Monday, May 2, 2022

நமது பொருளாதாரம்:

 

இந்தியா:

பணவீக்கம்:

இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 13.11% ஆக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு 14.55% ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 12-வது மாதமாக இரட்டை இலக்கத்தில் உயர்ந்து காணப்படுகிறது. எரிபொருள் ஆற்றல் துறையில் பணவீக்கம் 34.52% உயர்ந்துள்ளது.இதில் மாதாந்திர அளவில் 5.68% உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களில் விலைவாசி 10.71% உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலைவாசி 8.71% உயர்ந்துள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், பொருட்களின் விலை உயர்வு, காய்கறிகள் விலை அதிகரிப்பு போன்றவை இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தாதுப் பொருள், எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உணவு அல்லாத பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு இது 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களில் பணவீக்கம் 7.68%ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 11.64% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.54% உயர்ந்துள்ளது. பயறு, பருப்புகளின் விலைவாசி 2.57% உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்புகளின் விலைவாசி 18.79% உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 4.36%ஆக உள்ளது. இந்திய மாநிலங்களிலே மிகவும் அதிகமாக மேற்குவங்காளத்தில் பணவீக்கம் 8.85% உயர்ந்துள்ளது.

மார்ச்சில் பணவீக்கம் உயர்ந்துள்ளதால் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் விலைவாசி உயர்வால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், இந்தியாவில் பணவீக்கம் 'அவ்வளவு மோசமாக' பணவீக்க இலக்கை மீறவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ஃபிப்ரவரியில் தொழில்துறை வளர்ச்சி:

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் படி ஃபிப்ரவரியில் உற்பத்திக் குறியீடு 1.7% மட்டுமே உயர்ந்துள்ளது. சுரங்கத்துறையில் வளர்ச்சி 4.5%ஆகவும், உற்பத்தித்துறையில் வளர்ச்சி 0.8%ஆகவும், மின்சார உற்பத்தி 4.5%ஆகவும் உள்ளது.முதன்மை பொருட்களின் உற்பத்தி 4.6% ஆகவும், மூலதனப்பொருட்களின் வளர்ச்சி 1.1%ஆகவும், இடைநிலைப் பொருட்களின் வளர்ச்சி 4.3% ஆகவும், உள்கட்டமைப்புத்துறை பொருட்களின் வளர்ச்சி 9.4% உயர்ந்துள்ளது.  நீடித்தப் பொருட்களின் வளர்ச்சி 8.2% குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சி 5.5% குறைந்துள்ளது. 

மார்ச் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

 தொழில்,உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட தரவுகளின் படி மார்ச் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 4.3%ஆகக் குறைந்துள்ளது. ஃபிப்ரவரியில் தொழில்துறை வளர்ச்சி 6%ஆகக் இருந்தது. நிலக்கரி உற்பத்தி மார்ச்சில் 0.1 % குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 7.6 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது. உரங்களின் உற்பத்தி 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது. உருக்கு உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார உற்பத்தி 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும், நுகர்வோருமான இந்தியாவில் எரிபொருள் தேவை மார்ச் மாதத்தில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசல் நுகர்வு தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 4.2 சதவீதம் உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மொத்த பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு 19.41 மில்லியன் டன்களாக இருந்தது. நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை வகிக்கிறது. இதன் தேவை 6.7 சதவீதம் அதிகரித்து 7.7 மில்லியன் டன்களாக உள்ளது. பெட்ரோல் விற்பனை 6.1 சதவீதம் அதிகரித்து 2.91 மில்லியன் டன்னாக இருந்தது.

புதிய எண்ணெய் இருப்புகளின் அறிமுகத்தாலும், சீனாவில் பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதாலும் எண்ணெய் தேவை குறைவாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்குக் கீழ் குறைந்தது. எண்ணெய் விலையை மட்டுப்படுத்த அமெரிக்கா தினசரி ஒரு மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெயை சந்தையில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு ரஷ்யா ரஷ்யா-உக்ரைன் போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை விற்பனை செய்கிறது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, ஹெச்பிசிஎல் ஆகியன இந்த ஆண்டு1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் உரங்களின் ஏற்றுமதிக்கான விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268 உயர்ந்துள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணமும் 2-3% உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலையும் 2% உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணங்களுக்கான கட்டணமும் 18.3% உயர்த்தப்பட்டுள்ளது. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது.

மத்திய அரசு சரக்கு சேவை வரி இழப்பீட்டுத்தொகை ஜூன் 30 2022க்கு மேல் நீட்டிக்கப்படாது என கூறியுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு சரக்கு சேவை வரியின் மூலம் வரி வருவாயில் 14% உயர்வுக்கு உறுதியளித்ததால் தான் மாநிலங்கள் அதில் இணைந்தன. கோவிட் கொள்ளைநோயால் மாநிலங்களின் நிதிநிலையும், நிதி வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டுறவுக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசு தானே முன்வந்து நிதியுதவி அளிக்கவேண்டும். ஆனால் பாஜக அரசு கூட்டுறவுக் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மாநிலங்களை நிர்கதியில் தள்ளியுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்கள் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மேலும் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. சென்ற 2 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசு சந்தையில் 2.69 லட்சம் கோடி கடன் பெற்றது. அதை அடைப்பதற்காக ஜி.எஸ்.டி செஸ் வரியை 2026 வரை நீட்டிக்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு 22ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.78,704 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்கவில்லை. ஜி.எஸ்.டி வரி வருவாய் மார்ச்சில் 1.42 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டியில் வரிவருவாயை உயர்த்தும் விதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு ஜிஎஸ்டி வரி வசூலை உயர்த்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளதாக தெரிகிறது. அதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு வேறு சில பொருட்களுக்கு 8% என்ற புதிய விகிதாச்சாரத்திற்கு கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 5% விகிதாச்சாரத்துக்கு பதிலாக 7%, 8%, 9% ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு 1% விகிதாச்சார உயர்வுக்கும் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசுமுடிவு செய்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. வால்நட், கஸ்டர்ட் பவுடர், சூயிங்கம், ஆல்கஹால் சேர்க்கப்படாத குளிர்பானங்கள், வாசனை திரவியங்கள், சவரப் பொருட்கள், தோல் பொருட்கள், ஆடைகள், கைக்கடிகாரம், சூட்கேஸ், கண்ணாடி, கண்ணாடி பிரேம்கள், பவர் பேங்க், செராமிக்சிங்க், வாஷ் பேசின், வீடியோ கேமராக்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, 32 இன்சுக்கு கீழுள்ள கலர் டிவி உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வரி உயர்த்தப்பட இருக்கும் 143 பொருட்களில் 93 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விகிதத்தில் இருப்பவை. அவற்றை 18 சதவீத அடுக்கில் இருந்து 28 சதவீத அடுக்குக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இச்செய்தி ஜி.எஸ்.டி கவுன்சிலால் உறுதிப்படுத்தப்படவில்லை.

மத்திய வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு (MPC) 2023 நிதியாண்டிற்கான முதல் இருமாத நாணயக் கொள்கைக் குழு, தொடர்ந்து 11வது முறையாக குறுகிய கால கடனுக்கான வட்டி வீதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.

இந்திய மத்திய வங்கி, அமைப்பிலிருந்து அதிகப்படியான பணப்புழக்கத்தை குறைப்பதற்காக நிலையான வைப்பு வசதி (SDF) புதிய கருவியை அறிவித்தது -. இந்தப் புதிய கருவியின் மூலம் மத்திய வங்கியானது வணிக வங்கிகளில் இருந்து அதிகப்படியான பணப்புழக்கத்தை உறிஞ்சிக் கொள்ள முடியும்.

