Monday, August 15, 2022

பொருளாதார அறிஞர் எரிக் டுசாண் எழுதிய “உலக வங்கி ஒரு முக்கிய அரிச்சுவடி” – “The World Bank: a Critical Primer Eric Toussaint” புத்தகத்தின் சாரம் (1):

 


உலகப் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவதற்கான  முக்கிய அமைப்பு அல்ல உலக வங்கி. அமெரிக்கா தலைமையிலான பெரும் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான ஒரு கருவியே உலக வங்கி. இந்தப் புத்தகம் உலக வங்கியின் ஆவணங்களின் பெரும் தொகுப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக 15,000 பக்கங்களுக்கு மேல் ஆவணங்களைப் படித்துள்ளார் எரிக் டுசாண். மேலும் வாசகர் வேறெங்கும் காணக்கிடைக்காத, உலக வங்கியின் காப்பகங்களில் உள்ள அதிகம் அறியப்படாத உண்மைகளையும், வாதங்களையும் இப்புத்தகத்தின் மூலம் அறியப்பெறச் செய்துள்ளார் எரிக் டுசாண்.

உலக வங்கி முக்கியமாக இரண்டாம் உலகப் போரால் அழிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் புனரமைப்பிற்காக உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாடுகளால் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய முடியரசால் உலக வங்கியின் நோக்கமாக முதலாவதாகக் கருதப்பட்டது; ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவது. இரண்டாவதாக தெற்கில் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது. இந்த இரண்டாவது பணிதான் 'வளர்ச்சி' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. உலக வங்கி முதலில் அனைத்து காலனியாதிக்க சக்திகளுக்கும் (ஐக்கிய முடியரசு, பிரான்ஸ், பெல்ஜியம்) காலனிகளை மிகவும் திறம்பட சுரண்ட உதவியது. பின்னர், இந்த காலனிகள் சுதந்திரம் அடைந்த பிறகு, காலனியாதிக்க சக்திகள் இயற்கை வளங்கள், மக்களை சுரண்டுவதற்குப் பெற்றக் கடன்களை திரும்ப செலுத்தும் பொறுப்பை காலனி நாடுகளின் மீதுத் திணித்தது. உலக வங்கிக் கொள்கையானது சோஷலிசப் புரட்சி உலகெங்கும் பரவும் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில் பனிப்போருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது.

1949 சீனப் புரட்சியானது, வாஷிங்டனில் உள்ள தலைவர்களை அவர்களின் மூலோபாய உத்திகளில் கம்யூனிச 'தொற்று' பரவுவதைத் தடுக்க 'குறைந்த வளர்ச்சி' பரிமாணத்தை இணைத்துக்கொள்ளக் காரணமானது.

உலக வங்கி செயல்ட ஆரம்பித்ததிலிருந்தே, வங்கியின் கொள்கைகள் பனிப்போரின் சூழலாளும், அமெரிக்க நலன்களாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இன்று வரை, அமெரிக்கா மட்டுமே உலக வங்கியில் அதிக வீட்டோ உரிமையைக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரால் அழிக்கப்பட்ட நாடுகளின் புனரமைப்பிற்காகவே உலக வங்கி முக்கியமாக உருவாக்கப்பட்ட போதிலும், ஐரோப்பாவின் புனரமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை தன் சொந்த முயற்சியில் தொடங்கவே அமெரிக்கா விரும்பியது, ஏனெனில் அதன் மூலம் செயல்பாடுகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதோடு, நன்கொடைகளை விரும்பியவருக்கு வழங்கவும் முடியும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.

உலக வங்கி, சர்வதேச பண நிதியத்தின் தலைமையகம் எங்கு நிறுவப்படவேண்டும் என்று முடிவு செய்யும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்க நிதியமைச்சகம் தலைமையகத்தில் தன் தாக்கத்தை செலுத்தும் விதமாக அருகில் வாஷிங்டனில் நிறுவப்பட வேண்டும் என்று விரும்பியது. பல வெளிநாட்டு பிரதிநிதிகள் தலைமையகம் அமெரிக்க அரசிடம் இருந்து தொலைவில் இருக்கவேண்டும் என்றும் காலப்போக்கில் அதை ஐநா அமைப்பிற்கு அருகில் கொண்டுவரவேண்டும் என்றும் விரும்பினர். ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் வங்கி மற்றும் சர்வதேசப் பண நிதியத்தின் தலைமையகம் ஆகியவை அமெரிக்க காங்கிரஸிலிருந்தும் தூதரகங்களின் செல்வாக்கிலிருந்தும் தொலைவில் வைக்கப்படவேண்டும் என்று வெளிப்படையாகவேக் கூறியிருந்தார். உண்மையில், கெய்ன்ஸ் தலைமையகத்தை லண்டனில் கொண்டுவர முயற்சித்தார்.

