புள்ளியியல் அமைச்சகத்தால் இந்தியாவில் காலப் பயன்பாடு குறித்த
அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான கணக்கெடுப்பு ஜனவரி-டிசம்பர் 2019ல் மேற்கொள்ளப்பட்டது. 1,38,799
வீடுகளில் (கிராமங்களில்: 82,897, நகரங்களில்:
55,902) 4,47,250 நபர்களிடம் (கிராமங்களில்: 2,73,195
நகரங்களில்:1,74,055) பெறப்பட்ட தரவுகளின்
அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியர்கள் ஒரு
நாளை எவ்வாறு கழிக்கின்றனர், சராசரியாக எத்தனை சதவீதத்தினர்
வேலைகளில் ஈடுபடுகின்றனர், எவ்வளவு நேரம் ஈடுபடுகின்றனர்
என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: ஊதியமற்ற வீட்டு வேலைகளில்
பெண்களில் 81.2 சதவீதத்தினரும், ஆண்களில்
26.1 சதவீதத்தினரும் ஈடுபடுகின்றனர். வீடுகளில் பிறரைப் பராமரிக்கும் வேலைகளில் பெண்களில் 27.6 சதவீதத்தினரும்,
ஆண்களில் 14.0 சதவீதத்தினரும் ஈடுபடுகின்றனர்.
ஊதியமற்ற வீட்டு வேலைகளில் சராசரியாகப் பெண்கள் 299 நிமிடங்களும், ஆண்கள் 97 நிமிடங்களும் ஈடுபடுகின்றனர். வீடுகளில்
பிறரைப்
பராமரிக்கும் வேலைகளில் சராசரியாக பெண்கள் 134 நிமிடங்களும், ஆண்கள் 76
நிமிடங்களும் ஈடுபடுகின்றனர். ஊதியமற்ற தன்னார்வலர், பயிற்சி மற்றும் பிற வேலைகளில் 2.0 சதவீத பெண்களும்,
2.7 சதவீத ஆண்களும் ஈடுபடுகின்றனர். ஊதியமற்ற தன்னார்வலர், பயிற்சி மற்றும் பிற வேலைகளில் சராசரியாக பெண்கள் 99 நிமிடங்களும், பெண்களும் 102 நிமிடங்களும்
ஆண்களும் ஈடுபடுகின்றனர். ஊதியமுள்ள வேலைகளில் சராசரியாக 57.3 சதவீத ஆண்களும், 18.4 சதவீதப் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதியமுள்ள வேலைகளில் ஆண்கள் 459 நிமிடங்களும் ( 7 மணி
நேரத்திற்கு மேல்), பெண்கள் 333 நிமிடங்களும்
ஈடுபடுகின்றனர். 21ஆம் நூற்றாண்டிலும் கூட இந்தியாவில்
பெண்களில் 81.2 சதவீதத்தினர் ஊதியமற்ற வீட்டு வேலைகளைச் செய்யும் போக்கு காணப்படுகிறது. பெண்களின்
மீது சமூகம் வீட்டுப் பணி, அலுவல் பணி என்ற இரட்டைச் சுமையைச் சுமத்துகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும்
ஆய்வுக்குட்படுத்தினால் பாலினப் பாகுபாடு இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். பாலினச் சமத்துவம் நோக்கிய பயணத்தில் இந்தியா இன்னும்
வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்ற போதிலும், அது உங்கள் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை
ஒரு போதும் மறந்து விடக் கூடாது. வீட்டு வேலைகளை அனைத்துப் பாலினரும் சரிநிகராகப் பங்கிட்டுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி
பெண்களை இரட்டைச் சுமையிலிருந்து விடுவிப்போம். பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க மாட்டோம் என உறுதி ஏற்று
அதன் படி செயல்படுவோம்.
No comments:
Post a Comment