1980களில் நவீன தாராளவாத கார்ப்பரேட் கொள்கைகளின் அழிவுகளைப்
பார்த்தபின், பெருமளவில் மக்கள் கடனை தென் நாடுகளை அடிமைப்படுத்தப்படுவதற்கான முக்கிய
கருவியாக அடையாளம் கண்டுள்ளனர்.
1989 ஜூலையில் ஃபிரான்சில், ஜி7 கூட்டமைப்பின் சந்திப்பின்
போது ஃபிரெஞ்சு புரட்சியின் இருநூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு “போதும் போதும்” என்ற பிரச்சார இயக்கம் எழுத்தாளர் கில்லஸ் பெரால்ட்,
பாடகர் ரெனாட் ஆகியோரின் தூண்டுதலின் மூலம் தொடங்கப்பட்டது. அவர்கள் பாஸ்டில் மேல்முறையீட்டை
முன்வைத்து நிபந்தனையற்ற உடனடி கோரிக்கையாக மூன்றாம் உலகக் கடனை ரத்து செய்யவேண்டும்
என்று பிரச்சாரம் மேற்கொண்டனர். ஃபிரான்ஸில் அவ்வியக்கம் பின்தொடரப்படவில்லை என்ற போதும்,
பெல்ஜியத்தில் மூன்றாம் உலகக் கடனை ஒழிப்பதற்கான குழு (CADTM) நிறுவப்பட்டு பிரச்சாரம்
மேற்கொள்ளப்பட்டது. லீஜில் உள்ள சர்வதேச வலையமைப்பு உலகில் உள்ள பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தீவிர மாற்றுகளை ஊக்குவித்தது. மூன்றாம்
உலகின் கடன், கட்டமைப்பை சரிசெய்தல் ஆகியவை அதன் முன்முயற்சிகளின் நடுநாயகமாக உள்ளன.
ஜி8, பன்னாட்டு நிறுவனங்கள், வங்கி/சர்வதேச பண நிதியம் (IMF)/ உலக வர்த்தக அமைப்பு
(WTO) மும்மூர்த்திகளின் கட்டளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சர்வதேசிய கண்ணோட்டத்தில் பணியாற்றுகிறது. இவ்வமைப்பு
(CADTM) தொடக்கத்திலிருந்தே பன்மைத்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. இதில் ஆர்வலர்கள்,
தொழிற்சங்கங்கள், அமைப்புகள், கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒற்றுமை பிரச்சாரக்
குழுக்கள், மற்றும் அரசு சாரா அமைப்புகள் இதில் ஈர்க்கப்பட்டு செயலாற்றுகின்றனர்.
1994 இல் நிகழ்வுகளின் முதல் முக்கிய திருப்பம் வந்தது.
ஜனவரி 1 அன்று, மெக்சிகோவின் சியாபாஸ் பகுதியில், கனடா, மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய
நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) செயல்படுத்தப்படும்போது ஜபாடிஸ்டாஸ்
மற்றும் துணைத் தளபதி, மார்கோஸ் கிளர்ச்சியை உருவாக்கினர். பழங்குடியின மக்களின் கூற்றுக்களின்
அடிப்படையில், அவர்களின் போராட்டம் உலகில் உள்ள அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்
உலகமயமாக்கத்திற்கு எதிராகவும் இருந்தது.1994 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் அமைப்புகளின்
(சர்வதேச பண நிதியம், உலக வங்கி), ஐம்பதாவது ஆண்டு நிறைவு மாட்ரிட்டில் இது நினைவுகூரப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில், மூன்றாம் உலகின் கடன்களை ஒழிப்பதற்கான இயக்கம் (CADTM)“ஒரு மாற்றுக்
கண்ணோட்டத்தை முன்வைக்கும் விதத்தில் “உலகின் பிற குரல்கள்” என்ற தலைப்பில், எதிர்-உச்சிமாநாடு
மற்றும் தெரு ஆர்ப்பாட்டம் (15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்) ஏற்பாடு செய்தது. அந்த பிரச்சாரத்தின் பெயரில்,
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதழ் வெளியிடப்படுகிறது.