அமெரிக்காவின் நிதிச் செயலாளர் ஹென்றி மொர்கெந்தாவ் அவர் அறிவித்தபடி, தலைமையகத்தை கருவூலம் மற்றும் வால் ஸ்ட்ரீட்டிடமிருந்து தொலைவில் வைக்கவே விரும்பினார். இதனால் மொர்கெந்தாவ், ஹாரி வைட் மற்றும் எமிலியோ கொலாடோ ஆகியோர் பின்னர் வால் ஸ்ட்ரீட் கொடுத்த அழுத்தத்தினால் வெளியேற்றப்பட்டனர். 1947 முதல் மிக விரைவாகவே பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களான உலக வங்கியும், சர்வதேசப் பண நிதியமும் அமெரிக்க நிதியமைச்சகம், வால் ஸ்ட்ரீட்டின் இரட்டை மேற்பார்வையின் கீழ் வந்தன .

உலக வங்கியின் இயக்குநர்கள் குழுவின் மீதான, அமெரிக்க அரசின் தேவையற்ற செல்வாக்கைத் தவிர்ப்பதற்காக கெய்ன்ஸ் அதன் உறுப்பினர்களின் (நிர்வாக இயக்குநர்கள்) செயல்பாடுகளை உலக வங்கி தலைமையகத்திலும், அவர்கள் சொந்த நாட்டிற்காகவும் செயல்படும் விதமாக பகுதிநேர ஊழியர்களாக செயல்படவேண்டும் எனப் பரிந்துரைத்தார். ஆனால் அமெரிக்க நிதியமைச்சகத்தின் முன்மொழிவே செயல்படுத்தப்பட்டது. நிர்வாக இயக்குநர்கள் வாஷிங்டனில் நிரந்தர குடியிருப்பாளர்களாக ஆக்கப்பட்டனர். இறுதியில் வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு ஐந்து நிமிட நடைப்பயணத்தில் உலக வங்கி, சர்வதேசப் பண நிதியம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைமையகம் அமைக்கப்பட்டது.

1946 முதல் இன்று வரை உலக வங்கியின் பத்து தலைவர்களில், முதலாவது உட்பட ஏழுபேர், வணிக உலகில் இருந்து நேரடியாக வந்தவர்கள்உலக வங்கியின் தலைமைக்கு, அமெரிக்க அரசியல் அதிகார வணிக வட்டங்கள், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்துடன் நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. உலக வங்கியின் முடிவுகள் பெரும்பாலும் குழுவின் உறுப்பினர்கள்  வாக்களிப்பதற்கு முன் அமெரிக்காவால் அதன் செல்வாக்கின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.

வளரும் நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்த மார்ஷல் திட்டம் எதுவும் இல்லை எனவே வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சன்ஃபெட் (சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியம்) என்ற புதிய .நா அமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை வளரும் நாடுகளல் முன்வைக்கப்பட்டது. அவ்வமைப்பு, ‘ஒரு நாடு, ஒரு வாக்கு முறையை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தொழில்களுக்கான கடன்களை எளிதாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. வளர்ந்த நாடுகள் இந்த முன் மொழிவைக் கடுமையாக எதிர்த்தன. இதனால் சன்ஃபெட்- சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உலக வங்கி வரலாற்றாசிரியர்கள் மேசன், ஆஷர்கேத்தரின் க்வின் விவரித்தபடி, 1954 இல் அமெரிக்கா இத்திட்டத்திற்கு மாற்றை முன்மொழிந்து 1956இல் சர்வதேச நிதிக் கழகத்தை (IFC), உருவாக்கியது.

இவ்வமைப்பு வளரும் நாடுகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது. இப்புதிய முயற்சி வளரும் நாடுகளின் அதிருப்தியைத் தணிக்கத் தவறியது; வளரும் நாடுகளின் சன்ஃபெட்-சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியத்திற்கு ஆதரவான பிரச்சாரம் வலுப்பெற்றது. 1958 இல், இந்த சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியம் முன் முதலீடுகளுக்கு நிதியளிக்க அங்கீகரிக்கப்பட்டது.

.நாவில் பல மூன்றாம் உலக நாடுகளும் சன்ஃபெட்-சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியத்தை ஒருங்கிணைத்து உருவாக்க வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இத்திட்டத்தை அமெரிக்காவும், மற்ற வளர்ந்தநாடுகளும் விரும்பவில்லை. அதற்கு மாற்றாக உலக வங்கியின் கிளையாக சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பை (ஐடிஏ) உருவாக்கலாம் என அமெரிக்கா முன்மொழிந்தது.

