இந்தியா:
அமெரிக்காவில்
நுகர்வோர் பணவீக்கம் 8.6% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைக் குறைப்பதற்காக அமெரிக்க
மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் ஜூன் மாதத்தில் வட்டிவீதத்தைக் 0.75% உயர்த்தியுள்ளது.
இதனால் உலகளவிலும், இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. அமெரிக்க
ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலியாக வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை அதிக அளவில் விற்பனை
செய்துவருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களின் இந்தியப்
பங்குச்சந்தையில் ரூ.1.98 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்கு, பத்திரங்களை
விற்றுள்ளனர்.
இந்தியப் பங்குச்
சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் உரிமப் பங்கு 5 ஆண்டுகளில் இல்லாத
அளவிற்கு 18%க்கும் கீழ் குறைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து
வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றங்கள்
துரிதமாகியுள்ளது. இந்தியப் பங்குகளில் இருந்து இதுவரை $26 பில்லியன் நிகர
வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி
நெருக்கடியின் உச்சத்தின் போது வெளியேறியதை விட இது இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
ரிசர்வ் வங்கி
சமீபத்தில் 'ஆபத்திலுள்ள மூலதனப் பாய்ச்சல்கள்: இந்தியாவின் அனுபவம்' என்ற
தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா கருப்பு அன்ன நிகழ்வை (Black
swan) எதிர்கொள்ளவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. எதிர்பாரா நெருக்கடிகள் கருப்பு
அன்ன நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளியேறும் நிதி
முதலீடுகளின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 சதவீதமாக உயரக்கூடும் என
ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பாதகமான உலகளாவிய நிகழ்வுகளால் இந்தியாவில்
இருந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகளின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்
என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தாண்டில் டாலருக்கு
எதிரான ரூபாயின் மதிப்பு 5% சரிவடைந்துள்ளது.
பணவீக்கம்:
மே மாதத்தில் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம், 15.88% ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 14வது மாதமாக
மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. 2021 மே
மாதத்தில் மொத்த விலைப் பணவீக்கம் 13.11% ஆக இருந்துள்ளது. கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், இரசாயன பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
முதன்மைப் பொருட்களின்
விலைவாசி 19.71% உயர்ந்துள்ளது. எரிபொருள், ஆற்றல் துறையில் விலைவாசி 40.62%
உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலைவாசி 10.89% உயர்ந்துள்ளது.
மே மாதத்தில் சில்லறை
பணவீக்கமான நுகர்வோர் குறியீட்டெண் 7.04%ஆக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின்
பணவீக்கம் 7.97% உயர்ந்துள்ளது. மாதாந்திர அளவில் 1.38% உயர்ந்துள்ளது.
தானியங்களின் விலைவாசி 5.33% உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்புகளின் விலைவாசி
13.26% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி
2.33% உயர்ந்துள்ளது. காய்கறிகளின்
விலைவாசி 18.26% உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.72%ஆக உள்ளது.
இந்திய மாநிலங்களிலே பணவீக்கம் மிக அதிகமாக தெலங்கானாவில் 9.45% உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில்
தொழில்துறை வளர்ச்சி:
புள்ளியல்
அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட உற்பத்திக் குறியீட்டின் படி ஏப்ரல் மாதத்தில்
உற்பத்தி வளர்ச்சி 7.1%ஆக உள்ளது. சுரங்கத்துறையில் உற்பத்தி 7.8% உயர்ந்துள்ளது.
உற்பத்தித்துறை 6.3% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மின்சார உற்பத்தி 11.8%
உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 10.1% உயர்ந்துள்ளது.
மூலதனப் பொருட்களின்
உற்பத்தி 14.7% உயர்ந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 7.6%
உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்புப் பொருட்களின் உற்பத்தி 3.8% உயர்ந்துள்ளது.
நீடித்தப் பொருட்களின் உற்பத்தி 8.5% உயர்ந்துள்ளது. உடனடி நுகர்வுப்பொருட்களின்
உற்பத்தி 0.3% உயர்ந்துள்ளது.
மே
மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:
இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த
உற்பத்திக் குறியீடு ஏப்ரலில் 18.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு மே மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 25.1 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி , 26.3 விழுக்காடும், அதிகரித்துள்ளது. உருக்கு உற்பத்தி 15 விழுக்காடு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 4.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. பெட்ரோலிய
சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 16.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 22.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 7 விழுக்காடு குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி 22 விழுக்காடு
அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி-2021-22:
இந்தியாவின்
2021-22 ஆம் நிதியாண்டிற்கான உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பின் வளர்ச்சி 8.7% ஆக உள்ளது,
இதற்கு அடிப்படையான முந்தைய ஆண்டு வளர்ச்சி 6.6% குறுக்கமடைந்திருந்தது. அந்த அடிப்படையில்
பார்க்கும் போது வளர்ச்சி குறைவானதே. 2021-22 இல் உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு
₹147.4 லட்சம் கோடியாக இருந்தது, இது 2020 இல் எட்டப்பட்ட ₹145.2 லட்சம் கோடியை விட
வெறும் 1.5% மட்டுமே அதிகம்.
நாட்டின் உண்மையான உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பின் வளர்ச்சியானது
2021 டிசம்பர் காலாண்டில் 5.4%ஆக இருந்தது 2022 மார்ச் காலாண்டில் 4.1%ஆகக் குறைந்துள்ளது.
2020-21 டிசம்பர் காலாண்டில் 7.4 %ஆக இருந்த, தனியார் இறுதி நுகர்வு செலவு (PFCE) 2021-22 மார்ச் காலாண்டில் 1.8 % அதிகரித்துள்ளது. 2020-21 டிசம்பர் காலாண்டில் 3% ஆக இருந்த அரசு இறுதி நுகர்வுச் செலவு (GFCE) 2021-22 மார்ச் காலாண்டில் 4.8 % உயர்ந்துள்ளது. டிசம்பர் 2020-21 காலாண்டில் 2.1 %ஆக இருந்த மொத்த நிலையான மூலதன உருவாக்கம்
(GFCF) 2021-22 மார்ச்
காலாண்டில் 5.2 % உயர்ந்துள்ளது.
இந்திய
சுரங்க பணியகத்தின் (IBM) தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஏப்ரல்
மாதத்தில் முக்கியமான கனிம தாதுக்களின் உற்பத்தி அளவு 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ஜூன் மாத பணக் கொள்கை அமர்வில் வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய காலக் கடனுக்கான
ரெபோ விகிதத்தை 0.5% உயர்த்தியுள்ளது. தற்போது ரெபோ விகிதத்தின் மதிப்பு 4.9% ஆகும்.நிலையான
வைப்பு வசதி (SDF) விகிதம் 4.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது; விளிம்பு நிலை வசதி
(MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.15 விழுக்காடாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின்
செயல்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டையும் அசாதாரண
சூழ்நிலைகளில் கவனித்துக்கொள்ள வேண்டி நெகிழ்வான பணவீக்கத்தை இலக்காகக் கொண்டது.
தற்போதைய உயர்மட்ட சில்லறை பணவீக்கம் ஏழு சதவீத அளவிற்கும் அதிகமாக இருப்பது
உக்ரைனில் நடந்த போரின் விளைவாகும். பணப் புழக்கத்தை முன்கூட்டியே திரும்பப்
பெறுவது அல்லது வட்டி விகிதத்தை அதிகரிப்பது பணவீக்க அதிகரிப்பைத் தடுக்க உதவாது
என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும் தற்போதைய
பணவீக்க நிலைமையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும், விலைவாசி உயர்வைக்
கட்டுப்படுத்த கூடுதல் வழங்கல் பக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய அரசின்
பொறுப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
அரசுப் பத்திரங்களின் வளர்ச்சி 8%
உயர்ந்துள்ளது. மாநில அரசு பத்திரங்களின் வளர்ச்சி விகிதம் 7% உயர்ந்துள்ளது.