அடுத்ததாக, மூன்றாம் உலகின் கடன்களை ஒழிப்பதற்கான இயக்கம்
(CADTM) “உலக வங்கியே, சர்வதேசப் பணநிதியம், உலக வர்த்தக மையமே போதும்!” என்ற பிரச்சாரத்தை
தொடங்கியது. சர்வதேச நிதி நிறுவனங்களின் ஏரணத்திற்கு எதிராக ஆதரவாளர்களின் பரந்த வலையமைப்பை
உருவாக்கியது.1996 இல், லியோனில் ஜி7 உச்சி மாநாடு நடந்தபோது ஒரு பெரிய சர்வதேச அணிதிரட்டல்,
“உலகின் மற்ற குரல்கள்”, என்ற கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு "இன்டர்கேலக்டிக்
மீட்டிங் ஆஃப் ஜபாடிஸ்டாஸ்" மெக்சிகோவில் நடத்தியது.
1998 இல், ஜூபிலி 2000 பிரச்சாரத்தின் மூலமாகவும், உலகமயத்திற்கு
எதிரான ‘அட்டாக்’ என்ற சமூக அமைப்பின் (ATTAC) மூலமாகவும் ஃபிரான்சில் கடனைக் கருப்பொருளாகக்
கொண்ட செயல்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, மூன்றாம் உலகின் கடன்களை
ஒழிப்பதற்கான இயக்க (CADTM) வலையமைப்பு வடக்கிலும் வளர்ந்தது.
இவ்வமைப்பு பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஜப்பான்,
தெற்கில் குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், இந்தியா
மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் செயல்பட்டது). 2008 இல், மூன்றாம் உலகின் கடன்களை
ஒழிப்பதற்கான இயக்கம் (CADTM) இருபத்தைந்து நாடுகளில் இயங்கியது, அதன் செய்திகள் ஒவ்வொரு
கண்டத்திலும் உள்ள பல்வேறு கூட்டாளர்களால் வெளியிடப்பட்டது.
மூன்றாம் உலகின் கடன்களை ஒழிப்பதற்கான இயக்கம் (CADTM)
சர்வதேச கூட்டங்கள்-சட்டம் பற்றிய கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகளை CADTM வலையமைப்பின்
கூட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளது;
கடனைப் பற்றி பல வெளியீடுகள் (புத்தகங்கள், டிவிடிகள்,
குறுந்தகடுகள்) கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விரிவுரைகள், விவாதங்களை முன்வைக்கும்
திரைப்படங்களான ‘பாமக’, வாழ்க்கை மற்றும் கடன், டார்வினின் கெட்ட கனவு, வறுமையின் முடிவு?
ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் வாயிலாக ஊடக
கவனத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விழிப்புணர்வை மேம்படுத்த பல்வேறு
செயல்பாடுகள் மூலமும், நாடகம், இசை நிகழ்வு, நகைச்சுவை நிகழ்வுகள் எனப் பல்வேறு வடிவங்களிலும்
பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் செயல்படுவதற்கான அதன் கூட்டாளர்களின்
திறனை வலுப்படுத்தும் நோக்குடன் இவ்வமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது.
இவ்வமைப்பு மத்திய ஆஃப்ரிக்காவில் பல்வேறு சமூக இயக்கங்களுடன்
கூடிய பயிலரங்கத்தை நடத்தியது. குடிமக்கள் தாங்களே நாட்டின் கடனைத் தணிக்கை செய்வதற்கான
தளங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு பட்டறைகள் இரண்டு துணை பிராந்தியங்களில்
செயல்படுத்தப்பட்டன. குடிமக்களின் தணிக்கை மக்களின் நலன்களில் அடிப்படையில் அரசை செயல்படவைப்பதற்கான
ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும், இதன் மூலம் இழிந்தக் கடன்கள் ரத்துசெய்யப்படவேண்டும்,
நாட்டின் வளங்களின் மீதான மக்களின் கட்டுப்பாட்டை கொண்டுவரச் செய்யவேண்டும். சர்வாதிகார
அரசுகளால் மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
என்பதே பயிலரங்கங்களின் இலக்காகும்.
சர்வதேச நிதி நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான திட்டத்தையும்
மூன்றாம் உலகின் கடன்களை ஒழிப்பதற்கான குழு (CADTM), தென் ஜூபிலி மற்றும் பிற கடன்
எதிர்ப்பு பிரச்சாரங்களால் தொடங்கப்பட்டது. இங்கேயும், தணிக்கை என்பது உள்நாட்டின்
கடன்பட்ட தன்மையை அம்பலப்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும். மக்கள் அதை
திறம்பட பயன்படுத்த கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பாக நடவடிக்கைகளைக் கையாளமுடியும்.
