Sunday, August 2, 2020

பவன் சுக்தேவும், பசுமைப் பொருளாதாரமும்

இயற்கை வளங்கள் நமக்குப் பல விதமான பொருட்களையும், சேவைகளை வழங்கியிருக்கலாம், பல்லுயிர்களுக்கு உணவையும், உறைவிடத்தையும் தந்திருக்கலாம், நமக்குத் தாயாக, தோழமையாக இருந்து நம் பண்புநிலையை மேம்படுத்தியிருக்கலாம், அவற்றை எல்லாம் சொல்லித் தீராது. ஒன்றை இழக்கும் போது தான் அதன் மதிப்பு உணரப்படும் என்பார்கள், ஆனால் இந்த அளவிற்கு இயற்கை வளங்களை இழந்தும் அதன் மதிப்பை அரசும், நிறுவனங்களும், மக்களும் உணர்ந்தபாடில்லை.இயற்கை வளங்கள் அழிக்கப்படும் போது அது எல்லோரிடமும் வலியை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஒரு  ரூபாய் நோட்டை இழந்தால் ஒருவர் கவலை கொள்கிறார், ஏனென்றால் ரூபாய் நோட்டின் மதிப்பை அவர் அறிந்துள்ளார், ஆனால் இயற்கையின் மதிப்பை அவர் அறியவில்லை. இந்த முதலாளித்துவ சமூகம் கெடுவாய்ப்பாக நமக்கு பண மதிப்பை, சந்தை மதிப்பை மட்டுமே மதிக்கக் கற்றுத் தந்துள்ளது. அதனால் சந்தை மதிப்பு இல்லாத இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும், மனித சமூகம் புறக்கணித்து சீரழிக்கிறது.

 

இயற்கையின் மதிப்பை உணர்த்துவதற்கு பலரும் பல்வேறு முறைகளில் முயற்சித்து வரும் போது அதன் பொருளாதார மதிப்பு குறித்து முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர் இந்தியாவைச் சேர்ந்த பவன் சுக்தேவ். பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக பவன் சுக்தேவ் மேற்கொண்ட பெருமுயற்சிகளை அங்கீகரித்து சூழலியலில் நோபல் பரிசாக கருதப்படும் டைலர் விருது அவருக்கு மே மாதத்தில் வழங்கப்பட்டது. ஆனால் அவரது ஆய்வுகளுக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை ஊடகங்கள் அளிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.

 

 இளமைக் காலத்தில்:

 1960-ல் டெல்லியில் பிறந்து வளர்ந்த பவன் சுகதேவ், தன் இளமைக் காலத்தில் இயற்கையால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரமாக டெல்லி இருந்ததாகவும், அவரது பாட்டி வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களை சுற்றிப் பறக்கும் பழந்தின்னி வௌவால்களைக் காண முடிந்ததாகவும், இரவில் குள்ளநரிகள் ஊளையிடுவதைக் கேட்க முடிந்ததாகவும் நினைவு கூர்கிறார்.கோடை விடுமுறையின் போது, குடும்பத்தினருடன் சிம்லா,நைனிடால், முஸூரி போன்ற பல இடங்களுக்கு சுற்றுலா சென்ற போது இயற்கையின் இணையற்ற அழகை அவரால் ரசிக்க முடிந்தது. அது அவருக்கு இயற்கையின் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்தியது.அவர் பள்ளியில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். அவரது தந்தை சுவிட்சர்லாந்திற்கு பணிமாற்றம் பெற்றதால் அவர் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சென்றார். பவன் சுவிட்சர்லாந்திலும், பிறகு  இங்கிலாந்திலும் படித்தார். பவன் விஞ்ஞானியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு கிடைத்த உதவித்தொகை குறைவாக இருந்ததால் அவரால் அத்துறையிலேயே நீடிக்க முடியவில்லை.ஏமாற்றத்துடன் அவர் இயற்பியலை கைவிட்டு, ஒரு கணக்காளர் வேலை  பெறலாம் என்ற எண்ணத்துடன் பொருளாதாரத் துறைக்கு மாறினார். இயற்பியலில், ஒரு கோட்பாட்டை உண்மையாக நிரூபிக்க முடியாதபோது, ​​ கோட்பாடுகள் கைவிடப்படுகிறது. ஆனால் பொருளாதாரத்தில், கோட்பாடுகளுக்காக சில நேரங்களில் உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதும் பொருளாதாரத்தில் கணக்கில் கொள்ளப்படாத புறத்தாக்கமும்(Externality)அவருக்கு ஆரம்பத்தில் விசித்திரமாகப் பட்டது. ஒரு நல்ல ஊதியம் தரும் வேலை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டதால் அவற்றையெல்லாம் கொஞ்ச காலம் மறந்திருந்தார்.