கடனுக்கான அடிப்படை விகிதம் 8.35% இலிருந்து 0.4% உயர்த்தப்பட்டு
தற்போது 8.75% ஆக உள்ளது. முதன்மை கடன் அளவுகோல் விகிதம் தற்போதைய 13.35% இலிருந்து
13.75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2021 ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, தனியார்
வங்கிகளின் மிதக்கும் வட்டி விகித கடனில் 3% மட்டுமே அடிப்படை விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,
பொதுத்துறை வங்கிகளுக்கான கடனில் 6.6% இணைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில்
39.9% கடன்கள் எம்.சி.எல்.ஆர் (MCLR) உடன் இணைக்கப்பட்டுள்ளது, 57% வெளிப்புற அளவுகோலுடன்
இணைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை கடன் வழங்குபவர்களில் 61.4% கடன் எம்.சி.எல்.ஆர்
(MCLR) உடன் இணைக்கப்பட்டுள்ளது, 28.3% வெளிப்புற அளவுகோலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின் படி, ஏப்ரல்
2021 இல் ரூ. 11.77 லட்சம் கோடியாக இருந்த குறு, சிறு நிறுவனங்களுக்கான (எம்எஸ்இ) வங்கிக்
கடன் 2022 ஏப்ரலில் 19.7% உயர்ந்து ரூ.14.08 லட்சம் கோடியாக உள்ளது. குறு சிறு நிறுவனங்களுக்கான
வங்கிக் கடனில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முன்னுரிமைத்
துறை கடன் (PSL) சான்றிதழ்களும் அடங்கும். நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்,
2021 ஏப்ரலில் ரூ.2.15 லட்சம் கோடியிலிருந்து 65% உயர்ந்து, 2022 ஏப்ரலில் ரூ.3.54
லட்சம் கோடியாக உள்ளது.
2022 இல் குறுநிதித்துறைக்கான
மொத்தக் கடன் 10% உயர்ந்து ₹2.85 டிரில்லியனாக உள்ளது என குறுநிதி நிறுவனங்களின்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்கள்
மொத்தக் கடன் விநியோகத்தில் 64.3% பெற்றுள்ளன. கடன்களை அதிகம் பெற்ற
மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, அதைத் தொடர்ந்து பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளது.
இந்திய
ரிசர்வ் வங்கியின் சமீபத்தியக் கட்டுரையில் பீகார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான்,
மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், நிதி ரீதியாக மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும்,
மாநிலங்களின் கடன்-நிலை கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது. இம்மாநிலங்களின் கடன் அளவு
2026-27 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஜிஎஸ்டிபி
விகிதம் 35%க்கும் மேல் உயரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்களின்
சொந்த வரி வருவாயின் மந்தநிலை, கோவிட் பாதிப்பு, உயரும் மானியச் சுமை ஆகியவற்றால்
மாநிலங்களின் நிதிச்செலவுகள் அதிகரித்துள்ளன. மாநிலங்களின் வருவாய் செலவினங்களைக்
கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது. மொத்த
செலவினங்களில் நீண்ட காலத்திற்கான மூலதன செலவினங்களின் பங்கை அதிகரிப்பது
நீடிக்கும் சொத்துக்களை உருவாக்கி, வருவாயை உயர்த்தி செயல்பாட்டு திறனை
அதிகரிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கூடுதலாக, மாநில அரசுகள் நிதி இடர் பகுப்பாய்வுகளை நடத்த வேண்டும் மற்றும்
நிதி அபாயங்களை திறம்பட நிர்வகித்து, குறிப்பிட்ட இடர் குறைப்பு உத்திகளை
கையாளவேண்டும் என்றும் மாநில அரசுகள் தங்களது கடன் விவரங்களை தவறாமல் சோதிக்க
வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாயை உயர்த்தும்
ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றங்களை பரிந்துரைக்க கர்நாடக முதலமைச்சர் பசவராஜ்
பொம்மை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை மின்னணுக்
கழிவுகள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5% லிருந்து 18% ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது.
வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற விலக்கு அளிக்கப்பட்ட
காப்பீட்டுத் திட்டங்களின் மறுகாப்பீட்டிற்கான விலக்குகளை அகற்றவும்
பரிந்துரைத்துள்ளது.
1,000
ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் தங்குமிடங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது,
1,000 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்துடன் கூடிய ஹோட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி
விதிக்கப்படவில்லை, அதே சமயம் 1,001 முதல் 7,500 வரையிலான கட்டணங்கள் உள்ள
அறைகளுக்கு 12% வரியும் அதிக விலையுள்ள அறைகளுக்கு 18% வரியும் விதிக்கப்படுகிறது.
இதேபோல்,
அனைத்து மருத்துவமனை சேவைகளுக்கும் தற்போது ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி ரூ 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட கட்டணத்துடன் உள்ள
மருத்துவமனை அறைகளுக்கு 5% வரி விதிக்க பரிந்துரைத்துள்ளது.
வடகிழக்கு
மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து வணிக வகுப்புப் பயணங்களுக்கு
வழங்கப்பட்ட வரி விலக்கை நீக்கவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பதிவு
செய்யப்படாத உணவுப் பிராண்டுகளுக்கும் 5% ஜிஎஸ்டி வரிவிதிக்கவும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய
உணவுக் கழகத்திற்கு 2022 ஏப்ரல்-ஜூன் செலவுகளுக்காக சுமார் ரூ. 47,000 கோடி
தேவைப்பட்ட நிலையில், மத்திய அரசு உணவு மானியத்தில் ரூ.33,000 கோடி மட்டுமே
வழங்கியுள்ளது. இந்திய உணவுக் கழகம் (FCI) தனது செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக
வங்கிகளில் இருந்து குறுகிய காலக் கடனாக ரூ.50,000 கோடியை அடுத்த மாதம் திரட்டவுள்ளது.
போலியான
கிரிப்டோ பரிமாற்றங்களில் இந்திய முதலீட்டாளர்கள் ₹1,000 கோடி இழந்துள்ளனர்.
மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்துமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமரின் முந்தைய வாக்குறுதியின் படி 2கோடி புதிய வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படவில்லை. அந்த வாக்குறுதி காற்றோடு காணாமல் போனது. அது போல் தான்
தற்போது அளித்துள்ளதும் வெறும் வெற்று தேர்தல் வாக்குறுதி தான்.
வேலைவாய்ப்பு அளிப்பதில் மத்திய அரசின் பங்கு சமீபத்திய ஆண்டுகளில் மிக வேகமாக குறைந்துள்ளது என சூர்யா சாரதி ரே குறிப்பிடுகிறார். ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த மத்திய அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்திருப்பது, நாட்டில் நிலவும் அதிக வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு காண்பதில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்கிறார் சூர்ய சாரதி ரே. நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தியில், ஐந்தில் ஒரு பகுதியினர் அமைப்புசார் துறையில் உள்ளனர், இதில் அரசுத்துறையும் அடங்கும். மத்திய அரசு, மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்கள்,
பொதுத்துறை வங்கிகள் உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி பெற்ற அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய "அரசுத் துறை" அமைப்புசார் துறையில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது.