கெடுவாய்ப்பாக, மூன்றாம் உலக முகாம் விரைவில் பிளவுபட்டது. முதலில் சன்ஃபெட் - சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியத்தை ஆதரித்த இந்தியாஅமெரிக்காவின் இரண்டாவது முன்மொழிவை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்த திட்டம் சன்ஃபெட் - சிறப்பு ஐக்கிய நாடுகளின் நிதியத்துக்கு மாற்றாக உலக வங்கியுடன் இணைந்த ஒரு சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பை (IDA) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பெரிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்துவதால் ஐடிஏ மூலம் இந்தியா பயனடையும் என்பதில் வாஷிங்டன் சார்பு இந்திய லாபி உறுதியாக இருந்தது. பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்கள் இந்தியாவின் மூலோபாய நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளும் என்றும் கருதியது. இந்தியா கருதியது சரிதான்: சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பின் முதல் ஆண்டில், மொத்தக் கடனில் 50% இந்தியா பெற்றது.

மார்ஷல் திட்டத்தின் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்தது போல சோவியத் யூனியன், சீனாவைச் சுற்றியுள்ள மூலோபய இடங்களில் உள்ள நாடுகளான தைவான், கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கம்யூனிசம் பரவுவதைத் தடுக்க 1950களில் அமெரிக்கா அதிக உதவி செய்தது.

எடுத்துக்காட்டாக, 1953 முதல் 1961 வரை, மற்ற இந்தியா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிரேசில் மற்றும் நைஜீரியா போன்ற வளரும் நாடுகளுக்கு உலக வங்கி கடன் கொடுத்ததை விட தென் கொரியாவிற்கு அமெரிக்கா அதிக நிதி அளித்தது. தென் கொரியாவிற்கு 2500 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டது. மேலேக் குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளுக்கு 2323 டாலர் கடன் அளிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில், அமெரிக்கா தைவானுக்கு சுமார் 800 மில்லியன் டாலர் அளித்தது. சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் அருகிலான மூலோபாயமான இடத்தில் அமைந்திருப்பதால் தைவான் அதிகப் பலனடைந்தது. மூலோபாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியமான நடுத்தர வருவாயுடைய வளரும் நாடுகளில் குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கு ஆதரவாகவே அமெரிக்கா நிதி வழங்கியது.

ஃபிலிப்பைன்ஸ், எகிப்து, பாகிஸ்தான், துருக்கி, மொராக்கோ, துனிசியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

1950 இல் சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாறியபோது, உலக வங்கியில் இருந்து சீனாவை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  வெளியேற்றின. அதன் இடம் கம்யூனிஸ்ட் அரசின் எதிர்ப்பாளரான ஜெனரல் சியாங் காய்-ஷேக்கின் அரசிற்கு அளிக்கப்பட்டது அவரது அரசின் தலைமையகம் தைவான் தீவில் அமைந்திருந்தது. ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கு கம்யூனிஸ்ட் தொற்று பரவாமல் இருக்க, பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற சில நாடுகள் உலக வங்கியின் முறையான தலையீட்டின் மையமாக இருந்தன.

1956 இல், ஃபோர்டு மற்றும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைகளின் ஆதரவுடன் உலகவங்கி பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தை உருவாக்கியது. பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் ஆறு மாத பயிற்சி வகுப்புகளை உறுப்பு நாடுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளுக்கு வழங்கியது. 1957 மற்றும் 1971 க்கு இடையில், 1300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்பட்டனர். அவர்களில் பலர் ஏற்கனவே அந்தந்த நாடுகளில் பிரதமராகவோ அல்லது திட்டம் வகுப்பவர் அல்லது நிதி அமைச்சர் பதவிக்கோ உயர்ந்துள்ளனர்.

இந்தக் கொள்கை குழப்பமான தாக்கங்களை ஏற்படுத்தியது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச சட்ட மையம் (ILC) கொலம்பியாவில் 1949 முதல் 1972 வரை உலக வங்கி கொள்கை பற்றி மேற்கொண்ட ஆய்வில் உலக வங்கியால் நிறுவப்பட்ட சுயேச்சையான முகமைகள் அரசியல் கட்டமைப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் நாட்டின் சமூக வளர்ச்சி, அரசியல் கட்சி அமைப்பு, சட்டமன்றம், நீதித்துறையின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது என்ற முடிவைக் கண்டடைந்தனர்.

(தொடரும்)

 

 

 

 

(தொடரும்)

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...