக் கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்பின் 293(3) பிரிவின் கீழ் மத்திய அரசு நிர்ணயித்த ஆண்டு வரம்புகளுக்கு மேல் மாநிலங்கள் கடன் வாங்க முடியாது. 2222 நிதியாண்டில் மாநிலங்களின் நிகர கடன் வரம்பு உச்சவரம்பில் இருந்து 41,000 கோடி ரூபாய் அல்லது 62% நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இது எட்டு மாநிலங்களின் நிதிநிலையைக் கடுமையாக பாதிக்கும்.

 

நடப்பு நிதியாண்டிற்கான நிகர கடன் உச்சவரம்பிலிருந்து கழிக்கப்பட்ட ரூ.41,000 கோடியில், தெலங்கானாவுக்கு ரூ.8,800 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.8,000 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.3,600 கோடியும், கேரளாவுக்கு ரூ.3,578 கோடியும் அடங்கும்.

இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், ஏற்றுமதி 20.1% அதிகரித்து 157.4 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 48.1% உயர்ந்து 256.4 பில்லியன் டாலராகவும் உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மே மாதம் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து இந்தியா 1.3 மில்லியன் டன் (MT) கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதியில் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு (LCs) எதிரான அனுப்பப்பட்டதும் மற்றும் அரசிற்கும் அரசிற்கும் இடையிலான (G2G) ஒப்பந்தங்களின் கீழ் உள்ள விநியோகங்களும் இதில் அடங்கும்.

கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானப்படுத்தி இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை. மேலும், கடன் வசூல் தொடர்பாக வாடிக்கையாளரை காலை 8 மணிக்கு முன்போ அல்லது இரவு 7 மணிக்கு பின்போ அழைத்து பேசக்கூடாது. மேலும், கடனாளரின் குடும்பத்தார், நண்பர்களிடம் அத்துமீறி அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் முகவர்கள் ஈடுபடக்கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜூலை 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கடன் ரூ.123.69 லட்சம் கோடியாக உள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில் காணப்பட்ட ரூ.108.00 லட்சம் கோடி கடனுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதம் அதிகமாகும். இதைத் தவிர, வங்கிகள் திரட்டிய வைப்புத்தொகை ரூ.155.49 லட்சம் கோடியிலிருந்து ரூ.169.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது, 9.1 சதவீத வளர்ச்சியாகும்.

ஜூலை மாதத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக இருந்தது என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 54.25 மில்லியன் டன்னாக இருந்தது. நாட்டில் மொத்தமுள்ள 37 முன்னணி நிலக்கரி சுரங்கங்களில் 24 சுரங்கங்களில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலக்கரி 100 % உற்பத்தி செய்யப்பட்டது. மற்ற 7 சுரங்கங்களில் 80 முதல் 100 விழுக்காட்டிற்குள் நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது.

அதே நேரத்தில் நிலக்கரி விநியோகமும் ஜூலை மாதத்தில் 8.51% அதிகரித்து 67.81 மில்லியன் டன்னாக உயர்ந்திருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 62.49 மில்லியன் டன்னாக இருந்தது.

குத்தகைதாரர்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அரசு நிராகரித்தது. ஒரு வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்படும்போது மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. "தனிப்பட்ட நபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்படும்போது அதன் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாது. நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் அதன் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாது.

சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கான அவசரகால கடன் உத்தரவாத திட்டம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டும் வணிகத்தை தொடங்கவும், செயல்பாட்டுக்கான செலவை எதிர்கொள்ளவும் தகுதி வாய்ந்த சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கும், மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவிசெய்ய தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக மே 2020-ல் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 2023 மார்ச் 31 வரை திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பெரிய ஏற்றுமதி சந்தைகளில் தேவை குறையும் என்ற அச்சத்தின் காரணமாக, சரக்கு ஏற்றுமதிகள் 20 மாதங்களில் முதல் முறையாக 36.27 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதி உயர்ந்ததால், ஜூலை மாதத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 30 பில்லியன் டாலராக உயர்ந்தது.

வளர்ந்த பொருளாதாரங்களில் இறுக்கமான பணவியல் கொள்கை மற்றும் சில வளர்ந்து வரும் சந்தைகளில் பேரியல்-பொருளாதார அழுத்தம் ஆகியவை அடுத்த 6-12 மாதங்களில் இந்திய ஏற்றுமதிக்கான தேவையை பாதிக்கலாம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்தார். இருப்பினும், "சுழற்சி காரணிகளால்" திசைதிருப்பப்படுவதற்குப் பதிலாக, இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக ஆகத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ரூபாயை விடுவிப்பதற்கான நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாகும். ஒருங்கிணைந்த பணப் பகிரி (UPI) கட்டணங்களின் நிலையான சர்வதேச பரவலுக்கு இணையாக இது பார்க்கப்பட வேண்டும். எனது தனிப்பட்ட கருத்துப்படி, 10 ஆண்டுகளில் ரூபாய் ஒரு வன் நாணயமாக (hard currency) மாற வேண்டும், அது சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைதல் உரிமைகள்  (SDR) கூடையில் அமெரிக்க டாலர், பவுண்ட்,யூரோ, யெண், யுவான் ஆகியவற்றுடன் சேர்க்கப்பட வேண்டும். இந்த விருப்பம் எந்தவொரு குறுகிய கால நன்மைகளுடனும் அல்லது உலகின் நங்கூர நாணயமாக அமெரிக்க டாலரின் பங்குடனும் குழப்பப்படக்கூடாது. உலகில் பல வன் நாணயங்கள் உள்ளன, மேலும் கூடுதலாக ஒன்று உருவாவது டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்யாது என்றும் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.

