Thursday, March 10, 2022

சமத்துவமின்மை தரவுதளத்திலிருந்து (World inequality database):

 

சமத்துவமின்மை தரவுதளத்தின் ஆய்வுகள் மேற்கத்திய ஆதிக்கம் மற்றும் காலனித்துவ பேரரசுகளின் எழுச்சியின் பின்னணியில் 1820 மற்றும் 1910 க்கு இடையில் உலகளாவிய சமத்துவமின்மை அதிகரித்ததாகவும், பின்னர் 1910 மற்றும் 2020க்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் நிலைப்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிடுகிறது. 1820 மற்றும் 1910 க்கு இடையில், நாடுகளுக்கு இடையிலும் மற்றும் நாடுகளுக்குள்ளும் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சமத்துவமின்மையின் இந்த இரண்டு கூறுகளும் 1910 மற்றும் 2020 க்கு இடையில் தனித்தனியாக நகர்ந்தன: 1910-1980இல் நாடுகளுக்குள் சமத்துவமின்மை குறைந்தது (நாடுகளுக்கிடையேயான சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்தது) ஆனால் 1980-2020 நாடுகளுக்குள் சமத்துவமின்மை உயர்ந்தது (நாடுகளுக்கிடையேயான இடையேயான சமத்துவமின்மை குறையத் தொடங்கியது ) இந்த முரண்பாடான மற்றும் ஈடுசெய்யும் பரிணாமங்களின் விளைவாக, 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய-காலனித்துவ முதலாளித்துவமானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த காலனித்துவ முதலாளித்துவத்தைப் போன்ற சமத்துவமின்மை நிலைகளை உருவாக்கியது, இருப்பினும் அது வேறுபட்ட விதிகள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறுகிறது.

1950-1980களில், சீனா, ரஷ்யா போன்ற சோசலிச, கம்யூனிச பொருளாதாரங்களிலும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற கலப்பு பொருளாதார ஆட்சிகளிலும் குறைந்த சமத்துவமின்மை நிலைகள் காணப்பட்டன. அதிகபட்ச சமத்துவமின்மை நிலை சஹாரா சார் ஆஃப்ரிக்காவிலும் மற்றும் மத்திய-கிழக்கு நாடுகளின் வட பகுதியிலும் காலனித்துவ காலத்தில் (.கா. எகிப்து, 1950களின் முற்பகுதி) காணப்பட்டது. தற்போது சமத்துவமின்மை அதிகமாக தென்னாஃப்ரிக்காவிலும் அதை விட சற்று குறைந்த அளவில் மெக்சிகோ, இந்தியாவில் காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நாடுகளுக்கு அப்பால் சமத்துவமின்மையில் ஒரு பொதுவான தன்மை வெளிப்படுகிறது: 1820 மற்றும் 1920க்கு இடையில் சமத்துவமின்மை சிறிது உயர்ந்தும் அதன் பிறகு 1980 வரை சற்றுக் குறைந்துள்ளது. 1980களுக்குப் பிறகு சமத்துவமின்மை உயர்ந்துள்ளது. வரலாற்று அடிப்படையில் குறிப்பாக 1900த்திலும் ஓரளவுக்கு 2020லும் எல்லா இடங்களும் சமமற்றதாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறது.

2022 உலக சமத்துவமின்மை அறிக்கையின் படி உலக மக்கள்தொகையில் ஏழ்மையான 50 சதவீதத்தினர் உலகின் மொத்த சொத்துக்களில் வெறும் 2% மட்டுமே கொண்டுள்ளனர். மாறாக, உலகின் 10% பெரும்பணக்காரர்கள் மொத்த சொத்துக்களில் 76% கொண்டுள்ளனர். 2019 மற்றும் 2021க்கு இடையில் உலகளாவிய பெரும்பணக்காரர்களின் சொத்து 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அரசின் ஒழுங்குமுறைகள் நீக்கப்பட்டு தனியார்துறையின் தலைமையிலான பொருளாதார வளர்ச்சியே அதிகரித்துள்ள பொருளாதார சமத்துவமின்மைக்கான முக்கியக் காரணமாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

சமீபத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், வறுமையின் அளவும் அதிகரித்துள்ளதாகக் கூறிய ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் வழிமுறைகளும் ஆக்ஸ்ஃபாம் பயன்படுத்தும் கணக்கீட்டு முறையும் தவறு என்றும் அது அரசாங்கத்தின் பல்வேறு மக்கள்நல முன்முயற்சிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மட்டுமல்ல, சமத்துவமின்மை தரவுதளத்தின் ஆய்வறிக்கை அதிக பொருளாதார சமத்துவமற்ற நாடாக இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் அதிக வருமானம் பெறும் முதல் ஒரு சதவீதத்தினரின் மொத்த வருமானத்தை, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினரின் மொத்த வருமானத்தால் வகுக்கும் போது கிடைக்கும் விகிதம் (T1/B50) 1820ல் 50ஆக இருந்து 1900ல் 59ஆக உயர்ந்துள்ளது. 1950ல் 29ஆக குறைந்த இந்த மதிப்பு 1980ல் 18ஆக மேலும் குறைந்துள்ளது ஆனால் 2020ல் இதுவரை இல்லாத அளவிற்கு 83ஆக உயர்ந்துள்ளது. புதுத் தாராளிய பொருளாதார சீர்திருத்தத்தால் இந்தியாவில் பொருளாதாரச் சமமின்மை உயர்ந்துள்ளதையே இது குறிப்பிடுகிறது. 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...