2021-22ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் உண்மையான
வரவு செலவு:
பொதுக் கணக்கு ஒழுங்குமுறையாளர் 2021-22ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் உண்மையான வரவு
செலவுக்கான தரவுகளை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் வருவாய் சென்ற ஆண்டைக்
காட்டிலும் 3% குறைந்துள்ளது. வரி வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் 5%
உயர்ந்துள்ளது. வரியல்லா வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் 37% குறைந்துள்ளது. மத்திய
அரசின் மொத்த வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் 3% குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலதன
செலவு சென்ற ஆண்டைக் காட்டிலும் 27% உயர்ந்துள்ளது. அரசின் மொத்த செலவு சென்ற
ஆண்டைக் காட்டிலும் 31% உயர்ந்துள்ளது. அரசின்
நிதிப் பற்றாக்குறை சென்ற ஆண்டைக் காட்டிலும் 95%
உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் மொத்த வருவாய் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 106.6%
பெறப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 102.04% வருவாய் செலவு செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை
மதிப்பீடுகளில் 97.07% மட்டுமே மூலதன
செலவு செய்யப்பட்டுள்ளது. அரசின் மொத்த செலவு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 101.73%
செய்யப்பட்டுள்ளது. நிதிப்
பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 98.36% ஆக
உள்ளது. உணவு மானியம் சென்ற ஆண்டைக் காட்டிலும் 398% உயர்ந்துள்ளது. உர மானியம் சென்ற
ஆண்டைக் காட்டிலும் 58%
உயர்ந்துள்ளது. பெட்ரோலிய மானியம் சென்ற ஆண்டைக் காட்டிலும் 5% குறைந்துள்ளது. அரசின் மொத்த
மானியம் சென்ற ஆண்டைக் காட்டிலும் 188% உயர்ந்துள்ளது. அரசின் மொத்த மானியம் நிதிநிலை
அறிக்கை மதிப்பீடுகளில் 116.37% ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் திட்டமான பிரதம மந்திரி ஃபசல் பிமா யோஜனாவிற்கு பட்ஜெட்
மதிப்பீடுகளில் 92.5% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதிக்கான
ஸ்வச் பாரத் திட்டத்திற்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் 82.4% மட்டுமே ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிக்கு குறுகிய காலக் கடன் வழங்குவதற்கான வட்டி
மானியத் திட்டத்திற்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் 89.7% மட்டுமே ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கான வட்டி மானியத்திற்கு ஒரு ரூபாய் கூட
ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் 10.51% மட்டுமே
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) ஷிஷு கடனை
உடனடியாக திருப்பிச் செலுத்துவதற்கு 2 சதவீத வட்டி மானியத்திற்கு பட்ஜெட்
மதிப்பீடுகளில் 62.9% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் வட்டி
மானியங்களுக்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் 89.57% மட்டுமே ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. விவசாயம், கூட்டுறவு, விவசாயிகள் நலனுக்கான துறைக்கு பட்ஜெட்
மதிப்பீடுகளில் 92.73% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்
ஆராய்ச்சி,கல்வித்துறைக்கு பட்ஜெட் மதிப்பீடுகளில் 97.31% மட்டுமே ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான துறைக்கு பட்ஜெட்
மதிப்பீடுகளில் 73.6% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் காலாண்டில் மத்திய அரசின் மொத்த கடன்கள் 3.7 சதவீதம்
அதிகரித்து ரூ.133.22 லட்சம் கோடியாக உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2022-23 ஆம் ஆண்டில் 1,750 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலைகளை பணமாக்க முடிவு செய்துள்ளது, இதன் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாக உள்ளது.
2020-21ல் 27.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வளைகுடா
கூட்டுறவு குழுவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 58.26% உயர்ந்து 2021-22ல் சுமார் 44 பில்லியன்
டாலராக அதிகரித்துள்ளது என்று வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் (NBFC) வழங்கும் கடன் தொகையில்
0.25-2%ஐ ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நெறிமுறை வகுத்துள்ளது. நடுத்தர
நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு விகிதம் 0.4 %ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீட்டுக்
கடன்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கான (SMEs) கடன்களுக்கான ஒதுக்கீட்டுத்தொகை விகிதம்
0.25 %ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாராக்கடன்களின் மூலம் இழப்புகள் ஏற்பட்டால் அதை
சமாளிக்கவே இந்த ஒதுக்கீட்டு நெறிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை (PSU) அவற்றின் மூலோபாய
பங்கு விலக்கல், சிறுபான்மை பங்கு விற்பனை, கூட்டு முயற்சிகளின் (JVs) பங்குகளை விற்பது,
அலகுகளை மூடுவது தொடர்பான திட்டங்களை முதலீடு, பொதுச் சொத்து மேலாண்மைத் துறைக்கு
(DIPAM) சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு மாற்று பொறிமுறையின்
அடிப்படையில் (AM) முதலீடு, பொதுச் சொத்து மேலாண்மைத் துறை கொள்கையளவில் ஒப்புதல் தரும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது
வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை சென்னையில் 2,373 ரூபாயாக உள்ளது.
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா தொழில்துறைகளின் சொந்த
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பும் நிலக்கரியின் அளவு மே மாதத்தில், 39.74% குறைந்துள்ளது. சிமெண்ட் துறைகக்கு அனுப்பும் நிலக்கரி 16.74 சதவீதம்
குறைந்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்திய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை, பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம்கோடியை மத்திய அரசு எடுத்து வேறுபயன்பாட்டுக்கு செலவிட்டுள்ளது. தவிர, உரத் தொழிற்சாலையில் நிதியை முதலீடு செய்யுமாறு கோல்இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. மேலும் இந்த நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக முக்கிய பதவியான தலைவர் மற்றம் மேலாண் இயக்குநர் பதவியை நிரப்பப்படாமல் உள்ளது. நிலக்கரி சுரங்க மேலாளர்கள் தூய்மை இந்தியா இயக்கப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலக்கரி சுரங்கப் பணி தொய்வடைகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரி தேவையை முன்கூட்டியே அறிந்து, தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும் என்று பொதுத்துறை, பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. .
2030க்குள் இந்தியா தனது எரிசக்தித் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க
வளங்களில் இருந்து நிறைவு செய்யும் என அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்த
ஆண்டுக்கான சிறந்த பஞ்சாயத்து விருது சுழிய கார்பன் தடத்தை நோக்கி உழைக்கும் பஞ்சாயத்திற்கு
வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
2020-25 ஆம் ஆண்டிற்கான எத்தனால் கலப்பு வழிமுறை ஜூன் 2021-ல் பிரதமரால் வெளியிடப்பட்டது. இது 20% எத்தனால் கலப்பை அடைவதைதற்கான இலக்கைக் கொண்டுள்ளது. நவம்பர் 2022-க்குள் 10% எத்தனால் கலப்பை அடைய வேண்டிய இடைநிலை இலக்கும் உள்ளது. இந்தியாவில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு இலக்கிற்கு நான்கு மாதங்களுக்கு முன்கூட்டியே அடையப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக ஆகியுள்ளார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருவதே இதற்குக் காரணம். ஃபோர்ப்ஸ் தளத்தில் அம்பானியும் அதானியும் முறையே 104.4 மற்றும் 99.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தங்களது சொத்து மதிப்பாக கொண்டுள்ளனர் என வெளியிடப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியது வன்மையான கண்டனத்திற்குரியது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (SEZs) உள்ள நிறுவனங்களை
குறைந்த வரியில் உள்நாட்டுச் சந்தையில் பொருட்களை விற்குமாறு ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக
வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அலகுகள் தற்போது
செலுத்த வேண்டிய வழக்கமான சுங்க வரிகளை விட குறைவாக இருக்க வேண்டும் என்று அமைச்சகம்
கருதுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் தரவுகளின்
படி மே மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.12% ஆக உள்ளது,
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் பெண் பணியாளர்களின்
எண்ணிக்கை 9% ஆகக் குறைந்துள்ளது. தற்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வேலைவாய்ப்பு
இடைவெளி 58 சதவீத புள்ளிகளாக உள்ளது. இந்தியாவில் பெண்கள் 48% மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்
என்றாலும், அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17% மட்டுமே பங்களிக்கின்றனர், சீனாவில்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு 40% ஆகும். பெண்களின் ஊதியமற்ற
உழைப்பு ஜிடிபி கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
71% இந்தியர்களால் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறமுடியவில்லை.
