Sunday, April 30, 2023

உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (WFTU) 2023ஆம் ஆண்டு மேதினப் பிரகடனம்:



5 கண்டங்களில் உள்ள 133 நாடுகளில் வாழும், வேலை செய்யும், போராடும் 10.5 கோடி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்குணமிக்க, வர்க்க சார்புக் குரலான உலக தொழிற்சங்க கூட்டமைப்பு, 1886 இல் சிகாகோவில் நிகழ்ந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் 137வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் நீடித்த மைல்கல்லாகவும், தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு, அனைவருக்குமான இலவச பொது சுகாதாரம்/மருத்துவம், கல்வி, கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றுடன் நிலையான வேலைக்கான இன்றைய நாளையப் போராட்டங்களுக்கு ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அது திகழ்கிறது.

இப்போதெல்லாம் முதலாளித்துவத்தின் நெருக்கடியானது உலகளவில்  நீள அகலத்தில் ஆழமடைந்து வருகிறது, இதன் விளைவாக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகள் வலுவந்தமாக மீறப்படுகின்றன, வேலை, வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்துள்ளன, சமூக சமத்துவமின்மை, வறுமை, சுரண்டல் ஆகியவை கடுமையாக விரிவடைந்துள்ளன. பெரும் மூலதனமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் முதலாளித்துவ நெருக்கடியின் சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, வேலைநிறுத்தத்திற்கான உரிமை, போராட்ட உரிமை, அமைப்பாக்க உரிமை போன்ற மிக அடிப்படையான ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகளைக் கூட தாக்கியுள்ளனர். நெருக்கடியின் விளைவுகளை தொழிலாள வர்க்கம், ஓய்வூதியம் பெறுவோர், விவசாயிகள், சுயதொழில் செய்யும் ஏழைகளின் தோள்களுக்கு மாற்ற அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற விலை உயர்வு; குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அத்துடன் "ஆற்றல் பற்றாக்குறை", ஊதியத்தை குறைப்பதற்கும், இலாபங்களைப் பாதுகாத்து அதிகரிப்பதற்குமான மற்றொரு வழியாகும், இதன் விளைவாக வறுமை மேலும் அதிகமாகி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்துள்ளது. அவர்களின் நெருக்கடிக்கான கட்டணத்தை மக்களும், தொழிலாளர்களுமே செலுத்த வேண்டும் என்று அவர்கள் மீண்டும் விரும்புகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் இந்த கட்டணத்தை ஏற்கத் தயாராக இல்லை. இந்தச் செய்தி மேலும், மேலும் அதிகமான பணியிடங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்து சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு ரோமில் நடைபெற்ற சமீபத்திய 18வது மாநாட்டின் போர்க்குணமிக்க உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (WFTU) துணை அமைப்புகள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களின் ஊதியம், வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் சார்ந்த சமகாலத் தேவைகளை நிறைவு செய்யக் கோரி இந்தப் போராட்டங்களில் முன்னணியில் உள்ளன. தனியார்மயத்திற்கும், தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கும் எதிரான எங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தி வருகிறோம்.

போராடும் பெண் தொழிலாளியின் பக்கம் நிற்கிறோம், வேலையிலும், சமூகத்திலும், வாழ்விலும் சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். அதே திசைவழியில், முதலாளித்துவ நெருக்கடியின் முதல் பலியாக இருக்கும் இளைஞர்களுக்கும், மலிவான தொழிலாளர்களாக சுரண்டப்படும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் ஆதரவாக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வருமானம், வேலையில்லாதவர்களுக்கு முறையான வேலை, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கண்ணியமான ஓய்வூதியம் ஆகியவற்றைக் கோரி, தொழிலாளர் வர்க்கத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். மேலும் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டிய வழக்கமுறைமைகளை வெற்று வார்த்தைகளாக்கி விடாமல் அனைத்து தொழிலாளர் உரிமைகள், சுதந்திரங்களையும் உறுதி செய்ய எங்கள் போர்க்குணமிக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறோம்.  அரசின் அடக்குமுறையும், எதேச்சதிகாரமும் கூர்மைப்படுத்தப்பட்ட போதிலும், கெடுவாய்ப்பாக, மூலதனத்தின் கட்டளைகளுடன் இணைந்த மஞ்சள் தொழிற்சங்கங்கள், சரணடைந்த தொழிற்சங்கத் தலைவர்களின் சமரசத்தன்மை அல்லது ஒத்துழைப்பையும் தாண்டி, இந்தப் போராட்டங்கள் இடைவிடாமல், சளைக்காமல் தொடர்கின்றன.

கொள்ளைநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகளுக்கு மேலதிகமாக, உக்ரைனில் ரஷ்யாவுடனான அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய போரின் விலையையும் தொழிலாள வர்க்கம் செலுத்த வேண்டும் என்று முதலாளித்துவம் விரும்புகிறது. பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது உறுதியான சர்வதேச ஒருமைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். உக்ரைனில் போருக்கு முடிவுகட்டவும், அனைத்து ஏகாதிபத்தியப் போர்களும் அகற்றப்படவும், நேட்டோ மற்றும் அனைத்து இராணுவக் கூட்டணிகளை களைத்து அகற்றவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும் நாங்கள் கோருகிறோம். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், தடையின்றியும், சுதந்திரமாகவும் அவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் எங்கள் போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம். இறையாண்மையுள்ள, சுதந்திர நாடுகளில் வெளிநாட்டு ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக உள்ள பொருளாதாரப் போர்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நிறுத்த நாங்கள் போராடுகிறோம். சோசலிச கியூபாவிற்கு எதிரான குற்றவியல் தடைகள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கைகளுடன் போராடுகிறோம். நமது மிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் சர்வதேசியமும், ஒருமைப்பாடுமே. எந்த தொழிலாளியும் தனிமையாக உணரக்கூடாது.

 உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (WFTU) 2023 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, போராடும் அனைத்து தொழிலாளர்களுக்கும், தொழிலாள வர்க்கம், மக்களின் சமகாலத் தேவைகளை நிறைவேற்ற, கண்ணியத்திற்கான தினசரிப் போராட்டத்தை அயராது தீர்க்கமாக நடத்தும் அனைத்து போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களுக்கும் தனது அன்பான, சர்வதேசிய, போர்க்குணமிக்க வர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

வறுமை, துன்பம், போர்கள், அகதிகள் உருவாக்கம் ஆகியவற்றின் மூல காரணத்திற்கு எதிராக; ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியமான வாழ்க்கையையும், பணிச்சூழலையும் அளிக்கக் கூடிய நியாயமான மனிதனை மையமாகக் கொண்ட சமுதாயத்தை, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமும், மனிதனை மனிதன் சுரண்டும் அவலம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு கண்டத்திலும், தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக, நமது சொந்த வர்க்க நலன்கள், தேவைகளை நிறைவு செய்ய, எங்கள் பொதுவான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறோம். .

உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முழக்கங்கள், பதாகைகளின் கீழ் அனைத்துலக தொழிலாளர் தினத்தைப் போற்றுமாறு உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (WFTU) அனைத்து துணை அமைப்புகளையும் நண்பர்களையும் நாங்கள் அறைகூவுகிறோம்:

Ø  சர்வதேச ஒற்றுமை: தொழிலாள வர்க்கத்தின் ஆயுதம்

Ø  அவர்களின் நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மறுக்கிறோம்

Ø  ஏகாதிபத்திய முற்றுகைகளையும், பொருளாதாரப் போர்களையும் நிறுத்துங்கள்.

Saturday, April 29, 2023

ஊதியக் குறைவால் வாடும் இந்தியர்கள்:

 

ஏடிபி ஆய்வு நிறுவனம் உழைப்புச்சக்தி மேலாண்மையில் தீர்வுகளை அளிக்கும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் 2022 அக்டோபர், நவம்பரில் இணையவழியில் 17 நாடுகளைச் சேர்ந்த 32,000 பணியாளர்களிடம்  கணக்கெடுப்பு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில் பெறப்பட்ட முடிவுகள் 'பணியில் உள்ள மக்கள் 2023: உலகளாவிய உழைப்புச்சக்தி நோக்கு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. '.

 

ஏடிபி ஆய்வு நிறுவனம் மேற்கொண்டக் கணக்கெடுப்பில் உலகளவில் குறைந்த ஊதியம் பெறுவதாக உணரும் பணியாளர்களின் விகிதாச்சாரம் 43 விழுக்காடாக உள்ளது. ஆனால் இந்த விகிதாச்சாரம் உலகளவில் இருப்பதை விடக் இந்தியாவில் கூடுதலாக உள்ளது. இந்தியப் பணியாளர்களில் 69% பேர் குறைந்த ஊதியம் பெறுவதாக உணர்கின்றனர்.

 

இந்தியர்கள் வாரத்திற்கு 10 மணிநேரம் 39 நிமிடங்கள் ஊதியமில்லாத வேலை நேரத்தை வழங்குகிறார்கள், இது ஆசிய-பசிபிக் பகுதியில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட நான்கு நாடுகளில் மிக அதிகமாகவும், மேலும் உலக சராசரியான எட்டு மணிநேரத்தை விட மிக அதிகம்.

 

வழக்கமாக குறைவான ஊதியம் பெறும் இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எப்படி உணர்கிறார்கள் என்பதை இந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

 

ஊதிய உயர்வு என வரும்போது இளைய பணியாளர்களும், வயதான பணியாளர்களும், தங்கள் முதலாளிகளால் கவனிக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 18-24 வயதுடையவர்களில் 50% பேரும், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களில் 49% பேரும் தாங்கள் பணிபுரியும் தற்போதைய நிறுவனத்தில் அடுத்த 12 மாதங்களில் ஊதிய உயர்வைப் பெறமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  அதேசமயம் மற்ற எல்லா வயதினரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஊதிய உயர்வைப் பெறமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

பாலின அடிப்படையில் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன, கடந்த ஆண்டு ஆண்கள் சராசரியாக 6.7% ஊதிய உயர்வு பெற்றுள்ளனர், பெண்கள் சராசரியாக 6% ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

 

உலகளவில், 62% தொழிலாளர்கள் பொருளாதார நிச்சயமற்ற விளைவுகளிலிருந்து எந்தத் துறையும் தப்ப முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தொழில்நுட்பம்/தகவல் தொழில் மிகவும் பாதுகாப்பான துறையாக (44%) பார்க்கப்படுகிறது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 37% பேர் தங்கள் வேலையில் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறியுள்ளனர். ஆயினும்கூட, பணியிடங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பற்றிய நம்பிக்கை அதிகமாகவே உள்ளது (87%).

