இந்தியாவின் பணவீக்க உயர்விற்கு
ஐந்துப் பெரு நிறுவனங்களே பங்களிக்கின்றன. அந்த மிகப் பெரிய நிறுவனங்கள் உடைக்கப்பட
வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரும்.நியூயார்க் பல்கலைக்கழக
ஸ்டெர்ன் பள்ளியில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் விரல் ஆச்சார்யா கூறுகிறார்.
ரிலையன்ஸ் குழுமம், டாடா குழுமம்,
ஆதித்யா பிர்லா குழுமம், அதானி குழுமம் மற்றும் பார்தி டெலிகாம் ஆகியவற்றை உள்ளடக்கிய
"பிக் 5" உள்ளூர் சிறிய நிறுவனங்களின் இழப்பில் வளர்ந்துள்ளன என அவர் கூறுகிறார்.
விரல் ஆச்சார்யா 2017 - 2019க்கு இடையில் இந்திய மத்திய வங்கியின் துணை ஆளுநராக இருந்தார்.
சில்லறை விற்பனை, மூலப்பொருட்கள்,
தொலைத்தொடர்புத் துறைகளில் அபரிமிதமான விலை நிர்ணயம் செய்யும் ஆற்றலைக் கொண்ட இந்தியாவின்
மிகப் பெரிய கூட்டு நிறுவனங்கள், உயர்ந்த பணவீக்கத்திற்கு பங்களிக்கின்றன, அவை உடைக்கப்பட
வேண்டும். அதே நேரத்தில், அரசின் "அதிகமான இறக்குமதி வரிகள்" வெளிநாட்டு
நிறுவனங்களின் போட்டியிலிருந்து இந்த கூட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கின்றன.
“புதிய இந்தியாவின் தொழில்
கொள்கையாக பலரால் கருதப்படும் தேசிய வெற்றியாளர்களை உருவாக்குவது, விலையை உயர் மட்டத்தில்
வைத்திருப்பதற்கு நேரடியாக ஊட்டமளிப்பதாகத் தோன்றுகிறது என்கிறார் அவர்.
போட்டியை அதிகரிக்கவும், விலை
நிர்ணய சக்தியைக் குறைக்கவும் இதுபோன்ற கூட்டு நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று
அவர் பரிந்துரைத்துள்ளார். அது வேலை செய்யவில்லை என்றால், "ஒரு பெருநிறுவனத்திற்கான
உற்பத்தித்திறன் ஆதாயங்களை உண்மையிலேயே பெரிதாக அடையாதவரை அவற்றிற்கு ஊக்கமளிக்காமல்
பொருளாதார ரீதியாக பயனற்றதாக மாற்றுங்கள்" என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்.
வரலாற்று ரீதியாக, இந்தியாவின் பிரச்சனை எதிர்மாறாகக் கருதப்படுகிறது - நிறுவனங்கள்
மிகவும் சிறியவையாக உள்ளன, அவற்றால் பெரிய நிறுவனங்களின் உற்பத்தித்திறன் ஆதாயங்களைப்
பின்பற்ற முடியவில்லை.
‘பிக் 5’ நிறுவனங்கள் உலோகங்கள்,
கோக், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு
உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதால், இந்திய நுகர்வோர் உள்ளீட்டு விலை வீழ்ச்சியிலிருந்து
முழுமையாகப் பயனடைய முடியவில்லை. கடந்த ஆண்டு வழங்கல்-பக்க சிக்கல்கள் தளர்ந்த பிறகு
உலகளவில் சரக்குகளின் பணவீக்கம் குறைந்தாலும், இந்தியாவில் பொருட்களின் பணவீக்கம் அதிகமாகவே
உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் உயர்ந்த முக்கியப்
பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகளை அதிகமாக்கியுள்ளது. நுகர்வோர் பணவீக்கத்திலிருந்து
அதிக ஏற்ற இறக்கத்திற்கு உட்படும் உணவு, எரிபொருள்
விலைகளை நீக்குவதன் மூலம் முக்கியப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. மத்திய வங்கி நுகர்வோர்
விலைகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தியபோதிலும், முக்கிய பணவீக்கம் கொள்கை விவாதங்களுக்குள்
இடம்பெற்றுள்ளது. இந்தக் குறியீடு தொடர்ந்து 17 மாதங்களுக்கு 6%க்கு மேல் இருந்தது.
மே மாதத்திலிருந்து வட்டி
விகிதங்களை 250 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்திய பிறகும், பணவீக்கம் குறையாததற்குக்
காரணம், தொடர்ந்து உயர்ந்த முக்கியப் பணவீக்கம் என்று மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த
தாஸ் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் கொள்கை விகிதத்தை உயர்த்தும்
என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா பேரியல் பொருளாதார சமநிலையை
மீட்டெடுக்க வேண்டும் என்கிறார் விரல் ஆச்சார்யா,. பெருநிறுவனங்களின் உயர்ந்துவரும்
மையப்படுத்தும் ஆற்றல் பணவீக்கத்தை தொடர்ந்து நிலையானதாக ஆக்குகிறது . இந்தியாவின்
வெளிப்புற நிதி உணர்திறன் கொண்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில், பாதிப்பை உருவாக்குகிறது"
என்றும் அவர் கூறியுள்ளார்.