கடன் தணிக்கை கருவியானது பொறுப்புகளை அடையாளம் காண்பதை
சாத்தியமாக்குகிறது. மேலும் சட்டவிரோத, மோசமான கடன்களை அம்பலப்படுத்த, உதவுகிறது. கடனை
நிராகரிப்பதற்கான வழியை ஏற்படுத்துகிறது.
கடனை ரத்து செய்வதற்கான சர்வதேச பிரச்சாரம் இப்போது மாற்று
உலகமயமாக்கத்திற்கான இயக்கத்தின் மையமாக உள்ளது. மூன்றாம் உலகின் கடன்களை ஒழிப்பதற்கான
குழுவின் (CADTM) நடவடிக்கைகளை வளரும் நாடுகளின் வெளிப்புற பொதுக் கடனை நிபந்தனையின்றி
ரத்து செய்தல், நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் மீது சுமத்தப்பட்ட கட்டமைப்பு சரிசெய்தல்
திட்டங்களை ஒழித்தல் ஆகியவற்றுடன் நிறுத்திவிடவில்லை. தற்போதைய நிதியமைப்புக்கு நிலையான
மாற்றுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் முன்வைக்கிறது.
கடன் ரத்துக்கான சில உதாரணங்கள்:
அமெரிக்கா
1776 இல் வட அமெரிக்காவில் பதின்மூன்று பிரிட்டிஷ் காலனிகள்
அமைக்க முடிவு செய்யப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டிஷ் அரசை சார்ந்திருப்பதை முடிவுக்குக்
கொண்டு வரும் அடிப்படையில் வட அமெரிக்காவில் புதிய அரசை அறிவித்ததன் மூலம் கடன் சுமையிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்டது. லண்டனுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செல்லாது
என அறிவித்தது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தென் மாநிலங்கள் பிரிந்து கூட்டமைப்பை உருவாக்கியது, தென்
மாநிலங்கள் வட மாநிலங்களுக்குக் கொடுக்கவேண்டியக் கடன்கள் ரத்துசெய்யப்பட்டன.
சோவியத் ஒன்றியம்
ஜனவரி 1918ல், ரஷ்ய புரட்சியால் புத்தம் புதிய கம்யூனிஸ்ட்
அரசு உருவாக்கப்பட்டது, புரட்சிய அரசு, ஸார் அரசு பெற்ற கடன்களுக்கு பொறுப்பேற்க மறுத்தது.
ரஷ்யா நிபந்தனையின்றி அத்தகைய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்தது. முதல் உலகப்போருக்கு
நிதியளிப்பதற்காக பெற்ற கடன்களும் ரத்து செய்யப்பட்டது. கடனுக்கான “ரஷ்ய பத்திரங்கள்”
பின்னர் கிட்டத்தட்ட மதிப்பில்லாது சந்தைகளில் விற்கப்பட்டன.
மெக்சிகோ:
1867 ஆம் ஆண்டு வரை, பேரரசர் மாக்சிமிலியனின் முந்தைய ஆட்சியில்
இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட கடன்களுக்குப் பொறுப்பேற்க மெக்சிகோவின் அதிபர்
பெனிட்டோ ஜுவரெஸ் மறுத்துவிட்டார். 1914 இல், புரட்சியின் நடுவில், எமிலியானோ ஜபாடா,
பாஞ்சோ வில்லா தாக்குதலில் ஈடுபட்ட போது, மெக்சிகோ கடன் இடைநிறுத்தப்பட்டது.
1940ல் மெக்சிகோவில் பிரிட்டிஷ், வட அமெரிக்க நிறுவனங்களின்
கைகளில் இருந்த பெட்ரோலியம், ரயில்வே நிறுவனங்களை இழப்பீடு இல்லாமல் அதிபர் லாசரோ கார்டெனாஸ்
தேசியமயமாக்கினார். தேசிய, வெளிநாட்டு உரிமையாளர்கள் 18 மில்லியன் ஹெக்டேர் பெரிய நிலப்பரப்பு
எஸ்டேட்டுகள் (latifundias) தேசத்தின் பெயரில் கையகப்படுத்தினார்.
பிரேசில், பொலிவியா ஈக்வடார், போன்ற பிற நாடுகளும், 1931
ஆம் ஆண்டிலிருந்து கடன்களை திருப்பிச் செலுத்துவதை
நிறுத்தியது. பிரேசில் கடன் திருப்பிச் செலுத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிறுத்தம்
1943 வரை நீடித்தது. ஈக்வடார் கூட,1931 முதல் 1950 வரை கட்னுக்குப் பணம் செலுத்துவதை
நிறுத்தியது.1930 களில், மொத்தத்தில் பதினான்கு நாடுகள் நீண்ட காலத்திற்குப் பணம் செலுத்துவதை
நிறுத்தின.