 

கணக்கெடுப்பில் ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து 7,721 பேர் பதிலளித்துள்ளனர், அவர்களில் 26% பேர் அமைப்புசாரா பொருளாதாரத்தில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு நாட்டின் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புள்ளிவிவரங்கள் எடைபோடப்பட்டுள்ளன.

பணவீக்கத்தாலும், பொருளாதார சுணக்கம், நிச்சயமற்ற தன்மைகளால் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்.

 

 

Friday, April 28, 2023

லத்தீன் அமெரிக்கா - இந்தியாவின் பரஸ்பர உறவு (5):

 

லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன்.

லத்தீன் அமெரிக்கா இன்னும் நிறைய செய்யவேண்டும்:

இந்திய தொழில் வணிகம் லத்தீன் அமெரிக்க சந்தையில் மிகவும் மும்முரமாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்து நுழைந்த போதிலும், லத்தீன் அமெரிக்க தொழில் வணிகம் அதற்கிணையான உற்சாகத்தையும் முன்முயற்சிகளையும் காட்டவில்லை.

இந்தியாவில் உள்ள லத்தீன் அமெரிக்க தூதரகங்கள் பொருளாதார தந்திரோபாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தனியார் துறை தொழில் வணிகத்தை அடைய தொழில் வணிகத்தில் அதிக ஆர்வமுள்ள தூதர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய தொழிலதிபர்களுக்கு வணிக விசா முக்கிய தடையாக உள்ளது. சில லத்தீன் அமெரிக்க தூதரகங்கள் சிக்கலான, தேவையற்ற அதிகாரத்துவ நடைமுறைகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சில தூதரகங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களில் வணிகப் புரள்வு கொண்ட புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கு கூட காவல்துறை அனுமதி சான்றிதழ்களை வலியுறுத்துகின்றன. இதற்கு நேர்மாறாக, உலகின் பிற நாட்டினருக்கு இலத்தீன் அமெரிக்கர்கள் உட்பட இந்தியா எளிதான இ-விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவா இந்தியாவில் தூதரகங்களை திறக்க வேண்டும்.

இந்திய வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். மேலும் லத்தீன் அமெரிக்க வணிக பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும்.

லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் தங்கள் ஏற்றுமதி பொருட்களுக்கான வரிவிலக்கு நன்மைகளைப் பெற இந்தியாவுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்கள்/ முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இசிஎல்ஏசி, சிஏஃப், பிஐடி போன்ற லத்தீன் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வணிக நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். லத்தீன் அமெரிக்க வணிகத்திற்கான இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்த சந்தை ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்க வணிக நிர்வாகப் பள்ளிகள் (எம்பிஏ) இந்தியாவில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய சந்தை குறித்த பாடத்தையும் சேர்க்க வேண்டும். அவர்கள் இந்திய சகாக்களுடன் பரிமாற்ற திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

லத்தீன் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் பெரிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு ஏற்றத்தையும், பல்வேறு தயாரிப்புகளுக்கான தேவையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன் இந்தியாவுக்கும், லத்தீன் அமெரிக்காவும் இடையிலான பொருளாதார உறவு குறித்துப் பல அரிய தகவல்களை இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். இந்தியா லத்தீன் அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய முடியரசு, வளைகுடா நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. வல்லரசுகளின் மேலாதிக்கத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட மூன்றாம் உலக நாடுகள் தங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தி கூட்டாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்ற அடிப்படையில் அவரது பரிந்துரைகள் ஏற்புடையது என்ற போதிலும், முதலாளித்துவ அமைப்புமுறையில் செயல்படுத்தப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்திற்கே சாதகமாக அமையும் என்பதையும் மறுக்க இயலாது.

 

 

Thursday, April 27, 2023

லத்தீன் அமெரிக்கா - இந்தியாவின் பரஸ்பர உறவு (4):

 

லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன்.

எதிர்கால வாய்ப்புக்கள்

இந்திய, லத்தீன் அமெரிக்க நிறுவனங்கள் கடந்த இருபதாண்டுகளில் தான் பரஸ்பரமாக சந்தையை தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளன. வெற்றிக் கதைகளால் உற்சாகமடைந்து, இரு தரப்பிலிருந்தும் அதிகமான நிறுவனங்கள் இரு தரப்புக்கும் இடையே உள்ள கூட்டாற்றல்கள், நிரப்புத்தன்மைகளை ஆராய்ந்து கண்டறியத் தொடங்கியுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்.

சந்தைகளின் மூலோபாய பல்வகைப்படுத்தலிலும், சீனாவின் மீதான அதீதச் சார்பைக் குறைப்பதிலும், லத்தீன் அமெரிக்கர்கள் இந்தியாவை ஒரு பெரிய வளரும் சந்தையாக மட்டும் பார்க்காமல், அவர்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணரும் ஒரு தீங்கற்ற சந்தையாகவும் பார்க்கிறார்கள்.

உணர்வுபூர்வமான, கலாச்சார ஒற்றுமைகளைக் கொண்ட லத்தீன் அமெரிக்கர்களுடன் இந்தியர்கள் எளிதில் பிணைகிறார்கள். பொதுவான வளர்ச்சி சவால்களைக் கொண்ட இரு தரப்பும், ஒருவருக்கொருவர் வெற்றிக் கதைகள், சிறந்த நடைமுறைகள், தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்கின்றனர். பிரேசிலின் எரிபொருள் எத்தனால் முன்னெடுப்புத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பெட்ரோலில் எத்தனால் கலப்பதை இந்தியா தொடங்கியுள்ளது.

