2019-20 நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் நிதித் திரட்டும் வகையில் ‘சமூகப் பங்குப்பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும் என்று முன்மொழிந்தார்.
சமூக நிறுவனங்களுக்கும்,
நிதி வழங்குநர்களுக்கு இடையே ஒரு ஊடகமாக சமூகப்
பங்குப்பரிவர்த்தனை செயல்படும். இத்திட்டத்தின்படி, லாப நோக்கற்ற நிறுவனங்களை பங்குச்
சந்தையில் பட்டியலிட முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு
வாரியமான செபி தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சமூகப் பங்கு பரிவர்த்தனை
தொடர்பான விதிகளை 2022ல் வெளியிட்டது.
இந்நிலையில், தேசியப்
பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தளத்தில், சமூக பங்குப் பரிவர்த்தனைக்கென்று தனிப் பிரிவை
அறிமுகம் செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
செபியின் வரையறைக்கு
உட்பட்ட லாபநோக்கற்ற நிறுவனங்களே சமூகப் பங்கு பரிவர்த்தனைப் பிரிவில் பதிவு செய்துகொள்ள
முடியும். சமூகப் பங்குப்பரிவர்த்தனையில் பெருநிறுவன அமைப்புகள், அரசியல் அல்லது மத
அமைப்புகள் , தொழில்முறை அல்லது வர்த்தக சங்கங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மலிவு
விலையில் வீடுகளை அளிக்கும் நிறுவனங்களைத் தவிர பிற வீட்டு வசதி நிறுவனங்கள், இடம்
பெற்று நிதி திரட்ட முடியாது. பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள்
லாப நோக்கற்ற நிறுவனங்களாக செபி அங்கீகரித்துள்ளது.
செபியின் கட்டமைப்பின்படி,
சமூகப் பங்குபரிவர்த்தனைத் திட்டத்தில் லாப நோக்கற்ற நிறுவனங்களின் குறைந்தபட்ச வெளியீட்டு
அளவு ₹1 கோடியாகவும், குறைந்தபட்ச விண்ணப்ப அளவு ₹2 லட்சமாகவும் இருக்கவேண்டும்.
2 லட்சம் ரூபாய்
வரை முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்கள் சமூகப் பங்குபரிவர்த்தனையில் முதலீடு
செய்ய அனுமதிக்கப்படவில்லை. நிறுவன முதலீட்டாளர்களே இதில் முதலீடு செய்யலாம். இலாப
நோக்கற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிதிக்கருவிகளை இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம்
செய்யக் கிடைக்காது.
இந்தியாவில் சமூகப்
பங்குபரிவர்த்தனைத் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாக கருதப்படுகிறது. ஹோமியபதியில்
வேண்டுமானால் விசத்தை விசத்தால் முறிக்கலாம். சமூக அறிவியலில் அது சாத்தியமா?. சமூகத்தில்
எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி, நலிவடைந்தப் பிரிவினரை முதலாளித்துவ சந்தை அமைப்பு
தான் உருவாக்குகிறது. அதே முதலாளித்துவ சந்தை அமைப்பு நேர்நிறைத் தாக்கங்களுடன் தான்
உருவாக்கிய நலிவடைந்த பிரிவினரைத் பங்குச்சந்தையின் மூலம் தூக்கிவிடப்போகிறதாம்!. பெரும்பாலான
லாப நோக்கற்ற தனியார் அமைப்புகள் பெரு முதலாளிகள்
தங்களது வருவாயை மடைமாற்றி வரிச்சலுகைகள் பெறவே ஏற்படுத்தப்படுகின்றன. தங்களது பெருலாபவேட்டையில்
ஓரிரு பறுக்கைகளை எறிந்து தங்களை தொண்டு செய்யும் மனிதநேயமிக்க கொடைவள்ளல்களாகக் காட்டிக்
கொள்கின்றனர். கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க முதலாளித்துவ சந்தை அமைப்புகளின் மூலம்
கார்பன் உமிழ்வு வர்த்தகம் செய்யப்பட்டது. அதனால் கார்பன் உமிழ்வு அதிகரித்ததே ஒழியக்
குறையவில்லை. சமூகப் பிரச்சினைகளுக்கு பங்குச்சந்தையில் தீர்வு காண்பதும் அதே போன்றதொரு
தர்க்கப் பொருத்தமற்ற முயற்சிதான். பெரும் முதலாளிகளின் பணத்தை மடைமாற்ற மட்டுமே இத்திட்டம்
உதவும். பங்குச்சந்தையில் நிதிதிரட்ட அரசியல் கட்சிகள் பட்டியலிடப்பட அனுமதிக்கப்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்டியலிடாமலே தேர்தல் பத்திரங்கள் மூலம் அதை சாத்தியமாக்கி
தன் கட்சிக்கு நிதி திரட்டியது தான் பாஜக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை