1960களில் இருந்து, உலக வங்கி கடன் வாங்கும் நாடுகளின் உள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது, ஆனபோதும், அவற்றை அரசியல் தலையீடுகள் என்பதை
உலக வங்கி மறுக்கிறது. அதன் கொள்கைகள் அதிகார அமைப்புகளுடன் தொடர்பில்லாதவை என்றும் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் இரண்டும் தனி கோளங்கள் என்றும்
விளக்கமளிக்கிறது.
உலக வங்கி சாசனத்தின் பிரிவு 4ன், 10வது பகுதியில் (Article 4, section 10 ) பின்வருமாறு
குறிப்பிடுகிறது:
உலக வங்கியும் அதன் அதிகாரிகளும் எந்த உறுப்பு நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள்; அல்லது உறுப்பு நாடுகளின் அரசியல் பண்புகள் அவர்கள் முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடாது, அவர்களின் முடிவுகள் பொருளாதார அடிப்படையில்
எடுக்கப்படும். இந்த பரிசீலனைகள் பிரிவு I இல் கூறப்பட்டுள்ளது போல் பாரபட்சமற்ற முறையில் எடைபோடப்படும்
ஆயினும்கூட, உலக வங்கி அதன் சாசனத்தின் நிபந்தனைகளை மீறி 'அரசியல்' மற்றும் 'பொருளாதாரம் சாரா' பல முறையான வழிகளைக் கண்டறிந்துள்ளது
உலக வங்கி அதன் சட்டங்களின் பிரிவு 4 ஐ மீண்டும் மீண்டும் மீறியுள்ளது. உண்மையில், உலக வங்கி அரசியல்
அடிப்படையில்
பல தேர்வுகளை செய்துள்ளது- தேச அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளின் தரத்தின் அடிப்படையில் தேர்வுகளைத் தீர்மானிப்பதில்லை. அவற்றின் தரம் மோசமாகவும், ஊழல் மலிந்துக் காணப்பட்ட போதும் அடிக்கடி பணம் கொடுத்துள்ளது.
உலக வங்கியின் தேர்வுகள் வங்கியின் முக்கிய பங்குதாரர்களின் நலன்கள் மற்றும் கண்ணோட்டங்களுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.
1947 முதல் சோவியத் முகாமின் சரிவு வரை, உலக வங்கி, சர்வதேசப் பண நிதியத்தின் முடிவுகள் பின்வரும் அளவுகோல்களால் பெருமளவில் தீர்மானிக்கப்பட்டது.
Ø சுயசார்பான
பொருளாதார மாதிரிகள் உருவாவதைத் தவிர்த்தல்;
Ø பெரிய மெகா திட்டங்கள் (WB) அல்லது கொள்கைகளுக்கு நிதி வழங்குதல், வளர்ந்த நாடுகளின்
ஏற்றுமதியை அதிகரிக்கும் விதத்தில் நிதி வழங்குதல்.
Ø அமெரிக்க
அரசு அல்லது பிற முக்கியப் பங்குதாரர்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஆட்சிகளுக்கு உதவ மறுப்பது.
Ø சோவியத்
கூட்டமைப்பில் உள்ள சோசலிச
நாடுகளின் அரசு கொள்கைகளை மாற்றியமைக்க முயற்சி செய்து அதன் மூலம், அந்நாடுகளின்
ஒற்றுமையை பலவீனப்படுத்துதல். அதனால்தான் 1948ல் சோவியத் கூட்டமைப்பிலிருந்து
பிரிந்த யூகோஸ்லாவியாவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. காம்கானிலிருந்தும், வர்ஷா ஒப்பந்தத்திலிருந்தும்
விலகிய போது ருமேனியாவுக்கு ஆதரவு
அளிக்கப்பட்டது.
Ø மேற்கத்திய முதலாளித்துவ முகாமின், குறிப்பாக அமெரிக்காவின், மூலோபய கூட்டாளிகளை ஆதரித்தல்.
Ø 1965 முதல் இந்தோனேசியாவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது, மொபுடுவின் ஆட்சியிலிருந்த போது
ஸயிரேவுக்கும் (Mobutu's
Zaire), மார்கோஸின் ஆட்சியிலிருந்த பிலிப்பைன்ஸுக்கும், 1964 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு பிரேசிலில் ஆட்சிசெய்த சர்வாதிகாரிகளுக்கும், சர்வாதிகாரி சோமோசாவின் நிகரகுவாவுக்கும், தென்னாஃப்ரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கும்
ஆதரவளிக்கப்பட்டது.
Ø முடிந்தவரை, மூன்றாம் உலக நாடுகளுக்கும், சோவியத் கூட்டமைப்பு, சீனாவுடனான நெருங்கிய இணைப்புகளைத் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்தல். உதாரணமாக, சோவியத் ஒன்றியத்தை, இந்தியாவிலிருந்தும், சுகர்னோ காலத்திலிருந்த இந்தோனேசியாவிலிருந்தும் விலக்கி வைத்தது.
இந்தக் கொள்கையைச் செயல்படுத்த, உலக வங்கியும், சர்வதேசப் பண நிதியமும்
சில உத்திகளை பொதுமைப்படுத்தின.
வலுவான இடதுசாரியை எதிர்கொண்ட வலதுசாரி அரசுகளுக்கு சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில் அதிக நெகிழ்வுத்தன்மை அளித்தல். வலுவான வலதுசாரி எதிர்ப்பை எதிர்கொள்ளும் இடதுசாரி அரசுகளுக்கு நிபந்தனைகளைக் கடுமையாக்கின. சர்வதேச நிதி நிறுவனங்கள் (IFI) இடதுசாரி அரசுகளை பலவீனப்படுத்தும் விதத்தில் கடுமையான நிபந்தனைகளை முன் வைத்து,
அங்கு வலதுசாரி அரசுகள் ஆட்சிக்கு வருவதை எளிதாக்கின. அதே தர்க்கத்தின்படி, வலதுசாரி அரசுகள் பலவீனப்படுவதைத்
தவிர்க்கும் விதமாகக் குறைந்த நிபந்தனைகளே முன்வைக்கப்பட்டன. அவ்வாறு அங்கு இடதுசாரிகள்
ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டது.
கேத்தரின் க்வின் கருத்துப்படி, ஃபிரெஞ்சு ஆட்சிக் கூட்டணியில்
ஃபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் வரை பிரான்சுக்கு எவ்விதமான கடனும் வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக
ஃபிரெஞ்சு ஆட்சிக் கூட்டணியில் இருந்து ஃபிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டது. அதற்குப்
பிறகே உலக வங்கியின் பிரதிநிதி ஃபிரான்சிற்கு $250 மில்லியன் கடன் அளித்தார். உலக
வங்கி மற்றும் அதன் அரசியல் தேர்வுகள் மீதான அமெரிக்க நிர்வாகத்தின் நேரடியானத் தாக்கத்தை இது தெளிவாகக் காட்டுகிறது.
1947ல், போலந்து, செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில்
இருப்பதால் அந்நாடுகளுக்குக் கடனளிப்பதை
அமெரிக்கா தடுத்தது.
குவாத்தமாலாவால் 1955ல் அதன் "கம்யூனிஸ்ட்" ஆட்சி நீக்கப்பெறும் வரை
' உலக வங்கியிடமிருந்து கடன் பெற இயலவில்லை. 1979இல் சோமோசாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா பல்வேறு அரசியல் முயற்சிகளால், பொருளாதார மற்றும் இராணுவ வழிமுறைகளால், புதிய சாண்டினிஸ்டா அமைப்பைத் தூக்கியெறிந்தது. இதை எதிர்த்து நிகரகுவா அமெரிக்காவின் மீது ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 1986இல் அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறி மற்றொரு நாட்டின் இறையாண்மையை மீறியதைக் கண்டனம்
செய்து தீர்ப்பு
வழங்கப்பட்டது.
1969இல் சால்வடார் அலெண்டே ஆட்சியின் போது அமெரிக்க அரசின் அழுத்தத்தினால் அந்நாட்டிற்குக் கடன் மறுக்கப்பட்டது.
1970 முதல் 1973 வரை சிலி நாட்டுக்கான கடன்கள் அமெரிக்காவால் நிறுத்தப்பட்டது.