விமான எரிபொருள் விலை 12% குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ்சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,177.50-ல் இருந்து ரூ.2,141 ஆக விலை குறைந்தது.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பேரழிவு ஆயுதங்களுக்கும் அவற்றின் விநியோகத்துக்கும் நிதி வழங்குவதை தடை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. அன்டார்டிகா மசோதாவும் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பு அன்டார்டிகா வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இரு மசோதாக்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன.

ஜிஎஸ்டி வருவாய் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 2வது அதிகபட்ச அளவாக ஜூலையில் வசூல் ரூ. 1.49 லட்சமாக 28% உயர்ந்துள்ளது.

ரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா இவாம் உத்தன் மஹாபியான் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan) எனப்படும் குசும் (KUSUM) திட்டத்தின் கீழ் 15 ஹெச்பி வரையிலான சூரிய ஒளியில் இயங்கும் நீர்க் குழாய்களுக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2022 நிதியாண்டில் இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியின் மொத்த மதிப்பு ரூ.12,815 கோடியை எட்டியது, இது 2021 நிதியாண்டில் ரூ.8,435 கோடியாக இருந்தது.

2021-22 நிதியாண்டில் குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து (எம்எஸ்இ) பாதுகாப்புக் கொள்முதல் உச்சத்தை எட்டியுள்ளது என்று அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. பட்டியலினத்தவர், பெண்களுக்குச் சொந்தமான அலகுகள் உள்ளிட்ட சிறு குறு நிறுவனங்களிடமிருந்து பொருட்கள், சேவைகள் வாங்குவது, சென்ற நிதியாண்டில் ரூ.4,303 கோடியிலிருந்து ரூ.5,760 கோடியாக இந்த ஆண்டில் 33.8% அதிகரித்துள்ளது. கோவிட்-க்கு முந்தைய காலகட்டத்துடன், 2020 உடன் ஒப்பிடும்போது, 2022ல் கொள்முதல் ரூ.3,204 கோடியிலிருந்து 79.7% உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இயந்திரங்களில் ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தால் அது சிறுதொழில் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுதொழில்கள் மூலம் 7500க்கும் மேற்பட்டப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 30 இந்தியாவில் சிறுதொழில் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கிரானா ஸ்டோர்களின் பதிவை அதிகரிக்க, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் (MSME) அமைச்சகம் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகங்களை சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் துறையில் சேர்த்துள்ளது. மேலும் அவற்றை உதயம் பதிவு தளத்தில் பதிவு செய்ய அனுமதித்துள்ளதுஎன்று  சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் வரையறை மேலும் மேலும் நீர்த்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால் முன்னுரிமை துறைக் கடனைப் பெறவேண்டிய உண்மையான சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அரசு தரவுகளின் படி பதிவுசெய்யப்பட்ட 1 கோடி சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் 18% மட்டுமே பெண் தொழில்முனைவோருக்குச் சொந்தமானது.

சிறு வணிகங்களுக்கான அரசின் குறை தீர்க்கும் தளம் குறைகளை நிவர்த்தி செய்வதில் 35% முன்னேற்றம் கண்டுள்ளது. 2020 ஜூன் 1 அன்று இந்தத் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜூலை 15, 2021 வரை தீர்க்கப்பட்ட 35,562 புகார்களுடன் ஒப்பிடுகையில், 2022 ஜூலை 12, நிலவரப்படி, 48,308 சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகளை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார். இந்தத் தளம் மின்-நிர்வாகத்தின் பல அம்சங்களை உள்ளடக்கியது, குறைகளை நிவர்த்தி செய்தல், ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும். பெறப்பட்ட மொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆகும்.

பாஜக அரசின் உறுதுணையுடன் இந்தியாவின் பெரும் பணக்காரர் கவுதம் அதானி உலகின் 3வது பெரும் பணக்காரராகவும், ப்ளூம்பெர்க் பட்டியலில் இடம்பெற்ற முதல் ஆசியராகவும் உயர்ந்துள்ளார்.

பெருநிறுவன வரி வசூல் ஏப்ரல்-ஜூலையில் 34 % அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) கார்ப்பரேட் வரி வசூல் ரூ.7.23 லட்சம் கோடியாக இருந்ததாக வரித் துறை தெரிவித்துள்ளது.

