ஆசிரியர்: உத்சா பட் நாயக்
(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியரான உத்சா பட்நாயக் இந்தியாவின் தலைசிறந்த மார்க்சியப் பொருளாதார அறிஞர்.)
தலைப்பு: அபகரிக்கப்பட்ட செல்வம்:
காலனியாதிக்கத்துக்கு முன் இந்தியா இயற்கை வளமும், செல்வமும் செறிந்த உற்பத்தி அதிகம் கொண்ட நாடாக இருந்தது. ஆனால் இந்தியாவின் இயற்கை வளமோ, செல்வ வளமோ இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ, இந்தியாவின் தொழிற் துறையை, விவசாயத்தை நவீனத் தொழில் நுட்பங்கள் மூலம் முன்னேற்றவோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக அவை காலனியாக்கத்தால் பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டு அதை வளர்ச்சியடைந்த நாடாக உயர்த்தவும், தொழிற்புரட்சிக்கான உந்து விசையாகவும், பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இந்தியாவிலோ உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்பட்டன. பெரும்பான்மையான மக்கள் கொடிய வறுமைக்குத் தள்ளப்பட்டு, இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடாக பின்னேத் தள்ளப்பட்டது.பிரிட்டன் இந்தியாவிடமிருந்து எவ்வளவு செல்வ வளங்களை அபகரித்தது மற்றும்அதன் பொறியமைவு என்ன என்பது குறித்துத் தன் ஆய்வுகளின் மூலம் பெறப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் ஒரு செறிந்த திறன் வாய்ந்த விரிவுரையைப் பேராசிரியர் உத்சா பட் நாயக் வழங்கினார்
200 ஆண்டுகளாக இந்தியாவை காலனியாதிக்கம் செய்த பிரிட்டன் ஏற்படுத்தியக் காயங்கள் இன்னும் வடுக்களாக நீடிக்கின்றன. இந்தியாவில் காலனியாதிக்க சுரண்டலால் ஏற்பட்ட செல்வ இழப்பு சரியாகக் கணக்கீடு செய்யப்படாமலே இருந்துவந்தது இந்தியாவிலிருந்து பிரிட்டன் அடித்தக் கொள்ளை குறித்து தாதாபாய் நௌரோஜி, ஆர்.சி.தத் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு அதை வெளிச்சப்படுத்திய போதும் அதை முழுமையாகவும் தெளிவாகவும் விவரிக்கவில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பு அவர்களால் குறைத்தே மதிப்பீடு செய்யப்பட்டது.இது குறித்து நீண்ட காலத்திற்கு மறுபரிசீலனை செய்யப்படாமல் மீளாய்வுக்கு உட்படுத்தப்படாமலே இருந்தது.
உத்சா பட் நாயக் அதை மீளாய்வுக்கு உட்படுத்தி நீண்ட நெடிய ஆய்வின் மூலம் அதை முறையாகக் கணக்கிட்டு அதன் சரியான அளவையும், பொறியமைவையும் தெளிவுபடுத்தியுள்ளார். இறக்குமதி, ஏற்றுமதி குறித்த ஐ நாவின் இணையத் தரவுகளிலிருந்து 1900, 1928,1929 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி உபரி மதிப்பானது பிரிட்டனால் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
1765 மற்றும் 1938 க்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து, 9.2 டிரில்லியன் பவுண்டு (45 டிரில்லியன் டாலர்) இன்றைய ரூபாய் மதிப்பில் இது 3301 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம்.) அபகரித்துள்ளது.இது இந்தியாவின் ஏற்றுமதி உபரி வருவாய் மதிப்பில் 5% கூட்டு வட்டி சேர்த்துக் கணக்கிடப்பட்டது.
மேற்குலகால் நாம் மீண்டும் மீண்டும் திறனற்றவர்கள் என்று சொல்லப்படுகிறோம். ஆனால் வேளாண்மையைப் பொறுத்தவரை காலநிலையே முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் குளிர் பிரதேசங்கள் அங்கே மே-செப் குறுகிய காலத்திற்குள் தான் பயிர் செய்யமுடியும், கால் நடைத் தீவனங்களை வளர்க்க முடியும். அங்கு வேளாண் உற்பத்தித் திறனும் குறைவு.ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் குறித்த தற்போதைய ஆவணங்களிலிருந்து குளிர்காலத்தில் அங்கு உணவுப் பற்றாக்குறையால் நர மாமிசம் உண்ணும் வழக்கம் இருந்ததை அறியலாம்.