சிலியின் செப்புச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு அலெண்டே அரசிற்கு கடன் கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா உலக வங்கிக்கு அழுத்தம் கொடுத்தது. அழுத்தம் இருந்தபோதிலும், சிலி உலக வங்கியின் நடைமுறைகளுக்கு இணங்கியதால் உலக வங்கி சிலிக்கு தூதுக்குழுவை
அனுப்பியது. அலெண்டே ஆட்சியின் காலம் முழுவதும், சிலி புதியக் கடன் எதையும் பெற இயலவில்லை. 1973இல் அலெண்டே படுகொலை செய்யப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் பினோசேயின் இராணுவ ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, உலக வங்கி மீண்டும் சிலிக்குக் கடன் வழங்கத் தொடங்கியது.
1959இல் ஒரு மாபெரும் புரட்சிகரமான சூறாவளி அமெரிக்காவை உலுக்கியது. அமெரிக்காவின் அருகில் இருந்தபடியே
கியூபாவில் புரட்சி இறுதியாக வெற்றி பெற்றது. புரட்சி காட்டுத்தீ போல் மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்க வாஷிங்டன் லத்தீன் அமெரிக்க அரசுகளுக்கும் மக்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உலக வங்கியின் வரலாற்றாசிரியரும், பெரு நாட்டின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவருமான ரிச்சர்ட் வெப், இந்த நிகழ்வின் விளைவுகளை நினைவு கூர்ந்துள்ளார். 1959 மற்றும் 1960 க்கும் இடையில், ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சியின் முழு பலனையும் லத்தீன் அமெரிக்கா பெற்றது. அமெரிக்க உள்நாட்டு வளர்ச்சி வங்கியை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
பொருட்களின் விலையை நிர்ணயிக்கவேண்டும் என்ற லத்தின் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பிறகு ஒரு காபி ஒப்பந்தம் செப்டம்பர் 1959 இல் கையெழுத்தானது. 1960இன் ஆரம்பத்தில், கியூபா சொத்துக்களை நாட்டுடைமையாக்கியதற்குப்
பிறகும், சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகும் உதவிசெய்யும்
வேகம் தொடர்ந்து அதிகரித்தது.
தென் அமெரிக்காவிற்கு ஐசனோவர் பயணம் செய்தார். 'அமெரிக்கா திரும்பியவுடன்' அவர் எழுதினார். லத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களின் நன்மைக்காக சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட வரலாற்று நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளேன் என்று எழுதியுள்ளார்.
உலகின் புரட்சிகர கொந்தளிப்பை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி தொடர்ந்து எங்களுக்கு முன்னால் உள்ளது. பிரச்சனைக்குரிய இடத்தில் மக்களின் அமைதியின்மையைத் தணிக்க புதியக் கொள்கைகள் எங்களுக்குத் தேவைப்படுகிறது. ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி நூற்றுக்கணக்கான தொழிற்கல்வி பள்ளிகளை தொடங்கவேண்டும். உலகில் புரட்சித்தீ
பரவாமல் இருக்க சில பழைய யோசனைகளை நாமே செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஐசனோவர் கூறியுள்ளார்
லத்தீன் அமெரிக்காவை நோக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு கூர்மையான மாற்றம் கொண்டுவரப்படும் என்றும்
நிலச் சீர்திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்வதாகவும் அரசு செயலாளர் கிறிஸ்டியன் ஏ. ஹெர்ட்டர் பான் அமெரிக்க ஒன்றியத்திடம் தெரிவித்தார்.
உலக வங்கி அமெரிக்க நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டது அமெரிக்காவின் அழுத்தத்தின்
காரணமாக உலக வங்கி வியட்நாமுக்குக் கடனளிப்பதை நிறுத்தியது.
உலகவங்கி சாண்டினிஸ்டாவுக்குக்
கடன் கொடுப்பதை நிறுத்தியது. சாண்டினிஸ்டாவினர் உலக வங்கியிடம் மீண்டும் கடன் அளிக்குமாறு தீவிரமாக வலியுறுத்தினர். எந்தக் கொடிய
கட்டமைப்பு சீர்திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினர். ஆனபோதும்
உலகவங்கி கடனளிக்க முன்வரவில்லை. 1990ல், அமெரிக்க ஆதரவுடைய வேட்பாளர் வயொலெடா பேரியோஸ் டெ சாமொர்ரொ, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே சாண்டினிஸ்டாவுக்கு
உலக வங்கி நிதி வழங்கியது.