இது ரிவர்ஸ் ரெபோவை போன்றது தான் ஆனால் இதற்கு பிணையமாக மத்தியவங்கி அரசு பத்திரங்களை அளிக்கத் தேவையில்லை. நிலையான வைப்பு வசதிக்கான வட்டி விகிதம் 3.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை விட 0.40% அதிகம். மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகள் இரண்டிற்குமே இது லாபகரமான ஏற்பாடாகும். நிலையான வைப்பு வசதி ஆனது ரிசர்வ் வங்கி சட்டத்தின் 2018 திருத்தத்தில் உருவாக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய அளவில் இல்லை என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கி சர்வதேச அளவில் எண்ணெய் விலை, பணவீக்கம் உயர்ந்துள்ளதன் அடிப்படையில் 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை  முன்னர் மதிப்பிட்டிருந்த 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த 4.5 சதவீதத்திருந்து, 5.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தனியார் நுகர்வு இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய அளவிலே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

2022 ஃபிப்ரவரி வரையிலான மத்திய அரசின் மூலதன முதலீடு, தொற்றுநோய் மற்றும் கோவிட்-க்கு முந்தைய காலகட்டங்களில் உள்ள அளவை விட அதிகமாக உள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் பொது கணக்கு தரவுகளுடன் சரிபார்க்கும் போது இது உண்மையல்ல என்பதையும் கூறவேண்டும். 2020-21 ஃபிப்ரவரி வரை மத்திய அரசின் மூலதன முதலீட்டு செலவினம் நிதிநிலை அறிக்கை திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 92.4%ஆக இருந்தது 2021-22ல் 80.6%ஆகக் குறைந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் இன் கீழ் தேவைப்படும் பணிகள் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்து, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது என்று மத்திய வங்கி கூறுகிறது. ஆனால் உண்மையில் இத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் வேண்டப்படும் போதும் குறைந்த அளவிலே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

பணவீக்க அழுத்தத்தினால் வரும் மாதங்களில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கி தரவுகளின்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $11.173 பில்லியன் குறைந்து $606.475 பில்லியன் டாலராக உள்ளது.

 பத்திரச் சந்தையில் வளர்ச்சி விகிதம் (yield) 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அனைத்து வங்கிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.கார்டுகளை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை தடுக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய மத்திய வங்கி டிஜிட்டல் வங்கி அலகுகளை திறக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மத்திய வங்கி வணிக வங்கிகள் டிஜிட்டல் வங்கி அலகுகளை (DBU) திறக்க அனுமதிக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த டிஜிட்டல் வங்கி அலகுகளில் வங்கிகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச சேவைகளை அளிக்கவேண்டும் என வங்கிகளை பணித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை (DBUs) அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் டிஜிட்டல் வங்கி அனுபவம் உள்ள அனைத்து வணிக வங்கிகளும், (மண்டல கிராமப்புற வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் மற்றும் கட்டண வங்கிகள் தவிர) அடுக்கு-1 முதல் அடுக்கு-6 நகரங்களில் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி அத்தகைய அலகுகளைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் பற்பசை, ரொட்டி, ஷாம்பூ போன்ற விரைவில் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் (FMCG) விற்பனை அளவு குறைந்துள்ளது. உலகளவில் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் இந்திய உற்பத்தியாளர்கள் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் நிலையே காணப்படுகிறது. பங்குச்சந்தையில் இத்துறைக்கான பங்கீடும் குறைந்துள்ளது. மார்ச் 2013ல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முக்கியஎஃப்எம்சிஜி’ பங்குகள், நிஃப்டி50-ல் 15 சதவீத பங்கைக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது ஆட்டோமொபைல் பங்குகளுடன் சேர்ந்து, நுகர்வோர் பொருட்கள் துறையின் பங்கு 14.7 மட்டுமே உள்ளது.

இலவசங்களை ஊக்குவித்தால் இலங்கை நிலைமையை சந்திக்க நேரிடும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிகாரிகள் பரிந்துரைத்தள்ளனர்.

நல்லாட்சியை வழங்கவும், நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவரவும் ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர், மண்டல வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவருமே செயலர் அந்தஸ்தில் உள்ளவர்களாவர். "இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம்" என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்களில் சில அதிகாரிகள் கருத்துரைத்துள்ளனர்.

பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் பல லட்சம் கோடி ரூபாய் சலுகைகளை ஊக்கத்தொகைகள் என அழைப்பதும், மக்களுக்கு அளிக்கப்படுவதை ஏதோ அரசு கருணையின் அடிப்படையில் பிச்சையிடுவதைப் போல் இலவசங்கள் என அழைப்பதும் ஜனநாயகத்திற்கு புறம்பான சொல்லாடல். அரசுக்கு நிதி வானத்திலிருந்து கொட்டவில்லை மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் அரசு நிதி பெறுகிறது. அதில் ஒரு சிறு பகுதியை மக்களுக்கு அளிப்பதை இலவசங்கள் எனக் குறிப்பிடுவது மக்களை அவமானப்படுத்துவதாகும்.

ஃபிப்ரவரியில் 54.9 ஆக இருந்த இந்திய உற்பத்தியாளர் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (Purchasing Managers’ Index) மார்ச்சில் 54ஆகக் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி நடவடிக்கைகள் மிதமாக உள்ளதையே இது குறிப்பிடுகிறது. உற்பத்தியாளர் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு என்பது உற்பத்தியாளர், விற்பனையார்களிடம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புகளின் மூலம் பெறப்படும் அளவீடாகும்.சரக்கிருப்புகளின் அளவு, புதிய ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் விற்பனையின் அளவு, வேலைவாய்ப்புநிலை போன்றவற்றின் மதிப்புகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. பொருளாதாரம், சந்தையின் போக்கையும், வளர்ச்சிநிலையையும் மதிப்பிட பயன்படுகிறது. இதன் மதிப்பு 50க்கு மேலாக இருப்பது பொருளாதார வளர்ச்சியையும், 50க்கு குறைவாக இருப்பது பொருளாதாரக் குறுக்கநிலையையும் குறிப்பிடுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தரவுகளின் அடிப்படையில் 2022 ஃபிப்ரவரியில் இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 8.10 சதவீதமாக இருந்தது, மார்ச் மாதத்தில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

மார்ச்சில் 14 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்து வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 39.6 மில்லியனாக சுருங்கியது, அதே நேரத்தில் மார்ச் 2022 இல் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக குறைந்துள்ளது. இதன் விளைவாக 2022 பிப்ரவரியில் 36.7% ஆக இருந்த வேலை வாய்ப்பு விகிதம் மார்ச் மாதத்தில் 36.5% ஆக குறைந்தது. பிப்ரவரியில் 8.1% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 7.6% ஆக குறைந்தது.

கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை 38 லட்சம் குறைந்துள்ளது, வேலை செய்பவர்கள், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஃபிப்ரவரியில் 39.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 39.6 சதவீதமாகவும் இருந்தது மார்ச்சில் 39.5 சதவீதமாகக் குறைந்தது. தொழிலாளர் சக்தியில், வேலைவாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 24 லட்சம் குறைந்துள்ளது.இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை  இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 38 லட்சம் குறைந்து கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 42.8 கோடியாக சுருங்கியது.     

மார்ச் மாதத்தில் கோவிட்-19 அலை இன்றி போக்குவரத்து கட்டுப்பாடு எதுவும் இல்லாத போதும்  தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவின் பொருளாதார நெருக்கடியின் முக்கிய அறிகுறியாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

சரியான வேலை கிடைக்காததால் விரக்தியடைந்து, கோடிக் கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பெண்கள், தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேறியுள்ளனர். இப்போது, வேலை செய்யும் வயதுடைய 90 கோடி இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வ வேலை தேடுவதை நிறுத்தியுள்ளனர்.

மார்ச் மாதத்தில், விவசாயம் அல்லாத வேலைகளின் பங்கு 1.67 கோடி குறைந்துள்ளது, இது 1.53 கோடி விவசாய வேலைகள் அதிகரித்ததன் மூலம் ஈடுசெய்யப்பட்டது. அறுவடைக் காலத்திற்கு முன் உருவான இவ்வேலைகளை சரியான வேலைவாய்ப்புகளாகக் குறிப்பிடமுடியாது என்றும் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளைப் பொறுத்தவரை, தொழில்துறையில் 76 லட்சமும், உற்பத்தித் துறையில் 41 லட்சமும், கட்டுமானத் துறையில் 29 லட்சமும், சுரங்கத் துறையில் 11 லட்சம் வேலைகளும் குறைந்துள்ளன. உற்பத்தியில், சிமென்ட் மற்றும் உலோகம் போன்ற அமைப்புசார் துறைகளில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. பொதுமுடக்க அதிர்ச்சியிலிருந்து கட்டுமானத் துறை மீண்டுள்ளது, ஆனால் அந்தத் துறையில் வேலைகள் தேக்கமடைந்துள்ளன. கடந்த மாதம் 7 கோடி வேலை வாய்ப்புகளைப் பதிவு செய்த சில்லறை வர்த்தகத்தின் வேலைவாய்ப்புகள், மார்ச் மாதத்தில் 6.56 கோடியாக குறைந்துள்ளது.

