Tuesday, July 7, 2020

டாலருக்கு வந்த வாழ்வு (3)


டாலருக்கு வந்த வாழ்வு (3)

எண்ணெயால் மினுக்கும் டாலர்:

சவுதி அரேபியா உலகளவில் 10% எண்ணெய் இருப்புகளைக் கொண்டு ஒபெக்கில் மேலாதிக்கம் பெற்றிருந்தது. சவுதி அரேபியாவுக்குத் தன் எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கத் தெரியாதா என்ன, எதற்கு அமெரிக்காவிற்கு இந்தக் காவல்காரன் வேலை? பாலுக்குப் பூனை காவல் காப்பது போலத்தான் அமெரிக்கா சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைப் பாதுகாக்கிறது.
பிற நாடுகளிலுள்ள பலவீனமான அம்சங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வில்லத்தனத்தில் அமெரிக்காவுடன் யாரும் போட்டி போட முடியாது. சவுதி அரச குடும்பம் ஊழலில் திளைத்திருந்தது. பெட்ரோ-டாலர் என்ற இந்த பரஸ்பர உறவால் சவுதி அரச குடும்பம் டாலருக்குப் புத்துயிர்ப்பு அளித்துள்ளது கைம்மாறாக, அமெரிக்க அரசு  சவுதி அரச குடும்பத்தைப் பாதுகாக்கிறது. அமெரிக்க ரவுடி அரசின் ஆதிக்கம் இல்லாதிருந்தால் அங்கு எப்போதோ ஜனநாயகம் மலர்ந்திருக்கும். வெனிசுலா, கியூபா, சீனா, ஈரான் என உலகெங்கும் ஜனநாயகம் மீறப்படுவதாகக் கூச்சல் போடும் அமெரிக்க அரசு உண்மையிலே ஜனநாயகக் காவலனாக இருந்திருக்குமானால் என்ன செய்திருக்க வேண்டும்? சவுதி அரேபியாவிலுள்ள முடியாட்சிக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை முடியாட்சி அங்கு கட்டிக் காக்கப்படுவதற்கு அமெரிக்க அரசும், அதனுடன் கொண்ட பெட்ரோ-டாலர் ஒப்பந்தமும் முக்கியக் காரணமாக உள்ளது. அமெரிக்க அரசின் ஜனநாயகம் எவ்வளவு போலியானது என்பது சவுதி அரேபியா விஷயத்தில் வெளிப்படையாக அம்பலப்படுகிறது.
1973ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போரில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கும், பிற இஸ்ரேலிய நட்பு நாடுகளுக்குமான எண்ணெய் ஏற்றுமதியை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நிறுத்தியது. ஒபெக்கின் இந்தப் பொருளாதாரத் தடையினால் ஆறு மாதங்களில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 3 அமெரிக்க டாலரிலிருந்து 12 ஆக உயர்ந்தது; அதாவது டாலர் நான்கு மடங்கு மதிப்பிழந்தது. தடை முடிந்த பின்னரும் எண்ணெய் விலை அதிகமாகவே நீடித்தது. டாலர் கச்சா எண்ணெயிடம் இவ்வாறு தொடர்ந்து மதிப்பிழக்குமானால் டாலரால் உலகப் பணமாகத் தொடர்ந்து நீடிக்க முடியுமா? முடியாது. கச்சா எண்ணெய் விலையை அமெரிக்கா தனது கட்டுக்குள் வைப்பதன் மூலம் டாலரை உலகப் பணமாக நீடிக்க வைக்க முடியும். அதைத்தான் நிக்சனும், கிஸ்ஸிங்கரும் செய்தனர். கச்சா எண்ணெய்க்கு என்றென்றும் தேவையும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருவதால் தோல்வியுற்ற டாலரை, அதனுடன் இணைத்து பெட்ரோ-டாலராக்கி வெற்றிகரமாக அதன் மதிப்பைக் கூட்டினர் (நட்டத்தில் இயங்கும் தனியார் வங்கிகளின்/நிறுவனங்களின் மதிப்பைக் கூட்ட லாபத்துடன் செயல்படும் அரசு வங்கிகளுடன்/நிறுவனங்களுடன் இணைக்கும் அரசின் கொள்கைகள் நினைவுக்கு வருகின்னவா?).
ஒரு நாணயம் உலகப் பணமாக இருக்க வேண்டுமானால் அந்த நாணயத்தில் மற்றப் பொருட்களின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகக் கூடாது, நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நிலைத்தன்மையை இழந்தால் அந்த நாணயத்தின் மீதான நம்பிக்கையும் அதற்கான நிகரத் தேவையும் குறைந்து விடும். எதனால் என்றால் பணம் வெறும் பரிவர்த்தனைக்கான ஊடகம் மட்டுமல்ல செல்வத்தை சேமிப்பதற்கான ஊடகமாகவும் உள்ளது. ஒவ்வொரு நிதி நெருக்கடியின் போதும் தங்கத்தின் மதிப்பு கூடும் போக்கு காணப்படுகிறது. எதனால் என்றால் தங்கம் மற்ற ஊடகங்களைக் காட்டிலும் குறைந்த அளவு தேய்மான மதிப்பைக் கொண்டுள்ளதால் தங்கம் என்றென்றும் உலகப் பணமாக இருக்கும் தகுநிலையைப் பெற்றுள்ளது.
தங்கத்தை விட மதிப்பு அதிகமான ஒரு பொருள் உள்ளது என வைத்துக் கொள்வோம், உதாரணமாக சூரியகாந்திப் பூ தங்கத்தை விட விலை உயர்ந்து விட்டது என வைத்துக் கொள்வோம், அப்பொழுது சூரிய காந்திப் பூவை வாங்கி விற்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க முயல்வார்களே தவிர, சூரியகாந்திப் பூக்களையே சேமிப்பு ஊடகமாக அப்படியே வைத்துக் கொள்ள யாரும் முன்வர மாட்டார்கள், ஏனென்றால் அது விரைவில் வாடிப் போவதால் மதிப்பிழந்து விடும்.
எண்ணெய் விலை டாலரில் அதிகமாகிக் கொண்டே போனால், அதாவது டாலர் மதிப்பிழந்தால் சேமிப்பாளர்கள், நிதி முதலீட்டாளர்கள் டாலரைக் கைவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புவார்கள். எண்ணெய் விலை ரியாலிலோ, தினாரிலோ நிலைத் தன்மையுடன் நீடித்தால் டாலரை விட்டு ரியால், தினாரில் முதலீடு செய்யும் போக்கே காணப்படும். டாலரை பெட்ரோல் விற்பனையுடன் கோத்துவிட்ட பெட்ரோ-டாலர் என்ற இந்தப் புதிய ஏற்பாடு பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்தும், நம்பிக்கையின்மையிலிருந்தும் டாலரை கட்டிக் காத்து அதை உலகப் பணமாக நீடிக்க செய்வதற்கான முக்கியக் காரணியாக உள்ளது.
அமெரிக்கா உற்பத்தி செய்த பொருளை அதன் நாணயத்திலே விற்க விரும்பினால் அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. தன் நாட்டில் உற்பத்தியாகாத பொருளுக்கு உரிமை கொண்டாடுவதில் என்ன நியாயம் உள்ளது? அமெரிக்காவில் உற்பத்தியான பொருளை ரியாலிலோ தினாரிலோ விற்க அமெரிக்கா அனுமதிக்குமா?.
பெருமளவு சர்வதேசப் பரிவர்த்தனைகள் டாலரிலே மேற்கொள்ளப்படுவதால் டாலரின் மதிப்பு உயர்கிறது. உலகெங்கும் கச்சா எண்ணெய் அதிகம் தேவைப்படுவதாலும், எண்ணெய் அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும், ஒவ்வொரு முறை டாலரில் எண்ணெய்ப் பரிவர்த்தனை செய்யும் பொழுதும் டாலரின் மதிப்பு உயர்கிறது. இது உலக நாடுகள் எண்ணெய் வாங்க டாலர் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட தேவையில்லை. கச்சா எண்ணெயின் விலை ஏறும் போது, அதை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கின்ன. ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனை அமெரிக்காவுக்குக் கிடையாது. அமெரிக்க இறக்குமதியாளர்கள் நாணயப் பரிமாற்ற வீத ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்களால் மட்டுமே தம் சொந்த நாணயத்தில் கச்சா எண்ணெய் வாங்க முடிந்தது. பிற நாடுகளின் மத்திய வங்கிகள் சர்வதேசச் சந்தையில் டாலருக்கு ஈடான தங்கள் நாட்டு நாணயங்களின் மதிப்பின் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கப் பெருமளவிற்கு டாலர் இருப்பை வைத்துகொள்ளும் கட்டாயத்தில் உள்ள.
இத்தகைய காரணங்களால் அமெரிக்க டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்தது, அதனால் டாலரின் மதிப்பும் உயர்ந்தது. பெரும்பாலான நாடுகள் டாலர் தேவைகளுக்காகத்ம் நாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ன. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், பிற நாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்து கொள்வதால் அமெரிக்கா அதிக வர்த்தகப் பற்றாக்குறை கொண்ட நாடாக மாறியது. மற்ற நாடுகளில் தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டால் அங்கு நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அமெரிக்க டாலர் உலகப்பணம் என்பதால் அமெரிக்கா அதன் வர்த்தகப் பற்றாக்குறையை / நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை மூலதனக் கணக்கு உபரியின் மூலம் சமன் செய்து கொள்ள முடிகிறது. பெட்ரோ-டாலர் மறு சுழற்சி என்ற வழிமுறையின் மூலம் மூலதனக் கணக்கில் உபரியைப் பெறுகிறது. பெட்ரோ-டாலர் மறுசுழற்சி முறையில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் உபரி வருவாயை / பெட்ரோ-டாலர்களை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. டாலரில் மதிப்பிடப்படும் அமெரிக்கச் சொத்துகளில் முதலீடு செய்கின்றன. இதனால் அமெரிக்கச் சொத்துக்களின் மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. அதிக டாலர்களை உருவாக்குவதும் சொத்துக்களின் விலைகளை உயரச் செய்கிறது.