 

வங்கியாளராக:

 23 வயதில் பவனுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து வங்கியில் வேலை கிடைத்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு டொய்ச் வங்கியின் இந்திய அலுவலகத்தில் பணி புரிந்தார். பின்னர் அவ்வங்கியின் ஆசிய பிராந்தியத்தின் இயக்குநராக உயர்ந்தார்.பவனுக்கு மஹிமா, ஆஷிமா என இரண்டு மகள்கள் பிறந்தனர். அவரது முதல் மகள் மஹிமா இயற்கையை வெகுவாக  நேசித்தார். தந்தையும், மகளும் இயற்கையையும், பறவைகளையும் ரசிப்பதிலும், அவற்றைப் படம் பிடிப்பதிலும் நேரத்தைக் கழித்தனர். இவ்வாறு குழந்தைப் பருவத்தில் இயற்கையின் மீது பவன் கொண்டிருந்த ஈடுபாடு மீண்டும் புத்துயிர் பெற்றது.அவரது இரண்டாவது மகள் ஆஷிமா மறுசுழற்சி செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர்.பேச ஆரம்பிப்பதற்கு முன்பே லீசைகிள்(Recycle) என்று சொல்லுவாராம். தன் மகள்களுக்கு பழைய அட்டைப் பெட்டிகளிலிருந்து பவன் ஒரு பொம்மை வீட்டை செய்து கொடுத்தார், அவருடைய இரண்டு மகள்களும் அதனுடன் மணிக்கணக்கில் விளையாடினர்.இயற்கையுடன் இருந்ததும், தனது மகள்களுடன் மறுசுழற்சி செயல்பாடுகளில் ஈடுபட்டதும் வங்கியாளரான தன்னை சூழலியல் பொருளாதார நிபுணராக மாறுவதற்கு ஊக்கமளித்ததாக அவர் கூறியுள்ளார்.

 

சிங்கப்பூரில் இருந்த பவனின் நண்பர் ஒருவர் அவரிடம், ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.அந்தக் கேள்வி அவர் வாழ்வையே மாற்றியது. “ஏன் சிலவற்றிற்கு பண மதிப்பு உள்ளது, சிலவற்றிற்கு இல்லை?” என்பதே அந்தக் கேள்வி. பவன் இந்தக் கேள்விக்கான பதிலை தேடிய போது, ​​பொருளாதார  அமைப்பில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தார். இயற்கை, குறிப்பிடத்தக்க பொருளாதார மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அது பெரும்பாலும் பொருளாதாரத் துறையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கருதினார். இயற்கையின் மதிப்பை கணக்கிடக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணரத் தொடங்கினார்.

 

பசுமை கணக்கீட்டு முறை(Green accounting):