இந்திய விமான தயாரிப்பாளரான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), எம்ப்ரேயரின் வெற்றிக் கதையிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியா இன்னும் என்ன செய்ய வேண்டும்?

பொலிவியா, ஈக்வெடார், கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் நிகரகுவா ஆகிய நாடுகளில் இந்தியா தூதரகங்களை திறக்க வேண்டும்.

மெக்சிகோ, கொலம்பியா, பெருவுடன் இந்தியா திறந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டிய அவசியம் உள்ளது, இந்த நாடுகளுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்ட போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி வரிகளால் பாதகமான நிலையில் உள்ளனர். இந்தியா மெர்கொசருடன் உடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி ஆழப்படுத்த வேண்டும்.

இந்திய வர்த்தக அமைச்சகம் லத்தீன் அமெரிக்காவில் கவனம் செலுத்தும் ஃபோகஸ்-எல்ஏசி திட்டத்தை (Focus Latin America) முன்கூட்டியே புதுப்பிக்க வேண்டும்.

இந்தியா-லத்தீன் அமெரிக்கா வணிக மாநாடு ஒவ்வொரு ஆண்டும் போதுமான வளங்களுடன், இரு தரப்பிலிருந்தும் அதிக பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

 

இண்டர்அமெரிக்கன் டெவலப்மென்ட் வங்கியில் இந்தியா உறுப்பினராக வேண்டும், இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அவ்வங்கியின் ஒப்பந்தங்களில் பங்கேற்க முடியும்.

லத்தீன் அமெரிக்காவிற்கான கடன்களை இந்தியா அதிகரிக்க வேண்டும். தற்போது மொத்த தொகை ஒரு பில்லியன் டாலர்களுக்கும் குறைவாக உள்ளது.

எக்ஸிம் வங்கி லத்தீன் அமெரிக்காவில் அலுவலகம் திறக்க வேண்டும். இந்திய வங்கிகள் சாவ் பாலோ, மெக்சிகோ நகரங்களில் கிளைகளைத் திறக்க வேண்டும்.

சீனாவில் 60க்கும் மேற்பட்ட லத்தீன் அமெரிக்க ஆய்வு மையங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் ஒன்று மட்டுமே உள்ளது. சுமார் 80 சீனப் பல்கலைக்கழகங்களில் ஸ்பானிஷ் மொழித் துறைகள் உள்ளன, ஆறுக்கும் குறைவான இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஸ்பானிஷ் மொழிக்கான பாடங்களை வழங்குகின்றன.

சீனர்கள் லத்தீன் அமெரிக்காவுடனான பல மன்ற கூட்டங்களைத் தவிர கல்வி மன்றம், சிந்தனை ஆய்வு மன்றத்தின் வருடாந்திர கூட்டங்களை நடத்துகின்றனர். இந்தியா பரிமாற்றங்களுக்கான அத்தகைய வழிமுறைகளை நிறுவவில்லை.

 

சீனா-லத்தீன் அமெரிக்கா மன்றம் மற்றும் சீனா-லத்தீன் அமெரிக்கா வணிக உச்சி மாநாடு ஆகியவை முறையான திட்டமிடல், செயல்பாடுகளுடன் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. இந்தியா-செலாக் மன்றம் (India-CELAC Forum) மற்றும் இந்தியா-எல்ஏசி வணிக உச்சிமாநாடு (India-LAC Business summit) ஆகியவை செயலற்ற நிலையில் உள்ளன.

(தொடரும்)

 

 

Wednesday, April 26, 2023

லத்தீன் அமெரிக்கா - இந்தியாவின் பரஸ்பர உறவு (3):

 

லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன்.

இந்திய முதலீடு

இந்திய நிறுவனங்கள் லத்தீன் அமெரிக்காவில் சுமார் 12 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து ஆயிரக்கணக்கான லத்தீன் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளன. இந்திய நிறுவனங்கள் மருந்துகள், வேளாண் வேதிப்பொருட்கள், ஆட்டோமொபைல்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகன பாகங்கள், டயர்கள், அலுமினியம், கரும் கார்பன், கண் மருத்துவ பொருட்கள் போன்ற துறைகளில் உற்பத்தி செய்கின்றன. இந்த இந்திய அலகுகள் ஏற்றுமதி மூலம் அந்நாடுகளுக்கு அந்நிய செலாவணியை ஈட்டுகின்றன. வெனிசுலா, பிரேசில், கொலம்பியாவில் எண்ணெய் ஆய்வு, உற்பத்தியிலும் இந்தியா முதலீடு செய்துள்ளது. மானசரோவர் எண்ணெய் வயல்களில் எண்ணெய் உற்பத்தியில் இந்தியாவின் ஒ.என்.ஜி.சி ஒரு சீன நிறுவனத்துடன் 50:50 கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பும் தலா ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

சுமார் 30 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 40,000 இளம் லத்தீன் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தும் வகையில் இப்பகுதியில் மென்பொருள் மேம்பாடு, சேவை மையங்களைக் கொண்டுள்ளன. இது வியாபாரம் என்பதைத் தாண்டி மனித வள மேம்பாட்டுக்கான இந்தியாவின் பங்களிப்பு ஆகும். இளம் லத்தீன் அமெரிக்கர்கள் திறன் மேம்பாடு, உலகளாவிய வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்திய நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களில் திறன் மேம்பாடு, பயிற்சிக்கான வாய்ப்புகளை அளித்துள்ளன.

மிகப்பெரிய இந்திய வேளாண் வேதியியல் நிறுவனமான யுபிஎல், இந்தியாவை விட (ஒரு பில்லியனுக்கும் குறைவானது) லத்தீன் அமெரிக்காவில் (சுமார் 1.7 பில்லியன் டாலர்கள்) அதிகமாக தொழில்வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆட்டோ உதிரிபாகங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமான மதர்சன்ஸ் மெக்சிகோவில் 19 ஆலைகளையும், பிரேசிலில் 7 ஆலைகளையும், அர்ஜென்டினாவில் 1 ஆலையையும் கொண்டுள்ளது. அவர்கள் 22000 உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர்.

இந்திய நிறுவனங்கள் கோஸ்டாரிகா, கியூபாவில் உள்ள உல்லாச விடுதிகள், உணவகங்களில் கூட முதலீடு செய்துள்ளன.

இந்தியாவில் லத்தீன் அமெரிக்க முதலீடு:

இந்தியாவில் மெக்சிகன் நிறுவனங்களின் நுழைவுகள் பிரமிக்க வைக்கின்றன. இந்தியாவில் மல்டிபிளக்ஸ்களின் இரண்டாவது பெரிய உரிமையாளராகவும், நடத்துனராகவும் சினிபோலிஸ் உருவாகி வருகிறது. நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து கிட்ஜானியா மும்பை மற்றும் நொய்டாவில் எடுடெயின்மென்ட் தீம் பூங்காக்களை அமைத்துள்ளது. குருபொ பிம்போ இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் முன்னணி ரொட்டி தயாரிப்பாளராக மாறியுள்ளது.

 

பிரேசிலிய நிறுவனங்கள் மின்சார மோட்டார்கள், ஏடிஎம் இயந்திரங்கள், வாகன பாகங்கள் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளன. பிரேசிலின் துப்பாக்கி தயாரிப்பாளர்களான டவுரஸ் ஆர்மாஸ், சிபிசி இந்தியாவில் ஆயுதங்கள், வெடிமருந்துகளை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.

பெருவியன் நிறுவனமான அஜே இந்தியாவில் பிக் கோலா பிராண்டின் குளிர்பானங்களை தயாரிக்க முதலீடு செய்துள்ளது.

குளோபன்ட், சாஃப்டெக், ஸ்டெஃபானினி ஆகிய லத்தீன் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் நூற்றுக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களைப் பணியமர்த்தும் மென்பொருள் மேம்பாட்டு மையங்களைக் கொண்டுள்ளன. சிலியின் சில்லறை வணிக நிறுவனமான ஃபலாபெல்லா மற்றும் அர்ஜென்டினாவின் எஃகு நிறுவனமான டெக்கிண்ட் ஆகியவை இந்தியாவில் தொழில்நுட்ப மையங்களைக் கொண்டுள்ளன.

மிக முக்கியமான இந்திய உயிர்த்தொழில்நுட்ப நிறுவனமான பயோகான், கியூபத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தடுப்புமருந்துகளை தயாரிப்பதற்காக கியூபாவுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

(தொடரும்)

 

 

Tuesday, April 25, 2023

லத்தீன் அமெரிக்கா - இந்தியாவின் பரஸ்பர உறவு (2):

 

லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன்.

இந்தியா லத்தீன் அமெரிக்காவில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 50 பில்லியன் டாலர்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டத் தங்கத்தில் 6 பில்லியன் டாலர்களுக்குத் தங்கம் லத்தீன் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டது

லத்தீன் அமெரிக்காவிலிருந்து, முக்கியமாக சிலியிலிருந்து இறக்குமதியாகும் மற்றொரு முக்கியமான சரக்காக தாமிரம் உள்ளது. இந்தியாவின் லட்சிய "மேக்-இன்-இந்தியா", வாகனங்களின் மின்மயமாக்கும் திட்டங்களுக்கு லத்தீன் அமெரிக்காவிலிருந்து அதிக செம்பு, லித்தியம் மற்றும் பிற கனிமங்கள் தேவைப்படும்.

லத்தீன் அமெரிக்காவிற்கு இந்தியாவின் மதிப்பு கூட்டல்:

கடந்த ஆண்டு லத்தீன் அமெரிக்காவின் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியா 7வது இடத்தில் இருந்தது. ஏற்றுமதியின் மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். 2014-15ல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது நாடாக இருந்தது. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி அல்லது இங்கிலாந்து போன்ற வழக்கமான வர்த்தக பங்காளர்களுக்கான ஏற்றுமதியை விட லத்தீன் அமெரிக்கா இந்தியாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்தது. இலத்தீன் அமெரிக்காவின் தாவர எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்திலும், தங்க ஏற்றுமதியில் மூன்றாம் இடத்திலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காம் இடத்திலும், தாமிர ஏற்றுமதியில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

2021-22ல் லத்தீன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி:

கச்சா எண்ணெய்: 9.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

தங்கம்: 6.91 பில்லியன் டாலர்கள்

தாவர எண்ணெய்: 4.34 பில்லியன் டாலர்கள்

தாமிரம்: 995 மில்லியன் டாலர்கள்

இயந்திரங்கள்: 545 மில்லியன் டாலர்கள்

மரக்கட்டை: 480 மில்லியன் டாலர்கள்

வேதிப்பொருட்கள்: 419 மில்லியன் டாலர்கள்

இரும்பு, உருக்கு: 321 மில்லியன் டாலர்கள்

பழங்கள், காய்கறிகள்: 285 மில்லியன் டாலர்கள்

தொழில்துறை வளர்ச்சி, அதிகரித்து வரும் நுகர்வுத் தேவையை சமாளிக்க லத்தீன் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், தாவர எண்ணெய், தங்கம், தாமிரம் மற்றும் பிற கனிமங்களின் இறக்குமதியை இந்தியா அதிகரிக்கப் போகிறது. ஒரு பெரிய வளரும் சந்தையாக, எதிர்காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு இந்தியா இன்னும் முக்கியமான பங்காளராக மாறப்போகிறது.

இந்தியா 1.5 பில்லியன் டாலர் ஜெனரிக் மருந்துகளை லத்தீன் அமெரிக்காவிற்கு வழங்குகிறது. இது லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் மருத்துவச் செலவைக் குறைக்க உதவியது. மலிவு விலையில் இந்திய ஜெனரிக் மருந்துகளின் நுழைவு, லத்தீன் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்ளூர் மருந்து நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளின் அளிப்பை கூடுதலாக்கவும், விலைகளைக் குறைக்கவும் நிர்ப்பந்தித்துள்ளது.

இந்தியா இறுதித் தயாரிப்புப் பொருட்களை மட்டும் வழங்கவில்லை. மூலப்பொருட்கள், தொழில்துறை உள்ளீடுகளான வேதிப்பொருட்கள் (3 பில்லியன் டாலர்கள்), மருந்து மூலப்பொருட்கள், பருத்தி, நூல், துணிகள், இழைகள் போன்றவற்றையும் வழங்குகிறது. இதனால் லத்தீன் அமெரிக்க உற்பத்தித் துறை, குறைந்த விலை இந்திய உள்ளீடுகளுடன் போட்டித்தன்மையுடன் இருக்க உதவுகிறது.

(தொடரும்)

 

 

 

Monday, April 24, 2023

லத்தீன் அமெரிக்கா - இந்தியாவின் பரஸ்பர உறவு:

 

லத்தீன் அமெரிக்காவும் இந்தியாவும் வணிகத்திலும் சரி, அதற்கு அப்பாலும் சரி ஒன்றுக்கொன்று மதிப்பு சேர்க்கின்றன என்கிறார் லத்தீன் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர்ஆர் விஸ்வநாதன்.

இந்தியா தொழில்துறை வளர்ச்சிக்காகவும், அதிகரித்து வரும் நுகர்வு தேவையை சமாளிக்கவும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய், தாவர எண்ணெய், தங்கம், தாமிரம் மற்றும் பிற கனிமங்களின் இறக்குமதியை அதிகமாக்கவுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகள் அல்லது வழக்கமான வர்த்தக பங்காளர்களை விட சில லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தியாவின் வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய 2021-22 (இந்தியாவின் நிதியாண்டு - ஏப்ரல் முதல் மார்ச் வரை) புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிற்குத் தொலைதூரத்தில் உள்ள குவாத்தமாலாவிற்கான (மக்கள் தொகை 11 மில்லியன்) 552 மில்லியன் டாலர் ஏற்றுமதி 16 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அண்டை நாடான கம்போடியாவிற்கான 198 மில்லியன் டாலர் ஏற்றுமதியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஜப்பான் (6.18 பில்லியன் டாலர்) மற்றும் தாய்லாந்து (5.7 பில்லியன் டாலர்) போன்ற வழக்கமான வர்த்தக பங்காளர்களுக்கு செய்யப்படுவதைக் காட்டிலும் இந்தியாவின் ஏற்றுமதி, பிரேசிலுக்கு (6.48 பில்லியன் டாலர்) அதிகமாக உள்ளது.

தொலைதூரத்திலுள்ள ஹோண்டுராஸுக்கான (மக்கள் தொகை 10 மில்லியன்) இந்தியாவின் 318 டாலர் ஏற்றுமதி, 19 மில்லியன் மக்கள்தொகையுடன் அருகிலுள்ள கஸகஸ்தானுக்கான 235 மில்லியன் ஏற்றுமதியை விட அதிகமாகும்.

மெக்ஸிகோவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி (4.43 பில்லியன் டாலர்) கனடா (3.7 பில்லியன் டாலர்) மற்றும் ரஷ்யாவிற்கான (3.2 பில்லியன் டாலர்) ஏற்றுமதியை விட அதிகமாகும்.