பல ஆண்டுகளாக யு.எஸ். கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்த பெட்ரோ-டாலர்களிலிருந்து வட்டியாக வந்த டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவை மேற்கத்திய வகையில் நகரமயமாக்கியுள்ளன. இவ்வாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புகளையும் அதன் மூலம் லாபங்களையும் வழங்கவும் பெட்ரோ-டாலர் காரணமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள நிதி முதலீட்டாளர்களும் நாணயப் பரிவர்த்தனையால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து தம் செல்வத்தைப் பாதுகாக்க அமெரிக்கக் கடன் பத்திரங்களிலும், அமெரிக்க சொத்துக்களிலும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்கின்றனர். இதனால் அமெரிக்கா அதற்குத் தேவையானதை விட அதிகக் கடனை நிதிச் சந்தைகளில் பெறமுடிகிறது. இது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க அனுமதிக்கிறது மேலும் அமெரிக்காவில் பணவீக்கமற்ற வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
ஒருவருக்குக் கடன் கொடுக்க யாரும் முன் வரவில்லையென்றால் அவர் முடிந்தோ, முடியாமலோ கடனைத் திருப்பி செலுத்த மாட்டார் என்று கருதப்படும். ஆனால் இந்த தர்க்கம் அமெரிக்க நாட்டிற்கு பொருந்தாது. (இந்திய வங்கிகள் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் கடன்களும் இப்படிப்பட்டதுதானே!). அமெரிக்கா அதிகக் கடன்பட்ட நாடுகளில் ஒன்று. உலகம் அமெரிக்காவுக்குக் கடன்படவில்லை, அமெரிக்காதான் உலகத்திற்குக் கடன் பட்டுள்ளது.
அரசியல் பொருளாதாரத்தில் எண்ணிலடங்கா தோற்றப் பிழைகள் உள்ளன. வெளித் தோற்றம் ஏமாற்றும் என்பார்களே, அது முக்கியமாகப் பொருந்துவது பொருளாதாரத்திற்குதான், வெளியில் பார்த்தால் என்ன தோன்றும்? உலக நாடுகளுக்கெல்லாம் அமெரிக்க வங்கிதான் மலிவுக் கடன் கொடுத்து அனைத்து நாடுகளின் நிதி நிலையையும், சர்வதேசப் பொருளாதாரத்தையும் சமநிலைக்கு கொண்டுவர அரும்பாடு படுவது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் மற்ற நாடுகள் தான் போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கக் கடன் பத்திரங்களின் வழியில் கடன் தருகிறார்கள், அமெரிக்காவிற்கு மலிவுக் கடன் கிடைக்கிறது. கடன் எங்கே தேவைப்படுகிறதோ அங்கே வழங்கப்படுவதில்லை.
இந்தியாவின் விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் கடன் கிடைக்காமல் முடங்கிப் போயுள்ளனர். இந்திய மாநிலங்கள் கடன் கிடைக்காமல் தவிக்கின்றன. ஆனால் இந்திய நிதி முதலீட்டாளர்கள் ஏழைஅமெரிக்காவிற்கு கடன் வழங்குகிறார்கள். ரூபாயை மதிப்பிழக்க செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுமிக்க இந்தப் பொருளாதார அமைப்பினால் மூன்றாம் உலக நாடுகளின் நாணயங்களது மதிப்பு எப்பொழுதும் குறைந்தே உள்ளது. இதனால் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அனைத்தையும் மலிவாகவே பெற முடிகிறது.
இங்கே நமக்கெல்லாம் ஆடித் தள்ளுபடி ஒரு மாதம்தான் அதுவும் இரண்டாந்தரத் துணிவகைகளைத்தான் மலிவாக’ப் பெற முடியும், ஆனால் அமெரிக்காவுக்கு ஆண்டு முழுவதும் ஆடித் தள்ளுபடிதான். அமெரிக்காவுக்குத் தேவையான எல்லாத் தரமான பொருட்களும் தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகப்பணம் என்ற தகுநிலையால் டாலரின் மதிப்பு ஏறுகிறது. டாலரின் செல்வாக்கு வளர்ந்து, எண்ணெய் மற்றும் பிற பொருட்களைப் பெரும் தள்ளுபடியில் வாங்குவதன் மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தை ஏற்றுமதி செய்ய இது அனுமதிக்கிறது.
பெட்ரோ-டாலர்அமைப்பு அமெரிக்க தேசத்தை பெரிதும் வளப்படுத்தியுள்ளது. ஆனால் இது மற்ற நாடுகளின் இழப்பிலிருந்து பெறப்பட்டது. உலகளவில் 23 பங்குக்கும் மேலான அந்நியச் செலவாணி இருப்புகள் டாலராக உள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வரம்பில்லாமல் டாலர் அச்சடிப்பதற்கும் இது வழிகோலுகிறது. அமெரிக்காவில் பணப் புழக்கத்தை நிரந்தரமாக விரிவாக்குவதன் மூலம், அமெரிக்காவின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் வழியில் பொருளாதார மேலாதிக்கம் கொண்ட, உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா இருந்துவர இந்த அமைப்பு உதவுகிறது.
இவ்வாறு பெட்ரோ-டாலர் அமைப்பு யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவையை அதிகமாக்குகிறது. யு.எஸ். கடன் பத்திரங்களுக்கான உலகளாவிய தேவையையும் அதிகமாக்குகிறது. மேலும் இது அமெரிக்காவிற்கு விருப்பப்படி அச்சிடக்கூடிய நாணயத்துடன் எண்ணெய் வாங்குவதற்கான திறனை வழங்குகிறது. அமெரிக்காவிற்கு மலிவான ஏற்றுமதியையும் ஊக்குவிக்கிறது பெட்ரோ-டாலர் ஒப்பந்தம் டாலரை உலகின் சர்வாதிகார நாணயமாக நிலைநிறுத்த உதவியது. இந்த உயர் தகுநிலையால், அமெரிக்கா உலகளாவிய பொருளாதார மேலாதிக்க சக்தியாக உருவாகியுள்ளது. இதனால் அமெரிக்கா எப்பொழுதும் வர்த்தகப் பற்றாக்குறையுடனும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடனும் நீடிக்க முடிகிறது. அதன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு மிகக் குறைந்த வட்டி வீதத்தில் நிதியும் பெற முடிகிறது.
1980ஆம் ஆண்டு முதல், உலகின் மிகப் பெரிய கடனாளி தேசமாக அமெரிக்கா இருந்து வருகிறது. இருந்த போதும் அமெரிக்கா தனது ஏகாதிபத்தியச் செலவினங்களையும், பொறுப்பற்ற போர்களையும் தொடர்ந்து அதிகமாக்கிக் கொண்டே வருவதால் கடன் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோ-டாலர் என்ற அமைப்பால் உலகப்பணமாக நீடிக்கும் டாலரின் மீதான நம்பிக்கையும், அதற்கான தேவையும் தொடர்ந்து அதிகரிப்பதாலும், இதனால் சாத்தியமாகும் மலிவுக் கடனாலும் அமெரிக்கா வர்த்தக / நடப்புக் கணக்குப் பற்றாக்குறையுடன் நீடிக்க முடிகிறது.
அமெரிக்க அரசியலாளர் ரான் பால் பெட்ரோ-டாலர் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார் "பெட்ரோ-டாலர்தான் டாலருக்கு உலக நாணயங்களில் ஒரு சிறப்பிம் கொடுத்தது, சாராம்சத்தில் டாலருக்கு எண்ணெய் மதிப்பளித்தது. இந்த ஏற்பாடு அமெரிக்காவிற்கு மிகப்பெரும் நிதி நன்மைகளுடன் டாலருக்குச் செயற்கையாக வலிமைளித்தது,. டாலரின் செல்வாக்கு உயர்வதால் எண்ணெய் மற்றும் பிற பொருட்களைப் பெரும் தள்ளுபடியில் வாங்குவதன் மூலம் நமது பணவீக்கத்தை ஏற்றுமதி செய்ய இது நம்மை அனுமதிக்கிறது.
உண்மையான மதிப்புள்ளவற்றை மட்டுமே நாணயமாக இருக்கக் கோரும் நேர்மையான பரிமாற்றத்திற்கான பொருளாதாரச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. உலகளாவிய ஒப்புறுதியளிக்கப்பட்ட(Fiat) பணத்துடனான நமது 35 ஆண்டுகால சோதனையிலிருந்து உருவாகும் குழப்பம் ஒரு நாள் நம்மை உண்மையான மதிப்புள்ள பணத்திற்குத் திரும்ப செய்யும். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் எண்ணெய்க்கு டாலர்கள் அல்லது யூரோக்களைக் கோராமல் தங்கத்தை அல்லது அதற்கு இணையானவற்றைக் கோரும் நாள் நெருங்கி வருவதை நாம் அறிவோம்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் வரலாற்றின் மிகவும் தந்திரமான உத்தியாக பெட்ரோ-டாலர் இருந்து வருகிறது. பெட்ரோ-டாலர் அமைப்பின் நிலைத்தன்மை மத்திய கிழக்கின் புவிசார் அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து ஒரு வல்லரசாகச் செயல்பட வேண்டுமானால் பெட்ரோ-டாலர் அமைப்பின் மூலம் டாலர் உலகப் பணம் என்ற தகுநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் மத்தியக் கிழக்குப் பகுதியெங்கும் ஆயிரக்கணக்கான ராணுவத் தளங்களை நிறுவி அங்குள்ள நாடுகளைப் போர்களின் மூலமும் பொருளாதாரத் தடைகளின் மூலம் அழித்து வருகிறது.
(தொடரும்)