ஆனால் இந்த உண்மையை அங்கீகரிக்க துணிவில்லாத தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) . உழைக்கும் வயதினரில் பாதி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பது உண்மையில் தவறானது." உழைக்கும் வயதினர் அனைவருமே வேலை தேடுபவர்கள் அல்ல. உழைக்கும் வயதுடையவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள், அவர்கள் அனைவரும் வேலை தேடுபவர்கள் அல்ல உழைக்கும் வயதுடைய மக்களில் பெரும்பாலானோர் கல்வியைத் தொடர்கின்றனர் அல்லது சொந்த நுகர்வுக்குப் பொருட்களை உற்பத்தி செய்தல், ஊதியம் பெறாத வீட்டுச் செயல்பாடுகள் அல்லது வீட்டு உறுப்பினர்களுக்கான பராமரிப்புச் சேவைகள், தன்னார்வத் தொண்டு, பயிற்சி போன்ற ஊதியமில்லாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று பூசி மொழுகியுள்ளது.

டியோலைட்டின் அறிக்கையின்படி, சுமார் 56 சதவீத பெண்கள் தங்கள் மன அழுத்தத்திற்குட்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் மனச்சோர்வு, நெகிழ்வான நேரமின்மை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்: இந்தியாவில் உள்ள 500 பேர் உட்பட 10 நாடுகளில் நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கணக்கெடுக்கப்பட்ட 5,000 பெண்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் வேலையை விட்டு விலகும் நிகழ்வு “Great Resignation” என்றழைக்கப்படுகிறது. கோவிட் கொள்ளை நோய் தாக்கத்திற்குப் பிற உலகளவிலும் இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் வேலையை விட்டு விலகும் போக்கு அதிகரித்துள்ளது.

புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1-ல் அமல்படுத்தப்பட்டால் நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். இதனால் உழைப்புச் சுரண்டல் மேலும் அதிகரிக்கப்படும்.  ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையும். இது நிதிமயத்தை ஊக்குவிப்பதற்கான ஏற்பாடே.

 

2022-23 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்தின் (MGNREGA) கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான (UT) ஊதிய விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு ரூ.226 ஆக இருந்த ஊதியம் ரூ.230 ஆக வெறும் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். கோவாவிற்கு அதிகபட்சமாக 7.1 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2021-22ல் ஒரு நாளைக்கு ரூ.294 ஆக இருந்த ஊதியம் 2022-23ல் ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேகாலயாவுக்கு மிகக் குறைந்த அளவாக 1.7 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், மிசோரம், திரிபுராவில் எந்த மாற்றமும் இல்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2021-22ல் 50 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பரிந்துரைக்கப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

வேலைக்கான வேண்டல் கோவிட் கொள்ளநோய்க்கு முந்தைய நிலையைக் காட்டிலும் உயர்ந்துள்ளபோதும் 2020-21ல் 389 கோடி நபர்களுக்கு வேலை நாட்கள் உருவாக்கப்பட்ட நிலையில் அதைவிட 7% குறைவாக 2021-22ல் மொத்தம் 362 கோடி நபர்களுக்கு வேலை நாட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

2021-22ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கணக்கு செலுத்தப்படாத பொருள் செலவினத்தின் காரணமாக ரூ. 20,000 கோடி எதிர்மறை இருப்புடன் காணப்பட்டது.

ஏப்ரல்-செப்டம்பர் 2022 இல் பத்திரங்கள் மூலம் ரூ.8.5 லட்சம் கோடி கடன் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது  2022-23க்கான நிதிநிலை அறிவிக்கப்பட்ட ரூ.15 லட்சம் கோடி முழு ஆண்டு கடன் தொகையில் 56.5 விழுக்காடாகும்.

இந்தியாவிலிருந்து வெளியேறும் அந்நிய நிதிமுதலீடுகளின் அளவு ஜனவரி, ஃபிப்ரவரியைக் காட்டிலும் அதிகமாக மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது. ஜனவரியில், அந்நிய முதலீட்டாளர்கள் ₹33,303 கோடியை வெளியேற்றினர், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ₹35,592 கோடியாகவும் ₹41,123 கோடி வெளியேறியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பங்குகளில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகள், பத்திரங்களை விற்று வெளியேறியுள்ளனர். ஆனபோதும் இந்தியப் பங்குச்சந்தைகளின் குறியீடு உதாரணமாக நிஃப்டி குறியீடு 17000க்கு மேல் உயர்ந்தே காணப்படுகிறது. அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறிய போதிலும் இந்தியாவின் உள்நாட்டு சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகளின் உயர்வு பங்குச்சந்தை இறக்கமடையாமல் உள்ளது.

நேரடி அந்நிய முதலீடுகளைக் கொண்டே இந்தியாவுக்கு வரும் அந்நியமுதலீடுகளை அளவிடவேண்டும் ஏனென்றால் நிதிமுதலீடுகள் தற்காலிகமானவை இன்று வரும் நாளை போகும் என நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது நிதிமுதலீடுகளுக்கும் நேரடி அந்நிய முதலீடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் கிட்டத்தட்ட இல்லாமலடிக்கப்பட்டுள்ளது. நேரடி அந்நிய முதலீடுகளும் திறனுள்ள உற்பத்தித்துறைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை.

2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடி, நிதி முதலீடுகளிலிருந்து லாபமாக $1370 கோடி டாலர்களை பெற்றுள்ளனர். அதே சமயம் புதிய நேரடி முதலீடுகள் வெறும் $500 கோடி டாலர் மட்டுமே வந்துள்ளது. இது அந்நிய முதலீடுகளின் நிலையற்ற தன்மையையேக் குறிப்பிடுகிறது.

பிப்ரவரி 2022 வரையிலான 11 மாதங்களில், நிகர வெளிநாட்டு முதலீடுகள் சுமார் 25 பில்லியன் டாலராக குறைந்துள்ளது, முந்தைய ஆண்டு காலத்தில் 80 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தது.

இந்தியாவை விட்டு நிதி முதலீடுகள் வெளியேற பணத்தை டாலராக மாற்ற வேண்டும். இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைகிறது.

பலவீனமான ரூபாய் இறக்குமதிக் கட்டணத்தை அதிகரிக்கிறது. ரூபாயின் மதிப்பை காக்க மத்திய வங்கி வெளிச்சந்தை நடவடிக்கைகளின் மூலம் டாலரை விற்கிறது இதன் காரணமாக அந்நியச் செலவாணி இருப்புகளை இழக்கிறது. ரூபாயின் மீதான அழுத்தங்கள் அதிகரித்ததால் டாலருக்கு எதிராக ரூபாய் 25 பைசா மதிப்பிழந்து 76.42 ரூபாயாக வீழ்ந்துள்ளது.

2022-23ல் நேரடி அந்நிய முதலீடுகள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய ஆண்டில் செய்யப்பட்ட ஏற்றுமதியைவிட 33 சதவீதம் அதிகம். ஆனபோதும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2021-22ல் 87.5 சதவீதம் அதிகரித்து 192.41 பில்லியன் டாலராக உள்ளது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைவாசி உயர்வால் எண்ணெய் இறக்குமதிக்கான கட்டணம் மட்டுமே 80% அதிகரித்தது வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்ததற்கான முக்கிய காரணமாகும். 2020-21ல் ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 102.63 பில்லியன் டாலராக இருந்தது.

இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்த முதல் ஐந்து நாடுகள் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, பங்களாதேஷ் நெதர்லாந்து ஆகியவை ஆகும்.

2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2300 கோடி டாலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.7% கடுமையாக விரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கம் உயர்ந்து காணப்படுவதால் இந்த நிதி ஆண்டிலும் வர்த்தகப் பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உயர்ந்தே காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2021 இல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை $9900 கோடி டாலர்களாகவும், சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் $2.200 கோடி டாலர்களாகவும் இருந்துள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 6,399 கோடி டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14.15 சதவீதம் அதிகம். அதேபோல் இறக்குமதியும் சென்ற மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்து 7,390 கோடி டாலராக உள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை இவ்வாண்டு மார்ச் மாதம் 1,851 கோடி டாலராக உள்ளது. சென்ற மார்ச்சில் 1,364 கோடி டாலராக இருந்தது.

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை செப்டம்பர் காலாண்டில் 1.3 சதவீதமாக இருந்தது டிசம்பர் காலாண்டில் ஜிடிபியில் 2.7 சதவீதமாக விரிவடைந்தது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $150ஐ எட்டினால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2022ல் 5% ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22ல் விவசாய ஏற்றுமதி 20% அதிகரித்து 50 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அரிசி, கடல் பொருட்கள், சர்க்கரை, எருமை இறைச்சி, கச்சா பருத்தி மற்றும் கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பால் ஏற்றுமதி வளர்ச்சி அடையப்பட்டுள்ளது.