பவன் சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவை ஆராயத் தொடங்கினார். அவர் பல புத்தகங்களைப் படித்தார்.நாடுகளின் செல்வத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் தரமதிப்பீடுகளில் அவர் குறிப்பாக ஆர்வம் காட்டினார்.ஒரு நாட்டின் ஜிடிபி-மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது என்று சொல்லப்படும் போது, ​​அந்த நாடு ஒரு பணக்கார நாடாக, வளமிக்க தேசமாக வளர்ந்து வருகிறது என்று பொதுவாக நினைக்கிறோம். ஆனால் அந்த வளர்ச்சிக்குப் பின்னே இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.தற்பொழுதுள்ள தேசியக் கணக்கீட்டு முறையின் மூலம் நாட்டின் செல்வ மதிப்பானது சரியாகக் கணக்கிடப்படுவதில்லை. செல்வ மதிப்பானது தேசிய அளவில் ஜிடிபியாகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தி), நிறுவனங்கள் அளவில் லாபமாகவும் அளவிடப்படுகிறது. ஆனால் ஜிடிபியில்-மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மனித மூலதனம் (அறிவு மற்றும் திறன் பயிற்சி) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. காடுகளின் இழப்போ, நீர் மாசுபாடோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இது இயற்கை வளங்கள், இயற்கை மூலதனம் அழிய காரணமாகிறது, இதனால் மக்களின் வறுமை நிலை மேலும் தீவிரமாகிறது. இந்தியாவில் ஏழைகளின் நல்வாழ்வுக்கு இயற்கை தான் அடிப்படையாக உள்ளது. அவர்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்காக  இயற்கையை சார்ந்து இருக்கிறார்கள்.இந்தியாவில் கால்நடை வளர்ப்பையும், விவசாயத்தையும் நம்பி வாழ்பவர்கள் ஏராளம். காடுகளை இழந்தால் ஏழை விவசாயிகளின் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காது. காடுகளை இழந்தால் அவர்களுடைய நிலங்களின் மண் வளமும், நீர் வளமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். இதை பொருட்படுத்தாமல்  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை(ஜிடிபி) அதிகரிப்பதற்காக காடுகளை அழிப்போமானால் அது இயற்கை வளங்களை நம்பி வாழும் ஏழைகளின் ஜிடிபியை அழிக்கிறது. தேசிய அளவில் பசுமை கணக்கீடு செய்ய வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இல்லையெனில், இந்தியா, அதன் ஜிடிபியை-மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வளர்ச்சியடைவதாகக் கருதி  உண்மையில் ஏழைகளின் ஜிடிபியை-இயற்கை வளங்களை அழித்துவிடும் என்கிறார் பவன்.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான உத்திகளின் எதிர்மறையான விளைவுகளை கவனத்தில் கொள்ளாதது மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்குகிறது.இந்த சிக்கலை தீர்க்க, பவன் சுக்தேவ் சுற்றுச்சூழலியல் கணக்கீட்டு முறையை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு பசுமை கணக்கீட்டு முறையை(Green accounting) உருவாக்கினார். இம்முறையில் ஒரு நாட்டின் செல்வத்தை அளவிடும் போது, அந்நாட்டின்  இயற்கை வளங்களையும், பொருளாதார நடவடிக்கைகளால் இயற்கையில் ஏற்படும் எதிர்மறை, நேர்நிறை தாக்கங்களையும் உள்ளடக்கியவாறே மதிப்பிடப்படும்.இந்த முறையை வளர்த்தெடுக்கும் போது, பவன் சுக்தேவ், பிற நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றார். சுற்றுச்சூழலியல்  பொருளாதாரத்தில் முன்னோடியாக இருந்த டேவிட் பியர்ஸின் நூல்களை படித்த பவன், அவரை நேரில் சந்தித்து அவரது கருத்துக்களைப் பெற்றார். பேராசிரியர் பியர்ஸ் சுக்தேவுக்கு ஆலோசனைகளை வழங்கினார் மற்றும் சுற்றுச்சூழலியல் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ளவர்களுடன் பவன் சுக்தேவை அறிமுகப்படுத்தினார். டேவிட் பியர்ஸ், எட் பார்பியர், கார்ல்-கோரன் மாலர், பார்த்தா தாஸ்குப்தா மற்றும் ஹெர்மன் டேலி ஆகியோரை தனது ஆசான்களாக குறிப்பிட்டுள்ளார் பவன்.

 

பசும் இந்திய மாநிலங்களுக்கான அறக்கட்டளை (GIST) :