கியூபா
இழிந்தக் கடனை வெற்றிகரமாக நிராகரித்த முதல் நாடுகளில்
கியூபாவும் ஒன்றாகும்.1898ல் அமெரிக்கா ஸ்பெயினுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று கியூபாவின்
கட்டுப்பாட்டைப் பெற்றது. அதுவரை ஒரு ஸ்பானியக் காலனியாக இருந்த. கியூபா ஸ்பானிய அரசாட்சியிலிருந்து
பிரிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, கியூபா தனது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்
என்று ஸ்பெயின் கோரியது ஆனால் அமெரிக்கா அதை நிராகரித்தது. அதே ஆண்டு, இந்த பிரச்சனையை
சமாளிக்க பாரிஸில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதில் அமெரிக்கா கடன் இழிவானது என்று
வாதிட்டது, ஏனெனில் அது ஸ்பானிய அரசின் சொந்த நலன்களுக்காக கியூப மக்களின் அனுமதியின்றி
திணிக்கப்பட்டது. மாநாட்டில் அமெரிக்காவுடன் உடன்பட்டு ஸ்பெயின் வாதத்தை ஏற்றதால் கியூபா
பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
1985 முதல் வளரும் நாடுகளில் நிகழ்ந்த கடன் ரத்துகள் மற்றும்
இடைநீக்கங்கள்:
பெரு
ஜூலை 1985 இல், பெருவின் புதிய அதிபர் ஆலன் கார்சியா, ஏற்றுமதி
வருவாயில் 10 விழுக்காட்டிலிருந்தே கடனை திருப்பி செலுத்த வேண்டும் என வரம்பிட்டார்.
இதன் விளைவாக அமெரிக்காவின் தூண்டுதலின் கீழ் பெரு சர்வதேச பண நிதியம், உலக வங்கியால்
சர்வதேச சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. சுமார் $5 பில்லியன்
மதிப்பிடப்பட்ட வட்டி மீதான பாக்கிகள் நேரடியாக கடன் பங்குகளில் சேர்க்கப்பட்டு வட்டி
மூலதனமாக்கப்பட்டது.
புர்கினா பாசோ
ஜூலை 1987 இல், ஆஃபிரிக்க ஒற்றுமைக்கான அமைப்பில் ஆற்றிய
உரையின் போது (OAU), தாமஸ் சங்கரா, புர்கினா பாசோவின் அதிபர், கடன்கள் திரும்ப செலுத்தப்படாது
என்று ரத்து செய்தார். கடன் நீக்கத்திற்கான ஆஃப்ரிக்க இயக்கத்தை உருவாக்குவதாக வாக்களித்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது, முதலில் நாம் செலுத்தவில்லை
என்றால், கடன் அளித்தவர்கள் நிச்சயமாக இறக்கமாட்டார்கள்; மறுபுறம், நாம் கடன்செலுத்தினால்,
நிச்சயமாக நாம் இறக்க வேண்டும் என்று கூறினார்.
1987 அக்டோபர் 15, அன்று, தாமஸ் சங்கரா படுகொலை செய்யப்பட்டார்.
அப்போதிருந்து, ஆஃபிரிக்க நாடுகளின் தலைவர் கடனை நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
டிசம்பர் 2008 இல், ஈக்வடார் அதிபர் ரஃபேல் கொரியா ஈக்வடாரின்
தேசியக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது, இது முறைகேடான இழிந்தக் கடன் என்று அறிவித்தார்,
ஏனெனில் இது முந்தைய ஊழல்மிக்க சர்வாதிகார ஆட்சிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடன் பத்திரங்களின் விலையைக் கணிசமாகக் குறைப்பதில் அவர் வெற்றியும் பெற்றார்.
மூன்றாம் உலக நாடுகளின் ஜனநாயக அரசுகள் கடன் சங்கிலியிலிருந்து
வெளியேற வேண்டும். கடன் தணிக்கையின் அடிப்படையில் முறைகேடான கடனை நிராகரிக்கவேண்டும்.
சர்வதேச சட்டம் தென் நாட்டு அரசுகளுக்கு இழிந்தக் கடனை நிராகரிக்க திறன்மிக்க வழிகளை
வழங்குகிறது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த அரசுகள் தயாராக இருக்க வேண்டும்.
SOURCE: Debt, the IMF, and the WORLD BANK - Eric
Toussaint and Damien Millet
No comments:
Post a Comment