உலக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறமுடியாதவர்களின் விகிதம் 42%ஆக உள்ளது. ஊட்டச்சத்து
குறைந்த உணவால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக் கணக்கான மக்கள் இறக்கின்றனர் என அறிவியல்
மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) மற்றும் டவுன் டு எர்த் பத்திரிகை வெளியிட்ட
சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ஒரு சராசரி இந்தியரின் உணவில் பொதுவாக பழங்கள், காய்கறிகள்,
பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்தான உணவுகள் இல்லை. ஊட்டச்சத்துள்ள உணவு
"ஒரு நபரின் வருமானத்தில் 63%க்கு அதிகமாக இருந்தால் அவரால் ஊட்டச்சத்துள்ள உணவைப்
பெற இயலாது. ஒரு நாளைக்கு 200 கிராம் பழங்களும், 300 கிராம் காய்கறிகளும் உண்ணவேண்டும்
என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு
35.8 கிராம் பழங்களையும், 168.7கிராம் காய்கற்களை மட்டுமே உட்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு
வெறும் 24.9 கிராம் (இலக்கில் 25%) பருப்பு வகைகளையும், 3.2 கிராம் (இலக்கில் 13%)
கொட்டைகளையும் உட்கொள்கிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியர்களில் 60% க்கும் அதிகமானோர் சூழலுக்குகந்த நீடித்த
பிராண்டுகளுக்கு அதிக செலவு செய்ய தயாராக உள்ளனர் என சமீபத்தைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்,
அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர் ஆகியவை புதிய தொழிலாளர் சட்டத்திற்கான வரைவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை1-ம் தேதி முதல் நடைமுறைக்கு
வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி
நேரத்தை 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம்.
உழைப்புச்சுரண்டலை அதிகரிக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கு
நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்பதால் ஊழியர்கள் கையில் பெறும் சம்பளம் இதனால்
குறையும்.
150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவிலான மத்திய உள்கட்டமைப்பு
திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தால் செலவுகள் கடந்த ஓராண்டில் கடுமையாக உயர்ந்துள்ளன.
கண்காணிக்கப்பட்ட திட்டங்களில் ஏறக்குறைய 41% ஏப்ரல் வரை கால தாமதத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது,
கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 30% ஆக இருந்தது என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க
அமைச்சகம் (Mospi) தொகுத்த தரவு காட்டுகிறது. திட்டங்களுக்கான ஒட்டுமொத்த செலவு கடந்த
ஆண்டு 19.6%ஆக இருந்தது 23% ஆக அதிகரித்துள்ளது. ரயில்வே, பெட்ரோலியம், மின்சாரம் மற்றும்
சிவில் விமானப் போக்குவரத்துத் திட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கால தாமதத்துடன்
செயல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் ஏற்றுமதிகள் மே மாதத்தில் 15.46% உயர்ந்து,
மூன்று மாதங்களில் இல்லாத அளவு $37.29 பில்லியனைத் தொட்டது, அதே சமயம் இறக்குமதிகள்
56.14% அதிகரித்து $60.62 பில்லியனாக உயர்ந்தது, சென்ற மாதத்தில் $20.11 பில்லியனாக
இருந்த வர்த்தகப் பற்றாக்குறை மே மாதத்தில் $23.33 பில்லியன் அதிகரித்தது. வர்த்தக
பற்றாக்குறை கடந்த ஆண்டு மே மாதத்தில் 6.8 பில்லியன் டாலராக இருந்தது.
விரைவில் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் விற்பனை
அளவு நான்காம் காலாண்டில் 4.1% குறைந்துள்ளது, ஆனபோதும் விலை உயர்வால் விற்பனை மதிப்பு
6% உயர்ந்துள்ளது. கிராமப்புற சந்தைகள் விற்பனை அளவில் 5.3% சரிவைக் கண்டன, நகர்ப்புற
சந்தையில் விற்பனை அளவு 3.2% குறைந்துள்ளது. கிராமப்புற சந்தையில் 6.6% விற்பனை மதிப்பு
வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் நகர்ப்புற சந்தையில் விற்பனை மதிப்பு
வளர்ச்சி 5.6% ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதால் 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இந்திய நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. இந்தியா தற்போது ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் 6 மடங்கு நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு
அதிக கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவு மே மாதத்தில் சுமார் 16.5 சதவீதமாகும். எண்ணெய் வாங்குவதில்
இந்தியாவின் ரஷ்ய இறக்குமதி 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து
இந்தியா தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் 69 சதவீதம் ரிலையன்ஸ்,
நயாராவால் வாங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை சுத்திகரித்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் லாபம் ஈட்டி வருகிறது. இதனால் முகேஷ் அம்பானி பெரும் லாபமடைந்து
அதானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெரும் பணக்காரராக முன்னேறியுள்ளார். மே மாதத்தில் ரிலையன்ஸ் 10.81 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இதனை ரிலைன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து 2.0 மில்லியன் பீப்பாய் டீசலை மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக வாங்க தடை விதித்துள்ள ஆஸ்திரேலியா இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ரஷ்ய பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி, 2022 இல்
161% உயர்ந்து $67.5 பில்லியனாக உள்ளது. நடப்பு ஆண்டில் ரஷ்யாவின் உரால் கச்சா எண்ணெயிலிருந்து
சுத்திகரிக்கப்பட்ட பொருட்களைப் பெறுவதற்காக பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை நாடுகின்றன.
மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி 1.40 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தை விட 15 சதவீதம் குறைவு. இருப்பினும் 2021 மே மாதம் வசூலான ரூ.97,821 கோடிதொகையுடன் ஒப்பிடுகையில் 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் இவற்றின் பிரீமியம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது
கடும் கண்டனத்துக்குரியது. இந்த அடிப்படை சமூகப் பாதுகாப்பு வழங்கக்கூட கணக்கு பார்க்கிறது
பாஜக அரசு. பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆயுள் காப்பீட்டு திட்டமான பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. விபத்து காப்பீட்டு திட்டமான பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்தில் மரணம் அல்லது நிரந்தர ஊனமடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு தொகையையும், பகுதியளவு ஊனத்திற்கு ரூ. 1 லட்சத்தையும் வழங்குகிறது.
அகில இந்திய வீட்டு விலைக் குறியீடு (HPI) முந்தைய காலாண்டில் (Q3Fy22) 3.1 %ஆகவும் ஒரு வருடத்திற்கு முன்பு (Q4Fy21) 2.7 % வளர்ச்சியுடன்
காணப்பட்டது, 2022ன் நான்காம் காலாண்டில் 1.8 % மெதுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 3.1 கோடி குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்
திட்டத்தின் கீழ் (MGNREGA) வேலை கோரியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 11 % அதிகமாகும் என்பதுடன் கோவிட்க்கு முந்தைய காலத்தை விடவும் அதிகமாகும் என்று இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தரவு காட்டுகிறது. 2022 ஏப்ரலில், சுமார் 2.3. கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை தேடியுள்ளனர்.
மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்தவேண்டிய மே இறுதி வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும்.
1.27% குறைக்கப்பட்ட விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலை 16% உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 54.7 ஆக இருந்த கொள்முதல்
மேலாளர் குறியீடு (PMI) மே மாதத்தில் 54.6 ஆகக் குறைந்துள்ளது.
ஒற்றை மைய முகமையின் (SNA) முகப்புத் தளத்தை நிதியமைச்சர்
செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். அமைச்சகங்கள்/துறைகள் மாநிலங்களுக்கு நிதி பரிமாற்றம்,
செயல்படுத்தும் முகமைகள் அவற்றை பயன்படுத்துவதை கண்காணிக்கவும், அரசின் பண நிர்வாகத்தில்
உதவவும் இந்த முகப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் திட்டங்களின்
மூலம் மாநிலங்களுக்கு சுமார் ரூ.4.46 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்படுகிறது, மேலும்
அந்தத் தொகையை செலவழிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மையை ஒற்றை மைய முகமை கொண்டு வரும்
என்றும் நிர்வாகத்தை மிகவும் வெளிப்படையானதாக மாற்றவும், செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயின்
சிறந்த மதிப்பை உணரவும் உதவும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சிக்கு
மத்திய அரசு அளித்த முதலீட்டு உந்துதலும், நிதி செலவினங்களும் தொடர்ந்து துணைபுரியும்
என்று கூறியுள்ளார். சென்ற ஆண்டு பாஜக அரசு செய்த நிதிச்செலவுகளையும், முதலீட்டு உந்துதலையும்
தான் நாம் கண்டோமே. நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 10%க்கு குறைவாகவே செய்துள்ளது
எனும் போது ஏன் மீண்டும் மீண்டும் அதே பல்லவியை பாடவேண்டும்.