நிட்டி ஆயோக் உறுப்பினரும் விஞ்ஞானியுமான வி கே சரஸ்வத், சிறிய மட்டு அணுமின் உலைகளை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், பழைய அனல் மின் நிலையங்களை மாற்றுவதற்கும் உதவும் எனப் பரிந்துரைத்துள்ளார். இது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் விற்பனையின் ஏழாவது நாளில் முடிவடைந்துள்ளது, இதன் மூலம் அரசு ரூ.1.5 லட்சம் கோடி திரட்டியுள்ளது.

2022ஆம் நிதியாண்டில் 5.83 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2021-22 நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 2020-21 நிதியாண்டில் இருந்த அளவிலேயே உள்ளது என்று வரித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் 7.80% ஆக இருந்த ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூலையில் 6.80% ஆக குறைந்துள்ளது.  ஜூலை மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, ஏனெனில் நிலையான பருவமழை கிராமப்புறங்களில் விவசாய நடவடிக்கைகளை அதிகரித்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஜூலை 29 நிலவரப்படி பருவமழை இயல்பை விட 9% அதிகமாக இருந்ததால், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் ஜூலையில் 8.03% இல் இருந்து 6.14% ஆகக் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில், இயல்பை விட குறைவான மழை பெய்ததால் கிராமப்புற வேலையின்மை அதிகரித்தது.

நிதி உள்ளடக்கம் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முக்கிய படி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிறகு எதற்காக நிதி உள்ளடக்கத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாகப் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயப்படுத்த வேண்டும்.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு நபார்டு நிதி அளிக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூரில் உள்ள சிறுதானிய மையத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி நிதியை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிதியானது ஆராய்ச்சிக்கான வசதிகளை உருவாக்கி, ஆய்வகங்களை அமைப்பதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்திய சர்வதேச தங்கப் பரிமாற்றத்திற்கான அமைப்பு தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யும் பொறிமுறையில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்றும் இந்தியாவில் 'ஒரே தேசம், ஒரே தங்கம்' என்பது விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தப் பரிமாற்றம் தொடங்கப்பட்ட பிறகு, இந்திய நகைக்கடைக்காரர்கள் சரக்குக் கட்டணத்தில் ஆண்டுக்கு 80-100 மில்லியன் டாலர்களைச் சேமிக்க முடியும் என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

நிட்டி ஆயோக்கின் ஆட்சிக் குழு நான்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்களை விவாதித்தது -- பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களில் தன்னிறைவு அடைதல்; பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) நடைமுறைப்படுத்துதல்; உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல்; மற்றும் நகர்ப்புற நிர்வாகம் ஆகியவைக் குறித்து விவாதம் செய்யப்பட்டுள்ளது.

மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

பிரதமர் மோடி 2047-க்குள் வளர்ந்த நாடு தரத்தைப் பெறவேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார்! உலக வங்கி தற்போது இந்தியாவை குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துகிறது, இதன் படி குறைந்த, கீழ்-நடுத்தர, மேல்-நடுத்தர மற்றும் உயர் வருமானம் என நான்கு வருமானக் குழுக்களின் கீழிருந்து இரண்டாவதாக உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு 7-7.5 % நிலையான வளர்ச்சி விகிதத்தை எட்ட முடிந்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர்-நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறும் 2047க்குள் இந்தியா உயர்-நடுத்தர வருமானம் பெறும் நாடாக உயரும் எனப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் பிபேக் தேப்ராய் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி விகிதத்தில் 2047 ஆம் ஆண்டளவில் நாடு 20 லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும், என்றும் கூறியுள்ளார். உலக வங்கியின் வரையறையின்படி, தனிநபர் ஆண்டு வருமானம் 12,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ள நாடு அதிக வருமானம் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. 2.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர் ஜிடிபியுடன் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமான இந்தியா தற்போது வளரும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் வருமானம், ஜிடிபி போன்ற ஒற்றை அளவுகோல்களை பெருந்தரப்பில் உள்ள எளிய மக்களின் பொருளாதார நிலை, ஏழ்மை நிலையை வெளிக்காட்டுவது இல்லை. பணக்காரர்களின் வளர்ச்சியை வெளிக்காட்டும் குறியீடாகவே உள்ளன. இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட ஜூன் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (FLFPR) அதிகரித்துள்ளது. 2017-18 இல் 17% இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 25.1% ஆக உயர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், உலகளாவிய பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48%ஐ விடக் குறைவாக உள்ளது.

ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாகப் பணிபுரியும் பெண்களின் பங்கு 2017-18 இல் 39%ஆக இருந்தது 2020-21 இல் 43% ஆக அதிகரித்துள்ளது; இந்தியாவில் கிராமப்புறங்களில் ஊதியம் பெறாத குடும்பப் பெண்களில் 87% பேர் விவசாயத்தில் உள்ளனர். எனவே, கிராமப்புற பெண்களின் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்தில் உண்டான அதிகரிப்பு, அதிகரித்த தேவையையோ அல்லது விவசாயத்திற்கு அப்பாற்பட்ட சிறந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதையோ பிரதிபலிக்கவில்லை, தொற்றுநோய், அடுத்தடுத்த நெருக்கடி மற்றும் கிடைக்கக்கூடிய வேலையின் தரம் மோசமடைவதைச் சமாளிக்க ஒரு சாத்தியமான பாதுகாப்பு வழிமுறையைக் குறிக்கிறது.

நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் (FLFPR) 2017-18 இல் 16% இருந்தது 2020-21 இல் கிட்டத்தட்ட 19% ஆக ஓரளவு அதிகரித்தது. இவர்களில் 38% பெண்கள் சொந்தக் கணக்குப் பணியாளர்களாகவும், ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். மீண்டும், இந்த பெண்களில் வெறும் 16% பேர் சந்தைக்காகவும், தோராயமாக 32% பேர் முக்கியமாக சொந்த நுகர்வுக்காகவும் உற்பத்தி செய்கிறார்கள்.

ரகுராம் ராஜனின் சத்தீஸ்கரில் செயல்படுத்தப்படும் திட்டம் தேசத்தில் "மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் எனப் பாராட்டியுள்ளார். ராய்ப்பூர் மாவட்டத்தின் அபன்பூர் தொகுதியில் உள்ள நவகோன் கிராமத்தில் ஆதர்ஷ் கவுதனுக்குச் சென்று, வருமானம் சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது, "சத்தீஸ்கர் அரசு மகளிர் குழுக்களை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை வழங்கும் முயற்சி நாட்டிலேயே சிறந்த அடிமட்ட அணுகுமுறையாகும்" என்று ராஜன் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஜூலை 2020 இல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கரிம உரம், காளான்கள் வளர்ப்பு, பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி, எண்ணெய் வடித்தல், மீன்பிடித்தல், கோழி மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் நவகோன் கவுதனில் உள்ள மகளிர் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடை பராமரிப்பு, இலவச தீவனம் மற்றும் தண்ணீர் வழங்குதல், சுகாதாரப் பரிசோதனை, சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் ஆகியவற்றை கவுதனில் வழங்குவதையும் அவர் பாராட்டினார்.

இதன் மூலம் விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு சிறந்த தீர்வை பெறுவது மட்டுமல்லாமல், விவசாயத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் குறையும் பிரச்சினைகளையும் குறைக்க முடியும். உணவுப் பொருட்கள் கிடைக்கும் தன்மையையும் பெரிதும் மேம்படுத்த முடியும். நச்சுத்தன்மை, சுற்றுச்சூழலுக்கு சேதம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல பிரச்சனைகளை பெருமளவு குறைக்க முடியும்" என்று ராஜன் பாராட்டியுள்ளார்.

 ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடத்தில் உள்ளது. 

ஒரு நாடு வட்டி விகிதத்தை உயர்த்தும்போது அந்நாட்டில் கடன் பத்திரங்களின் மீதான வட்டி வருவாய் அதிகரிக்கும். இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யத் தொடங்குவர்.

அமெரிக்கா அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்டிருந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், இந்தியாவில் டாலரின் இருப்பு குறையத் தொடங்கியது.

பெரு நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு நிதி முதலீடுகள் இதுவரை 49,250 கோடி ரூபாய் வரை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன.கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி, தொடர்ந்து ஒன்பது மாதங்களாக அதிக முதலீடுகளை இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றிய பிறகு, தற்போது முதல் முறையாக வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக மாறியுள்ளனர். இது  ஜூலை மாதத்தில் செய்யப்பட்ட நிகர முதலீடான 5,000 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

தற்போது கச்சா எண்ணெய், எரிவாயு, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதிக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சரக்கு லாரிகளின் கட்டணம் உயரும். இதனால் காய்கறி உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். மின்னணு மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் மொபைல்போன், லேப்டாப் உட்பட மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களின் விலை உயரும். ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், முடிவின்றி வீழும் ரூபாய் மதிப்பு, மக்கள் உழைத்து ஈட்டும் வருமானத்தின் வாங்கும் சக்தியை கணிசமாகக் குறைக்கக் கூடும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தபடி செல்கிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 70.8 பில்லியன் டாலராக (ரூ.5.6 லட்சம் கோடி) உள்ளது. சென்ற நிதி ஆண்டு முதல் காலாண்டில் அது 31.4 பில்லியன் டாலராக (ரூ.2.5 லட்சம் கோடி) இருந்தது. தற்போது வர்த்தகப் பற்றாக்குறை இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 26.18 பில்லியன் டாலராகவும், கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலராகவும் இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூலை மாதத்தில் 4 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம், நிலக்கரி போன்ற சரக்கு இறக்குமதிகளின் உயர்வாலும், ஏற்றுமதியில் வீழ்ச்சியாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