1989-91க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம் வீழ்ந்து பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட
பிறகு, மொபுட்டுவின் ஆட்சிக்கு மேலும் ஆதரவு வழங்க
அவசியம் இல்லை என உலக வங்கி கருதியது. ஸாயிரே உட்பட பல ஆஃப்ரிக்க நாடுகளில், தேசிய மாநாடுகள் ஜனநாயகத்தைக் கோரின. அதன் பிறகு உலக வங்கிக் கடன்கள் குறைக்கப்பட்டு 1990களின் நடுப்பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
முக்கிய முதலாளித்துவ சக்திகளின் மூலோபய, அரசியல் நலன்கள் தான் உலக வங்கியின் முடிவுகளைத்
தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. பெரிய முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன் சரியான பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்படாமல் இருந்தாலும் மனித உரிமைகளை மதிக்கத் தவறினாலும் பல அரசுகள் நிதி உதவியைப் பெற்றனர். பெரும் சக்திகளுக்கு விரோதமான ஆட்சிகளுக்கு பொருளாதார அளவுகோல்கள்
நிறைவேற்றப்படவில்லை என்ற சாக்குபோக்கைக் கூறிக் உலக வங்கி கடன் வழங்கவில்லை.
பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களின் இந்தக் கொள்கைகள் பனிப்போரின் இறுதியில் கைவிடப்படவில்லை இன்றுவரை தொடர்கிறது.
1950கள் மற்றும் 1960களில் உலக வங்கி காலனித்துவ சக்திகளுக்கு தொடர்ந்து கடன்களை வழங்கியது. காலனி நாடுகளின் இயற்கை வளங்கள், மக்களின் மீதான சுரண்டலை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்த ஆதரவளித்தது.
காலனிகளுக்கு விடுதலை அளிக்காத போர்ச்சுகலுக்கு எந்த நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கக்கூடாது என்று 1965இல் வாக்களிக்கப்பட்ட ஐ.நா தீர்மானத்தை உலக வங்கி நிறைவேற்ற மறுத்தது. 1973இல் சிலியில் பினோசேயின் சர்வாதிகாரத்திலும், 1972இல் ஃபிலிப்பைன்ஸில் ஃபெர்டினாண்ட் மார்கோஸின் சர்வாதிகாரத்திலும், செயல்படுத்தப்பட்ட புதிய தாராளமயம் படிப்படியாக உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ஆட்சிகளும் உலக வங்கியால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டன. அத்தகைய ஆட்சிகள் இறுதியில் வீழ்த்தப்பட்டு ஜனநாயக ஆட்சிகள் பொறுப்பேற்றுக் கொண்ட போது முன்னாள் சர்வாதிகார அரசுகள் ஒப்பந்தம் செய்த கடன்களை திருப்பி செலுத்துமாறு உலக வங்கி கட்டாயப்படுத்தியது. உலகவங்கியின்
நிதியுதவியும், சர்வாதிகார ஆட்சிகளுக்கான ஆதரவும் அந்நாடுகளின் மக்கள்
மீதான பெருஞ்சுமையாக மாறியது. மக்களை ஒடுக்குவதற்கு
ஆயுதங்கள் வாங்க
சர்வாதிகாரிகள் பெற்றக் கடன்களை மக்களே திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது.
உலக வங்கியானது அதன் சில உறுப்பு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத் தரநிலைகளுக்கு அறவே மதிப்பளிக்காதப் போக்கைக் கொண்டுள்ளது.
உலக வங்கியானது நிரந்தர ஆட்சிக்கவிழ்ப்புகளை அரங்கேற்றியுள்ளது.
சமூக விரோதக் கொள்கைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்த சர்வாதிகார ஆட்சிகளை -அவை இராணுவ சதிப்புரட்சியின் விளைவாக ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும்- உலகவங்கி ஆதரித்துள்ளது,
அவற்றின் குற்றங்களை ஆதரித்துள்ளது.
ஒரு இராணுவ சதி அல்லது ஜனநாயக அரசுகளுக்கு எதிரான வெளிப்படையான குற்றவாளிகளை ஒளிவு மறைவின்றி உலக வங்கி ஆதரித்துள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது அதன் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக இல்லவேயில்லை.
எந்த ஐநா அமைப்பும் தென்னாஃப்ரிக்காவின்
நிறவெறி ஆட்சிக்கு நிதியளிக்கக்கூடாது என்று 1964இல் ஐநா
பொது
அவையால் வாக்களிக்கப்பட்ட
தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உலக வங்கி மறுத்துவிட்டது. ஐநா சாசனத்தை மீறி 1951 முதல் 1968 வரை தென்னாஃப்ரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்தது.