செப்டம்பர் மாதத்திற்குள் 60% மூலதன
செலவை எட்டவேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவும் தண்ணீரில் எழுதிவைத்த
வாக்குறுதி தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் சரியான கேள்விகளைக் கேட்டால் மட்டுமே உயர்ந்தபட்ச ஆட்சி நிர்வாகத்தை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். சரியான கேள்விகள் கேட்பவர்களை நகர்ப்புற
நக்சல்கள் என முத்திரை குத்தும் பாஜக அரசின் நிதியமைச்சர் பாஜக அரசின் மனங்கோணாது
கேட்கப்படும் கேள்விகளை மட்டுமே சரியான கேள்விகளாக அங்கீகரிப்பார்.
பல நூறு காரணங்களை முன்வைத்து தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது
பாஜக அரசு. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் கூறுகிறார்: “பங்குவிலக்கம் அதாவது பொதுத்துறை
பங்குகளை தனியாருக்கு விற்பது பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்காக அல்ல. பொதுத்துறை
நிறுவனங்களை மேலும் திறம்பட இயக்கச் செய்வதற்கே. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது,
முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் இந்த நிறுவனங்களை திறமையாகவும், திறம்படவும்
இயங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.”
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் வலுவான பொருளாதார
அடித்தளம் உள்ளது என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு
பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்தியா பொருளாதார
ரீதியாக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்று கூறிய அவர் வங்கித்
துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நிறுவன வரி குறைப்பு, டிஜிட்டல்மயமாக்கம்,
ஜிஎஸ்டி அறிமுகம், திவால் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளே இதற்கு அடிப்படைக் காரணம்.
இந்தியாவின் தாக்குப்பிடிக்கும் திறனைக் கண்டு உலகநாடுகள் வியக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
உண்மைக்கும் அவருக்கும் காத தூரம்.
வரும் ஆண்டுகளில்
பிரதமர் கதி சக்தி திட்டத்தை உலகமே எடுத்துக்காட்டான திட்டமாக பின்பற்றும் என பியூஷ்
கோயல் தெரிவித்துள்ளார். இப்படிப் போற்றிப் புகழும் அளவிற்கு பிரதமர் கதி சக்தி திட்டத்திற்கு
எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது. என்ன புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. பிரதமர்
கதி சக்தி திட்டம் போன்ற மோசமான திட்டத்தை உலகமே பின்பற்றவேண்டிய அவசியம் என்ன உள்ளது?.
குறைந்தபட்ச ஆதார விலையின் கூர்மையான அதிகரிப்புக்கு எதிராக
நிதி ஆயோக்கின் உறுப்பினர் நிட்டி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தேவையில்லாத ஒரு எச்சரிக்கையை
விடுத்துள்ளார். விவசாயிகள் கோரிவரும் குறைந்தபட்ச ஆதார விலையை பாஜக அரசு வழங்கவில்லை.
குறைந்தபட்ச ஆதார விலையை அதிகமாக உயர்த்திவிட்டால் பின் சந்தை விலை குறையும் போது குறைந்தபட்ச
ஆதார விலையை குறைக்கமுடியாது, ஆகவே குறைந்தபட்ச ஆதார விலையை அதிகம் உயர்த்தவேண்டும்
என்கிறார் ரமேஷ் சந்த். என்னவோ குறைந்தபட்ச ஆதார விலை கூரையைப் பிய்த்துக் கொண்டு உயர்ந்துள்ளது
போல் தேவையில்லா ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார் அவர். விவசாயிகளின் வயிற்றில்
அடிக்கும் ஈனப் பிழைப்பைத் தான் நிட்டி ஆயோக் செய்துவருகிறது.
இந்த நிதியாண்டிலும் அடுத்த நிதியாண்டிலும் கச்சா சோயாபீன்,
சூரியகாந்தி எண்ணெய்களை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய அரசு சமீபத்தில் அனுமதித்துள்ளது.
இவற்றை ஓராண்டில் 2 மில்லியன் டன்கள் வரை வரிவிலக்குடன் இறக்குமதி செய்துகொள்ள மத்திய
அரசு அனுமதித்துள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் நான்கில் ஒரு பங்காக
உள்ள இந்த இரண்டு சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு 2024-இறுதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான 5% விவசாய உள்கட்டமைப்பு
மேம்பாட்டு கூடுதல் வரியும் நீக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
முதலீட்டு அறக்கட்டளைகள் (InvITs) மூலதனத்தை திரட்டுவது மிகவும் விலையுயர்ந்த
வழியாக இருக்கும் என்று நிறுவனங்கள் அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தன. பெட்ரோலியம்
மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள்
(InvITs) மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பணமாக்குவதற்கான திட்டத்தைக்
கைவிடப்பட்ட பிறகு, சொத்து பணமாக்குதலுக்கான புதிய திட்டங்களைக் கொண்டு வருமாறு பொதுத்துறை
எண்ணெய், எரிவாயு நிறுவனங்களைக் கேட்டுள்ளது.
2023 இல் பொதுவிநியோக முறையின் கீழ் 291 மாவட்டங்களுக்கு
17.5 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகம் (FCI ) வழங்கவுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழ் அனைத்து பொதுத்துறை விநியோக பயனாளிகளும்
மார்ச், 2024 க்குள் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியைப் பெறுவார்கள். மார்ச்
2024க்குள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனாளிகளுக்கு 35 மெட்ரிக்
டன்களுக்கும் அதிகமான செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு போதுமான செயலாக்க வசதிகளை
நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்று உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே கூறியுள்ளார்.
திட்டத்தின் முதல் கட்டமாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மற்றும் பிரதான்
மந்திரி போஷன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்
பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட 1.7 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி-மார்ச்சில் வேலையின்மை விகிதம் 8.2 சதவீதமாகக்
குறைந்ததாக தேசியப் புள்ளியல் அலுவலகத்தின் கணக்கெடுப்பு தரவுகள் குறிப்பிடுகிறது.
அக்டோபர்-டிசம்பர் 2021ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான
வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 8.7% உயர்ந்துள்ளது என்று 14வது காலமுறை தொழிலாளர்
படை கணக்கெடுப்பு (PLFS) காட்டுகிறது.
நகர்ப்புறங்களில் பெண்களிடையே (15 வயது மற்றும் அதற்கு
மேற்பட்ட வயதுடையவர்கள்) வேலையின்மை விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 11.8% இருந்தது
2022 ஜனவரி-மார்ச் மாதங்களில் 10.1 %ஆக குறைந்துள்ளது. இது அக்டோபர்-டிசம்பர் 2021
இல் 10.5 %ஆக இருந்தது.
ஆண்களில், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022 ஜனவரி-மார்ச்
மாதங்களில் 7.7% குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 8.6%ஆக இருந்தது. இது
அக்டோபர்-டிசம்பர் 2021 இல் 8.3 %ஆக இருந்தது.
நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2022 ஜனவரி-மார்ச் காலாண்டில் 47.3 %ஆகக் குறைந்துள்ளது,
இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 47.5 %ஆக இருந்தது. இது அக்டோபர்-டிசம்பர்
2021 இல் 47.3 %ஆக இருந்தது.
தேயிலை வாரியத் தரவுகளின்படி, 2021-22ஆம் நிதியாண்டில்
தேயிலை ஏற்றுமதி 200.79 மில்லியன் கிலோவாக
குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் தேயிலை ஏற்றுமதி 203.79 மில்லியன் கிலோகிராக இருந்துள்ளது.
இந்தியாவின் காபி ஏற்றுமதி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன்
வரையிலான காலகட்டத்தில் 19% உயர்ந்துள்ளது.
நிட்டி ஆயோக்கின் எளிதாக வணிகம் செய்வதற்கான தரவரிசை
2022ல் வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தை 7 மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம்,
உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகும்.
