Sunday, March 8, 2020

அமெரிக்க மேலாதிக்கத்தைப் புறக்கணிப்போம்


மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்த பாஜக  அரசு, டிரம்பின் இரு நாள் வருகைக்கு மட்டும் 100 கோடிக்கு மேல் செலவளித்துள்ளது. எளிய மக்களை அவமானப்படுத்தும் விதமாக கட்டப்பட்ட காணாமை சுவரில் தான் வளர்ச்சியின் மாதிரி, குஜராத் மாதிரி, என்று கூவிய மோடி அரசின் உண்மையான குஜராத் மாதிரி முகம் உலக அரங்கிற்கே  காணக் கிடைத்தது. டிரம்பின் இந்திய வருகையை புறக்கணித்து  நாடெங்கும் உள்ள ஜனநாயக அமைப்புகளும், மக்களும்  கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபிப்ரவரி 25 ல்  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் உலக நாடுகள் முழுமையாக அணு ஆயுதங்களைக் கைவிடவேண்டும், ஆயுதப்பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்பதற்கான  பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த வேளையில்; இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களைப் வாங்குவதற்கான ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய-அமெரிக்க உறவை இதுவரை இல்லாத அளவிற்கு வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில்  செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் மக்களை மையமாக வைத்தே  எட்டப்பட்டதாக  மோடி குறிப்பிடுவது பொய்யல்ல!. ஏனென்றால் அதே நாளில் பாஜக அரசு  மற்றும் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் இந்து அடிப்படைவாதிகள் மசூதியைக் கொளுத்தி அனுமன் கொடியை ஏற்றி, இஸ்லாமிய மக்கள்  மீதான இனப்படுகொலைகளைப்  பற்றவைத்துள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட இன்னுயிர்களை இழந்துள்ளோம். வலதுதீவிரவாதி டிரம்பும், இந்துத் தீவிரவாதி மோடியும் “இஸ்லாமியத் தீவிரவாதத்தை” வேரறுக்க உறுதியெடுத்துள்ளார்களாம்.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான  அமெரிக்காவின் நாற்கர ராணுவக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான பேச்சு வார்த்தையை டிரம்பும், மோடியும் இந்த சந்திப்பில் புதுப்பித்துள்ளனர்.  அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடாக இருந்த இந்தியா, ஆசியாவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் விதமாகவும்,  சீனாவைத் தனிமைப்படுத்திக் கட்டுபடுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட இந்த ராணுவக் கூட்டமைப்பில் இணைந்திருப்பது பெருத்த வெட்கக் கேடு. அமெரிக்காவுக்கு முழுவதுமாக அடிபணிந்துவிட்டது மோடி அரசு. நாட்டின் பொருளாதாரம்  நெருக்கடி நிலையில் உள்ள போதும் விவசாயம், தொழிற்துறை உற்பத்தியை கைவிட்டு,  ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தியைப் பெருக்குவதிலும், நாடு முழுவதும் ஆயுதக் கேந்திரங்களை உருவாக்குவதிலுமே பேரார்வத்துடன் செயல்பட்டு பாஜகஅரசு இந்தியாவை  இரண்டாவது இஸ்ரேலாக, இந்துத்துவ  இஸ்ரேலாக மாற்றியுள்ளது.

இந்தியாவுடனான  வர்த்தக ஒப்பந்தம்அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னரோ, அல்லது பிறகோ  மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 9வது பெரிய சரக்கு வர்த்தக பங்காளராக இந்தியா உள்ளது.சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளராக அமெரிக்கா உள்ளது.. இந்தியா அமெரிக்கா சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகம் 2018ல் 142.6 பில்லியன் டாலர்கள் என்ற அதிகபட்ச நிலையை எட்டியது. அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் 2019ல் 24 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டதால் அமெரிக்க அரசு, இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியது. வளரும் நாடுகளுக்குப் பொதுவாக அளிக்கப்படும் பொதுமைப்படுத்திய முன்னுரிமை முறைமையிலிருந்து (ஜி.எஸ்.பி.- Generalized System of Preferences) இந்தியாவை 2019 ஜீனில் விலக்கியது. இதனால் சுமார் 5.6 பில்லியன் டாலர் அளவிலான இந்திய வர்த்தகப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்ந்தது. இந்தியாவிலிருந்து வரும் எஃகு பொருட்களுக்கு இறக்குமதி வரியை 25 சதவீதமாகவும் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதமாகவும்  உயர்த்தியது. இதனால் இந்தியாவின் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. 12 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எஃகின் அளவு 46% குறைந்தது. வீட்டு உபகரணங்கள், மின் இயந்திரங்கள், தானியங்கி உதிரி பாகங்கள்,, இரும்பு ஆகியவற்றின் வர்த்தகமும் பெரிதும்பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கச் சந்தையில் போட்டியிடுவது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமானது.
இதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 28 வகையான பொருட்களுக்கு இந்தியா  2019 ஜூன் 16 ஆம் தேதியிலிருந்து கூடுதல் வரி விதித்தது இதைக் கண்டித்து உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டது அமெரிக்கா.
இந்தியாவிற்கு தேவையா, இல்லையா எனக் கருதாமல்  எதையாவது இந்தியாவின் தலையில் கட்டி, இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை சமன் செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு  குறியாய் உள்ளது. அதன்படி இந்தியாவிற்கு  பெருமளவு ஆயுதங்களை விற்றே இதை சமன் செய்ய  அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
 அமெரிக்காவின் பல்வேறு வர்த்தக நிபந்தனைகளை செயல்படுத்தினால் மட்டுமே  இந்தியா மீண்டும் பொதுமைப்படுத்திய முன்னுரிமை முறைமையைப் (ஜி.எஸ்.பி.)  பெறமுடியும் என அமெரிக்க அரசு பலக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக நிபந்தனைகள்:
இந்தியா தற்போது மேற்கொள்ளும் வர்த்தக அளவைக் காட்டிலும் கூடுதலாக 5 முதல் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்
அமெரிக்காவிடமிருந்து பால் பொருட்கள் மற்றும் கோழிப்பண்ணை பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்யவேண்டும்
அமெரிக்க வேளாண் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் பெறும் விதமாக அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும்  பாதாம், முந்திரி,ஆப்பிள், கோதுமை, சோயா பீன்ஸ், கொண்டைக் கடலை, சோளம், கடலை ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை நீக்கவேண்டும்.
இந்திய அரசு விலை நிர்ணயக் கொள்கையை கை விடவேண்டும், மருத்துவ உபகரணங்களின் விலையை நிறுவனங்களே நிர்ணயிக்க வேண்டும்.
அமெரிக்க மருத்துவக் கருவிகள் மீதான வரியைக் குறைக்க வேண்டும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், மின்னணு சாதனங்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.
 இதயத்துக்கான ஸ்டன்ட்கள் மற்றும் மாற்று மூட்டுகள் மீதான விலை கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்
அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு பெருலாபம் கிடைக்கும் விதமாக இந்தியாவில் மலிவு விலையில் பொதுவான மருந்துகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவேண்டும்.
ஊடகம், பல்தர வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு வரமபைத் தளர்த்தவேண்டும்.
அமெரிக்காவின் இணைய வர்த்தக நிறுவனங்கள் பெருலாபம் ஈட்டுமாறு
அவற்றின் மீதானக் கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும்.
மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்துமே இந்தியப் பொருளாதாரத்தின் தற்சார்பைக் காவு கொடுப்பவை. ஏற்கெனவே பொருளாதாரம் நெருக்கடி நிலையில் உள்ள போது இவற்றை செயல்படுத்தினால் அது இந்திய விவசாயிகளையும், தொழிற்துறையையும், மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சேவையையும் கடுமையாக பாதிக்கும், வேலையின்மையையே அதிகரிக்கும்.விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க போவதாக பொய் சொல் கொண்டே மோடி அரசு அதற்கு முற்றிலும் முரணான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்காவுடன் கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது மக்களை  பெரிதும்அச்சுறுத்துவதாக உள்ளது.
 இந்தியா தன் நட்பு நாடு எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா,உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இந்திய அரசு  விவசாயப் பொருட்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படிஎளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் பொது விநியோக முறை,விவசாயிகளுக்கு தரப்படும்  மானியம் இவை யாவும் தடையற்ற வர்த்தகத்தை பாதிக்கிறது என்று  அவற்றை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
டிரம்ப் இந்திய மக்களுக்கு மட்டும் எதிரானவர் அல்ல.உலகெங்கிலும் இனவெறி, மதவெறியைத் தூண்டி.வெறுப்பை விதைக்கும் வலதுதீவிரவாதத்தின் வெறுக்கத்தக்க முகமாகவே  டிரம்ப் காணப்படுகிறார்.வெனிசுலா, பொலிவிய நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின் மூலமாக பலப் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் வெனிசுலாவில் மட்டும் 2017-2018 வரை 40000 பேர் இறந்துள்ளனர். ஒபாமா ஆட்சியின் போது விலக்கப்பட்ட  கியூபாவின் மீதான ஹெல்ம்ஸ் புர்டன் சட்டத்தை   டிரம்பின் நிர்வாகத்தில் கடுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய டிரம்ப் ஈரானின் மீது  விதித்த பொருளாதாரத் தடையால் அந்நாட்டின் வேலை வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அரசு ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொன்று மேற்காசியாவில் போர் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது,சௌதி அரேபியாவிற்கு போர்க்கருவிகளை வழங்கி ஏமனில் மனித நேயமற்ற முறையில்  அம்மக்களை இனப்படுகொலை செய்யத் துணை போகிறது.பாலஸ்தீன நிலத்தில் சட்ட விரோத இஸ்ரேலிய  ஆக்கிரமிப்பிற்கு எல்லா விதத்திலும் டிரம்பின் அரசு உறுதுணையாக உள்ளது.ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீன மக்களுக்கான  உதவித்தொகையை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் இஸ்ரேலிய ஆதரவு செயல்பாடுகளால் பாலஸ்தீன மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாலஸ்தீனம், பொலிவியா, வெனிசுலா, கியூபா, ஈரான்  ஆகிய நாடுகளின் மீதான போரைத் தீவிரப்படுத்தியதால் அந்நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ் நிலையும் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
காலநிலை நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் விதமாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்க நாட்டை பொறுப்பற்ற முறையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றிய  டிரம்பின் அரசு உலக நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் எதிரானது ஆகையால் டிரம்பின் அமெரிக்க மேலாதிக்கத்தைப் புறக்கணிப்போம்.இவ்வாண்டின் நவம்பர் மாதம் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலுக்கான வாக்கு வங்கியைக் கைப்பற்றும் வகையில் தேர்தலுக்கு முன்னோ, பின்னோ மேற்கொள்ளவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்தவேண்டியது நம் அனைவரின் கடமை.இந்த வர்த்தக சூறையாடலிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் தற்சார்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமுன் காப்போம்.