இந்தியாவின் காலநிலையின் படி இங்குக் குறைந்த பட்சம் இருபோகம் முதல் முப்போகம் வரை பயிர் செய்யும் முறை இருந்தது. இங்குக் குளிர்காலத்தில் மேற்கு நாடுகளின் கோடைப் பயிர்களை வளர்க்க முடிந்தது. உலகின் வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல பிரதேசங்களில் தான் வேளாண்மை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்தியாவிடமிருந்து பிரிட்டன் வர்த்தகம் செய்வதற்குவாசனைப் பொருட்கள் உந்துசக்தியாக இருந்தது. வர்த்தகம் சாத்தியமில்லாத போது ராணுவப் படை மூலம் இந்தியா ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. 1600ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான முற்றுரிமையைப் பெற்றது.
1765ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தின் வளமானப் பகுதிகளில் முதன் முதலாக வரி வருவாய் பெறும் திவானி உரிமையைப் பெற்றது.அதற்கு முன்னர் வங்காளத்தில் நவாபால் போதுமான அளவுக்கு அதிக வரிகள் வசூலிக்கப்பட்ட போதும் கூட பிரிட்டிஷார் மேலும் வரியைக் கடுமையாக உயர்த்தி ஏழை விவசாயிகளிடம் பலவந்தமாக வரி வசூல் செய்தனர். 1765-1770 க்கு இடையில் மட்டும் வங்காளத்திலிருந்து பெற்ற வரி வருவாய் மூன்ற மடங்காக உயர்ந்தது.. இதனால் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1770 இல் பிரிட்டிஷாரால் வங்காளத்தில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள், 30 மில்லியன் மக்கள் தொகையில், 10 மில்லியன் பேர் இறந்ததாக ஆங்கிலேயரே மதிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி வரிவருவாயை . வெள்ளீயில் பெற்றது.பிறகு வெள்ளி அல்லாமல் அந்தப் பகுதியில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் மூலம் வரி வருவாயைப் பெற்றது.1770-1790 வரை நிலையான வரி வருவாய் திட்டத்தின் (permanent settlement) மூலம் வரி நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பெற்ற வருவாய் பிரிட்டனின் வருவாயை விட மடங்கு அதிகமாய் இருந்தது.
பின்னர் ரயத்துவாரி வரி முறையின் படி விவசாயிகளிடம் நேரடியாக வரி வசூல் செய்யப்பட்டது.இம்முறையில் குடியானவருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஜமீன்தார் போல எந்தவொரு இடைத்தரகரும் இல்லை. ரயத்வாரி முறையிலும் பிரிட்டாசாரின் பெரும் கோரிக்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷாரை எதிர்த்து ஜமீந்தார், தாலுக்தார் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இந்தப் பெரும் கிளர்ச்சி வர்த்தகத்தை மூன்று வருடங்கள் கடுமையாக பாதித்தது.
காலனிய வர்த்தகத்தின் இரண்டாம் கட்டமாக 1857ல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான முற்றுரிமையை இழந்தது.வர்த்தக முற்றுரிமை நீக்கப்பட்ட பின் பிரிட்டன் இறக்குமதிகளை பதிலீடு செய்தது.இந்தியா, மற்றும் பெர்சியாவிடமிருந்து வரும் இறக்குமதி மூடப்பட்டது. 1861ல் வரி வருவாய் 7 மடங்கு உயர்ந்தது.1860-1890 வரை 70 பில்லியன் ஸ்டெர்லிங் வருவாயாகப் பெறப்பட்டது.
1770-1774 இந்தியாவில் நெசவு செய்யப்பட்டத் துணிகளும், கைத்தறி ஆடைகளும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை ஆனால் 1775-1813வரை இந்தியாவிடமிருந்து பருத்தி நுகர்வுக்கு மட்டும் பிரிட்டன் தடை விதிக்கவில்லை.இந்தியப் பொருட்களுக்கு 60-75% என அதிக சுங்கவரி விதிக்கப்பட்டது.பிரிட்டிஷ் சந்தை இந்தியப் பொருள்களுக்கு மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய சந்தை பிரிட்டிஷ் பொருட்களுக்கு முற்றிலும் திறக்கப்பட்டது. நெய்யும் எந்திரம் தொழில்நுட்ப வளர்ச்சியடையும் வரை 74 வருடங்களாக பாதுகாப்புவாத நடவடிக்கைகளின் மூலம் இந்தியத் துணிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யாமல் பிரிட்டனின் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. 1774ல் அந்தத் தடை நீக்கப்பட்டது.இந்தியாவின், துணிச் சந்தையில் இந்தியத் துணிமணிகளை பிரிட்டிஷ் துணிகள் பதிலீடு செய்தன.இதனால் பீஹாரில் தொழிற்துறை முற்றிலும் நசிவடைந்தது. கொடியவறுமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் சேமப்பட்டாளம் உருவானது.