2019-20-ம் நிதி ஆண்டில் 2 லட்சம் டன்னாக இருந்த கோதுமை ஏற்றுமதி 2020-21-ம் நிதி ஆண்டில் 21.55 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது

வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மேலும் 6 மாதங்களுக்கு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகளை நிலைப்படுத்தவும், சரக்குகளின் பதுக்கலைக் கட்டுப்படுத்தவும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய்களின் இருப்பு வரம்பை 2022 டிசம்பர் 31 வரை அரசு ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. உணவு எண்ணெய்க்கான இருப்பு வரம்பு மொத்த சில்லறை விற்பனையளர்களுக்கு 30 குவிண்டால்கள் எனவும், மொத்த விற்பனையாளர்கள் 1,000 குவிண்டால்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு பெரிய பொருளாதார மீட்சியின் உச்சத்தில் உள்ளது; கடந்த 7 ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களால் வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதால், பணவீக்கம் குறித்த பேச்சுக்கள் "மிகைப்படுத்தலாக" உள்ளன என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரினால் தூண்டப்பட்ட பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், இது உலகளாவிய விநியோகச் சங்கிலியையும் பாதிக்கிறது, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்பது அனைத்து கணக்குகளிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது என்று ராஜீவ் குமார் தன் அதீதநம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும், பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலத்தை மாற்றுவதிலும் "மிக மெதுவாக செயல்படுவதாக" வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புலம்பியுள்ளார். ஆனால் இது குறித்த விரிவான விளக்கங்களை அவர் அளிக்கவில்லை.

 

முகேஷ் அம்பானியை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரராக வளர்ந்துள்ளார்.100 பில்லியன் டாலர் மதிப்பு உலகின் பெரும் பணக்கார தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதில் எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரும் பணக்காரராகவும் வளர்ந்துள்ளார் அதானி.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருபவர் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. தற்போது பெர்க்சயர் ஹாதவே (Berkshire Hathaway) தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்ஸ் பட்டியலின்படி 123.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார் அதானி.

விமான நிலையங்கள் முதல் துறைமுகங்கள் வரை வணிகங்கள் மற்றும் மின் உற்பத்தி முதல் விநியோகம் வரை பல தொழில்வணிகங்களை நடத்தும் தொழிலதிபர், 2021 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு பணக்காரர்களான எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோரை விட அதிகமாக 49 பில்லியன் டாலர் செல்வத்தைச் சேர்த்துள்ளார் 2021ல் மொத்தமாக 81 பில்லியன் டாலர் செல்வத்தை சேர்த்துள்ளார்.

2050-க்குள் 30 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டினால் இந்தியாவில் வறுமையை ஒழிக்கலாம் யாரும் வெறும் வயிற்றில் தூங்க செல்லாத ஒரு தேசமாக  இந்தியாவை மாற்றலாம் என கௌதம் அதானி சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏன் 2050 வரைக் காத்திருக்கவேண்டும் அதானி அவர்களே. அதானி,  அம்பானிகளை வளர்ப்பதால் தான் இந்தியாவில் வறுமையும் வளர்ந்துள்ளது. வறுமையை உடனடியாக ஒழிக்க உங்கள் சொத்தில் பாதியை நாட்டுடைமையாக்குங்கள், ஏழை மக்களுக்கு என எழுதிக்கொடுங்கள். வறுமையை இப்போதே ஒழித்துவிடலாம், இதற்கு ஏன் 2050 வரை காத்திருக்கவேண்டும் எனப் பாசாங்கு செய்யவேண்டும்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை 175 ஜிகாவாட்டாக உயர்த்தும் இந்தியாவின் இலக்கில் 74% மட்டுமே அடையப்பட்டுள்ளது.

 

கணக்குகளின் பொதுக் கட்டுப்பாட்டாளர் (CGA) தரவுகளின் படி ஃபிப்ரவரியில் மத்திய அரசின் வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 86.2%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் வருவாய் 88.1% பெறப்பட்டிருந்தது. மத்திய அரசின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 83.9%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் 90.4%ஆக வரி வருவாய் இருந்தது. மத்திய அரசின் வரியல்லாத வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 98.8%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் வரியல்லாத வருவாய் 73.2%ஆக இருந்தது. மத்திய அரசின் மொத்த வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 83.9%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் மொத்த வருவாய் 80.1%ஆக இருந்தது.

மத்திய அரசின் வருவாய் செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 83.9%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் வருவாய் செலவினம் 80.1%ஆக இருந்தது. மத்திய அரசின் மூலதன செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 80.6%ஆக மட்டுமே உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் மூலதன செலவினம் 92.4%ஆக இருந்தது. 2021 ஏப்ரல் - 2022 ஃபிப்ரவரி வரை மத்திய அரசின் முக்கிய உள்கட்டமைப்புப் துறைகளுக்கான மூலதனச் செலவு 16.5% மட்டுமே உயர்ந்துள்ளது, இது 2021-22க்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 80.7 சதவீதமாகும். 2019-20 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மூலதனச் செலவு 28.7 % உயர்ந்துள்ளது.

ஃபிப்ரவரி, மார்ச்சிலும் மூலதன செலவுக்கு குறைவாகவே ஒதுக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அதன் மூலதன செலவின இலக்கை அடையத் தவறும் நிலை காணப்படுகிறது. மத்திய அரசின் மொத்த செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 83.4%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் மொத்த செலவினம் 81.7%ஆக இருந்தது. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 82.7%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் நிதிப்பற்றாக்குறை 76%ஆக இருந்தது.

மத்திய அரசின் உணவு மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 88%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் உணவு மானிய செலவினம் 52%ஆக இருந்தது. மத்திய அரசின் ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 74%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் இது 84%ஆக இருந்தது. மத்திய அரசின் யூரியா மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 106%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் இது 90%ஆக இருந்தது. மத்திய அரசின் பெட்ரோலிய மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 88%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் இது 52%ஆக இருந்தது. மத்திய அரசின் உணவு மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் வெறும் 22%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் இது 61%ஆக இருந்தது. மத்திய அரசின் மொத்த மானிய செலவினம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 88%ஆக உள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரியில் மொத்த மானிய செலவினம் 61%ஆக இருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சீர்திருத்தங்களை மீண்டும் செயல்படுத்த பாஜக அரசு முயற்சி செய்கிறது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் இலக்கை எட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நிட்டி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து தெரிவித்துள்ளார். விவசாய சீர்திருத்த செயல்முறையை உருவாக்க மாநிலங்களுடன் புதிய ஆலோசனைகளைத் தொடங்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த மூன்று சட்டங்கள் திரும்பப்பெறுவதற்கு முன் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது போலவும், இச்சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டதால் தான் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது போலவும் பெரும் பொய்யுரைத்துள்ளார்.

 

கோவிட் பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாட்டின் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி 2021-22 நிதியாண்டில் ரூ.3.79 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

2021-22-ம் நிதி ஆண்டில் மின் வாகனங்களின் சில்லறை விற்பனை 3 மடங்கு உயர்ந் திருப்பதாக ஆட்டோ மொபைல் டீலர் சங்க கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

2021-22-ம் நிதி ஆண்டில் வரி வசூல் 34 சதவீதம் உயர்ந்துள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் சேர்த்து மொத்தமாக ரூ.27.07லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.5 லட்சம் கோடி அதிகம்.

வருமான வரி, நிறுவனவரி போன்ற நேரடி வரிகளின் வசூல் 49 சதவீதம் உயர்ந்து ரூ.14.10 லட்சம் கோடியாக உள்ளது. இது நிதிநிலை அறிக்கை இலக்கைவிட ரூ.3.02 லட்சம் கோடி அதிகம். சுற்றடி வரிகளின் வசூல் 20 சதவீதம் உயர்ந்து ரூ.12.90 லட்சம் கோடியாக உள்ளது. இது நிதிநிலை அறிக்கை இலக்கை விட ரூ.1.88 லட்சம் கோடி அதிகம். 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நேரடி வரிகள் 49 சதவீதம் அளவிலும், மறைமுக வரிகள் 30 சதவீதம் அளவிலும் அதிகரித்துள்ளன.

வரி மற்றும் ‘ஜிடிபி’ இடையிலான விகிதாச்சாரம் 2020-21ம் நிதி ஆண்டில் 10.3 சதவீதமாக இருந்தது 2021-22 நிதி ஆண்டில் 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரி மிதவையின் அளவு 1.9 ஆக உள்ளது. மையத்தின் மொத்த வரி வசூல் (ஜிடிஆர்) 2021-22 ஆம் ஆண்டில் 34% அதிகரித்துள்ளது,

வருங்கால வைப்புநிதியின் புதிய வழிகாட்டுதல்களின் படி உங்கள் வைப்புநிதி பங்களிப்பு ₹2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் வைப்புநிதிகணக்கு நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்கப்பட்டிருந்தால், வரிப்பிடித்தத்தின் விகிதம் 10% ஆக இருக்கும், வைப்புநிதிகணக்கு நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்கப்படவில்லை என்றால், வரிப்பிடித்த விகிதம் 20% ஆக இரட்டிப்பாகும்.

பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பை’ விரைவுபடுத்த மேலும் 101 ஆயுதங்கள் உள்நாட்டில் உருவாக்குவதற்கான கொள்கை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய ஆயுதங்கள் உட்பட 101 பொருட்களின் மூன்றாவது உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டு உள்நாட்டிலிருந்து அதிகளவில் கொள்முதல் செய்யப்படும்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 310 பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய இந்த மூன்று பட்டியல்கள் ஆயுதப்படைகளின் தேவையை பூர்த்தி செய்ய சர்வதேச தரத்திலான உபகரணங்களை கொள்முதல் செய்வதில் உள்நாட்டு தொழில்துறையின் திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஊக்குவிப்பு பணிக்குழு அரசாங்கம் உருவாக்குகிறது. இந்த ஊக்குவிப்பு பணிக்குழுவானது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் செயல்படும். இத்துறையில் 2025 ஆம் ஆண்டிற்குள் உலக சந்தைப் பங்கில் 5% ($40 பில்லியன்) இந்தியா பெறும் திறன் உள்ளது, ஆண்டுக்கு 25-30% வளர்ச்சியுடன் ஆண்டுதோறும் 1,60,000 புதிய வேலைகளை உருவாக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒலிபரப்புத் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க தனி இணையதளம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஏழ்மை 10.2% ஆக குறைந்தது என உலக வங்கி அடிப்படையிலான ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. உலக வங்கி சார்பாக, பொருளாதார நிபுணர்கள் சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வான் டெர் வீடே இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் 2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழ்மை 22.5% ஆக இருந்தது 2019-ல் அது 10.2 சதவீதமாக குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி 2011-2019 ஆம் ஆண்டில் இந்தியா தீவிர வறுமையை 12.3 சதவீத புள்ளிகளைக் குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு $1.90க்கும் குறைவாக (தோராயமாக ரூ. 145) வாழ்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீவிர வறுமை அளவிடப்படுகிறது. சின்ஹா ​​ராய் மற்றும் வீடேயின் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (CMIE) நுகர்வோர் வீட்டுக் கணக்கெடுப்பின் (CPHS) அடிப்படையில் தீவிர வறுமை மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடுமையான வறுமை 0.8% ஆகக் குறைவாக இருந்தது, 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 பரவியபோதும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) மூலம் உணவுப் பரிமாற்றங்கள் செய்ததன் மூலம், வறுமையை அந்த மட்டத்திலே வைத்திருக்க முடிந்தது என்கிறது சர்வதேச நாணய நிதியம் (IMF) சார்ந்த கட்டுரை. தொற்றுநோய், வறுமை மற்றும் சமத்துவமின்மை: இந்தியாவிலிருந்து வரும் சான்றுகள் என்ற தலைப்பிலான கட்டுரை, சுர்ஜித் பல்லா, கரண் பாசின் மற்றும் அரவிந்த் விர்மானி ஆகியோரால் எழுதப்பட்டது. 40 ஆண்டுகளில் நுகர்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.சர்வதேச அமைப்புகள் பல கோவிட் தொற்றுநோயால் உலகளவிலும், இந்தியாவிலும் வறுமை, பொருளாதார, நுகர்வு சமமின்மை அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதற்கு முற்றிலும் புறம்பான முறையில் இந்தக் கட்டுரையின் முடிவுகள் உள்ளன. உண்மையில் கடைசியாக இந்தியாவில் நுகர்வு செலவினத்திற்கான கணக்கெடுப்பு கடைசியாக 2018ல் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்திய மக்களின் நுகர்வு குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டதால், அதை வெளியிடாமல் மறைத்தது பாஜக அரசு. இந்தியா முழுவதிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட பொருளியலாளர்கள் கணக்கெடுப்பின் முடிவுகளையும், அறிக்கையையும் வெளியிடுமாறு கோரிக்கை விடுத்த பின்பே அதன் சுருக்கத்தை மட்டுமே பாஜக அரசு வெளியிட்டதே ஒழிய முழு தரவுகளையும் வெளியிடவில்லை.

இக்கட்டுரை தேசியக் கணக்குகளில் உள்ள தனியார் இறுதி நுகர்வு செலவினத்தைப் பயன்படுத்தி கணக்கீடு செய்துள்ளது.இது மக்களின் நுகர்வுசெலவினத்தை பிரதிபலிக்கும் சரியான அளவுகோல் கிடையாது. தவறான அடிமட்ட அளவுகோலின் மூலம் வறுமை குறைவாக உள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களின் கீழ் ஊட்டச்சத்துசேர்த்த அரிசியை விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 2,700 கோடி ரூபாய்க்கு அரிசிக்கு ஊட்டச்சத்தேற்றுவதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம், மாநில அமைப்புகள் ஏற்கனவே 88.65 பெரு மெட்ரிக் டன் ஊட்டச்சத்து அரிசியை விநியோகத்திற்காக கொள்முதல் செய்துள்ளன.

இந்தியாவில் நிலத்தரகு-ரியல் எஸ்டேட் பெரும்செல்வந்தர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன் 5ஆக இருந்தது சென்ற ஆண்டு 12ஆக உயர்ந்துள்ளது. நிலத்தரகு-ரியல் எஸ்டேட் பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சீனாவிலும் அமெரிக்காவிலும் ரியல் எஸ்டேட் பெரும்செல்வந்தர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் 121 ஆக இருந்து 2021 இல் 58 ஆகவும், அமெரிக்காவில் 28 ஆக இருந்து 2021 இல் 20 ஆகவும் குறைந்துள்ளது.

புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக உணவு, உரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கம் உலக அளவில் வளர்ச்சிக் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், ஆனபோதும், கதிசக்தி உள்கட்டமைப்புத் திட்டம், மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களால் பலப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளுடன் முதலீட்டை ஊக்குவிக்கும், இது இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. நிதியமைச்சகம் 2 ஆண்டுகளாக இதையே தான் கூறிவருகிறது ஆனபோதும் தனியார்துறை முதலீடுகள் அதிகரிக்கவில்லை.

2021-22 ஏப்ரல்-ஜனவரியில் பொருளாதாரத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 69.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 வெளி வணிகக் கடன்கள் (ECB) மூலம் பெறப்பட்ட நிதி முதலீடுகள், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-பிப்ரவரி 2021-22 இல் 29.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

மத்திய வங்கி பெங்களூரில் புத்தாக்கமையத்தை உருவாக்கியுள்ளது.

நிதி காரணங்களால் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA) 2022 நிதியாண்டில் ₹23,921.06 கோடி மதிப்பிலான கடன்களை அனுமதித்துள்ளது, இது FY21 இல் அனுமதிக்கப்பட்ட ₹11,001 கோடியை விட 117% அதிகம்.

நேபாள அரசு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கலாம். இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில்  ஒன்பதாவது இடத்தில் நேபாளம் உள்ளது. இந்தியா $9.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.

உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி, 2022 இல் பாலின சமத்துவத்திற்கான தரவரிசையில் 190 நாடுகளில் இந்தியா 123 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது, 2020 இல் இந்தியா 117 வது இடத்தில் இருந்தது.

மத்திய அரசு பகிரக்கூடிய வரி வருவாயில் மாநிலங்களின் பங்காக 2022ல் 8.83 லட்சம் கோடி ரூபாயை மாநிலங்களுக்கு வழங்கியது, இது 2022ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை (RE) விட 19% அதிகம்.

‘ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸால்’ மதிப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின்படி 20 பெரிய மாநிலங்களின், அவற்றின் ஒட்டுமொத்த வரி ரசீதுகள் - சொந்த வருவாய் மற்றும் மையத்திலிருந்து பெற்ற வருவாய்- 39% உயர்ந்து, ஏப்ரல்-பிப்ரவரி FY22 இல் ரூ. 18.8 லட்சம் கோடியாக உள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட 20 மாநிலங்கள், நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் மொத்த மூலதன செலவினம் ரூ. 3.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது., இது சென்ற ஆண்டின் 14% சரிவுடன் ஒப்பிடும் போது 37% உயர்வாகும்.