பணக்கார நாடுகளில், புதைபடிவ எரிபொருட்கள் மீதான வரி உட்பட
காலநிலை கொள்கைகளுக்கு மிகவும் குறைவான ஆதரவே உள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர்
(சிஇஏ) வி அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார். அபாயங்களைக் குறைப்பதற்கான கொள்கைகளை கடைபிடிக்க
வேண்டிய அவசரம் குறித்து வளர்ந்த நாடுகள் பொதுமக்களை நம்ப வைக்க வேண்டும் என்ற அவர்
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் தொடர்பாக என்ன செய்ய வேண்டும்
என்று ஆலோசனை கூறும்போது, அவர்களுக்கு இன்னும் முக்கியமான பணி உள்ளது "காலநிலை
மாற்றத்தைக் குறைக்கும் கொள்கைகளின் முக்கியத்துவத்தை அவர்களின் உள்நாட்டு மக்களுக்கு
உணர்த்தவேண்டும்," என்றும் குறிப்பிட்டுள்ளார். பசுமைக் கொள்கைக்கான ஒட்டுமொத்த
ஆதரவு ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து டென்மார்க், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிகக்
குறைவாக உள்ளது என்று ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க்,
ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை கார்பன் வரியை எதிர்க்கும் வளர்ந்த
நாடுகளாக உள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவின்
பாமாயில் இறக்குமதி மே மாதத்தில் 33% குறைந்து 514,022 டன்னாக உள்ளது. மே மாதத்தில்
இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தபோதிலும் சூரியகாந்தி எண்ணெய்
இறக்குமதி மே மாதத்தில் 67,788 டன்னிலிருந்து 123,970 டன்னாக உயர்ந்துள்ளது. இதில்
பெருமளவு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து
மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகஅளவு பாமாயில்
இறக்குமதியாகியுள்ளது. அமெரிக்க,
ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி கச்சா எண்ணெயை தொடர்ந்து தற்போது சூரிய
காந்தி எண்ணெயையும் இந்தியா இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து சூரியகாந்தி சலுகை
விலையில் இறக்குமதி செய்ய விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு
விலை உயர்ந்த நிலையில் இந்தோனேசியாவுக்கு கோதுமையை தந்து அதற்கு பதிலாக பாமாயிலை
வாங்கிக் கொள்ள மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் பாமாயில் தடையை பயன்படுத்திக் கொண்டு அதானி வில்மர் நிறுவனம் பெரும் லாபம் திரட்டியுள்ளது. அதானி நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2020-21 நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.37,195 கோடியாக இருந்தநிலையில் 2021-22 நிதியாண்டில் ரூ.54,386 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 46.20 சதவீத லாபம் ஈட்டியுள்ளது.
மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையின்படி, சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் 12 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி
மின்சாரத்தை உற்பத்தி செய்து ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 7,590 மெகாவாட் உற்பத்தி
செய்து கர்நாடகா 2-ம் இடத்திலும், 7,180 மெகாவாட் உற்பத்தி செய்து குஜராத் 3-வது இடத்திலும்,
5,067 மெகாவாட் உற்பத்தி செய்து தமிழகம் 4-வது இடத்திலும் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
நடப்பு 2022-23 கோடை பருவகாலத்தில் பயிரிடப்படும் 14 வகை
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 92-523 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவின்ட்டால் நெல்லுக்கான (பொது) குறைந்தபட்ச
ஆதரவு விலை ரூ.1,940-லிருந்து ரூ.2,040 ஆகவும் தரம் ஏ நெல்லுக்கான எம்எஸ்பி ரூ.1,960-லிருந்து
ரூ.2,060 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் எள்ளின் விலை
523 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் சோளத்தின் விலை 92
ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கேழ்வரகு குவின்ட்டால் விலை ரூ.3,377-லிருந்து ரூ.3,578
ஆகவும், சோளம் ரூ.1,870-லிருந்து ரூ.1,962 ஆகவும், துவரை ரூ.6,300-லிருந்து ரூ.6,600
ஆகவும், உளுந்து ரூ.6,300-லிருந்து ரூ.6,600 ஆகவும், வேர்க்கடலை ரூ.5,550-லிருந்து
ரூ.5,850 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கம்பு குவின்ட்டால் விலை ரூ.2,250-லிருந்து ரூ.2,350
ஆகவும், பாசி பயறு ரூ.7,275-லிருந்து ரூ.7,755 ஆகவும் சூரியகாந்தி விதை ரூ.6,015-லிருந்து
ரூ.6,400 ஆகவும் சோயாபீன் ரூ.3,950-லிருந்து ரூ.4,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்திச் செலவை விட 1.5 மடங்கு அதிகம்
பெறுமாறு குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தவேண்டும் என்று கோரிவருகின்றனர். அந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாமலே உள்ளது.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும்
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பண்டிகைக் காலத்தில் போதுமான
அளவு உள்நாட்டு சர்க்கரை விநியோகத்தை நிலைநிறுத்தவும் சில்லறை விலையை கட்டுப்படுத்தவும்
சர்க்கரை ஏற்றுமதியை 10 மில்லியன் டன்னாக அரசு கட்டுப்படுத்தியது. இருப்பினும், ஏற்றுமதி
வரம்பை 1 மில்லியன் டன் உயர்த்துமாறு கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின்
சர்க்கரை ஏற்றுமதி இந்த ஆண்டு மே மாதம் வரை 8.6 மில்லியன் டன்னாக உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பைப் பாதிக்காமல் தற்போது இயற்கை
விவசாயத்தை 15% நிலப்பரப்பிலும் 2030ஆம் ஆண்டுக்குள் 30% நிலப்பரப்பிலும் விரிவாக்கமுடியும்
எனவும் உற்பத்தியின் இழப்பை உர மானியங்களைக் குறைப்பதன் மூலம் ஈடுசெய்ய முடியும் என்று
நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 34% உயர்ந்துள்ளது
மே மாதத்தில் அனல் மின் உற்பத்தி 26.18% அதிகரித்துள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளதால், 2021-22 நிதியாண்டில்
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2%ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை ஒரு வருடத்திற்கு முன்பு $102.2 பில்லியன் இருந்தது 2022 இல்
$189.5 பில்லியனாக அதிகரித்தது.
2022 ஜனவரி-மார்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்புக் கணக்குப்
பற்றாக்குறை 13.4 பில்லியன் டாலராகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% ஆகவும் உள்ளது.
டிசம்பர் 2021 காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 22.2 பில்லியன் டாலராகவும்
அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6%ஆகவும் இருந்துள்ளது.
இறக்குமதி அதிகரிப்பால் மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை
24.3 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மே மாதத்தில்
வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 20.6% உயர்ந்தது, ஆனால் இறக்குமதி 62.8% அதிகரித்துள்ளது.
உயர்ந்த உலகளாவிய பொருட்களின் விலைகளால், குறிப்பாக எண்ணெய் விலை உயர்வால் வர்த்தக
பற்றாக்குறை $24.3 பில்லியனுக்கு உயர்ந்துள்ளது.
தனியார்துறையை மட்டுமே ஆதரித்துவரும் பிரதமர் எதிர்ப்பாளர்களின்
விமர்சனத்தைத் தவிர்க்க மழுப்பலாக அரசோ அல்லது தனியாரோ, இரண்டுமே நாட்டின் சொத்துக்கள்,
எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
மே மாதத்திற்கான நிதிஅமைச்சகத்தின் அறிக்கையின் படி, வளர்ந்த
நாடுகளில் வட்டி விகிதத்தை உயர்த்தியதாலும், பணப்புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை
மேற்கொள்வதாலும் வெளிநாட்டு நிதி முதலீடுகள் (FPI) இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றன.