Saturday, March 7, 2020

கியூபாவின் புரட்சிப் பெண்கள்(1)


கியூபப் புரட்சி என்றாலே நம் கண் முன் தோன்றுவது அர்ப்பணிப்பின் ஆளுருவாக உலக  இளைஞர்களின் எழுச்சி சின்னமாகத் திகழும் சே குவெராவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இறுதி வரை சிம்ம சொப்பனமாக இருந்த  ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களும் தான். புரட்சிப் பாதையில் தன்னைப் புதிய மனிதனாக செதுக்கிக் கொண்ட சே குவெராவை அறிந்தது போல் கியூபாவின் புதிய மனிதிகள் கியூபாவுக்கு வெளியே பெரும்பாலும் அறியப்படாமலே உள்ளனர்.கியூபப் புரட்சியில் முக்கியப் பங்கேற்ற அந்தப் புரட்சிப் பெண்களை,  புரட்சியில் தங்கள்  வாழ்வை இணைத்துக் கொண்ட கியூபாவின் வீராங்கனைகளை அறிந்து  கொள்வோம்.எழுச்சி மிக்க அவர்களிடமிருந்து புது உத்வேகம் பெறுவோம் வாருங்கள்.

புரட்சியாளர் சிலியா சஞ்செஸ்:
கியூபப் புரட்சியின் முதல் பெண் கொரில்லா என்று அறியப்பட்ட சிலியா சஞ்செஸ்
புரட்சியின் வெற்றிக்கும், புரட்சி அரசின் நிர்வாகத்திலும் பெரும் பங்காற்றியவர்.சிலியா, சேவின்  மிகச் சிறந்த நண்பர். சே தன் இறுதிப் பயணத்தின் போது தனது தொப்பியை சிலியாவிடமே நினைவாக  விட்டுச் சென்றார்.

புரட்சிக்கு முன் சிலியா:
சிலியா சஞ்செஸ் 1920ல்  மே 9 ஓரியண்டெ எனப்படும் கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெடியா லுனா எனும் கிராமத்தில் பிறந்தார் .  தாயார் அகாசியாவை தனது குழந்தை பருவத்திலேயே இழந்த அவர் ஆறாவது வயதிலே  நியூரோசிஸால் அவதிப்படத் தொடங்கினார். எட்டு குழந்தைகளில் ஒருவரான சிலியாவுக்கு நான்கு சகோதரிகள். அவரது தந்தை மானுவல் சஞ்செஸ் சில்வீரா
தேசப்பற்றும், சமூக அக்கறையும் மிக்க ஒரு மருத்துவர். மிகச் சிறந்த பண்பாளர். அவர் ஹவானாவில் அதிக பணம் சம்பாதிப்பதை விட  கிராமப்புறங்களில் சேவை செய்வதையே  விரும்பினார்.தனது வீட்டுக்கு வந்த எவருக்கும் பணம் இல்லாமல் உதவி செய்ததற்காக சமூகத்தில் நன்கு அறியப்பட்டு நேசிக்கப்பட்டவர்.காலனிய சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை நேரடியாகக் கண்டவர். சமூக நீதிக்காக போராட வேண்டியதன் அவசியத்தைத் தன் புதல்விகளுக்கு உணத்தியவர். அவரிடமிருந்தே சிலியா தனது ஆரம்ப அரசியல் கல்வியையும், சமூகசேவையில் ஈடுபடும் ஆர்வத்தையும் பெற்றார். சர்வாதிகாரம் மற்றும் அநீதி மீதான வெறுப்பு, மக்களிடம் மரியாதை செலுத்தும் பண்பையும் தந்தையிடமிருந்து பெற்றார்.
சிலியாவின் பதின்ம வயதில் தந்தை அவரை சியரோ மிஸ்ட்ரோவில் இருந்த கியூபாவின் உயர்ந்த மலையான  பிகொடர்கினோவிற்கு அழைத்துச் சென்றார், அதன் சிகரத்தில் கியூபாவின் புரட்சிக் கவிஞர் ஜொஸ் மார்த்தியின் சிலையை நிறுவினர். சிலியா தந்தையின் தார்மீக, தேசிய உணர்வையும் தனதாக்கிக்கொண்டார்.  சமூக சீர்திருத்தத்தையும்,ஊழலற்ற நிர்வாகத்தையும், முன் நிறுத்திய 1947ல் உருவான கியூப மக்கள் பாரம்பரியக் கட்சியை  அவரது குடும்பம் ஆதரித்தது.
 தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியை தனது தந்தையின் மருத்துவ சேவைக்கு உதவி செய்வதிலே கழித்தார். 12 வயதிலிருந்தே தன் தந்தைக்காக வேலை செய்யத் தொடங்கிய சிலியா பல்கலைக்கழகத்தில் சேரவில்லை.உயர்நிலைப்பள்ளிக் கல்விக்கு  பிறகு, பிடல் காஸ்ட்ரோவுடன் கியூப புரட்சியில் முழுமையாக ஈடுபடும் வரை சிலியா தனது தந்தையின் மருத்துவ சேவைக்கு தொடர்ந்து உதவினார். நோயாளிகள் கொடிய வறுமையால் துன்புறுவதை உணர்ந்தார்..1940ல் சிலியா தந்தையுடன் பிலனுக்குக் குடிபெயர்ந்தார்.

முன்பதிவு இல்லாமல் சிகிச்சையகம் வரும் நோயாளிகளை அவர்களின் உடல்நிலையறிந்து உடனடி சிகிச்சை பெறவேண்டியவர்களுக்கு  முன்னுரிமை அளித்து மற்றவர்களை அவர்களின் முறைக்கு  காக்க வைப்பது என்று அனைத்தையும் பொறுமையுடன்  முறைபடுத்தினார் சிலியா.நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களின் ரகசியத்தையும், இறைமையையும் பாதுகாத்தார். இப்பண்புகள் புரட்சி வேலையில் எளிய மக்களிடம் தொடர்பேற்படுத்தவும், புரட்சியின் ரகசியத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும் அவருக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது.
தந்தையும் மகளும் அந்தப் பகுதி மக்களின் பிரியத்திற்குரியவர்களாக இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சிலியா மூன்று அரசர்கள் திருவிழாவிற்கு ஏழை, தொழிலாள வர்க்கக் குழந்தைகளுக்கு பொம்மைகள் அளித்தார். அதற்காக மேரியின் சேவகர்கள் என்ற கத்தோலிக்க தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார். இது அவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு முழு சமூக வலைப்பின்னலைக் கட்டமைத்தது.அப்பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய பல முன்முயற்சிகளை மேற்கொண்டார்.தனது சேவையால் அவர் பெற்ற  பரந்துபட்ட தொடர்புகளின், வலையமைப்பு பின்னர் புரட்சிக்கான ஆதரவையும், நிதியையும் திரட்டவும்,புரட்சி படைகள் வெற்றி பெறுவதற்கான  ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

புரட்சியில் சிலியா:
1952 மார்ச்சில் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அமெரிக்காவின் கைப்பாவையான சர்வாதிகாரி ஃபுல்ஜெனிகோ பாடிஸ்டா இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த போது சிலியாவும் லட்சக்கணக்கான கியூபர்களைப் போல் பெருங்கோபம் கொண்டார். வரம்பற்ற அதிகாரத்தால் படிஸ்டா அந்தத் தீவையே ஊழலிலும், வன்முறையிலும் உழலச் செய்தார். கியூபாவின் பெரும் விடுதிகளிலும், சூதாட்ட அரங்கிலும் அமெரிக்க பெரும் செல்வந்தர்கள் விவசாயிகளின் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கித் துன்புறுத்தினர்.  மரியா ஓச்சோவா என்ற 10 வயது குழந்தை பாலியல் அடிமையாக்கிக் கொல்லப்பட்டதில்  சிலியா பெருங் கோபம் கொண்டார். ஆயுதப் போராட்டத்தின் மூலமே இந்த சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிய முடியும் என்றுணர்ந்தவராய்  கொரில்லாவாகி சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் செலியா ஃபிராங்க் பைஸுடன் இணைந்து பணியாற்றினார். ஃபிராங்க் பாஸுடன் இணைந்து புரட்சியின் போர்ப் படையை உருவாக்கினார். (ஃபிராங்க் பைஸ் கைது செய்யப்பட்டபோது அவரின் வேலைகளையும் சிலியா ஏற்றுக்கொண்டார்.)

மன்சானிலோவிலும், ஓரியண்டெ மாகாணத்திலும்  ஜூலை 26 இயக்கத்தின் நிறுவனராக சிலியா தலைமைப்  பொறுப்பேற்றார். ஜூலை 26 இயக்கத்தின் தலைமறைவுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார். போராட்டக் குழுவில், தன்னார்வலர்களையும் புதியவர்களை சேர்ப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும், தங்க வைப்பதற்கும் செலியா ஊக்குவிப்பு மையத்தை நிறுவினார். கெரில்லாக் குழுவின் முக்கிய  தூதராகவும் பணியாற்றினார். தன்னார்வலர்களை புரட்சியில் இணைத்தார். புரட்சியின் முக்கியத் தொடர்பாளராக இருந்தார்.