 

பிளாஸ்டிக் துறை இறக்குமதியைக் குறைத்து, தன்னிறைவு பெற வேண்டும் என்று பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.பிளாஸ்டிக் தொழில்துறையானது 2021-22 ஆம் ஆண்டில் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதியை எட்டியது, இது 30 சதவீத வளர்ச்சியாகும், பிளாஸ்டிக் தொழில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், அதன் ஏற்றுமதி இலக்கான 25 பில்லியன் டாலர்களை 2025 க்குள் எளிதாக எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் யு.பி.ஐ வழியாக நிகழும் கிரிப்டோ நாணய பரிவர்த்தனைகளை யு.பி.ஐ அமைப்பு தடை செய்து முடக்கியுள்ளது.

எகிப்து 2020 இல் ரஷ்யாவிலிருந்து 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள கோதுமையையும், உக்ரைனிலிருந்து 610.8 மில்லியன் டாலர் மதிப்பிலான கோதுமையையும் இறக்குமதி செய்துள்ளது. போரால் இந்த இறக்குமதி தடைபட்டதால் எகிப்து இந்தியாவிலிருந்து 1 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியா எகிப்திற்கு வருங்காலங்களில் அதிக அளவில் கோதுமையை ஏற்றுமதி செய்யமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோதுமை ஏற்றுமதியில் இந்தியா 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செய்கிறது. இருப்பினும், அதன் பங்கு 2016 இல் 0.14 சதவீதத்திலிருந்து 2020 இல் 0.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 இல் உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 14.14 சதவீத பங்கைக் கொண்டு இந்தியா இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ளது.

இந்தியாவின் ஜவுளித் துறைமிகப்பெரும் சரிவை சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், நிதியமைச்சகம் பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை செப்டம்பர் 30 வரை தள்ளுபடி செய்துள்ளது, இது ஜவுளித் தொழிலுக்கு பயனளிக்கும், நுகர்வோருக்கும் விலை குறையும். தற்போது, பருத்தி இறக்குமதிக்கு 5 சதவீதம் அடிப்படை சுங்க வரி (பிசிடி) மற்றும் 5 சதவீதம் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாடு செஸ் (ஏஐடிசி).  இந்த நடவடிக்கை, நூல் மற்றும் துணிகளின் விலையை குறைப்பதன் மூலம் ஆடை துறைகளின் ஏற்றுமதியை கணிசமாக ஊக்குவிக்கும். வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனை சமாளிக்க தற்போதே இறக்குமதிக்கான ஆர்டர்செய்ய வசதியாக வரி விதிப்பை ரத்து செய்துள்ளது வரவேற்புக்குரியது. பஞ்சு மீதான இறக்குமதி வரி ரத்து ஜவுளித் துறையின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் என கோவை, திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்தியா தன்னிறைவு இலக்கை அடைய கனிமத் தொகுதிகளை ஆய்வு செய்யும் வேகத்தை அதிகரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசின் சொத்து பணமாக்குதல் திட்டத்தில் மொத்தத்தில், முதல் ஆண்டான 2021-22 இல் பணமாக்குதல் இலக்கு 88,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. 2022 இல் சொத்துப் பணமாக்குதலின் மூலம் திரட்டப்பட்ட வருவாய் 96,000 கோடியாக உள்ளது.

மின்துறை அமைச்சகம் கடந்த நிதியாண்டின் ரூ.10,470 கோடி இலக்கில் ரூ.9,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கியது. 2022 க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 12% அதிகமாக, நிலக்கரி, கனிம சுரங்க ஏலங்கள் மூலம் 58,700 கோடி ரூபாய் - நிலக்கரி பங்களிப்பு 40,000 கோடி மற்றும் பிற சுரங்கங்கள் 18,700 கோடி – திரட்டப்பட்டுள்ளது. சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிதியாண்டு 2022ல் ரூ.23,000 கோடி மதிப்பை திரட்டியது,

மார்ச் 2022 இல் இந்தியாவில் பயணிகள் வாகன மொத்த விற்பனையில் ஆட்டோமொபைல் துறை 4% சரிவை பதிவு செய்துள்ளது, , இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடுமையான வீழ்ச்சி கண்டுள்ளது.2022 முதல் செமிகண்டக்டர் பற்றாக்குறை, அளிப்பு பக்க சவால்களை தொழில்துறை எதிர்கொள்கிறது, இத்துறை இன்னும் மீட்சி பெறவில்லை.

இந்திய அரசு சமன்படுத்தும் வரி அல்லது கூகுள் வரி மூலம் பெற்ற வருவாய் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் கிட்டத்தட்ட 90% உயர்ந்து கிட்டத்தட்ட ₹4,000 கோடியாக உயர்ந்தது. டிஜிட்டல் விளம்பர சேவைகளுக்கு 2016 ஆம் ஆண்டில் சமன்படுத்தும் வரி 6% அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா நெட்ஃபிக்ஸ், ஃபேஸ்புக், அடோப், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான 2% டிஜிட்டல் வரியை படிப்படியாக நீக்கவுள்ளது. இது இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா 25% வரை பதிலடி கொடுக்கும் வரிகளுக்கு எதிராக இந்தியாவைப் பாதுகாக்கும்.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியை விட இதன் மூலம் அதிக வருவாய் பெறப்படுகிறது. இன்று, கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியிருக்கும் போது, ​​இந்தியா ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது,

உரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் சர்வதேச விலைகள் ஜனவரி 2021 முதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் “2022 காரீப் 2022 இன் அடிப்படையில் ஊட்டச்சத்து அடிப்படையிலான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கந்தகத்திற்கான மானிய விகிதங்களை மாற்றியமைக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழு பரிந்துரைத்தது. உலகளாவிய விலை உயர்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட மானியத்தை உறுதிப்படுத்துவது விலையேற்ற பாதிப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மானிய விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று விவசாய அமைச்சகம் பகிர்ந்துள்ள விளக்கக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய வங்கி வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கான கடன் அளிப்பு குறித்து புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.இதன்படி வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அதன் மூலதனத்தில் 20% ஐ விட அதிகமாக எந்தவொரு நிறுவனத்திற்கும்  வழங்கக்கூடாது என்று அறிவித்துள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்புக்கு நிதியளிக்கும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், ஒரு நிறுவனத்திற்கு 30% வரை கடன் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. வாராக்கடன்களால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்கவே இந்த நெறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவில்எஃப்எம்சிஜி’ , நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்து வந்தது, தற்போது ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. ‘எஃப்எம்சிஜி’ பொருட்களுக்கான ரஷ்ய தேவையை இந்திய உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நிறைவு செய்ய ரஷ்யாவின் வர்த்தக நிறுவனங்கள் உதவி கோரி தங்களை அணுகியுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.

அமெரிக்க தடையால் ரஷ்யாவில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் உணவு பொருட்களுக்கும், இந்தியாவை அணுகியுள்ளன. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக தடையால் ரஷ்யாவிடம் இருந்து அதிகபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வரும் நிலையில் புதிய வாய்ப்பாக இந்திய உணவுப்பொருட்கள் ரூபாயில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தடையால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.உணவுப்பொருட்களை தொடர்ந்து மருந்துகளும் மருத்துவ உபகரணங்களை அளிக்குமாறும் ரஷ்யா தற்போது கோரியுள்ளது.

ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துகிறது. இதனால் கடன் பெற்றிருப்பவர்களின் இஎம்ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும். எஸ்பிஐயின் அடிப்படை கடன் விகிதம் (EBLR) 6.65% ஆகவும், ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் (RLLR) 6.25 ஆகவும் ஏப்ரல் 1 முதல் நிர்ணயிக்கப்பட்டது. எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, 2021-22ஆம் நிதியாண்டில் 4,600 மில்லியன் அமெரிக்க டாலராக 291 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியா உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

முதலாளித்துவத்தில் ஒரு நாட்டின் இழப்பு இன்னொரு நாட்டின் லாபமாக உள்ளது. தற்போது இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தேயிலை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கையின் பங்கை கைப்பற்ற இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகள் உருவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்திய ஜவுளித்துறை பயனடைகிறது. இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் ஆர்டர்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஜவுளி ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்தியாவின் பனியன் உற்பத்தி உள்ளிட்ட ரெடிமேட் துணிகளின் பங்களிப்பு 4 சதவீதம் ஆகும். இலங்கையின் பங்களிப்பும் 4 சதவீதம்தான். இலங்கையில் நிலவும் பொருளாதார சூழல், நமது தொழில்துறைக்கு சாதகமான அம்சங்களாக மாறலாம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

 

மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் ஏலத்தில் பங்கேற்க அனுமதி கேட்டுள்ளன. பெரு முதலாளிகளையும், தனியார் பெரு நிறுவனங்களையும் மட்டுமே ஊக்குவிக்கும் பாஜக அரசு ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பான முறையில் மாநில அரசுகளை தடுத்துள்ளது. தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களை (PSU) ஏலம் எடுக்க மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகள் தகுதி பெறாது, என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்கள் பிற அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுறவு சங்கங்கள் பிற பொதுத்துறை நிறுவனங்களின் மூலோபாய பங்கு விலக்கல்/தனியார்மயமாக்கலில் ஏலதாரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்படாது என இதற்கான அறிவிப்பை முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) வெளியிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை இழிவுபடுத்தும் விதமாக அதற்கான காரணங்களாக பின்வருபவற்றைக் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக, பொதுத்துறை நிறுவனங்கள் புதிய மூலதன முதலீடுகள் இல்லாமை, புத்தாக்க முயற்சியின்மை, நவீன தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் உற்பத்தியைப் பல்வகைப்படுத்தும் திறன், சூழலுக்கேற்ற தகவமைப்புத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. மாநிலங்களின் கடன் நிலை மற்றும் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களின் பலவீனமான லாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றின் காரணமாக மாநிலங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை வழங்க இயலாது என்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை அரசாங்கத்திடம் இருந்து வேறொரு அரசு நிறுவனத்திற்கு மாற்றுவது பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் இருப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் பொதுத்துறை நிறுவன (PSE) கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. "மாநிலங்கள் அவற்றின் சொந்த பொதுத்துறை நிறுவனங்களை மேலாண்மை செய்யவே நிதி இல்லை, எனவே தனியார்மயமாக்கக்கூடிய பிற சொத்துக்களை அவற்றிற்கு வழங்கஇயலாது என்றும் கூறியுள்ளது.

 

தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை, இதனால் அந்த மாநிலங்களில் மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர், இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு அக்டோபரில் தான் பெட்ரோல், டீசல் மீதான வரியை 10 ரூபாய் குறைத்தது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துவரும் நிலையில் அவற்றின் விலையைக் குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு நினைத்தால் வரியைக் குறைக்கும் நிதிவெளி உள்ளது. ஆனால் மாநிலங்களோ வரி உரிமைகள் பறிக்கப்பட்டு நிதிநெருக்கடியில் உள்ளன. மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு நிறுத்தவுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது அநீதியானது.

அரசு பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் 20% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க ‘ஃபெமா’ விதிகளை அரசு திருத்தியுள்ளது.அரசு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளைத் திருத்தியதன் மூலம் ‘எல்ஐசியில்’ 20 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு மே 4 ஆம் தேதி தொடங்குகிறது இது மே 9 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் முன்பு 5% பங்குகளை தனியார்மயமாக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் என முன்மொழியப்பட்டிருந்தது இப்போது 22.1 கோடி பங்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியின் ஒரு பங்கின் விலை 902-949 ரூபாய் வீதம் இப்பொதுப்பங்கு வெளியிடல் மூலம் 21,000 கோடி திரட்டப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 நிதிநிலை அறிக்கையில் அரசு குறிப்பிட்ட மதிப்பீட்டை விட தற்போது குறைக்கப்பட்டதற்கு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் காரணமாக நிலவும் சந்தை ஏற்ற இறக்கம்தான் முக்கியக் காரணம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான செலவுகளை மேற்கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் இது வரை இல்லாத அளவிற்கு 2.1 லட்சம் கோடி டாலர் அளவை எட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போதும் கூட உலகளவில் ராணுவத்திற்கான செலவு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது வருத்தத்திற்குரியது. 2020-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2021-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் ராணுவ செலவுகளை மேற்கொள்வதில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா ராணுவத்துக்கான செலவு 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

நபார்டு வங்கித் தலைவர் சிண்டாலா அளித்த தகவலின் படி 2021-22ஆம் ஆண்டில் வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் விவசாயக்கடனுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியை விட அதிகமாக ரூ.17.09 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாயக் கடன் வழங்கியுள்ளன. இதில் 10 லட்சம் கோடி ரூபாய் பயிர்க் கடனாகவும், மீதமுள்ள  7 லட்சம் கோடி ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு, பிற நீண்ட கால திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற குறைகடத்தி-செமி கண்டக்டர் மாநாட்டில் இந்தியாவை உலகளாவிய செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக ஆக்குவதற்கான நடைமுறை திட்டங்கள், ஆலோசனைகள் வழங்குமாறு பிரதமர் தொழில்நுட்ப வல்லுநர்களை கேட்டுள்ளார். மேலும் மத்திய அரசு பல்வேறு ஆய்வு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரால் செமிகண்டக்டர் விநியோக சங்கிலி தடைபட்டுள்ளது, உலக அளவில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மின்சாதனப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செமிகண்டக்டர் தேவைக்கு இறக்குமதியை சார்ந்துள்ளது. இறக்குமதியை நம்பியிருப்பதை விட்டு உள்நாட்டிலே அதை உற்பத்தி செய்யவேண்டியது மிகவும் அவசியம். இந்நிலையில், இந்தியாவிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க சென்ற ஆண்டு ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது. அமெரிக்காவில் உரையாற்றும் போது நிதியமைச்சரும் இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு அந்நிய முதலீட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம், கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகளை 2035 நிதியாண்டில் மீட்கமுடியும், இந்தியாவில் பொருளாதார மீட்சி ஊக்கத்தைச் சார்ந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவீத உயர்வும் இந்திய பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.

 மத்திய வங்கி ஒரு புதிய பரிந்துரையை வெளியிட்டுள்ளது. அரசு மறுமூலதனம் வழங்குவதால் பொதுத்துறை வங்கிகளின் (PSBs) ஏற்படும் தார்மீக அபாய சிக்கலைத் தவிர்க்க, ஒரு ஊக்குவிப்பு வழிமுறையை நிறுவ வேண்டும் என்று கூறியுள்ளது. அதிக வாராக்கடன் அபாயமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதே தார்மீக அபாய சிக்கல் என அழைக்கப்படுகிறது. கடன் மீட்பு, சொத்து தரத்தை மேம்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட வங்கிகளுக்கே புதிய மூலதனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்தியவங்கி பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் பல இடங்களில் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வல்லுனர் குழு அமைத்து இப்பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் செயல்பாடுகளில் கவனக்குறைவாக இருப்பது தெரியவந்தால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும் என்றும் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் (QES) தரவுகளை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இரண்டாவது கோவிட் அலை தணிந்தாலும், அக்டோபர்-டிசம்பர் காலப்பகுதியில் வேலைவாய்ப்பு சூழ்நிலை சிறிதளவு மட்டுமே மேம்பட்டதாக இத்தரவுகள் காட்டுகிறது.

காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம்/ பிபிஓக்கள், நிதிச் சேவைகள் - ஆகிய ஒன்பது துறைகளின், பெரும்பாலும் அமைப்புசார் பிரிவுகளில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில், குறுகிய கால வேலைவாய்ப்பு மதிப்பீட்டை வழங்குகிறது.

விவசாயம் அல்லாத ஒன்பது துறைகளில் 2021 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3.145 கோடியாக உள்ளது.ஜூலை-செப்டம்பர் காலத்தை விட வெறும் 39000 வேலைவாய்ப்புகள் மட்டுமே அதிகரித்துள்ளது. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் கல்வி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு சரிவடைந்துள்ளது.

இந்தோனேசிய அரசு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை 10-15% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக அமைச்சகம் இந்தியாவில் தங்கம், இயற்கை எரிவாயு, கச்சா பாமாயில் உட்பட  88 பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. 102 பொருட்களின் இறக்குமதியை குறைக்க இவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல நாடுகளில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தகைய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் தடையாக உள்ளன. இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) இயக்குநர் ஜெனரல் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நிட்டி ஆயோக் தயாரிக்கும் என விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம், குறைந்த பயிர் விளைச்சல், அதிக நீரின் பயன்பாடு, ரசாயனங்கள், உரங்களின் சமச்சீரற்ற பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்தியில் விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.

“ஒரு புதிய புரட்சி அவசியம். இயற்கை விவசாயம் என்பது காலத்தின் தேவை. பசுமைப் புரட்சியின் காரணமாக, உற்பத்திச் செலவு அதிகரித்து, நீர் பயன்பாட்டுத் திறன் குறைவாகவே உள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார்.