அவை வெளியேறும் வரை, ரூபாய் மதிப்பு குறையும் அபாயம் உள்ளது. இரட்டைப் பற்றாக்குறையால்
வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்து ரூபாய் பலவீனமாகும் என்று எச்சரித்துள்ளது, மேலும்
மூலதனம் அல்லாத செலவுகளை கவனமாக செய்யவேண்டும். "பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை
கைவிடாது, குறுகிய கால சவால்களை கவனமாக நிர்வகிக்க வேண்டும்" என்று மே மாதத்திற்கான
மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது. "நிதிப் பற்றாக்குறையின்
அதிகரிப்பு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவுபடுத்தலாம், இறக்குமதிகளின் விலையுயர்ந்து
ரூபாயின் மதிப்பு குறைந்து, அதன் மூலம், வெளிப்புற ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமாகும்,
ஆபத்து உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையானது 3-டிரில்லியன் டாலர் பங்குச்
சந்தை குழுவின் ஒரு பகுதியாக முன்னர் இருந்தது இப்போது பங்குச்சந்தை மதிப்பு குறைந்துள்ளதால்
விலக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சமீபத்திய மதிப்பு $2.99 டிரில்லியனாக சரிவடைந்துள்ளது,
ஜனவரியில் $3.67 டிரில்லியன் என்ற உச்சத்தில் இருந்த, இந்தியாவின் சந்தை மூலதனம்
$676 பில்லியன் குறைந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது, இதில் பல பொருட்கள், மற்றும் சேவைகளுக்கான வரி
விகிதங்களில் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கவுன்சிலின் முடிவுகள் ஜூலை
18 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக
அமைக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்ப்பிக்க 3 மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை ஜுன் 30க்கு மேல் மேலும்
சில ஆண்டுகள் நீட்டிக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2022 ஜுன்
30 உடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை வழங்குவது முடிவுக்கு வரும் என்பதால் இது குறித்து
முன் கூட்டியே முடிவு எடுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்னும் கூட எந்த முடிவும்
எடுக்கப்படாதது மத்திய அரசின் பொறுப்பின்மையையே காட்டுகிறது.
தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும்
ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களின் பங்கை தற்போதைய 50 சதவீதத்தில் இருந்து 70-80 சதவீதமாக
அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
பிராண்ட் செய்யப்படாத பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட
பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது. இயற்கை உரம், தேங்காய் பித் மீது
5% ஜிஎஸ்டி விதிக்கப்படவுள்ளது. லேபிளிடப்படாத மற்றும் பிராண்ட் செய்யப்படாத பொருட்களுக்கு
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அச்சிடுதல், எழுதுதல், வரைதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்
மை, சில வகை கத்திகள், கரண்டிகள், மேஜைப் பாத்திரங்கள், பால்பொருள் இயந்திரங்கள், எல்இடி
விளக்குகள், வரைவதற்கான கருவிகள் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% லிருந்து
18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலில் செயல்படும் நீர் சூடேற்றிகள், தோல் பொருட்கள்
மீதான ஜிஎஸ்டி 5%லிருந்து 12%க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வரைபடங்கள், வரைதாள்கள், அட்லஸ்கள்
ஆகியவற்றின் மீது 12% வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம்/நிலக்கரி படுக்கை மீத்தேன் சார்ந்த பொருட்களுக்கு
வரிவிகிதம் 5%லிருந்து 12%ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
மின்னணு கழிவுகளுக்கு வரிவிகிதம் 5%லிருந்து
18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, செபி மற்றும் ஐஆர்டிஏ உள்ளிட்ட நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்
வழங்கும் சேவைகள் மீது வரி இதற்கு முன் சுழியமாக இருந்தது 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு
18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ₹1,000 வரையிலான ஹோட்டல் தங்குமிடங்களுக்கு
12% வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரூ5,000க்கு மேல் உள்ள அறைகளின் கட்டணத்திற்கு
5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள், பாக்டோக்ராவிலிருந்து விமானம் மூலம்
பயணிப்பதற்கான ஜிஎஸ்டி விலக்கு எகானமி வகுப்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டது.
சூதாட்டம், இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், லாட்டரி
ஆகியவற்றின் மீது 28% வரி விதிக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.
40லட்சம் வரை புரள்வு மதிப்புடன் பொருட்கள் விற்பனை செய்யும்
சிறு வணிகர்கள், 20 லட்சம் வரை புரள்வு மதிப்புடன் சேவைகளை விற்பனை செய்யும் சிறு வணிகர்கள்
மீதான கட்டாய பதிவு விதிமுறைகளையும் கவுன்சில் நீக்கியுள்ளது.
எலும்பியல் உள்வைப்புகள், செயற்கை உறுப்புகள் (செயற்கை
மூட்டுகள்) மீதான 12% வரி 5%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
2022 இல் கடல் பொருட்களின் ஏற்றுமதி 30% உயர்ந்து 8 பில்லியன்
டாலராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனை
மீதான ஒழுங்குமுறையை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இதுவரை, பொதுத் துறை நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை
அரசு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்றது, அக்டோபர் 1 முதல் அவை தனியார் நிறுவனங்களுக்கும்
விற்கலாம். இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் ஆபத்து உள்ளது.
மார்ச் 2022ல், பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின்
(SCBs) வைப்புத்தொகைகளின் வளர்ச்சி, 10% உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு வைப்புத்தொகைகளின்
வளர்ச்சி 11.9%ஆக இருந்தது.
கடந்த நிதியாண்டில் நான்கில் ஒரு பங்கு சிறு, குறு, நடுத்தர
நிறுவனங்கள் 3%க்கும் அதிகமான சந்தைப் பங்கை இழந்துள்ளன என கிரிசில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரே நிறுவனத்தில் பணியாற்றாமல் விரும்பிய பணியை, விரும்பிய
நேரத்தில் செய்து கொள்ளும் கிக் பொருளாதாரத்தில் இந்தியாவில் தற்போது 77 லட்சம் மக்களைப்
பணியாற்றுவதாகவும் 2029-30 ஆம் ஆண்டில் இது 2.35 கோடியாக அதிகரிக்கும் என நிட்டி ஆயோக்
மதிப்பிட்டுள்ளது.
இந்த
நிதியாண்டின் ஜூன் 15-ம் தேதி வரை மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் 45%
அதிகரித்து ரூ.3.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிகர நேரடி வரி வசூல் ரூ.3.39
லட்சம் கோடியில் கார்ப்பரேட் வரி ரூ.1.70 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி
பங்கு, பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உட்பட, ரூ.1.67 லட்சம் கோடியாகவும் உள்ளது.
பஞ்சாப்
மாநில அரசு பயிர் பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நெல் சாகுபடியின் அளவை மூன்றில்
ஒரு பகுதி குறைக்க திட்டமிட்டுள்ளது. விவசாயத் துறையின் இயக்குநர் குர்விந்தர்
சிங், கோதுமை சாகுபடி செய்யப்படும் நிலங்களில் சுமார் 10% பகுதியை எண்ணெய்
வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதற்கு
மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் என்று அறிவித்துள்ளார்.
உலக
வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இந்தியாவின் மீன்பிடி உரிமைகள்
பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
இருபதாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக மீன்பிடி மானிய
ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிகப்படியாக மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோதமான, கட்டுப்பாடற்ற
மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கான மானியங்களை ரத்து செய்ய ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே
நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை செயல்படுத்தும் கடைசி மாநிலமாக அஸ்ஸாம்
மாறியுள்ள நிலையில், அத்திட்டம் முழுமையாக இந்தியா முழுவதும்
செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெரிய
தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் (மெடா) மற்றும் ஆன்லைன் வர்த்தக
நிறுவனமான அமேசான் ஆகியவை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது
என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனங்களிடையிலான போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியதாக
உள்ளது. இந்நிறுவனங்கள் நிதி சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது.
இதனால் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளது. கடனை திரும்ப வசூலிப்பதில்
கடுமையான நடைமுறையை இவை பின்பற்றுகின்றன. இதுகுறித்து புகார் வந்தால் தீவிரமாக
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
தெரிவித்தார்.
ஐஎம்டியின்
உலகப் போட்டித்தன்மைக் குறியீட்டில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி 37வது இடத்தைப்
பிடித்தது. இத்தரவரிசையில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
கோதுமை
ஏற்றுமதி தடைக்குப் பிறகு இந்தியா 1.8 மில்லியன் டன் கோதுமையை பல நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்துள்ளது.