1953 ஜூலை 26 காஸ்ட்ரோவின் தலைமையிலான கொரில்லா படை படிஸ்டாவைக் கவிழ்க்க மேற்கொண்ட முதல் முயற்சியின் போது சாண்டியகோவில் மன்கடா படைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாடிஸ்டா படைகளால் தோற்கடிக்கப்பட்டு போராளிகள் சிறைவைக்கப்பட்டனர் 1955ல் விடுவிக்கப்பட்ட ஃபிடல் மெக்சிகோ சென்று  ஃபாடிஸ்டாவை வீழ்த்துவதற்கான போராட்டக் குழுவைக்
 கட்டமைத்தார்.சே குவேரவை சந்தித்து அவரையும்  இணைத்துக் கொண்டார்.  1956 நவ 25 அன்று மெக்ஸிகோவிலிருந்து 82 கொரில்லா போராளிகளும் நெருக்கியடித்துக் கொண்டு கிரான்மா என்ற சிறு படகில் கியூபாவிற்கு பயணத்தை மேற்கொண்டனர். கிரான்மா படகு கியூபாவின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியின் எந்த இடத்தில் கரையேற வேண்டும் என்பதைத். தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சிலியா ஏற்றார். போராளிகள் கரையேறிய பின் அவர்களைப் பாதுகாப்பாக சியரா மேஸ்ட்ரா  மலைகளுக்கு கொண்டு செல்லும்  பொறுப்பும் சிலியாவுக்குத் தரப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிலியா மேற்கொண்டார்,அவர் தனது குழுவிற்கு கடலோர பிராந்தியத்தின் வரைபடங்களை வழங்கியிருந்தார்.உணவு மற்றும் தேவையானப் பொருட்களையும் வழங்கினார், மேலும் கெரில்லாப் போராளிகளுக்கு உள்ளூர்  விவசாயிகளின் ஆதரவையும், உதவியும் பெறும் வகையில் ஒரு தொடர்பு வலையமைப்பை நிறுவினார். அவர்களில் பெரும்பாலோர் பாடிஸ்டாவுக்கு எதிரானவர்கள். ஆனால்  பாடிஸ்டா படையின் ஹெலிகாப்டர் மெக்ஸிகோவிலிருந்து கொரிலாக்கள் வருவதைக் கண்டறிந்தது, அந்த நெரிசலான படகு மூழ்கியதால் அவர்கள் லாரி, ஜீப்புடன் சிலியாவும், அவர்களைப் பாதுகாக்கக்கூடிய  கெரில்லாக் குழுவும் காத்திருந்த இடத்திலிருந்து பதினைந்து மைல் தூரத்தில் சதுப்பு நிலத்தில் இறங்க நேரிட்டது. பாடிஸ்டா இராணுவம்  அவர்கள் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. அவர்களுடன்  பல நாட்கள் போராடி 12 கொரில்லாக்கள் மட்டுமே சியரா மேஸ்ட்ரா மலைகளை அடைந்தனர்.மற்ற கொரில்லாக்கள் பயணத்தின் போதும், போராட்டத்தின் போதும் உயிரிழந்தனர்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் போராளிகளுடன் ஒரு சிக்கலான தகவல் தொடர்பு வலையை சிலியா ஏற்படுத்தியதால் அதன் மூலம் நகரங்கள் மற்றும் பாடிஸ்டாவின் வசம் உள்ள பகுதிகளிலிருந்து  மலைகளில் உள்ள கெரில்லாக்களுக்கு தகவல்களை திறம்பட அனுப்ப முடிந்தது.

சிலியா, சியரா மேஸ்ட்ரா மலைகளில்  இராணுவ தளத்தை நிறுவுவதற்கு மிகவும் உதவினார்.சியரா மேஸ்ட்ரா மலைகளில் ஆயுதமேந்திய முதல் பெண் கெரில்லாவாக சிலியா போற்றப்படுகிறார்.கியூப விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் போர்ப்படையை சிலியா உருவாக்கினார்,  கொரில்லாப் படைகளுக்கு  ஆயுதங்கள், உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கினார்.
.சிலியா. தன் அரசியல் அறிவால், புரட்சிகர வலிமையால் அமைப்பாக்கும் திறனால்,  தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் பிடலின் முழு நம்பிக்கைக்குரியவரானார்.

புரட்சிகர இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் போது சிலியா பெரும் ஆபத்துக்களைச் சந்தித்தார். போராட்டப் படையில் சிலியாவின் முக்கியத்துவத்தை  தெரிந்து கொண்ட பாடிஸ்டா அரசு அவரை பிடித்தால் இயக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று நம்பியது. அவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தது.1957ல் பாடிஸ்டா அரசால் தீவிரமாகத் தேடப்படும் பெண்ணாக சிலியா அறிவிக்கப்பட்டார்..சமவெளியில் வேலை செய்வது மிகவும் அபாயகரமாக ஆன போது சியரா மேஸ்ட்ரா மலைகளில் மற்ற கொரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டார்.

லா பிளாடாவில் தலைமைப் பொறுப்பில் இருந்த போதும் போராளிகளுக்கு தேவையான, உணவு, உடை, ஆயுதங்களை ஒருங்கமைத்து கண்காணித்தார், போரிலும் பங்கேற்றார்.1957 மே மாதம் உவெரொவில் தான் சிலியா முதன் முதலாக ஃபாடிஸ்டா படைகளுடன்  நேரடியாகப் போரிட்டார். சியராவில் பாடிஸ்டாவின் படைகள் நிறைய விவசாயிகளை குண்டு போட்டுக் கொன்றனர். கிராமங்களில் உள்ள வீடுகளை எரித்தனர்.சிலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள குடும்பங்களைப் பாதுகாப்பதும் அவராற்றிய பணிகளில் ஒன்றாக இருந்தது. கிழக்கு கியூபா மற்றும் சியரா மேஸ்ட்ராவின் ஞானத்தாயாக சிலியா அழைக்கப்பட்டார்.

சிலியாவின்  சட்டை பைகளும், கை மடிப்புகளும் எப்பொழுதுமே முக்கியமான ஆவணங்களால் நிரப்பப்பட்டிருந்தன. சிலியா சியாரோ மேஸ்ட்ராவில் இருந்த காலத்தில், புரட்சியின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்தார். ஆவணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தவராய் சிலியா, எல்லா காகிதங்களையும், அவை நாபாம் குண்டுகளால் சேதப்பட்டிருந்தாலும் கூட சேமித்தார். ஒவ்வொரு துண்டு சீட்டையும் பாதுகாத்தார், பட்டாம்பூச்சி பூக்களிலும் கூட சிறிய தந்திகளை ரகசியமாக பாதுகாத்திருந்தார்.
புரட்சியின் முக்கியமான ஆவணங்களை பாதுகாத்து வரலாற்று களஞ்சியமாக சேமித்தார். பாதுகாத்தார்.ஒரு போராளியிடமும், விவசாயியிடமும் பெறும் ஒவ்வொரு துண்டு காகிதமும் மிகவும் முக்கியமானது என்று கருதினார் சிலியா. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுக்குமான வரலாற்று ஆவணங்களை சேமித்திருந்தார். இந்தப் பணியை மிகுந்த விருப்பத்துடன் செய்தார்.அதைச் செய்வதற்கு அசாதாரணமான துணிச்சலும், திறமையும்  வேண்டும், சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால் கூட அது பாடிஸ்டா சர்வாதிகார சக்திகளிடம் சிக்கி புரட்சிக்கு முடிவு கட்டி கொரில்லாக்களுக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கும்.

புரட்சியின் கைதிகள் (பாடிஸ்டாவின் ஆட்கள்) வீட்டிற்கு கடிதம் எழுதியபோது, சிலியா தான் சில பெசோக்களை அவற்றுடன் சேர்த்து அனுப்பினார். கொரில்லாக்கள் ஒரு விவசாயியின் வீட்டில் சாப்பிட்டு புறப்பட்ட  புறப்பட்டபோது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு சில பெசோக்களைக் அமைதியாக விட்டு செல்வார்.
சிலியாவின் அறிவுகூர்மையும் மற்றும் நடைமுறை செயல்பாடுகளில்  நிபுணத்துவமும் புரட்சிக்கு வலிமை சேர்த்தது.

1958 ஆம் ஆண்டில், சியரா மேஸ்ட்ராவில், சிலியாவும், ஃபிடல் காஸ்ட்ரோவும் முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட மரியானா கிராஜல்ஸ் என்ற படைப்பிரிவை உருவாக்கினர். மரியானா கிராஜல்ஸ் போர்ப்படை ஆயுதமேந்திய பாடிஸ்டா வீரர்களை எதிர்த்து தீரத்துடன் போராடியது,
1958 டிசம்பர் 28 ல் சே குவேராவின் படைகள் சாண்டகிளாராவைக் கைப்பற்றின.
ஜனவரி 1, 1959ல் புரட்சி வெற்றி பெற்றது.
பாடிஸ்டா சில மணி நேரங்களுக்கு முன்பே தப்பி ஓடிவிட்டார். காஸ்ட்ரோவும் அவரது கிளர்ச்சிப் படையும் வெற்றிகரமாக ஹவானாவுக்குள் நுழைந்தன.