நிட்டி ஆயோக்கின் ரமேஷ் சந்த் நாட்டில் இந்தியாவின் சுமார் 6 சதவீத நிலப்பரப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதில்லை, இப்பகுதிகளை இலக்காக்கி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கலாம். சில மாவட்டங்களில் 5 கிலோவுக்கும் குறைவான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், அங்கும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கலாம், என்று கூறியுள்ளார்.

வர்த்தகம், தொழில்நுட்ப குழுவை உருவாக்க இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது. "வர்த்தகம், தொழில்நுட்பப் பகிர்வு பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த இக்குழு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா- உக்ரைன் போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் மின்கட்டணம் உயரும் அபாயம் காணப்படுகிறது.

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் குமார் விலகியுள்ளார். நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக சுமன் பெர்ரி நியமிக்கப்பட்டார். பெரி 2001- 2011 வரை “நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச்சின்” தலைமை இயக்குநராக செயல்பட்டவர்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையில்லான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபரில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90%க்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்படும் பொருட்கள் இதன் கீழ் வரும். 2030 ஆம் ஆண்டுக்குள் பொருட்கள்,சேவைகளின் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 2013-14 நிதியாண்டிலிருந்து 2021-22 நிதியாண்டு வரை 109% வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா 2021-22ல் 150 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 27 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அந்நிய செலாவணி வருவாய் ஈட்டுவதில் அனைத்து விவசாயப் பொருட்களிலும் பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி முதலிடத்தில் உள்ளது. பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதி, மூலம் 6,115 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது.

ரூபாய் மதிப்பிழப்பு அல்லது நமது நாணயத்தை வலுவிழக்கச் செய்வது உண்மையில் நமது தேசத்தின் நலனுக்கும், நமது வளர்ச்சிக்கும், நீண்ட காலத்திற்கு போட்டித்தன்மையுடன் இருக்கும் திறனுக்கும் தீங்கானது" என்று 15வது சிவில் சர்வீசஸ் தின நிகழ்வில் பியூஷ் கோயல் கூறினார். இது மிகுந்த முக்கியத்துவம் உடையக் கூற்றாகும். பொதுவாக நவின தாராளமய அமைப்புகள் நாட்டின் ஏற்றுமதிக்கான போட்டித்திறனை அதிகரிக்க நாணய மதிப்பிழப்பு செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறையே அதிகரிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் சர்வதேச பண நிதியத்தின் பரிந்துரை படி ரூபாய் 15% மதிப்பு குறைக்கப்பட்டது. எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இதனால் அந்நிய செலவாணி பிரச்சினை மேலும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

தமிழ்நாடு:

2021-22-ல் மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை ரூ.28,204 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளது.15-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்று 11 மாதங்களில் தமிழ்நாடு ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலம் 2.05 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு  சென்னை மாநகரத்தில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. 600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை உள்ள சொத்துக்களுக்கு 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. 1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை உள்ள சொத்துக்களுக்கு 100 சதவீதத வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 - 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

மொத்த விற்பனை விலை குறியீடானது (Wholesale Price Index) நாட்டின் பண வீக்கத்தை குறிப்பிடும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீடு உயர்வை பரிசீலிக்கும் போது 1998 முதல் 2022 வரை பண வீக்கம் 297 மடங்காகவும், 2008 முதல் 2022 வரை 1.79 மடங்காகவும் உயர்ந்துள்ளது.

மேற்கண்டவாறு பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பலமடங்கு உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது.

நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளை போக்கி, கள நிலவரத்துக்கு ஏற்ப, சந்தை வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்க சீரமைப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழகத்தில் 97.05 சதவீதம் வரை  4,805 கோடி ரூபாய் அளவில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள், தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எஞ்சிய பயனாளிகளுக்கும் விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021-22 நிதியாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சொத்து பதிவு மூலம் ரூ.13,914 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1856.83 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து இனி 365 நாட்களும் பால் கொள்முதல் செய்யப்படும் எனதமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து எவ்வித தங்கு தடையுமின்றி இனி 365 நாட்களும் பால்கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தீப்பெட்டி மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் 2,530 தீப்பெட்டி ஆலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருட்களான அட்டை, பேப்பர், குளோரேட், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ் போன்றவை, கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளன. தீப்பெட்டியின் அடக்கச் செலவுஅதிகரித்த நிலையில், 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டலுக்கு ஏப்ரல்1-ம் தேதி முதல் ரூ.50 விலைஉயர்த்தப்படும் என, உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

 

இந்த அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.800 கோடி, தொழில் வரி மூலம் ரூ.475 கோடி, முத்திரை தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.170, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.500 கோடி, இதர வகையில் ரூ.879.77 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1,836.84 கோடி, நிர்வாகச் செலவு ரூ.121.30, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவு ரூ.1.079.31 கோடி, கடனுக்கான வட்டி ரூ.148.40 கோடி உள்ளிட்டவைகள் முக்கிய செலவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பாலின சமத்துவ குழுக்கள் அமைத்தல், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்துதல், கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு கைப்பேசி செயலி உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கிச் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் வழங்குதல், பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு) வழங்கப்படவுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு கிலோ கேழ்வரகு அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் கிரானைட் மூலம் கிடைக்கும் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான கால அளவில் இந்தியாவிற்குள் கிரானைட் தொழிலில் 20 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி / விற்பனை செய்யும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்தது.

புத்தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழக அரசின் நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி டிட்கோ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வளர்ந்து வரும் துறைகளுக்கான ஆதார நிதியின் கீழ் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்துள்ள, தமிழகத்தில் உள்ள, ஆண்டுக்கு ரூ.25 கோடி மேல் வரவு - செலவு உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம். தொடர்பான முழு விவரங்களுக்கு http://www.tnifmc.com/ என்ற இணையதளத்தில் பெறலாம்.

 

பொருளாதரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக, 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் துவங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) 75 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துத்தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக மூட்டைக்கு ரூ.80 வசூலிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு  முன்வந்து இத்தகைய முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உலகம்:

நியூயார்க்கில் அமேசான் நிறுவனத்தின் பணியாளர்கள் வெற்றிகரமாக முதல் தொழில்சங்கத்தைக் கட்டமைத்துள்ளனர். தொழிற்சங்க உருவாக்கம், அமைப்பாக்க நடவடிக்கைகளைத் தடுக்க அமேசான் 43லட்சம் டாலர் செலவழித்துள்ளது. இத்தகைய தடைகளை கடந்து அமேசான் ஊழியர்கள் இச்சாதனையைப் படைத்துள்ளனர். இது உலகின் பிற இடங்களிலும் அமைப்புசாராத் துறைகளிலும், தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்தி, தொழிற்சங்க, அமைப்பாக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கட்டும்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேமாதம் வட்டிவீதத்தை 0.50% உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார்.

டாலர் குறியீடு 2020 மார்ச்சிற்கு பிறகு 101க்கு மேல் உயர்ந்துள்ளது.

சீனா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயையும், நிலக்கரியையும் சீன நாணயமான யுவானில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

உக்ரைன் போர்நெருக்கடி 2022 இல் உலக வர்த்தக வளர்ச்சியை பாதியாக குறைக்கலாம் என உலக வர்த்தக அமைப்பு (WTO) மதிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் உலகப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன, இது 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை கடந்த அக்டோபரில் கணிக்கப்பட்ட 4.7 சதவீதத்தில் இருந்து 2.4 - 3 சதவீதமாக குறைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கிடையிலான பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு 4 முதல் 5% சுங்க வரி விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல், நகை உள்ளிட்ட 96.4 சதவீத பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் சுங்க வரி விதிக்கப்படாது. இதன்மூலம் இப்போது ரூ.2.05 லட்சம் கோடியாக உள்ள இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், அடுத்த 5 ஆண்டில் ரூ.3.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் செயல்படும் இந்திய நிறுவனங்களின் வருமானத்தின் மேலான வரி விதிப்பை நிறுத்திக் கொள்வதாகவும் ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கிவருகின்றன.

குறுகிய மற்றும் நீண்ட கால அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதத்தின் வளர்ச்சிக் குறியீடு தலைகீழாக மாறியுள்ளது. நீண்ட கால அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம்,  குறுகிய கால அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதத்தை விடக் குறைந்துள்ளது. இது, வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியின் அறிகுறியாகவும், எதிர்கால வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் சந்தைகளில் பங்குகளை வாங்குவதைத் தவிர்த்து குறைந்த ஆபத்துள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது இதுபோன்ற தலைகீழ் வளர்ச்சி நிலை உருவாகும்.

 

 

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...