இந்தியாவிடமிருந்து பிரிட்டன் அதிக அளவில் சரக்குகளை இறக்குமதி செய்தது.அவற்றில் பெரும்பகுதியை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரிட்டன் மறு ஏற்றுமதி செய்தது.கிழக்கிந்திய நிறுவனம் சரக்குகளை இந்தியாவிடமிருந்து இலவசமாகவே பெற்றது. அதாவது அதற்கு ஈடானத் தொகையை இந்தியாவிற்கு செலுத்தவில்லை. இந்தியாவிலிருந்து பொருட்கள், கடத்தப்பட்டதே ஒழிய அது ஒரு நியாயமான வர்த்தகம் அல்ல.இந்தியப் பொருட்களுக்கான பணத்தை செலுத்துவதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றினார்கள் ஆனால் உண்மையில் அது ஒரு போதும் செலுத்தப்படவில்லை.
பிரிட்டனுக்கு வேறு எந்த நாட்டுடனும் பணம் செலுத்த வேண்டியக் கடப்பாடு இருக்கவில்லை எல்லாவற்றையும் வரி வருமானத்திலிருந்தே செலுத்தி வந்தது.இந்திய உற்பத்தியாளர் செலுத்த வேண்டிய வரியானது அதிக அளவில் உற்பத்திப் பொருட்களாகவேப் பெறப்பட்டது.இவ்வாறு பொருட்களை அதிக அளவில் பெறுவதன் மூலம் வருவாயை மும்மடங்காகப் பெருக்கியது.
காலனியாதிக்கமோ அதிலிருந்து சுரண்டப்பட்ட செல்வமோ இல்லாமல் நவீன முதலாளித்துவம் வளர்ந்திருக்க முடியாது. பிரிட்டனில் 1770 முதல் 1820 வரை தொழிற்துறையில் மாற்றம் ஏற்பட்ட போது, ஆரம்ப மதிப்பீடுகளின் படி கரிபீயத் தீவுகள் உட்பட காலனிகளிடமிருந்து பிரிட்டன் இலவசமாகப் பெற்ற வருவாய் பிரிட்டனின் மொத்த ஜிடிபியில் 6% இருந்தது.பிரிட்டனில் உள்நாட்டு சேமிப்புகள் மிகவும் குறைந்திருந்த போதும் அந்நாட்டின் மூலதன உருவாக்கத்தை இருமடங்காக்க முடிந்தது. பிரிட்டனின் உள் நாட்டு ஏற்றுமதியும் குறைந்திருந்தது.
மூலதனத்தை ஏற்றுமதி செய்ய நாட்டின் நடப்பு கணக்கு மிகை மதிப்பைக் கொண்டிருக்கவேண்டும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிடமும், அமெரிக்காவிடம் அந்நிய செலவாணிப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது.அதே நேரத்தில் அந்தப் பகுதிகளிலெல்லாம் பெருமளவு முதலீடுகளையும் பிரிட்டனால் செய்ய முடிந்தது. இது எப்படி சாத்தியமானது.பிரிட்டிஷ் காலனி நாடுகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட அந்நிய செலவாணி மற்றும் தங்கத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறையை பிரிட்டன் நிவர்த்தி செய்துகொண்டது. எந்த இறையாண்மை உடைய நாட்டின் வருவாயிலிருந்து இப்படிப்பட்ட கடத்தலை செய்ய இயலாது.இந்தியாவில் உற்பத்தியான உபரி மதிப்பனைத்தும் பிரிட்டனால் சுரண்டப்பட்டது.ஈடேற்றம் அற்ற ஒருதலைப்பட்ச பரிமாற்றமே அவை செய்யப்பட்டது.