பவன் பசுமை கணக்கீட்டு முறையை இந்தியாவில் முதலில் செயல்படுத்த ஆரம்பித்தார். சுக்தேவ் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து இந்தியாவில் பசுமை கணக்கிட்டு முறையை செயல்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கும் அறக்கட்டளையை (GIST)  2004ல் நிறுவி அதன் தலைமை நிர்வாக இயக்குநராக பவன் பணியாற்றி வருகிறார். .அது இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பசுமைக் கணக்கீட்டை அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட -இந்திய மாநிலங்களுக்கான பசுமை கணக்கீட்டுத் திட்டத்தை (GAISP)  செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். அது அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் இயற்கை மூலதனத்திலும், மனித மூலதனத்திலும் ஏற்படுத்தப்படும் தாக்கங்களைக் கண்டறிந்து மதிப்பிடவும், நிர்வகிக்கவும், பசுமை கணக்கீட்டை செயல்படுத்தவும் உதவி வருகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இயற்கை எந்த நிலையில் உள்ளது என  பசுமை கணக்கீட்டு முறையில் அவர் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிப்பட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​சில மாகாணங்கள் அவற்றின் மொத்த ஜிடிபி-உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 முதல் 20% வரை வீழ்ச்சியடைந்திருந்தன. ஒவ்வொரு ஆண்டும் ஜிடிபி- மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 30% இழக்கும் ஒரு மாகாணமும் இருந்தது. இந்தியாவில் சூழலியல் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து யாரும் ஆய்வு செய்யாததாலும், அது குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடாததாலும் அதன் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2006ல், இந்திய உச்சநீதிமன்றம் இந்தியாவில் காடுகளை அழிப்பதன் மூலம் ஏற்படும்  இழப்பீட்டிற்கான மதிப்பைத் தீர்மானிக்க  பவனின் பசுமை கணக்கீட்டு GIST மதிப்பைப் பயன்படுத்தி இயற்கை வளங்களுக்கான இழப்பீட்டு மதிப்பை 5 மடங்காகவும், தேசிய பூங்காக்களுக்கான இழப்பீட்டு மதிப்பை  10 மடங்காகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர்களின் பொருளாதாரத் திட்டத்தின் (TEEB) தலைவராக:

2007ல் ஜெர்மனியின் போட்ஸ்டாமில் ஜி 8 + 5 கூட்டமைப்பில் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உலகளவில் சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்தும், பல்லுயிர் இழப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தனர். கலந்துரையாடலின் விளைவாக சுற்றுச்சூழல் அமைப்புகளால் வழங்கப்படும் பரந்த அளவிலான நன்மைகளை மதிப்பீடு செய்யவும் அவற்றின் முக்கியத்துவத்தை சமூகம் அங்கீகரிக்கும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்களின் பொருளாதார திட்டத்தைத்(TEEB)  தொடங்க முடிவு செய்தனர். ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிக்மார் கேப்ரியலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சுற்றுச்சூழலியல் ஆணையர் ஸ்டாவ்ரோஸ் டிமாஸும், இந்தத் திட்டத்திற்கான  தலைவராக, இந்தியாவில் பசுமை கணக்கீட்டை செயல்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றிய பவன் சுக்தேவை தேர்ந்தெடுத்தனர். ஒரு வங்கியாளராக தனது பணியை தொடர்ந்தவாறே இந்த தலைமை பொறுப்பையும் பவன் ஏற்று கொண்டார்."சுற்றுச்சூழல் அமைப்புகளாலும்,  பல்லுயிர் பெருக்கத்தினாலும் ஏற்படும் உலகளாவிய பொருளாதார நன்மைகள், பல்லுயிர் அழிவினால் ஏற்படும் இழப்புகள்,அவற்றை பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஆகும் செலவுகள்,  அவற்றை பாதுகாக்க தவறும் போது ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு செயல்முறை இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

 

இன்றுள்ள நிலைமையை மாற்றுவதற்கும், நீடித்த பயன்பாட்டின் மூலம் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பவன் தலைமையிலான டீப் குழு இயற்கையின் மதிப்பை  நிர்ணயிக்கும் செயல்முறையை உருவாக்கினர். இயற்கையின் பொருளாதார மதிப்பு நேரடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை இயற்கையின் சேவைகள் அனைத்தையும் இலவசமாக பெறுகிறோம். அவை சந்தைப் பொருட்களாக இல்லை. அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. இயற்கையைப் பாதுகாக்க பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மனிதர்கள் தாங்கள் மதிப்பதையே பாதுகாக்கிறார்கள்.இயற்கையை பாதுகாக்க மக்களுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. இயற்கை நமக்களிக்கும் அளப்பறிய சேவைகளுக்கும், பொருட்களுக்கும்  ஒருபோதும் பணம் கேட்பதில்லை.நாம் பொதுவாக பணத்தை செலவழித்து கட்டப்பட்ட பாலங்களையோ, தொழிற்சாலைகளையோ அழிப்பதில்லை, அவற்றை மதிக்கிறோம்; ஆனால் இயற்கையின் ஒப்பற்ற மதிப்பை நாம் அங்கீகரிக்கவில்லை, ஏனெனில் அது நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இயற்கை இவ்வளவு எளிதில் அழிய இது தான் காரணம். இயற்கையின் பொருளாதார மதிப்பு கண்ணுக்குத் தெரியாததாக உள்ளது. இன்று சமூகத்தில் அனைத்து பொருட்களும், சேவைகளும் பணத்தால் மதிப்பிடப்படுகிறது.அதனால் இயற்கை வளங்களுக்கும் பணத்தில் விலை நிர்ணயித்தால் தான் அவை சரியான முறையில் பராமரிக்கப்படும் என்பதே டீப் குழு முன்வைக்கும் வாதம்.