கியூபாவின் புரட்சிப் பெண்கள் (4):


கியூபாவின் புரட்சிப் பெண்கள் (4):
வில்மா எஸ்பின்
புரட்சிக்கு முன்:
வில்மா எஸ்பின் கில்லோயிஸ் 1930 ஏப்ரல் 7 அன்று கியூபாவில் உள்ள சாண்டியாகோவில் வசதிமிக்க குடும்பத்தில் தந்தை ஜோஸ் எஸ்பினுக்கும், தாயார் மார்கரிட்டா கில்லோயிஸுக்கும் மகளாகப் பிறந்தார். வில்மாவின் தாய் பிரெஞ்சு மரபைச் சேர்ந்தவர். வில்மாவின் தந்தை பகார்டி ரம் நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். அவர்களுக்கு லிலியானா, வில்மா, நில்சா, ஐவன், சோனியா, ஜோஸ் அலெஜான்ட்ரோ என ஆறு குழந்தைகள்.
அவர்கள் குழந்தைகளைத் தங்களைப் போலவே சமூக, இன, மதத் தடைகள் கருதாதவர்களாகவும், அதிக உணர்திறன் உள்ளவர்களாகவும், இயற்கையை நேசிப்பவர்களாகவும், வாசிக்கும் பழக்கமுடையவர்களாகவும், கலாச்சார மேம்பாட்டிலும் விளையாட்டிலும் ஆர்வமுடையவர்களாகவும் வளர்த்தனர். கார்ல் மார்க்சின் மருமகனும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனருமான பால் லாபர்கு வில்மாவின் மூதாதையர்களில் ஒருவர். வில்மா தன் பள்ளிக் கல்வியைத் தனது ஊரிலுள்ள பெரெஸ் பேனா அகாடமியிலும், சாக்ராடோ கொராஸானிலும் படித்தார். 1940களில் அசோசியசியன் புரோ-ஆர்டே கியூபானோவில் பாலே நடனமும், இசையும் பயின்றார்.

மாணவர் போராட்டங்கள்:
வில்மா சாண்டியாகோவில் ஓரியண்டெ பல்கலைக்கழகத்தில் 1954இல் வேதியல் பொறியியலில் பட்டம் பெற்றார். கியூபாவில் இந்தத் துறையில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் வில்மாவும் ஒருவர். பல்கலைக்கழக குரலிசைக் குழுவின் ஒரே உச்சக் குரல் பாடகராக இருந்த வில்மா சிறு வயதிலிருந்தே பாலே கற்றதால் நடனக் குழுவிலும் இருந்தார். பல்கலைக்கழகக் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார்.
ஓரியண்டெ பல்கலைக்கழகத்தில் வில்மாவின் அரசியல் கல்வியும் தொடங்கியது. ஓரியண்டெ பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் போராட்டங்களில் வில்மா ஆர்வத்துடன் பங்கேற்றார், சாண்டியாகோவின் தெருக்களில் நடைபெற்ற அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் தனது பொறியியல் பள்ளிக்குரிய கொடியுடன் முன்னணியில் பங்கேற்றார்.
1952 மார்ச் 17 ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு சர்வாதிகாரி பாத்திஸ்டாவிற்கு எதிரான போராட்டங்களில் வில்மா தீவிரமாகப் பங்கேற்றார். ஓரியண்டெ பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு அரசியலமைப்பு மீட்கப்படும் வரை கல்லூரிகளைப் புறக்கணித்தது. 1940 அரசியலமைப்பை மீண்டும் நிர்மாணிக்கக் கோரி, "கிழக்கிலிருந்து மாண்டுவாவுக்கு அரசியலமைப்புப் படையெடுப்பு" என்ற அரசியல் இயக்கத்தில் வில்மா பங்கேற்றார், சாண்டியாகோ நகரம் முழுவதும் அதற்கான பிரகடனங்களை விநியோகித்தார். 1952 ஜூன் 8ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்குச் சென்று தேசப்பற்றை மறுவுறுதி செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டு, 50ஆம்ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
அந்த நாள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் 1940 அரசியலமைப்பின் மீது உறுதிமொழியேற்க அழைத்தது. வில்மா எஸ்பினும், மாணவர் அமைப்பும் அதில் பங்கேற்று சர்வாதிகாரத்தின் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் பனாமா கால்வாய்க்கும் இடையே கடல்போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கியூபாவை இரண்டாகப் பிரிக்கும் விதமாக கியூப வழிக் கால்வாய் திட்டம் பாத்திஸ்டா அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை எதிர்க்கும் அமைப்பிலும் வில்மா அங்கம் வகித்தார்.
1953ல், ஃபிராங்க் பயஸ் என்பவர் ஓரியண்டே புரட்சிகரச் செயல்பாட்டமைப்பை (ARO) நிறுவினார்.இவ்வியக்கம் பின்னர் ஜூலை 26 இயக்கத்துடன் ஒன்றிணைந்தது. ஃபிராங்க் பயஸுடன் வில்மா இணைந்து செயல்பட்டார். வில்மாவின் தங்கை நில்சா அவருக்கு முன்பே ஃபிராங்க் பயஸின் செயற்குழுவில் போராளியாகி வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
வில்மா மன்கடா தாக்குதலின் போது சர்வாதிகாரப் படைகளிடமிருந்து தப்பி வந்த போராளிகளுக்கும், காயமுற்றவர்களுக்கும் உதவி புரிந்தார். வில்மாவின் புரட்சிகர நடவடிக்கைகளால் அவருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சிய அவர் தந்தை, வில்மா அமெரிக்கா சென்றால் அவரின் அரசியல் செயல்பாடுகள் தடைபடும் என்ற நம்பிக்கையில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) முதுகலைக் கல்வி பெற வில்மாவை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.
வில்மா 1955ல் எம்ஐடியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் ஏழைகளும் கறுப்பின மக்களும் ஒடுக்கப்படுவதை நேரில் கண்டார். வில்மாவின் அமெரிக்க அனுபவம் அமெரிக்க அரசின் மீதான எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியது. அவர் அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வழியாக கியூபாவுக்குத் திரும்பும் வழியில் ஜூலை 26 இயக்கத்தின் போராளிகளைச் சந்தித்தார்.
கியூபாவில் தலைமறைவாக இருக்கும் போராளிகளுக்கான வழிமுறைகளையும். கியூபாவுக்குத் திரும்பி பாத்திஸ்டாவைத் தோற்கடிப்பதற்கான தங்கள் திட்டங்களை விவரிக்கும் கடிதங்களையும் வரைபடங்களையும் ஃபிடல் காஸ்ட்ரோவிடமிருந்து பெற்று அவற்றை ஃபிராங்க் பயஸிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றார்.