நாம் அறிவையும் மேற்கத்திய பல்கலைக்கழகங்களிலிருந்தே பெறும் நிலை உள்ளது.நாம் அரசியல் சுதந்திரம் அடைந்திருப்பினும் , அறிவளவில் இன்னும் காலனியாதிக்கத்தால் பீடிக்கப்பட்டே உள்ளோம். ஆதிக்கத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் போக்கின் படி வரலாறு ஆனது ஒரு தலை பட்சமாகவே பார்க்கப்படுகிறது.பிரிட்டானிய மார்க்சிஸ்டுகளான எரிக்ஸ் ஹாப்சன் செல்வ அபகரிப்பை பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.முன்னணியில் உள்ள பொருளாதார நிபுணர்கள் கூட உலக வர்த்தகத் தரவுகளில் பிரிட்டானிய வர்த்தகம் குறித்த தவறான மதிப்பீடுகளையே பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் தங்கள் நாட்டின் சொந்த வர்த்தகத்தைப் பற்றி தவறான மதிப்பீடுகளையே செய்துள்ளார்கள். ஃபிலிஸ் டீன் மற்றும் டபிள்யூ.ஏ. கோல் ஆகியோரால் 1688 முதல் 1959 வரையான பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுதப்பட்ட நூலை1967 இல் வெளியிட்டனர், இது பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்றைப் பற்றிக் கூறும் தரமிக்க நூலாகக் கருதப்படுகிறது ஆயினும்கூட அவர்கள் வர்த்தகத்தின் தவறான வரையறையைப் பயன்படுத்துகின்றனர், இது எந்தவொரு பெரிய பொருளாதார பாடநூலிலும் இல்லாத ஒரு வரையறையாகும். டீன் மற்றும் கோல் மறு ஏற்றுமதியை முற்றிலுமாக விட்டுவிட்டு, பிரிட்டனின் முழு வர்த்தகத்தையும் கணக்கிடாமல், ஒரு பகுதியை மட்டுமே கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்தப்படும் இறக்குமதிகள் மற்றும் தங்கள் நாட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை மட்டுமே அதில் சேர்த்துள்ளனர். ஆனால் சரியான வரையறை என்பது மொத்த இறக்குமதிகள், மொத்த ஏற்றுமதிகள் மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்படும் இறக்குமதிகள் ஆகியவற்றையே உள்ளடக்கும். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கான டீன் மற்றும் கோலின் தரவுகளை உத்சா பட்நாயக் மறு ஆய்வு செய்தார். அதன் படி 1800 ஆம் ஆண்டளவில் உண்மையான வர்த்தகம் 82 மில்லியனாக இருந்தது, ஆனால் டீன் மற்றும் கோல் அவர்களின் கணக்கின் படி அது 51 மில்லியன் மட்டுமே. அப்போது பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘ஜிடிபி’-யில் வர்த்தகத்தின் பங்கு அவர்கள் குறிப்பிடுவது போல் 34 சதவீதமாக இல்லை. 56 சதவீதமாக இருந்தது. பிரிட்டன் மறு ஏற்றுமதி மூலம் மற்ற நாடுகளிடமிருந்துப் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளியையும் பெற்றதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. இவ்வாறு காலனிய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.
வள அபகரிப்பின் பொறியமைவு:
இந்தியாவிடமிருந்து வளங்களை அபகரிப்பதற்கான ஒரு திறன் மிக்க பொறியமைவை பிரிட்டன் உருவாக்கியது.இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பொருட்களை மறு ஏற்றுமதி செய்வதை பிரிட்டன் அதிகரித்தது.இந்தியா, பிரிட்டனுடன் மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. மற்ற நாடுகளுடன் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.
1765 முதல் இங்கிலாந்து ராணி இந்தியாவைக் கையகப்படுத்திய வரை, பிரிட்டிஷ் இந்திய நிறுவனம், விவசாயிகளிடமிருந்து ஏற்றுமதி பொருட்களை வாங்குவதற்கு நிகர வரி வசூலில் மூன்றில் ஒரு பங்கைப் பயன்படுத்தியது. அசாதாரணமான முறையில் வர்த்தகத்தை வரிகளுடன் இணைக்கும் இந்தத் தந்திரமான, நியாயமற்ற முறையை பிரிட்டன் பயன்படுத்தியது.இந்தியர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான அந்நிய செலாவணி மற்றும் தங்கம் ஒரு போதும் இந்தியாவிற்குத் தரப்படவில்லை அதற்கு பதிலாக.அவர்களுக்கு செலுத்த வேண்டிய ரூபாய் இந்திய பட்ஜெட்டில் இருந்தே ,அதாவது இந்தியர்களின் வரிவருவாயிலிருந்தே செலுத்தப்பட்டது’ - இது எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிலும் காண முடியாத ஒன்று. இந்திய மத்திய அரசின் பட்ஜெட்டில் இவ்வாறு 26-36% வரை அபகரிக்கப்பட்டது. இந்தியாவிற்கு தரவேண்டிய மிகப்பெரிய சர்வதேச ஏற்றுமதி வருவாயைப் பெற்றிருந்தால் இந்தியா மிகவும் மேம்பட்ட ஒரு வளர்ச்சி நிலையை அடைந்திருக்கும்.