18
ஆண்டுகள் கழித்து, இந்தியா 13 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 26
டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும், அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியப்
பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர்களைத் தொடும் என்று பியூஷ் கோயல் கருத்து
தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளே தவறாகப்
போயுள்ள நிலையில் 30 ஆண்டுகளில் இந்தியா அடையும் வளர்ச்சி குறித்த கணிப்புகள்
எவ்விதத்தில் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கமுடியும்?
ஒரு
மக்கள் நல அரசு பொதுத்துறை வங்கிகளை சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கும்,
நலிவடைந்த பிரிவினருக்கும் அதிக அளவில் கடன் அளிக்குமாறு திசைகாட்டி
வழிநடத்தவேண்டும். ஆனால் ஆளும் கட்சிகள் பொதுத்துறை வங்கிகளின் நிதிகளை
பெருமுதலாளிகளுக்கு அதிகளவில் பெறுவதற்குத்தான் உடந்தையாய் உள்ளன.
பொதுக்காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வேதாந்தா குழுமத்துக்கு குறைந்த வட்டிக்கு
ரூ.5000 கோடி கடன் கொடுக்கவுள்ளது. அதானியின் தாமிரத் தொழில் வணிகத்திற்கு ஸ்டேட்
வங்கி தலைமையில் வங்கிகளின் குழுமம் 6,071
கோடி ரூபாய் கடனளிக்கவுள்ளது. ஏன் இத்தகைய பெரும் பணக்காரர்கள் தனியார்
வங்கிகளிடமே கடன் வாங்கலாமே, அவர்களின் கருத்துப்படி தனியார் துறை தானே திறன்
வாய்ந்தது பிறகு ஏன் கடன் வாங்க மட்டும் பொதுத்துறை வங்கிகளை நாடவேண்டும்?. இப்படி
அளிக்கப்படும் பெரும் கடன்கள் தான் நாளடைவில் வாராக்கடன்களாகி தள்ளுபடி
செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பொதுத்துறைகளுக்கு சேரவேண்டிய நிதிகளை
பெருமுதலாளிகள் இவ்வாறு தான் கபளீகரம் செய்கிறார்கள்.
இப்போது
வாங்கி பின்னர் கடனை செலுத்தும் திட்டங்கள் (BNPL), முன்பணம் செலுத்தும் கருவிகள்
(PPIs) ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. வங்கி
அல்லாத நிறுவனங்கள் அல்லது ஃபின்டெக் நிறுவனங்கள் கடன் கொடுக்கும் சேவைகளில்
ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மத்திய
வங்கி சுற்றறிக்கையில் எச்சரித்துள்ளது.
கடந்த
14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் நிதி ஆதாரம்
உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2021) இறுதியில் இந்தியர்களின்
நிதி சுமார் ரூ.30,500 கோடிக்கு மேல் இருக்கலாம் என சுவிட்சர்லாந்து நாட்டின்
மத்திய வங்கியின் (Federal Bank) வருடாந்திர தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதம மந்திரி
கரீப் கல்யாண் திட்டத்தை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படக்கூடாது, ஏனெனில்
இது அரசின் நிதியை பாதிக்கக்கூடும் என்று செலவினத் துறை தெரிவித்துள்ளது. தற்போது கோவிட்
கொள்ளைநோய் இல்லை என்பதால் அது தேவையில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் கோவிட்
கொள்ளை நோயின் காலம் இன்னும் முடிவடையவில்லை. கோவிட் தாக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார
பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீட்சி பெறாதநிலையில் இத்திட்டத்தை திரும்பப் பெறாது
தொடர்ந்து நீடிக்கவேண்டும்.
தமிழ்நாடு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் தொடர்பாக, தமிழக வேலைவாய்ப்புத் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில்
இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை
அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல்
கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி,
பிரதமர் ந.மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சீராக மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3.03
லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.10,790
கோடி செலவில் மேற்கொள்ள தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இத்திட்டப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டால், மத்திய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் தொடர்பாக, தமிழக வேலைவாய்ப்புத் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சீராக மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.10,790 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இத்திட்டப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டால், மத்திய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதும்.
தமிழ்நாடு
சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில்
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய
மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தண்டரையில்
உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில்
கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, புதிய
தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின்
வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டின்
உற்பத்தி மாநாட்டில் டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம். ஓசூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள
சிப்காட் தொழில்துறை கண்டுபிடிப்பு மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு
மையத்தை (CoE) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம்
மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த மையம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு பிரத்யேக
தகவல் தொழில்நுட்ப பொறியியல் சூழலை வழங்கும். இது விண்வெளி, பாதுகாப்பு, வாகனம்
மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற பல்வேறு தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்
எனக் கூறப்படுகிறது.
உலகம்:
உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய அமர்வில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு
மட்டுமே 5 ஆண்டுகளுக்கு காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதை ஓராண்டுக்கு முன்னே
செய்திருந்தால் உலகின் பெரும்பான்மையான மக்கள் பயனடைந்திருப்பர். மிகவும் கால தாமதமாக
இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது.
டிஜிட்டல் இறக்குமதிகள் மீதான சுங்க வரி மீதான தடை
2023 டிசம்பர் 31 வரை தொடரும் என்று உலக வர்த்தக அமைப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 1998 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடைக்காலம் நீட்டிக்கப்பட்டு,
டிஜிட்டல் அல்லது மின்னணு இறக்குமதிகள் அல்லது பரிமாற்றங்கள் மீது நாடுகள் எந்தவிதமான
வரிகளையும் விதிப்பதைத் தடுக்கிறது. 2017 மற்றும் 2020க்கு இடையில், வளரும் நாடுகள்
49 டிஜிட்டல் தயாரிப்புகளின் இறக்குமதியில் மட்டுமே குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர்
சாத்தியமான கட்டண வருவாயை இழந்துள்ளன, இந்த வருவாய் கட்டண இழப்பில் சுமார் 95% வளரும்
நாடுகளால் ஏற்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், இந்த சாத்தியமான வருவாய் இழப்பு ஆண்டுக்கு
சுமார் $30 பில்லியன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் அமைச்சர் பியூஷ் இத்தகைய தடையின் நிதி விளைவுகள் பெரும்பாலும்
வளரும் நாடுகளால் தாங்கப்படுகின்றன இது எவ்விதத்தில் நியாயமாகும் என்று உலக வர்த்தக
அமைப்பின் அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கத்தையும் அதிக
அளவிற்கு ஏற்றுமதி செய்கிறது. 2021ல் ரஷ்யா 12.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு
தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டில், ரஷ்யாவிலிருந்து தங்கத்தை இங்கிலாந்து,
அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஏற்றுமதி செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் ஆய்வறிக்கை அமெரிக்காவில் அடுத்த
ஓரிரு ஆண்டுகளில் மந்தநிலை உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
வரலாற்று ரீதியாக, உயர் பணவீக்கம், குறைந்த வேலையின்மை ஆகியவை வீழ்ச்சிக்கு முந்திய
நிகழ்வுகளாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் பொருளாதார வல்லுநரின் புதிய ஆய்வுக் கட்டுரையின்படி,
உழைப்பு உட்பட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து
வருவதால், அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மந்தநிலையின் உயர்ந்த அபாயங்களை
எதிர்கொள்வதாகக் கூறுகிறது.
டிசம்பர் 2021 இறுதியில் 0.96 % இருந்த மூன்றாண்டு கால
அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வளர்ச்சி 3.45 % உயர்ந்தது. பொருளாதார வளர்ச்சியில்
மந்தநிலை அல்லது பெரிய சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறாகக் கருதப்படுகிறது.
பணவீக்க அழுத்தங்களைத் தணிக்க சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவிற்கு
பரிந்துரை அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எஃகு, அலுமினியம் மற்றும் பல சீனப்
பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட காப்புவரிகளை ஜோ பைடன் நிர்வாகம் திரும்பப்
பெற வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை.
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மதிப்பு கூட்டலுக்கான வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மதிப்பு கூட்டல் வரி (வாட்) 8 %லிருந்து 12%ஆகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 %லிருந்து 15 %ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டு வந்த விலக்குகளும் குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வித வருமான வரி சலுகையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.