புரட்சியில்:
1956 நவம்பர் 30இல் ஃபிராங்கின் உத்தரவுப்படி கியூபாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடர மெக்ஸிகோவிலிருந்து ஃபிடல் மற்றும் ஜூலை 26 இயக்கப் போராளிகளை அழைத்து வந்த கிரான்மா படகு தரையிறங்குவதை ஆதரிப்பதற்காக சாண்டியாகோவில் எழுச்சியை ஏற்படுத்தியதில் வில்மா முக்கியப் பங்காற்றினார். வில்மாவின் வீடு இதற்கான தயாரிப்பு மையமாகச் செயல்பட்டது.
1957 ஜூலை 30இல் தலைசிறந்த புரட்சியாளர் ஃபிராங்க் பயஸ் 22 வயதில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே வில்மாவை ஜூலை 26 இயக்கத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். ஜூலை 30 ஃபிராங்க் பயஸின் நினைவு தினம் கியூபாவில் தியாகியர் தினமாக போற்றப்படுகிறது.
பாத்திஸ்டாவின் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த ஆயிரக்கணக்கான புரட்சிகரப் போராளிகளின் தைரியம், நல்லொழுக்கங்கள், மகத்துவம் என அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக ஒரு மனிதரை காண்பது எளிதல்ல. அந்த மனிதர் ஃபிராங்க் பயஸ் என்பதைத் தயக்கமின்றி காண முடியும் என வில்மா கூறியுள்ளார்.
ஃபிராங்க் பயஸின் மறைவுக்குப் பிறகு கிழக்கு கியூப நகர்ப்புறத் தலைமறைவுக் கிளர்ச்சி இயக்கத்தின் தலைவராக வில்மா பொறுப்பேற்றார். அவரது வீடு அதன் தலைமையகமானது. பாத்திஸ்டா படையினரின் தேடுதல் வேட்டையின் போது அவர் வீட்டுக் கூரையில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.

சியரா மிஸ்ட்ராவில்:
நகர்ப்புற இயக்க வேலைகளின் போது சர்வாதிகாரப் படைகளால் வில்மா தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதன் காரணமாக, சியரா மேஸ்ட்ரா மலைகளில், குறிப்பாக ஃபிராங்க் பயஸ் இரண்டாம் முன்னணியின் கிளர்ச்சிப் படையில் சேர வேண்டும் என்று இயக்கம் முடிவு செய்தது. வில்மா ஸ்பானியம், ஆங்கிலம் இரண்டும் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர் என்பதால் சர்வதேச அளவில் புரட்சிகர இயக்கத்தைக் கொண்டுசேர்க்கும் பிரதிநிதியாக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
1957ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஹெர்பர்ட் மேத்யூஸ், பிடல் காஸ்ட்ரோ இடையிலான நேர்காணலுக்கு அவர் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார், இது புரட்சி குறித்த செய்திகளைப் பரப்புவதற்கும், கியூபர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காஸ்ட்ரோவின் மரணம் குறித்த பாத்திஸ்டாவின் கூற்றுகள் பொய்யானவை என்பதை உறுதிசெய்வதற்கும் உதவியது. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் கெரில்லாப் போராளிகளைப் பற்றி எழுத மலையேறி வந்த சமயங்களில் வில்மாதான் மொழிபெயர்ப்பாளராக உதவியுள்ளார்.
வில்மா ஒரு வேதியல் பொறியியலாளராக இயக்கத்திற்கான வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார். கெரில்லாப் படைத் தூதர்களின் தகவல்தொடர்புக்காக வில்மா சிறந்த முறையில் தகவல்களை குறியாக்கம் செய்வதிலும், மறைவிலக்கம் செய்வதிலும் உதவினார். கெரில்லாப் படைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்று வழங்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.
லூஸ், அலிசியா, மோனிகா, டெபோரா என்று பல புனைப்பெயர்களுடன் அவர் போராட்டப் பணிகளில் ஈடுபட்டார். ஃபிராங்க் பயஸ் இரண்டாம் முன்னணியின் சார்பாக 11 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களைப் பராமரிப்பதற்கு பொறுப்பான நிர்வாக வலையமைப்பை ஏற்படுத்துவதிலும், 100 பள்ளிகளை உருவாக்குவதிலும் வில்மா சிறப்பாக செயல்பட்டார்.

புரட்சிக்குப் பின்:
ஃபாத்திஸ்டாவை கியூபாவிலிருந்து வெற்றிகரமாக துரத்தியடித்த பின் 1959, ஜனவரி 26ல் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய முதன்மை செயலாளரும், ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோவை வில்மா மணம் புரிந்தார். அவருக்கு டெபோரா, மரியெலா, நில்சா, மற்றும் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பான் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். வில்மாவுக்கு எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவரது மகள் மரியெலா காஸ்ட்ரோ தற்போது கியூபாவின் பாலியல் கல்விக்கான தேசிய மையத்தின் தலைவராக உள்ளார், அவரது மகன் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பான் உள்துறை அமைச்சகத்தில் படைத்தலைவராக உள்ளார்.
நிர்வாகப் பொறுப்புகள்:
புரட்சியின் வெற்றிக்குப் பின் ஜூலை 26 இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக, புரட்சிகர அரசின் நிர்வாகத்தில் வில்மா பல முக்கியப் பொறுப்புகளை ஏற்றார். உணவுத் தொழில்துறையின் தொழில்துறை மேம்பாட்டு இயக்குநராக வில்மா பணியாற்றினார். 1967 முதல் 1971 வரை சமூக தடுப்பு ஆணையத்தின் தலைவராகவும், 1969 இல் உணவு அமைச்சகத்தின் தொழில்துறை மேம்பாட்டு இயக்குநராகவும் பணியாற்றினார்.
1971ல் குழந்தைகள் பராமரிப்பு அமைப்பின் தலைவராகவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கியூபா நாடாளுமன்ற ஆணையத்தின் தலைவராகவும், மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தேசிய குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கியூப இளம் தலைமுறையினருக்கு பயிற்சியளிப்பதிலும் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.1976ல் கியூப மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கியூப மேலவையின் உறுப்பினராகவும் செயல்பட்டார் வில்மா 1965 முதல் 1989 வரை கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக செயல்பட்டார். . 1980 முதல் 1991 வரை கியூப ஆட்சிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலும் கியூபாவின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார்.

கியூபப் பெண்கள் கூட்டமைப்பு:
கியூபப் பெண்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்கும் பணியை வில்மா ஏற்றுக் கொண்டார். 1960 ஆகஸ்ட் 23இல் கியூபாவின் அனைத்துப் புரட்சிகரப் பெண்கள் குழுக்களையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக கியூபப் பெண்கள் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. வில்மா இவ்வமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதும், அவர்கள் வேலைவாய்ப்பு பெறத் தேவையான திறன்களை வழங்குவதும், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து அரசியல், சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் கியூபப் பெண்கள் சம பங்கு ஏற்க ஊக்குவிப்பதுமே இவ்வமைப்பின் முதன்மைக் குறிக்கோள்கள். கியூப மகளிர் கூட்டமைப்பின் (எஃப்எம்சி) தலைவராக மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்மா தன் இறுதி நாள் வரையிலும் அத்தலைமைப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். ஆண்களும் பெண்களும் சம வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கும் சமத்துவமிக்க, நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் கியூபப் பெண்களை அவர் வெற்றிகரமாக வழிநடத்தினார். வில்மா கியூபாவில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டப் போற்றுதற்குரிய வகையில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். கியூபப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100,000 பெண்கள் கியூபாவெங்கும் 10 இலட்சம் மக்கள் எழுத்தறிவு பெற உதவினர். 1960இல், பன்றி வளைகுடாப் படையெடுப்பிற்கு முன்னர் கியூபா முழுதும் சர்க்கரை ஆலைகளும் கரும்பு வயல்களும் தாக்குதலுக்கு உள்ளான போது, கியூப மகளிர் கூட்டமைப்பு அவசர மருத்துவ உதவிக்கான படைப்பிரிவுகளை உருவாக்கியது.
பணிபுரியும் பெண்களுக்கு உதவியாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் பணி, ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூப மகளிர் கூட்டமைப்புக்கு அவ்வமைப்பின் முதலாவது பேராயத்தின் இறுதி அமர்வில் வழங்கப்பட்டது. பகல்நேரப் பராமரிப்பு மையங்களின் வலையமைப்பை உருவாக்கும் பணியை வில்மா சிறப்பாகச் செயல்படுத்தினார். 1961 ஏப்ரல் மாதம் அவை செயல்பாட்டிற்கு வந்தன.
1968இல் வில்மா குழந்தைகளுக்கான நிறுவனத்தை உருவாக்கினார். இது அதிகாரபூர்வமாக 1971 மே 31இல் நிறுவப்பட்டது - இது பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் உதவுவதற்குமான அரசுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடைய நிறுவனம் ஆகும். .
கியூப அரசும், மகளிர் கூட்டமைப்பும் பெண்களைத் தொழிலாளர் படையில் சேர ஊக்குவித்தன, 1975ஆம் ஆண்டு வில்மாவின் முன்முயற்சியால் கியூப குடும்ப நெறிமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் வேலை செய்யும் தாய்மார்களுக்கான பணிச்சுமைகளை குறைக்கும் விதத்தில் வீட்டு வேலைகளையும், குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புகளையும் ஆண்கள் பகிர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
குழந்தை பராமரிப்பிலும், வீட்டு கடமைகளிலும் உதவி" என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவை பெண்களின் பொறுப்புகள் என்றே நாம் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அது அவ்வாறு இல்லை: நாம் பகிர்என்று சொல்கிறோம் ஏனென்றால் அவை ஒரு குடும்ப பொறுப்பு என்று வில்மா குறிப்பிட்டுள்ளார்.
1976 ஆம் ஆண்டில் தொழிலாளர் அமைச்சகம் உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் என்ற பெயரில் கிட்டத்தட்ட 300 வகை வேலைகளில் இருந்து பெண்களை தடைசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த 300 வகை வேலைகளை இறுதியில் வில்மாவின் கடும் முயற்சியால் 30 ஆகக் குறைக்கப்பட்டது. மாற்றுபாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் நீக்க வில்மா தொடர்ந்து போராடியுள்ளார்.
சர்வதேச அரங்கில் வில்மாவும், அவர் பெற்ற விருதுகளும்:
சர்வதேச அளவில், அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவராக கருதப்பட்டார். அவர் பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் கியூபாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 1959 இல் சிலியில் நடந்த சர்வதேச ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் பேரவையில் கலந்து கொண்ட கியூப பிரதிநிதிகளுக்கு வில்மா தலைமை தாங்கினார். சர்வதேச பெண்கள் மாநாடுகளுக்கான கியூப பிரதிநிதிகளுக்கும் தலைமை தாங்கினார்.
1963-ல்கியூப தலைநகரில் நடைபெற்ற அமெரிக்காவின் மகளிர் பேராயத்தில் வில்மா கியூபாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1969-ஜூன் மாதம் ஹெல்சின்கியில் நடைபெற்ற உலக மகளிர் பேராயத்திற்கு தலைமை தாங்கினார்.
1970-வியட்நாமிய பெண்கள் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் வியட்நாம் ஜனநாயகக் குடியரசுக்குச் சென்ற கியூப தூதுக்குழுவிற்கு வில்மா தலைமை தாங்கினார். அதே காலகட்டத்தில் தான் ஆசிய நாட்டிற்கு எதிரான அமெரிக்க குண்டுவெடிப்பு தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது.
1975-ல் அவருக்கு அனா பெட்டான்கோர்ட் விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில், அவர் பெர்லினுக்குப் பயணம் செய்தார், அக்டோபர் 20 முதல் 24 வரை நடைபெற்ற உலக மகளிர் பேராயத்தில் கியூப தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
1977-பிப்ரவரி 20 அன்று, பல்கேரியா மக்கள் குடியரசின் மாநில கவுன்சிலால் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியதற்கான விருது வில்மாவுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் மார்ச் 8 ஆம் தேதி, கியூப புரட்சிகர ஆயுதப்படைகளின் 20 வது ஆண்டு நினைவு பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு, வில்மா ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978-பிப்ரவரியில், அவர் ஜமைக்கா சென்றார், அங்கு லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களை ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான பிராந்திய துணைக்குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார். மே மாதம், மாஸ்கோவில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்புத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
1979-ஏப்ரல் மாதம், அவருக்கு லெனின் சர்வதேச பரிசு வழங்கப்பட்டது. மக்களிடையே சமாதானத்தை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புக்காக உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பு டிசம்பர் 27 அன்று அவருக்கு அப்பரிசை வழங்கியது.
1981-செப்டம்பர் 8 ஆம் தேதி, பாரிஸில், கியூப பெண்களின் திறன்களை மேம்படுத்துவதில் கியூப மகளிர் கூட்டமைப்பு ஆற்றிய பணிக்காக யுனெஸ்கோ வழங்கிய நாதேழ்தா க்ருப்ஸ்கலா பரிசை வில்மா பெற்றார்.
1982- வேளாண் தொழிலாளர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட மார்கோஸ் மார்த்தி சிறப்பு விருதையும், புரட்சி பாதுகாப்பு குழுக்களால் வழங்கப்பட்ட செப்டம்பர் 28 விருதையும் பெற்றார்.
1983-ஜனவரியில் வில்மா ஐ.நா. மகளிர் நிறுவனத்தின் ஆலோசகர் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டும் அவர் அதே பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985- ஜூலை மாதம், பெண்களின் நிலைமை குறித்த ஐ.நா மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டு, ஆகஸ்ட் 23ல் கியூப மகளிர் கூட்டமைப்பின் 25 வது ஆண்டு நிறைவு விழாவின் போது வில்மாவுக்கு மரியானா கிராஜல்ஸ் விருது வழங்கப்பட்டது. அக்டோபரில் செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்திற்கு எதிரான வெற்றியின் 40 வது ஆண்டு நினைவு பதக்கத்தை வில்மாவுக்கு வழங்கியது.
1987-மாஸ்கோவில் நடந்த உலக பெண்கள் பேராயத்தில் கலந்து கொண்டார்.
1989-பிப்ரவரியில் லாவோஸ் ஜனநாயக குடியரசின் அமைச்சர்கள் குழு அவருக்கு நட்பிற்கான விருதை வழங்கியது. நிகரகுவாவில் உள்ள சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி அவருக்கு சாண்டினிஸ்டா புரட்சியின் 10 வது ஆண்டு நினைவு விருதை வழங்கியது.
1991-மார்ச் மாதம் அவர் வெனிசுலா பெண்களின் 2 வது பேராயத்தில் வில்மா பங்கேற்றார்.
1992-- ஜனவரி மாதம் அவர் பிரேசிலின் நிடெரோய் நகரில் நடைபெற்ற கியூபாவுடனான ஒருமைப்பாட்டிற்கான நிகழ்வின் இறுதி அமர்வில் வில்மா கலந்து கொண்டார். 31 ஆம் தேதி ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பிரேசில் நகரத்தின் மரியாதைக்குரிய மகள் என்று பெயரிடப்பட்டார். நகராட்சி அரசால் உலகின் சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் அரரிபோயா நோ கிரெயின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. பிப்ரவரியில், அவர் ஜெனீவாவுக்குச் சென்றார், அங்கு பெண் விவசாயிகளின் நிலைமை குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். நவம்பர் 20 ஆம் தேதி, அவர் மீண்டும் பிரேசிலின் நைட்ரோய் சென்றார், அங்கு கியூபாவின் நன்கொடையாக ஒரு குடும்ப மருத்துவர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
1994-செப்டம்பரில், அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் இரண்டாவது பிராந்திய கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் மேலும் லத்தீன் அமெரிக்காவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையம் (செபால்) ஏற்பாடு செய்த பெண்கள் குறித்த ஆறாவது பிராந்திய மாநாட்டிலும் பங்கேற்றார்.
1995 – ஐ.நாவால் அறிவிக்கப்பட்ட உலக குடும்ப ஆண்டின் வெற்றிக்கு வில்மா அளித்த பங்களிப்புக்காக ஐ.நா அவரை சிறப்பித்தது.
1998 செப்டம்பரில் அவர் சிலியில் நடைபெற்ற அமெரிக்காவின் முதல் பெண்கள் மற்றும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் 7 வது மாநாட்டில் கியூபாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். பினோசே சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கூட்டமைப்பை அவர் சந்தித்தார்.அக்கூட்டமைப்பு அவருக்கு "அவர்கள் எங்கே" என்ற மனித உரிமைகள் குழுவால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த சிறப்புக்குரிய பதக்கத்தை வழங்கியது.
2000-அவர் பனாமாவில் பெண்கள் தொடர்பான கொள்கைகளை பின்பற்றுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பேற்ற பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த ஆண்டு பனாமாவில் நடைபெற்ற 5 வது ஐபரோ-அமெரிக்க உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஜூன் 6 ஆம் தேதி, ஐ.நா பொதுச் சபையின் அசாதாரண அமர்வுகளின் இரண்டாம் நாளில் அவர் கலந்து கொண்டார், இது 1995 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான முடிவுகளை ஆய்வு செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தாராளமயக் கொள்கைகள். பெண்களின் நிலைமையில் எதிர்மறையான தாக்கம் செலுத்துவதை வில்மா கண்டித்தார். கியூபா மீதான அமெரிக்க விரோதக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், தங்கள் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான கியூப மக்களின் தீர்மானத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2001-மார்ச் மாதத்தில், லத்தீன் அமெரிக்க தேசத்தின் தேசிய மகளிர் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வெனிசுலாவுக்கு சென்றார். லத்தீன் அமெரிக்க பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அவரின் சிறந்த பங்களிப்பிற்காக அவ்வமைப்பு அவருக்கு ஆர்கெலியா லயா என்ற விருதை வழங்கியது. ஹியூகோ சாவேஸ் வில்மாவிற்கு "பிரான்சிஸ்கோ டி மிராண்டா" விருதை வழங்கி சிறப்பித்தார்.
அதே ஆண்டு, கியூபாவின் மேலவை அவருக்கு கியூப குடியரசின் கதாநாயகி பட்டம் அளித்தும் பிளாயா கிரோன் விருது வழங்கியும் சிறப்பித்தது.
2002-ல் லெபனானின் பெய்ரூட்டில் நடைபெற்ற உலக ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் 13 வது மாநாட்டில் கலந்து கொண்டார்.