காலனியாதிக்க காலகட்டத்தில், இந்தியாவின் கணிசமான அந்நிய செலாவணி வருவாய் நேராக லண்டனுக்குச் சென்றது. இதனால் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து நவீனமய பாதையில் இறங்குவதற்கான இந்திய நாட்டின் திறனை கடுமையாக பாதித்தது.
இந்திய உற்பத்தியாளர்களின் சொந்த வரியிலிருந்து பெரும்பகுதி ஏற்றுமதி பொருட்களாக மாற்றப்பட்டது, பிரிட்டன் இந்தியாவிலிருந்து வரும் ஏற்றுமதிப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவேப் பெற்றது. இங்கிலாந்து ராணி பொறுப்பேற்ற பின்னர் வந்த பொறிமுறையானது பரிமாற்ற பில்களைப் பயன்படுத்தி இம்முறையைத் தொடர்ந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தப் பொருட்களை ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பாவிற்கு மறு ஏற்றுமதி செய்தது அதற்கு ஈடேதும் இந்தியாவிற்கு கொடுக்கவில்லை.
கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுகையில் இருந்ததைப் போலவே அரசியின் ஆளுகையிலும் இந்திய பட்ஜெட் வருவாயின் மூன்றில் ஒரு பங்கு ' ‘வெளி நாட்டு செலவீனம்' என்ற பெயரில் ஒதுக்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து மறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலையை தங்கத்திலோ, ஸ்டெர்லிங்கிலோ லண்டனில் உள்ள இந்திய அரசிற்கான செயலாளர் கணக்குக்கு வரவு வைக்குமாறு பிரிட்டன் அவர்களை வலியுறுத்தியது. இதனால் அந்த வருவாயை இந்தியா பெறவில்லை. அதற்கு பதிலாக இந்த இறக்குமதிக்கான ரூபாய் மதிப்பில் ‘கவுன்சில் பில்' என்ற பெயரில் ரசீதுகள் செயலாளரால் வெளியிடப்பட்டது. அதற்கான ரூபாய் தொகை இந்திய பட்ஜெட்டின் ‘வெளி நாட்டு செலவீனங்கள் என்ற பகுதியிலிருந்து கொடுக்கப்பட்டது.
இவ்வாறு இந்தியாவுக்கு வருவாய் கிடைக்காத வண்ணம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகமும், வாங்கும் சக்தியும் பிரிட்டனின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்தது.ஸ்டெர்லிங்கின் மதிப்பு தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூபாயின் மதிப்பு தங்கத்தின் அடிப்படையாக இல்லாமல் ஸ்டெர்லிங்கின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. ‘கவுன்சில் பில்லின்' மூலம் ரூபாய் குறைத்தே மதிப்பிடப்பட்டது. இந்திய பட்ஜெட்டில் 32-35% வெளி நாட்டு செலவு என ‘கவுன்சில் பில்லுக்காக' ஒதுக்கப்பட்டது. பிரிட்டனுக்கான போர் செலவீனங்களும் இந்திய பட்ஜெட்டிலிருந்தேப் பெறப்பட்டது.
தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் பட் ஆகியோர் ‘கவுன்சில் பில்' பற்றி குறிப்பிடவேயில்லை. உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக வர்த்தக உபரியைக் கொண்டிருந்த போதிலும் கூடகாலனிய ஏற்றுமதியின் மூலம் ஒரு ரூபாயைக் கூட இந்தியா பெறவேயில்லை.
ஜான் மேனார்ட் கீனஸ் இந்திய நாணய மற்றும் நிதி அமைப்பு குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்தியா தங்கத்திற்கும், நிலத்திற்கும் முன்னுரிமை தரும் நாடு என்று குறிப்பிடுகிறார். ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த சரக்குகளை மறு ஏற்றுமதி செய்ததின் மூலம் பிரிட்டன் பெற்ற வருவாய் குறித்து கீனஸ் ஒன்றுமே குறிப்பிடவில்லை.