புரட்சிக்குப் பின்:
புரட்சியின் வெற்றிக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து தன் இறுதிக் காலம் வரை புரட்சி அரசின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார் சிலியா.  1959லிருந்து  1980 வரை அதிபர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் செயலாளராகவும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்தியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தேசிய சட்டமன்றத்திலும் இடம் பெற்றார். இறக்கும் வரை மாநில கவுன்சிலின் சேவைத் துறையில் பணியாற்றினார்
 சிலியா கியூபாவின் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் தனது முழு கவனத்தைத் செலுத்தினார். கியூப பொருளாதாரத்தையும், மேம்படுத்தும்  திட்டங்களை உருவாக்கினார். சிலியாவின் செயல்பாடுகள்  வரம்பிடமுடியாத படி விரிந்தன. கியூபர்களின் வாழ்வை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டார்.காஸ்ட்ரோ எதிர்ப்பு ஊடுருவலாளர்களின் குடும்பங்களுக்கு மறுகல்வி அளிப்பதற்கான எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தினார்(1963), கல்வியறிவு திட்டங்கள், அரசு பூங்காக்களை அமைத்தல், கோஹிபா சிகார் வர்த்தகத்தை மேம்படுத்துவது, கியூபர்களுக்கு ஐஸ்கிரிம் கிடைக்கச் செய்வதிலிருந்து  அனைத்தையும் தன் பொறுப்பில் நடைமுறை படுத்தினார், ஒரு புதிய, சோசலிச சமுதாயத்தை உருவாக்க சிலியா தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
கியூப புரட்சியின் அதிகாரப்பூர்வ காப்பகங்களை சிலியா கட்டமைத்தார்.
போர்களுக்கு முன்னும் பின்னும் கையால் எழுதப்பட்ட செய்திகள் உட்பட,
புரட்சியின் பல்வேறு ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் குறிப்புகளை
வருங்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வைத்தார். அதை 1964 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பாக்கினார்.அதில் கெரில்லா வீரர்களின் நேர்காணல்கள், கடிதங்கள், எழுத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முதன்மையான ஆதாரங்களின் இந்தத் தொகுப்பு கியூபப் புரட்சி பற்றிய நாட்டின் அதிகாரப்பூர்வ காப்பகமாக செயல்படுகிறது.. கியூப மக்களால், இந்தக் காப்பகம் எல் ஃபோண்டோ டி சிலியா என்று அழைக்கப்படுகிறது.
சிலியா புறநகர் ஹவானாவில் விரிவான லெனின் பார்க் வளாகத்தை வடிவமைக்க உதவியதுடன், அருங்காட்சியகங்களையும் வரலாற்று ஆர்வமுள்ள இடங்களை அமைக்கவும்  உதவினார். புரட்சி வரலாற்றின் பெரும்பகுதி வழக்கமாக எழுதப்படுபடும் நூல்களில் இல்லை என்பதை உணர்ந்து அவர், போராட்டத்தின் நினைவுகளைப் பாதுகாக்க ஒரு விரிவான வாய்வழி வரலாற்று திட்டத்தை ஏற்பாடு செய்தார். அவர் புரட்சிக்கு பிந்தைய கியூபாவின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக பதிவுசெய்ததில் முன்னோடியாக இருந்தார்.

1980 இல் இறக்கும் வரை அவர் தொடர்ந்து புரட்சிக்காகப் பணியாற்றினார். பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் மே திட்டங்களுக்கும், ஹவானாவில் உள்ள கொப்பெலியா ஐஸ்கிரீம் பார்லருக்கும் செலியா நன் கு பரிச்சயமானவர்.ஏழைப் பெண்களின் பிரச்சினைகளைக் கேட்க அவர் எப்போதும் நேரம்  ஒதுக்குவார். புரட்சியை ஆதரித்த லட்சக்கணக்கான கியூபர்களுக்கு புரட்சியின் மனித முகமாக சிலியா திகழ்ந்தார். குறிப்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் குறை நேர்ந்தாலோ, அல்லது அநீதி தீர்க்கப்படாமல் இருந்தபோதும். அவர்களை,  அரவணைத்து ஆதரவாக செயல்பட்டார். எண்ணற்ற தருணங்களில், ஒரு தனிநபருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, அல்லது ஒரு கிராமத்துக்கோ ஏற்பட்ட பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய சிவப்பு நாடா நடைமுறைகளை வெட்ட அவரால் முடிந்தது. காலங்கள் சென்றபோதும், புரட்சி நிர்வாகத்தை கெட்டிப்படாமல்
தன் பேரன்பினால் நெகிழ்வுடன் வைக்க சிலியாவால்  முடிந்தது. சியரா மேஸ்ட்ரா மலைகளில் போரிட்ட போது கொண்ட அதே லட்சியங்களோடும் கொள்கை உறுதியோடும் அவர் இறுதி வரை செயல்பட்டார்.

சிலியா எந்தப் பணியிலும் உயர்வு, தாழ்வு கருதவில்லை. இயல்பிலே கூச்ச சுபாவம் உள்ளவரான சிலியா தன்னை முன்னிறுத்தும் தன்மையற்றவராக இருந்தார்.தான் உயிருடன் உள்ளவரை தனிப்பட்ட கவனத்துக்கு உள்ளாகாதவாறு  பார்த்துக் கொண்டார்.தன்னை மெச்சிப் போற்ற பரப்பப்படும் புனைவுகளைக் குறைக்க தினந்தோறும் தான் முயற்சிப்பதாகவும், பாராட்டுவது தன்னை  சங்கடப்படுத்துவதாகவும்,  ஹைடி, டெடெ அகியோரே தம் கதாநாயகிகள் என்றும் தனது தோழி  நொரா பீட்டர்ஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இருப்பினும் கியூப மக்களால் என்றென்றும் அவர் புரட்சியின் கதா நாயகியாகப் போற்றப்படுகிறார்.அனைவரையும் சமமாகக் கருதிய சிலியாவிற்கு  தனது சக  தோழர்களின்  பணிகளைக் காட்டிலும் தனது பணிகள் எந்த விதத்திலும் தனிச்சிறப்பிற்கும், பாராட்டுக்கும் உரியதாகத்  தெரியவில்லை.சியரா மேஸ்டிரோவில் தான் போராடிய நாட்களே தன் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக சிலியா பின்னர் நினைவு கூர்கிறார்.

1978ல் சிலியா  நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டது  தெரியவந்தது.அதன்  பிறகு நொரா பீட்டர்ஸுக்கு எழுதிய கடிதத்தில் தான் புற்றுநோய் குறித்து கவலைப்படவில்லை என்றும் தன்னால் முடிந்ததனைத்தையும் கியூபாவுக்கு செய்ததால், கியூபாவில் தான் ஏற்படுத்திய தாக்கத்தால்  அமைதியடைந்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.
1980 ஜனவரி 11ல் நுரையீரல் புற்றுநோயினால் சிலியா  59 வயதில் இறந்த போது கியூப மக்கள் துயரத்தில் ஆழ்த்தினார். சிலியா சஞ்செஸ் மரணித்த பிறகு, பிடல் காஸ்ட்ரோ ஒரு மருத்துவமனையை செலியா சஞ்செஸுக்கு அர்ப்பணித்தார்,
“ஒரு கணம் கூட ஓய்வெடுக்காமல், ஒரு விவரத்தைக் கூட மறக்காமல் கடமைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒருவருக்கு, செலுத்த வேண்டிய சிறந்த அஞ்சலி இது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்; புரட்சிக்காக தனது உயிரைக் கொடுத்த ஒரு தோழருக்கு ஒருவர் கொடுக்கக்கூடிய மிக மனம் நிறைந்த, ஆழ்ந்த மற்றும் புரட்சிகர மரியாதை இது என்று நான் உண்மையாக நம்புகிறேன்.” என்றும் ஃபிடல் காஸ்ட்ரோ புகழஞ்சலி செலுத்தினார்.

கியூபப் புரட்சியின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும்.சிலியா சஞ்செஸின் நினைவுக் கல்லறை லெனின் பூங்கா வளாகத்தில் உள்ளது. மான்சாலிலோவிலும் சிலியாவின் நினைவரங்கம் உள்ளது.இன்று எண்ணற்ற மருத்துவமனைகளும் பள்ளிகளும் அவரது பெயரில் செயல்படுகின்றன. 1985, 1990ல், அவரது நினைவாக 5 சென்டாவோ தபால் தலைகள் வெளியிடப்பட்டன. 1990ல் அவரை நினைவுகூரும் விதமாக 1 பெசோ மற்றும் 5 பெசோ நினைவு நாணயங்களும் வெளியிடப்பட்டன .சிலியாவின் முகம் கியூப பெசோ பணத் தாள்களிலும் அச்சிடப்பட்டுள்ளது.
சிறந்த அமைப்பாக்கும் திறனோடும், வரலாற்றுப் பார்வையோடும் எப்பொழுதும் துடிப்புடன் முன் வரிசையில் செயல்படத் தயார்நிலையிலிருந்த சிலியாவின்  போராட்ட வாழ்வும், அரசியல் செயல்பாடுகளும்  என்றென்றும் நம்மை உத்வேகப்படுத்தி, புது நம்பிக்கையூட்டி  வழிகாட்டட்டும். அர்ப்பணிப்பும், சாவுக்கு அஞ்சா துணிவும், சமூக மாற்றத்தில் தீராத விருப்பமும் கொண்ட புரட்சியாளர் சிலியாவை நம் சொல்லிலும், செயலிலும் என்றென்றும் போற்றிடுவோம்.

(தொடரும்)

நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (5)


ஆசிரியர்: உத்சா பட் நாயக்

(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியரான உத்சா பட்நாயக்  இந்தியாவின் தலைசிறந்த மார்க்சியப் பொருளாதார அறிஞர்.)

தலைப்பு: அபகரிக்கப்பட்ட செல்வம்:

காலனியாதிக்கத்துக்கு முன் இந்தியா இயற்கை வளமும்,  செல்வமும் செறிந்த உற்பத்தி அதிகம் கொண்ட நாடாக இருந்தது. ஆனால் இந்தியாவின் இயற்கை வளமோ, செல்வ வளமோ இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவோ, இந்தியாவின் தொழிற் துறையை, விவசாயத்தை நவீனத் தொழில் நுட்பங்கள் மூலம் முன்னேற்றவோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக அவை காலனியாக்கத்தால் பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டு அதை வளர்ச்சியடைந்த நாடாக உயர்த்தவும்,  தொழிற்புரட்சிக்கான உந்து விசையாகவும், பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இந்தியாவிலோ உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்பட்டன. பெரும்பான்மையான  மக்கள் கொடிய வறுமைக்குத் தள்ளப்பட்டு, இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடாக பின்னேத் தள்ளப்பட்டது.பிரிட்டன் இந்தியாவிடமிருந்து எவ்வளவு செல்வ வளங்களை அபகரித்தது மற்றும்அதன் பொறியமைவு என்ன என்பது குறித்துத்  தன் ஆய்வுகளின் மூலம் பெறப்பட்டத் தரவுகளின் அடிப்படையில்  ஒரு  செறிந்த திறன் வாய்ந்த விரிவுரையைப் பேராசிரியர் உத்சா பட் நாயக் வழங்கினார்