அரசு பல்வேறு வழிகளில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும், ஏற்றுமதியை அதிகரிக்க திறந்த வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதி நிறுவனங்கள், தொழில்துறைக்கு அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் கட்டுக்கடங்காத வணிக நடத்தை, இந்தியாவில் அவற்றின் வணிக நடத்தையை சரிபார்க்க பயனுள்ள வழிமுறை இல்லாததால், பெரும்பாலும் கைபேசி வணிகத்தில் ஈடுபட்டுள்ள 1.5 லட்சத்திற்கும் அதிகமான சிறு கடைகள் மூடப்பட்டுள்ளன என நாட்டிலுள்ள 8 கோடி வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. சிறு வியாபாரிகள் உயிருடன் பிழைக்கச்செய்யவும், சில்லறை வர்த்தகம் ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டும் என்றால், அனைத்து சில்லறை வர்த்தகத்திற்கும் ஒரு விரிவான கொள்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள்  துறையின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பகிர்ந்துள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிகளின் மதிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அதன் பங்கு பற்றிய தரவுகளின்படி, 2020 இல் 49.75 விழுக்காடாகவும், 2021 இல் 49.35 விழுக்காடாகவும் இருந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியின் பங்கு 2022 இல், 45.04 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 2020 இல் $313.3 பில்லியனில் இருந்து 34.63 விழுக்காடும், 2021 இல் $291.8 பில்லியனில் இருந்து 44.5 விழுக்காடும் உயர்ந்து 2022 இல் $4228 பில்லியனாக அதிகரித்துள்ளது.

நுண்கடன் துறையின் கடன் போர்ட்ஃபோலியோ ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 24 விழுக்காடு அதிகரித்து ரூ.2.75 லட்சம் கோடியாக உள்ளது. வங்கிகளின் நுண் கடன் போர்ட்ஃபோலியோ 9.23 விழுக்காடு உயர்ந்து ரூ.1,04,762 கோடியாக உள்ளது.

பெட்ரோலியம், உருக்கு மற்றும் இதர உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் மற்றும் பொருட்களின் ஏற்றுமதி சமீபத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த பிரிவுகளில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதே சமயம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அல்லாத ஏற்றுமதியாளர்கள் செய்த இப்பொருட்களின் (பெட்ரோலிய பொருட்கள், உருக்கு, உணவு தானியங்கள் போன்றவற்றின்) ஏற்றுமதி உயர்ந்திருக்கலாம்.

மத்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி - பணவீக்கம் - அந்நிய பணவரத்து ஆகியவை நல்ல நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் இந்த மேம்பாடு சாத்தியமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, சர்வதேச அளவில் வளர்ந்துவரும் நாடுகளிலிருந்தும் அந்நிய முதலீடு கணிசமாக வெளியேறியது என்றும் அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் பொருளாதாரப் போக்கு மேம்பட்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பொருளாதார போக்கில் நெருக்கடி காணப்பட்டு வரும் நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 7.4 விழுக்காடாக இருக்கும் என்று சர்வதேசப் பண நிதியம் மதிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உலகளாவிய உணவு, தொழில்துறை உலோகங்களின் விலைகளின் குறைவு இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்றாலும், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு அந்த ஆதாயங்களை ஈடுசெய்யக்கூடும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். "நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் மற்றும் மிக உயர்ந்த நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, 'என்ன ஆனாலும்' அணுகுமுறையைத் தொடர்வோம். பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வெளிவரும் இயக்கவியலைப் பொறுத்து பணவியல் கொள்கைக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு, விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார் .

இந்திய ரிசர்வ் வங்கியின் நிலுவையில் உள்ள அமெரிக்க டாலரின் நிகர முன்னோக்கு கொள்முதல் ஜூன் மாதத்தில் 18.33 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது, ஏனெனில் மத்திய வங்கி முன்னோக்கிய மற்றும் ஸ்பாட் மார்க்கெட் இரண்டிலும் தலையிட்டதால், அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாக ரூபாயை அதிக மதிப்பிழப்பிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது .

மோசடிகளை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி தேவை என ரிசர்வ் வங்கி ஆய்வு தெரிவித்துள்ளது. 2019 நிதியாண்டில் வங்கித் துறையில் 6,801 மோசடிகள் ரூ. 71,543 கோடிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 53% கடன் தொடர்பானவை. கூடுதலாக, வங்கிகளின் சொத்துத் தரம் 2013-14 முதல் மோசமடையத் தொடங்கியது, மொத்த மற்றும் நிகர செயல்படாத சொத்துகள் (NPA) விகிதங்கள் முறையே 2.3% மற்றும் 1.1% இல் இருந்து, 2007-08 இல் 9.1% ஆகவும் 2018-19 இல் 3.7% ஆகவும் உயர்ந்தது. பொதுத்துறை வங்கிகளுக்குச் சொத்துத் தரப் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதால், அவற்றின் நிலைப்புத் தன்மை சவாலுக்குரியதாகவே உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நடத்திய ஆய்வின்படி, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிக சுயாட்சி தேவைப்படுகிறது, இதனால் அவை மோசடிகளுக்கு விரைவாக பதிலளிக்கவும், உள் மற்றும் வெளிப்புற அதிர்ச்சியை திறம்பட நிர்வகிக்கவும், அவற்றின் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்தவும் முடியும். பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்பின் வெற்றி, பெரிய வங்கிகள் தங்கள் நிர்வாகக் கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை உலோகங்களின் விலை 32% வரை சரிவடைந்துள்ளதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உருக்கு துறையில், ஹாட்-ரோல்டு காயில் விலை மார்ச் மாதத்தில் ஒரு டன் ரூ.73,500 ஆக இருந்து ஜூலை மாதத்தில் 19% குறைந்து ரூ.59,250 ஆக உள்ளது. உள்நாட்டில் தேவை மற்றும் ஏற்றுமதி குறைந்து வருவதால், எஃகு ஆலைகள் வாராந்திர அடிப்படையில் விலைக் குறைப்புகளை மேற்கொள்கின்றன. ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி, மும்பை மொத்த விற்பனை சந்தையில் ஹாட்-ரோல்டு காயில் (HRC) விலை ஒரு டன் ரூ.57,300 ஆக இருந்தது.