‘ஹோம் சார்ஜ்' என்ற பெயரில் இந்தியாவிற்கு திரும்ப செலுத்தியதைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் பணம் பெறப்பட்டதால் இந்தியாவில் பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டது.மொத்த திட்ட நிர்வாகமும் ஸ்டெர்லிங்கில் கணக்கிடப்பட்டது. இந்தியாவால் சரி செய்ய முடியாத ஆண்டு பரிவர்த்தனை வருவாய் மூலம் செய்ய முடியாதவைக் கடனாகக் காட்டப்பட்டு அதற்கு 40-60% வட்டி சுமத்தப்பட்டது.
முதல் உலகப்போருக்குப் பின் 100 மில்லியன் பவுண்டுகளை இந்தியாவிடமிருந்து பரிசாக பிரிட்டன் பரிசாக அபகரித்து இந்தியாவை. வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.சர்வதேச அளவிலான வாங்கும் திறனை இந்தியா பெறவேயில்லை. ‘கவுன்சில் பில்லால்' இந்தியாவிற்கு வரவேண்டிய தங்கத்தைத் தடுத்து நிறுத்தியது. அனைத்து உபரி ஏற்றுமதி மதிப்பையும் பிரிட்டனே அபகரித்துக் கொண்டது.
இந்தியாவில் பெருமளவில் பெறப்பட்ட மறைமுக வரி, உப்பு வரி, நில வருவாய் 90% விவசாயிகளை ஒட்டப் பிழிந்துப் பெறப்பட்டப் பணம் இந்தியாவிற்கு செலவிடப்படாமல் பிரிட்டனில் ஸ்டெர்லிங்கில் செலவிடப்பட்டது. வரியை அதிகரித்து வருவாயை அதிகரிக்கப்பட்டது.ஆனால் இந்தியாவில் பணச் சுற்றோட்டம் அதிகமாக வில்லை, வேலையின்மையே அதிகரித்தது.ஏற்றுமதி வருவாய் கிடைக்க வில்லை.
1929 க்கு முன்னர் முப்பதாண்டுகளாக இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி உபரியைக் கொண்டிருந்த போதிலும்., 1900 மற்றும் 1946க்கு இடையில் இந்தியாவின் வருமானத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேக்கம் ஏற்பட்டது.
1765 மற்றும் 1938 க்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் பிரிட்டன்
இந்தியாவிடமிருந்து, 9.2 டிரில்லியன் பவுண்டு (45 டிரில்லியன் டாலர்) இன்றைய ரூபாய் மதிப்பில் இது 3301 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம்.) அபகரித்துள்ளது.இது இந்தியாவின் ஏற்றுமதி உபரி வருவாய் மதிப்பில் 5% கூட்டு வட்டி சேர்த்துக் கணக்கிடப்பட்டது.
இவ்வாறு இந்தியாவிடமிருந்து இலவசமாகப் பெற்ற சரக்குகளே தொழிற் புரட்சியின் எரிபொருளானது. இன்னும் பலர், வளர்ந்த நாடுகள் அந்நாட்டு மக்களின் முன்முயற்சியாலும், கண்டுபிடிக்கும் ஆற்றலாலும் முன்னேற்றம் பெற்றதாக நம்புகின்றனர்.
பிரிட்டன் மட்டுமல்ல, இன்றைய மேம்பட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் இந்தியா மற்றும் பிற காலனிகளில் இருந்து அபகரிக்கப்பட்ட வளங்களின் மூலமே வளர்ச்சியடைந்துள்ளது. காலனியாதிக்கத்தால் இந்தியாவிலிருந்து அபகரிக்கப்பட்ட வளமனைத்தையும் உட்கிரகிக்க இயலாதவாறு பிரிட்டன் மிகவும் சிறியதாக இருந்தது. ஆகையால் பிரிட்டன் உலகின் மிகப்பெரிய மூலதன ஏற்றுமதியாளராக மாறியது, இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியது.
காலனியாதிக்கக் கொள்ளை வட அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை-ஐரோப்பிய மக்கள் குடியேறிய அனைத்து பகுதிகளிலும் நவீன முதலாளித்துவ உலகத்தை உருவாக்க உதவியது, முன்னேறிய முதலாளித்துவ உலகம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பகுதியை இழப்பீடாக வளரும் நாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.

No comments:
Post a Comment