200 ஆண்டுகளாக இந்தியாவை காலனியாதிக்கம் செய்த பிரிட்டன் ஏற்படுத்தியக் காயங்கள் இன்னும் வடுக்களாக நீடிக்கின்றன. இந்தியாவில் காலனியாதிக்க சுரண்டலால் ஏற்பட்ட செல்வ இழப்பு சரியாகக் கணக்கீடு செய்யப்படாமலே இருந்துவந்தது இந்தியாவிலிருந்து பிரிட்டன் அடித்தக் கொள்ளை குறித்து தாதாபாய் நௌரோஜி, ஆர்.சி.தத் ஆகியோர்  மேற்கொண்ட ஆய்வு அதை வெளிச்சப்படுத்திய போதும் அதை முழுமையாகவும் தெளிவாகவும்  விவரிக்கவில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பு அவர்களால் குறைத்தே மதிப்பீடு செய்யப்பட்டது.இது  குறித்து நீண்ட காலத்திற்கு  மறுபரிசீலனை செய்யப்படாமல் மீளாய்வுக்கு உட்படுத்தப்படாமலே இருந்தது.
 உத்சா பட் நாயக் அதை மீளாய்வுக்கு உட்படுத்தி  நீண்ட நெடிய ஆய்வின் மூலம் அதை முறையாகக் கணக்கிட்டு அதன் சரியான அளவையும், பொறியமைவையும் தெளிவுபடுத்தியுள்ளார். இறக்குமதி, ஏற்றுமதி குறித்த  ஐ நாவின்  இணையத் தரவுகளிலிருந்து  1900, 1928,1929 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி உபரி மதிப்பானது  பிரிட்டனால் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
1765 மற்றும் 1938 க்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் பிரிட்டன் இந்தியாவிடமிருந்து, 9.2 டிரில்லியன் பவுண்டு (45 டிரில்லியன் டாலர்) இன்றைய ரூபாய் மதிப்பில் இது 3301 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம்.) அபகரித்துள்ளது.இது இந்தியாவின் ஏற்றுமதி உபரி வருவாய் மதிப்பில் 5% கூட்டு வட்டி சேர்த்துக் கணக்கிடப்பட்டது.

மேற்குலகால் நாம் மீண்டும் மீண்டும் திறனற்றவர்கள் என்று சொல்லப்படுகிறோம். ஆனால் வேளாண்மையைப் பொறுத்தவரை காலநிலையே முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் குளிர் பிரதேசங்கள் அங்கே மே-செப் குறுகிய காலத்திற்குள் தான் பயிர் செய்யமுடியும், கால் நடைத் தீவனங்களை வளர்க்க முடியும். அங்கு வேளாண் உற்பத்தித் திறனும் குறைவு.ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் குறித்த தற்போதைய ஆவணங்களிலிருந்து குளிர்காலத்தில் அங்கு உணவுப் பற்றாக்குறையால் நர மாமிசம் உண்ணும் வழக்கம் இருந்ததை அறியலாம்.

இந்தியாவின்  காலநிலையின் படி இங்குக் குறைந்த பட்சம் இருபோகம் முதல் முப்போகம் வரை பயிர்  செய்யும் முறை இருந்தது. இங்குக் குளிர்காலத்தில் மேற்கு நாடுகளின் கோடைப் பயிர்களை  வளர்க்க முடிந்தது. உலகின் வெப்ப மண்டல, மிதவெப்ப மண்டல பிரதேசங்களில் தான்  வேளாண்மை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்தியாவிடமிருந்து பிரிட்டன் வர்த்தகம் செய்வதற்குவாசனைப் பொருட்கள் உந்துசக்தியாக இருந்தது. வர்த்தகம்  சாத்தியமில்லாத போது ராணுவப் படை மூலம் இந்தியா ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. 1600ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவுடன்  வர்த்தகம் செய்வதற்கான முற்றுரிமையைப் பெற்றது.

1765ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம்  வங்காளத்தின் வளமானப் பகுதிகளில் முதன் முதலாக  வரி வருவாய் பெறும் திவானி உரிமையைப் பெற்றது.அதற்கு முன்னர் வங்காளத்தில் நவாபால் போதுமான அளவுக்கு அதிக வரிகள் வசூலிக்கப்பட்ட போதும் கூட பிரிட்டிஷார் மேலும் வரியைக் கடுமையாக உயர்த்தி ஏழை விவசாயிகளிடம் பலவந்தமாக வரி வசூல் செய்தனர். 1765-1770 க்கு இடையில் மட்டும் வங்காளத்திலிருந்து பெற்ற வரி வருவாய் மூன்ற மடங்காக உயர்ந்தது.. இதனால் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1770 இல் பிரிட்டிஷாரால் வங்காளத்தில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் மட்டும் மூன்றில் ஒரு பங்கு மக்கள், 30 மில்லியன் மக்கள் தொகையில், 10 மில்லியன் பேர் இறந்ததாக ஆங்கிலேயரே மதிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி வரிவருவாயை . வெள்ளீயில் பெற்றது.பிறகு  வெள்ளி அல்லாமல் அந்தப் பகுதியில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் மூலம்  வரி வருவாயைப் பெற்றது.1770-1790 வரை நிலையான வரி வருவாய் திட்டத்தின் (permanent settlement) மூலம்  வரி  நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பெற்ற வருவாய் பிரிட்டனின் வருவாயை விட  மடங்கு அதிகமாய் இருந்தது.
பின்னர் ரயத்துவாரி வரி முறையின் படி விவசாயிகளிடம் நேரடியாக வரி வசூல் செய்யப்பட்டது.இம்முறையில் குடியானவருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஜமீன்தார் போல எந்தவொரு இடைத்தரகரும் இல்லை. ரயத்வாரி முறையிலும் பிரிட்டாசாரின்  பெரும் கோரிக்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷாரை எதிர்த்து ஜமீந்தார், தாலுக்தார் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இந்தப் பெரும் கிளர்ச்சி வர்த்தகத்தை மூன்று வருடங்கள் கடுமையாக பாதித்தது.

காலனிய வர்த்தகத்தின் இரண்டாம் கட்டமாக 1857ல்  கிழக்கிந்திய கம்பெனி  இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான முற்றுரிமையை இழந்தது.வர்த்தக முற்றுரிமை நீக்கப்பட்ட பின் பிரிட்டன்  இறக்குமதிகளை பதிலீடு செய்தது.இந்தியா, மற்றும் பெர்சியாவிடமிருந்து வரும் இறக்குமதி  மூடப்பட்டது. 1861ல் வரி வருவாய் 7 மடங்கு உயர்ந்தது.1860-1890 வரை 70 பில்லியன் ஸ்டெர்லிங்  வருவாயாகப் பெறப்பட்டது.
1770-1774 இந்தியாவில்  நெசவு செய்யப்பட்டத் துணிகளும், கைத்தறி ஆடைகளும்  பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை ஆனால் 1775-1813வரை  இந்தியாவிடமிருந்து பருத்தி நுகர்வுக்கு மட்டும் பிரிட்டன் தடை  விதிக்கவில்லை.இந்தியப் பொருட்களுக்கு 60-75% என அதிக சுங்கவரி விதிக்கப்பட்டது.பிரிட்டிஷ் சந்தை இந்தியப் பொருள்களுக்கு மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய சந்தை  பிரிட்டிஷ் பொருட்களுக்கு முற்றிலும் திறக்கப்பட்டது. நெய்யும் எந்திரம் தொழில்நுட்ப வளர்ச்சியடையும் வரை 74 வருடங்களாக பாதுகாப்புவாத நடவடிக்கைகளின் மூலம் இந்தியத் துணிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யாமல் பிரிட்டனின்  பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. 1774ல் அந்தத் தடை நீக்கப்பட்டது.இந்தியாவின், துணிச் சந்தையில் இந்தியத் துணிமணிகளை  பிரிட்டிஷ் துணிகள் பதிலீடு செய்தன.இதனால் பீஹாரில் தொழிற்துறை முற்றிலும்  நசிவடைந்தது. கொடியவறுமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.  பெரும் எண்ணிக்கையில் சேமப்பட்டாளம் உருவானது.

இந்தியாவிடமிருந்து  பிரிட்டன் அதிக அளவில் சரக்குகளை இறக்குமதி செய்தது.அவற்றில் பெரும்பகுதியை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரிட்டன் மறு ஏற்றுமதி செய்தது.கிழக்கிந்திய நிறுவனம் சரக்குகளை இந்தியாவிடமிருந்து இலவசமாகவே பெற்றது. அதாவது அதற்கு ஈடானத் தொகையை இந்தியாவிற்கு செலுத்தவில்லை. இந்தியாவிலிருந்து பொருட்கள்,  கடத்தப்பட்டதே ஒழிய அது ஒரு நியாயமான வர்த்தகம் அல்ல.இந்தியப் பொருட்களுக்கான  பணத்தை செலுத்துவதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றினார்கள் ஆனால் உண்மையில் அது ஒரு போதும் செலுத்தப்படவில்லை.

 பிரிட்டனுக்கு வேறு எந்த நாட்டுடனும்   பணம் செலுத்த வேண்டியக் கடப்பாடு இருக்கவில்லை எல்லாவற்றையும் வரி வருமானத்திலிருந்தே செலுத்தி வந்தது.இந்திய உற்பத்தியாளர் செலுத்த வேண்டிய வரியானது அதிக அளவில் உற்பத்திப் பொருட்களாகவேப் பெறப்பட்டது.இவ்வாறு  பொருட்களை அதிக அளவில்  பெறுவதன் மூலம் வருவாயை மும்மடங்காகப் பெருக்கியது.