பல சமயங்களில் மனித உரிமைகளை மேம்படுத்துவது வளர்ச்சிக்கு ஒரு தடைக் கல்லாகக் கருதப்படுகிறது. சமத்துவமும் ஒரு தடையாக பார்க்கப்படுகிறது. சர்வதேசப்
பண நிதியமும், உலக வங்கியும் சர்வாதிகாரத்தை
சந்தர்ப்பவாதத்தால் ஆதரிக்கத் தயங்கவில்லை.
ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பால் வெளியிடப்பட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் ஆசிரியர் (1994 பதிப்பு) கருப்பு வெள்ளையாக இவ்வாறு கூறுகிறார்:
ஜனநாயகம், சர்வாதிகார ஆட்சிகள் பெற்ற தனிநபர் அலுவல் சார் வளர்ச்சி
உதவியின் படி (per capita
ODA), உலக
வங்கியின் வாய்ச்சவடால்
யதார்த்தத்தை விட மிகவும் முன்னால் இயங்குகின்றது. உண்மையில், 1980களில் தேச அரசுகள் பெறும் உதவிக்கும்
அங்குள்ள மனித உரிமை
மீறல்களுக்கும் இடையிலான உறவு எதிர்விகிதத்தில் இருந்தது. பலதரப்பு கடனளிப்பவர்கள் இது போன்ற காரணங்களால் கவலைப்படவில்லை. அவர்கள் இராணுவச் சட்ட ஆட்சிகளை ஆதரித்தனர், அங்கே அரசியல் நிலைத்தன்மையும்,
பொருளாதார மேம்பாடும் உறுதி செய்யப்படும் என்றுக் கருதினர். பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் இராணுவச் சட்டத்தை நீக்கிய பிறகு, உலகவங்கி அளித்த மொத்தக் கடனில்
அவற்றின் பங்குகள்
குறைந்துவிட்டன.
1946ஆம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான அமெரிக்க முடிவால் நாட்டில் வளமான காலம் துவங்கியது. இரண்டாம் உலகப் போரை அடுத்து பல புவிசார் மூலோபய காரணங்களுக்காக, அவர்கள் வேறு இடங்களில் நிராகரித்த கொள்கைகளை ஃபிலிப்பைன்ஸில் செயல்படுத்துவதை அமெரிக்கா அனுமதிக்கத் தயாராக இருந்தது. ஃபிலிப்பைன்ஸ் அரசு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான கொள்கைகளை செயல்படுத்த அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்க சகிப்புத்தன்மை குறுகிய காலமே நீடித்தது.
உலக வங்கியும், சர்வதேச பண நிதியமும்
சர்வாதிகாரத்தை பகிரங்கமாக எந்த அளவுக்கு ஆதரித்தார்கள் என்றால்
மணிலாவில் சர்வாதிகார
ஆட்சியின் போது 1976ஆம் ஆண்டில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. உலக வங்கி சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளை சிறிதும் விமர்சிக்கவில்லை. கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தாமதமாக செயல்படுத்துவது குறித்து மட்டுமே கவலைப்பட்டது. ஃபிலிப்பைன்ஸில்
கடைபிடித்த அதே உத்தியை மூலோபய முக்கியத்துவம் கொண்ட இடமான துருக்கியிலும் கடைபிடித்து
சர்வாதிகார ஆட்சியை உலகவங்கி மிகவும் ஆதரித்தது.
உலக வங்கி இந்தோனேசியாவின் உள் விவகாரங்களில் தலையிட்டது. அண்டை நாட்டிற்கு எதிராக 1975இல் கிழக்கு திமோரை ஆக்கிரமித்த, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்யும் சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு அளித்தது. இந்தோனேசியாவில் மெகா திட்டங்களை செயல்படுத்தியது. சர்வதேச
நிறுவனங்களின் லாபத்திற்காக இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. பழங்குடி மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1997இல், இந்தோனேசியா தென்கிழக்கு ஆசிய நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பொருளாதார நிலைமையை மோசமாக்கியது. சமூகப் பேரழிவுகளை ஏற்படுத்தியது. 2004ல் சுனாமி வந்தபோதும் கூட கடன் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு உலக வங்கி இந்தோனேசியாவிற்கு அழுத்தம்
கொடுத்தது.
(தொடரும்)