இந்தியாவின் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உலகளாவிய ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை லத்தீன் அமெரிக்கா பெறுகிறது. லத்தீன் அமெரிக்காவிற்கான இந்தியாவின் கார் ஏற்றுமதி 1793 மில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய கார் ஏற்றுமதியான 5.92 பில்லியன் டாலரில் 30% ஆகும். இந்திய கார்களுக்கான (941) இரண்டாவது பெரிய உலக சந்தையாக மெக்சிகோ உள்ளது. இப்பகுதிக்கான இந்திய மோட்டார் சைக்கிள்களின் ஏற்றுமதி 909 மில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியான 2.99 பில்லியன் டாலர் மதிப்பில் 30.5% ஆகும். லத்தீன் அமெரிக்காவிற்கு அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மோட்டார் சைக்கிள் ஏற்றுமதியில் கொலம்பியா 309 மில்லியன் டாலர்களுடன் உலகளவில் இரண்டாவது இடமாக உள்ளது. 2014-15 ஆம் ஆண்டில், கொலம்பியா முதல் இடத்தை வகித்தது.

இது ஒரு வருடத்தில் நிகழ்ந்த அதிசயம் மட்டுமல்ல. கடந்த பல வருடங்களாக இந்தப் போக்கு காணப்படுகிறது.

இந்தியாவின் எரிஆற்றல், உணவுப் பாதுகாப்பில் லத்தீன் அமெரிக்காவின் பங்களிப்பு:

லத்தீன் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் வழங்கல் (இந்தியாவின் மொத்த இறக்குமதியில் பாதி இப்பகுதியில் இருந்து பெறப்படுகிறது) இந்தியாவின் மூலோபாய ஆற்றல் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது. இறக்குமதியின் ஆதாரங்களை பன்முகப்படுத்தி, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்தியாவின் கொள்கைக்கு இது உதவியது.

லத்தீன் அமெரிக்காவின் தாவர எண்ணெய், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன. அர்ஜென்டினா சோயா எண்ணெயின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். கடந்த ஆண்டு அர்ஜென்டினாவிலிருந்து 3.3 பில்லியன் டாலர்களுக்கும், பிரேசிலில் இருந்து 1 பில்லியன் டாலர்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாய நிலங்கள் குடியிருப்பு, வணிகம், தொழில்துறை, நகரமயமாக்கம் ஆகிய நோக்கங்களுக்காக திசைதிருப்பப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள்தொகை ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் பாசனம் பெறும் இந்திய விவசாயம், நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்தியாவின் பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகள் என்பதால் இந்திய விவசாயிகளால் புத்தாக்கங்களில் அதிக முதலீடு செய்ய முடியவில்லை. இதற்கு மாறாக, தென் அமெரிக்கா போதுமான நீர் ஆதாரங்களைக் கொண்ட வளமான நிலத்தின் பெரிய உபரிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை சொந்தமாக வைத்திருக்கும் பெரிய அளவிலான வர்த்தக விவசாயம் செய்யும் தென் அமெரிக்க விவசாயிகள் உள்ளீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக உற்பத்தியைப் பெற முடிகிறது. உதாரணமாக, இந்தியாவில் சோயாவின் சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 1 டன்னாக உள்ளது, அர்ஜென்டினாவில் 3 டன்னாக உள்ளது.

(தொடரும்)

 

 

 

 

Saturday, April 22, 2023

தமிழக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு:

 

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிடம், அந்நிய முதலீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களிடம் அடிவருடித்தனத்துடன் செயல்படும் போக்குக் காணப்படுகிறது. அதன் சமீபத்தைய வெளிப்பாடாகப் புதுத்தாராளியக் கொள்கைகளுக்கிணங்க திமுக அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி திமுக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்  தொழிலாளர் விரோத மசோதாவை தமிழ்நாடு அரசுதான் முதன் முதலில் நிறைவேற்றியுள்ளது. பாஜக அரசின் மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு இணங்கிப்போகும் விதத்தில் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை கொண்டுவந்துள்ளது அதன் திராவிட மாதிரி ஆட்சியையும், சமூகநீதிசெயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 பெரு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் ஆதாரவாக தொழிலாளர்கள் மீதான உழைப்புச்சுரண்டலை மேலும் கடுமையாக மும்முரப்படுத்துவதற்காகத் தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான மே நாள் பரிசாக 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையைப் பறித்துள்ளது திமுக அரசு.

தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பாசாங்கான கட்டுக்கதையையும் தமிழக அரசு விளக்கமாக அளித்துள்ளது.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார்:

“இப்போது கொண்டு வந்திருக்கின்ற 65-ஏ சட்டத் திருத்தம் என்பது, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வருகின்றபோது, மற்ற மாநிலங்களுடன் ஒப்படுகையில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை (flexibility) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நெகிழ்வுத்தன்மையை எந்தெந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று பார்த்தால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கூறியதைப் போல, அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

உதாரணமாக, மின்னணுவியல் துறையில் (Electronics Industries) இருக்கக்கூடிய நிறுவனங்கள், Non leather shoe making என்று சொல்லக்கூடிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள், Electronic clusters அல்லது மென்பொருள் துறை (Software) இவ்வாறான தொழில்களில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், அங்கு பணியாற்றுபவர்கள் விரும்பினால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம்.

இதனால், வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

இன்றையச் சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மசோதா எந்த தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படும்.”

இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும் உயர்ந்துள்ள நிலையில் தொழிலாளர் மீதான வேலைச்சுமை குறைக்கப்படவேண்டும். வளர்ந்த நாடுகளில் ஆங்காங்கே வேலை நேரத்தைக் குறைத்து விடுமுறை நாட்களைக் கூடுதலாக்கும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தகைய ஆட்சிமுறை நீடித்தால் தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லாது போகும். தமிழ்நாட்டில் அமைப்புசாரா நிறுவனங்களில் சட்டத்துக்குப் புறம்பாக 8 நேரத்துக்கும் மேலாக தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. இந்த அநீதி களையப்படவேண்டும். ஆனால் அநீதியையே சட்டமாக்கி வரலாற்றுச் சக்கரத்தைப் பின் நோக்கிச் சுழற்றும் வீண் வேலையை திமுக அரசு கைவிடவேண்டும்.