காலனியாதிக்கமோ அதிலிருந்து சுரண்டப்பட்ட செல்வமோ இல்லாமல் நவீன முதலாளித்துவம் வளர்ந்திருக்க முடியாது. பிரிட்டனில் 1770 முதல் 1820 வரை தொழிற்துறையில் மாற்றம் ஏற்பட்ட போது, ஆரம்ப மதிப்பீடுகளின் படி கரிபீயத் தீவுகள் உட்பட காலனிகளிடமிருந்து பிரிட்டன் இலவசமாகப் பெற்ற வருவாய் பிரிட்டனின் மொத்த ஜிடிபியில் 6% இருந்தது.பிரிட்டனில் உள்நாட்டு சேமிப்புகள் மிகவும் குறைந்திருந்த போதும் அந்நாட்டின் மூலதன உருவாக்கத்தை இருமடங்காக்க முடிந்தது. பிரிட்டனின் உள் நாட்டு ஏற்றுமதியும் குறைந்திருந்தது.
 மூலதனத்தை ஏற்றுமதி செய்ய நாட்டின் நடப்பு கணக்கு மிகை மதிப்பைக் கொண்டிருக்கவேண்டும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிடமும், அமெரிக்காவிடம் அந்நிய செலவாணிப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது.அதே நேரத்தில் அந்தப் பகுதிகளிலெல்லாம் பெருமளவு முதலீடுகளையும் பிரிட்டனால் செய்ய முடிந்தது. இது எப்படி சாத்தியமானது.பிரிட்டிஷ் காலனி நாடுகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட அந்நிய செலவாணி மற்றும் தங்கத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறையை பிரிட்டன் நிவர்த்தி செய்துகொண்டது. எந்த இறையாண்மை உடைய நாட்டின் வருவாயிலிருந்து இப்படிப்பட்ட கடத்தலை செய்ய இயலாது.இந்தியாவில் உற்பத்தியான உபரி மதிப்பனைத்தும் பிரிட்டனால் சுரண்டப்பட்டது.ஈடேற்றம் அற்ற ஒருதலைப்பட்ச பரிமாற்றமே அவை செய்யப்பட்டது.

நாம் அறிவையும் மேற்கத்திய பல்கலைக்கழகங்களிலிருந்தே பெறும் நிலை உள்ளது.நாம் அரசியல் சுதந்திரம் அடைந்திருப்பினும் , அறிவளவில் இன்னும் காலனியாதிக்கத்தால் பீடிக்கப்பட்டே உள்ளோம். ஆதிக்கத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் போக்கின் படி வரலாறு ஆனது ஒரு தலை பட்சமாகவே பார்க்கப்படுகிறது.பிரிட்டானிய மார்க்சிஸ்டுகளான எரிக்ஸ் ஹாப்சன் செல்வ அபகரிப்பை பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.முன்னணியில் உள்ள பொருளாதார நிபுணர்கள் கூட உலக வர்த்தகத் தரவுகளில் பிரிட்டானிய வர்த்தகம் குறித்த தவறான மதிப்பீடுகளையே பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் தங்கள் நாட்டின் சொந்த வர்த்தகத்தைப் பற்றி தவறான மதிப்பீடுகளையே செய்துள்ளார்கள். ஃபிலிஸ் டீன் மற்றும் டபிள்யூ.ஏ. கோல் ஆகியோரால் 1688 முதல் 1959 வரையான  பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுதப்பட்ட நூலை1967 இல்  வெளியிட்டனர், இது பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்றைப் பற்றிக் கூறும் தரமிக்க நூலாகக் கருதப்படுகிறது ஆயினும்கூட அவர்கள் வர்த்தகத்தின் தவறான வரையறையைப் பயன்படுத்துகின்றனர், இது எந்தவொரு பெரிய பொருளாதார பாடநூலிலும் இல்லாத ஒரு வரையறையாகும். டீன் மற்றும் கோல் மறு ஏற்றுமதியை முற்றிலுமாக விட்டுவிட்டு, பிரிட்டனின் முழு வர்த்தகத்தையும் கணக்கிடாமல், ஒரு பகுதியை மட்டுமே கணக்கிடுகிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்தப்படும் இறக்குமதிகள் மற்றும் தங்கள் நாட்டுப் பொருட்களின் ஏற்றுமதியை மட்டுமே அதில் சேர்த்துள்ளனர். ஆனால் சரியான வரையறை என்பது மொத்த இறக்குமதிகள், மொத்த ஏற்றுமதிகள் மற்றும் மறு ஏற்றுமதி செய்யப்படும் இறக்குமதிகள் ஆகியவற்றையே உள்ளடக்கும். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கான டீன் மற்றும் கோலின் தரவுகளை உத்சா பட்நாயக் மறு ஆய்வு செய்தார். அதன் படி 1800 ஆம் ஆண்டளவில் உண்மையான வர்த்தகம்  82 மில்லியனாக இருந்தது, ஆனால் டீன் மற்றும் கோல் அவர்களின் கணக்கின் படி அது  51 மில்லியன் மட்டுமே. அப்போது பிரிட்டனின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் ‘ஜிடிபி’-யில் வர்த்தகத்தின் பங்கு அவர்கள் குறிப்பிடுவது போல் 34 சதவீதமாக இல்லை. 56 சதவீதமாக இருந்தது. பிரிட்டன் மறு ஏற்றுமதி மூலம் மற்ற நாடுகளிடமிருந்துப் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளியையும் பெற்றதை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. இவ்வாறு காலனிய வர்த்தகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.

வள அபகரிப்பின் பொறியமைவு:

இந்தியாவிடமிருந்து வளங்களை அபகரிப்பதற்கான ஒரு திறன் மிக்க பொறியமைவை பிரிட்டன் உருவாக்கியது.இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பொருட்களை மறு ஏற்றுமதி செய்வதை பிரிட்டன்  அதிகரித்தது.இந்தியா, பிரிட்டனுடன் மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. மற்ற நாடுகளுடன் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.

1765 முதல் இங்கிலாந்து ராணி இந்தியாவைக் கையகப்படுத்திய வரை, பிரிட்டிஷ் இந்திய நிறுவனம், விவசாயிகளிடமிருந்து ஏற்றுமதி பொருட்களை வாங்குவதற்கு நிகர வரி வசூலில் மூன்றில் ஒரு பங்கைப் பயன்படுத்தியது. அசாதாரணமான முறையில் வர்த்தகத்தை வரிகளுடன் இணைக்கும் இந்தத் தந்திரமான, நியாயமற்ற முறையை பிரிட்டன் பயன்படுத்தியது.இந்தியர்கள்  ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான  அந்நிய செலாவணி மற்றும் தங்கம் ஒரு போதும் இந்தியாவிற்குத் தரப்படவில்லை அதற்கு பதிலாக.அவர்களுக்கு செலுத்த வேண்டிய ரூபாய் இந்திய பட்ஜெட்டில் இருந்தே ,அதாவது இந்தியர்களின் வரிவருவாயிலிருந்தே செலுத்தப்பட்டது’ - இது எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிலும் காண முடியாத ஒன்று. இந்திய மத்திய அரசின் பட்ஜெட்டில் இவ்வாறு 26-36% வரை அபகரிக்கப்பட்டது. இந்தியாவிற்கு தரவேண்டிய மிகப்பெரிய சர்வதேச ஏற்றுமதி வருவாயைப் பெற்றிருந்தால் இந்தியா மிகவும் மேம்பட்ட ஒரு வளர்ச்சி நிலையை அடைந்திருக்கும்.

காலனியாதிக்க காலகட்டத்தில், இந்தியாவின் கணிசமான அந்நிய செலாவணி வருவாய் நேராக லண்டனுக்குச் சென்றது. இதனால் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து நவீனமய  பாதையில் இறங்குவதற்கான இந்திய நாட்டின் திறனை கடுமையாக பாதித்தது.

இந்திய உற்பத்தியாளர்களின் சொந்த வரியிலிருந்து பெரும்பகுதி ஏற்றுமதி பொருட்களாக மாற்றப்பட்டது, பிரிட்டன் இந்தியாவிலிருந்து வரும் ஏற்றுமதிப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவேப் பெற்றது. இங்கிலாந்து ராணி பொறுப்பேற்ற பின்னர் வந்த பொறிமுறையானது பரிமாற்ற பில்களைப் பயன்படுத்தி இம்முறையைத் தொடர்ந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தப் பொருட்களை   ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பாவிற்கு மறு ஏற்றுமதி செய்தது அதற்கு ஈடேதும் இந்தியாவிற்கு கொடுக்கவில்லை.

கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆளுகையில் இருந்ததைப் போலவே அரசியின் ஆளுகையிலும் இந்திய பட்ஜெட் வருவாயின் மூன்றில் ஒரு பங்கு ' ‘வெளி நாட்டு செலவீனம்' என்ற பெயரில் ஒதுக்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டு இறக்குமதியாளர்கள்  இந்தியாவிலிருந்து மறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலையை தங்கத்திலோ, ஸ்டெர்லிங்கிலோ லண்டனில் உள்ள இந்திய அரசிற்கான செயலாளர் கணக்குக்கு வரவு வைக்குமாறு பிரிட்டன்  அவர்களை வலியுறுத்தியது. இதனால் அந்த வருவாயை இந்தியா பெறவில்லை. அதற்கு பதிலாக இந்த இறக்குமதிக்கான ரூபாய் மதிப்பில் ‘கவுன்சில் பில்' என்ற பெயரில் ரசீதுகள் செயலாளரால் வெளியிடப்பட்டது. அதற்கான ரூபாய் தொகை இந்திய பட்ஜெட்டின் ‘வெளி நாட்டு செலவீனங்கள் என்ற பகுதியிலிருந்து கொடுக்கப்பட்டது.
இவ்வாறு இந்தியாவுக்கு வருவாய் கிடைக்காத வண்ணம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகமும், வாங்கும் சக்தியும் பிரிட்டனின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்தது.ஸ்டெர்லிங்கின் மதிப்பு தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூபாயின் மதிப்பு தங்கத்தின் அடிப்படையாக இல்லாமல் ஸ்டெர்லிங்கின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. ‘கவுன்சில் பில்லின்' மூலம் ரூபாய் குறைத்தே மதிப்பிடப்பட்டது. இந்திய பட்ஜெட்டில் 32-35%  வெளி நாட்டு செலவு என ‘கவுன்சில் பில்லுக்காக' ஒதுக்கப்பட்டது. பிரிட்டனுக்கான போர் செலவீனங்களும் இந்திய பட்ஜெட்டிலிருந்தேப் பெறப்பட்டது.

தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் பட் ஆகியோர் ‘கவுன்சில் பில்' பற்றி குறிப்பிடவேயில்லை. உலக அளவில் இந்தியா  இரண்டாவது பெரிய  ஏற்றுமதியாளராக வர்த்தக உபரியைக் கொண்டிருந்த போதிலும் கூடகாலனிய ஏற்றுமதியின் மூலம் ஒரு ரூபாயைக் கூட இந்தியா பெறவேயில்லை.
ஜான் மேனார்ட் கீனஸ் இந்திய நாணய மற்றும் நிதி அமைப்பு குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளார்.இந்தியா தங்கத்திற்கும், நிலத்திற்கும் முன்னுரிமை தரும் நாடு என்று குறிப்பிடுகிறார். ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த சரக்குகளை  மறு ஏற்றுமதி செய்ததின் மூலம் பிரிட்டன் பெற்ற வருவாய் குறித்து  கீனஸ்  ஒன்றுமே குறிப்பிடவில்லை.

 ‘ஹோம் சார்ஜ்'  என்ற பெயரில் இந்தியாவிற்கு திரும்ப செலுத்தியதைக் காட்டிலும்  இந்தியாவிலிருந்து அதிக அளவில் பணம் பெறப்பட்டதால் இந்தியாவில் பணப்புழக்க நெருக்கடி  ஏற்பட்டது.மொத்த திட்ட நிர்வாகமும் ஸ்டெர்லிங்கில் கணக்கிடப்பட்டது. இந்தியாவால் சரி செய்ய முடியாத ஆண்டு பரிவர்த்தனை வருவாய் மூலம் செய்ய முடியாதவைக் கடனாகக் காட்டப்பட்டு அதற்கு 40-60% வட்டி சுமத்தப்பட்டது.
முதல் உலகப்போருக்குப் பின் 100 மில்லியன் பவுண்டுகளை இந்தியாவிடமிருந்து பரிசாக பிரிட்டன் பரிசாக அபகரித்து இந்தியாவை. வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.சர்வதேச அளவிலான வாங்கும் திறனை இந்தியா பெறவேயில்லை. ‘கவுன்சில் பில்லால்'  இந்தியாவிற்கு வரவேண்டிய தங்கத்தைத் தடுத்து நிறுத்தியது. அனைத்து உபரி ஏற்றுமதி மதிப்பையும் பிரிட்டனே அபகரித்துக் கொண்டது.

இந்தியாவில் பெருமளவில் பெறப்பட்ட மறைமுக வரி, உப்பு வரி, நில வருவாய் 90% விவசாயிகளை ஒட்டப் பிழிந்துப் பெறப்பட்டப் பணம் இந்தியாவிற்கு செலவிடப்படாமல் பிரிட்டனில் ஸ்டெர்லிங்கில் செலவிடப்பட்டது. வரியை அதிகரித்து  வருவாயை அதிகரிக்கப்பட்டது.ஆனால் இந்தியாவில் பணச் சுற்றோட்டம் அதிகமாக வில்லை, வேலையின்மையே அதிகரித்தது.ஏற்றுமதி வருவாய் கிடைக்க வில்லை.

1929 க்கு முன்னர் முப்பதாண்டுகளாக இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி உபரியைக்  கொண்டிருந்த போதிலும்., 1900 மற்றும் 1946க்கு இடையில் இந்தியாவின் வருமானத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேக்கம் ஏற்பட்டது.
1765 மற்றும் 1938 க்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் பிரிட்டன்

 இந்தியாவிடமிருந்து, 9.2 டிரில்லியன் பவுண்டு (45 டிரில்லியன் டாலர்) இன்றைய ரூபாய் மதிப்பில் இது 3301 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம்.) அபகரித்துள்ளது.இது இந்தியாவின் ஏற்றுமதி உபரி வருவாய் மதிப்பில் 5% கூட்டு வட்டி சேர்த்துக் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு இந்தியாவிடமிருந்து இலவசமாகப் பெற்ற சரக்குகளே தொழிற் புரட்சியின் எரிபொருளானது. இன்னும் பலர், வளர்ந்த நாடுகள் அந்நாட்டு மக்களின் முன்முயற்சியாலும், கண்டுபிடிக்கும் ஆற்றலாலும் முன்னேற்றம் பெற்றதாக நம்புகின்றனர்.

பிரிட்டன் மட்டுமல்ல, இன்றைய மேம்பட்ட முதலாளித்துவ உலகம் முழுவதும் இந்தியா மற்றும் பிற காலனிகளில் இருந்து அபகரிக்கப்பட்ட வளங்களின் மூலமே வளர்ச்சியடைந்துள்ளது. காலனியாதிக்கத்தால் இந்தியாவிலிருந்து அபகரிக்கப்பட்ட வளமனைத்தையும் உட்கிரகிக்க இயலாதவாறு பிரிட்டன் மிகவும் சிறியதாக இருந்தது. ஆகையால் பிரிட்டன் உலகின் மிகப்பெரிய மூலதன ஏற்றுமதியாளராக மாறியது, இது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியது.
காலனியாதிக்கக் கொள்ளை வட அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை-ஐரோப்பிய மக்கள் குடியேறிய அனைத்து பகுதிகளிலும் நவீன முதலாளித்துவ உலகத்தை உருவாக்க உதவியது, முன்னேறிய முதலாளித்துவ உலகம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பகுதியை இழப்பீடாக வளரும் நாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.

உலகின் மிகப்பெரியக் கொள்ளை நோய்


கொரனா வைரஸால் பரவியுள்ள கொவிட்-19  மிகவும் சமீபத்தில் வந்த ஒரு கொள்ளை நோய் தான், சரியான மருத்துவ நடைமுறைகளைக் கடைபிடித்தால் ஒரு சில மாதங்களில் இதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் கொரனா வைரஸின் கொவிட்-19ஐ விட மோசமான ஒரு கொள்ளை நோயால் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் அந்த நோயால் தாக்குண்டது  குறித்து எந்த விழிப்பும் இல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. வருந்துவதோடு நின்று விட்டால் அதனால் ஏற்படும் பேரழிவில்  அழிந்துவிடுவோம் இல்லையா, எனவே நோய் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதி வேகத்தில் சிகிச்சை முறைகளை நாம் பரப்ப வேண்டும். மக்களிடம் மருந்தைக் கொண்டுசேர்க்க வேண்டும்.உலகின் பெருமளவு மக்கள் அடிப்படை உரிமைகள் இல்லாமல் வறுமை, பட்டினி, ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதிலிருந்து   காலநிலை நெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமான முதலாளித்துவம் என்ற அந்த நோய் தான் இங்கே அறிவியல் பார்வை இல்லாமல் குருட்டுத்தனமாகப்  போற்றி வணங்கப்படுகிறது.

 கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து கூட நம்மைக் காத்துக் கொள்ள முடியும் போது, கண்ணை உறுத்தும் அளவிற்கு பிரமாண்டமாய் வளர்ந்துள்ள முதலாளித்துவத்திடமிருந்து ஏன் நம்மைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
தெரிந்தக் கொள்ளையனை விட மர்மமானக் கொள்ளையனால் அதிக ஆபத்து என்பதை விளங்கச் செய்ய பெரிய உதாரணம் தேவையில்லை. சில மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் தங்கள் தொழிலையும் வறுமானத்தையும் தற்காத்துக் கொள்ள எப்படி நோயை முற்றிலும் குணமாக்காமல் நோயை  நீடிக்கவைக்கவே செயல்படுகிறார்களோ அது போலத் தான் முதலாளித்துவமும் தன் இருப்பை நிலைப்பேருடையதாக்கிக் கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. ஒரு பொய்யான நண்பன் எதிரியை விடவும் ஆபத்தானவன் தானே..அப்படித் தான் முதலாளித்துவமும் எதிரியாக இருந்தும் 24/7  நட்பிற்குரிய எசமானாய் வேடம் தரிக்கிறது.  மக்கள் அறியா வண்ணம் அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறது .தான் ஒரு கொள்ளை நோய், பரப்பும் ஒட்டுண்ணி  என்று மக்கள் அறியாவண்ணம் பார்த்துக்கொள்கிறது. சமத்துவ வேடத்தால் ஏற்றத்தாழ்வுகளை மறைக்கிறது. தன்னால் மட்டுமே இம்மக்களையும், இவ்வுலகத்தையும் பெருந்தன்மையுடன் கட்டிக் காக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்கிறது.

உயிரிகளின் இரத்தத்தை அட்டை எப்படி.வலியில்லாமல் உறிஞ்சுகிறதோ அப்படித்தான் ஒட்டுண்ணியான முதலாளித்துவமும் வலியில்லாமல் மக்களின் உழைப்பை அவர்களுக்குத் தெரியாமல் உறிஞ்ச நினைக்கிறது, ஆனால் எல்லா நேரத்திலும் அது முடிவதில்லை, பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளால் உழைக்கும் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல்  துயரம் தாங்காமல் குற்றுயிராய் போகிறார்கள்.பொறுக்கமுடியாமல் தங்களின் எதிர்ப்புக் குரலை உயர்த்துகிறார்கள். முதலாளித்துவம் தன்  நட்பு முகமூடியைக் கிழித்தெறிந்துத்  தன் பாசிச முகத்தைக் காட்டுகிறது. இன்முகம் கொடுமுகமாகிறது. கரும்புக் கரம், இரும்புக் கரமாகி பாசிச  சாட்டையைச் சொடுக்குகிறது.பொருளாதார நெருக்கடிகளாலே இரும்புக் கரம் ஓங்குகிறது.பொருளாதார நெருக்கடியின் போது எதிர்ப்பை ஒடுக்கி மக்களை அழித்து முதலாளித்துவ அரசியலமைப்பைக் காத்துக் கொள்ளும் தற்காப்புக்கலை தான் பாசிசமாகிறது.