வில்மாவின் நினைவில்:
புற்று நோயால் பாதிக்கப்பட்ட வில்மா 2007ஆம் ஆண்டில் ஹவானாவில் இறந்தார். அவர் இறந்த மறுநாள் ஹவானாவில் உள்ள கார்ல் மார்க்ஸ் அரங்கில் கியூப கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது. கியூப அரசு அவரை "நம் நாட்டிலும் உலகளவிலும் பெண்களின் விடுதலைக்கு மிகவும் பொருத்தமான போராளிகளில் ஒருவராக" வில்மாவைப் புகழ்ந்து அறிக்கை வெளியிட்டது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டு கியூபாவின் சாண்டியாகோ மாகாணத்தில் உள்ள இரண்டாவது பிராங்க் பாஸ் கிழக்கு முன்னணி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சாண்டியாகோவில் உள்ள அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஃபிடல் காஸ்ட்ரோ வில்மாவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக வில்மாவின் போராட்டங்கள்என்ற தலைப்பில் தன் மனப்பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வில்மாவின் உதாரணம் முன்பை விட இன்று மிகவும் அவசியம். கியூபாவில் பெரும்பாலானோர் உலகின் பிற பகுதிகளைப் போலவே, மதிப்புக்குரிய புரட்சிகர விதிவிலக்குகளுடன், பாகுபாட்டை எதிர்கொண்ட போது, அவர் தனது முழு வாழ்க்கையையும் பெண்களுக்காக போராடுவதற்கு அர்ப்பணித்தார்.
புரட்சி வெற்றிபெற்றதும், கியூபப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அவரது தடுத்து நிறுத்த முடியாத போர் தொடங்கியது, இது கியூபப் பெண்கள் கூட்டமைப்பை அமைப்பதற்கு வழிவகுத்தது. எந்தத் தேசிய அல்லது சர்வதேசக் கூட்டங்களிலும் அவை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவர் கலந்து கொள்ளத் தவறியதே இல்லை; தனது முற்றுகையிடப்பட்ட தாயகத்தையும் புரட்சியின் உன்னதமான நீதி இலட்சியங்களையும் அவர் பாதுகாத்தார்.
"கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் வில்மாவின் போராட்டங்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். சியரா மேஸ்ட்ராவில் ஜூலை 26 இயக்க கூட்டங்களில் அவரை என்னால் மறக்க முடியாது. இறுதியாக இரண்டாம் கிழக்கு முன்னணியில் ஒரு முக்கியப் பணிக்காக அவர் தலைமையால் அனுப்பப்பட்டார். எந்த ஆபத்திற்கும் வில்மா பின்வாங்கமாட்டார்" என்றும் ஃபிடல் காஸ்ட்ரோ நினைவு கூர்ந்துள்ளார்.
2013 ஏப்ரலில் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவில் வில்மா எஸ்பின் 83ஆவது பிறந்த நாளில் வில்மாவின் நினைவாக ஒரு தொடக்கப் பள்ளியைத் திறந்து வைத்தார்.
கியூபாவில் 85 சதவீதப் பெண்கள் கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். உலகளவில் பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தில் போற்றுதற்குரிய ஒரு முன்னுதாரணமாக வில்மா  திகழ்ந்துள்ளார். பெண் விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் புரட்சிக்குள் புரட்சி செய்த வில்மா எஸ்பினை, கியூபப் புரட்சி வரலாற்றில் நீக்கமற நிறைந்த அந்தப் புரட்சிப் பெண்ணை நம் செயல்பாடுகளால் போற்றிடுவோம்.

நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (8)


நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (8)
ஆசிரியர்: விகாஸ் ராவல்

விகாஸ் ராவல் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் திட்டமிடலுக்கான மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தலைப்பு: கிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு:

இமாச்சலப் பிரதேசத்தின்  மண்டி மாவட்டத்தில் நக்வெய்ன் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து ஒரு நாள் கள ஆய்வை நாம் மேற்கொள்ளப் போகிறோம். கள ஆய்வு செய்வதற்கான திட்டமிடலையும், அதற்கான வழிகாட்டலையும் இப்பொழுது பார்ப்போம்.
கள ஆய்வுக்கான திட்டம்:
மூன்று வேறுபட்ட இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். அவை பின்வருமாறு:
1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கினி கிராமத்தில் 50 ஏழை விவசாயிகளின் வீடுகளில் கள ஆய்வு செய்தல்.
2. ஜ்வலபுரில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் கள ஆய்வு செய்தல்
3. சம்ரதாவில் சுரங்கச் சாலை வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் கள ஆய்வு செய்தல்.
அனைவரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மூவர் அல்லது நால்வர் சேர்ந்த குழுக்கள் விவசாயிகளின் வீடுகளைத் தேடிச் சென்று, அவர்கள் செய்யும் விவசாயம் குறித்தும், இதர தொழில்கள் குறித்தும் கேட்டறிந்து, அப்பகுதியின் சமூகப் பொருளாதார நிலைமைகளையும், அவற்றில் காணப்படும் பிரச்சனைகளையும் கண்டறிய வேண்டும். பொருளாதார அடிப்படையில் பாலியல் வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கண்டறிய வேண்டும். குறிப்பாகக் கீழ்காணும் முக்கிய வினாக்களுக்கு கள ஆய்வின் மூலம் விடை காண வேண்டும்.

வினாக்களின் பட்டியல்:
அங்கு வாழ்வாதார விவசாயம் கடைபிடிக்கப்படுகிறதா, அதாவது அவரவர் குடும்ப உணவு நுகர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் விளைவித்துக் கொள்ளும் விவசாயம் நடைபெறுகிறதா? அல்லது விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான விவசாயம் நடைபெறுகிறதா? எல்லா விவசாய விளைபொருட்களும் நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது பகுதியளவு நுகரப்பட்டு, பகுதியளவு சந்தையில் விற்கப்படுகிறதா?
விவசாயத்தின் மூலம் அவர்களால் போதுமான வருவாய் பெற முடிகிறதா?
விவசாயத்தில் உற்பத்தி உறவுகள் எத்தகையவை? அங்கு காணப்படும் நில உறவுகள் / குத்தகை முறைகள் எத்தகையவை?
அங்கு செயல்படுத்தப்படும் விவசாய மூலதனத்தின் தன்மையும் கூலி உழைப்பின் தன்மையும் எத்தகையவை?
விவசாய வேலையாட்களை எங்கிருந்து எவ்வாறு வேலைக்கு அமர்த்துகிறார்கள்?
அங்குள்ள நிலத்தின் தன்மை எவ்வாறு உள்ளது? அது வளமான நிலமா, நிலத்தை மேம்படுத்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
விவசாய மூலப்பொருட்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?
விவசாயம் செய்வதற்கான நீர்ப்பாசன வசதிகளின் நிலைமை எவ்வாறுள்ளது?
விவசாயிகள் வெளிவேலைகளுக்குச் செல்கிறார்களா? வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்களா?
விவசாயத்தில் உழைப்புப் பிரிவினை எவ்வாறு உள்ளது? அங்குள்ள பெண்களின் உழைப்பு எத்தகையது?
விவசாயத்தில் உழைப்புப் பரிவர்த்தனைகள் எவ்வாறுள்ளன, வேலைகள் அவர்களுக்குள்ளே பகிரப்படுகின்றனவா? கூலியுழைப்பு பயன்படுத்தப்படுகிறதா?
விவசாயத்தில் வரலாற்று வழியில் அங்கு காணப்படும் மாற்றம் எத்தகையது?
விவசாய செலவுகளுக்கு அவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கிறதா?
கள ஆய்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:
நாளைய கள ஆய்வை இன்னொரு வகுப்பறையாகப் பாருங்கள். நீங்கள் கள ஆய்வை வீடுகளில் மேற்கொண்டாலும், அதுதான் உங்கள் வகுப்பறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், நாம் அங்கு செல்வது அவர்களுக்கு கற்றுக் கொடுக்க அல்ல, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம், ஆகையால், பணிவுடன், மரியாதையாகவும், கண்ணியமாகவும் பழகுங்கள். பிறகு அவர்கள் உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வார்கள்.
நீங்கள் அங்கு செல்வது உங்கள் கோட்பாடுகளை நிரூபிக்க அல்ல, அவற்றுக்கான தரவுகளைப் பெறுவதற்கே என்பதை மனத்தில் கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு விவசாயம் செய்கிறார்கள்? எப்படி அவர்கள் சோளம் பயிரிடுகிறார்கள்? என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் அவர்கள் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள். அங்கு கூச்சலிடாமல், உங்களின் இருப்பு அவர்களின் சூழலை பாதிக்காதவாறு செயல்படுங்கள்.
அவர்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். அவர்களை விடையளிக்குமாறு வற்புறுத்தாதீர்கள். கேள்விகள் கேட்கும் போது உணர்திறன் மிக்கவர்களாக செயல்படுங்கள், அவர்கள் மனத்தைப் புண்படுத்தும்படியான கேள்விகளைக் கேட்காதீர்கள். காட்டாக, அவர்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதையோ, யாரிடமிருந்து பெற்றார்கள் என்பதையோ சொல்ல அவர்கள் தயங்கலாம், சொல்ல விருப்பமில்லாமலும் இருக்கலாம்.உங்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு எந்தப் பலனுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் பேசவோ, விடையளிக்கவோ மறுத்தால் அந்த இடத்தை விட்டு வந்து விடுங்கள்.அவர்களது தனிப்பட்ட விசயங்களில் தலையிடாதீர்கள். நீங்கள் அங்கு போராளியாகச் செயல்படச் செல்லவில்லை, கள ஆய்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

களஆய்வில் அறியப்பெற்றவை:

1.   கினி கிராமத்தின் விவசாயப் பொருளாதாரம்:
நாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் சிறு நிலவுடைமையாளர்களே இருந்தனர். அவர்கள் பழைய விவசாய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். பழைமையான உற்பத்தி உறவுகளே அங்கு இன்னும் நீடித்துள்ளன. விவசாயத்திற்குத் தேவையான பணத்தை உறவினர்களிடமிருந்தே பெறுகிறார்கள். அவர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில்லை. முதலாளித்துவ விவசாய முறை அங்கு காணப்படவில்லை. வாழ்வாதார விவசாயமே அங்கு செய்யப்படுகிறது. விவசாயம் பெருமளவில் அவர்களது உணவுத் தேவைகளுக்காகவே செய்யப்படுகிறது.
அங்கு இரு போகம் விளைவிக்கப்படுகிறது. ஃபிப்ரவரி முதல் அக்டோபர் வரை சோளம் பயிரிட்டு, ஊடுபயிராக தக்காளி மற்றும் பிற காய்கறிகள் பயிரிடுகிறார்கள். அக்டோபர் முதல் மார்ச் வரை கோதுமை பயிரிட்டு அதனூடே காலிஃபிளவரோ பட்டாணியோ பயிரிடுகிறார்கள். ஆப்பிள் மரம் வளர்க்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகள் இல்லை. விவசாயத்திற்கு மழை நீரையே நம்பியுள்ளனர். நிலங்களை உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துகின்றனர். அவை கலப்பினமில்லை, நாட்டு மாடுகள். பசு மாடுகளிடமிருந்து உபரியாக கிடைக்கும் பாலை விற்கின்றனர். ஆடு வளர்க்கிறார்கள். அவர்கள் விவசாயத்திற்குக் கலப்பு விதைகள் பயன்படுத்தவில்லை, விதைகள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கடைகளிலிருந்துதான் வாங்குகிறார்கள், விளைச்சல் குறைவாகவே உள்ளது. நிலங்களைத் தரிசு போடுவதில்லை.
ஆண்கள் விவசாயச் சந்தைகளில் வேலை செய்யச் செல்கின்றனர் (தேர்ச்சியற்ற உழைப்பு). அதன் மூலம் தினம் 500-600 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். சிலர் கடைகளைப் பராமரித்து வருகின்றனர். அங்கு விவசாயிகளுக்கு வேளாண்மையின் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வெளிவேலைகளில் வருவாய் கிடைத்த போதும் அவர்கள் நிலத்துடன் பிணைந்தவர்களாகவே உள்ளனர். பெண்கள் பெருமளவில் விவசாய வேலைகளிலும், நெய்வதிலும் ஈடுபடுகின்றனர். கால்நடைப் பராமரிப்பு, கால்நடைத் தீவன வளர்ப்பு, களையெடுப்பு, அறுவடை, ஆகியவற்றைப் பெண்களே செய்து வருகிறார்கள். நிலத்தை உழுவது, விதை விதைப்பது ஆகியவற்றை ஆண்கள் செய்கிறார்கள். சிலர் கால்நடைத் தீவனங்களைத் தனியாக விளைவிக்காமல், அறுவடையிலிருந்தே பெறுகிறார்கள்.
போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பெண்கள் வெளி வேலைகளுக்குச் செல்ல முடியாமல் விவசாய வேலைகளிலே முடங்கிப் போய் உள்ளனர். பெண்களின் உழைப்பு சரியாக அங்கீகரிக்கப்படாமல், குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அங்குள்ள கிராமங்களில் பெருமளவு முதலீடுகளும் செய்யப்படுவதில்லை.
தங்களுக்குள்ளே விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.அறுவடை நேரத்தில் வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்தும் செய்கிறார்கள். கூலிக்கு ஆள் வைத்தும் செய்யப்படுகிறது. கூலி உழைப்பு குறைந்த அளவிலே பயன்படுத்தப்படுகிறது.
அவர்கள் தொடர்வரிசையிலமைந்த வீடுகளில் உறவினர்களோடு கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். சிலர் மாவு அரைவை மில் வைத்துள்ளனர். அது வருவாய் பெறுவதற்காக என்றில்லாமல், அங்குள்ளவர்களின் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கான மின்சாரக் கட்டணத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மாவு அரைப்பதற்கு பணத்திற்கு பதில் மாவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவரவர் வீட்டில்தான் உண்ண வேண்டும் என்றில்லாமல் பகிர்ந்து உண்கிறார்கள். சமையலுக்கு எல்.பி.ஜி. எரிவாயு பயன்படுத்துகின்றனர். சாண வரட்டிகளையும் அடுப்பெரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
அங்கு பல வீடுகளில் சால்வை நெய்வதற்கான தறி வைத்துள்ளனர். அதற்கான கம்பளியை வெளியிலிருந்து பெறுகிறார்கள். அந்தச் சால்வையை அவர்களின் பேச்சுவழக்கில் பட்டு என்று அழைக்கிறார்கள். ஒரு பட்டுச் சால்வையை 5000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை விற்க முடியும். சிலரே இரு சக்கர மோட்டார் வாகனங்கள் வைத்துள்ளனர். வாகனங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஊராட்சி ஏற்பாட்டில் குழாய்களில் தினம் 2 மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது. காய்கறிகள், உப்பு, துணிமணிகளை கடைகளிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு அரசு மருத்துவமனையும்,அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. அவர்கள் சொந்தத்திற்குள்ளேயே மணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணை முறை இல்லை. மணமகன், மணமகள் இருவரின் ஒப்புதலின் மூலமே திருமணம் நடைபெறுகிறது. திருமணச் செலவுகளுக்கும் உறவினர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். அங்கு பிள்ளையாரைக் கும்பிடும் வழக்கம் உள்ளது. ராதாஷ்வாமி முறையைப் பின்பற்றுவோர் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். அங்கு பெரும்பாலானவர்களிடம் குடும்ப அட்டைகள் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர ஆர்வம் இல்லை என சிலர் தெரிவித்தனர். அரசின் திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது.
ஆவாஸ் யோஜனா போன்ற அரசுத் திட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலே வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் பிராமணர்கள், தலித்துகள், ராஜபுத்திர சாதியினர் உள்ளனர்.உயர்சாதியினரின் வீடுகள் மலை ஏற்றங்களிலும், தலித்துகளின் வீடுகள் தாழ் நிலத்திலும் காணப்படுகின்றன.
2. ஜ்வலபுரியில் இரண்டு ஆப்பிள் தோட்டங்களுக்குச் சென்றோம். ஒரு ஆப்பிள் தோட்டத்தில் 5000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் காங்கிரசுக் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒரு பெட்ரோல் நிலையமும், உணவு விடுதியும் சொந்தமாக வைத்துள்ளார். இரண்டாவது ஆப்பிள் தோட்டத்தில் 2000 ஆப்பிள் மரங்கள் இருந்தன. அதன் சொந்தக்காரர் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரின் மகன். ஆப்பிள் தோட்டங்களில் முதலாளித்துவ அமைப்பு போல் காணப்பட்டாலும் நிலக்கிழாரிய முறையே உள்ளது. மூதாதையர்களின் நிலச் சொத்துக்களில் நிலக்கிழார்கள் அரசியல் ஆதரவுடன் லாபகரமான சந்தைப் பொருட்களை விளைவிக்க பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரச் சரிவில் அழியக் கூடிய விவசாயப் பொருட்களான ஆப்பிள்களின் விலை வீழ்ந்துவிட்டது. காஷ்மீருக்கான வழங்கலும் தடைப்பட்டுள்ளது.
3. சுரங்கசாலை: மண்டி மாவட்டத்தில் சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையை ஏற்படுத்துவதற்காக மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது அங்கு எந்தப் பிரச்சனையும் இல்லாதது போல்தான் தென்படுகிறது. சம்ரதா பகுதியில் சுரங்கப் பாதை உருவாக்கும் வேலையில் 1,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் 700 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள், 500 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இரவு வேலையும் செய்கின்றனர். 20 அறைகளில் 120 பேர் வசித்து வருகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தனிப்பட்ட சமூகவாழ்வு இல்லாததால், அவர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்/பாஜக சார்ந்த பி.எம்.எஸ் தொழிற் சங்கத்தில் இருந்து தற்பொழுது சி.ஐ.டி.யுவில் இணைந்துள்ளனர். அந்தச் சுரங்க வேலைக்காக அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மண்டியில் அந்தச் சுரங்கச் சாலையின் வழியாகச் செல்லும் போது பயணத் தொலைவு 85 கிமீ குறைக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது பெருகிவரும் சுற்றுலாவாசிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சாலைத் திட்டம். அது ஒரு பாரபட்சமான வளர்ச்சித் திட்டம். அங்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வேறு எந்த முதலீடுகளும் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது குடிநீர் மாசு, ஒலி மாசு மற்றும் நில அதிர்வுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக, புதிய தொழில் நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படாமல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படாமல் உள்ளது. முறைசாராத் தொழில்களில் தொழில்நுட்ப அறிமுகம் குறைவாகவே உள்ளது. பஞ்சாபில் பார்த்தோமானால் அதிக அளவில் விவசாயத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு முதல் அங்கு அனைத்து வேலைகளும் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. (மேற்கு வங்கத்தில் 1990ஆம் ஆண்டு முதல் நெல் வேளாண்மையில் கதிரடித்தல் கைகளால் செய்யப்படுவதில்லை.) நாங்கள் கள ஆய்வு செய்த இடங்களில் கிராமப் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியின்றி முடங்கிப் போன நிலையே தெரிய வருகிறது.
(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...