 

டீப் ஆய்வின் மூலம் வறுமையானது, சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவுடனும், பல்லுயிர் இழப்புடனும் பிரிக்கமுடியாத வகையில் நெருங்கிய தொடர்பில் உள்ளது கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்புகள் அளிக்கும் சேவைகளின் உடனடி பயனாளிகளாக பெரும்பாலான ஏழை மக்கள் உள்ளனர். அவற்றை அழிக்கும் போது உலகின் ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கான உரிமையும் மறுக்கப்படுகிறது.

 

சுக்தேவ் தலைமையிலான TEEB உறுப்பினர்கள் தங்கள் இடைக்கால அறிக்கையை பென்னில் நிகழ்ந்த உயிர் பன்மயத்திற்கான மாநாட்டின் (CBD COP-9) 9 வது சந்திப்பில் முன்வைத்தனர். மிகவும் பயனுள்ளவை அனைத்துமே உயர் மதிப்பைப் பெறவில்லை (எ.கா நீர்); அதிக மதிப்புள்ள அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இல்லை (வைரம்) என்ற கூற்றுடன் தொடங்கும் அந்த அறிக்கை, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்த தகவல்களை விவரித்தது. பெரு நகரங்களைப் பற்றிய அவர்களின் ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் சூழலியல் பாதிப்புகளால் சுமார் 2 முதல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவது தெரியவந்தது. இது 2008ல் பொருளாதார நெருக்கடியின் போது ஏற்பட்ட இழப்பின் மதிப்புக்கு சமமானது என்றும் கடந்த சில பத்தாண்டுகளாக அந்தளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சூழல் பாதிப்புகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் பவன் குறிப்பிட்டார். இந்த புள்ளிவிவரங்கள் இயற்கையின் இழப்பை, முன்னர் புரிந்து கொள்ளாதவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இப்பிரச்சினையின் தீவிரத்தை உணரவைக்கவும் உதவியது.இந்த இடைக்கால அறிக்கையை முன்வைத்த பின்னர், வங்கியில் இருந்து இரண்டு வருடம் விடுப்பு எடுத்துக் கொண்டு TEEB செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் பவன்.  2010-ல் ஜப்பானின் நாகோயாவில் நடைபெற்ற உயிர் பன்மயத்திற்கான மாநாட்டின் (CBD COP-10) 10 வது சந்திப்பில், பவன் தலைமையிலான டீப் குழு தங்கள் இறுதி அறிக்கையை முன்வைத்தனர்.  சமூகத்தில் எவ்விதமான முடிவுகளை எடுக்கும்போதும், செயல்பாடுகளில்  ஈடுபடும்போதும்  இயற்கையின் மதிப்பை அங்கீகரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என டீப் குழு வேண்டுகோள் விடுத்தது.உதாரணமாக, தேசிய அல்லது பிராந்திய அரசியலில் ஈடுபடும் நபர்கள், இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் உற்பத்தியின் போது இயற்கைக்கு சேதமோ, அழிவோ ஏற்படாத வண்ணம் மேலாண்மை செய்யவேண்டும். தனிநபர்களாகிய நாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்குவதன் மூலமும், தண்ணீரை வீணாக்குவதைத் தடுப்பதன் மூலமும் இயற்கையைப் பாதுகாப்பதில் பங்களிக்க முடியும்.டீப் குழு ஒவ்வொரு நபரிடமும் இயற்கையை பாதுகாக்காமல் நீடித்த நிலையான வளர்ச்சியை அடைய முடியாது என்றும், இயற்கையை மதித்து பாதுகாப்பதே சமூகத்திற்கு நாம் செய்யக்கூடிய பங்களிப்பாகும் என்றும் கேட்டுக்கொண்டது.

(தொடரும்)

 


பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...