 இந்நோயைப்  பலர் கண்டு கொண்ட போதிலும் அதன் பொறியமைவை, அதன் இயங்குமுறையைப் பற்றி முழுமையாக தெளிந்தறிந்து அதற்குத் தீர்வு தரும் சிகிச்சைமுறையைக் கண்டறிவது சிக்கலாகவே இருந்தது, மார்க்ஸ் என்னும் மாமருத்துவரே அந்நோயை முழுமையாகப் பகுத்தாய்ந்தார். அதற்கு சரியான சிகிச்சை முறையையும், மருந்தையும் பரிந்துரைத்தார்.அதைக் கண்டறிந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆன போதும் அது பெரும்பான்மையானோர் அறிந்திராத வண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. நோயாளி நோயின் தாக்கத்தை உணராவிட்டால்  சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். நோயின் தாக்கத்தை உணர்ந்தாலும் அது என்ன நோய் என சரியாகக் கண்டறியாவிட்டால்  தவறான சிகிச்சை முறையால் பாதிப்பு ஏற்படுவதுடன். நோயின் தீவிரமும் அதிகரிக்கும். அப்படித் தான்  இங்கு பெரும்பாலானோர் இந்த முதலாளித்துவ ஒட்டுண்ணியால் தான் தாங்கள் நோயுற்றுள்ளோம் என்பதை  உணரவில்லை.அப்படியே  உணர்ந்திருந்தாலும்  அதற்கான சிகிச்சை முறையும், மருந்தும்  மர்மமாக்கப்பட்டதால்  அவர்களின் பாதிப்பு தொடர்கதையாகியுள்ளது.
உழைக்கும் மக்களுக்காகப்  பரிந்துரைக்கப்பட்ட அம்மருந்து அவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் தடுக்கப்படுவதால் தான் கொள்ளை நோயின் தாக்கமும்,  தீவிரமும் அதிகரிக்கிறதே ஒழியக் கொள்ளை நோய் குறைந்தபாடில்லை.

இந்தியாவில் அந்த முதலாளித்துவ ஒட்டுண்ணி பிராமணிய ஒட்டுண்ணியுடன் இரண்டறக் கலந்து கலப்பினமாக அவதாரம் எடுத்தது. இரண்டின் கொடுந்தன்மையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததால் கலப்பின ஒட்டுண்ணியின் கொடுந்தன்மை அதிதீவிரமானது.இந்தக் கலப்பின ஒட்டுண்ணியை முறியடிப்பதற்கும் அதன் பாஸிஸக் கொள்ளை நோயிடமிருந்து நிரந்தரமாக வெற்றி பெறுவதற்கும் மார்க்ஸ் பரிந்துரைக்கும் அருமருந்தே தீர்வாகும்.தடைகளைக் கடப்போம்.அம்மருந்தை மக்களிடம் சேர்ப்போம்.

பாஸிஸத்தின் பொருளாதார அடிப்படை


முதலாளித்துவம் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் பாஸிஸத்தால் பாகாக்கப்படுகிறது.பாஸிஸம் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து பாதுகாக்கும் ஆயுதமாகிறது. இதை அனைவரும் புரிந்துகொண்டால் அதே ஆயுதத்தை முதலாளித்துவத்திற்கு எதிராகத் திருப்பி அதை முறியடிக்க முடியும்.முதலாளித்துவம் அதன் வளர்ச்சி நிலையில் இன்று நவீன தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

நவீன தாராளமயத்தில் பில்லியனர்கள் எனப்படும் பெரும்பணக்காரர்களுக்கு சாதகமான முறையில் உலகின் பொருளாதாரமும், அரசின் அதிகாரங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆளுகையில் அடக்கி ஆளப்படுகிறது. நிதி மூலதனங்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஒன்றாகி  சர்வதேச நிதி மூலதனமாகி முழு முற்றுரிமையைப் பெற்றுள்ளது. இதனால் தேசங்களின் இறையாண்மை காவு கொடுக்கப்படுகிறது. அரசுகள் அதிகாரமற்ற கைப்பாவைகளாகின்றனர். 
தேசங்களின் இறையாண்மையே முற்றிலும் பறிக்கப்படும் போது மாநிலங்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம்.. கூட்டாட்சித் தத்துவம் கொலை செய்யப்பட்டு மாநிலங்கள் முற்றிலும்  அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

சர்வதேச நிதி நிறுவனங்கள் தேசஅரசுகளின் மீது பல்வேறுக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அதன்படி அரசு நேரடியாக முதலீடு செய்யக் கூடாது, சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு, சிறு உற்பத்தியாளர்களுக்குத் தரப்படும் மானியங்களைக் குறைக்க வேண்டும். அரசின் விலை நிர்ணயக் கொள்கையை நிறுத்தவேண்டும். அனைத்துப்  பொருளாதார நடவடிக்கைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் பணக்காரர்களுக்கான வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவற்றை அதிகப்படுத்தக் கூடாது. அரசு மொத்த ஜிடிபியில் 3% க்கு மேல் கடன் வாங்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.இவற்றை மீறினால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு  ஆட்சிக் கவிழ்க்கப்படுகிறது.இப்படித் தான் வெனிசுலாவிலும், பொலிவியாவிலும் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது. ஆளும் அரசுகள் சர்வதேச நிதி நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதால் மக்களுக்கான அடிப்படை செலவீனங்களைக் குறைக்கின்றன. முதலாளித்துவ அரசுகள் எளிய மக்களையே பெருமளவில் பாதிக்கும் மறைமுக வரியையே அதிகப்படுத்துகின்றன.
இதனால் அன்றாடத் தேவைகள் அடிப்படை வசதிகள், கூடக் கிடைக்கப் பெறாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு 3%க்கும் மேல் கடன் வாங்கினால் அது தனியார் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பறித்துவிடுமாம், இவ்வாறு நவீன தாராளமயத்தின் கொள்கைகள் அரசாங்கத்திற்கான மலிவுக்கடனைத் தடுத்து பெருமுதலாளிகள் மட்டுமே மலிவுக்கடன் பெறுமாறு பார்த்துக் கொள்கிறது. பெருமுதலாளிகள் தன் சொந்தப் பணத்தை வைத்து மட்டும்  தொழில் செய்வதில்லை, அவர்கள் மக்களிடமிருந்து நிதித் திரட்டும்  வங்கிகளிடருந்து பெருமளவில் கடன் பெற்றே எந்தத் தொழிலையும் மேற்கொள்கின்றனர். அரசாங்கங்கள் கடன் இல்லாமல் வருவாயைப் பெறுவதற்காக அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.ஒரு தேசஅரசின் கடன் அதிகமானால் பன்னாட்டுத் தர நிறுவனங்கள்,  அந்நாட்டின் சந்தைக்கானத் தர மதிப்பீட்டைக் குறைத்துவிடும். தரமதிப்பீடு குறைந்தால் அந்நாட்டின் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் தன் பங்குகளை விற்று அந்நாட்டின் சந்தையிலிருந்து வெளியேறி விடுவார்கள். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்.

நவீனத் தாராளமயம் பணக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவன் மூலமே அனைத்து பொருளியல் நெருக்கடிகளையும் சரிசெய்யமுடியும் என்கிறது.ஆனால் ஒவ்வொரு பொருளியல் நெருக்கடியும் அது பொய் என்பதையே மெய்ப்பிக்கிறது.

இந்த நவீனதாராளமயக் கொள்கைகளைக் கடைபிடிப்பதால் தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் தேசங்களின் பொருளாதாரத் தற்சார்பு அழிகிறது. நாட்டின் உள் நாட்டுத் தொழில்களும், விவசாயமும் நசிவடைகின்றன, வேலை வாய்ப்பின்மை அதன் உச்ச நிலையை அடைகிறது. நாட்டில் பொருளாதாரச் சமமின்மை அதீதமாகிறது. மூலதனத்தின் இலாபவீதத்திற்கும், கூலி வீதத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகமாவதால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கூலி குறைவதாலும், வேலையின்மையாலும் மக்களின் நுகர்வும் குறைந்துவிடுகிறது. இதனால் அதீதமாக உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் விற்கப்படாமல் தேங்குகிறது.இதைத் தற்காலிகமாக சரிசெய்ய கூலி உயர்த்தப்படலாம். ஆனால் லாபத்தின் பங்கு அணுவளவு குறைவதையும் முதலாளித்துவம் விரும்பாதாகையால் மக்களே மீண்டும் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுவர்.

பொருளாதார நெருக்கடியால் மக்களின் துயரமும், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கிறது. பொருளாதார நெருக்கடியின் போது அரசின் ஆளும் வர்க்கம் ஜனநாயக முறையில் தங்கள் அதிகாரங்களைத் தக்கவைக்க இயலாதாகையால், தங்கள் அரசியல் அதிகாரத்தை நீடிக்கவைக்க அந்தந்த நாடுகளில் உள்ள பிற்போக்கு சக்திகளுடன் கை கோர்க்கிறார்கள். இந்தியாவில் நவீனதாராளமயம் இந்துத்துவம் எனப்படும் பிராமணியத்துடன் கைகோர்த்துள்ளது. முதலாளித்துவ அரசுகளின் ஆளும் வர்க்கம் தாங்கள் தான் மக்களின் உண்மையான எதிரி என்பதை மறைத்து, மத, இன, மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாடுகளைத் தூண்டிவிட்டு வேற்று மதத்தை, இனத்தை, மொழியைச் சார்ந்த எளிய மக்களை எதிரிகளாக்குகின்றனர்.அவர்களுக்கெதிரான வெறுப்பை, வன்முறையை விதைக்கின்றனர். அதிகாரத்தை மையத்தில் குவித்து  பொருளாதார நெருக்கடிக்கெதிரான, அரசிற்கெதிரான மக்கள் போராட்டங்களை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குகின்றனர்.இவ்வாறு முதலாளித்துவத்தின் கொடுமுகமாகிறது பாஸிஸம். தற்பொழுது இந்தியாவில் ஏற்பட்டுள்ள   பொருளாதார நெருக்கடியிலிருந்து ஆளும் வர்க்கமான இந்துத்துவம், 
தன்னைக் காத்துக் கொள்ளவும் தன் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி நீடிக்கவைக்கவும் இஸ்லாமியரை, சிறுபான்மையினரை இன அழிப்பு செய்வதற்கான பாஸிஸ ஆயுதமாக ‘சி.ஏ.ஏ' எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி  ரத்தக்களரியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  பிராமணிய-முதலாளித்துவ ஒட்டுண்ணியை முறியடிக்கவும் அதன் பாஸிஸக் கொள்ளை நோயிடமிருந்து நிரந்தரமாக வெற்றி பெறுவதற்கும் மார்க்ஸ் பரிந்துரைக்கும் அருமருந்தே தீர்வாகும்.தடைகளைக் கடப்போம்.அதை மக்களிடம் சேர்ப்போம்.

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...