2022 ஜூன் மாதத்திற்கான சுரங்க மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீட்டின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவில் கனிம உற்பத்தி 7.5% உயர்ந்துள்ளது. மேலும், இந்திய சுரங்கப் பணியகம் (ஐபிஎம்) வெளியிட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கனிம உற்பத்தியின் ஒட்டுமொத்த வளர்ச்சி 9% அதிகரித்துள்ளது.

மழை, பூச்சிகளின் பாதிப்பு உலகின் முன்னணி பருத்தி உற்பத்தியாளரான இந்தியாவை பருத்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்தத்த் தீவிர வானிலை நிகழ்வுகள் ஒன்றிணைந்து பருத்தி விலையை 30% வரை உயர்த்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநிலங்கள் இணைந்து நிதியுதவி செய்யும் பயிர்க் காப்பீட்டுத் திட்டமான, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எஃப்பிஒய்) திட்டத்தின் கீழ் காப்பீடு பெறும் க்ளைம்-டு-பிரீமியம் விகிதம், ஜூன் 2022 பயிர் ஆண்டில் கடுமையாகக் குறைந்துள்ளது. உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளாக உரிமைகோரல் விகிதம் சீராக குறைந்து வருகிறது, ஏனெனில் சாதாரண பருவமழையாலும் மற்றும் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகளாலும் நாட்டின் பரந்த பகுதிகளில் பயிர் தோல்வியின் வாய்ப்பைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரு நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு நிதி முதலீடுகள் இதுவரை 49,250 கோடி ரூபாய் வரை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன.கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி, தொடர்ந்து ஒன்பது மாதங்களாக அதிக முதலீடுகளை இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றிய பிறகு, தற்போது முதல் முறையாக வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக மாறியுள்ளனர். இது  ஜூலை மாதத்தில் செய்யப்பட்ட நிகர முதலீடான 5,000 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்கள் ரூ.1.74 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க 1100 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்தன.

டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வரும் நிலையில், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடன் வாங்குபவர்களை துன்புறுத்துவதை நிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது, டிஜிட்டல் கடன் வழங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன் தரவுகள் கிடைப்பதை தடை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களைத் துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் கட்டுப்பாடில்லாமல் காளான் போல் பெருகியுள்ள ஃபின்டெக் நிறுவனங்களின் மீதான ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்கும் செலவு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதித்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. கடன் வாங்குபவர்களின் ஸ்மார்ட்போனில் தொடர்பு பட்டியலை அணுகுவதடன் தீங்கிழைக்கும் மென்பொருள் நிறுவப்படவும் காரணமாக உள்ளன. அத்தகைய ஃபின்டெக் நிறுவனங்கள் படையெடுக்கின்றன. கடனுக்கான பணம் செலுத்துவதில் தடங்கள் ஏற்பட்டால், அத்தகைய டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்கியவரை அவதூறாகப் பேசுவார்கள், இது பெரும் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும். புதிய விதிகளின் கீழ், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கடன் தயாரிப்பின் அனைத்து செலவுகளையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், மேலும் அவர்கள் கடன் வாங்குபவர்களின் ஸ்மார்ட்போன்களிலிருக்கும் தகவல்களை படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பயணிகளின் தரவுகளை பணமாக மாற்றும் திட்டத்தை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைவசி சார்ந்த சிக்கல் குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனை தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை (2018) இந்திய அரசு திரும்பப் பெற்ற காரணத்தால் இந்திய ரயில்வே / ஐஆர்சிடிசியின் தரவுகளை பணமாக்கும் வகையில் ஆலோசகரை நியமிப்பதற்கான -டெண்டர் ஐஆர்சிடிசி மூலம் ஜூலை 29, 2022 கோரப்பட்டது. இப்போது அது திரும்பப் பெறப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க அதிக வட்டி விகிதங்கள் தொடரும் என்று அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் தெரிவித்ததை அடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் மதிப்பு 80.11 வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்தது.

மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் (CBIC), சுங்க விதிமீறல்களுக்கு வழக்குத் தொடரவும் கைது செய்வதற்கான பண வரம்பை அதிகரித்துள்ளது. சுங்க மீறல்களில் சட்ட நடவடிக்கைக்கான பண வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. பொருட்கள், வெளிநாட்டு நாணயங்களின் கடத்தல் வழக்குகளில், சட்ட நடவடிக்கைக்கான, சந்தை மதிப்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மோசடிகள் விதிமீறல் வழக்கில் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளைகள் வருமான வரி விலக்குகளைப் பெறுவதற்கு பரந்த அளவிலான தனிப்பட்ட விவரங்கள், கணக்குப் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பராமரிப்பதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் புதிய விதிகள் வரி ஏய்ப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஆனால் அவை நேர்மையான அறக்கட்டளைகள் மீது கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் புதிய நிபந்தனைகளுக்கு இணங்கத் தயாராக உள்ள போதிலும், சமூகப் பணிகளுக்கான நிதியை உருவாக்க இந்த நிறுவனங்களுக்கு அதிக முதலீட்டு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நிதிநிலை அறிக்கை ஆவணங்களின்படி, அறக்கட்டளைகள்/நிறுவனங்கள் கோரும் மொத்த விலக்கு தொகை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது, 2015 இல் ரூ.2.25 லட்சம் கோடியாக இருந்தது 2018 இல் ரூ.3.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அரசு இந்த மாத தொடக்கத்தில் மக்களவையில் போட்டி (திருத்த) மசோதா, 2022 அறிமுகப்படுத்தியது, இது நிறுவனங்களை கையகப்படுத்தல் அல்லது இணைப்பிற்கு இந்தியப் போட்டி ஆணையத்திடம் கட்டாயம் அறிவிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கான புதிய அளவுகோல் உட்பட பல திருத்தங்களை முன்மொழிகிறது. நிறுவன இணைப்பிற்கான மறுமதிப்பீட்டுக் காலத்தை குறைத்தல், போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களின் தளத்தை விரிவாக்குதல், தீர்வு கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இத்திருத்தத்தில் அறிமுகப்பட்டுள்ளது. போட்டி சட்டம் 2002இல் இயற்றப்பட்டது.

உலகம்:

கடந்த மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரையின்படி, மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் முன்முயற்சிகள், உள்நாட்டு உற்பத்திக்கு ஆதரவாக, இறக்குமதியை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, "பாரபட்சமான 'தேசிய வாங்குதல்' நடைமுறைகளை இந்தியா தடை செய்ய வேண்டும், இதனால் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையிலேயே”, இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) 27 உறுப்பினர் கூட்டத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு மேற்கொள்ளப்படும்.

பரஸ்பர அடிப்படையில் இந்தியா சுங்கவரிகள் மற்றும் ஒதுக்கீட்டை முழுமையாக நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது, உணர்திறன் வாய்ந்த தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான உள்நாட்டு வரிகள் மற்றும் வரிகளின் அதிகரிப்பால் வரி குறைப்பு ஈடுசெய்யப்படாது என்று குறிப்பிட்டுள்ளது. இது விரைவான, அதிக வெளிப்படையான மற்றும் குறைவான சுங்கவரியுடன், ஒரு விரிவான ஒற்றைச் சாளர மின் சான்றிதழ் செயல்முறை மற்றும் ஏற்றத்தாழ்வான இறக்குமதி தடைகளை அகற்றுவதையும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஜாக்சன் ஹோல் கருத்தரங்கத்தின் கருப்பொருள் கோவிட் கொள்ளைநோய்க்குப் பிந்தைய பொருளாதாரம் மற்றும் கொள்கை மீதான கட்டுப்பாடுகள் குறித்தது. விநியோக சமநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதன் விளைவாக உயர்ந்தப் பணவீக்கம் குறித்து அமெரிக்க மத்திய வங்கி கவலை தெரிவித்துள்ளது. பணவீக்கத்தை 2 % இலக்கின் கீழ் கொண்டு வருவதிலேயே அமெரிக்கத் தலைமை வங்கி கவனம் செலுத்தும் என்று அதன் தலைவர் ஜெரோம் பவல் உறுதியாகக் கூறியுள்ளார். மத்திய வங்கி அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்தவுள்ளது. அதிக வட்டி விகிதங்கள் வளர்ச்சியைக் குறைக்கும், மேலும் தற்போது வேலை சந்தையில் இருக்கும் சாதகமான சூழலையும் குறைக்கலாம், ஆனால் விலையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவதற்கு அது பொருளாதாரம் தாங்க வேண்டிய ஒரு வேதனையாகும் என்று கூறியுள்ளார்.

பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைவதால், பணவீக்க அழுத்தங்கள் குறைந்து வரும் நாட்களில் மத்திய வங்கியின் வட்டி உயர்த்தும் நடவடிக்கைகளைக்  குறைக்கலாம் என்ற சிறிய எதிர்பார்ப்பு இருந்ததால், சந்தைகளும் இந்த அறிவிப்புகளுக்கு எதிர்மறையாக பதிலளித்தன. அமெரிக்க கருவூல பத்திரங்களின் வளர்ச்சி முழுவதும் உயரும் போது பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முறையான ஒப்பந்தத்தின்படி, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி விதிப்பதை நிறுத்துமாறு சட்டத் திருத்தம் கொண்டுவருமாறு ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் (OECD) எதிர்கால டிஜிட்டல் வரிகள் குறித்த திட்டத்திற்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் எதிப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் பலதரப்பு ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை எதிர்த்துள்ளன, இது சமன்படுத்தும் வரி போன்ற எதிர்கால டிஜிட்டல் சேவை வரிகளை நாடுகளுக்குச் செயல்படுத்துவதைத் தடுக்கிறது. வளரும் நாடுகள் முன்மொழியப்பட்ட தகராறு தீர்க்கும் பொறிமுறையைப் பற்றி வலுவான கவலையை வெளிப்படுத்தின, சுயேட்சையான வல்லுநர்கள் சாராம்சத்தில் இறையாண்மையான செயல்பாட்டைச் செய்யஇயலாது என்றும் கூறினர்.

பிரிட்டனின் பணவீக்க விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) புதன்கிழமை 10.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 மாதங்களாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச தட்டுப்பாட்டை சமாளிக்க உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு:

"5ஜி அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மத்திய அரசுதான் கூறியது. ஆனால், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்குத்தான் சென்றுள்ளது. இந்த வித்தியாசம் குறித்து யார் சொல்வது? எங்கு தவறு நடந்துள்ளது?" என்று திமுக எம்.பி. .ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கோரியுள்ளது.  தமிழக மின்வாரியம், ஆண்டுதோறும் நவம்பருக்குள் தன் மொத்த வருவாய், தேவை அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆணையம் ஆய்வு செய்து, வருவாயைவிட செலவு அதிகம் இருந்தால், பற்றாக்குறையை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கும்.

2021-22 நிலவரப்படி மின்சார வாரியத்தின் மொத்த கடன் சுமைரூ.1.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22-ல் மின்வாரியம்கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ.16,511 கோடியாக உயர்ந்துவிட்டது. எனவே, 8ஆண்டுகளுக்குப் பிறகு மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக்கோரி ஆணையத்திடம் மனு சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் எனத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் புதிய யுக்தியுடன் 2 லட்சம் ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம் என்ற அடிப்படையிலான ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

புத்தொழில் தொடர்பாக 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாக முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் அறிவிக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடவு, மே மாதம் தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தப் பருவத்தில் நடவு செய்யப்படும் நெற்பயிர்கள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். அறுவடை நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது நெற்கதிர்கள் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள் பெரும்பாலும் பயிர்க் காப்பீடு செய்வது வழக்கம். இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 49 விழுக்காடும், விவசாயிகள் 2 விழுக்காடும் என அந்த ஆண்டுக்கான பயிர் சாகுபடிக்கான உற்பத்தி செலவினத் தொகையில் 5 விழுக்காட்டை பிரீமியமாக செலுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2021-2022-ம் ஆண்டில் மத்திய அரசு பயிர்க் காப்பீடு திட்டத்துக்கான பங்களிப்பை 33 சதவீதம் மட்டுமே தர முடியும் எனக் கூறியிருந்தது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சட்டதிருத்தத்தில், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டது

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தின் நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

"போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5% உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தலைமைச் செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தமிழக அரசின் அகவிலைப்படியானது ஜூலை 1-ம்தேதி முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக 3% உயர்த்தி வழங்கப்படும் என்று நிதித்துறை அறிவித்துள்ளது.

காலணி உற்பத்தியில் முன்னணி இடத்தில் உள்ள தமிழகத்தில், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியில் மேலும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தின் ஆட்சியர் .அருண் தம்புராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, புதிய தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஒப்புதலைப் பெற ஒற்றைச் சாளர அனுமதி வழங்கலைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார். தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை, தொழில்துறை பாதுகாப்புத் துறை, மின்சாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற துறைகளின் ஒப்புதல்களைப் பெற விண்ணப்பங்களை http://www.tnsqp.com/DIGIGOV என்ற அரசு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதாந்திர மறுஆய்வுக் கூட்டங்களின் போது, ​​ இந்த விண்ணப்பங்கள் ஒற்றைச் சாளர அனுமதிக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழ்நாடு ஒற்றைச் சாளரத் தளம் என்பது அந்தந்த பொது அமைப்புகளுக்கு மின்னணு முறையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் இருக்கும் ஒரே ஒரு தளம் ஆகும். இது துணை ஆவணங்களை சமர்ப்பித்தல், நிறுவனங்களுக்கு அந்தந்த அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட வினாக்கள், நிறுவனங்களின் பதில்களைப் பெறுவதற்கான தொடர்புக்கும், கூடுதலாக, விண்ணப்பத்தின் நிலையை கண்காணிப்பதற்கும் பயன்படுகிறது.

இணைய நிர்வாகத் தகவல் அமைப்பின் (MIS) அறிக்கைகள் பல்வேறு நிலைகளில் கண்காணிப்பதற்காக உருவாக்கப்படுகின்றன, மேலும் நிறுவனங்கள் இறுதி கையொப்பமிடப்பட்ட அனுமதியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...