இயந்திரங்களைக் கூட ஓய்வளிக்காமல் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுத்தமுடியாது. 12 மணி நேர வேலை நேரம் என்பது இயந்திரங்களுக்குக் கூடப் பொருந்தாது. மிகை உழைப்பால் ஏற்படும் உடலியல் எதிர்மறைத் தாக்கங்கள் மீட்க முடியாத இழப்புகளாகும், அவற்றைக் கூடுதல் ஓய்வுநேரத்தால் சரிசெய்ய இயலாது. இயற்கையின், உயிர்களின் இயங்கியலை முதலாளித்துவ நெறிமுறைகளுக்குக் கட்டுப்படுத்தமுடியாது. தொழிலாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் முதலாளித்துவ நெகிழ்வுத்தன்மை என்பது இயல்பிலேயே மனித உடல் மன நல இயங்கியலுக்கு முற்றிலும் எதிரானது.

சமூகநீதியின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசு உடனடியாக இந்தத் தொழிலாளர் விரோதச் சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும்.

 

Friday, April 21, 2023

கியூபக்குடியரசின் தேர்தல் முடிவுகள்:




2023, ஏப்ரல் 19 அன்று இரண்டாவது முறையாக கியூக் குடியரசின் அதிபராக மிகுவல் தியாஸ்-கேனலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கியூப நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் மிகுவல் தியாஸ்-கேனலை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்., அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் அதிபராகச்செயல்படுவார். சால்வடார் வால்டேஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கியூப நாடாளுமன்றம் எஸ்டெபன் லாசோ ஹெர்னாண்டஸை அதன் தலைவராகவும் மாநில அவையின் தலைவராகவும் அங்கீகரித்துள்ளது.

தேசிய மக்கள் அதிகார சபையின் 10வது சட்டமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் கலந்து கொண்ட 462 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பில் 97.66% பிரதிநிதிகள் மிகுவல் தியாஸ்-கேனலை ஆதரித்துள்ளனர். துணை அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பில் 93.4% பிரதிநிதிகள் சால்வடார் வால்டேஸை ஆதரித்துள்ளனர்.

முனிசிபாலிட்டிகள் மற்றும் மாகாணங்களின் மட்டத்தில் தேர்தல் கடந்த ஆண்டு தொடங்கியது, அதில் வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். மார்ச் 26, 2023 அன்று 75.8 % தேசிய பங்கேற்புடன் பொதுத் தேர்தல் நடந்தது.

ஏப்ரல் 19 ஆம் நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . 1961ல் ஏப்ரல் 19 அன்றுதான் பிளயா கிரோன்-பன்றி வளைகுடா தாக்குதலில் கியூபா மீதான அமெரிக்கா படையெடுப்பை முறியடித்து கியூபா வெற்றி பெற்றது.. அப்போதிருந்து, பிளயா கிரோன் கியூபர்களுக்கு எதிர்ப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 19 பிளயா கிரோன் வெற்றியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது

தனது பதவியேற்பு உரையில், அதிபர் மிகுவல் தியாஸ் கேனல், பிளயா கிரோன் நினைவுகூரப்பட்டது போலவே, கொள்ளைநோய் நிலைமைகளில் அமெரிக்காவின் வலுவூட்டப்பட்ட முற்றுகையின் கொடுமையை கியூபா நினைவுகூர்கிறது; கியூபாவின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் முற்றுகையிட, இழிவான முறையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் பட்டியலில் கியூபாவை சேர்த்துள்ளனர். மேலும், நமக்கு ஆக்ஸிஜன் கூடுதலாகத் தேவைப்படும் போது ஆக்ஸிஜன் கொடுக்க மறுத்தனர், வர்த்தகம் அல்லது நிதியுதவிக்கான அனைத்து வாய்ப்புகளையும் மறுக்க முயற்சித்தனர், அதே நேரத்தில் அவர்கள் தெருக் கலவரத்தைத் தூண்டினர்.

இந்த அனைத்துப் போர்களிலிருந்தும் மக்கள் வெற்றி பெற்று வருவதாகவும், பிளயா கிரோனில் இருந்ததைப் போலவே, வெற்றி மேலோங்கும் என்றும் அவர் கூறினார். கியூபா அதன் கொள்கைகளையும், கலந்துரையாடலுக்கான அதன் விருப்பத்தையும் அப்படியே தக்கவைத்துள்ளது, ஆனால் அது அழுத்தம் அல்லது நிபந்தனைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

புது தில்லியில் உள்ள கியூபத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, அதிபர் மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸ் ஒரு மின்னணு பொறியாளர் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2003 முதல் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 2009 இல் அவர் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்றார்; 2012 இல் அவர் அமைச்சர்கள் குழுவின் துணைத் தலைவராக இருந்தார்; 2013 இல் அரசவையின் முதல் துணைத் தலைவராகவும், பின்னர் 2018 இல் அரசு, அமைச்சர்களின் அவைகளின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...